Rose – 12

3e38bc2cb7e5f1ce4ce83387a2dde04b-0adf3c63

Rose – 12

அத்தியாயம் – 12

ஒரு முக்கியமான வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தார் கோகுல்நாத். கணவனுக்குத் தேவையான உடைகளை பெட்டியில் எடுத்து வைத்தாள் மீனலோட்சனி.

அவளின் பின்னோடு வந்து நின்ற கோகுல், “நேற்றுதான் கல்யாணமான மாதிரி இருக்கு! ஆனால் அதற்குள் பதினாறு வருஷம் ஓடியே போச்சு இல்ல” அவளின் பின்னோடு நின்று இடையோடு கரம்கொடுத்து இறுக்கியணைத்தான்.

கணவனின் கைவளைக்குள் சிக்கியிருந்த மீனாவோ, “உங்க மகன் இருந்தால் பக்கத்திலேயே வர மாட்டீங்க” கேலியாக கேட்க, அவளைத் தன்பக்கம் திருப்பி நெற்றி வகிட்டில் முத்தம் பதித்தார்.

“நீ சந்தோசமாக இருக்கிறாயா?” கணவனைப் புன்னகையுடன் ஏறிட்டாள்.

கோகுல் கனிவு மிகுந்த முகத்தைக் கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டு, “ரொம்ப சந்தோசமாக இருக்கேங்க” என்றாள்.

இந்த ஒரு பதில் அவரின் மனதிற்கு நிறைவைக் கொடுக்க, “எனக்கு இது போதும்” மனைவியின் கன்னத்தில் முத்தமிட, யாதவ் தடதடவென்று படிக்கட்டுகளில் ஏறிவரும் சத்தம்கேட்டு இருவரும் விலகினர்.

பெற்ற பிள்ளைகளின் முன்பு கண்ணியமான நடக்க வேண்டும் என்பது இருவருக்கும் இடையே எழுத்தப்படாத சட்டம். யாதவ் முன்பு காதலைப் பரிமாறாமல் இயல்பாக பேசி சிரிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

“அப்பா ஊருக்கு கிளம்பிட்டீங்களா? ரெண்டு நாளைக்கு உங்களைப் பார்க்காமல் எப்படி இருக்க போறேன்!” புலம்பியபடி அறைக்குள் நுழைந்தான் யாதவ்.

“இரண்டு நாள்தானே கண்ணா! அப்பா சீக்கிரம் வந்துவிடுவேன்” மகனின் தலையைச் செல்லமாக கலைக்க, அவரது கையைத் தட்டிவிட்டு படுக்கையில் கோபமாக அமர்ந்தான். போனமுறை இரண்டு தினங்கள் சொல்லிச் சென்ற தந்தை, கிட்டதட்ட இரண்டு வாரங்கள் கடந்தபிறகு வந்தார்.

அந்த கோபத்தை மகன் இப்போது காட்டுவது புரிய, “இந்த முறை சீக்கிரமே வந்துவிடுவேன் கிருஷ்ணா” வாக்குறுதி தந்தபிறகே அவன் முகம் தெளிந்தது.

தன் மனைவி, மகன் இருவரிடம் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றபிறகு, கணவன் சொல்லாமல் செல்வதை உணர்ந்தாள் மீனலோட்சனி. ஏனோ நெஞ்சினில் ஒரு பயம் தோன்றி மறைந்தது.

கோகுல் கோவை ஏர்போர்ட் உள்ளே செல்ல, “கோகுல்” என்ற அழைப்புக்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தார். அவரது பால்ய சிநேகிதனான ஆனந்தனைக் கண்டு, அவரின் விழிகளில் ஆச்சர்யம்!

தன்னை நோக்கி வந்த ஆருயிர் நண்பனை ஆரத்தழுவி விலகிய கோகுல், “டேய் ஆனந்த் எப்படிடா இருக்கிற? கல்யாணம் ஆகிடுச்சா? எத்தனைக் குழந்தை?” நண்பனை நலம் விசாரித்தான்.

அதுவரை பிரகாசமாக இருந்த ஆனந்தனின் முகம் களையிழந்து போய்விட, “கல்யாணம் ஆகிடுச்சு! குழந்தைதான் இல்ல!” என்ற குரலே அவனது மனநிலையைப் பறைசாற்ற, கோகுல் தன் தவறை உணர்ந்தார்.

“சாரிடா!” என்று கூற, சிறிதுநேரம் இருவருக்கும் நடுவே அமைதி நிலவியது

அதைக் கலைக்கும் விதமாக, “இப்போ எங்கேடா போயிட்டு வருகிற?” என்று விசாரிக்க, அவனிடமிருந்து ஒரு பெருமூச்சுடன் வெளிபட்டது.

ஆனந்தன் – சௌந்தர்யா இருவருக்கும் கல்யாணமான நாள்முதலாக குழந்தைப் பிறக்கவில்லை. அத்துடன் கடைசியாக தனக்கு குழந்தைப் பிறக்கப் போகின்ற விஷயத்தைக் கூறிய அகல்யாவிடம் அதன்பிறகு தகவல் இல்லை.

ஒவ்வொரு நாளும் அவர்களை நினைத்தே கலங்கி நிற்கும் மனைவிக்காகவே, பதிமூன்று ஆண்டுகளாக ரவீந்தர் – அகல்யாவைத் தேடும் பணியில் இருக்கிறார் ஆனந்தன். இந்த முறை யாரையும் நம்பாமல் அவரே நேரில் சென்றுவிட்டு வந்திருக்கிறார்.

ஆனந்தன் நடந்த விஷயத்தைச் சொல்ல, “இதுக்கெல்லாம் மனதைத் தளரவிடக்கூடாதுடா!” கோகுல் தைரியம் சொல்லவும், அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.

ஆனந்தன் இருக்கின்ற இடம் பற்றி விசாரிக்க, ஊட்டி என்ற விவரம் தெரிய வந்தது. அதைகேட்டு சந்தோசத்தில், “இத்தனை நாளாக ஒரே ஊரிலிருந்தும் உன்னைப் பார்க்கவில்லையே! ஒருநாள் கட்டாயம் உன் மனைவியுடன் வீட்டுக்கு வாடா” கோகுல் விடைப்பெற்றுக் கிளம்ப, அவனை வழியனுப்பிவிட்டு வீடு நோக்கிச் சென்றான் ஆனந்தன்.

குருவிகள் தன் குஞ்சுகளைக் கூட்டில் விட்டு இரைத்தேடி பறந்து சென்றது. கீழ்வானில் கதிரவன் தன் கதிர்களோடு கீழ்வானில் தோன்ற, அதிகாலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது.

வீட்டில் இருந்த டெலிபோன் அடிக்கும் சத்தம்கேட்டு ஓடிவந்த மீனா போனை எடுத்துப் பேச, மறுபக்கம் சொல்லபட்ட செய்து தலையில் பேரிடியாக இறங்கியது. கோகுல்நாத் சென்ற பிளைட் வெடித்து சிதறியதால், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற தகவல் அவளை நிலைகுலையச் செய்தது.

தன் கணவன் உயிர் இழந்த சம்பவத்தைக் கேட்டு, வெட்டப்பட்ட வாழையாக தரையில் மயங்கிச் சரிந்தாள். வீட்டின் வேலையாள்கள் தண்ணீர் தெளித்து மீனலோட்சனியை எழுப்ப, தன்னவன் ஊருக்குச் செல்லும்போது சொல்லாமல் சென்றது நினைவிற்கு வர, விழிகளில் கண்ணீர் பெருகியது.

“இரண்டு நாள் பிரிவிற்கே தாங்காத மகனிடம், இனி காலம் முழுக்க உன் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே முடியாதுன்னு நான் எப்படி சொல்வேன்?” என்றவரின் விழிகள் கலங்கியது.

வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ் வந்து நிற்க,கோகுல்நாத் கருகிய உடலை எடுத்து வந்து நடுஹாலில் வைத்தனர். அதற்குள் விஷயமறிந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பழகிய நண்பர்கள் என்று பெரிய படையே திரண்டுவிட்டது.

வழக்கம்போலவே உறக்கம் கலைந்து எழுந்து வந்த யாதவ், நடுஹாலில் தந்தையின் கருகிய உடலைக் கண்டு, “அப்பா” என்று அலறினான்.

அவரின் அருகே ஓடிச்சென்று மகன் கண்களில் கண்ணீர் ததும்ப, தந்தையை எழுப்ப முயன்றான். ஏற்கனவே ஆழ்துயிலில் இருந்தவரை யாராலும் மீட்டெடுக்க முடியவில்லை. இந்த விஷயமறிந்து பதட்டத்துடன் வீட்டிற்குள் பதட்டத்துடன் நுழைந்த தம்பதிகளின் காதுகளில் விழுந்தது யாதவின் கண்ணீர் குரலே!

“என்னை ஏமாத்தாதீங்க அப்பா! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா… ப்ளீஸ் எனக்காக கண்ணை முழுச்சு பாருங்க. இது எல்லாம் விளையாட்டு என்று சொல்லுங்க” கண்ணீரில் கரைந்த மகனைத் தேற்றுவது என புரியாமல் அழுதார் மீனலோட்சனி!

இந்த காட்சியைப் பார்த்த அனைவரின் விழிகளும் கலங்கின. அந்த குடும்பத்தின் ஆணிவேர் கோகுல்நாத். அவரில்லாமல் இனி அவர்களின் நிலை என்னவென்று நினைத்து, மீனாவின் அருகே அமர்ந்து ஆறுதல் சொல்ல தொடங்கினார் சௌந்தர்யா.

தன் தந்தையின் முன்பு உடைந்து அழுத நண்பனின் மகனை வாரியணைத்து,“யாதவ் அழுகாதே! அப்பா உன்னுடன் தான் இருப்பாரு” சின்னவளும் கண்ணீரோடு தமையனின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

மீனலோட்சனியின் அருகே சௌந்தர்யா அமர்ந்துவிட, தன் நண்பனின் இறுதி சடங்குகளை பக்கத்தில் நின்று செய்தான் ஆனந்தன். அன்று மாலையே கோகுல்நாத் உடலை அடக்கம் செய்துவிட, வீடே வேருச்சொடிக் காணப்பட்டது.

ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் அங்கிருத்து கிளம்பிச் செல்ல, தந்தையின் புகைப்படத்தின் கீழே இடிந்துபோய் அமர்ந்திருந்த மகனைக் கண்டு மீனாவின் விழிகளில் கண்ணீர் கடையுடைத்தது.

தன்னுடைய துக்கத்தை மனதிற்குள் போட்டு புதைத்துவிட்டு, “யாதவ் சாப்பிட வாப்பா” அவனருகே சென்று அமர்ந்தார்.

தாயை விழியுயர்த்தி பார்த்தவன் “அப்பா ஏன்மா நம்மளை இப்படி தனியாக தவிக்க விட்டுட்டு போனார்?” உடைந்த குரலில் கேட்க, அவனது தலையைப் பரிவுடன் வருடிய மீனாவின் விழிகள் கலங்கின.

“நல்லவங்களுக்கு பூமியில் அதிகநாள் வாழ இடமில்ல!” தாயின் மடியினில் தலைவைத்துப் படுத்தான் யாதவ்.

தன் கணவனை நினைத்து கண்ணீர்விட நேரமின்றி, தொழிலை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது புரியவில்லை. தொழில் சந்திக்க இருக்கும் சரிவையும் தடுக்க வேண்டுமென்று நினைக்கும் போதே மீனாவிற்கு மலைப்பாக இருந்தது.

***

தன் தந்தையை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு, அவரின் வருகைக்காக காத்திருந்தாள் யாழினி. அமெரிக்காவில் பெற்றவர்களைப் பார்த்துப் பேசக்கூட அப்பாயின்மென்ட் வாங்க வேண்டிய அவலநிலை!

அவர்களது ஹோட்டல் தரம் உயர்த்தபட்டிருக்க, ஆங்காங்கே தமிழரின் அடையாளமாக திருக்குறளும், பகவத்கீதையின் வசனங்களும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தது.

பாரதியாரின் புகைப்படம் அத்துடன் இருந்த வரிகளைக் கவனித்த யாழினிக்கு, ‘நம்ம அப்பா இந்தியனா?’ சந்தேகம் மனதில் முளைவிட, தமிழ் குடும்பம் ஹோட்டலின் உள்ளே நுழைந்தது. அவர்களின் தோற்றத்தை வைத்தே இந்தியர் என்ற உண்மையை அறிந்தாள் யாழினி.

அவளுக்கு எதிரே அந்த குடும்பமும் வந்து அமர, யாழினிக்கு அது இன்னமும் வசதியாகிப் போனது. ஏற்கனவே இந்த மாதிரி தமிழ் குடும்பங்களை சாலையில் பார்க்க நேர்ந்தால், கண்சிமிட்டாமல் அவர்களை நோட்டம் விடுவது அவளின் வழக்கம்!

அவளது கவனத்தைக் கலைக்கும் விதமாக, “என்ன மேடம் இன்னுமா அப்பா வரல” என்ற கேள்வியுடன் அவளின் அருகே அமர்ந்தாள் மிருதுளா.

அவளின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவளின் பார்வை செல்லும் திக்கைக் கவனித்த மிருதுளா, “ஹான்சம் இல்ல” மீண்டும் கேட்க, யாழினி அவளை முறைத்தாள்.

சிவசந்திரன் – வைஜெயந்தி, ராம்குமார் மற்றும் கீர்த்தனா நால்வரும் ஆர்டர் கொடுக்க, பேரர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார். இதற்குமுன் அவர்கள் சென்ற சைனிஸ் ரெஸ்டாரன்ட் பற்றிய கூறிய கடைக்குட்டிக் கீர்த்தனாவோ, “அங்கே வாங்கிய எந்த சாப்பாட்டையும் வாயிலேயே வைக்க முடியல” சிணுங்கலோடு கூற, யாழினி பார்வை தன்னருகே அமர்ந்திருந்த மிருதுளாவின் மீது படிந்தது.

அவளது பார்வையைப் புரிந்துகொண்டவளோ, “தமிழ்நாட்டு ஆளுங்களை நோட்டமிட தெரியும். ஆனால் தமிழ் பேச தெரியாது. அதை கத்துக்க சொன்னாலும், என்னிடம் சண்டைக்கு வருவே” வாய்க்குள் முனகிவிட்டு, அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தாள்.

“அதோட சுவையில் நம்ம ஊரு ரோட்டுக்கடை பக்கத்தில்கூட நிற்க முடியாதுபா” என்ற மைந்தன் சொல்ல, அதைகேட்டு மிருதுளாவிற்கு சிரிப்புதான் வந்தது.

இருவரும் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சிவசந்திரன், “இதென்ன நம்ம ஊருன்னு நினைச்சியா?! இங்கே உணவெல்லாம் இப்படித்தான் இருக்கும். பாம்பு திங்கும் ஊருக்குப் போனால் நடுத்துண்டு எனக்குன்னு உட்காரணும். இனி நம்ம வாழ்க்கை இங்கேதான், அதனால் அடம்பிடிக்காமல் சாப்பிடுமா!” அவளின் தந்தை அதட்டல் கூட, யாழினியைப் புருவம் உயர்த்த வைத்தது.

மிருதுளா அதை மொழிபெயர்க்க, “ட்ரூ வோர்ட்ஸ்” சிலாகிக்க, அவர்கள் ஆர்டர் செய்த உணவுவர அதை ரசித்து சாப்பிட்டனர்.

அந்த பெண்ணின் தகப்பனும், தாயும் அவளை முறைக்க, அவளோ தன அண்ணனைப் பார்த்து குறும்புடன் சிரித்தாள். நால்வரும் பேசும் பாசை புரியாதபோதும், அவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் அக்கறையும், அன்பும் அவளை ஏங்க வைத்தது.

தன்னிடம் யாராவது அன்பாக பேச மாட்டார்களா? தன்னைப் பாதுகாப்பாக வைத்துகொள்ள மாட்டார்களா? இப்படி ஆயிரம் கேள்விகள் அவளின் மனதில் அணிவகுத்து நின்றது. நாளுக்குநாள் அந்த ஏக்கம் வளர்ந்ததே தவிர சற்றும் குறையவில்லை.

அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை தோழிக்காக தற்காலிகமாக மொழிபெயர்ப்பு வேலையை செய்த மிருதுளா, தன் தோழியின் முகமாறுதலைக் கவனித்தாள்.

அந்த குடும்பம் அங்கிருந்து செல்லும் வரையில் பொறுமையை இழுத்துப் பிடித்த மிருதுளாவோ, “உனக்கு இந்த கல்ச்சர் பிடிக்கல என்றால், இந்தியாவிலேயே குறிப்பா தமிழ்நாட்டில் ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” இலவசமாக அறிவுரை வழங்க, அவளுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

“தேங்க்ஸ் மிரு! ஐடியா சூப்பர்” என்ற யாழினி எதிரே வந்து அமர்ந்தார் ரவீந்தர். அவரைப் பார்த்தும் மிருதுளா மௌனமாகிவிட, யாழினி தந்தையைக் கேள்வியாக நோக்கினாள்.

யாழினியின் தனிமையை மாற்றி அமைத்தவளே மிருதுளா தான், ஆறாம் வகுப்பில் தொடங்கிய இருவரின் நட்பு நாளுக்கு வளர்ந்தது என்றே சொல்லலாம். இரண்டு ஆண்டுகளாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

வழக்கம்போலவே தன் தோழியை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, “அங்கிள் நீங்க எப்போ இருந்து இப்படி பணத்துப்பின்னாடி அலைய ஆரம்பிச்சீங்க. யாழினியைவிட உங்களுக்கு பணம் ரொம்ப முக்கியமாக போச்சு இல்ல” கோபத்தில் கேட்க, அவர் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தார்.

‘யாழினியின் தனிமையைப் பற்றியும், அவளது மன அழுத்தம் பற்றியும்’ மிருதுளா விவரிக்க, ‘அவளைத் தனிமையில் வளரவிட்டது தவறோ?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தவரின் முகத்தில் குழப்ப மேகங்கள் சூழ்ந்தன.

தன் தோழியின் கரம்பிடித்து அழுத்திவிட்டு எழுந்து நின்ற மிருதுளா, “அவளை ஒரு சைகார்ட்ஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க அங்கிள்” சிறியவள் அறிவுரை வழங்க, தன் தவறைத் தாமதமாக உணர்ந்தார் ரவீந்தர்.

தன் மகளின் வளமான எதிர்காலத்திற்காக சம்பாரிக்க வேண்டும் என்ற வெறியில் தொழில் பின்னோடு சென்றவர், கொஞ்ச நாளில் தன் குறிக்கோளை முற்றிலுமாக மறந்து அதிலேயே மூழ்கிவிட்ட உண்மையை உணர்ந்தார். இவரால் பாதிக்கப்பட்டது யாழினியின் மனம் அல்லவா?!

“அடுத்த வாரத்தில் அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன் மா” என்று சொல்ல மிருதுளாவின் முகம் பூவாய் மலர, தன் தோழியின் கன்னத்தில் முத்தமிட்டாள் யாழினி. இத்தனை ஆண்டுகளாக தவித்த தவித்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும்போது, அவளது சந்தோசத்திற்கு விடுமுறை ஏது?

அந்த வார இறுதியிலேயே தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மதுர யாழினியைப் பரிசோதித்த டாக்டர், அது சம்மந்தமாக அவளிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவளோ ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னாள்.

“உங்க மகள் மனதளவில் ரொம்பவே தனிமையை உணராங்க. அவ உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான். ப்ளீஸ் அவளுக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்குங்க” டாக்டர் அறிவுரை வழக்க, அதைகேட்டு வாய்விட்டுச் சிரித்தாள் யாழினி.

அவளின் மன அழுத்ததை சரி செய்ய மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அத்துடன் மனதிற்கு அமைதியைத் தரும் வழியில் கவனத்தைச் செலுத்தச் சொன்னார். அன்றிலிருந்து ரவீந்தரும் வீட்டிற்கு வந்து போக தொடங்க, மதுராவின் வாழ்க்கையில் வசந்தம் வீச தொடங்கியது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!