siraku04

siraku04
சிறகு 04
அந்த ரெஸ்டாரன்ட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் அபிநயா. உடம்பு மட்டும்தான் அமைதியாக உட்கார்ந்திருந்தது. உள்ளம் உலைக்களம் போல கொதித்துக் கொண்டிருந்தது. அஞ்சனா நேற்று வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் அவளாக இல்லை. மனிதர்களின் குணங்கள், அவர்களின் மாறுபட்ட எண்ணங்கள் என என்னென்னவோ சிந்தனைகள் அவளை அலைக்கழித்தன.
இந்தப் பெண் இத்தனையையும் இவ்வளவு காலமாகத் தாங்கிக் கொண்டிருக்கிறதே என்று எண்ணிய போது கழிவிரக்கம் பொங்கியது.
அப்போது அந்த ப்ளாக் ஆடி சர்ரென்று வந்து நின்றது. வருவது ஷியாம்தான். அபிநயாதான் அவனை வரச்சொல்லி அழைத்திருந்தாள். இருவருக்கும் ஓய்வான நேரமாகப் பார்த்துச் சந்திப்பதற்கு ஏற்பாடு பண்ணி இருந்தாள். காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கி உள்ளே அவன் நடந்து வருவதை இங்கிருந்தே இவளால் பார்க்க முடிந்தது. ஒரு கணம் அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். முதன் முதலாகப் பெண் பார்க்கும் படலத்தில் சந்தித்ததை விட இன்று புதிதாக ஒரு உரிமை உணர்வு தோன்றியது.
“ஹாய் சீனியர்.”
“ஹாய் ம்மா.” சன் கிளாஸை கழட்டி பாக்கெட்டில் போட்டவன் அவளுக்கெதிரே அமர்ந்தான்.
“என்ன சாப்பிடுறீங்க சீனியர்?”
“ஏதாவது கூலா… வெயில் தாங்க முடியலை.” அவன் சொல்லவும் இரண்டு ஃபலூடா வாங்கி வந்தது பெண்.
“ஏதாவது அவசரமா அபி? எதுக்குத் திடீர்னு கால் பண்ணி வரச் சொன்னீங்க?”
ஃபலூடாவை அவன் சுவைக்க ஆரம்பித்திருந்தான்.
“ஏன் சீனியர், நீங்களாப் பொண்ணு பார்க்கிறேன்னு வந்தீங்க, பார்த்தீங்க, போனீங்க… இப்பிடி ஒன்னுமே சொல்லாமக் கம்முன்னு உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? எங்க வீட்டுல நான் என்னப் பதில் சொல்றது?” அவள் படபடக்கக் குடித்துக்கொண்டிருந்த குளிரான பானம் அவன் தொண்டையில் சிக்கியது.
“சரியாப் போச்சு! இந்த அபியோட பேச்சை ஒரு பொழுது கேட்டதுக்கே உங்களுக்குத் தொண்டையில சிக்குது, இந்த லட்சணத்துல வாழ்க்கைப் பூராவா?” அவள் கேட்ட விதத்தில் ஷியாம் வாய்விட்டுச் சிரித்தான்.
“கரெக்ட், யோசிக்க வேண்டிய விஷயந்தான்.”
“பேச்சை மாத்தாம மேட்டருக்கு வாங்க டாக்டர் சார், உங்க வீட்டுல என்னப் பதில் சொல்லப் போறீங்க?”
“தெரியலையே!” அவன் பதிலில் அவள் தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
“அன்னைக்கு எங்க வீட்டுக்கு வராம வேற எங்கேயோ ஒரு வீட்டுக்குப் போயிருந்தா என்னச் சொல்லியிருப்பீங்க?”
“சத்தியமா ‘நோ’தான்.”
“அப்ப எதுக்குக் கிளம்பிப் போறீங்களாம்?”
“நோ சொல்லத்தான்.”
“விளையாடாதீங்க சீனியர்.” அவள் முகத்தில் இப்போது கோபம் தோன்றியது. ஷியாமும் சிரிப்பை நிறுத்திவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.
“இந்தத் திடீர் மனமாற்றம் இப்ப எதுக்கு சீனியர்? எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணுற மாதிரி என்னையும் பண்ண வேண்டியதுதானே?”
“அங்கதான் கொஞ்சம் உதைக்குது அபிநய சுந்தரி.”
“என்ன உதைக்குது?” அபியின் முகத்தில் லேசான ஆர்வம் இப்போது.
“எத்தனை நாளைக்குத்தான் அம்மாவோட கண்ணீருக்காக இப்பிடி அலைய முடியும்? அபிநய சரஸ்வதிக்கு நான் யாரு, என்னோட மனசென்னன்னு நல்லாவேத் தெரியும்.”
“அதுக்கு?!”
“அவசரப்பட்டு நோ சொல்ல வேணாமோ…ன்னு தோணுது.” அவன் லேசாக இழுத்தான்.
“இது சுயநலம்.” என்றாள் அவள் பட்டென்று.
“கண்டிப்பா! அதை ஏத்துக்கிறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.”
“அப்ப என்னோட வாழ்க்கை?!”
“அதை நீதாம்மா முடிவு பண்ணணும், இதுதான் நான், என்னை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன்னோட விருப்பம்.”
“ஒருவேளை இப்போ நான் உங்களை ரிஜெக்ட் பண்ணிட்டா?”
“ஜூனியர் பொண்ணு ஒன்னை ரொம்ப நாள் கழிச்சு சந்திச்ச சந்தோஷத்தோட கிளம்ப வேண்டியதுதான்.” இலகுவாக அவன் சொல்ல அபி சிரித்தாள்.
“ஆனா அதை மட்டும் பேச நீ இப்போ என்னைக் கூப்பிடலை, உனக்கு என்னமோ ஒரு பிரச்சினை, பரவாயில்லை சொல்லு அபி.” நேரடியாக அவன் விஷயத்திற்கு வர பெண் சிறிது நேரம் மௌனம் சாதித்தது.
“இதை உங்ககிட்டப் பேசுறது சரியா பிழையான்னு கூட எனக்குத் தெரியலை சீனியர்…”
“ம்…”
“நேத்து அஞ்சுவை மீட் பண்ணினேன்.”
“ம்… எதிர்பார்த்ததுதான்.” அஞ்சனாவை பற்றிய ஏதோவொரு பேச்சை அவளிடமிருந்து எதிர்பார்த்தவன் போல அவன் அமைதியாகச் சொல்லப் பெண் லேசாக அதிர்ந்தாள்.
“எப்பிடி?!”
“கலகலக்கிற அபி கலங்கிப் போய் நிற்கிறான்னா…” மேலே அவன் பேசவில்லை. அபியும் அளவுக்கதிகமாகக் கவலைப்படுபவள் போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு டாக்டர், அஞ்சு நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்தா.”
“அடேயப்பா! அம்மணி உங்க வீட்டுக்கு வந்தாங்களா?! ஆச்சரியமா இருக்கே?!”
“எனக்குமே ஆச்சரியமாத்தான் இருந்துச்சு, என்னால நம்பவே முடியலை, ஆனா அதுக்கும் அவ ஒரு காரணம் சொன்னா சீனியர்.” அளவில்லா ஆதங்கம் நண்பியின் குரலில்.
“என்னவாம்?”
“வளைகாப்பு வீட்டுல வெச்சு இன்னைக்கு நைட் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்கன்னு சொல்லியிருந்தேன், அதை விசாரிச்சுட்டுப் போக வந்தாளாம்! ஏன்? அவளோட கஷ்டத்தை எங்கிட்டப் பங்கு போட்டுக்கிட்டா இவ குறைஞ்சுப் போயிடுவாளா?”
“…”
“மாப்பிள்ளையோட ஃபோட்டோ காட்டுன்னு கேட்டா.” இப்போது ஷியாம் சரேலென்று அபியை பார்த்தான்.
“காட்டிட்டீங்களா அபி?”
“காட்டட்டுமா?”
“வேணாம்.” வேகமான பதில்.
“ஏன்?!” அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் ஷியாம் பயங்கரமாகத் தடுமாறினான்.
“இந்த உலகத்துல அவளைத் தவிர வேற யாரையும் உங்களால நேசிக்க முடியாது டாக்டர், வீணா உங்களையும் ஏமாத்தி, என்னையும் ஏமாத்த ட்ரை பண்ணாதீங்க.”
“அபி…” அவன் தவிப்பது அப்பட்டமாக வெளியே தெரிந்தது. அவ்வளவு பெரிய டாக்டர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையறியாது துடிப்பதை அவள் நிதானமாகப் பார்த்திருந்தாள். உண்மைகள் சில நேரங்களில் கசப்பாகத்தான் இருக்கின்றன.
“ரொம்பக் கஷ்டப்படுறா போல சீனியர், அவளால எல்லாத்தையும் ஓப்பனா வெளியே சொல்லவும் முடியலை, உள்ளுக்குள்ள அடக்கி வெச்சு வெச்சுச் சமாளிக்கவும் முடியலை.” மேலும் தகவல் சொல்லியது பெண்.
“…”
“யார் வீட்டுக்கும் இதுநாள்வரை வராதவ தேடி வந்தப்போவே நான் புரிஞ்சுக்கிட்டேன் சீனியர், இதுக்கு மேல இவ தாங்க மாட்டான்னு, ரெண்டு அதட்டல் போட்டதும் தானாக் கொட்டிட்டா.”
“என்னப் பிரச்சினை அபி?” அவன் குரலில் அவ்வளவு வேதனை.
“கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமாச்சு, இன்னும் கொழந்தைப் பொறக்கலை, புருஷன்காரன் அம்மா கீறின கோட்டைத் தாண்டமாட்டான், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு இப்போ அந்த மகராசி சொல்லுது.”
“வாட்?!”
“இதுல பெரிய காமெடி என்னத் தெரியுமா? ஒழுங்கா ஒரு டாக்டரை பார்த்து செக்கப் பண்ணி, எதுவுமே கிடையாது, அந்தம்மாவே குறை இவமேலதான் இருக்குன்னு முடிவே பண்ணி பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண ரெடியாகுது.” சொல்லிவிட்டு அபிநயா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“இவங்க வீட்டுல என்னன்னு கேட்கமாட்டாங்களா?”
“வாரிசு இல்லைன்னாலே குறை பொண்ணு மேலதான்னு நம்ம சமூகம் முடிவே பண்ணிடுது, இவங்களால எதிர்த்து எதுவும் பண்ணவும் முடியலை, எந்தப் பக்கம் போனாலும் பாதிக்கப்படப் போறது அவங்கப் பொண்ணு வாழ்க்கை இல்லையா? அதால அமைதியா இருக்காங்க.”
“அவனெங்க? அவளோட அண்ணன்?”
“அந்த மனுஷன் ஒவ்வொன்னுக்கும் இவ புருஷன் கால்ல விழுவார் போல, அதைச் சொல்லியும் ரொம்ப வருத்தப்பட்டு அழுதா, என்னால எத்தனைப் பேருக்குக் கஷ்டம்னு.”
“தங்கச்சியைப் பாதுகாத்துதில்லை அந்தப் பரதேசி அன்னைக்கு, இப்போ நல்லாப் படட்டும்!”
“ப்ளீஸ் சீனியர், யார்மேலயும் வன்மம் வளர்க்க இது நேரமில்லை, எனக்கு இப்போ அஞ்சனா முக்கியம், அவ சந்தோஷமா இருக்கணும், அது மட்டுந்தான் எனக்கு வேணும்.”
“சரிம்மா, என்னமோப் பண்ணுங்க.” ஒரு பெருமூச்சோடு அவன் சொல்ல அவனை இடைமறித்தது பெண்.
“என்ன சீனியர் என்னைத் தனியா விட்டுட்டு நீங்க தள்ளிப் போறீங்க?”
“இதுல நான் என்னப் பண்ண முடியும் அபி?!”
“எனக்கு… எனக்குப் பயமா இருக்கு டாக்டர்.”
“ஏன்?”
“ஒருவேளை… ஒருவேளை… குறை அஞ்சனா மேல இருந்துதுன்னா?”
“இருந்தா என்ன அபி? எனக்குப் புரியலை, பெத்துப் போடுறது மட்டுந்தான் ஒரு பொண்ணோட வேலையா?”
“யார்மேல குறைன்னே இன்னும் தெரியலை, அதுக்கே அந்தம்மா இந்த ஆட்டம் ஆடுது, இதுல இவ மேலதான் குறைன்னு தெரிஞ்சுது, அவ்வளவுதான்.”
“…”
“டாக்டர்… நான்…” எதையோ அபிநயா சொல்லத் தயங்க அவளைக் கேள்வியாகப் பார்த்தான் ஷியாம்.
“சொல்லுங்க அபி.”
“இல்லை… அஞ்சுவை உங்கக்கிட்ட நான் கூட்டிக்கிட்டு வரட்டுமா?”
“என்னது?!” அதிர்ச்சியின் உச்சத்தில் திடுக்கிட்டான் டாக்டர்.
“இல்லை சீனியர்… எனக்கு இப்போ ஒரு நல்ல டாக்டர் வேணும்.”
“ஏன்? நீங்க நல்ல டாக்டர் இல்லையா?”
“என்னால அவளை அந்த நிலைமையில வெச்சுப் பார்க்க முடியலை சீனியர்.”
“சின்னப்புள்ளை மாதிரிப் பேசாதீங்க அபி, நீங்க ஒரு டாக்டர், அதுக்குத் தகுந்தாமாதிரி நடந்துக்குங்க.”
“உண்மைதான்… ஆனா என்னால முடியலை சீனியர், நாளைக்கு ரிசல்ட் நெகட்டிவ்வா வந்துட்டா என்னால அவளைப் பார்க்க முடியாது, அதை அவளும் தாங்கமாட்டா.”
“அப்பிடியே அவமேலதான் ப்ராப்ளம்னாலும் இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கில்லை, அதை என்னன்னுப் பார்க்க வேண்டியதுதானே?”
“உங்களுக்கு விஷயம் இன்னும் விளங்கலை சீனியர், குறை யார்மேலன்னு தெரியாதப்பவே அந்தம்மா தன்னோட பையனுக்கு இன்னொரு பொண்ணு பார்க்க ரெடியாகுது, இதுல இவதான் ப்ராப்ளம்னு தெரிஞ்சா இவளோட வாழ்க்கை என்ன ஆகிறது? அதை யோசிச்சுப் பாருங்க.” அபிநயா சொல்லி முடிக்க வாய்க்குள் ஏதேதோ முணுமுணுத்தான் டாக்டர். அவன் கெட்ட வார்த்தைகளைப் பச்சைப் பச்சையாக இவள் காது கேளாவண்ணம் சொல்லுகிறான் என்று புரிந்து கொண்ட பெண்ணும் அமைதியாக இருந்தது.
“இப்பிடியொரு வாழ்க்கை இவளுக்குத் தேவைதானா?” பொறுமையை வெகு சிரமப்பட்டுக் கடைப்பிடித்தபடி கேட்டான் அவன்.
“என்ன சீனியர் இப்பிடிச் சொல்லிட்டீங்க?!”
“இதுக்கு மேல நான் பேசலை அபி, ஒரு டாக்டரா எங்கிட்ட வர்ற பேஷன்ட்ஸ்கிட்ட நான் ரொம்ப கண்ணியமா இதுவரைக்கும் நடந்திருக்கேன், முதல்முறையா அவளை எங்கிட்டக் கூட்டிக்கிட்டு வந்து என்னைத் தப்புப் பண்ண வெச்சுடாதீங்க, தெரிஞ்ச நல்ல லேடி டாக்டர் இருக்காங்க, எனக்கு ரொம்ப வேண்டியவங்க, அப்பாயின்மென்ட் வாங்கிக் குடுக்கிறேன், கூட்டிட்டுப் போங்க.” பேச்சு அத்தோடு முடிந்தது என்பது போல ஷியாம் எழுந்து சன்கிளாஸை போட்டுக்கொண்டான்.
“வர்றேன் அபி.”
“சீனியர்…” இரண்டெட்டு நடந்து போனவன் அவள் குரலில் திரும்பிப் பார்த்தான்.
“நான் ஒன்னு கேட்கட்டுமா?” அவள் குரலின் தீவிரத்தில் என்ன என்பது போல அவன் பார்க்க,
“எனக்கு இதை உங்கக்கிட்டக் கேட்கணும் போலத் தோணுது.” என்றாள் அதே குரலில் மீண்டும்.
“என்ன?”
“ஒருவேளை நீங்க அஞ்சுவை கல்யாணம் பண்ணி அவளுக்கு இப்பிடியொரு நிலைமை வந்திருந்தா… நீங்க என்னப் பண்ணியிருப்பீங்க?” கேள்விக்குப் பதில் சொல்ல எட்ட நின்றவன் இப்போது கிட்ட வந்தான். மேசையில் கையிரண்டையும் ஊன்றி அவள் புறம் லேசாகக் குனிந்தவன்,
“கல்யாணம் பண்ணுற எல்லாருமே கொழந்தைப் பெத்துக்கிட்டே ஆகணும்னு எந்தச் சட்டமும் இல்லை அபி, உண்மையைச் சொல்லப் போனா இங்க எத்தனையோ பேரன்ட்ஸ் அவங்கப் பசங்களால கஷ்டப்படுறாங்க, வெளியே சொல்லலைன்னாலும் இதையெல்லாம் ஏன் பெத்தோம்னு வருத்தப்படுறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.”
“…”
“அப்பிடியே ஒரு கொழந்தை வேணும்னு அவ ஆசைப்பட்டா, நல்லா கவனிங்க அபி, அந்த ஆசை என்னோடது இல்லை, அவளுக்கு இருந்ததுன்னா… அதை நிறைவேத்த என்னப் பண்ணலாம்னு பார்ப்பேன்.”
“…” அபியின் கண்கள் இப்போது லேசாகக் கலங்கியது.
“யாரு கண்டா! அப்போவும் இது போல நாம ரெண்டு பேரும் மீட் பண்ணி இருப்போமோ என்னவோ?!”
“எதுக்கு சீனியர்?”
“எனக்கும் அவளுக்கும் கொழந்தைப் பெத்துக்க ஒரு வாடகைத் தாய் தேவைப்படுது, நீங்கப் பெத்துக் குடுக்குறீங்களா அபின்னு நான் உங்களையே கேட்டிருக்கலாம்.”
“யோவ் சீனியர்!” பெண் சீறியது.
“ஏன்? மாட்டீங்களா? பேபி, பேபின்னு கூப்பிடுறீங்க, அவளுக்கொரு பேபியை நீங்கப் பெத்துக் குடுத்திருக்க மாட்டீங்களா?” சுலபமாகச் சொல்லிவிட்டு அவன் போய்விட மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் அபிநயா.
***
அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க யாருக்கும் மனதிருக்கவில்லை, ஆனாலும் வந்திருந்தார்கள். தங்கள் பெண்ணின் வாழ்க்கைக்காக அந்த வாசற்படியை மிநித்திருந்தார்கள். அஞ்சனாவின் அப்பா, அண்ணன், கூடவே அபிநயா. நண்பி தனது வீட்டிற்கு வந்து போன பிறகு அவள் வீட்டாரிடம் தெளிவாக ஒருசில மருத்துவ விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாள் அபி. ஒரு மருத்துவராக அஞ்சனாவின் கணவரிடம் தான் பேசவேண்டும் என்று அவள் சொன்ன போது அந்தக் குடும்பம் அதை ஏற்றுக்கொண்டது.
“வாங்க.” மதிவதனியின் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை. கடமைக்காக அவர்களை வரவேற்றார்.
“இது யாரு?” அபியை சுட்டிக்காட்டி அவர் கேள்வி கேட்டார். படிப்பு, தொழில் என்று வெளிநாட்டில் பெரும்பாலும் காலம் கழித்த அபியை அவருக்குத் தெரியாது. அஞ்சனாவும் தனது நட்பு வட்டத்தை வீட்டுக்கு வெளியேதான் வைத்திருந்தாள்.
“இது அஞ்சுவோட ஃப்ரெண்ட், டாக்டரா இருக்கா.” இது புருஷோத்தமன்.
“இவங்க எதுக்கு இப்போ உங்கக்கூட வந்திருக்காங்க?” தனக்கு இந்தப் பெண்ணின் வருகைப் பிடிக்கவில்லை என்று குரல் சொன்னது.
“மாப்பிள்ளைக்கிட்டக் கொஞ்சம் பேசணும்னு சொன்னாங்கம்மா.” இது கோவிந்தராஜன்.
“எதுக்கு?” நறுக்குத் தெறித்தாற் போல வார்த்தைகள் வந்து வீழ்ந்தன.
“அதான் டாக்டர்னு சொல்றாங்க இல்லை, ஏதாவது மருத்துவம் சம்பந்தமாப் பேசுவாங்களா இருக்கும்.” தனது கருத்தைச் சொன்ன முருகானந்தன் மனைவி பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டார்.
“நம்ம வீட்டுப் பிரச்சினையைப் போறவங்க வர்றவங்க எல்லாரையும் வெச்சுக்கிட்டுப் பேசுறதுல எனக்கு உடன்பாடில்லை, ஆனா அதைப்பத்தி நீங்களே கவலைப்படலேங்கிறப்போ எனக்கொன்னுமில்லை.”
“மாப்பிள்ளை எங்க?”
“இப்போ வந்திடுவான், நான் நேரடியா விஷயத்துக்கு வந்தர்றேன், அஞ்சனா நல்லப் பொண்ணுதான், இல்லேங்கலை… அதுக்காக நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே ஒரு பேரப்புள்ளையைப் பார்க்காமக் காலத்தைக் கடத்துறது? அஞ்சு வருஷமாக் காத்துக் கிடக்கிறோம், இங்க ஒன்னையும் காணோம்.”
“…”
“இதுக்கு என்னதான் முடிவு? நீங்களே ஒரு நியாயத்தைச் சொல்லுங்க?”
“பேசக்கூப்பிட்ட நீங்களே ஒரு முடிவும் எடுத்துத்தானே இருப்பீங்க, நீங்களே சொல்லுங்கம்மா.” பெண்ணைப் பெற்றவர் இவர்கள் எதுவரைப் போகிறார்கள் என்று பார்க்கத் தணிந்து பேசினார். இதற்கு மேலும் தன் மகள் இந்த வீட்டில் வாழவேண்டுமா என்ற எண்ணம் அவருக்குள் முளைவிடத் தொடங்கி இருந்தது.
“இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணும், அதை உங்கப் பொண்ணுப் பெத்துக் குடுத்தாச் சந்தோஷம், இல்லைன்னா…”
“வாடகைத்தாய் யாரையாவது ஏற்பாடு பண்ணப் போறீங்களாம்மா?” இது அபி. அவள் கேள்வியில் மதிவதனிக்கு கோபம் வந்தது.
“என்னது?! வாடகைத்தாயா?! போறவ வர்றவ எல்லாம் இந்த வீட்டோட வாரிசைச் சுமக்க முடியாது, இந்த வீட்டு மருமகள்தான் என்னோட பேரப்புள்ளையைச் சுமக்கணும்.”
“அதுதான் இந்த அஞ்சு வருஷத்துல நடக்கலையேம்மா?”
“அதனால என்ன? உங்கப் பொண்ணால பெத்துக்க முடியலைன்னா ஒதுங்கிக்கச் சொல்லுங்க, மேற்கொண்டு நடக்க வேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்.” அந்த அம்மாளின் பேச்சில் புருஷோத்தமனின் கை முஷ்டி இறுகியது. அபிநயா பல்லைக் கடித்துக் கொண்டாள்.
“ஒதுங்கிக்கங்கன்னா என்ன அர்த்தம்?” புருஷோத்தமனின் அளவுக்கு மீறிய வெஞ்சினம் அவனைக் கேள்வி கேட்க வைத்தது.
“தம்பி, நீங்களாப் புரிஞ்சுக்குங்க, நாங்க ஒன்னும் கல்யாணம் பண்ணின அடுத்த வருஷமே இந்த முடிவுக்கு வரலை, அஞ்சு வருஷம் பொறுத்துப் பார்த்தாச்சு.”
“உங்கப் பையன் எங்கம்மா?”
“எதுக்கு?” கேட்ட அபிநயா மேல் சட்டென்று பாய்ந்தார் மதிவதனி.
“இல்லைம்மா, இவ்வளவு பெரிய விஷயம் பேசும் போது உங்க மகனில்லைன்னா எப்பிடி?”
“அவன் ஆஃபீஸ்ல இருந்து இன்னும் வரலை.”
“ஓ…” அபிநயா இப்போது தன் கூட வந்திருந்த இரு ஆண்களையும் பார்த்தாள். இருவர் முகமும் இறுகிக் கிடந்தது. தன் மகன் இல்லாத நேரமாக இவர்களைத் திட்டமிட்டு வரவழைத்திருக்கிறது இந்தப் பெண்மணி. இல்லாவிட்டால் இந்தத் திட்டத்திற்கு மகனும் உடந்தையாகக் கூட இருக்கலாம். அவர்கள் இருவரும் பேசும் நிலையில் இல்லாததால் அபிநயாவே மீண்டும் பேசினாள்.
“நீங்க சொல்றதும் சரின்னே வெச்சுக்கலாம்மா, ஒரு டாக்டரா நீங்க என்னைக் கேட்டீங்கன்னா, அடுத்தடுத்து முடிவுகள் எடுக்கிறதுக்கு முன்னாடி உங்க மகனும், எங்கப் பொண்ணும் ஒரு மெடிக்கல் செக்கப் பண்ணுறது நல்லது.”
“எதுக்கு?”
“இங்கப்பாருங்கம்மா, இன்னைக்கு மருத்துவம் எவ்வளவோ முன்னேறியிருக்கு, குழந்தைப் பெத்துக்கவே முடியாதுன்னு நினைச்ச எவ்வளவோ பேர் அழகழகாப் பெத்துக்கிறாங்க.”
“எப்பிடி? நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே, வாடகைத் தாய்ன்னு, அப்பிடியா?” மதிவதனியின் குரலில் லேசான இளக்காரம் தெரிய அபிநயா கொதித்துப் போனாள்.
“அபி, கொஞ்சம் பொறும்மா.” அஞ்சனாவின் அப்பா இப்போது இளையவளை அடக்கினார். இந்த வீட்டில் இனியும் தன் பெண் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி அவருள் இப்போது விஸ்வரூபமே எடுத்திருந்தது. தன் பெண் மேல் குறை இல்லையென்ற போதிலும் இதுபோன்ற மனிதர்களுக்கு நடுவே இனி அவள் இருக்க வேண்டாம். எங்கோ மறைந்து கொண்டு அம்மாவைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மனிதன், அம்மா போடும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து வாழ்க்கை நடத்தும் மனிதன், அம்மா சொல்லிவிட்டால் இன்னொரு பெண்ணுக்குத் தாலிகட்டக் கூடத் தயங்காத மனிதன்… இவனோடு என் மகளுக்கு ஒரு வாழ்க்கை அவசியம்தானா?
மகளின் வாழ்க்கை மகளின் வாழ்க்கை என்று எத்தனையோ விஷயங்களைப் பொறுத்தாகிவிட்டது. இதற்கு மேலும் பொறுமை காக்க அந்தத் தகப்பனால் இயலவில்லை. தருணின் மனைவி என்று சொல்வதை விட, திருமதி. தருண் என்று அழைப்பதை விட அவளை அஞ்சனா என்று உலகம் விளிக்கட்டும். கோவிந்தராஜனின் மகள் அஞ்சனா என்று சொல்லட்டும்.
“ஒதுங்கிக்கிறோம்மா, ஆனா அதுக்கு முன்னாடி இந்த டாக்டர் பொண்ணு சொல்லுற ஒரேயொரு டெஸ்ட்டை மட்டும் பண்ணிக்கிட்டு ஒதுங்கிக்கிறோம்.”
“அதெல்லாம் எதுக்கு?”
“இல்லைம்மா, எங்கப் பொண்ணு மேலதான் குறைன்னு தெரிஞ்சிருச்சுன்னா மனசு அமைதியாகிடும்.”
“அப்பா எதுக்குப்பா இதெல்லாம்?” அவசரமாகக் கிசுகிசுத்த மகனையும் அடக்கினார் கோவிந்தராஜன்.
“இல்லை புருஷோத்தமா, பார்க்கலாம்… இன்னும் எவ்வளவு தூரத்துக்கு நம்ம பொண்ணைக் கடவுள் சோதிக்கிறார்னு நாம பார்க்கலாம்.” பேசியது போதும் என்பது போல கோவிந்தராஜன் எழுந்து கொள்ள மற்றைய இருவரும் எழுந்தார்கள்.
“போறோம் ங்க.” கோவிந்தராஜன் வணக்கம் வைக்க முருகானந்தன் பதறினார்.
“போயிட்டு வாறோம்னு சொல்லுங்க சம்பந்தி.” உயிரே இல்லாத ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அந்தத் தகப்பன் வெளியே போய்விட்டார். தனது ரூமிற்குள் இருந்தபடி இதுநேரம்வரை நடந்த உரையாடலைக் கேட்டிருந்தாள் அஞ்சனா. கண்களிலிருந்து கண்ணீர் ஒற்றைக் கோடாய் இறங்கியிருந்தது.