siraku16

siraku cp-3c7030df

siraku16

சிகு 16

சுந்தர்ராம் டாக்டர் லதாவின் அறைக்கு வெளியே சிறிது நேரம்தான் காத்திருந்தார். அதுவும் டாக்டர் அப்போதுதான் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்ததால். இவர் வந்து காத்திருப்பது தெரிந்ததும் அவசரமாக அறையின் வாசலுக்கு வந்து வரவேற்றார் லதா.

“வாங்க சுந்தர், எப்பிடி இருக்கீங்க? வீட்டுல கண்மணி நல்லா இருக்காங்களா?” 

“எங்க மேடம், நடக்கிறதையெல்லாம் பார்க்கிறப்போ எனக்குப் பைத்தியம் புடிச்சிரும் போல இருக்கு!” வந்ததும் வராததுமாகப் புலம்ப ஆரம்பித்தார் மனிதர்.

“ஹா… ஹா…” வாய்விட்டுச் சிரித்தார் லதா.

“உண்மையிலேயே எம் பொழைப்பு சிரிப்பாச் சிரிக்குது மேடம்!” கவலையோடு அங்கலாய்த்தார் சுந்தர்ராம்.

“எதுக்கு சுந்தர் இவ்வளவு கவலைப்படுறீங்க? நீங்க சொன்ன மாதிரித்தானே இவ்வளவு நாளும் ஷியாம் கேட்டான், இப்போ அவன் சொல்ற மாதிரி நீங்க கேளுங்க, ஒரு பிரச்சினையும் இல்லை.”

“அவன் சொல்றதைக் கேட்கிறதுல எனக்கொன்னும் பிரச்சினை இல்லை, ஆனா கண்மணிதான் எதையும் ஏத்துக்க மாட்டேங்கிறா மேடம்.”

“ம்… என்னப் பண்ணலாம், அம்மா இல்லையா… மனசுல மகனைப்பத்தி நிறையக் கனவுகளை வளர்த்திட்டாங்க.”

“கனவுகளை நாம வளர்த்துக்கிறது தப்பில்லை, ஆனா அது நிறைவேறதுக்கான வாய்ப்புகள் இல்லைங்கிறப்போ என்னப் பண்ணுறது?”

“அதுவும் சரிதான்.”

“ஷியாம் இதையெல்லாம் சொன்னப்போ முதல்ல எனக்கும் பக்குன்னுதான் இருந்துச்சு, ஆனா என்னப் பண்ண முடியும் சொல்லுங்க, எம் புள்ளை ஆசைப்பட்டுட்டானே மேடம்!”

“கரெக்ட், அவனோடது இன்னைக்கு நேத்து வந்த ஆசையில்லை சுந்தர்.”

“உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா மேடம்?”

“நானும் என்னோட வீட்டுக்காரரும் அடிக்கடி எப்படாக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு ஷியாமை நச்சரிப்போம் இல்லையா? தொல்லைத் தாங்க முடியாம ஒரு தடவைக் கொட்டிட்டான், ஆனா அப்போ இப்பிடி இந்தப் பொண்ணு திரும்ப அவனோட லைஃப்ல வந்து நிற்கும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை.”

“நடக்கிறது எல்லாம் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு மேடம், ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாதே! அந்தப் பொண்ணைப் பார்க்கிறப்பவும் பரிதாபமாத்தான் இருக்கு.”

“ம்… பழகினவரைக்கும் ரொம்ப நல்ல பொண்ணு மாதிரித்தான் தெரியுது, பார்க்க அவ்வளவு அழகா லட்சணமா பொறுமையா இருக்கு, இவன் வேற ஆசைப்பட்டுட்டானே?”

“அதைச் சொல்லுங்க.”

“நீங்க என்னைத் தப்பா எடுக்கக்கூடாது சுந்தர், ஷியாமுக்காக நான் எது வேணும்னாலும் பண்ணுவேன், நான் பண்ணலைன்னாலும் அவனோட ஆசைகளை நிறைவேத்திக்க அவனுக்குத் தெரியும், அவன் ஒன்னும் சின்னப்பையனில்லையே?”

“நீங்க அவனைப் புரிஞ்சிக்கிட்ட அளவு கூட அவனைப் பெத்தவப் புரிஞ்சுக்கலையே!”

“கண்மணியோட பிடிவாதம் சரிவராது சுந்தர், அதுவும் அவங்க வீட்டுக்குப் போய் இப்பிடி நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு, அவங்களுக்காகட்டும் இல்லை அந்தப் பொண்ணுக்காகட்டும் இந்த நினைப்புக் கொஞ்சம் கூட இல்லை, நம்மப் புள்ளை ஆசைப்பட்டதுக்கு அவங்களை நாம குத்தம் சொல்றது எந்த வகையில நியாயம்?”

“எனக்கு எல்லாமே அப்புறமாத்தான் தெரியும் மேடம், தெரிஞ்சிருந்தா கண்மணியை நான் அங்கப் போக விட்டிருக்கமாட்டேன்.”

“எவ்வளவு பெரிய சிக்கல் ஆகிப்போச்சு பாருங்க, கருவுக்கு ஏதாவது ஆகியிருந்தா ஷியாம் என்னப் பண்ணியிருப்பான்னு என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது, அந்தப் பொண்ணோட வாழ்க்கையில திரும்பவும் இவனாவே ஆசைப்பட்டுத் தலையைக் குடுத்திருக்கான், எங்கிட்ட ஆரம்பத்துலேயே எல்லாத்தையும் சொல்லிட்டான்.”

“ஓ…”

“அவனால இந்தப் பொண்ணைத் தாண்டி இன்னொரு பொண்ணை நினைச்சுப் பார்க்க முடியாது சுந்தரம், முதல்ல அதை நீங்களும் கண்மணியும் நல்லாப் புரிஞ்சுக்கோங்க, உங்களுக்கு மருமகள்னு ஒருத்தி வந்தா அது இந்த அஞ்சனாதான், இவ இல்லைன்னா வேற யாரும் வர்றதுக்கு வாய்ப்பேயில்லை, அங்கப் பொண்ணுப் பார்க்க வர்றேன், இங்கப் பொண்ணுப் பார்க்க வர்றேன்னு இவன் உங்க ரெண்டு பேரோட தலையிலயும் மொளகா அரைக்கிறான், அதை நம்பிக்கிட்டு நீங்களும் அலையுறீங்க.”

“வேற என்னதான் பண்ணமுடியும் மேடம்?”

“அந்தப் பொண்ணும் சரி, அந்தப் பொண்ணோட வீட்டாளுங்களும் சரி, யாருமே இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க, அது இவனுக்கு நல்லாவேத் தெரியும், அவங்களையெல்லாம் சமாளிக்கத்தான் நேரடியாக் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்காம இவன் ஐவிஎஃப் க்குப் போயிருக்கான், இப்போ இவனோட கையிலயும் பிடி இருக்கில்லை?”

“எனக்கு என்னச் சொல்றதுன்னேத் தெரியலை.”

“எவ்வளவு ஆசை மனசுல இருந்திருந்தா இவ்வளவு தூரம் ப்ளான் பண்ணி எல்லாத்தையும் பண்ணியிருப்பான்?”

“இன்னைக்கு அந்தப் பொண்ணோட ரூம்ல சோஃபாவுல படுக்கிறான்.”

“அடப்பாவி!” லதா இப்போது மூக்கில் விரலை வைக்காத குறையாக ஆச்சரியப்பட்டார்.

“நேத்து ராத்திரி கூப்பிட்டுச் சொன்னான், வீட்டுக்கு வரப்பிடிக்கலை, நான் இங்கேயேத் தங்கிக்கிறேன்னு, நானும் சரின்னுட்டு ட்ரைவர்கிட்ட இவனுக்குத் தேவையானதை அனுப்பி வெச்சேன், இப்போ இங்க வந்துப் பார்த்தா சோஃபாவுல தூங்கிறான்.”

“அவனை அவனோட போக்குல விட்டிருங்க சுந்தரம், புடிச்ச வாழ்க்கையைச் சந்தோஷமா வாழட்டும்.”

“நான் அந்த முடிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு மேடம், கண்மணியை பத்திக்கூட நான் இப்போ கவலைப்படலை, என்னோட கவலையே வேற.”

“என்னது?”

“ஒருவேளை அந்தப் பொண்ணு ஷியாமை கடைசிவரைக்கும் நிராகரிச்சுட்டா? அவனால அதைத் தாங்கிக்க முடியுமா?”

“அதெல்லாம் அவன் பார்த்துப்பான், நல்லத் தொழில்ல இருக்கான், சமூகத்துல அவனுக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு, பார்க்க ஹீரோ மாதிரி இருக்கான், இதைவிட என்ன வேணும் அந்தப் பொண்ணுக்கு?”

“ஏற்கனவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்காளே? அதை அத்தனைச் சுலபத்துல மறந்துட்டு அந்தப் பொண்ணால இவனோட ஆசைக்குத் தலையாட்ட முடியுமா?”

“கஷ்டந்தான், கொஞ்சம் டைம் எடுத்துக்கட்டும், அதுக்காக முடியாதுன்னெல்லாம் அந்தப் பொண்ணால சொல்ல முடியாது.”

“என்ன மேடம் நீங்க அவனுக்கு மேல இருக்கீங்க?!”

“அவனோட ஆசை நியாயமானது சுந்தரம், அவன் நினைச்சா எப்பிடிப்பட்ட பொண்ணெடுக்கலாம்? ஆனா அவன் அதைப் பண்ணலையே? எந்த நிலைமையில இருந்தாலும் ஆசைப்பட்டவதான் வேணும்னு நினைக்கிறானில்லை? அந்த மனசை ஏன் நீங்கெல்லாம் பார்க்க மாட்டேங்கிறீங்க? என்னைக் கேட்டா, தன்மையாப் பொண்ணைக் கேட்டுப் பாருப்பா, ரொம்ப பிகு பண்ணினாத் தூக்கிடுன்னுச் சொல்லிடுவேன்.”

“நல்லாச் சேர்ந்தீங்கப் போங்க, தூக்கிறதை அப்புறமாப் பார்க்கலாம், இப்போ முதல்ல அவனுக்குத் தூங்கிறதுக்கு‌ ஒழுங்கா ஒரு ஏற்பாடு பண்ணுங்க.”

“பண்ணிட்டாப் போச்சு.” அட்டகாசமாக லதா சிரிக்க அதற்கு மேல் அவரது நேரத்தை அதிகம் வீணடிக்காமல் சுந்தர்ராமும் கிளம்பிவிட்டார். கிளம்பியவர் தன் வீட்டுக்குப் போகாமல் நேராக வேறொரு இடத்திற்குப் போனார். போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் மனதில் நிறையவே இருந்தாலும் தன் மனைவி செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டிய கடமை அவருக்கிருந்தது. காலிங் பெல்லை அழுத்திவிட்டு அமைதியாக நின்றிருந்தார் மனிதர். நல்லவேளையாக ரம்யாதான் வந்து கதவைத் திறந்தாள். 

“வாங்க வாங்க.” அபிநயாவின் வீட்டில் ஷியாமின் பெற்றோரை ஏற்கனவே இவள் பார்த்திருந்ததால் சட்டென்று வந்திருப்பவரை இனங்கண்டு கொண்டாள்.

“உள்ள வாங்க, உட்காருங்க.” வரவேற்பு பலமாக இருந்தது. ஆனால் வீட்டிலிருப்பவர்கள் யாரையும் அவள் மறந்தும் அழைக்கவில்லை. ஆனால் அழைக்காமலேயே அனைவரும் ஹாலில் ஆஜராகிவிட்டார்கள். 

“வாங்க.” இது கோவிந்தராஜன். வந்திருப்பவர் யாரென்று தெரியாத போதும் மரியாதை நிமித்தம் வரவேற்றவர் மருமகளைப் பார்த்தார். இவர் யார் என்ற கேள்வி அந்தப் பார்வையில் தொக்கி நின்றது.

“இவங்க டாக்டர் ஷியாமோட அப்பா.” 

“ஓ…” மருமகளின் அறிமுகத்தில் கோவிந்தராஜனின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன. எண்ணற்ற கேள்விகள் அவருக்குள் அப்போது உதயமானது. நேற்று இதேவேளை இவருடைய மனைவி இங்கே வந்துப் பெரிய கலாட்டாவே நடந்திருக்கிறது. பிற்பாடு மகன் வந்தான். அவன் ஏதேதோப் புரியாத பாஷையில் பேசுபவன் போலப் பேசிவிட்டுப் போனான். இப்போது இவர் விடிந்தும் விடியாததுமாக வந்து நிற்கிறார். இப்போது என்னப் பிரளயம் வெடிக்கப்போகின்றதோ?!

“வணக்கம்! என்னோட பெயர் சுந்தர்ராம்.” நிதானமாகக் கை கூப்பி வணக்கம் வைத்தார் மனிதர்.

“உட்காருங்க.” இது வெண்பா. வந்திருப்பவரின் உடல்மொழி நேற்று வந்திருந்த பெண்மணியிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

“முதல்ல நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன், நேத்து என்னோட வைஃப் இங்க வந்ததால உங்களுக்கெல்லாம் தேவையில்லாத சங்கடங்கள், மன்னிச்சிடுங்க.” 

“ஏதோ ஒரு ஆதங்கத்துல பண்ணிட்டாங்க, விடுங்க.” பெருந்தன்மையாகச் சொன்னார் கோவிந்தராஜன். 

“இல்லைங்க, அவங்க மனசுல ஆதங்கம் இருந்துச்சுன்னா அதை அவங்கப் பையன்கிட்டத்தான் காமிச்சிருக்கணும், அதை உங்க வீட்டுப் பொண்ணுக்கிட்டக் காட்டினது ரொம்பப் பெரிய தப்பு.” அந்த நியாயபான பேச்சு அங்கிருந்த அத்தனைப் பேரையும் லேசாகச் சமாதானப்படுத்தியது.

“உங்க எல்லாரையும் பார்த்து வெறும் மன்னிப்பு எங்கிற வார்த்தையைச் சொல்லிட்டுப் போக நான் வரலை, எனக்கு அதையும் தாண்டிச் சில விஷயங்கள் உங்கக்கிட்டப் பேசணும், இவங்கெல்லாம்…” சுற்றியிருந்தவர்களை ஒரு முறை பார்த்தார் சுந்தர்ராம். 

“இது என்னோட மனைவி, இது மகன், அது மருமகள்.” அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன்.

“நல்லது, முக்கியமான அத்தனைப் பேரும் இங்கதான் இருக்கீங்க, நான் பேச வந்ததைப் பேசிடுறேன், எம் பையனை உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியலை, பேரு ஷியாம், டாக்டரா இருக்கான், வயசு முப்பத்தைஞ்சு, கட்டினா உங்கப் பொண்ணைத்தான் கட்டுவேங்கிற முடிவுல இருக்கான், நீங்க என்ன சொல்றீங்க?” இந்த நேரடியான பேச்சில் கோவிந்தராஜன் திணறிப் போனார். சில நொடிகள் அவர் எதுவும் பேசவில்லை.

“எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க? எம் பையனைப் பத்தி எங்க வேணும்னாலும் நீங்க விசாரிச்சுப் பாருங்க, கொஞ்சம் பிரபலமான ஆளுதான், நீங்க அவன் வேலை பார்க்கிற எல்லா ஹாஸ்பிடல்லயும் விசாரிச்சுப் பார்த்துட்டுப் பதில் சொன்னாப் போதும், ஒன்னும் அவசரமில்லை.”

“அப்பிடியில்லீங்க, உங்களுக்கு எங்களோட நிலைமைப் புரியலைன்னு நினைக்கிறேன், இதே வார்த்தையை அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க எங்கிட்டச் சொல்லியிருந்தீங்கன்னா நானும் யோசிக்காமச் சட்டுன்னு சம்மதம் சொல்லியிருப்பேன்.”

“அப்போ இப்ப மட்டும் ஏன் யோசிக்கிறீங்க?” சுந்தர்ராம் கேட்க கோவிந்தராஜன் புன்னகைத்தார். 

“இந்த அஞ்சு வருஷத்துல யோசிக்கிற மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துபோச்சே.”

“நீங்க ஏன் அப்பிடி நினைக்கிறீங்க? இதுவே ஒரு பையனா இருந்தா எதைப் பத்தியும் யோசிக்காம அவனுக்கு இன்னொரு கல்யாணத்தைப் பண்ணி வெப்போமா இல்லையா? அதையேப் பொண்ணுங்களுக்குப் பண்ண ஏன் இவ்வளவு தயங்குறோம்?” 

“நியாயமான பேச்சுத்தான், இல்லேங்கலை… ஆனா இதையெல்லாம் கடந்து எங்கப் பொண்ணு எங்களுக்கு ரொம்பவே முக்கியமில்லையா?”

“புரியலை, உங்கப் பொண்ணுக்கு நல்லது பண்ணத்தானே நானும் சொல்றேன்?”

“நல்லதுன்னு நீங்க சொல்றீங்க, ஆனா உங்க வைஃப் சொல்லலியே? எங்கப் பொண்ணு கல்யாணம் எங்கிற பேர்ல ஒரு முறை நல்லாவேக் கஷ்டப்பட்டுட்டா, அவளை இன்னொரு தடவைக் கஷ்டப்படுத்த எங்களால முடியாதுங்க, காலம் முழுக்க அவ எங்கப் பொண்ணா எங்கக் கூட சந்தோஷமா இருந்தாலேப் போதும்.”

“இங்கப்பாருங்க கோவிந்தராஜன், உங்க மனசுல இருக்கிற பயம் நியாயந்தான், அதை நான் மறுக்கலை, அதுக்காக உங்கப் பொண்ணுக்குக் கிடைக்கப்போற ஒரு நல்ல வாழ்க்கையை மறுக்காதீங்க, கண்ணுல தெரியுற எல்லா வெளிச்சத்தையும் நெருப்புன்னு ஒதுக்காதீங்க, ப்ளீஸ்.”

“…”

“எம் பையன் எங்கிறதுக்காக நான் சொல்லலை, ஷியாம் ரொம்பவே நல்ல பையன், இது அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை, உங்கப் பொண்ணு ரொம்பவே சந்தோஷமா இருப்பா, என்னை நம்புங்க கோவிந்தராஜன்.”

“வாழ்க்கைங்கிறது பொண்ணும் பையனும் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லைங்க, நாமெல்லாம் அப்பிடித்தான் நினைக்கிறோம், ஆனா அது தப்புங்க, பையன் மட்டும் நல்லா இருந்தாப் போதாதுங்க, அவங்களைச் சுத்தியிருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும், இதை நான் சும்மா சொல்லலை, நல்லா அடிவாங்கின அனுபவத்துல சொல்றேன், உங்க வைஃப் அவங்களோட மனசுல என்ன இருக்குன்னு நேத்துத் தெளிவாச் சொல்லிட்டாங்க, இதுக்கு மேலேயும் எந்த நம்பிக்கையில என்னை இந்த விஷயத்துல இறங்கச் சொல்றீங்க?”

“நீங்க சொல்றது எல்லாமே நியாயமா இருந்தாலும் என்னால இப்போதைக்கு எதுக்கும் ஆதாரம் காட்ட முடியாது, ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் என்னால நிச்சயமாச் சொல்ல முடியும், உங்கப் பொண்ணும் எம் பையனும் ஒன்னாச் சேர்ந்தா அவங்க அமோகமா வாழுவாங்க, யாரோட தொந்தரவும் இல்லாம, அதுக்கு நான் கேரண்டி.” 

“நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நடந்தா எங்களைவிட யாரு அதிகமாச் சந்தோஷப்படப்போறா? ஆனா…”

“ரொம்ப யோசிக்காதீங்க கோவிந்தராஜன், தெரிஞ்சோ தெரியாமலோ அவங்களுக்குள்ள ஒரு சொந்தம் இப்போ உருவாகியிருக்கு, அதை நாம கெடுக்க வேணாம்.”

“…”

“குத்துக்கல்லாட்டம் தகப்பன் இருக்கும் போது எதுக்கு உங்கப் பேரப்பிள்ளைங்க இனிஷியல் இல்லாம வளரணும்?” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கையில் டீயோடு வந்தார் வெண்பா. அதை வாங்கிக்கொண்ட சுந்தர்ராம், 

“என்னம்மா, உங்க வீட்டுக்காரர் மட்டுந்தான் பேசுறாரு, உங்க எல்லாரோட அபிப்பிராயமும் என்ன? நீங்களாவது கோவிந்தராஜனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?” என்றார். வெண்பாவின் முகத்தில் சங்கடமான முறுவல் தோன்றியது.

“இவ்வளவு பெரிய முடிவை எதிர்ப்புகளை வெச்சுக்கிட்டு அவ்வளவு சீக்கிரத்துல எடுக்கமுடியாதில்லையா… கொஞ்சம் டைம் குடுங்க, அவங்கப் பொறுமையா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்து உங்களுக்குச் சொல்லட்டும்.” அந்தப் பெண்மணியின் பதில் கொஞ்சம் ஆறுதலாக இருக்க அத்தோடு விடைபெற்றுக் கொண்டார் சுந்தர்ராம். இதற்கு மேல் பேசினால் அவர்களை வற்புறுத்துவது போலிருக்கும். 

***

அன்று மதியத்திற்கு மேல்தான் ஷியாமிற்கு ட்யூட்டி இருந்தது. முடியும்போது இரவு‌ பத்தைத் தாண்டியிருந்தது. கொஞ்சம் களைப்பாக உணர்ந்தான். எப்போது அவன் ஓய்வு நேரம் ஆரம்பிக்கும் என்று காத்திருந்தாற் போல அவனை அழைத்தாள் அபிநயா.

“சீனியர், ட்யூட்டி முடிஞ்சுதா”

“இப்பதான் முடிச்சேன், சொல்லு அபி.”

“அந்த தருணுக்கு கால் பண்ணிப் பேசியிருந்தீங்களா?” அந்தக் கேள்வியில் ஷியாம் உஷாரானான்.

“என்னாச்சு?!” அவன் புருவங்கள் நெளிந்தன.

“இப்போக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணியிருந்தான்.”

“என்னவாம்?”

“நிதானத்துல இல்லைப் போல.”

“ம்…” உறுமினான் ஷியாம்.

“வாய்க்கு வந்தபடி பேசினான், டாக்டர்னா உங்களுக்கெல்லாம் பெரிய கொம்பான்னு சத்தம் போட்டான், எனக்கு ஒன்னுமேப் புரியலை! நான் டாக்டரானதுல இவனுக்கென்னப் பிரச்சினை சீனியர்?”

“அவனோட பிரச்சினை இப்போப் பொம்பிளை டாக்டரில்லை, ஆம்பிளை டாக்டர்.”

“நினைச்சேன், இப்போ என்ன வில்லங்கத்தைப் பண்ணி வெச்சிருக்கீங்க? ஏன் சீனியர், ப்ளான் போடுறது நீங்க, திட்டு வாங்கிறது நானா?”

“இப்போ வேற யாரு உன்னைத் திட்டினாங்க?”

“ஏன்? உங்காளு என்னைத் திட்டலையா? எதுக்குத் தேவையில்லாத வேலை பார்த்து வெச்சிருக்கேன்னு கேட்டா இல்லை? நான் நல்ல டோனர் இருந்தாச் சொல்லுங்கன்னுதானே கேட்டேன்? நீங்களே குடுங்கன்னு கேட்டனா?”

“நான் குடுத்ததுல இப்போ உனக்கு என்னப் பிரச்சினை அபி?”

“அதுக்குத்தானே பேபி என்னைத் திட்டினா?”

“அதான் பேபின்னு நீயே சொல்றேயில்லை, அவ வேற எப்பிடிப் பேசுவா? பேபி மாதிரித்தான் பேசுவா, என்னோட பிரச்சினை இப்போ இது இல்லை அபி.”

“சொல்லுங்க சீனியர்.”

“இந்த கேஸ் கூடிய சீக்கிரம் முடிவுக்கு வரணும், இழுத்துக்கிட்டுப் போயிடக்கூடாது, இதுக்கு மேல காத்துக்கிட்டு இருக்க என்னால முடியாது.”

“எதைப் பண்ணுறதா இருந்தாலும் கொஞ்சம் சொல்லிட்டுப் பண்ணுங்க சீனியர், போறது வர்றது எல்லாம் என்னைத் திட்டுது.” அபியின் பேச்சில் ஷியாம் சிரித்தான்.

“சிரிப்பு?!”

“சாரிம்மா, இந்த வாரம் பயபுள்ள எங்கயோ பொண்ணு பார்க்கப் போறானாம், அம்மாக்காரி எல்லா உண்மையையும் மறைச்சுக் கல்யாணத்தைப் பண்ணப்போறா போல இருக்கு.”

“ஐயையோ! இன்னொரு பொண்ணு பாவமே சீனியர்!”

“அதான் யோசனையா இருக்கு அபி, முன்னாடியாவது அந்தப் பரதேசிக்குத்தான் குறைன்னு தெரியாது, இப்போ தெரிஞ்சுக்கிட்டும் பண்ணுறாங்கன்னா…”

“உங்களுக்கு இதெல்லாம் யாரு சொன்னா?”

“அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்க அபி.”

“சீனியர், உண்மையிலேயே நீங்க டாக்டர்தானே? இல்லைப் போலி டாக்டரா?”

“ஹா… ஹா…”

“ஏ லெவல் பண்ணும்போது நாங்க ஸ்கூல்ல பார்த்த சீனியர் எவ்வளவு அமைதி? ஆனா இப்போ இருக்கிறது ரௌடி சீனியரால்லை இருக்கு?!”

“அமைதியா இருந்து உங்க சீனியர் சாதிச்சது என்ன அபி? ஏமாளிப்பட்டம்தானே கிடைச்சுது?” 

“சீனியர்…” இப்போது அபிநயாவும் வாயடைத்துப் போனாள். 

“அதனாலதான் சொல்றேன், கேஸ் சீக்கிரமா முடியணும், இந்தப் பத்து நாளும் முடியுறப்போ அவ எனக்கே எனக்குன்னு வேணும் அபி.”

“என்ன சொல்றா உங்காளு? சமாளிச்சிடுவீங்களா?”

“சைன் பண்ணுடீன்னாப் பண்ணிட்டுப் போறா, நான் சொல்லி அவ மறுத்திடுவாளா?”

“பார்றா!” சொல்லிவிட்டு அபிநயா கலகலவென்று சிரித்தாள்.

“பூவை வாங்கிக் குடுத்தா எதுக்குன்னு கேட்கிறா? ஒன்னு தலைல வை, இல்லைன்னாக் குப்பைத் தொட்டியில போடுன்னு ஒரு சத்தம் போட்டேன், பூ தலைல இருந்துச்சில்லை, எப்பூடி!” அவன் தனது வீர சாகசங்களைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டான்.

“ஓஹோ! அந்த ரேஞ்ச்சுக்கு வந்தாச்சா?! கலக்கிறே டாக்டர், கலக்கிறே! சூப்பர்!” அபியின் குரலில் அவ்வளவு சந்தோஷம்.

“குழந்தைங்களுக்காக ரொம்பவே ஏங்கியிருப்பாப் போல, எப்பப் பார்த்தாலும் அந்த ஃபைலையே பார்த்துக்கிட்டு இருக்கா, தூங்கிறப்போ கூட அது பக்கத்துலதான் இருக்கு.”

“ஆஹா! அந்த ஃபைலாக நானிருக்கக் கூடாதான்னு உங்களுக்கு இருந்திருக்குமே!”

“சோஃபா வரைக்கும் வரத்தெரிஞ்ச எங்களுக்கு ஃபைலோட இடத்தைப் புடிக்கத் தெரியாதா?”

“ஓ… அப்போ வீட்டுக்குப் போகலையா? அநேகமாக நாளைக்கு உங்கம்மாக்கிட்ட இருந்து இன்னொரு திட்டு எனக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கு சீனியர்.”

“பரவாயில்லை வாங்கிக்கோ, எங்கப் பொண்ணுக்கு மறக்காம அபிநயான்னு பேரு வெக்கிறோம்.” 

“யோவ் சீனியர்! இது கொழுப்புத்தானே?!” காட்டமாக ஆரம்பித்தவள் சட்டென்று சிரித்தாள்.

“சந்தோஷமா இருக்கு, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சீனியர், இது உங்களோட ஆசை மட்டுமில்லை, உங்களைச் சுத்தியிருந்த எங்க எல்லாரோட ஆசையும் கூட, அது நிறைவேற இவ்வளவு நாள் ஆகியிருக்கு, அன்னைக்கு கல்பனாவோட வளைகாப்புல அவளைப் பார்த்து பேபி அவ்வளவு ஆசைப்பட்டா, இவளுக்கு ஏன் இப்பிடியொரு சோதனை ஆண்டவான்னு நானும் அன்னைக்கு வருத்தப்பட்டேன், ஆசைப்பட்ட எல்லாத்தையும் மொத்தமாக் குடுக்கத்தான் ஆண்டவன் பேபியை காத்திருக்க வெச்சிருக்கான் போல!”

“அட நீ வேற! நேரங்கெட்ட நேரத்துல சித்தாந்தம், வேதாந்தம் எல்லாம் பேசிக்கிட்டு! அங்க நம்ம ஆளு டின்னரோட காத்துக்கிட்டு இருப்பா, நீ ஃபோனை வைம்மா முதல்ல.” ஷியாமின் பேச்சில் பொங்கிச் சிரித்த பெண்,

“அது ஹாஸ்பிடல் பாஸ், டாக்டருக்கு ரொமான்ஸ் பண்ண வேற இடமா கெடக்கலை?” என்றாள் குறும்பாக.

“கேஸ் மட்டும் முடியட்டும், அதுக்கப்புறம் இருக்கு டாக்டரோட ரொமான்ஸ்.”

“ஐயையோ சீனியர்! அவ ஏற்கனவே உங்க ரெண்டு பிள்ளைங்களோட அம்மா, ஞாபகம் இருக்கில்லை?”

“ஆமா! பெருசா எங்கூட ரொமான்ஸ் பண்ணிப் பெத்துக்கிட்டாப் பாரு! அதெல்லாம் கணக்குலயே வராது.”

“ஓகே பை பை, இதுக்கு மேல பேசினா சீனியரோட வாய் எக்குத்தப்பா எதையாவது பேசும், நீங்க உங்க ஆளோட போய் என்ஜாய் பண்ணுங்க, பை சீனியர்.”

“பை ம்மா, அவனை நான் என்னன்னு பார்க்கிறேன், இனி அவங்கிட்ட இருந்து கால் வந்துதுன்னா ஆன்ஸர் பண்ணாதே அபி.”

“ஓகே சீனியர், பை.”

“பை டா.” அத்தோடு இருவரும் பேச்சை முடித்துக்கொண்டு அவரவர் வேலையில் கவனமாகிவிட்டார்கள்.

 

Leave a Reply

error: Content is protected !!