siraku20

siraku cp-cfb42bad

siraku20

சிகு 20

ஷியாம் வாஷ்ரூமை விட்டு வெளியே வந்தான். மகனின் முகத்திலிருந்த சோர்வைப் பெற்றோர்கள் கவனிக்கத் தவறவில்லை. சுந்தர்ராம் மகனின் வாட்டத்திற்கான காரணத்தை முழுதாகப் புரிந்துகொள்ளவில்லை.

“இந்த நேரத்துல இதெல்லாம் சகஜந்தானே ஷியாமா? கூடிய சீக்கிரம் அஞ்சனா சரியாகிடுவா, கவலைப்படாதே.” என்றார் ஆறுதல் போல. ஆனால் கண்மணி மகனின் வாட்டத்துக்கு இதையும் தாண்டிய ஆழமான காரணம் இருப்பதைப் புரிந்து கொண்டார். 

“அஞ்சனாக்கு எந்த ரூமை குடுக்கலாம் ஷியாமா?” என்றார் மகனை ஆழம் பார்ப்பது போல.

“என்னோட ரூம்லயே அஞ்சு இருக்கட்டும்மா.” என்றான் மகனும் அலட்டிக் கொள்ளாமல். 

“அது சரிவராது ஷியாமா.” இது அப்பா.

“ப்ளீஸ் ப்பா….” ஷியாம் மேற்கொண்டு பேசுமுன்பாக வாஷ்ரூம் கதவு மீண்டும் திறக்க மூவரும் அமைதியாகி விட்டார்கள்.

“அஞ்சனா, இப்போப் பரவாயில்லையா?” ஆதரவாகக் கேட்ட கண்மணி அவளருகில் வந்து அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். இது ஒரு பெண்ணுக்கான இன்னொரு பெண்ணின் பரிவு. ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க பெண்ணொருத்தி எத்தனைப் பாடுபடுகிறாள் என்பது இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியும். அஞ்சனாவால் பேச இயலவில்லை. சோர்வாகச் சிரித்தாள்.

“வாந்தி வரும்னா முன்னாடியே சொல்லியிருக்கலாமே, நான் உனக்குச் சாப்பாட்டைத் தனியாக் கொண்டு வந்து குடுத்திருப்பேனே, இப்போப் பாரு, கஷ்டப்பட்டுச் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்திடுச்சு.” கவலைப்பட்டார் கண்மணி.

“சரி விடு கண்மணி, இனிப் பத்திரமாப் பார்த்துக்கலாம், அதுதான் இப்பத் தெரிஞ்சு போச்சில்லை, நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா.” சுந்தர்ராம் சொல்லவும் ஷியாம் அவளை அழைத்துக்கொண்டு அவனது அறைக்கு வந்தான். டைனிங் ஏரியாவுக்கு அடுத்தாற் போல இன்னொரு ஹால் இருந்தது. அங்கே லைப்ரரி போல நிறையப் புத்தகங்கள் அடுக்கப்பட்டு உட்கார்ந்து படிப்பதற்கு ஏற்றாற்போல இருக்கைகளும் இருந்தன. நான்கைந்து மருத்துவம் சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் அங்கிருந்த மேசையில் கிடந்தது. ஷியாமின் தற்போதைய வாசிப்பு அவை என்று பெண் புரிந்து கொண்டாள். லைப்ரரியின் இரு புறமும் இரண்டு அறைகள். ஒன்று ஷியாமின் பாவனையில் இருந்தது. இன்னொன்று அம்மா, அப்பாவினுடையது.

“வா அஞ்சு.” கதவைத் திறந்து அறையினுள்ளே அவளை அழைத்துச் சென்றான் ஷியாம். பார்க்கும் போதே புரிந்தது, அது அவனது அறை என்று. 

“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணப்போறியா என்ன?”

“ம்ஹூம்… என்னால முடியலை, அப்புறமா மாத்திக்கிறேன்.”

“ம்…” அவன் தலையை ஆட்ட அங்கிருந்த பெரிய கட்டிலில் உட்கார்ந்து தலை சாய்த்துக் கொண்டாள் பெண். 

“குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா?”

“வேணாம்.”

“வயித்துல ஒன்னுமே இல்லையேம்மா!”

“கொஞ்சம் லேட்டாகட்டும்.” சோர்வாக வந்தது குரல். அவள் கால்களைத் தூக்கிக் கட்டிலில் வாகாகப் படுக்க உதவி செய்தான் டாக்டர்.

“பரவாயில்லை சீனியர்.” கலைந்து போயிருந்தவள் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது ஷியாமிற்கு. 

“தூங்கு அஞ்சு.” அவளது இருபுறமும் தலையணைகளை அவளுக்கு அணைவாக வைத்தவன் அவள் தலையை தடவிக் கொடுத்தான். கடற்காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த பெண்ணுக்கு இந்த இதங்களெல்லாம் சுகமாக இருக்க மெல்லக் கண்ணயர்ந்தாள். ஷியாம் அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தான். வாடிப்போய் கிடந்த அந்த வேளையிலும் பார்க்க அத்தனை அழகாக இருந்தாள். 

பல வெளிநாடுகளுக்குப் படிப்பிற்காக, தொழிலுக்காக என்று அவன் போயிருக்கிறான். வகைவகையான பெண்கள் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறான். ஆனால் இவளைப் பார்க்கும் போது அவனுக்குள் உண்டாகும் உணர்வுகளை இதுவரை வேறு யாரும் கொடுத்ததில்லை. கொடுக்கவும் முடியாது. வாழ்வோ சாவோ, எதுவென்றாலும் அது இவளோடு மட்டும்தான். இவளை அவசரப்படுத்தி, சிரமப்படுத்தி அவன் வழிக்குக் கொண்டு வருவதில் அவனுக்கும் உடன்பாடில்லைதான். அப்படி அவன் ஆரம்பத்தில் நினைத்திருக்கவுமில்லை. ஆனால் விட்டுப்பிடிக்க நினைத்தால் இவள் காலம் முழுவதும் அவனைக் காத்திருக்க வைப்பாள். அதில் அவனுக்கு உடன்பாடில்லை. ஏற்கனவே வயது முப்பத்தைந்து. இதில் இனி அவன் எப்போது ஆரம்பித்து எங்கே வாழ்ந்து முடிப்பது?! அவளிடம் பேசும்போது மிகவும் கவனமாகப் பேசவேண்டும் என்றுதான் அவனும் பிரம்ம பிரயத்தனங்கள் செய்கிறான். ஆனால் அவளது விலகல்கள் அவனுக்குள் ஜ்வாலையை மூட்டிவிடுகின்றது. இஷ்டத்துக்குப் பேசிவிடுகிறான்.

இப்போது அவள் வயிற்றைத் தொட்டுப் பார்க்கும் ஆசை வந்தது அவனுக்கு. ஆனால் அவள் அதை விரும்பமாட்டாள் என்பதாலேயே தன்னை அடக்கிக் கொண்டான். இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. வெற்றுக் கரங்களாலேயே அவனால் அவனது குழந்தைகளை இப்போது உணர முடியும். ஆனால் அவள் அனுமதிக்கமாட்டாளே!

“என்னை ரொம்ப நாள் காக்க வைக்காதே அஞ்சும்மா.” வாய்விட்டே சொன்னவன் அறையை விட்டு வெளியே வந்தான். அவனது ஃபோன் சிணுங்கும் சத்தம் கேட்டது.

“உன்னோட ஃபோன்தான் அடிக்குது ஷியாமா.” டைனிங் டேபிளில் இருந்தபடியே குரல் கொடுத்தார் அப்பா. அம்மாவும் அங்கேதான் அமர்ந்திருந்தார். ஷியாம் அலைபேசியை எடுத்துப் பார்த்தான். கோவிந்தராஜன் அழைத்துக் கொண்டிருந்தார். 

“யாருப்பா?”

“அஞ்சுவோட அப்பா.”

“எடுத்துப் பேசு ஷியாமா.” தந்தை வற்புறுத்தவும் அழைப்பை ஏற்றான் மகன். ஃபோனை டைனிங் டேபிளில் வைத்தவன் ஸ்பீக்கரை ஆன் பண்ணினான். அவர்களின் உரையாடலில் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம் என்று நினைத்திருப்பான் போலும்.

“ஹலோ.”

“தம்பி நான் கோவிந்தராஜன் பேசுறேன்.”

“சொல்லுங்க.” 

“ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கேன், ஆனா நீங்க ரூமை காலி பண்ணிட்டதா ரிசப்ஷன்ல சொல்றாங்க.”

“புருஷோத்தமன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே?” ஷியாமின் பதிலில் சுந்தர்ராமும் கண்மணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். 

“தம்பி, எம் பையனுக்குச் சின்னதா ஒரு குற்றவுணர்ச்சி, அஞ்சனாவோட வாழ்க்கை இப்பிடி ஆனதுக்கு அவந்தான் காரணம்னு நினைக்கிறான், ஏதாவது பண்ணித் தன் தங்கையோட வாழ்க்கையைச் சீர்பண்ணிட மாட்டமான்னு துடிக்கிறான், அவனுக்கு அவன் பண்ணுற விஷயங்களோட வீரியம் புரியலை.” மிகவும் தன்மையாகப் பேசினார் அந்தத் தகப்பன்.

“அப்பிடி எதை இப்போ உங்க மகன் தப்பாப் பண்ணிட்டாரு?” ஷியாம் எகிறினான்.

“ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுறதுல அர்த்தமில்லை தம்பி, புரிஞ்சுக்கோங்க, ஒரு தாயோட மனசை நோகடிச்சிட்டு எம் பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை வேணாம்பா, அதுல எங்களுக்கு உடன்பாடுமில்லை.” இப்போது ஷியாம் சட்டென்று ஒரு நொடி தன் அம்மாவைப் பார்த்தான்.

“அஞ்சுவை எங்க வீட்டுக்குத்தான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்.” என்றான் நிதானமாக.

“ஐயையோ! வேணாம்பா, எம் பொண்ணு இதுவரைக்கும் வாழ்க்கையில நிறையச் சொல்லடிகளைப் பட்டுட்டா, இனியாவது அவ சந்தோஷமா இருக்கணும் தம்பி, தயவு செஞ்சு எம் பொண்ணை எங்கக்கிட்டத் திரும்பக் குடுத்திடுங்க, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் தம்பி.” அந்த மன்றாடலில் அங்கிருந்த பெரியவர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

‘இங்கு நடப்பது என்ன?! ஷியாம் அந்தப் பெண்ணைப் பெற்றவரை எந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்?! அவர் மகளை அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல எதுக்கு அந்த மனிதர் இவனிடம் கெஞ்சுகிறார்?!’ இப்போது மேசை மேலிருந்த‌ ஃபோனை கண்மணி தன் கையில் எடுத்துக் கொண்டார்.

“நான் ஷியாமோட‌ அம்மா பேசுறேங்க.” திடுமெனக் கேட்ட அந்தக் குரலில் கோவிந்தராஜன் மறுமுனையில் கொஞ்சம் அதிர்ந்தாற் போலத்தான் தெரிந்தது. 

“அம்மா தப்பு நடந்து போச்சு, மன்னிக்கணும்.” 

“அஞ்சனா நல்லாத்தான் சாப்பிட்டா, ஆனா முடிச்சதும் சட்டுன்னு வாந்தி எடுத்துட்டா.” கோவிந்தராஜன் எதுவும் பேசாதது போல இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தார் கண்மணி. ஆண்கள் மூவரும் அந்தப் பேச்சில் திகைத்துப் போனார்கள்.

“ஐயையோ!”

“நீங்கப் பதறாதீங்க, அவளுக்கு வாந்தி இருக்கிற விஷயம் எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா அதுக்கு ஏத்தாமாதிரி நான் சாப்பாட்டைக் குடுத்திருப்பேன்.”

“இப்போ அஞ்சு எங்கம்மா?” பதறினார் அந்தத் தந்தை.

“சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்திடுச்சு, ரொம்ப டயர்டாகிட்டா, இப்பதான் தூங்க ஆரம்பிச்சா, நான் அவளைப் பார்த்துக்கிறேன், நீங்கக் கவலைப்படாதீங்க.” இரு பொருள்படப் பேசினார் கண்மணி. அந்த வார்த்தைகளுக்கு மேல் பேச கோவிந்தராஜனுக்கும் தெரிந்திருக்கவில்லை. அமைதியாகிவிட்டார். அங்கு நிலவிய அசாத்திய அமைதியை இப்போது மீண்டும் கண்மணியே உடைத்தார்.

“ஒருசில வருத்தங்கள் ஆரம்பத்துல இருந்தது உண்மைதான், ஆனா ஷியாமை தாண்டி வேறெதுவும் எனக்கு முக்கியமில்லை, அஞ்சனாவை நாங்கப் பார்த்துக்கிறோம், கூடிய சீக்கிரமே சம்பிரதாயங்கள் எல்லாத்தையும் பண்ணிடலாம், உங்க தரப்புல ஆகவேண்டியதுகளை சீக்கிரமா‌ முடிக்கப் பாருங்க.” மறைமுகமாக எல்லாவற்றையும் பேசிவிட்டு கண்மணி தங்கள் அறைக்குள் போய்விட்டார். இப்போது அலைபேசியை எடுத்துக் கொண்டு ஷியாம் வெளியே வந்துவிட்டான்.

“தம்பி… உங்கம்மா…” 

“ஒன்னும் பிரச்சினை இல்லைங்க, நீங்க எதை நினைச்சும் வருத்தப்பட வேணாம், அஞ்சுக்கு எந்தக் கஷ்டமும் வராது, வர நான் விடவும் மாட்டேன், புருஷோத்தமன்கிட்ட நான் எல்லாம் பேசியிருக்கேன், அவர் சொல்ற மாதிரி நடங்க, இப்போதைக்கு அஞ்சு இங்க இருக்கிறது யாருக்கும் தெரிய வேணாம், கேஸை சீக்கிரமா முடிக்கப் பாருங்க, முறைப்படி எல்லாத்தையும் பண்ணிட்டா நிம்மதி, புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்.”

“எனக்கு எம் பொண்ணு சந்தோஷமா இருந்தாப் போதும் தம்பி.”

“உங்கப் பொண்ணு வாழ்க்கையில இனி சந்தோஷம் மட்டுந்தான் இருக்கும், நீங்க எதை நினைச்சும் இனி வருத்தப்படாதீங்க.” இங்கே அஞ்சனாவின் தந்தைக்கு ஷியாம் உறுதிமொழி கூறிக்கொண்டிருந்த போது அங்கே தங்கள் அறையில் அவனது பெற்றோர் வேறு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“என்னம்மா இவன் இப்பிடிப் பண்ணுறான்?!” சுந்தர்ராம் ஆச்சரியத்தோடு கேட்டார். மறந்தும் மனைவியின் மனமாற்றத்தை அவர் பிரஸ்தாபிக்கவில்லை.

“அவங்கக்கிட்டச் சொல்லாம இவன் பாட்டுக்கு இங்கக் கூட்டிக்கிட்டு வந்திருக்கான் போல இல்லைங்க?”

“ஆமா, அப்பிடித்தான் தோணுது, அந்த மனுஷன் வேற எம் பொண்ணு எங்கடான்னு சத்தம் போடாம இவங்கிட்டக் கெஞ்சிக்கிட்டு நிற்கிறாரு! வேற யாருமா இருந்திருந்தா அதானே நடந்திருக்கும்?!”

“ம்… ஷியாம் பண்ணுறது தப்புங்க, ஆனா அவன் இப்போ இருக்கிற மனநிலையில அதை அவங்கிட்டச் சொல்லவும் முடியாது, நாங்க இங்க வர்றது உங்களுக்குப் புடிக்கலைன்னா வேற எங்கேயாவது போறோம்னு கிளம்பிடுவான்.”

“கரெக்ட்.”

“அவனோட இஷ்டம் போலப் பண்ணட்டுங்க, அந்தப் பொண்ணுதான் இனி அவனோட வாழ்க்கைன்னு அவன் முடிவு பண்ணிட்டான், அவனை இனி மாத்த முடியாதுங்க, அவனை அவன் போக்கிலேயே விட்டிரலாம்.” 

“ம்…” மனைவியின் பேச்சுக்கு ஆமென்பது போலத் தலையை ஆட்டினார் சுந்தர்ராம். கண்மணி சொல்வதுவும் நியாயம்தானே?! அஞ்சனா என்கின்ற பெண்ணைப் பற்றித் தெரிய வந்தது முதல் கண்மணி ஒருவிதப் போராட்டத்திலேயே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் வெகு அதிர்ச்சியாக இருந்தது. தனக்கு வரவிருக்கும் மருமகளைப் பற்றி எண்ணற்ற கனவுகளோடு தானிருக்க இப்படியொரு பெண் தனது மருமகளா என்கின்ற ஆங்காரம்தான் அவருக்கு முதலில் தோன்றியது. அதனால்தான் அஞ்சனாவின் வீடுவரை கிளம்பிப் போனார். ஏனென்றால் ஷியாமின் வாரிசு அந்தப் பெண்ணின் வயிற்றில் இருக்கிறது.

ஆனால் காட்சிகள் அவர் எதிர்பார்த்தது போல நிகழவில்லை. எந்த வாரிசைத் தனதாக்க அவ்வளவு தூரம் போனாரோ, அதே வாரிசுக்கே ஆபத்து என்றபோது கண்மணி ஆடிப்போய்விட்டார். ஷியாமை எப்படி இனித் தான் பார்ப்பது என்று வேதனைப்பட்டார். ஆனால் அந்தச் சிரமத்தை மகன் அவருக்குக் கொடுக்கவேயில்லை. அவன் வீட்டிற்கே வரவில்லை. அந்த இடத்தில் கண்மணி ஒரு தாயாக மிகவும் மோசமாகத் தண்டிக்கப்பட்டார். அஞ்சனா தரப்பை அவரால் குறை கூறவே இயலவில்லை. ஏனென்றால் அவர்கள் யார் மனதிலும் ஷியாமை தங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆக்க வேண்டும் என்கின்ற எண்ணம் சிறிதும் இருக்கவில்லை. அது அவருக்கேப் புரிந்தது. டாக்டர் லதா அன்று பேசும் போதும் அதையேதான் சொல்லியிருந்தார். 

அன்று சுந்தர்ராம் ஹாஸ்பிடலுக்குப் போய் டாக்டர் லதாவை சந்தித்த பிறகு லதா, கண்மணியை அழைத்துப் பேசியிருந்தார். ஷியாமின் மனது, அவனது ஆசை, அஞ்சனாவின் நிலை என அன்றைக்கு நிறையப் பேசியிருந்தார். மனதுக்குள் நிறைய வருத்தம் இருந்த போதிலும் தன் மகனின் ஆசை அந்தப் பெண்தான் என்றபோது கண்மணி தன் மனதைத் தேற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. அதனால்தான் நேற்று ஷியாம் வீட்டுக்கு வந்து பேசியபோது சட்டென்று சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால் இன்றைக்கு அவன் அந்தப் பெண்ணோடு வீட்டிற்கே வந்து நின்றபோதுதான் டாக்டர் லதா தன்னிடம் பேசும்போது அதிகமாக ஒன்றும் சொல்லிவிடவில்லை என்று புரிந்தது. 

அவளுக்கு ஒன்றென்றால் அது தன் பிள்ளையை எத்தனைத் தூரம் பாதிக்கிறது என்பதை ஷியாம் தன்‌ ஒவ்வொரு செய்கை மூலமும் தனது தாய்க்கு விளக்கிக் கொண்டிருந்தான். இப்போது என்னவென்றால் அவனது அறைக்கே அவளையும் அழைத்துச் செல்கிறான்! அதுவும் தன் பெற்றோர்கள் முன்னாலேயே! கண்மணிக்கு இப்போது புரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். எவ்வளவு சீக்கிரமாக இவர்கள் கல்யாணத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

***

மாலை ஐந்து மணிவரை நன்றாக அடித்துப் போட்டாற் போலத் தூங்கியிருந்தாள் அஞ்சனா. அதற்கு மேலும் அவளைத் தூங்க விட்டால் அவளது இரவுத் தூக்கம் கெட்டுவிடும் என்பதால் ஷியாம் அவளது காலை மெதுவாகப் பிடித்து விட்டான். மென்மையான அந்த விரல்களை ஒன்றாக அவன் அழுத்திக் கொடுக்க அவளுக்கு அது இதமாக இருந்திருக்க வேண்டும். லேசாக அசைந்து விட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தாள். 

“அஞ்சனா…” அவன் குரல் அவளைத் தொல்லை செய்யாமல் மெதுவாக எழுப்பியது.

“ம்…” அவள் இப்போது கண்விழித்தாள்.

“போதும் தூங்கினது, எந்திரி.” சொல்லிவிட்டு அவளருகே கட்டிலில் அமர்ந்தான். பெண்ணும் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தது. 

“ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?”

“அது பரவாயில்லை, இப்போ எப்பிடியிருக்கு?”

“ம்… ஓகே.” இவனோடு பேசினாலும் அவளது விழிகள் வெளியே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலையே நோட்டம் விட்டது. 

“உங்கப்பா கூப்பிட்டிருந்தாரு, நாம இங்க வர்றது ஏற்கனவே உங்கண்ணாக்குத் தெரியும்.”

“ஓ…” லேசான ஆச்சரியம் பெண்ணின் குரலில். ஷியாம் சற்றே புன்னகைத்தான். 

“நீ இங்கதான் இருக்கே, அதால கவலைப்பட வேணாம்னு சொல்லிட்டேன்.” அவள் இதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. சொன்னாலும் என்ன ஆகிவிடப்போகிறது?! அவனிஷ்டப்படிதானே எல்லாம் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டாள். 

“வாஷ் எடுத்துட்டு வா, ஏதாவது சாப்பிடலாம்.”

“உங்களுக்கு இன்னைக்கு ட்யூட்டி இல்லையா?”

“ம்ஹூம்.”

“சீனியர், என்னை பீச்சுக்கு கூட்டிட்டுப் போறீங்களா?”

“ஆங்?!” சட்டென்று அவள் கேட்க ஷியாம் திகைத்துப் போனான். இதை அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. 

“இல்லை… அலையோட சத்தம் எனக்கு ரொம்பப் புடிக்கும், கால் நனைச்சுக்கிட்டே அந்த சத்தத்தைக் கேட்கணும்னு ஆசை.”

“ஏன்? இவ்வளவு நாளும் நீ அதைக் கேட்டதில்லையா?”

“ம்ஹூம்… ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கும் போது ஒரு தடவை‌ பீச்சுக்கு போயிருக்கேன், அதுக்கப்புறம் போனதில்லை, பொண்ணுங்களுக்கு அங்க என்ன வேலைன்னு அண்ணா திட்டுவான்.”

“…” என் சின்னச்சின்ன ஆசைகள் கூட நிறைவேறியதில்லை என்று குழந்தை போல அவள் புகார் படித்துக் கொண்டிருந்தாள். ஷியாம் அவளை மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

“கூட்டிட்டுப் போறீங்களா?” மீண்டும் கேட்டாள். காதலியின் முதல் ஆசை.

“இன்னைக்கே போகணுமா? இல்லை நாளைக்குப் போலாமா?”

“இன்னைக்குப் போலாம்.” அவசரமாக வந்தது குரல்.

“அப்போ ரெடியாகு.” அவன் பதிலில் உற்சாகமாக எழுந்தவள் அந்த அறையிலிருந்த குளியலறைக்குள் சென்று உடம்பு கழுவிவிட்டு வேறொரு புடவையில் வந்தாள். மெல்லிய மஞ்சள் நிறத்தில் சாம்பல் வண்ண பார்டர். சாம்பல் வண்ணத்திலேயே ப்ளவுஸும் ஹெட் பீஸும் இருந்தது. கூந்தலைப் பின்னல் போட்டிருந்தாள். அஞ்சனா ரூமை விட்டு வெளியே வந்தபோது மற்றைய மூவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“வாம்மா அஞ்சனா, வா வா, இப்போ எப்பிடி இருக்கு?” சுந்தர்ராம் மருமகளை நலன் விசாரித்தார். 

“ம்… பரவாயில்லை.” சங்கடமான முறுவல் அவள் முகத்தில். ஷியாமின் கண்கள் அவளை விட்டு அங்கே இங்கே அகலவில்லை. 

“உட்காரும்மா.” உபசரித்த கண்மணி அவளுக்கு டீயை கொடுத்தார்.

“டீ…” பெண்ணின் முகம் அசௌகரியத்தைக் காட்டியது.

“அப்போ பால் குடிக்கிறியா? இல்லை காஃபி?”

“ம்ஹூம்…” சட்டென்று மறுத்தவள்,

“அப்புறமாக் குடிக்கட்டுமா?” என்றாள் தயக்கமாக.

“இல்லையில்லை, வயித்துல ஒன்னுமேயில்லை, இப்பிடியே இருந்தா எப்பிடி? நைட்டுக்கு டின்னர் என்னப் பண்ணனும்னு சொல்லு, உனக்குப் பிடிச்சதாப் பண்ணுறேன், ஒழுங்காச் சாப்பிடணும்.” மிரட்டினார் கண்மணி. பாவம் போல ஷியாமை ஒரு பார்வைப் பார்த்தாள் அஞ்சனா. அவளுக்குச் சாப்பாடு என்ற வார்த்தையே இப்போது கசந்தது.

“பாவம் கண்மணி, புடிக்கலைன்னா விடேன், எதுக்கு இப்பிடி மிரட்டுறே?” 

“நீங்கச் சும்மா இருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது, ரெண்டு மாசமாச்சு, இதுக்கப்புறமும் ஒழுங்காச் சாப்பிடலைன்னா எப்பிடி? ஒன்னில்லை, உள்ளுக்குள்ள ரெண்டு உயிர் இருக்கு, தெரியுமில்லை?”

“அதுவும் சரிதான், கொஞ்சம் கஷ்டப்பட்டாவது சாப்பிடும்மா.” சுந்தர்ராம் கனிவோடு சொல்ல கண்மணி கொடுத்த டீயை கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து முடித்தது பெண்.

“அம்மா, நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றோம்.”

“சரிப்பா, வெளியேன்னா?”

“பீச் வரைக்கும்.”

“பீச்சுக்கா? இப்பவா?!” மனைவி மறுப்பேதும் சொல்வதற்கு முன்பாக மேசைக்குக் கீழே அவரது கையைப் பிடித்துத் தடுத்தார் சுந்தர்ராம். அந்தத் தொடுதலில் கண்மணி என்ன உணர்ந்தாரோ,

“சரி சரி, சீக்கிரமாப் போயிட்டு வாங்க, இந்நேரத்துக்கு மாசமா இருக்கிற பொண்ணுங்க வெளியே போகக்கூடாது, ரொம்ப லேட் பண்ணிடாதே ஷியாமா.” என்றார் தன்மையாக.

“சரிம்மா.” அவர்கள் இருவரும் வெளியே போனதும் கணவர் மேல் பாய்ந்தார் கண்மணி.

“என்னங்க நீங்க?! பட்சி பறக்கிற நேரம், அவந்தான் சின்னப்புள்ளை, ஒன்னும் தெரியாம வெளியே போறான்னா நீங்களும் அதுக்குச் சரிங்கிறீங்க?”

“உம் புள்ளை எப்பவாவது பீச்சுக்கு போயிருக்கானா? அவன் பீச்சுன்னு சொன்னதும் அந்தப் பொண்ணு முகம் சும்மா மின்னுது, ஆசையாக் கேட்டிருக்குமாக்கும், விடும்மா, இன்னைக்கு ஒரு நாள்தானே, ஒன்னும் ஆகாம கடவுள் காப்பாத்துவாரு.” 

“என்னமோப் பண்ணுங்கப் போங்க.” அங்கலாய்த்த படி கண்மணி எழுந்து போய்விட்டார். பக்கத்தில்தான் கடல் இருந்தாலும் அவள் நடப்பது அத்தனை உசிதமில்லை என்பதால் காரில் அழைத்து வந்திருந்தான் ஷியாம். ஒன்றிரண்டு மனிதர்கள் தவிர பெரிதாக அங்கே யாரும் இருக்கவில்லை. காரை அவன் நிறுத்த முகத்தில் வந்து மோதிய உப்புக்காற்றில் மகிழ்ந்து சிரித்தாள் பெண். அவளைத் திரும்பிப் பார்த்தவன் முகத்திலும் புன்னகைப் படர்ந்தது.

“இறங்கலையா?” அவன் சொனானதுதான் தாமதம். காலணியைக் கழட்டிவிட்டு இறங்கியது பெண். 

“கவனம் அஞ்சு, கால்ல ஏதாவது குத்திடப் போகுது.” அவன் பேச்சையே கவனிக்காதவள் போல அலையை நோக்கிப் போனாள் அஞ்சனா. ஷியாமும் காரை விட்டு இறங்கியவன் அவளையே பார்த்தபடி‌ காரில் சாய்ந்து கொண்டான். புடவை முந்தானை காற்றில் படபடக்க, கற்றைக் கூந்தல் கடற்காற்றில் மிதக்கக் கடல் தேவதைப் போல நடந்து போய்க்கொண்டிருந்தாள். அலையில் அவள் கால் நனைத்த போது அவள் புடவை நனைய ஆரம்பித்தது. அதற்கு மேலும் அங்கே நிற்காமல் அவளருகே போனான் ஷியாம்.

“அஞ்சு, சேலை நனையுது பாரு.”

“பரவாயில்லை சீனியர்.” அந்த ஏகாந்தத்தை ரசிப்பவள் போல சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தாள்.

“இப்போ கவிதை எழுதுறதில்லையா?” ஏதோ ஞாபகத்தில் கேட்டாள் அஞ்சனா.‌ ஆனால் அவனிடம் அதற்குப் பதில் இருந்தது. 

“நடுவுல கொஞ்ச நாள் எழுதலை, அநேகமா‌ இனி எழுதுவேன்னு நினைக்கிறேன்.” சொல்லிவிட்டு அவன் சிரித்தான். அவளுக்கும் அவன் பேச்சின் அர்த்தம் புரிந்தது.

“காதோரம் லேசா நரைச்சிடுச்சு, இனி கவிதை வருமா?” வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டு அவள் குறும்பாகக் கேட்டாள். கேட்ட பின்புதான் ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது. கீழுதட்டைப் பற்களால் கடித்தபடி அலைகளை நோக்கித் திரும்பிவிட்டாள். ஷியாமும் இப்போது சத்தமில்லாமல் சிரித்தான். அவன் கண்கள் பற்களுக்குள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த அவள் இதழ்களிலேயே நிலைத்திருந்தது. அவன் தன் மேல் தொடுக்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. சொல்லாத அவன் பதில் என்னவாக இருக்கும் என்று அவளுக்கும் புரியாமலில்லை. 

மாலைச் சூரியன் அள்ளி வீசிய மஞ்சள் கதிர்களில் அவள் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னழகே அவனுக்குப் பித்தமூட்டியது என்றால்… அதற்கு மேல் சொல்லத் தேவையில்லை. அலைகள் நனைத்த புடவையோடு அந்த அழகு தேவதை அவனை அவஸ்தைப்படுத்தியது. 

‘ஒரு முறை அனுமதித்துப்பார்! கவிதையென்ன… உனக்காகக் காவியமே படைக்கிறேன் நான்!’ ஷியாமின் மனது உள்ளுக்குள் உருகியது.

நடந்ததை மறந்திடச் சொல்… உறவினில் கலந்திடச் சொல்… மடியினில் உறங்கிடச் சொல்…

 

 

Leave a Reply

error: Content is protected !!