siraku24

siraku cp-dc805dbf

siraku24

சிறகு 24 (pre-final)

அஞ்சனாவின் வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு இறங்கினான் ஷியாம். இன்றைய பணி நேரம் ஏழு மணியோடு நிறைவு பெற்றிருந்தது. நேராக மனைவியின் வீட்டுக்கு வந்துவிட்டான். நேற்றிரவு அவள் வந்து போனதிலிருந்து ஏதோ வானத்தில் மிதப்பவன் போல பறந்து கொண்டிருந்தான் டாக்டர்.

“வாங்க மாப்பிள்ளை, வாங்க வாங்க.” கார் சத்தம் கேட்டு வெளியே வந்த கோவிந்தராஜன் அப்போது அங்கே தங்கள் மாப்பிள்ளையை எதிர்பார்க்கவில்லை. திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் ஷியாம் இந்த வீட்டிற்குப் பெரிதாக வந்ததில்லை. அவனது சூழ்நிலை சம்பிரதாயங்களைப் பின்பற்ற அவனை அனுமதிக்கவில்லை. அப்பாவின் சத்தத்தில் புருஷோத்தமனும் வெளியே வந்துவிட்டான்.

“அடடே ஷியாம்! வாங்க வாங்க.” அதன் பிறகு அந்த வீடு கலகலவென மாறிப்போனது. ஷியாமின் கண்கள் மனைவியையே தேடின.

“அஞ்சனா எங்க ரம்யா?”

“இன்னைக்குக் காலையிலேயே எந்திரிச்சுட்டாண்ணா, என்னமோத் தெரியலை, தூக்கம் வரலை அண்ணின்னு சொல்லிக்கிட்டே இருந்தா, ஏதாவது சாப்பிடுன்னு சொல்லி ரெண்டு தோசை சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் முன்னாடிதான் ரூமுக்கு போனா.”

“ஓ…”

“கூப்பிடுறேன் ண்ணா.”

“இல்லைம்மா, தூங்கட்டும் விடுங்க.”

“மாப்பிள்ளை, நீங்களும் சாப்பிடுறீங்களா?” இது வெண்பா. மாப்பிள்ளையைக் கண்ட மாத்திரத்தில் அவர் முகம் மலர்ந்து போய் கிடந்தது.

“இப்போ டீ குடிக்கிறேன் அத்தை, குளிச்சிட்டு அப்புறமாச் சாப்பிடுறேன்.”

“சரிங்க மாப்பிள்ளை.” மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டிக்கொண்ட வெண்பா அவசர அவசரமாக கிச்சனுக்கு ஓடினார். இந்தப் பதிலுக்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் தங்கள் மாப்பிள்ளை இன்றைக்கு இங்கேதான் இருப்பார் என்பதல்லவா?! அந்த ஆனந்தத்தை வெண்பாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

“புருஷோத்தமா!”

“என்னம்மா?” கேட்டபடி வந்தான் மகன்.

“இன்னைக்கு மதியத்துக்குப் பெரிய விருந்தே சமைக்கணும், அதுக்கு ஏற்பாடு பண்ணு, ரம்யாக்கிட்ட என்னென்ன வாங்கணும்னு கேட்டுக்க, உங்கப்பாவை ஒரு ஃபோனை போட்டு மாப்பிள்ளையோட‌ அம்மா, அப்பாவையும் மதியத்துக்கு அழைக்கச் சொல்லு.” ஆணைகள் பறந்தன.

“சரிம்மா, நீ எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“புருஷோத்தமா!” மகனை அழைத்த வெண்பா சட்டென்று குலுங்கி அழுதார். 

“அம்மா! என்னாச்சு? ஏம்மா அழுறே?” மகன் பதறினான். அம்மா இப்போது கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“அஞ்சு வாழ்க்கையை நினைச்சு நான் எத்தனை நாள் அழுதிருக்கேன்னு உனக்குத் தெரியாதுப்பா, எம் பொண்ணு ஒவ்வொரு தடவையும் இங்க வரும்போது எவ்வளவு வேதனைகளைச் சுமந்துக்கிட்டு வருவான்னு உங்க யாருக்கும் தெரியாது, அவளைப் பார்த்துப் பார்த்து நான் புழுங்கியிருக்கேன்.”

“அதெல்லாம் பழைய கதை, விட்டுத்தள்ளும்மா.”

“ம்… ஆமா, எல்லாத்தையும் மறக்கணும், இப்ப இருக்கிற சந்தோஷம் மட்டுந்தான் உண்மை, அஞ்சு முகத்தைப் பார்த்தியா? அதுல எவ்வளவு சந்தோஷம்.”

“ம்…” மகனும் புன்னகைத்தான். 

“ஓடு ஓடு, வேலைங்களைப் பாரு, ஸ்வீட் கடைல வாங்கலாம், எனக்கு அதுமட்டும் நல்லா வராது.”

“ரம்யா பண்ணுவாம்மா.”

“வேணாம் வேணாம், அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.”

“சரிம்மா.” புருஷோத்தமன் போனவுடன் மளமளவென டீயை தயாரித்த வெண்பா அதைத் தன் மாப்பிள்ளையின் கையில் கொடுத்தார். 

“இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி பண்ணிடுறேன் மாப்பிள்ளை, நீங்க குளிச்சிட்டு வாங்க.”

“அதெல்லாம் பெருசா ஒன்னும் பண்ண வேணாம் அத்தை, இருக்கிறதைக் குடுங்க போதும்.”

“நீங்க எதுவும் பேசக்கூடாது மாப்பிள்ளை, அத்தை பண்ணிப் போடுற அத்தனையையும் சாப்பிடுறது மட்டுந்தான் இன்னைக்கு உங்களோட‌‌ வேலை.” அந்தப் பதிலில் ஷியாம் சிரித்துவிட்டான். 

“உங்க இஷ்டம்.” டீயை முடித்தவன் மனைவியின் அறைக் கதவைத் திறந்தான். மிதமான வேகத்தில் ஏஸி ஓடிக்கொண்டிருந்தது. திரைச்சீலைகள் நன்கு கனமாக இருந்ததால் சூரியன் தன் பணியை அந்த அறைக்குள் ஆற்றவில்லை. ஒரு புன்னகையோடு அவளருகே வந்தான் கணவன். மெல்லிய போர்வையால் மூடிக்கொண்டு இதமான தூக்கத்தில் இருந்தாள் மனைவி. நேற்றைய இரவை நினைத்துப் பார்த்த ஷியாமிற்கு மகிழ்ச்சி எல்லை மீறிப் பொங்கியது. சத்தம் செய்யாமல் குளியலறைக்குள் போனவன் குளித்துவிட்டு வந்தான். புருஷோத்தமனின் லுங்கியும் டீ ஷர்ட்டும் இவனுக்குச் சரியாகத்தான் பொருந்தியது. 

அஞ்சனாவின் அருகே கால்நீட்டி அமர்ந்தவன் அவள் புறமாகச் சாய்ந்து ஒற்றைக் கன்னத்தை வருடினான். அந்த ஸ்பரிசத்தைத் தூக்கத்தில் கூட அவள் இனங்கண்டு கொண்டாள். மெல்லிய புன்னகை அவள் இதழ்களில் படர்ந்தது. 

“ஷியாம்…” என்றாள் மெதுவாக. இப்போது ஷியாமும் புன்னகைத்துக் கொண்டான்.

“வந்துட்டீங்களா?” கண்களைத் திறவாமலேயே கேட்டவள் தன் கன்னம் தடவிய அவன் கையைப் பிடித்தாள். 

“இதென்ன தூக்கம் இந்நேரம்?” கேட்ட கணவனைக் கண்களைத் திறந்து பார்த்தது பெண். 

“ராத்திரி தூக்கம் வரலை, நான் சரியாத் தூங்கலை.”

“ஏன்?” 

“நீங்க எம் பக்கத்துல இல்லையே!” அந்த வார்த்தைகளில் ஷியாம் முழுதாக வீழ்ந்து போனான்.

“நேத்துல இருந்து அஞ்சும்மா ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க…” ராகம் போல சொன்னவன் அவள் நெற்றிப்பொட்டிலிருந்து சுட்டுவிரலால் கோலம் போட்டான். மூக்கு, உதடுகள் எனத் தாண்டிய அவன் விரல் இப்போது கழுத்தில் இறங்கியது. அந்த விரலைத் தடுத்து நிறுத்தினாள் மனைவி.

“அஞ்சும்மா…” அவன் சிணுங்கினான். அவன் புறமாகத் திரும்பியவள் அந்த மார்பில் முகம் புதைத்துக் கண்மூடிக் கொண்டாள்.

“யாரோட ட்ரெஸ் இது? அண்ணாவோடதா?”

“ம்…”

“நல்லாவே இல்லை.”

“அப்பிடியா? அப்போக் கழட்டிரலாமா?”

“கழட்டலாமே.” சுலபமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் பெண்.

“நீ இன்னைக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கேடி! இதை இன்னைக்கு நைட் தைரியமிருந்தாச் சொல்லிப்பாரு.” இப்போது சட்டென்று கண்களைத் திறந்து கணவனைப் பார்த்தாள் அஞ்சனா. 

“ஷியாம்! இன்னைக்கு உங்களுக்கு ட்யூட்டி இல்லையா?”

“பொண்டாட்டி இவ்வளவு ரொமாண்டிக்கா பேசும் போது ட்யூட்டி என்ன வேண்டிக் கிடக்குது ட்யூட்டி?!”

“கொஞ்சம் பொறுப்பாப் பேசுங்க டாக்டரே.”

“சரி, இன்னைக்கு ஒரு நாள் நான் பொறுப்பில்லாத டாக்டரா இருந்துட்டுப் போறேன்.” அவன் சொல்ல அந்தக் கன்னத்தில் ஒரு அடி வைத்தாள் மனைவி. 

“ஷியாம்…”

“ம்…”

“அண்ணிக்கு…” எதையோ சொல்லத் தயங்கினாள் மனைவி.

“உங்கண்ணிக்கு என்னவாம்?”

“அண்ணிக்கு… டேட் தள்ளிப் போகுதாம்.”

“பார்றா! சீனியர் நம்மக்கிட்ட ஒன்னுமேச் சொல்லலை! வெரிகுட் வெரிகுட்! இன்னொரு பேபியா? சூப்பர்தான் போ!”

“ஒரு வாரம் ஆகியிருக்கும் போல, இன்னும் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலை, அண்ணி வீட்டுல கூட இன்னும் யாருக்கும் சொல்லலை, கொஞ்ச நாள் போகட்டும்னு அம்மா சொல்றாங்க.” 

“அஞ்சு, மாப்பிள்ளைக்குப் பசிக்கும், வந்து சாப்பிடச் சொல்லு.” இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே இருத்து வெண்பா குரல் கொடுக்கக் கட்டிலை விட்டு எழப்போனாள் அஞ்சனா.

“நீ தூங்குடா, நான் சாப்பிட்டுட்டு வர்றேன்.”

“ம்ஹூம்… எனக்கும் பசிக்குது.”

“இப்பதான் சாப்பிட்டேன்னு சொன்னாங்க?”

“திரும்பவும் பசிக்குது.”

“ம்… நல்லாச் சாப்பிடு, ஆனா இனி நடக்க ஆரம்பிக்கணும் அஞ்சும்மா, ரொம்ப வெயிட் போட்டுச்சுன்னா பின்னாடி டெலிவரி கஷ்டமாகிடும்.”

“ம்…” அதன்பிறகு அந்த வீடே மிகவும் கலகலப்பாக மாறிவிட்டது. சுந்தர்ராமும் கண்மணியும் கூட வந்துவிட்டார்கள். விருந்து அமர்க்களப்பட்டது.

“என்னம்மா அஞ்சனா, நீ பாட்டுக்கு இங்க வந்து அம்மா வீட்டுல உக்கார்ந்துட்டா நாங்க அங்க என்னப் பண்ணுறது? நானும் உன்னோட மாமாவும் எத்தனை நேரத்துக்குத்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறது?”

“ரெண்டு நாள் இங்க இருந்துட்டு வந்தர்றேன் அத்தை.” கண்மணிக்கு பதில் சொல்லிவிட்டு அஞ்சனா புன்னகைத்தாள்.

***

திருமணம் வீட்டளவில் நடைபெற்றதால் மனைவியின் வளைகாப்பைத் தடபுடலாக ஏற்பாடு பண்ணியிருந்தான் ஷியாம். நெருக்கமான பல ஹாஸ்பிடல் ஸ்டாஃபுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போன வாரம்தான் அபிநயாவின் திருமணம் முடிவடைந்திருந்தது. ஷியாம் தம்பதியினர் குடும்ப சகிதம் சென்று திருமணத்தைச் சிறப்பித்திருந்தார்கள். ஆனாலும் தனது சீனியரை பார்த்த போதெல்லாம் அபியின் முகம் கடுகடுவென மாறிப்போனது.

“என்னாச்சு ஷியாம்? எதுக்கு இந்த அபி உங்களைப் பார்க்கிறப்பெல்லாம் முறைக்கிறா?!” அஞ்சனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. இது என்ன இந்தப் பெண் இப்படித் தன் கணவனை முறைக்கிறது என்று ஆச்சரியப்பட்டாள். 

“ஒன்னுமில்லைடா, ஹாஸ்பிடல் விஷயத்துல எனக்கும் அபிக்கும் சின்னதா ஒரு கருத்துவேறுபாடு, அதுக்குத்தான் அம்மணி என்னை முறைக்கிறாங்க.” 

“ஹாஸ்பிடல் விஷயத்தை எதுக்கு இவ வீடு வரைக்கும் கொண்டு வர்றா?”

“இதுல காமெடி என்னன்னா, இந்த விஷயத்துல சம்பத் எனக்கு சப்போர்ட், அதை அம்மணியால இன்னும் தாங்க முடியலை.” மனைவியின் காதோடு சொல்லிவிட்டுக் கலகலவென சிரித்தான் ஷியாம். இப்போது அஞ்சனாவின் விசேஷத்திற்கு அபியும் கணவனும் வந்திருந்தார்கள். தனது நண்பியோடு மகிழ்வோடு உறவாடிய பெண் சீனியரை பார்க்கும் போது மாத்திரம் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டது.

“என்ன சம்பத் இவ இப்பிடி இருக்கா?”

“விட்டுப் பிடிக்கலாம் ஷியாம், அன்னைலேர்ந்து இந்தப் பேச்சு வந்தாலே இப்பிடித்தான் இருக்கா, நானும் ரெண்டு மூனு தடவைப் பேசிப் பார்த்துட்டேன்.”

“அஞ்சுக்கிட்ட எதையாவது கோபத்துல உளறிடுவாளோ?”

“ம்ஹூம்… பேபிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவான்னு எங்கிட்டயே கவலைப்பட்டா, அதால நிச்சயமா அதை மட்டும் பண்ணமாட்டா.”  பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த பட்டுப்புடவை. கண்ணைப் பறிக்கும் ஆபரணங்கள். இன்றைய நிகழ்வுக்குக் கட்டாயம் ஒட்டியாணம் போட வேண்டும் என்று மனைவியிடம் சொல்லியிருந்தான் ஷியாம். சாதாரணமாக ஏழு மாதங்களில் பெண்களுக்கு இருக்கும் பருமனை விட அஞ்சனாவின் வயிறு இரட்டைக் குழந்தைகள் என்பதால் இன்னும் பெரிதாக இருந்தது.

“டேய் ஷியாமா? யாராவது கண்ணு வெச்சிடுவாங்கப்பா!” கண்மணி பயத்தில் வெளுத்துப் போனார்.

“கண்ணு, மூக்கு அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா!” மகன் அம்மாவின் பயத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கண்மணி கணவரிடம் புலம்பினார்.

“என்னங்க இவன் இந்த ஆட்டம் போடுறான்? எனக்கு ரொம்பப் பயமா இருக்குங்க, அந்தப் பொண்ணு சும்மாவே அழகு, இதுல இப்போ இன்னும் ஜொலிக்கிறா! ஆண்டவா! நீதான் எல்லாரையும் காப்பாத்தணும்!” கண்ணீர் மல்கப் புலம்பிய மனைவியைத் தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினார் சுந்தர்ராம். அவருக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சுந்தர்ராமின் குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோருக்கும் ஒரு குழந்தைதான். அது ஏனோ தெரியவில்லை? அப்படித்தான் பிறந்தது. அதிலும் ஷியாம் பிறக்கும் போது கண்மணி மிகவும் கஷ்டப்பட்டார். கர்ப்பம்,பிரசவம், குழந்தை… இது போன்ற விஷயங்கள் என்றாலே இவர்கள் இருவரும் கொஞ்சம் பயப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவம் அப்படி.

“அஞ்சும்மா, மூக்குத்தி போட்டுக்கோ, உன்னோட மூக்குக்கு சூப்பரா இருக்கும்.” மனைவியைப் பார்த்துப் பார்த்து அலங்கரித்தான் கணவன். அவனும் அன்றைக்கு வேஷ்டி சட்டையில் வந்திருந்தான். ஒப்பனை, தலை அலங்காரம், ஃபோட்டோ என அது ஒரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்தது. மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து வெண்பா அழவே ஆரம்பித்துவிட்டார்.

“அத்தை! என்ன இது? எதுக்கு இப்போ அழுறீங்க? பார்க்கிறவங்க என்ன நினைக்கப் போறாங்க?”

“என்னால முடியலை ரம்யா? நம்ம அஞ்சு முகத்துல எவ்வளவு சந்தோஷம் பார்த்தியா? எம் பொண்ணு இனி சிரிக்கவே மாட்டாளான்னு நான் எத்தனை நாள் அழுதிருப்பேன்? ஆண்டவன் இருக்கான் ம்மா, இருக்கான்.” குடும்பத்தார் அனைவரது குதூகலம், மகிழ்ச்சி அனைத்துக்கும் நடுவே வளையல் அடுக்கி, சந்தனம் பூசி, ஆசீர்வாதம் வாங்கி என அந்த வளைகாப்பு இனிதே நிறைவு பெற்றிருந்தது. ஒரு திருமணம் நடந்தேறினால் எத்தனை கோலாகலம் இருக்குமோ அதற்கு எந்தக் குறைவும் இல்லாமல் அந்த வளைகாப்பு நடந்திருந்தது. மனைவியோடு தங்கள் அறைக்கு வந்த ஷியாம் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

“அசத்துறடீ ராட்சசி நீ! உன்னோட அழகை அப்பிடியே எம் பொண்ணுங்களுக்குக் குடுத்திடு.”

“அப்போ எனக்கு?!” அஞ்சனா குறைப்பட்டாள்.

“அதானே?!” சொல்லிவிட்டு அவள் இதழ்களை முற்றுகையிட்டான் ஷியாம்.

“விடுங்க ஷியாம்.” அவள் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

“மண்டபத்துல வெச்சே இப்பிடியொன்னு குடுக்கணும்னு தோணிச்சு.” 

“நான் வாஷ் எடுத்துட்டு வர்றேன்.”

“நானும் வரவா?” டவலை எடுத்துத் தன்னிடம் நீட்டிக் கண்ணடித்த கணவனை முறைத்தாள் பெண். 

“இல்லைம்மா, ஒரு ஹெல்புக்குத்தான்.” அவனும் சிரித்துக் கொண்டான். இரண்டும் பெண் குழந்தைகள்தான் என்பது ஸ்கேனில் தெரிந்திருந்தது. கண்மணி மகிழ்ச்சியில் ஆடாத குறைதான். இப்போது நன்றாகக் குழந்தைகளின் அசைவு தெரிவதால் ஷியாம் மனைவியை விட்டு அசைவதே இல்லை. அந்தப் புயல் அவளின் மேடிட்ட வயிற்றையே இப்போது மையங் கொண்டிருந்தது. 

அஞ்சனா உடம்பு கழுவிவிட்டு வெளியே வந்த போது அவன் ஏற்கனவே குளித்திருந்தான். அவள் வயிற்றை அவன் கண்கள் அளவெடுத்தன. முக்கியமான கேஸ்களைத் தவிர மற்றைய எதற்கும் ஷியாம் இப்போது ஹாஸ்பிடல் போவதில்லை. பணிநேரத்தை‌ வெகுவாகக் குறைத்திருந்தான். தினமும் அவளை பீச்சிற்கு அழைத்துச் சென்று நடக்க வைத்தான். கர்ப்பிணிப் பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை கூடவே இருந்து கற்றுக் கொடுத்தான். அஞ்சனாவிற்கு அடிக்கடி பசி வந்ததால் அவளது பெரும்பாலான நேரம் உண்பதிலேயே கழிந்தது. போஷாக்கான உணவுகளின் பட்டியலை அம்மாவிடம் கொடுத்தவன் மனைவிக்கு எந்த அளவில் உணவைக் கொடுக்க வேண்டும் என்று அவருக்கும் கற்றுக் கொடுத்தான். ஆகமொத்தம் அந்தப் பிரபல டாக்டரின் கண்காணிப்பில் அஞ்சனாவின் பிரசவ நேரம் எந்தச் சிக்கலும் இல்லாமல் நெருங்கிக் கொண்டிருந்தது.

“ஷியாம்.” கட்டிலில் அவனருகே கால்நீட்டி அமர்ந்து கொண்டது பெண்.

“ம்…”

“நான் ஒன்னு கேட்கட்டுமா?”

“என்னது?”

“நாம சி செக்ஷன் பண்ணிக்க முடியாதா?” மனைவியின் கேள்வியில் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ஷியாம்.

“ஏம்மா?!”

“இல்லை… கொஞ்சம் பயமா இருக்கு.”

“எதுக்குப் பயம்?!” மனைவியின் முகத்தில் லேசான பயத்தின் சாயலைக் கண்ட ஷியாம் அவளைத் தன்னருகே அழைத்து அணைத்துக் கொண்டான்.

“அப்பிடியெல்லாம் சும்மா ஆப்பரேஷன் பண்ண முடியாதும்மா.”

“கல்பனா இருக்கால்லை? அவ டாக்டர்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாளாம், எனக்கு நார்மல் டெலிவரி வேணாம், ஆப்பரேஷன் பண்ணிடுங்கன்னு, அவங்களும் பண்ணி இருக்காங்க.” அந்தப் பேச்சில் ஷியாம் சிரித்தான். 

“என்னால அப்பிடியெல்லாம் பண்ண முடியாதும்மா, மேக்ஸிமம் நார்மல் டெலிவரிக்குத்தான் நான் முயற்சி பண்ணுவேன், குட்டிப் பொண்ணுங்க ரெண்டும் சமர்த்தா அந்த டைம்ல எந்த பொசிஷன்ல இருக்கணுமோ அப்பிடி இருப்பாங்க, நீ எதுக்கும் கவலையே படத்தேவையில்லை.”

“வலிக்குமே ஷியாம்.” மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவன் புன்னகைத்தான்.

“வலிக்கும்தான், எல்லாம் கொஞ்ச நேரந்தான், நாந்தான் கூடவே இருப்பேனே, நீ எதுக்குக் கவலைப்படுறே?” ஷியாம் எல்லாவற்றையும் இலகுவாகச் சொன்னாலும் அஞ்சனாவிற்கு பயமாகத்தான் இருந்தது. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்?! சரியாக நாற்பதாவது வாரம் ஆரம்பித்த அன்று அஞ்சனாவிற்கு வலி ஆரம்பித்தது. மிக முக்கியமான பிரசவங்கள் தவிர மற்றைய நேரங்களில் அவன் வீட்டிலேயே இருந்ததால் சிரமம் ஏதும் இருக்கவில்லை. கட்டிலில் அமர்ந்து அவனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தவள் சட்டென்று பேச்சை நிறுத்தவும் ஷியாம் திரும்பிப் பார்த்தான். மனைவியின் முகம் வலியில் கசங்க‌த் தொடங்கியது.

“அஞ்சு, என்னப் பண்ணுது?” 

“ஷியாம்…” அதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை.

“கண்ணம்மா, ஏதாவது பேசு, வலிக்குதா?”

“ம்…” சிறிதே தெளிந்த அவள் முகம் மீண்டும் வலியில் வாடியது.

“இப்போ எப்பிடி இருக்கு?” அருகே வந்து அவள் கரத்தைப் பிடித்தவன் இடுப்பை இதமாகத் தடவிக் கொடுத்தான். 

“என்னப் பண்ணுது சொல்லு?” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் அமர்ந்திருந்த இடம் நனைந்து போக அதற்கு மேல் ஷியாம் தாமதிக்கவில்லை. அஞ்சனாவின் வீட்டிற்குத் தகவல் பறந்தது. கண்மணி லேசாக நடுங்கவே ஆரம்பித்துவிட்டார். 

“ஷியாமா! எனக்குப் பயமா இருக்குப்பா.”

“சரியாப் போச்சு! அஞ்சுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய நீங்களே இப்பிடிப் பயந்தா எப்பிடிம்மா?” ஷியாம் சிரித்தான். 

“ஷியாமா, ஒன்னும் பிரச்சினை ஆகிடாதில்லைப்பா?” இது சுந்தர்ராம். மனிதரும் கண்களில் பயத்தோடு கேட்டார்.

“பெயின் கொஞ்சம் க்விக்கா வருதுப்பா, சீக்கிரமே உங்க பேத்திங்களை நீங்கப் பார்த்திடலாம்.” ஷியாமின் வார்த்தைகளில் தாயும் தந்தையும் மகிழ்ந்து போனார்கள். இருவரையும் அழைத்துக்கொண்டு அஞ்சனாவோடு ஹாஸ்பிடல் வந்துவிட்டான் ஷியாம். நேராக லேபர் ரூமிற்கு அஞ்சனா அழைத்துவரப்பட்டிருந்தாள். வலி மிகவும் விரைவாக வந்து கொண்டிருந்தது. டாக்டரின் மனைவி பிரசவத்திற்காக அங்கு வந்திருக்கும் செய்தி காட்டுத்தீ போல ஹாஸ்பிடல் முழுவதும் பரவிவிட்டது. ஏற்கனவே அஞ்சனாவோடு மிகவும் பரிட்சயமான நர்ஸே ட்யூட்டியில் இருந்ததால் ஷியாமிற்கு வசதியாகிப் போனது. 

“எப்பிடி டாக்டர் விட்டு விட்டு வராம இவ்வளவு சீக்கிரமா பெயின் வருது? அதுவும் ஃபர்ஸ்ட் டெலிவரிக்கு?” ஒரு இளம் நர்ஸ் கேட்டார். அவர் வேலைக்குப் புதிது.

“அஞ்சு ப்ரோப்பரா ஒவ்வொரு நாளும் எக்சர்சைஸ் பண்ணினா, பீச்ல நடந்தா, இதெல்லாம் ஒழுங்காப் பண்ணினாலே லேபர் ஈஸியாகிடும், அதோட அம்னியோடிக் சக் வீட்டுல இருந்து கிளம்பும் போதே ப்ரேக் ஆகிடுச்சு.”

“ஷியாம்…” அஞ்சனா வலியில் துடித்தாள்.

“அஞ்சும்மா… இன்னும் கொஞ்ச நேரந்தான், பொறுத்துக்கணும்.”

“என்னால முடியலை ஷியாம்.” இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெண்பாவும் கண்மணியும் உள்ளே நுழைந்தார்கள். நர்ஸ் மூலம் அவர்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தான் ஷியாம்.

“அஞ்சும்மா.” இரண்டு பேரும் ஓடிப்போய் அஞ்சனாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். வெண்பா சற்றுத் தெம்பாகத்தான் நின்றிருந்தார். ஆனால் கண்மணி அழவே ஆரம்பித்துவிட்டார்.

“ஷியாமா! இவ்வளவு வலியில கஷ்டப்படுறாளே! சிசேரியன் பண்ணிடலாம் ப்பா.” என்றார் மகனிடம் கெஞ்சுதலாக. ஷியாம் பதில் சொல்லவில்லை. மாறாகப் புன்னகைத்தான்.

“நான் உங்கிட்டத்தான் பேசுறேன்!” கண்மணியின் குரல் உயர்ந்தது.

“நார்மல் டெலிவரி ஆகிறதுக்கு எல்லா சான்சும் இருக்கும்மா, நீங்க சொல்றதுக்காகவெல்லாம் ஆப்பரேஷன் பண்ண முடியாது.”

“கடங்காரா! இவன் சரியான ராட்சசனா இருக்கான்! பொண்டாட்டி வலியில இவ்வளவு கஷ்டப்படுறாளேன்னு இவனுக்குத் துடிக்குதா பாருங்க.” கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சீறினார் கண்மணி.

“நர்ஸ், இவங்களை வெளியே அனுப்புங்க, எம் பொண்டாட்டியைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.” சிரிப்போடு டாக்டர் சொல்ல நர்ஸும் சிரித்தாள்.

“ஹாஸ்பிடல்ல வேலை பார்த்துப் பார்த்து உங்களுக்கெல்லாம் மனசுல ஈரமே இல்லாமப் போச்சு!” அதற்கு மேல் கண்மணி அங்கே நிற்கவில்லை. வெளியே போயிவிட்டார்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மாப்பிள்ளை?” வெண்பாவிற்கும் மகளை அந்தக் கோலத்தில் பார்க்க இயலவில்லை. தாய்மனது பதறியது. 

“இன்னும் ஃபுல்லா ஓப்பன் ஆகலைத்தை, ஒரு மணிநேரம் ஆகும்.”

“இன்னும் ஒருமணி நேரமா?” ஏற்கனவே அஞ்சனா ஹாஸ்பிடல் வந்து இரண்டு மணித்தியாலங்கள் கடந்திருந்ததால் வெண்பா கவலைப்பட்டார்.

“விடிய விடியக் கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க, சொல்லப்போனா அஞ்சுக்கு பெயின் ரொம்ப சீக்கிரமா வருது, உங்களுக்குத் தெரியாததா?” மருமகனின் பேச்சை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

“ஷியாம்…” தனது கையை அவனுக்காக அவள் நீட்ட அதை ஒரு புன்னகையோடு பற்றிக்கொண்டான் ஷியாம்.

“என்னால இதுக்கு மேல முடியலை ஷியாம்! நான் செத்துப் போயிடுவேன் போல இருக்கு!”

“கண்ணம்மா என்னப் பேச்சுடா இது?!” அவள் இதழில் அவன் முத்தம் வைக்க அதற்கு மேல் அங்கே நிற்காமல் வெளியே போய்விட்டார்கள் வெண்பா.

“ஆப்பரேஷன் பண்ணிடலாம் ஷியாம், எனக்குப் பயமா இருக்கு! ப்ளீஸ்…”

“அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாதுடா, என் செல்லமில்லை, இன்னும் கொஞ்ச நேரந்தான்டா, எம் பட்டுல்லை.” பேசிய படியே அவன் அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். நர்ஸுக்கு சிரிப்புத் தாங்கமுடியவில்லை. டாக்டருக்கு தன் மனைவியை எவ்வளவு பிடிக்கும் என்று சோஃபாவில் அவன் படுத்த நாள்முதலே அவருக்குத் தெரியும். ஆனால் அதே டாக்டர் இப்படி உளறுவதைப் பார்க்க இன்னும் சுவாரசியமாக இருந்தது. 

“ஷியாம்!” அஞ்சனா அவன் கையை அழுந்தப் பிடித்த விதத்திலேயே ஷியாமிற்கு புரிந்தது. அவனது முதல் தேவதை உலகிற்கு வரப்போகிறாள் என்று. 

“டாக்டர்.” நர்ஸும் அதுதான் சரியான நேரம் என்று அழைக்க மனைவியை விட்டுவிட்டு நர்ஸிடம் வந்தான் டாக்டர். 

“அஞ்சும்மா கமான்.” அவன் அவளை உற்சாகப்படுத்திய சில நொடிகளில் ஷியாமின் கரங்களில் ரத்தக் குவியலாய் அவன் முதல்‌ மழலை.

“அஞ்சும்மா, உங்க ஆதினி வந்தாச்சு!” குழந்தைகளுக்கு முன்பே என்ன பெயர் வைப்பது என்று இருவரும் முடிவெடுத்திருந்தார்கள். ஷியாம் தன் மகளை முத்தமிட அவன் முகமெங்கும் ரத்த ரோஜாக்கள். 

“அஞ்சும்மா.” குழந்தையோடு மனைவியிடம் போனவன் அவளுக்கும் காட்டினான். ஓய்ந்து போய் கிடந்தவள் சோர்வாகப் புன்னகைத்தாள். 

“நர்ஸ், க்ளீன் பண்ணிட்டு வெளியே கொண்டு போய் காட்டுங்க.” 

“சரி டாக்டர்.” நர்ஸிடம் குழந்தையைக் கொடுத்தவன் அஞ்சனாவின் வயிற்றில் முத்தமிட்டான்.

“ஆர்ஷி, அப்பா உங்களுக்காக வெயிட்டிங்.” அவன் சொன்ன இரண்டொடு நிமிடங்களிலேயே அவர்களின் அடுத்த தேவதை கைகளில் கிடைத்தாள். ஷியாம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான். மனைவியை கட்டி அணைத்துக் கொண்டான்.

 

Leave a Reply

error: Content is protected !!