Sontham – 7

Sontham – 7
அத்தியாயம் – 7
அங்கிருந்த பெரிய துணிக்கடைக்கு மூவரையும் அழைத்துச் சென்றான் யுகேந்திரன். தனம் ஒருபுறம் புடவையைத் தேர்வு செய்ய, இன்னொருபுறம் குழந்தைகள் இருவரையும் கவனமாக பார்த்துக் கொண்டான். அடுத்து பிள்ளைகள் இருவருக்கும் துணியை எடுத்துகொண்டு கடையைவிட்டு வெளியே வரும்போது மணி மதியம் இரண்டு ஆனது.
அதே தளத்தில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தும், “அப்பா ஐஸ்கிரீம் வாங்கித் தாங்க” என்றான் கௌதம்.
“உனக்கு அது சேராது கண்ணா. அம்மா சொன்னால் கேளு. வேற என்ன வேண்டுமானாலும் கேளு நான் வாங்கித்தறேன்” என்று மகனை திசைத் திருப்பினாள் தனம்.
“ஏன் ஒரு ஐஸ்கிரீமில் என்னம்மா ஆகப்போகுது” என்ற யுகேந்திரனை தனம் கோபத்துடன் பார்க்க அவன் வாயை மூடிக்கொண்டான். அதற்குள் கடையைச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றிய கௌதம் கண்களுக்கு ரிமொர்ட் கார் கண்ணில் விழுந்தது.
அதை பார்த்தும், “அப்பா ரிமோட் கார் வாங்கித் தாங்க” என்று சொல்லி வானத்திற்கும், பூமிக்கும் குதித்த மகனை என்ன செய்வதென்று தெரியவில்லை தனத்திற்கு.
பத்து ரூபாய் ஐஸ்கிரீம் சாப்பிட்ட அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுமென்ற நல்ல எண்ணத்தில் அவர் வாயை விட்டுவிட அவனோ ஒட்டுமொத்தமாக சேர்த்து நானூறு ரூபாய்க்கு வேட்டு வைத்துவிட்டான்.
அவள் பரிதாமாக கணவனை பார்க்க, “உனக்கு இது தேவைதான்” என்றான் யுகேந்திரன் சிரிப்புடன்.
அதெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜெனியைப் பார்த்தவன், “வாடா செல்லம் உனக்கு நான் டெடிபியர் வாங்கித் தரேன்” என்று சொல்லி இருவரையும் அழைத்துக்கொண்டு கடையை நோக்கிச் செல்ல தனம் அவர்களை பின் தொடர்ந்தாள்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் செக்கப் முடித்துவிட்டு வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்தனர் தாமோதரனும் தமயந்தியும்! சற்றுமுன் ஸ்கேனில் தன் குழந்தைகள் இருவரையும் கண்ட சந்தோசத்தில் கணவனின் முகம் மலர்ந்திருப்பதை கண்டு அவளின் மனம் நிறைந்தது.
அவள் அமைதியாக வருவதை கவனித்த தாமோதரன், “என்னம்மா” என்றான்.
“ஏங்க பசிக்கிற மாதிரி இருக்கு ஏதாவது ஜூஸ் கடையில் காரை நிறுத்துங்க” தமயந்தி சோர்வுடன் சொல்லவே கடையின் முன்னாடி வண்டியை நிறுத்தினான்.
அவள் காரைவிட்டு இறங்கி மெல்ல படியேறி நடக்க திடீரென்று தாமோதரனின் செல்போன் சிணுங்கிட, “நீ போய் கடையில் ஜூஸ் குடி தமயந்தி. நான் போன் பேசிட்டு வரேன்” என்றதும் சரியென்று தலையசைத்துவிட்டு முன்னே சென்றாள்.
தமயந்தி சோர்வுடன் இருந்ததாலும் லைட்டாக தலை சுற்றுவது போல இருக்கவே ஓரளவு தன்னை சமாளித்துக்கொண்டு கடையை நோக்கி நடந்தாள்.
அதற்குள் கடையிலிருந்து காரை வாங்கிவிட்ட சந்தோஷத்தில், “ஹே நான் கார் வாங்கிட்டேன்” கூச்சலிட்டபடி வேகமாக ஓடிய கௌதம் முன்னாடி நடந்து வந்த தமயந்தியைக் கவனிக்காமல் இடித்துவிடவே கால் தடுமாறி கீழே விழப்போனாள்.
அவள் பிடித்து நிற்க அருகில் பிடிமானமும் இல்லாமல் போகவே எதிரே இருந்த கைப்பிடி சுவற்றில் முட்ட போவது தெரிந்ததும், “ஐயோ என் குழந்தைகள்” என்று தாய்க்கே உரிய எண்ணத்துடன் வயிற்றில் கைவைத்து அவள் போட்ட சத்தம்கேட்டு தாமோதரன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
தமயந்தி கீழே விழபோவதை பார்த்து அவன் பதறியடித்துக்கொண்டு ஓடிவரும் முன்னே இதை கண்ட ஜெனிதா தமயந்தியின் அருகே வந்து, “அம்மா” என்ற அழைப்புடன் வேகமாக ஓடிவந்தவள் அவரை தாங்கி கொண்டு கைப்பிடி சுவற்றில் பலமாக இடித்துகொண்டாள். அவள் தாங்கிப்பிடித்ததில் தமயந்தியின் வயிறு சுவற்றில் முட்டவில்லை.
இங்கே நடக்கும் அனைத்தையும் கருவறைக்குள் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த குழந்தைகள், “ஐயோ அம்மாவுக்கு ஏதோ ஆகபோகுது” என்று நினைத்தது.
ஆனால் அதற்குள் அவளைக் காப்பாற்றிவிட்ட ஜெனிதா தமயந்தியின் வயிற்றில் கைவைத்து, “உங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்ல செல்லம். நீங்க பயப்படாமல் இருக்கணும்” என்று சொல்ல ஒரு குழந்தை மட்டும் அவளின் குரல்கேட்டு துள்ளி அசைந்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியது.
அதற்குள் ஓரளவு நிதானத்திற்கு வந்த தமயந்தி எதிரே நின்ற ஜெனிதாவை பாசத்துடன் பார்த்து, “நீ மட்டும் வரலன்னா இன்னைக்கு என் குழந்தைகள் என்ன ஆகிருக்குமோ?” என்று வயிற்றை வருடிவிட்டாள்.
அவள் சிரித்தபடியே, “ஸ்ஸ்” என்று தலையைத் தேய்த்துவிட்ட ஜெனியைப் பார்த்த தமயந்தி, “என்னடா ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டு அவளின் தலையை அழுத்தி தேய்த்துவிட்டாள்.
அதற்குள் அவர்களின் அருகே வந்துவிட்ட தாமோதரன், “தமயந்தி உனக்கு எதுவும் ஆகவில்லையே?” என்று பதட்டம் குறையாமல் கேட்டவனின் பார்வை அவரின் உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தது.
அவள் மறுப்பாக தலையசைத்து, “இல்லங்க அதுக்குள் இந்த பாப்பா வந்து என்னை காப்பாத்திட்டா” என்று சொல்லி ஜெனியை கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
தன் பின்னோடு வந்த ஜெனியைக் காணாமல் தேடிக்கொண்டு வந்த கௌதம் மூவரையும் பார்த்தும், “ஆன்ட்டி ஸாரி என்னாலதான நீங்க கீழே விழவேண்டியதா போச்சு” என்று தமயந்தியிடம் மன்னிப்பு கேட்டான்.
அவள் சிரித்தபடியே, “அடேடே என்னை இடிச்சது இந்த குட்டிதானா?” என்றவள் கௌதமை வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொள்ளவே, “இதுக்குதான் கௌதம் மெதுவா போன்னு சொல்றது” என்று ஜெனிதா பெரியவளாக மிரட்டினாள்.
“இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் அக்கா” என்றான் அவன் அழுவதுபோலவே.
அவள் பாசத்துடன் கண்டிப்பதைக் கண்டு சிரித்தபடி பார்த்த கணவன், மனைவி இருவருக்கும் கௌதம் தனத்தின் மகன் என்று புரிந்தபோதும் அவனையே மிரட்டும் பெண் யாரென்று புரியாமல் குழப்பத்துடன் நின்றிருந்தனர்.
அதற்குள் அங்கே வந்த தனம், “தமயந்தி நீ எங்க இங்கே” என்ற கேள்வியுடன் தோழியை நோக்கி சென்றாள்.
அவளின் குல்கேட்டு திரும்பிய தாமோதரன் தனத்தின் பின்னோடு வந்த யுகேந்திரனைப் பார்த்தும், “என்ன ஷாப்பிங் வந்தீங்களா?” என்று தாமோதரன் கேட்டான்.
அவன் சிரித்தபடியே தலையசைக்க ஜெனிதாவும், கௌதமும் தமயந்தியின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த தனம், “என்னாச்சு தமயந்தி?” என்று கேட்டாள்.
தாமோதரன் நடந்த அனைத்தையும் சொல்லவே ஜெனிதாவை இழுத்து அணைத்துக்கொண்ட தனம், “நீ ரொம்ப நல்ல விஷயம் பண்ணி இருக்கிற குட்டிம்மா” என்று மனம் திரண்டு பாராட்டினாள்.
“ஆமா இந்த குட்டிப்பொண்ணு யாரு தனம்?” என்று தமயந்தி சந்தேகத்துடன் கேட்டாள்.
“இவ நம்ம ஆசரமத்தில் வளரும் பொண்ணுதான். பேரு ஜெனிதா” என்பத்தோடு தனம் நிறுத்திக்கொண்டாள். ராஜேந்திரனும், எஸ்தரும் இவளை தத்தெடுக்க போகும் விஷயத்தை அவள் சொல்லவில்லை. அதை அவர்களே சொன்னால் தான் நல்லது என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
ஜெனிதா அமைதியாக நிற்பதை கண்டு கைப்பிடித்த யுகேந்திரன் அவளின் தலையை பாசமாக கலைத்துவிட அதற்கும் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தாள் சின்னவள். கௌதம் அவளின் கையைப் கெட்டியாக பிடித்துக்கொண்டு, “ஸாரி” என்றான்.
இவர்களின் பாசத்தை பார்த்த தாமோதரன், ‘இந்த குட்டிப்பாப்பாவை நம்ம தத்து எடுத்துகிட்ட என்ன? இரண்டு குழந்தையோடு இவளும் சேர்ந்து வளரட்டுமே’ என்று நினைத்தபடி மனைவியைப் பார்க்க அவளும் அதே எண்ணவோட்டத்துடன் கணவனை நோக்கினாள். இருவரின் நினைவுகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது.
அங்கிருந்த ஹோட்டலுக்கு சென்று அனைவரும் ஜூஸ் குடித்து முடிக்கவே, “சரி நாங்க கிளம்பறோம்” என்றனர் தாமோதரனும், தமயந்தியும்!
“ம்ம் பார்த்து பத்திரமா போங்க. தமயந்தி கவனமாக இரு” என்று தனம் எச்சரிக்க அவளும் சரியென்று தலையசைத்தாள். தமயந்திக்கு ஜெனிதாவை அங்கே விட்டுசெல்ல மனமில்லாமல் கணவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
அவளின் பார்வையை புரிந்துகொண்ட தாமோதரன் ஜெனிதாவின் அருகே மண்டியிட்டு, “ஜெனிகுட்டி எங்க வீட்டு வருகிறாயா? அங்கே உனக்கு பாட்டி, அப்பா, அம்மா, இரண்டு தங்கைங்க எல்லோரும் கிடைப்பாங்க” என்று சொன்னான்.
அவனை தலையைச் சரித்து பார்த்த ஜெனிதா, “ஓ வருவேனே. இன்னும் பாப்பா பிறக்கல இல்ல. அதனால் அடிக்கடி அவங்களோட பேச உங்க வீட்டுக்கு வருவேன். எஸ்தர் அக்காகிட்ட சொன்ன உடனே கூட்டிட்டு வருவாங்க. இல்ல அக்கா” என்று தனத்திடம் கேட்டாள்.
அவளும் சிரித்தபடியே தலையசைக்க, “நான் கண்டிப்பா வரேன்” என்றவளின் நெற்றியில் பாசத்துடன் இதழ்பதித்துவிட்டு எழுந்தவன், “சரி யுகேந்திரா நாங்க கிளம்பறோம்” மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அவர்கள் செல்வதை பார்த்தபடி நின்ற தனத்திடம்,“ஆமா தமயந்திக்கு எப்போ வளைகாப்பு?” சிந்தனையோடு கேட்டான்.
“அதைப்பற்றி இன்னும் நாங்க யாருமே யோசிக்கல” என்றதும் மனைவியின் தலையில் நறுக்கென்று கொட்டினான். திடீரென்று கணவனிடம் கொட்டு வாங்கிய தனம் காரணம் புரியாமல் திருதிருவென்று விழித்தாள்.
“அவளுக்குன்னு யாரு இருக்கா நீயும் எஸ்தரும் தானே? அப்புறம் நீங்கதான் அதுபற்றி யோசிக்கணும். அதைவிட்டுட்டு இது என்ன பொறுப்பு இல்லாமல் பதில் சொல்ற” என்று மனைவியிடம் கோபத்தைக் காட்டினான்.
அவனின் பேச்சில் இருந்த உண்மை புரிந்து அவள் அமைதியாக இருக்கவே, “தாமோதரன்” என்று நண்பனை சத்தமாக அழைத்தவன் மூவரை அழைத்துக்கொண்டு அவனின் அருகே சென்றான்.
அவன் கேள்வியாக நோக்கிட, “தமயந்தி வளைகாப்பு பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க?” என்று அக்கறையுடன் விசாரித்தான்.
தன் மனைவியை பார்த்த தாமோதரன், “நம்ம ராஜேந்திரன் தான் அண்ணன் முறைப்படி எல்லாம் பண்றதா சொல்லிட்டு போயிருக்கான் யுகி. அம்மா தேதி குறிச்சதும் நானே நேரில் வந்து சொல்றேன்” என்றான்.
அவனின் பதிலில் மனநிறைவு அடைந்த யுகேந்திரன், “என்னம்மா அந்த அண்ணன் மட்டும் தான் பண்ணணுமா? இந்த அண்ணன் பண்ணினா ஒத்துக்க மாட்டியா?” என்று அவளிடம் கேட்டான்.
சட்டென்று சிரித்துவிட்ட தமயந்தி, “எனக்கு நீங்க வேற, ராஜ் அண்ணா வேற இல்ல. உங்க இருவரில் யார் என்ன செய்தாலும் நான் மனசார ஏத்துக்குவேன் அண்ணா” என்றாள்.
“சரிம்மா அப்போ நான் குணசேகரன் அப்பாகிட்ட எஸ்தரின் கல்யாணத்தை பற்றி பேசும்போது உன் விஷயத்தையும் பேசிவிடுகிறேன்” என்றான். அவளுக்கும் அதுவே சரியென்று தோன்றிவிட சரியென்று தலையசைத்துவிட்டு அவர்களிடம் விடைபெற்று கிளம்பினர்.
அவர்களை அனுப்பிவிட்டு பிள்ளைகளோடு பார்க் நோக்கி நடந்தனர் யுகேந்திரனும், தனமும்! ஜெனிதா – கௌதமின் கையைப்பிடித்து அவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். அவனும் அவளிடம் ஏதோ பேசியபடியே நடப்பதை கண்டு பெரியவர்களின் உள்ளம் பூரித்தது.
நால்வரும் பார்க்கிற்குள் நுழையவும் பிள்ளைகள் இருவரும் அங்கே விளையாட தொடங்கினர். அவர்களை கண்காணிக்க ஏற்றாற்போல் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் கணவனும், மனைவியும் அமர்ந்தனர்.
“அக்கா இங்கே என்ன விளையாடுவது?” என்று யோசனையோடு கேட்டான் கௌதம். அவனுக்கு பார்க்கில் இருக்கும் அத்தனை தூரியிலும், சறுக்கு மரம், ரங்கராட்டினம் எல்லாம் விளையாடிவிட்டதால் வேறு ஏதாவது விளையாடலாம் என்று நினைத்தான்.
சட்டென்று அந்த நினைவு வரவே, “கௌதம் நம்ம கண்ணாமூச்சி மாதிரி விளையாடலாமா?” என்று கேட்டாள் ஜெனி.
அவனும் ஆர்வமாக, “ஓ விளையாடலாமே. ஆனா கண்ணுக்கு கட்ட துணி இல்லையே?” வருத்தத்துடன் கூறினான்.
“நீ அந்த மரத்துகிட்ட நின்னு பத்து வரை எண்ணிட்டு வா. நான் ஓடிபோய் ஒழிஞ்சிகிறேன்” ஜெனிதா தீர்வு சொல்லவே அவனும் சம்மதமாக தலையசைத்துவிட்டு மரத்தின் பின்னோடு போய் நின்று இலக்கங்களை எண்ணத் தொடங்கினான்.
அதை கவனித்த ஜெனிதா சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவள் அங்கிருந்த வேறொரு மரத்தின் பின்னாடி மறைந்துகொண்டு, ‘அவன் வருகிறானா?’ என்ற ஆர்வத்துடன் பார்த்தாள்.
அவன் எண்ணி முடித்ததும், “நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சுற்றிலும் அவளை தேடினான். அவள் மரத்தின் பின்னோடு மறைந்திருப்பதை அவன் கண்டுபிடித்துவிட்டான்.
அடுத்து ஜெனிதா சென்று எண்களை எண்ணிவிட்டு வரவே அவன் வேறொரு இடத்தில் மறைந்து கொண்டான். இப்படி இருவரும் ஒருவரையொருவர் கண்டுபிடித்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.
இந்தமுறை ஜெனிதா வேறொரு மரத்தின் பின்னாடி மறைந்து நின்றிருக்க கெளதம் அவளை தேடிக் கொண்டிருந்தான். எங்கு தேடியும் தமக்கையை கண்டுபிடிக்க முடியாமல் போகவே, ‘இப்போ எப்படி கண்டுபிடிக்கிறது?’ என்று தீவிரமாக யோசித்தான்.
சட்டென்று அவனுக்கு அந்த யோசனை தோன்ற வேண்டுமென்றே கால் தடுக்கி கீழே விழுவது போல அவன் பாவனை செய்ய தூரத்தில் இருந்து இதை பார்த்த ஜெனிதா, “கௌதம் பார்த்து” என்று தன்னை மறந்து கத்தி தான் இருக்கும் இடத்தை அவளே காட்டிகொடுத்துவிட்டாள்.
அந்த குரல் வந்த திசையை நோக்கி சென்ற கெளதம், “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது இந்த தேவதையின் குரலோ?” என்று மரத்தின் பின்னாடி நின்றிருந்த ஜெனியை கண்டுபிடித்தான்.
“ச்சே என்னை கண்டுபிடிக்க நானே க்ளூ கொடுத்துட்டேன்” என்று சிணுங்கியவளை பார்த்து வாய்விட்டு சிரித்தான் சின்னவன்.
“இதுக்கு எதுக்கு சலிச்சுக்கிற அக்கா” அவளின் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சினான்.
அங்கே நடக்கும் அனைத்தையும் கவனித்த யுகேந்திரன், ‘இந்த பாட்டு எப்படி இவன் பாட கத்துகிட்டான்’ என்ற சிந்தனையோடு எழுந்தான்.
“என்னங்க வீட்டுக்கு கிளம்பலாமா?” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.
அவன் சரியென்று தலையசைக்கவே இருவரும் பிள்ளைகளை நோக்கி சென்றனர். அதற்குள் கௌதம் அவளை சாமதானம் செய்துவிடவே, “என்ன பாட்டு எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு” என்று கிண்டலடித்தாள் தனம்.
அவனோ தாயை முறைத்தபடி, “நீங்கதான் அந்த பாட்டைபாடி எனக்கு மனப்பாடம் பண்ணிவிட்டீங்க?” என்று கேட்டான்.
அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தனம் நாக்கை கடித்துக்கொண்டு கணவனை ஓரக்கண்ணால் பார்க்க, “நான் உனக்கு பாடினா நீ இவனுக்கு மனப்பாடம் ஆகும் வரை பாடி இருக்கிற?” என்று தலையில் அடித்துக்கொள்ள மற்ற மூவரும் வாய்விட்டு சிரிக்க அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டிற்கு செல்லும் வழியில் ஆசரமத்திற்கு சென்று குணசேகரனிடம் ஜெனிதாவை பத்திரமாக ஒப்படைத்துவிட்டு தமயந்தியின் வளைக்காப்பு பற்றி பேசிவிட்டு கிளம்பினர்.