Thanimai – 1

allu-arjun-daughter-39995bf4

Thanimai – 1

புதியபாதை

இருள்படர்ந்திருந்த வானில் மூன்றாம் பிறைச் சுடர் வீசியது. வெள்ளை நிறப் பொதி மேகங்கள் மிதந்து சென்றது. ஆங்காங்கே மின்னிய நட்சத்திர பட்டாளம் இரவு நேர இருளுக்கு அழகு சேர்த்தது.

விழுப்புரம் பேருந்து நிலையம்…

தன் கைக் குழந்தையோடு ஆட்டோவில் வந்து இறங்கியவன் டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அன்னூர் பேருந்து நின்றிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.

வெவ்வேறு ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வரிசையாக நின்றிருக்க, ஆட்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பேருந்துக்காகக் காத்திருந்த சிலர் போனில் மூழ்கி இருந்தனர். அங்கிருந்த டீக்கடையில் பஸ் எப்போது வருமென்று விசாரித்தபடி இருந்தனர்.

அவனை அனைத்தையும் பார்த்தவனின் மனமோ ஏதேதோ எண்ணங்களில் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. கையில் வைத்திருந்த குழந்தையிடம் அசைவை உணர்ந்து அவனின் சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

“என் செல்லத்திற்கு பசிக்கிறதா?” குழந்தையோடு பேசியவன் அருகே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து பால் டப்பாவைத் தேடி எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்தான்.

அத்தோடு குழந்தையின் சிணுங்கல் நின்று போனது. அவனை இமைக்காமல் பார்த்தபடியே பாலை முழுவதுமாகக் குடித்தாள் அவனின் மகள்.

வாயிலிருந்து பால் புட்டியை எடுத்துவிட்டு, “என்னடா செல்லம் அப்பாவை அப்படி பார்க்கிறீங்க?  உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?” குழந்தையின் வாயைத் துடைத்துவிட,  அவன் பேச்சில்  க்ளுக்கென்று சிரித்தாள் மகள்.

அவளைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டி கொடுத்து மீண்டும் மடியில் படுக்க வைத்து, “அப்பா பேசுவதைக்கேட்டு தங்கத்துக்கு சிரிப்பு வருதா?” செல்லமாக மகளின் தலையில் முட்டினான்.

சட்டென்று கைக்கால்களை உதைத்து, ‘ங்..ங்..’ என்றவள் போக்கை வாய் சிரிப்பைக் கண்டு அவனின் கடந்த கால சோகமெல்லாம் மறைந்து மாயமானது.

அன்னூர் செல்லும் பேருந்து வருவதைக் கண்டவுடன், “அப்பாவும், குட்டிம்மாவும் ஊருக்குப் போகலாமா?” மகளைத் தூக்கி தோளில் போட்டு மற்றொரு கையில் பெட்டியை எடுத்துக்கொண்டு பஸில் ஏறினான்.

பேருந்தின் ஜன்னலோரம் அமரக் காற்று விசுவிசுவென்று வேகமாக வீசி அவனின் கவனத்தை ஈர்த்தது. குழந்தைக்கு வெளிக்காற்று சேராது என்று நினைவு வரவே ஜன்னலை அடைத்துவிட்டு மகளை மடியில் வைத்துக் கொண்டான். அவனின் கையில் பாதுகாப்பை உணர்ந்த குழந்தை மெல்ல உறங்கியது.

அவனின் பயணம் இனிதாகக் தொடங்க, தன் குழந்தைக்கு அழகான துணியைப் போர்த்துவிட்டு அமர்ந்த அரவிந்தன் வெளியே வேடிக்கை பார்த்தான். நிரந்தரமான இருளுக்குள் செல்ல இருந்த அவனின் வாழ்க்கைக்கு வெளிச்சமாக வந்தாள்.

திடீரென்று ஏற்படும் சில இழப்புகள் ஒருவனின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடுகிறது. அரவிந்தனின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் புதிய பாதைக்கான கதவுகள் திறந்தன. வாழ்க்கையை அதன்போக்கில் வாழ நினைப்பவன் சந்தோஷத்தையும், துக்கத்தையும் அனுபவித்து சரிவிகிதமான மனநிலையுடன் கடந்துவிடுவான்.

ஓடுகின்ற ஆற்றின் பிறப்பிடமும், கடைசியில் கரை சேரும் கடலும் ஒன்றுதான். ஆனால் அது பயணிக்கும் பாதை கரடுமுரடான பாதையல்லவா? 

மேடுபள்ளம் அனைத்திலும் பயணிக்கும் ஆறு கடைசியில் கடலில் கலக்கிறது. அதேபோல மனிதனின் வாழ்க்கையிலும் மேடுபள்ளங்கள் வரலாம். அதைக்கண்டு அங்கேயே தேங்கி நிற்க மன இல்லாமல் நதிபோல ஓடும் மனிதனின் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். அரவிந்தனின் வாழ்க்கையிலும் இப்போது அதுதான் நிகழ்ந்திருக்கிறது.

“டிக்கெட்! டிக்கெட்!” கண்டக்டரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவன், “அன்னூர்” டிக்கெட் வாங்கிக் கொண்டான்.

சட்டென்று தூக்கம் கலைந்ததில் வீரிட்டு அழுக தொடங்கிய குழந்தையைத் தூக்கி, “என்னம்மா எதுக்கு இப்போ அழுகிறீங்க?” தோளில் போட்டுத் தட்டிக் கொடுக்க, அவனின் கை சூட்டை உணர்ந்த குழந்தை சற்று நேரத்தில் விட்ட இடத்திலிருந்து தன் தூக்கத்தைத் தொடர்ந்தது.

மீண்டும் குழந்தையை மடியில் படுக்க வைத்தவனின் மனமோ, ‘பிறந்து பத்துநாள் கூட ஆகியிராத குழந்தையைத் தனியாக எப்படி வளர்க்க போகிறேன்?’ சந்தேகம் எழுந்தது.

அவனையும் அறியாமல் குழந்தை மீதான பாசம் உள்ளத்தில் ஊற்றெடுக்க குழந்தையின் தளிர் விரல்களை மெல்ல தொட்டான். அவனின் விரலை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, “என்னால் குழந்தையை வளர்க்க முடியும்” மனதினுள் உருப்போட்டு கொண்டான்.

இத்தனை வருடங்களில் இப்படியொரு உணர்வின் பிடியில் அவன் சிக்கி தவித்ததில்லை என்று உள்ளத்தில் கூச்சல் கேட்டது.

பட்டுப் போன்ற மென்மையான கேசம், தன்னை மட்டுமே உற்று நோக்கிடும் கண்கள், அழகான மூக்கு, குட்டியான உதடுகள். சிவப்பு நிற ரோஜாவின் இதழ்களைப் போல இருந்த குழந்தை கைகால்களை வருடியவனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

அவனின் வாழ்க்கை சக்கரம் இனிமேல் தன் குழந்தையைச் சுற்றி மட்டுமே சுழல வேண்டுமென்ற முடிவிற்கு வந்தான். ஏதேதோ நினைவுகளில் அவனின் உள்ளம் சிக்கி தவித்தது. மணித்துளிகள் நிமிடங்களாகக் கரைந்து சென்றது.

இதற்கிடையே பேருந்து தர்மபுரியில் நிற்க, “ஷ்..” என்று பெருமூச்சுடன் அரவிந்தனின் அருகே வந்து அமர்ந்தார். தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு நிமிர்ந்தவன் அவரின் முகம் பார்த்ததும் அமைதியாகி விட்டான்.

நடுத்தர வயதைக் கடந்தவரின் முகத்தில் தெரிந்த தெளிவு அவனை வாயடைக்க வைத்தது. தினம் தினம் ஆயிரம் பேரைச் சந்திக்க நேர்கிறது. ஆனால் சிலரின் முகம் மட்டும் பல வருடங்கள் பழகிய எண்ணத்தை மனதினுள் விதைக்கும். அவரைப் பார்க்கும்போது சிந்தனைகள் மனதில் ஊர்வலம் சென்றது.

அவனின் கவனத்தை திசைதிருப்புவது போல வீரிட்டு அழுத மகளைத் தூக்கி தோளில் போட்டு, “என்னம்மா அப்பா பக்கத்தில் தானே இருக்கேன்.. இன்னும் என்ன கவலை என் ராஜாத்திக்கு?” என்றான்.

அவனின் தோளில் முகம் புதைத்த மகளோ சில நொடிகளில் தூங்கிவிட, “சரியான அப்பா பொண்ணு.. இப்படியே தோளில் சுமந்துட்டே இருக்கணும்னு நினைக்கிற” வார்த்தைகளில் மென்மையைக் கையாண்ட அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவன் கையை அசையாமல் வைத்திருக்கக் குழந்தை தன் தூக்கத்தை தொடர்ந்தது. பஸ்ஸில் அளவான நபர்கள் இருப்பதை கண்டு ஆசுவாசமாக உணர்ந்தான்.

வெகுநேரமாக அவன் குழந்தையைக் கையாளும் விதத்தையும், அக்கறையையும் கண்டு,  “சில ஆண்களுக்கு குழந்தையைச் சமாளிக்கவே தெரியாது.. நீ ரொம்ப அழகாக மகளின் அழுகையை நிறுத்திவிட்டாயே?” என்று வியந்தவருக்கு ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான்.

“நீ மட்டும் தனியாகக் கிளம்பி வந்திருக்கிற தம்பி. குழந்தையின் அம்மா எங்கே?” என விசாரிக்க இதயம் இருக்கும் இடத்தில் சுருக்கென்ற வலியை உணர்ந்தான்.

சில நொடிகள் மௌனத்தில் கழிந்திட,“அவ ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க” என்றவுடன் பெரியவரின் முகமே மாறிப் போனது.

சட்டென்று தன் மனநிலையை மாற்றிக் கொண்டு , “நான் தெரியாமல் கேட்டுட்டேன் என்னை மன்னிச்சிடுப்பா. சில நேரங்களில் இழப்புகளைத் தவிர்க்க முடியாது. நம்மதான் அதைக் கடந்து வர முயற்சி செய்யணும்” அவனுக்கு ஆறுதல் கூறினார்.

சிலரைப் பார்த்ததும் பிடித்துவிடும். ஏனென்ற காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. அதுபோலவே முதல் சந்திப்பிலேயே அரவிந்தனை அவருக்குப் பிடித்துப் போனது. அதைவிட அவனின் முகம் வெகுப் பரீட்சயமான முகமாகவே தோன்றியது.

இருவரின் பேச்சு குரலும் குழந்தையின் தூக்கத்தை கலைத்துவிட, “அதுக்குள் பாப்பாவுக்கு பசி எடுத்துவிட்டதா?” சிணுங்கிய மகளைச் சமாதானம் செய்து பால் கொடுத்து மீண்டும் உறங்க வைத்தான்.

“குழந்தையைக் கொஞ்சநேரம் என்னிடம் கொடு தம்பி. இப்படியே ஒற்றை கையில் வைத்திருந்தால் கையெல்லாம் வலிக்கும்” அவனிடமிருந்து குழந்தையை வாங்கி வாங்கினார்.

அவரின் கைக்குச் சென்றதுதான் தாமதம் மீண்டும் அழுகைத் தொடங்கிய மகளைக் கண்டு சிரித்தபடி, “நீங்கக் கொடுங்க ஸார். அவ யாரிடமும்  இருக்க மாட்டா” அவன் கையில் குழந்தையை வாங்கியது சுவிச் போட்டது போல அழுகை நின்றது.

அவனிடம் இருந்த பொறுமை, குழந்தையைக் கையாளும் விதம், குழந்தையைச் சமாளிக்கும் நுணுக்கங்களைக் கண்டு, “உன் பொண்ணுக்கு அம்மாவே தேவையில்லை. நீ ஒருத்தனே போதும் போல.. நல்ல அப்பா, நல்ல பொண்ணு” என்றார்.

இருபத்தி ஐந்து வயதான ஆண்மகன். ஆறடி உயரத்திற்கு ஏற்றத் தோற்றத்தில் இருப்பவன். ஒருவர் பார்த்தவுடன் நட்புடன் பழகிவிட தோன்றும் விதமாக அவனின் உதட்டில் தவழும் புன்னகை. அக்மார்க் நல்ல பையன்.

திருமணம் ஆன கொஞ்சநாளில் அவனின் வாழ்க்கையில் பல எதிர்பாராத திருப்பங்களினால் அவன் அனுபவித்த வலியிலிருந்து எப்படி மீண்டு வருவதென்று யோசிக்கும்போது அதற்கான பாதையை வகுத்துக் கொடுத்தாள் அவனின் மகள்.

சிறிதுநேரம் அமைதியாகக் கழிய, “உங்க சொந்த ஊர் தம்பி” என்றார்.

“அன்னூர்” – மெல்லிய குரலில்.

அந்த ஊரின் பெயரைக் கேட்டவுடன், தன் பால்ய சிநேகிதனின் முகம் மனதினுள் தோன்றி மறைய, “அங்கே எந்த இடம் தம்பி?” சிந்தனையோடு நெற்றியை வருடியபடி கேட்டார்.

தங்களின் வீடு இருக்கும் ஏரியா பெயரைச் சொன்னவுடன், “உங்க அப்பா பேரு சந்திர சேகரா?” என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் பார்வை அவரின் மீதே நிலைத்தது. தன் தந்தையுடன் இளமைக்கால புகைப்படத்தில் அவரைப் பார்த்த ஞாபகம் லேசாக நினைவிற்கு வந்தது.

“நீங்க ராமலிங்கமா?” என்றான் திகைப்பு மாறாத குரலில். தன் பெயரைச் சொன்னவுடன் முகம் பளிச்சென்று ஒளிவீசியது.

“என்னை உனக்கு ஞாபகம் இருக்கா அரவிந்தா? எங்க குடும்ப கஷ்டத்தால் அந்த ஊரைவிட்டு சேலம் வந்துட்டோம். இதற்கிடையே இரண்டு முறை ஊருக்கு வந்தபோது உன்னைப் பார்த்திருக்கேன். கடைசியா பார்க்கும்போது நீ காலேஜ் போயிட்டு இருந்தே” என்றார்.

கல்லூரி படிக்கும்போது இடையே ஒரு முறை அவரை வீட்டில் சந்தித்த ஞாபகம் வரவே அவனும் ஒப்புதலாகத் தலையசைத்தான். சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவிட பஸ்ஸில் ஓடிய கானங்களின் இசைமட்டும் இதமாக மனதை வருடிச் சென்றது.

“உங்க அப்பாவுக்கும், எனக்கும் இடையே இருக்கிற நட்பை வளர்த்தது என்னவோ கடிதங்கள் தான். இப்போ கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி மகனோட வேலை காரணமா சென்னை போறோம் எழுதியிருந்தான். அதுக்கப்புறம் அவனிடமிருந்து கடிதமே வரல” சோகமாகக் கூறியவர், அடுத்து கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமானான்.

“சந்துரு – வைதேகி இருவரும் எப்படி இருக்காங்க?” என்றதும் அவனின் முகத்தில் இருள் சூழ்ந்தது.

அதைக் கவனித்தவரின் மனம் பிசைய, “அவங்க இருவருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?” என்றவரின் குரல் கரகரக்க கேட்டார்.

இனியும் பதில் பேசாமல் இருந்தால் அது மரியாதை கிடையாதென்று “அவங்களும் என்னைத் தனியாகத் தவிக்க விட்டுட்டு போயிட்டாங்க அங்கிள். ஒரே ஆக்ஸிடென்ட்ல நான் என் மொத்த குடும்பத்தையும் இழந்துட்டேன்” தன் மனபாரத்தை அவரிடம் இறக்கி வைத்தான்.

அவரால் தன் நண்பனின் இழப்பை மிக எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இருவருக்கும் இடையே இடைவெளி அதிகம் இருந்தாலும் ஒவ்வொரு துன்பம் வரும்போதும் தனக்கு ஆறுதல் சொல்லி அதிலிருந்து மீண்டு வருவதற்கு உதவியவன். அவனின் நம்பிக்கையான பேச்சில் அவரின் துயரங்கள் சொல்லாமல் ஓடிப்போகும்.

இப்போது அந்த நண்பன் உயிரோடு இல்லை என்ற விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருக்க, “சேலம்” என்ற கண்டக்டர் குரல்கேட்டு நிமிர்ந்தார். அரவிந்தன் கவலையோடு அவரின் கரம்பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அவனின் கரத்தின் மீது தன் கரம் வைத்து, “என்னால் இப்போ பேச முடியல அரவிந்தா. நான் இறங்கும் இடம் வந்துருச்சு அதனால் கிளம்பறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா உன்னை வந்து பார்க்கிறேன்” என்றவர் கையில் இருந்த குழந்தையின் முகம் பார்த்தார்.

பிறகு, “பச்சைக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு தனிமரமாக நிற்கிறன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கு. சீக்கிரமே உனக்கேற்ற பெண்ணாக பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோப்பா” என்றபோதும் மௌனமாகவே இருந்தான்.

அதற்குள் சேலம் பேருந்து நிலையம் வந்துவிட, “அரவிந்தா பத்திரமாக இருப்பா” பேருந்திலிருந்து இறங்கி செல்ல, ஜன்னலின் வழியாக  வெளியே பார்த்தான் அரவிந்தன்.

“குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ” அவன் சரியென்று தலையசைக்கவும், பஸ் கிளம்பவும் நேரம் சரியாக இருந்தது.

கிழக்கே வானம் பொன்னிறமாக மாறிட கீழ்வானில் கதிரவன் உதயமானான். இரைதேடி பறவைகள் வானில் பறந்து செல்ல அவற்றை வேடிக்கை பார்த்தபடி சேலம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கீர்த்தனாவின் முகம் களையிழந்து போயிருந்தது.

காலை வேலைக்குச் செல்லும் பரபரப்பில் அங்குமிங்கும் செல்ல வரிசையாக நின்றிருந்த பேருந்துகளில் கேட்ட நடுத்தர பாடல்கள் காதில் கேட்டது. ஹாரன் ஒலியோடு வேகமாக வந்த பேருந்தைப் பார்த்தவள் கவலையோடு கையில் கொண்டு வந்திருந்த பேக்குடன் பஸ்ஸில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்தாள்.

கனத்த மனதோடு தங்களின் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறியவர் சோர்வுடன் சீட்டில் அமர்ந்திருந்த மகளைக் கண்டவுடன், “கீர்த்தி” என்றழைத்தார்.

திடுமென்று தந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “அப்பா” என்றாள் பாசத்துடன்.

“என்னம்மா லீவில் ஊருக்கு வராமல் ஹாஸ்டலில் இருக்கேன்னு சொன்ன.. இப்போ எதுக்கு கிளம்பி வந்திருக்கிற?” பொய் கோபத்துடன் அவளின் அருகே அமரக் கீர்த்தனாவின் முகம் வாடிப் போனது.

தன் மகளின் பளிங்கு முகம் வாடுவதை பொறுக்க முடியாமல், “சும்மா அப்பா உன்னிடம் விளையாடினேன் பாப்பா. உன் படிப்பெல்லாம் எப்படி போகுது? பரீட்சை எல்லாம் நன்றாக எழுதி இருக்கிறாயா?” என்று விசாரித்தார்.

சட்டென்று முகம் மலர, “ஓ அதெல்லாம் நல்ல எழுதி இருக்கேன் அப்பா. நான் கோல்டு மெடல் வாங்காமல் விடமாட்டேன்” என்றாள் சமாளிக்கும் விதமாக!

“என்னடா திடீர்னு கிளம்பி வந்திருக்கிற?!” அக்கறையோடு விசாரித்தார்.

அவரிடம் இந்தக் கேள்வியை எதிர்பார்த்த மகளோ, “உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சுப்பா. அதுமட்டும் இல்லாமல் காலேஜ் தொடங்க இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அப்புறம் லீவ் எடுத்துட்டு வந்தால் அம்மா திட்டுவாங்க” என்றாள் மகள் மெல்லிய புன்னகையோடு.

“ம்ஹும் உங்கம்மா மேல் பயம் அதிகம்தான்” பாசத்துடன் மகளின் தலையை வருடினார். ‘அம்மா’ என்ற வார்த்தையில் அவளின் உள்ளம் படபடத்தது. தந்தையின் தோளில் சாய்ந்த கீர்த்தியின் கண்கள்கண்ணீர் தேங்கியது.

தன்னுடைய கண்ணீரைக் கண்டால் தகப்பனின் மனம் என்ன பாடுபடும் என்று உணர்ந்துக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

அதே நேரத்தில் அரவிந்தனின் நினைவில் அமர்ந்திருந்த ராமலிங்கம், ‘அந்தப் பையன் இனி குழந்தையை வச்சிட்டு எப்படி கஷ்டப்பட போறனோ தெரியல’ மனதினுள் புலம்பினார். இருவரும் தங்களின் சிந்தனையோடு வீடு நோக்கிப் பயணித்தனர்.

Leave a Reply

error: Content is protected !!