Thanimai – 5

1111-e1945524

Thanimai – 5

உதயாவின் வளர்ச்சி

அந்த ஊருக்கு வந்து ஐந்து மாதங்கள் முடிந்திருந்தது.

காலையில் மார்கெட் வியாபாரத்தை முடித்துகொண்டு குழந்தையோடு வீடு வந்து சேர்ந்தவன் குளித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான். அவனின் கைகள் வேலையில் ஈடுபட்டாலும், மகளின் மீதே பார்வையைப் பதித்திருந்தான்.

நடுஹாலில் பாய்விரித்து அதற்குமேல் மெத்தை போன்று பெட்சீட் விரித்து அதில் மகளைப் படுக்க வைத்திருந்தான். இரண்டு நாளாகவே கவிழ்ந்து படுப்பதுபோன்ற பாவனை செய்து அவனைப் பயமுறுத்தினாள் உதயா.

சற்றுநேரத்தில் முழு கவனத்தையும் சமையலின் மீது திரும்பிவிட உதயாவைக் கவனிக்க மறந்தான். அவன் வேலையை முடித்துவிட்டு ஹாலிற்கு வர, அவனின் செல்ல சீமாட்டி கவிழ்ந்து படுத்துக்கொண்டு அவனையே மொட்டு மொட்டென்று அவனையே பார்த்தாள்.

அவனின் முகம் பளிச்சென்று மலர, “என் செல்லக்குட்டி குப்ற விழுந்துட்டீங்களா? இதுக்குதான் ஒரு வாரமாக அப்பாவைப் பயமுறுத்திட்டே இருந்தீங்களா?” அவளைப்போலவே படுத்துக்கொண்டு மகளிடம் கதை பேசினான்.

அதே நேரத்தில் அவசரமாக வந்த நிர்மலா, தகப்பனும், மகளும் நடத்தும் பேச்சுவார்த்தையைக் கண்டு, “இது நல்லா இருக்கே.. என்ன அரவிந்தா மகள் குப்ற விழுந்துட்டா என்றதும் உன்னை கையில் பிடிக்க முடியல. அவளுக்கு நிகராக நீயும் குப்பிற படுத்திருக்கிற?” கேலியாக சிரித்தார்.

அவரின் வரவை எதிர்பார்க்காததால் முகம் சிவக்க, “அதெல்லாம் இல்லம்மா” சட்டென்று எழுந்து நின்றான்.

தான் கையோடு கொண்டு வந்த கேசரியை அவனிடம் கொடுத்து, “இன்னைக்கு விக்கிக்கு பிறந்தநாள்னு செய்தேன். அதைக் கொடுத்துவிட்டு போலாம்னு வந்தா நீயும், உன் மகளும் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கீங்க.. ஆனாலும் பெத்த பொண்ணு மேல் இவ்வளவு பாசம் ஆகாதுப்பா” என்று சொல்ல பின்னந்தலையை வருடியபடி சிரித்தான்.

சட்டென்று பேச வந்த விஷயம் நினைவு வரவே, “அன்னைக்கே கேட்க நினைச்சேன். உன்ன பெத்தவங்க ஆக்சிடென்ட்ல இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்” நேரடியாக கேட்க அவனால் பதில் பேச முடியவில்லை.

அவன் மெளனமாக நிற்பதைக் கண்டு, “உனக்கு சொல்ல விருப்பமில்லன்னா சொல்ல வேண்டாப்பா” வாசலை நோக்கி செல்ல,

“அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று அவரைத் தடுக்க அதே இடத்தில் நின்றபடி திரும்பி அவனை கேள்வியாக நோக்கினார்.

“ஒரே ஆக்சிடென்ட் என்னோட அப்பா, அம்மா, மனைவி மூவரும் இறந்துட்டாங்க” அந்த நாளின் நினைவில் விட்டத்தைப் பார்த்தபடி சோகமாக கூறினான்.

“உன்னைக் காயப்படுத்த நினைத்து கேட்கலப்பா..” என்றவர் சொல்ல அவனும் புரிதலோடு சரியென தலையசைக்க தன் வீடு நோக்கி சென்றார் நிர்மலா. அவர் சென்றபிறகு சிறிதுநேரம் பழைய நினைவுகளில் உழன்ற அரவிந்தனின் பார்வை கடைசியில் மகளின் மீது வந்து நிலைத்தது.

நிர்மலா தன்னை கேலி செய்தது நினைவு வரவே, “எல்லாம் உன்னால் தான் உதிம்மா. பாரு அவங்க என்னைக் கிண்டல் பண்ணிட்டுப் போறாங்க” அவன் மகளைத் தூக்கியதும் சடாரென்று மேலே ஏறிய மகளிடம் விளையாட்டு காட்டினான் அரவிந்தன்.  

தனியாகப் பிள்ளையை வளர்ப்பதைக் கண்ட பலரும் அவனின் குடும்ப பின்னணியை விசாரிக்கவே செய்தனர்.  அதையெல்லாம் அவன் கண்டும் காணாததுபோல கடந்து செல்ல தொடங்கினான். நாள்தோறும் வாழ்க்கையில் ஆயிரம் பேரை சந்திக்க நேரிடும்.

அவர்கள் அனைவரும் துணையாக இறுதிவரை தன்னோடு பயணிப்பார்கள் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. அவன் எதையுமே பெரிதாக நினைப்பதில்லை. அவனின் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

கீர்த்தனாவின் வாழ்க்கை எந்தவிதமான மாற்றமும் இன்று தெளிந்த நீரோடைபோல அழகாகவே சென்றது. ஒருப்பக்கம் கல்லூரியில் படிப்பு மற்றொரு பக்கம் நண்பர்களோடு ஊரைச் சுற்றுதல் என்று கலகலப்பாக நாட்கள் கழிந்தன.

“காலேஜ் லீவில் தான் எங்காவது வெளியே போக முடியும்? நம்ம கேங்குடன் இன்னைக்குப் படம் பார்க்க போலாமா?” அவளின் அருகே வந்து அமர்ந்தாள் மௌனிகா.

“மூவிக்கு நான் வரல” என்ற கீர்த்தி புத்தகத்தைப் புரட்ட, ஏற்கனவே மௌனிகாவை சம்மதிக்க வைக்க போராடிய போராட்டம் மீராவின் கண்முன்னே வந்து சென்றது.

அவளின் கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கி படுக்கையில் வீசிய மௌனிகா, “பின்ன ஹாஸ்டல் ரூமில் அடைஞ்சிருக்க சொல்றீயா? நானும் உன்னைக் கவனிச்சிட்டே இருக்கிறேன். முதல் வருடம் மாதிரி நீ கலகலப்பாகவே இல்ல. எந்தநேரமும் புக்கும் கையுமாக ஏதோவொரு தீவிரமான சிந்தனையில் இருக்கிற” என்று எரிந்து விழுந்தாள்.

இதற்குமேல் வரவில்லை என்று மறுத்தால் அதுக்கு தெளிவான காரணத்தை கட்டாயம் சொல்லணும் என்ற முடிவிற்கு வந்தவள், “படம் பார்க்கும் பிசாசுகளோடு கூட்டணி வைத்தால் இப்படித்தான் இருக்கும். ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று கோபத்தில் கத்தியவள் உடையை எடுத்துகொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

கீர்த்தியின் செய்கையைக் கண்டு சிரித்த இருவரும் தயாராகி கீழே வர, ரோஹித், ஜெயராம் அவர்களுக்காக வாசலில் காத்திருந்தனர்.  ஐந்து பேரும் இணைந்து படம்பார்க்க சென்றனர்.

படம் தலைப்பைப் போட்டவுடன் கீர்த்தி படத்தில் மூழ்கிவிட, ரோஹித் – மௌனிகா இருவரும் படத்தைப் பற்றி தங்களுக்குள் கமெண்ட் அடித்து கொண்டிருக்க, “ஐயோ படம் ஃபோர் அடிக்குது” என்றபடி வேண்டாவெறுப்பாகக் கூறினாள்.

“எங்களை இம்சை பண்ணி இழுத்துட்டு வந்த இல்ல நல்லா அனுபவி” என்றான் ஜெயராம். படம் இண்ட்ரவல் விட்டவுடன் வெளியே வந்த ஐவரும் ஐஸ்கிரீம், பப்ஸ் என்று தங்களுக்குப் பிடித்ததை வாங்கிகொண்டு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தனர்.

மதியம் படம் முடிந்தவுடன் ஐவரும் ரெஸ்டாரண்டிற்கு  சென்றனர். அவர்கள் நால்வரும் ஒரு டேபிளில் சென்று அமரவே கண்ணாடியின் வழியாக வழக்கம்போலவே வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.

அங்கே ஒரு குழந்தை வெகு நேரமாக வீரிட்டு அழுதது. அந்த குழந்தையின் அழுகையை சமாளிக்க முடியாமல் தாய் தனியாக திண்டாடுவது மட்டுமின்றி அவளின் கணவனிடம் சரம்வாரியாக திட்டும் வாங்குக்கொண்டு திருதிருவென்று முழிப்பதை கண்டு அவளின் மனதில் சிந்தனைப் படர்ந்தது.

நண்பர்கள் நால்வரும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரிக்க, அதை கவனிக்கும் மனநிலையில் அவளில்லை. அவளின் மனம் வேறொரு சுழலில் சிக்கி தவிக்க, ‘நான் எடுத்த முடிவு சரிதானா?’ மனதினுள் மீண்டும் கேட்டாள்.

அந்த கேள்விக்கான விடை தெரியாமல் கீர்த்தனா குழப்பத்துடன் அமர, “ஏய் உனக்கு என்ன வேணும்?” மற்றவர்களிடம் கேட்டு ஆர்டர் கொடுத்தாள் மீரா.

அதுவரை அவளின் செயலைக் கவனிக்காத ஜெயராம், “அங்கே என்னடி அவ்வளவு சுவாரசியமாக பார்த்துட்டு இருக்கிற?” என்றவன் அவளின் பார்வை சென்ற திக்கை நோக்கி தன் பார்வையை செலுத்தினான்.

சட்டென்று சிந்தனைக் கலைந்து திரும்பிய கீர்த்தி, “ஒண்ணுமில்ல.. மழை வருகின்ற மாதிரி இருக்கிறதே! இன்னும் ஏதாவது பிரோகிராம் போடுவீங்களோன்னு யோசிச்சிட்டே இருக்கேன்” என்றாள் சாதாரணமாக.

அவள் சொன்னதை உண்மையென்று நம்பியவன், “இல்ல கீர்த்தி சாப்பிட்டுவிட்டு நேராக ஹாஸ்டல் தான் போக போறோம். நீ சொன்ன மாதிரி மழை பிடித்துவிட்டால் அவ்வளவு தான்” என்றபோது அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவுகள் வந்துவிடவே நால்வரும் சாப்பிட்டுவிட்டு  கிளம்பினர்.

அவர்கள் ஹாஸ்டல் வந்து சேர்ந்ததும் மழை பொழிய தொடங்கிவிட்டது. மூவரும் உடையை மாற்றிக்கொண்டு வெளியே வர, “எனக்கு தூக்கம் வருதுடி. நைட் சாப்பிட போகும்போது எழுப்புங்க” என்ற மீரா படுக்கையில் படுத்துவிட்டாள்.

மௌனிகா வழக்கம்போல ஒரு புத்தகத்தை கையில் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்துவிடவே, ‘மழை வருவதை வேடிக்கைப் பார்த்துட்டே பாடல் கேட்கலாம்’ என்ற எண்ணத்துடன் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு ஜன்னலின் ஓரம் அமர்ந்தாள் கீர்த்தி.

“கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்” என்ற பாடலில் தன் மனதைத் தொலைத்தாள்.

நேற்று என் பாட்டில் சுதியும் விலகியதே..

பாதை சொல்லாமல் விதியும் விலகியதே..

காலம் நேரம் சேரவில்லை..

காதல் ரேகை கையில் இல்லை..

சாக போனேன் சாகவில்லை..

மூச்சு உண்டு வாழவில்லை..

வாய் திறந்தேன் வார்த்தை இல்லை..

கண் திறந்தேன் காட்சி இல்லை..

தனிமையே இளமையில் சோதனை..

இவள் மனம் புரியுமா.. இது விடுகதை..” என்ற பாடல் வரிகளைக்கேட்டு தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

அவள் மனதில் குழப்பமேகங்கள் சூழ்ந்து நிற்கவே ஒரு கட்டத்திற்கு மேல் யோசிக்க முடியாமல் கண்கள் சொருகியது. நாற்காலியில் அமர்ந்த நிலையில் அவளையும் அறியாமல் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள்.

இரவு உணவிற்கு அழைக்க வந்த மௌனியிடம், “எனக்கு பசியில்லை” என்றவளை வற்புறுத்தி படுக்கையில் படுக்க வைத்தாள். அடுத்து வந்த நாட்களில் செமஸ்டர் தேர்வுகள் நெருங்கிட தன் கவனம் முழுவதையும் படிப்பின் பக்கம் திருப்பியது.

அன்றைய தேவை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்த நால்வரும் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து அரட்டையில் மூழ்கியிருந்தனர்.

“இன்னைக்கு எக்ஸாம்ல வந்த ஒரு சில கேள்வி படிக்காததால் சாஸ்ஸில் விட்டுட்டேன்” என்றாள் மீரா வருத்தத்துடன்.

“மச்சி இவ சில கேள்விக்கு பதில் எழுதலன்னு வருத்தபட்டுட்டு இருக்கிறாளே.. நான் எந்த கேள்விக்கும் ஒழுங்க பதில் எழுதல நானும் அந்தப்பக்கம் உட்கார்ந்து கண்ணை கசக்கட்டுமா?” ஜெயராம் கர்மசிரத்துடன் கேட்க பக்கென்று சிரித்தான் ரோஹித்.

“சும்மா என்னை வம்பிற்கு இழுப்பதையே வேலையாக வச்சிருக்கிற.. இது சரியில்ல..” என்று புத்தகத்தை எடுத்து அவனின் முதுகில் அடி போட்டாள்.

“ராட்சசி.. ஏண்டி என்னை இப்படி அடிக்கிறா” அவன் புலம்பவே மீரா சிரிக்க இவர்களோடு பேசாமல் ஆழ்ந்த சிந்தனையோடு அமர்ந்திருந்தாள் மௌனிகா.

அவளைக் கவனித்த ரோஹித், “ஹே மௌனி என்னாச்சு? ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிற” என்றான் அக்கறையுடன்.

அவனின் குரலில் சிந்தனை கலைய, “இல்லடா கீர்த்தியைப் பற்றி யோசிச்சிட்டு இருந்தேன். என்னவோ அவள் முதல் மாதிரி கலகலப்பாவே இல்ல. எந்த நேரமும் கவலையாக விட்டத்தைப் பார்த்தபடி சோகமாக உட்கார்ந்திருக்கிறா” என தன் பங்கிற்கு அவள் புலம்பினாள்.

“ம்ஹும் நானும் கவனிச்சேன் மௌனி. அவளே சொல்லணும்னு நினைக்காதபோது நம்ம எப்படி அவகிட்ட கேட்கிறது? அது தவறா போயிரும்” பெருமூச்சுடன் கூறினாள்.

இரண்டு பெண்களும் பேசுவதை பொறுமையாகக் கேட்ட  ஜெயராம், “நட்புக்கும் ஒரு எல்லை இருக்கும்மா. அவ வாழ்க்கையில் நடந்ததை அவளா சொல்லியிருந்தால் வேடிக்கையாக பேசும்போது நம்மையும் அறியாமல் வார்த்தைகள் வெளி வரும். அதனால் பாதிக்கப்பட போவது என்னவோ அவள் மட்டும்தான். சோ அவளே சொல்லாத ஒரு விஷயத்தை கேட்க நமக்கு ரைட்ஸ் கிடையாது” என்றான் தெளிவாக..

அவனைத் தொடர்ந்து ரோஹித்தும், “அவளிடம் இவ்வளவு மாற்றம் வந்திருப்பது நமக்கு நல்லா தெரியும். அதைக்கேட்டு அவளை கஷ்டப்படுத்த வேண்டாம். அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே ஏத்துக்குவோம். அதுதான் நம்ம  நட்புக்கு அழகு. ஒருவேளை அவளே அந்த நிகழ்வுகளை மறக்க நினைத்து  நம்மோடு பழகலாம் இல்லையா?” என்றவன் சொல்ல மற்றவர்களும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

அவர்கள் பேசி முடிக்கவும், கீர்த்தி தேவை முடித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது.

“ஹாய் கைஸ்.. என்ன எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்கீங்க?” புன்னகையோடு மௌனிகாவின் அருகே அமர்ந்தாள்.

“வழக்கம்போலவே..” என்ற ஜெயராம் பார்வை மீராவின் மீது குறும்புடன் படிந்து மீண்டது.

அதைக் கவனித்த கீர்த்தி, “ஏன் ஜெய் அவளை அப்படி பார்க்கிற?” என விசாரிக்க சற்றுமுன் நடந்ததை ரோஹித் ரசனை குறையாமல் சொல்ல வாய்விட்டு சிரித்தாள்.

“ஏன் ஜெய் அவளை வம்பிழுத்துட்டே இருக்கிற?” என்று மீராவிற்கு சப்போர்ட் போட்டாள்.

“நாளைக்கு நீங்க மூவரும் கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போனபிறகு உங்க கணவன்மார்கள் வந்து கேட்டால் சொல்வதற்கு எங்களுக்கு காமெடி சீக்வன்ஸ் வேணும் இல்ல அதுதான்” என்றவன் சிரிக்காமல் சொல்ல மீண்டும் அங்கே சிரிப்பலை பரவியது.

அதைக்கேட்டு மீண்டும் பொங்கி எழுந்த மீரா, “இங்கே நடந்ததை அவரிடம் சொல்வீயா? மகனே கொன்னுருவேன் ஜாக்கிரதை” என்று விரல்நீட்டி எச்சரிக்க, “ஹே ரிலாக்ஸ்!” என அவளை அமைதிபடுத்தினாள் மௌனிகா.

ஆனால் ஜெயராம் விடாமல், “மச்சான் இந்த வருஷம் முருகன் கோவிலுக்கு நான் காவடி எடுத்து பழனிக்கு நடந்தே போக போறேன்” என்றவன் தலையும் இன்றி வாழும் இன்றி கூறினான்.

“எதுக்குடா” என்றாள் கீர்த்தி புரியாத பாவனையோடு.

“மீராவோட நண்பனான என்னையே இந்த அடி அடிக்கிறாளே.. அப்போ அவளோட புருஷனாக வரபோகும் அந்த புண்ணியவான் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு.. என்னதான் இருந்தாலும் அவனும் நம்மள  மாதிரி ஒரு ஆண்மகன்தானே? அதுதான் அவனைக் காப்பாற்ற சொல்லி கடவுளுக்கு கடுமையான வேண்டுதல்” என்று இரண்டு கன்னத்திலும் போட்டுக்கொள்ள அடங்கிய சிரிப்பலை மீண்டும் எழும்பியது.

மீரா பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எப்பவோ வரபோகும் அவனுக்காக இப்பவே வேண்டுதல் வைக்கிறீயா? முதலில் உன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப் பாரு” எழுந்து அவனைத் துரத்திட அவளின் கைக்கு சிக்காமல் ஓட்டம் பிடித்தான் ஜெயராம்.

வெகுநாட்களுக்கு பிறகு கீர்த்தி மனம்விட்டு சிரிப்பதை கண்ட ரோஹித் மற்றும் மௌனிகாவின் மனமும் மகிழ்ந்தது. அப்போது சிரித்தபடியே அங்கே வந்த ஜெயராம், மீராவின் பார்வைகள் இரகசியம் பரிமாறிக் கொண்டது.

கல்லூரி நாட்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு அங்கம். அந்த நாட்களை அனுபவித்து கடந்து வந்தவர்களிடம் கேட்டால் வசந்தகாலம் என்று சொல்வார்கள்.  

தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டது. கீர்த்தனாவிற்கு வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் ஹாஸ்டலில் தங்கி தன் படிப்பை தொடர்ந்தாள்.

 

Leave a Reply

error: Content is protected !!