Thithikkum theechudare – 10

Thithikkum theechudare – 10
தித்திக்கும் தீச்சுடரே – 10
மறுநாள் அதிகாலையில். அந்த குரூஸில்!
மாத்திரை உண்டதன் பயனாக, மீரா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். தாமதாக தூக்கத்திற்கு சென்றதால், முகிலனும் தூங்கி கொண்டிருந்தான். ஆனால், முகிலனின் மேலாளர் விரைவாக எழுந்து விட்டார். முகிலன் மீராவின் விஷயம் அவரை பாறாங்கல்லாக அழுத்தி கொண்டிருக்க, அவரால நிம்மதியாக தூங்க முடியவில்லை. அவர் சற்றும் விடியும் வரை நேரத்தை நெட்டி தள்ளி கொண்டிருந்தார்.
சூர்யா பகவான் காட்சிஅளித்ததும், சட்டென்று கோவிந்தராஜனுக்கு அழைத்தார். அவர் மீராவை பற்றியும், முகிலனை பற்றியும் கூற, கோவிந்தராஜன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பேசவில்லை. அவரின் எண்ணங்கள் என்னவென்று மேலாளரால் கணிக்க முடியவில்லை. ஆனால், முகிலனின் தந்தையிடம் விஷயத்தை கொண்டு சென்றதில், மேலாளரின் மனம் நிம்மதி அடைந்தது.
அவர் பேச்சை முடித்து கொள்ள, கோவிந்தராஜன் முகத்தில் சிந்தனை பரவியது. அவருக்கு முதலில் தன் மனைவியின் யோசனை வந்தது. ‘அமிர்தாவுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது. தெரிஞ்சா டென்ஷன் ஆகிருவா. முதலில் முகிலன் கிட்ட பேசுவோம்.’ அவர் தன் அலுவலக அறைக்கு தனியாக வந்து தன் மகனுக்கு அழைத்தார்.
முகிலனின் அலைபேசி ஒலிக்க, அப்பொழுது தான் எழுந்திருந்த முகிலன் தன் அலைபேசியை பார்த்தான். அவன் முகத்தில் மென்னகை பரவியது. ‘மேனஜர் வேலையை காட்டிட்டார் போல’ அவன் மூளை கணக்கிட்டு கொண்டது.
முகத்தை கழுவிக்கொண்டு, துவலையால் தன் முகத்தை துடைத்தபடி, தன் தந்தைக்கு அழைத்தான். அவன் அழைக்க, தன் மகன் உடனடியாக அழைப்பான் என்று காத்திருந்த அவர், அழைப்பை சட்டென்று எடுத்தார், “அப்பா…” அவன் அழைக்க, “முகிலன் என் கிட்ட எதுவும் விஷயத்தை மறைக்கறியா?” அவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
தந்தையின் நேரடிக் கேள்வியில், முகிலன் சுதாரித்துக் கொண்டான். “அப்பா, நீங்க நேரடியாக கேளுங்க அப்பா” என்றான் பதவிசமாக. “நான் நேரடியா தான் முகிலன் கேட்குறேன். இதைவிட நேரடியா கேட்கனுமுன்னா, அந்த ஜெயசாரதி பொண்ணு எதுக்குப்பா நம்ம குரூப்ல வரணும்?” என்று அவர் நேரடியாக கேட்டார்.
“கவர் ஸ்டோரி பண்ண” அவன் பளிச்சென்று கூற, “ஏன் முகிலன் ஜெயசாரதி பெண்ணைத் தவிர, உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” அவர் அடுத்த கேள்வியில் கேட்க, “மீரா, ஜெயசாரதி பெண்ணா இங்க வரலை. தேவசேனா பத்திரைக்கையின் சார்பா தான் வந்திருக்காங்க” அவன் தன் தந்தைக்கு விளக்கம் கொடுத்தான்.
“நீ சினிமாவுக்கு போனது அம்மாவுக்கு பிடிக்கலை. நான் அப்ப உனக்கு குறுக்க நினைக்கலை. உன் விருப்பமுன்னு விட்டுட்டேன். ஆனால், நமக்கு அரசியல் வேண்டாம் முகிலன்” அவர் குரல் கட்டளை கலந்து ஒலிக்க, “அப்பா” அவன் தன் தந்தையின் பேச்சை இடைமறிக்க, “முகிலன், நான் சொல்றதை கொஞ்சம் கேளேன். மீராவை வைத்து அரசியல் பண்ணிடலாமுன்னு நினைச்சிறாத முகிலன். உன் வாழ்க்கை…”, அவர் பேசிக்கொண்டே போக, “அப்பா…” அவன் சற்று அழுத்தமாக அழைக்க, அவர் பேச்சை நிறுத்தினார்.
“மீராவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை அப்பா. அவ பாவம். அவ வந்த நோக்கமே வேறே. நான் அவளை கூப்பிட்டு வந்தது வேலைக்கு மட்டுந்தான்” தன் விஷயத்தை மட்டும் மறைத்து பேசினான். “அவளுக்கும் அவங்க அப்பாவுக்கும்…” என பேச ஆரம்பித்து, அது தன் தந்தைக்கு தேவை இல்லை என்பதை போல் நிறுத்திக்கொண்டான்.
எதிர்முனையில், அவன் தந்தை மௌனித்தார். முகிலன் கூறிய விஷயங்கள் அவருக்கு சாதமாக இருந்தாலும், அவன் மீராவை விழித்த விதம் அவருக்குள் பல கேள்விகளை எழுப்பியது. ‘அவள்…’ என்று இத்தனை ஒருமையில், அவன் பெரும்பாலும் எந்த பெண்களையும் ஒருமையில் அழைப்பதில்லை.
தன் தந்தையின் மௌனத்தில், அவர் மனதை படித்தவன் போல, “அப்படி எனக்கு மீராவை பிடிச்சிருந்தா, அது மீராவுக்காக மட்டுமா தான் இருக்கும் அப்பா. என் பிடித்தம் என் மனசு மட்டும் தான் அப்பா. தொழிலை நான் எதோடும் யாரோடும் குழப்பிக்கறதில்லை அப்பா” அவன் கூற, “என்ன சொல்ற முகிலன் இப்ப?” அவர் கேட்க, “உங்க சந்தேகத்திற்கு விளக்கம் சொல்றேன் அப்பா. நிச்சயமா உங்க கேள்விக்கு பதில் சொல்லலை. ஏன்னா, எனக்கே பதில் தெரியாது அப்பா” அவன் கூற, அவரிடம் மௌனம்.
மகன் ஒரு பெண்ணிடம் நெருங்கி பேசுகிறான், பழகுகிறான் என்று இதுவரை வராத பேச்சு இன்று முதல் முறையாக வந்ததில், அவருள் எழுந்த கேள்விக்கு அவர் மகனிடம் பதில் கண்டு கொண்டார். எதுவும் சொல்லவில்லை. “அப்பா, அம்மா கிட்ட இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துகிறேன்” அவன் கூற, “அம்மா கிட்ட, அம்மா பார்க்குற பெண்ணை கல்யாணம் செய்யறதா வாக்கு கொடுத்திருக்க” அவர் கூற, முகிலன் இப்பொழுது சிரித்தான்.
“என்னடா சிரிப்பு?” அவர் கேட்க, “என் சம்மதம் இல்லாமல், அப்படி எல்லாம் முடிவு பண்ற பழங்கால அம்மா, அப்பாவா நீங்க?” என்று அவன் தன் தந்தை மேல் ஐஸ் கட்டியை வைத்தான்.
இப்பொழுது தன் மகனின் சாமர்த்தியசாலித்தனத்தில் அவர் சிரித்தார்.
மேலும் சில பேச்சுகளோடு, தன் தந்தையோடு பேச்சை முடித்து கொண்டு, குடிக்க காபியை எடுத்துக் கொண்டு வெளியே அந்த குரூஸின் பால்கனிக்கு சென்றான்.
பழுப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். ஆங்காங்கே பட்டனும் பையும் வைத்திருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்தான். அவன் உடற்கட்டை சற்று கவர்ச்சிகரமாக தான் காட்டியதோ என்னவோ? திரைப்பட நடிகன் அல்லவா. அவன் வெளியே வரவும், அங்கிருந்த ஆண்கள் அவனை கொஞ்சம் பொறாமையோடும் மரியாதையோடும் பார்த்தனர். அங்கிருந்த பெண்களோ ஆர்வமாக பார்த்தனர். ஒரு நடிகனை ரசிப்பதில் யாரும் குறை வைக்கவில்லை. இவை அனைத்தும் முகிலன் கண்களில் படத்தான் செய்தது. ஆனால், அவன் சிந்தையோ இதை எல்லாம் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள பழகியிருந்தது.
அவன் கால்கள் யாருமில்லாத தனிமையான இடத்திற்கு சென்றது. அப்பொழுது தான் அங்க யாருமில்லாத தனிமையில் மீரா அமர்ந்திருப்பதை பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவளிடம் பெரிய ஆர்வம் எல்லாம் இல்லை. அலட்சியமாக அமர்ந்திருந்தாள். அவனுக்கு அது பிடித்திருந்தது. சினிமா நடிகனான அவனிடம் எல்லோரும் நெருங்க விரும்புவதை அவன் விரும்புவதில்லை.
அவன் விரும்பியே மீராவிற்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவள் நட்போடு புன்னகைக்க, அவன் முகத்திலும் அதற்கான எதிரொலி.
அவன் அவள் முகத்தை ஆராய ஆரம்பித்தான்.
‘நேற்று இரவு இருந்த மீரா இவள் இல்லை.’ அவனுடைய முதல் கணிப்பு. ‘அதே அலட்சியம். திமிர், தைரியம் கலந்த பார்வை.’ அவன் கணித்து கொண்டே செல்ல, அவன் கண்முன், ‘அம்மா…’ என்று வெதும்பிய மீரா வர, அவன் கண்களில் இரக்கம். அமைதியான அந்த காலைப்பொழுதில், மீரா எங்கோ பார்த்தபடி அவனை கணக்கிட்டு கொண்டே காபியை பருக, அவள் பார்வை அவன் கண்களில் காட்டிய இரக்கத்தில் வந்து நின்றது.
தன் கையிலிருந்த காபி கோப்பையை, “நங்…” என்று வைத்தாள். அவன் பதற எத்தனித்து, சுதாரித்துக் கொண்டான். “இந்த இரக்கப்படுற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். யாரும் என் மேல் இரக்கப்படுறதை நான் விரும்ப மாட்டேன்.” அவள் சுள்ளென்று கூறினாள்.
அவன் பேசவில்லை. ‘என் பார்வையை வைத்து இத்தனை கணிப்பா?’ அவன் அவளை மனதிற்குள் மெச்சிக் கொண்டான். “ஏதோ, நேத்து நடந்த சம்பவம் அப்படி. மத்தபடி, நான் யாரும் இரக்கப்படுற நிலையில் இல்லை. யாருடைய கருணையும் எனக்கு தேவையில்லை.” அவள் முகத்தில் அடித்தார் போல் கூற, அவனுக்கு அவள் பேசிய விதம் உரைக்கவில்லை. மாறாக, அவள் கூறிய நேற்றய சம்பவம் என்ற சொல்லில் அதிர்ந்து நின்றான்.
‘நேத்து நல்ல தூக்கத்தில் இருந்தாளே. நான் அவ ரூமுக்கு வந்துட்டு போனது தெரியுமா என்ன? நான் எந்த சுவடையும் விட்டுட்டு வரலையே? பின்ன எப்படி தெரிஞ்சிருக்கும்?’ அவன் முகத்தில் குழப்பம்.
“என்ன நேற்றைய சம்பவம்?” என்று அவன் தடுமாற்றத்தோடு கேட்க, “என்ன தெரியாத மாதிரி நடிக்கறீங்க? மிஸ்டர் ஜெயசாரதி என்னை வர விடாம தடுத்தது உங்களுக்கும் தெரியும் தானே? தெரியாத மாதிரி நடிக்கறீங்க? மகா நடிகன் தான்” அவள் குற்றம் சாட்டும் விதமாக கூற, அவன் மீண்டும், அவள் பேச்சின் சாராம்சத்தை மட்டுமே எடுத்துக் கொண்டான்.
‘இவ, அம்மா விஷயம் எனக்கு தெரியுமுன்னு அவளுக்கு தெரியாது. அது அப்படியே இருக்கட்டும். அது தான் நல்லது.’ அவன் புருவங்கள் முடிச்சிட, “என்கிட்டே நட்பா பேசுறது ஓகே. ஆனால், இந்த இரக்கம் எல்லாம் வேண்டாம்” அவள் முடிக்க, அவன் கலகலவென்று சிரித்தான்.
“என்ன சிரிப்பு?” அவள் கேட்க, “இல்லை, உன் மேல கூட ஒருத்தன் இரக்கப்படுவான்னு நீ நினைக்குற பார்த்தியா, உன் நம்பிக்கை, தைரியம் எல்லாம் வேற லெவல்” அவன் கூறிக்கொண்டு, மீண்டும் பெருங்குரலில் சிரித்தான்.
“ஏன் எனக்கு என்ன?” அவள் கேள்வியாக தலையை உயர்த்த, “முதல் நாளே என் மண்டையை உடைச்ச. இத மாதிரி எத்தனை பேர் மண்டையை உடைச்சிருப்ப?” அவன் கேட்க, “அது அவங்க என் கிட்ட பேசுற விதத்தில் இருக்கு. நான் என்ன உங்களைப் பார்க்குற அப்பவெல்லாம் உங்க மண்டையை உடைச்சிகிட்டா இருக்கேன்?” அவள் சட்டம் பேச,
“நியாயமான வார்த்தை. என்ன ஒரு நல்ல மனசு” அவன் அவளை பாராட்ட, “என்ன கிண்டலா?” அவள் நக்கலாக கேட்க, “ச்… ச்ச… இல்லை மீரா, உன் நல்ல மனதை என் நல்ல மனதால் பாராட்டுறேன்” அவன் தன் கரங்களை பாராட்டும் விதமாக தட்ட, அவள் சிரித்தாள்.
அவனோடான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. அவள் சில காலம் சிரிக்காமல் இருந்தாள். அதன் பின் நண்பர்களோடு சேர்ந்து பேசி சிரிப்பது உண்டு. ஆனால், அப்பொழுதும் அவள் ஜாக்கிரத்தையாகத்தான் இருப்பாள். ஆனால், இங்கு முகிலனோடு மீரா ஒரு பாதுகாப்பை உணர்ந்தாள். அவள் மனம் அவன் முன் மனம்விட்டு சிரிப்பது போல் அவள் மனம் கூறியது.
எதிரே இருந்த அவனும் சிரித்துக் கொண்டிருந்தான். வசீகரமான புன்னகை. ஆனால், அவளோ அவனை ரசிக்கவில்லை. அவள், தன் புன்னகையை அலசிக் கொண்டிருந்தாள். அவனோ, அவள் சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தான். முகிலனுடன், அவன் வீட்டு மனிதர்கள் மட்டும் தான் மனம் விட்டு சிரிப்பதுண்டு.
மற்றவர்கள், அவனுக்காக சிரிப்பார்கள், அவர்கள் காரியத்திற்காக சிரிப்பார்கள். முகிலனுக்கு மீராவை அவள் செயலுக்காக அவளை பிடிக்க ஆரம்பித்ததா? இல்லை அவளை பிடிக்க ஆரம்பித்ததால் அவள் செயல்கள் பிடித்திருந்ததா? அவனுக்கு பதில் தெரியவில்லை. அவன் வாழ்வின் ஆரம்ப புள்ளியும் தெரியவில்லை. அவன் வாழ்வின் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியும் தெரியவில்லை.
அவர்கள் பேசவில்லை அங்கு மௌனமே. பலரின் பார்வை இவர்கள் பக்கம் திரும்ப, மீரா முதலில் சுதாரித்துக்கொண்டாள். “நான் என் ரூமுக்கு போறேன்” அவள் எழுந்து செல்ல, ‘இவ கிட்ட இருந்த எப்படி விஷயத்தை தெரிஞ்சிக்கிறது?’ அவன் தாடையை தடவிக்கொண்டான்.
தித்திப்புகள் தொடரும்…