Thithikkum theechudare – 15

TTS

Thithikkum theechudare – 15

வாசகர்களுக்கு வணக்கம்,

வேலைப் பளுவால், பெரிய அத்தியாயத்தை பதிவிட முடியவில்லை. இன்று கொஞ்சம் சின்ன அத்தியாயம் தான். விரைவில் அடுத்த அத்தியாயத்தோடு வருகிறேன்.

தித்திக்கும் தீச்சுடரே – 15

முகிலனின் வீட்டில், அமிர்தவல்லி தீவிரமாக பல பெண்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். “அமிர்தா என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?” கோவிந்தராஜன் அவர் அருகில் வந்தமர்ந்தார்.

“முகிலன் இந்த பட ஷூட்டிங் முடிந்து தான் வருவான். வர்ற மாச கணக்கு ஆகுமுன்னு நினச்சேன். ஆனால், அவன் இன்னைக்கே வரேன்னு சொல்லிட்டான். அது தான் பொண்ணு பார்த்துட்டு இருக்கேன். அவன் இருக்கும் பொழுதே, ஒரு பெண்ணை பார்த்து முடிவு பண்ணிட்டா, நாம கல்யாண வேலையை ஆரம்பிச்சிடலாமில்லை?” அவர் கேள்வியாக நிறுத்தினார்.

“என் சம்மதம் இல்லாம முடிவு பண்ண நீங்க என்ன பழங்கால அம்மா அப்பவான்னு நம்மளை பார்த்து கேட்குறான் உன் மகன்” என்றார் கோவிந்தராஜன் கேலி போல, “நான் எங்க அவன் சம்மதம் இல்லாம முடிவு பண்ணனுமுனு சொல்றேன். முகிலன் வந்த பிறகு அவனைக் கேட்டு முடிவு பண்ணனுமுனு தானே சொல்றேன். நீங்க ஏன் அவன் கல்யாண பேச்சை எடுத்தாலே தடங்கலாவே பேசுறீங்க?” அமிர்தவல்லி விருட்டென்று எழுந்து கோபமாக சமயலறைக்குள் நுழைந்து கொண்டார்.

‘இவ என்ன அதுக்குள்ளே இப்படி கோச்சிக்குறா? முகிலன் எதுக்கு வரணும்? அந்த பெண்ணால் பிரச்சனைனா, அந்த பெண்ணை மட்டும் அனுப்பிருக்கலாமே? முகிலன் வந்து என்ன குண்டைத் தூக்கி போட போறானோ? இவ என்ன சொல்ல போறாளோ. எதுவோ சரி இல்லை, அது மட்டும் எனக்கு தெரியுது.’ அவர் தன் தாடையை தடவிக் கொண்டார்.

அதே நேரம் விமானத்தில்.

   விமானம் தரையிறங்கும் வரை இருவரும் ஒன்றுமே பேசவில்லை. முகிலன் கேட்க வேண்டும் என்று நினைத்தை கேட்டுவிட்டான். மீராவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. விமானம் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க, முகிலன் பரபரவென்று இயங்கினான்.

“என்ன மாஸ்க், கூலெர்ஸ், தொப்பி எல்லாம் போட்டு ஆள் அடையலாம் கண்டு பிடிக்காத மாதிரி மாறிடீங்க?” அவள் விமானத்திலிருந்து இறங்குமுன் அவனிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இயல்பாக பதில் தெரிந்த கேள்விக்கு கேள்வி கேட்டாள். அவனுக்கு அவள் மனம் புரிந்தது. அவளைப் படித்தவன் போல், அவள் மனதை அறிந்தவன் போல் புன்னகைத்தான்.  

“வெளிய போனா, எல்லாரும் என்னை சூழ்ந்திருவங்கள்ல? அது தான்” அவனும் இயல்பாகவே பேசினான். அவன் இயல்பாக பேசியதில் அவள் முகத்தில் மகிழ்ச்சி. அதன் பின்னும் இருவரும் பேசவில்லை. அவர்கள் பெரிதாக பெட்டி கொண்டு வரவில்லை. இறங்கியதும் படபடவென்று நடந்தார்கள்.

அவர்கள் பிரியும் இடம் வந்தது. அவன் தலையசைத்து அங்கே நிற்கே, அவள் அவனைப் பார்த்தபடி பின் நோக்கி நடந்தாள். அவள் இதயம் பட்பட்டென்று அடித்துக் கொண்டது. அவள் இமைகள் சற்று வேகவேகமாக படபடத்தது. அவன் அசையவில்லை. அவன் தலையசைப்புக்கு அவள் மறுதலையசைப்பு கூட கொடுக்கவில்லை. அவனிடம் விடைபெறவுமில்லை. அவன் கேள்விக்கு பதில் சொல்லவுமில்லை. அவனைப் பார்த்தபடியே பின்னோக்கி சென்று கொண்டே இருந்தாள். அவள் பதிலுக்காக இல்லையில்லை, அவளுடைய ஒரு தலையசைப்பிற்காக அவன் அவளைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். அவள் அவன் பார்வை வட்டடத்திலிருந்து மறையும் வரை.

அவள் மறையவில்லை. மாறாக, அவனை நோக்கி ஓடி வந்தாள் அந்த விமான நிலையத்தில்.

அவள் காதலைச் சொல்ல வரவில்லை. அவள் சம்மதம் சொல்ல வரவில்லை. அது அவனுக்கும் தெரியும். ஆனால், அவள் வரவில் நிச்சயம் ஏதோவொன்று இருக்கும் என்று அவன் காத்திருந்தான். அந்த சில நொடிகள் அவனுக்கு பிடித்திருந்தது. அந்த உணர்வை அவனுக்கு வார்த்தையில் வடிக்க தெரியவில்லை.  

அவள் வேகமாக வந்தாள். படுவேகமாக வந்தாள். அவன் மார்பில் அவள் சாயவில்லை. மாறாக அவன் தோளோடு அவன் கைகளை இறுக பிடித்தாள். ‘நான் உன் தோழி’ என்ற உரிமையோடு. அவள் சொல்லாத சம்மதத்தை அவன் உணர்வுகள் கொஞ்சம் உணர்ந்து கொண்டது.

“நான் ஒருவேளை வேண்டாமுன்னு சொன்னால், என் கிட்ட பேசமாடீங்களா?” அவன் தோளோடு சாய்ந்து கொண்டு, தலை உயர்த்தி அவன் முகம் பார்த்து கேட்டாள்.

அவன் பார்வையை அவன் கூலர்ஸ் மறைத்து கொண்டது. அவன் சிரிப்பை அவன் மாஸ்க் மறைத்து கொண்டது. அவன் மனதை அவன் மறைத்து கொண்டான். அவளோ அவன் பதிலுக்காக காத்து நின்றாள்.

சிலரின் பார்வை இவர்கள் மேல் படிய ஆரம்பிக்க, “வீட்டுக்கு எப்படி போற மீரா?” என்றான். “இனி தான் கேப் புக் பண்ணனும்” அவள் கூற, “மீரா, நான் டிராப் பண்றேன்.” அவன் அவளை கையோடு அழைத்துச் சென்றான்.  

முகிலனுக்கு கார் காத்திருக்க, அவன் கார் ஓட்டுனரை அனுப்பிவிட்டு, மீராவை ஏற்றிக்கொண்டு காரை செலுத்தினான்.

“மீரா, நான் உன் நண்பன். நண்பன் அப்படினா, அது வார்த்தை மட்டுமில்லை. என் எண்ணம் கூட. அதாவது என் எண்ணத்தில் கூட நீ ஒரு தோழி மட்டும் தான். நான் இதுவரை, உன்னை எல்லை மீறி ஒரு தடவை கூட… என் சிந்தனையில் கூட நினைச்சது கிடையாது.” அவன் வார்த்தையில் நேர்மை இருந்தது.

அவள் பேசவில்லை.”சினிமா ஹீரோ அப்படினா எப்படி வேணும்ன்னாலும் இருப்பாங்கன்னு கிடையாது.” அவன் கூற, “அதெல்லாம் எனக்கு தெரியும். பத்திரிகையில் இருக்கிற எனக்கு, எல்லாம் எவ்வளவு உண்மை பொய்ன்னு தெரியாதா?” அவள் வெடுக்கென்று கேட்டாள்.

“அதுவும் ஹீரோவை எனக்கு தெரியாதா?” என்று அவள் கேட்க, “நீ நோ சொன்னாலும், நான் உனக்கு நண்பன் தான்.” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை. “ஆனால், நீ எஸ் சொல்லிட்டா, நான் சிந்தனையிலும் சரி செயலிலும் சரி எவ்வளவு கண்ணியம் காப்பேன்னு சொல்ல முடியாது. நான் ஒரு கணவனா தான் இருப்பேன். கணவன் அளவு கடந்த காதலான மாறினாலும் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.” அவன் மந்தகாச புன்னகையை சிந்த, அவள் முகம் அவளையும் மீறி சிவந்தது.

“எல்லாம் புரிஞ்சிதா?” அவன் கேட்க, “என்கிட்டே இது வரைக்கும் யாரும் கல்யாணமுன்னு பேசியதே இல்லை. அம்மா இருந்திருந்தா பேசிருப்பாங்க. ஆனால், நான் படிக்கும் பொழுதே அவங்க இல்லாம போய்ட்டாங்க. அம்மா மட்டும் தான் என் எண்ணம். தேடல் மட்டும் தான் என் வாழ்க்கைன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்” அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அவள் தன் போக்கில் பேசினாள்.

“அப்படியே இருக்க முடியாதில்லை மீரா?” அவன் மெதுவாக கேட்க, “அதை நீங்க கேட்கும் பொழுது புரிஞ்சிக்கிட்டேன்” அவள் தன்மையாக கூறினாள்.

“ஹீரோ, எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் இல்லை. முதல் முறை மட்டும் தான் எனக்கு உங்களை பார்த்து கோபம் வந்துச்சு” அவள் கூற, “என் மண்டையை கூட உடைச்சியே” அவன் கேலி செய்து சிரிக்க, “இப்படி எல்லாம் கேலி பண்ணா, நான் அப்பப்ப உங்க மண்டையை உடைப்பேன்.” அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.

அவன் பெருங்குரலில் சிரித்தான். “அப்புறம், எனக்கு உங்க மேல கோபம் வரவே இல்லையே.” அவள் கூற,”எனக்கும் அது தெரியும்” அவன் கூற, “எனக்கு உங்களை பிடிக்கும்” அவள் கூற, அவன் சட்டென்று அவளைத் திரும்பி பார்த்தான். “ஒரு நண்பனா” என்று அவள் தன் வாக்கியத்தை முடித்தாள். அவன் சாலையைப் பார்த்தபடி, காரை செலுத்த ஆரம்பித்தான்.

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” அவள் கூற, “அதிகபட்சம் பத்து நாள் எடுத்துக்கோ” அவன் கூற, “நான் அவ்வளவு பொறுமைசாலி எல்லாம் இல்லை. உண்டு இல்லைன்னு ஒரு முடிவுக்கு சட்டுன்னு வந்துருவேன். ஆனால், அந்த முடிவை உங்க முன்னாடி எடுக்க முடியாது.” அவள் வெளிப்படையாக தன் காரணத்தை கூற, அவன் அதற்கும் சிரித்துக் கொண்டான்.

மீராவின் வீட்டின் முன் வண்டி நின்றது. “தேங்க்ஸ் ஹீரோ” அவள் வீட்டினுள் சென்றாள். ‘ஹீரோ…’ அவன் நினைப்பில் சீட்டியடித்தபடி தன் அறை நோக்கி சென்ற மகளை ஜெயசாரதி யோசனையோடு பார்த்தார்.

 முகிலன் அவள் வீட்டை யோசனையோடு பார்த்தான். இந்த வீட்டில் பல விபரீதங்கள் அரங்கேறப் போவது அறியாமல் தனக்குள் புன்னகைத்தாள் கொண்டு கிளம்பினான்.

முகிலனின் வருகைக்காக அமிர்தவல்லி வழக்கத்தை விட சற்று அதீத ஆர்வத்ததோடு காத்திருந்தார்.  

“உங்க பேச்சே சரி இல்லை. முகிலன் யாரையும் விரும்பறானா? உங்களுக்கு அந்த விஷயம் தெரியுமா? தெரிஞ்சும் என் கிட்ட மறைக்குறீங்களா?” அமிர்தவல்லி கோபமாக கேட்க, “ஐயோ, அதெல்லாம் இல்ல அமிர்தா” கோவிந்தராஜன் பரிதாபமாக கூறினார்.

“இல்லை, நீங்க அவனுக்கு பொண்ணு பார்க்கவே விட மாட்டேங்கறீங்க. எப்பவும் தடங்கலாவே பேசறீங்க. கொஞ்ச நாளா நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன்” அவர் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

“ஏதோ தப்பு பண்ணறீங்க” அவர் தன் கணவனைப் பார்த்து கூற, “என்ன நீ? நான் யாரையோ காதலிக்குற மாதிரி என்னைப் பார்த்து சொல்ற” கோவிந்தராஜன் கோபமாக கேட்க, “அப்ப உங்க பையன் யாரையும் லவ் பன்றானா?” அமிர்தவல்லி கேட்க,  

‘மேனேஜர் சொல்றது பார்த்தா அப்படித்தான் தெரியுது. அதை நான் ஏன் சொல்லணும். அதை முகிலனே சொல்லி திட்டு வாங்கட்டும்’ என்று எண்ணியவராக அவர் மௌனம் கொள்ள, “என்ன பொய் சொல்லலாமுன்னு யோசிக்கறீங்களா?” அமிர்தவல்லி கிடுக்கு பிடியாக நின்றார்.

“இல்லை, உன் பையனா? இல்லை என் பையனானு நீ கேட்ட கேள்விக்கு பதில் யோசிக்குறேன். எப்பவும் என் பையன் பையன்னு சொல்லுவியே? இன்னைக்கு உங்க பையன்னு சொல்லிட்ட?” அவர் கேட்க, “இந்த விளையாட்டு பேச்செல்லாம் வேண்டாம். அவன் வரட்டும். லவ் கீவ்ன்னு அவன் சொல்ல கூடாது. இவன் ஒருத்தன் நடிப்பு, அரசியல்ன்னு சுத்துறது போதும். அப்படி அவன் காதலன்னு சொன்னான், அவனை அடி வெளுத்திருவேன்.” அமிர்தவல்லி கண்டிப்போடு கூறினார்.

“வரட்டும் அவன்” அமிர்தவல்லி அவனுக்காக வாசலில் காத்திருக்க, ‘ரவுடி…’ மீராவின் நினைவில் சீட்டியடித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் முகிலன்.

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!