UTHTHARAVINDRI MUTHTHAMIDU 3

cover-cdb7ba38

UTHTHARAVINDRI MUTHTHAMIDU 3

உத்தரவின்றி முத்தமிடு 3

அர்ஜுனன் மற்றும் யாத்ராவின் திருமணத்திற்கு இன்னும் இரெண்டு வாரங்களே இருக்கவும் இரு வீடுமே பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது. யாத்ராவுக்கு இறுதி ஆண்டு தேர்வு முடிந்தவுடன் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என ஆரி சொன்ன பொழுது, தேர்வை திருமணத்திற்கு பிறகு கூட எழுதிக்கொள்ளலாம் என்ற வீட்டின் பெரியோர்கள் திருமணம் பேசிவிட்டு ஏன் தள்ளி போடவேண்டும் என்று சொல்லி திருமண தேதியை கூறிவிட்டிருக்க, நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவருக்கும் பத்திரிக்கை வைப்பது முதல்,பட்டுப்புடவை, நகைகள் வாங்குவது என சாவித்ரி – வைகுண்டராஜன், ஜானகி – வைத்தீஸ்வரன் தம்பதியர் பம்பரமாக சுழன்றனர். இருவீட்டினரும் சேர்ந்து நடத்தும் திருமணம் என்பதால் திருமண வேலைகளை தங்களுக்குள் சமமாக பிரித்து கொண்டு செயல்பட்டனர்.

கல்யாணம் ஒருபக்கம் நெருங்கிக்கொண்டிருக்க , மறுபக்கம் ஆரிக்கு வேலை சுமையும் அதிகரித்துக்கொண்டிருந்தால் யாத்ராவிடம் பேசுவதற்கு ஆரியால் நேரம் ஒதுக்க முடியவில்லை. மேலும் திருமணம் வரை அவளுக்கு தனிமை கொடுக்க விரும்பிய அர்ஜுனன் ஒன்று இரெண்டு முறை மட்டும் அலைபேசியில் அவளிடம் தொடர்புகொண்டு வழக்கமான நல விசாரிப்புகளுடன் நிறுத்தி கொண்டவன் வேறு எதுவும் அவளுடன் பேசிக்கொள்ளவில்லை.

அப்படியே இரெண்டு வாரமும் சட்டென்று கடந்துவிட திருமணத்திற்கு முந்தைய நாளும் வந்தது. மாலையில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் இரு வீட்டு உறவினர்கள்,ஆரி அர்ஜுனனின் காவல் துறை வட்டார நண்பர்கள், யாத்ராவின் நண்பர்கள் வைகுண்டராஜன், வைத்தீஸ்வரன் தொழில் முறை நண்பர்கள் என மண்டபமே உறவுகளால் நிரம்பியிருந்தது.

 

மாறன் அர்ஜுனன் இருவரும் ஒரே கேஸ் விடயமாக வெளியூர் சென்றிருந்ததால் ஆண்கள் இருவரும் வேலையையெல்லாம் முடித்து விட்டு நேராக மண்டபத்திற்கே வந்துவிட்டனர். என்ன தான் தொடர் வேலை காரணமாக உடம்பில் அவ்வளவு அலுப்பு இருந்தாலும் அர்ஜுனன் மனம் தன்னவளை காண தான் மிகவும் ஏங்கியது.

அந்நேரம் தோழிகள் புடை சூழ யாத்ராவுக்கு மெஹந்தி போடும் படலம் நடந்துக் கொண்டிருப்பதை தன் அறையின் வாசலில் இருந்து கண்ட ஆரியின் கண்கள் காதலால் மின்னியது. இத்தனை நாட்கள் தன்னவளை பார்க்காததால் உண்டான ஏக்கம் அவனது தயக்கத்தை உடைத்தெறிய செய்ய எதை பற்றியும் யோசிக்காதவன் அலைபேசியில் பிசியாக இருப்பது போல உடனே கீழே வந்தான்.

 

ஏற்கனவே மோஹனா மற்றும் கார்த்திக் மூலமாக அர்ஜுனனை பற்றி அறிந்திருந்த யாத்ராவின் தோழிகள் அர்ஜுனனை அங்கு பார்த்ததும் தங்களுக்கு அறிமுகப்படுத்த சொல்லி கட்டாயப்படுத்த யாத்ராவோ வேண்டாவெறுப்பாக அவர்களை அழைத்து கொண்டு அவன் அருகில் சென்று ஆரியை தன் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அர்ஜுனனின் கம்பீரமான தோற்றத்தையும், சிரித்தமுகமாக அவன் பழகிய விதத்தையும் கண்டவர்களுக்கு, முதல் பார்வையிலேயே அவனை மிகவும் பிடித்துப் போயிற்று.

 

“ஹேய் யாத்ரா உன் ஆளு சூப்பர்டி, சும்மா ஜம்முன்னு இருக்காரு” என அவளது தோழிகளில் ஒருவள் ரசித்து மற்றவர்களிடம் கிசுகிசுக்க அதற்கு இன்னொருவளும், “ஆமா ஆமா மாம்ஸ் செமையா இருக்காரு பா” என்று ஆமோதிக்க,

அப்பொழுது,”ஏய் ஓவரா சைட் அடிக்காதிங்கடி அவர் நமக்கு பிரதர் மாதிரி” என ஒரு பெண் கூறவும்,

“இவ்வளவு அழகா இருந்தா என்ன பண்றது ராசிக்காம இருக்க முடியலையே, அதுல என்ன தப்பு, நம்மளால ரசிக்க மட்டும் தான் முடியும் ” என்று அந்த பெண் சொன்னது தான் தாமதம் தோழியர் அனைவரும் கலகலத்து சிரித்தனர்.

அவர்களின் சிரிப்பை கண்ட ஆரி,”என்னாச்சு சிஸ்டர்ஸ் எதுவானாலும் சொல்லிட்டு சிரிச்சா நானும் சிரிப்பேனே” என்று சொல்லவும் பெண்கள் அனைவரும் மீண்டும் ஏதேதோ அவனிடம் சொல்லி சிரித்து கொண்டிருக்க,

‘என்னது இது, எல்லாரும் இவனை என்னமோ ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி வச்சுபேசிட்டுத் திரியுறாங்க. ஆனா நம்ம கண்ணுக்கு அப்படி எதுவும் தெரியலையே. அப்படி என்னதான் இருக்கு இவன்கிட்ட எல்லாரும் பேசுற அளவுக்கு’என முதல் முறையாக மனதிற்குள் எண்ணிய யாத்ராவின் கண்கள் ஆரியை முழுதாக அளவெடுக்க ஆரம்பித்தது.

 

பார்ப்போரின் மனதை அலைபாயவைக்கும் காற்றில் அலைபாயும் கருத்தடர்ந்த கேசம். அறிவையும்,ஆளுமையையும் பறைசாற்றும் அகன்ற நெற்றி. கன்னிப்பெண்களின் மனதை பற்றவைக்கும் அக்னி விழிகள். ஆண்களுக்கே தனி ஒரு கம்பீரத்தை தரும் அளவான,அழகான தாடியுடன் கூடிய மீசை. பாவையரின் மனம் மயக்கும் மந்திரப்புன்னகையை உதிர்க்கும் உதடுகள். திரண்ட புஜங்கள். அகன்ற தோள்கள். பெண்ணவளை சாய்த்து கொள்ள காத்திருக்கும் பரந்த மார்பு. முழங்கை வர மடக்கிவிடப்பட்ட முழுக்கை சட்டையில் அடங்கியிருந்த வலுவான கைகள். யாரையும் வீழ்த்தும் சதைப் பிடிப்பற்ற கம்பீரமான உடற்கட்டு. மொத்தத்தில் கம்பீரமான ஆண்மகனாக வீற்றிருந்தான் ஆரி அர்ஜுனன் .

ஆரியை விழிகளால் அளவெடுத்துக் கொண்டிருந்த யாத்ராவுக்கு என்ன தான் அவன் மீது கோபம் இருந்தாலும் அவனது கம்பீரமான அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னைமறந்து அவனை ரசித்தவள், ‘எவ்வளவு மேன்லியா இருக்கான்’ என்று என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள்.

 

உறவினருடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு கண்ணை தன்னவளின் மேலேயே வைத்திருந்த ஆரிக்கு தன்னவள் தன்னை இமைத்தட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

 

யாத்ரா ஆரியையே தன் விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருப்பதை கண்ட அவளது தோழியர் அவளை பார்த்து கேலியாக சிரித்து கொண்டு,

“போதும்டி சைட் அடிச்சது. இப்படி பாக்குற, நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வை” என கேலி செய்து அவள் எதிர் பார்க்காத நேரம் வேண்டுமென்றே அவளை பிடித்து ஆரியின் பக்கம் நகர்த்தி அவன் மீதே தள்ளி விட்டு சிரித்தனர்.

 

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத யாத்ரா, அவர்கள் தன்னை தள்ளி விட்டதில் அர்ஜுனனின் மீதே பூப்பந்தென மோதியவள், பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறி அவன் சட்டை மேல அழுத்தமாக தன் இதழை பதித்து விட்டாள்.

 

தன்னவளின் இதழ் தீண்டியது தன் சட்டையை தான் என்றாலும் தன்னவளிடம் இருந்து வந்த முதல் தீண்டலை சுகமாக ரசித்தவனின் உணர்வுகள் அவளது இதழ் பட்ட ஸ்பரிசத்தில் உயிர் பெற அவன் தான் மிகவும் சங்கடப்பட்டுப்போனான்.

 

தான் செய்த செயலில் அனைவரின் கேலியும் சிரிப்பும் மேலும் அதிகரிக்கவும், கூச்சத்தில் யாத்ராவின் முகம் செவ்வனமாய் சிவந்து விட்டது.

 

ஒரு முத்ததிற்கே போதையான அர்ஜுனனுக்கோ அவளது செவ்வானமென சிவந்த முகத்தைக் கண்டதும் அவனால் அவனது உணர்வுகளை சுத்தமாக அடக்க முடியவில்லை.

“என்ன இது இன்னைக்கு பார்த்து ரொம்ப டெம்ப்ட் பண்றா” என்று முணுமுணுத்தவன்,அவளது காதருகில் குனிந்து கிசுகிசுப்பாக,

“சத்தியமா என்னால முடியல, தனியா வா கொஞ்சம் பேசணும்”என்றான் .

அவளுக்கு பக்கென்று ஆனது,

“பேசணுமா நீங்களா ம்ஹூம் முடியாது” என யாத்ரா முறைத்துவிட்டு அவனை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நிற்க,

அவள் அருகே நெருங்கி வந்தவன், “அப்போ ரிங் போடும் பொழுது எல்லார் முன்னாடியும் ஏதாவது செஞ்சா என்னை திட்ட கூடாது, சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது” என மீண்டும் கிசுகிசுத்தான்.

 

கைகளில் மருதாணி இருந்ததால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் போகவும் யாருக்கும் தெரியாமல் அவனது காலில் நன்றாக தன் ஹீல்ஸ் பதியும்படி மிதித்து வைத்து விட்டாள்.

 

அவளது இந்த திடீர் செய்கையில் கத்த முடியாமல் வலியை அடக்கிக் கொண்டவன்,

“ஏய் என்னடி வேணும்ன்னே உசுப்பேத்திட்டு இருக்க நாளைக்கு நைட் இருக்கு டி உனக்கு” என ஒரு மாதிரி குரலில் ஆரி கூறவும், அரண்டு போனவள் அவனை விட்டு தள்ளி போக பார்க்க யாரும் அறியாமல் அவளது கரம் பிடித்தவன்,

“சத்தியமா சொல்றேன் கண்டிப்பா ரிங் போடும் பொழுது கிஸ் பண்ணுவேன்” என்று செய்தே தீருவேன் என்னும் பிடிவாதத்துடன் கூற, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

“இப்போ என்ன வேணும் ஆரி ஏன் படுத்துறீங்க” என கெஞ்சலுடன் கேட்க,

“ம்ம் உள்ள வா என்ன வேணும்ன்னு சொல்றேன்” என்றவன் தன் தலையை கோதியபடி முன்னே செல்ல, அவளுக்கு தான் சங்கடமாக போனது. போகவில்லை என்றால் சொன்னதை போல ஏதும் செய்து விட்டால் என்ன செய்வதென்று எண்ணியவள் தன் தோழி மோஹனாவிடம்,

“மச்சி வாஷ் ரூம் போயிட்டு வரேன்” என்று சொல்லவும் அவளை பார்த்து சிரித்த மோஹனா,” நீ அண்ணாவை பார்க்க தானே போற” என்று கேட்கவும் யாத்ரா அதிர்ந்து விழிக்க,

“அண்ணா பேசினதை கொஞ்சம் கேட்டுட்டேன் போ போ வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இப்போ நீ தான் ரொம்ப வேகமா இருக்க டி” என்றவள் யாத்ரா முறைக்கவும்,

“சரி சரி முறைக்காத யார்கிட்டையும் சொல்ல மாட்டேன் போ என் அண்ணன் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு” என்று மோஹனா கேலியாக சொல்லவும்,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை டி” என்ற யாத்ரா ,

“எல்லாம் இவனால வந்தது” என்று ஆரியை திட்டிக்கொண்டே அவனை தேடி செல்ல அப்பொழுது சட்டென்று அவளது கரத்தை பிடித்திழுத்த ஆரி மாடி படிக்கு கீழே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறைக்குள் அழைத்து சென்று கதவை சாற்றி அதில், தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றவன்   தன்னை கண்டு மிரண்டு விழித்தவளைக் பார்த்து ரசித்தபடி,

“என்னடி பொண்டாட்டி பயந்துட்டியா.”என கேலி செய்தவாறே நெருங்கவும் விலகியவள்,

“அங்கையே நில்லுங்க கிட்ட வந்தீங்க நான் போய்டுவேன்” என்று சொல்ல,

” ஆஹான் போ” என்றபடி அவளை நெருங்கி வர யாத்ராவோ,

“உங்களை பார்த்தா பேச கூப்பிட்டது போல இல்லை நான் போறேன்” என்றவள் கதவின் அருகே செல்லவும் அவள் அங்கிருந்து செல்ல முடியாது அவளது இடைபிடித்திழுத்து தடுத்தவன் அப்படியே தன்னுடன் நெருக்கி அணைத்துக்கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான் .

ஜன்னல் வழி வந்த மெல்லிய காற்று இவனின்  தேகம் தொட்டு குளிரூட்ட, அவனவளின்  ஆடை  தாண்டி வந்த வெப்பம் ஆணவனுக்கு காதல் தீயை மூட்ட, தன் இளமை தள்ளாட உலகம் மறந்து நின்றிருந்தான் ஆரி அர்ஜுனன். சில நொடிகள் கழித்து மெல்ல தன்னவளின்  விரிந்திருந்த கூந்தலை அவளது காதுக்கு பின்னால் ஒதுக்கியவன் அவளது காதில் தன் மூச்சு காற்றின் வெப்பம் பட,

“ரொம்ப நேரமா கண்ட்ரோல் பண்ணி பாக்குறேன் சத்தியமா முடியல டா மா” என்ற ஆரியின் ரகசிய குரலில், திகைத்து விறைத்து நின்றவள். அவனிடம் விலக எத்தனிக்க , அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டவன் தன் பிடியை இறுக்கி ,

“நோ நாட் நவ்” அவளது கழுத்தில்  தன் இதழை வைத்து உரசியபடி கிறக்கமாக கூறினான்.

அவளோ “இ நீட் டூ கோ அர்ஜுனன்” என கண்டிப்பான குரலில் கூற, அவளது அர்ஜுனன் என்ற விழிப்பில் தன் பிடியை தளர்த்தியவன், அவளை தான் பார்க்க திருப்பி நிறுத்தி,

“ஆரி சொல்லு விடுறேன்” என்றான் அதே கண்டிப்பான குரலில்.

“முடியாது! நீங்க கேட்டா நான் சொல்லனுமா, ஆண் ஆதிக்கம்! ஹ்ம்” என்றவள் ‘ஆண் ஆதிக்கம்’ என்று சொல்லும் பொழுது இன்னும் ஆக்ரோஷமாக சொல்ல, ஆரிக்கு சிரிப்பு தான் வந்தது.

“ஆரின்னு என் பேர் சொல்ல சொன்னா அது ஆண் ஆதிக்கமா” என்று சிரித்தவன்,

“ஆமா ஆண் ஆதிக்கவாதி தான் நான். ஆரி சொல்லு விடுறேன்” அவளது மென் இடையை தன் இரு கரங்களால் பற்றி தன் பக்கம் இழுத்தபடி சொல்ல, அவனது பிடியில் இருந்து விடுபட முனைத்தவள்,

“விடுங்க” என்றாள் தன் பல்லை கடித்தபடி, அவனோ மறுப்பாக தலையசைத்தவன்,

“ஆரி சொல்லு விடுறேன்” என்று உறுதியாக சொல்ல,

“நான் செத்தாலும் சொல்ல மாட்டேன் விடுங்க” என பட்டென்று கூறியவள் அவனது பிடி தளரவும் அவனிடம் இருந்து விலகி செல்ல,

நொந்து போன அர்ஜுனனுக்கு  அவனது கோபம் அவன் கொண்ட கட்டுப்பாட்டை உடைத்தெறிய எட்டி அவளை பிடித்து இழுத்தவன்,

” நானும் பார்த்துட்டே இருக்கேன் சின்ன பொண்ணுன்னு பார்த்தா ஓவரா பேசுற. என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற, அதென்னடி எப்ப பாரு செத்துருவேன் செத்துருவேன்னு என்ன வார்த்தை அதெல்லாம் இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை. அன்னைக்கே உன்னை வார்ன் பண்ணினேன் இனிமே இப்படி பேசவே நீ யோசிக்கணும்” என்றவன் யாத்ரா எதிர்பார்க்காத சமையத்தில் சட்டென்று குனிந்து அவளது அவளது உதடுகளை தன் இதழ் கொண்டு வன்மையாக சிறைபிடித்தான்.

தன்னிடம் இருந்து விடுபட திமிரியவளை அழகாக அடக்கிய அர்ஜுனன்  அவளது இதழ்களை மேலும் மேலும் திகட்ட திகட்ட சுவைத்தான். நொடிகள் கடக்க கடக்க அவள் உயிரையே தனக்குள் இழுப்பது போல அவளது அதரத்தை முரட்டுத்தனமாக ஆக்கிரமித்திருந்தான் அர்ஜுனன்  .

யாத்ராவால்  வலி பொறுக்க முடியாமல் போகவே கண்களில் இருந்து கண்ணீர் இறங்க, அவளது கண்ணீரை கண்டதும் தன்னிடம் இருந்து அவளை விலகி நிறுத்தியவனுக்கு தன்னவள் அழுவதை பார்க்க முடியவில்லை போலும், கோபத்தில் தான் செய்த தவறை எண்ணி வருந்தியவன்தன் கண்களை அழுத்தமாக மூடி திறந்து மெல்ல அவளை நெருங்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டவன் மெதுவாக கேசத்தை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினான். அவளிடம் இருந்து விசும்பல் இன்னும் அதிகமானது.

“அழாத சாரி கண்ணம்மா ப்ளீஸ், லைஃப் ஸ்டார்ட் பண்ண போறோம் இப்போ போய்  நீ அப்படி பேசியிருக்க கூடாதுல” ஏங்கி ஏங்கி அழுபவளை பார்க்க பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“யாத்ரா என்னை பாரு என்னை பாரு” என்றவன் அவள் பார்த்ததும்,

“சாரி” என மனதார வினவியவன், அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை தன் இதழ் கொண்டு  ஒற்றியெடுத்த அர்ஜுனன் அவளது இதழின் ஓரத்தில் துளிர்த்திருந்த ரத்தத்தை பார்த்து தன்னை தானே கடிந்து கொண்டவன், மீண்டும்  தன்னவளது இதழை தன் அதரம் கொண்டு சிறைபிடித்தான். வன்மையாக அல்ல பூவினும் மென்மையாக தன்னவளின் செவ்விதழை ஆட்கொண்டவன், தான் கொடுத்த காயத்தை தன் மென் முத்தத்தத்தாலே சரி செய்தான்.  சிறிது நேரம் கழித்து அவளை தன்னிடம் இருந்து விலக்கி தன் தோளோடு அணைத்து பிடித்து கொண்டவன், அவளது வலது கரத்தை மென்மையாக பிடித்து,

“என் கோபத்தை தூண்டுற மாதிரி இனி எப்பவுமே பேசாத யாத்ரா ப்ளீஸ்” என ஒருவித வருத்தத்துடன்  “மை ஸ்வீட் ஹனி” எனக்கூறி அவளின்  இதழோரம் வருடியபடி  அவளது உச்சந்தலையில்  முத்தமிட்டவன். மீண்டும் தன்னவளை தன் நெஞ்சோடு அணைத்தபடி தன் கண்களை மூடி கொண்டு நிற்க, யாத்ராவின் மனம் எதையோ எண்ணி ஊமையாக அழுதது.

ஐயர் நல்ல முகூர்த்த நேரத்தில் மணவோலையை படிக்க அனைவரின் முன்னிலையிலும்,

சாவித்ரி ஆரியிடம்,

“மாப்பிள்ளை… இந்தாங்க அவ விரல்ல இந்த மோதிரத்தை போடுங்க “என மோதிரத்தை கொடுக்க,

“குடுங்க அத்தை” என மோதிரத்தை வாங்கியவன் யாத்ராவின் கரத்தில் மோதிரத்தை அணுவிக்க, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இன்றி மறந்தும் கூட புன்னகைக்காது எந்திரம் போல அமர்ந்திருந்தவளை பார்த்து சாவித்ரிக்கு தான் சங்கடமாக இருந்தது. பின் ஜானகி தான் கொண்டு வந்த மோதிரத்தை யாத்ராவிடம் கொடுக்க, மறுக்காமல் வாங்கியவள், அவனது கரத்தை பட்டும் படாமலும் பற்றி கடமைக்காக மோதிரம் அணிவிக்க ஆரி யாத்ராவின் என்கேஜ்மென்ட் சிறப்பாக முடிய, திருமண நாளும் அழகாக சீக்கிரமே விடிந்தது. ஆனால் விடிய விடிய எதை நினைத்தோ உறங்காமல் விழித்திருந்த யாத்ரா  அப்பொழுது தான் தூங்க ஆரம்பிக்க அவளை எழுப்பி கிளப்புவதற்குள் சாவித்ரிக்கு தான் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஆனால் அர்ஜுனனோ சீக்கிரமே எழுந்து குளித்து முடித்திருக்க , அதை கண்ட மாறன்,

 

“டேய் முஹுர்த்தத்துக்கு இன்னும் டைம் இருக்கு டா உன் ஆர்வத்துக்கு ஒரு அளவில்லையாடா..???”என மாறன் சத்தமாக  சிரித்து ஆரியின் கரத்தால் நான்கு அடியையும் இலவசமாக பெற்று கொண்டான் .

 

“ஏய் அம்மு என்ன இது  ஒழுங்கா நில்லு” என தூங்கி வழிந்த யாத்ராவின் தலையில் நறுக்கென்று கொட்டிய சாவித்ரி,  தங்க ஜரிகையில் நெய்த பிங்க் நிற பட்டுப்புடவையை மடிப்பெடுத்து அழகாக கட்டி விட்டார்.

 

பின்பு யாத்ராவை அமர வைத்து வந்திருந்த பியூட்டி பார்லர் பெண் சிகை அலங்காரம் செய்து விடவும், சாவித்ரி யாத்ராக்கென்று மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த நகைகளை கொண்டு வந்து கொடுக்க,

 

நகை பெட்டியை திறந்து பார்த்த யாத்ரா  அதில் இருந்த நகைகள் அனைத்தையும் ஒரு கணம் பார்த்துவிட்டு தன் தாயிடம் ,

“மாம்ஸ்  நீங்க எனக்கு வாங்கிக்கொடுத்தது இது இல்லையே !”எனக் கேட்க அவரோ,

 

“இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து உனக்காக வாங்கிட்டு வந்தது … ஒவ்வொன்னும் உனக்காக பார்த்து பார்த்து வாங்கிருக்காங்க உன் மேல அவங்களுக்கு அவ்வளவு பிரியம் டா … எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அர்ஜுனன் தம்பி நகை பணம்ன்னு எதுவும் வாங்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். அவரு கிடைக்க நீ நிஜமாவே கொடுத்து வச்சிருக்கணும்டா  “என பூரிப்பாக சொல்ல,

” உங்களை விட வசதியில நாங்க ஒசத்தின்னு அவங்க சொல்லாம சொல்லிருக்காங்க அது புரியாம நீங்க வேற ” என யாத்ரா சலித்துக்கொள்ள .

” ஏய் ஏண்டி நீ இப்படி இருக்க … எல்லா விஷயத்துலயும் குறை கண்டுபுடிச்சிட்டே இருக்க … கல்யாண பொண்ணு நீ கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கியா மூஞ்சை பாரு” என்று சாவித்ரி கோபம்கொள்ள,

” நான் வேண்டாம்ன்னு சொல்றதை எல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் சிரிக்கல வைக்கலைன்னு சொல்ல வேண்டியது , இவன் வேண்டாம்ன்னு சொன்னேன்  அதை இதை பேசி கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க … இதுல நான் சிரிக்க வேற செய்யணுமாம் … அதெல்லாம் முடியாது ” என்றவளின் தலையின் நங்கென்று கொட்டியவர்,

” பிச்சிருவேன் அதென்ன அவன் இவன்னு மரியாதையை இல்லாம ” என திட்டியவரை பார்த்து முறைத்தவள் சிடு சிடுப்புடனே அமர்ந்திருந்தாள் .

 

வெளியில் அவள் அர்ஜுனனை கூறினாலும் யாத்ராவுக்கு ஒரு கணம் மலைப்பாக தான் இருந்தது .ஏனெனில் இந்த மாதிரி நிகழ்வையெல்லாம் இதுவரை படங்களிலும்,புத்தகங்களிலும் மட்டுமே பார்த்து படித்திருந்தவளுக்கு …தனக்காகவே ஒருவன் இவ்வளவு செய்யவும், ஒரு நொடி தான் இதற்கெல்லாம் தகுதியானவள்தானா என்று  தோன்றியது .

 

ஆனால் மறுகணமே அவன் மீது அவள் கொண்டு வெறுப்பில் அத்தனை நகைகளையும் தூக்கி எறிந்து விடலாம் என்று தான் அவள் எண்ணினாள். அதன் பின் தன் பெற்றோரை காயப்படுத்த விரும்பாதவள் விருப்பமே இல்லாமல் அவற்றை அணிந்து கொண்டாள்.

 

விருப்பமே இல்லாமல் தயாராகி இருந்தாலும் மணக்கோலத்தில் பெண்களுக்கே உரிய இயற்கையான அழகுடன் செயற்கை அழகும் இணைந்துகொள்ள வேறு என்ன வேண்டும் …? விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்த தேவதையை போல அர்ஜுனனை  குளிர வைக்கும் குளிர் நிலவாய் படியிறங்கி வந்தாள் அவனது யாத்ரா .

வெள்ளை நிற பட்டு வேஷ்டி மற்றும் சட்டையில் ஆண்மையின் திருவுளமாய் கம்பீரத்துடன்…. தன்னவளை பற்றிய சிந்தனையில் மணமகனுக்கே உரிய எதிர்பார்ப்புடன் அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தான்  ஆரி அர்ஜுனன்  .

பட்டு புடவையில் நகைகள் மேனியை அலங்கரிக்க மணப்பெண்ணுக்குரிய அழகுடன் தோழியர் சூழ நடந்து வந்தாள் யாத்ரா.

யாத்ராவின்  வரவை அடிக்கடி  எதிர் நோக்கியிருந்த ஆரியின் விழிகள் அவளை  கண்டதும் அவனது இதயம் ஒரு நொடி துடிக்க மறக்க,

அந்தநேரம் பார்த்து மாறனின் அலைபேசி சினுங்க அட்டென்ட் செய்தவன் ,

” சரி விட்றாதீங்க நான் உடனே வரேன் ” என்றவன் அர்ஜுனனின்  காதருகில் வந்து  விஷயத்தை கூற, அப்பொழுது அர்ஜுனனின் முகம்  கடுகடுவென மாறியதை யாரும் கவனிக்க வில்லை .

” டேய் ஓவரா வழியாத துடைச்சிக்கோ ” என்று மாறன் நண்பனின் மனதை மாற்றும் பொருட்டு லேசாக சீண்டிவிட்டு அங்கிருந்து செல்ல, தன்னை சமன் செய்த அர்ஜுனன் யாத்ராவை மணக்க போகும் ஆவலில் ஒருவித எதிர்பார்ப்புடன் அமர்த்திருந்தவன், முகூர்த்த நேரம் நெருங்கவும் ஐயர் கொடுத்த திருமாங்கல்யத்தை வாங்கி காதலாட யாத்ராவின் கழுத்தில் கட்டினான்.

முதல் இரெண்டு முடிச்சை போட்டவன் மூன்றாவது முடிச்சையும் யாருக்கும் விட்டு கொடுக்காமல் தானே போட்டு பிறர் கவனம் கவராது அவளது செவி மடலை தன் வார்த்தைகள் உரச,

“ஐ லவ் யூ கண்ணம்மா”என ஆத்மார்த்தமான குரலில் தன் காதலை உரைத்து விட்டு திரும்பி நேராக அமர்ந்தான்.

வெறும் வார்த்தைகள் உணர்வுகளை தூண்டுமா? தேகத்தை சிலிர்க்கவைக்குமா? வாடிய மனதை துளிர்க்க செய்யுமா என்ன? இதோ இங்கே நடக்கிறதே ஆரி கூறிய  ‘ஐ லவ் யு கண்ணம்மா’ என்ற நான்கே வார்த்தைகள் மரித்த உணர்வுகளை தூண்டி, வாடிய மனதை துளிர்க்க செய்து தேகத்தை சிலிர்க்க வைக்கின்றதே.

ஆணவனின் வார்த்தைகள் செவி மடலை உரசவும் பெண்ணவளுக்கு முதுகுத்தண்டு சிலிர்த்தது கூடவே அவனது குரலில் தெரிந்த மென்மை அவளுக்குள் ஏதேதோ செய்தது . அவனின் தீண்டல் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. ஆனால் அவனது வார்த்தைகள் எதையோ அவளுக்கு வெளிப்படுத்த அது யாத்ராவின் மனதில் ஒரு வித கலவையான உணர்வை தோற்றுவித்தது. ஆனால் அதெல்லாம் சில நொடிகளுக்கு தான் பின்பு எதையோ எண்ணி மீண்டும் அர்ஜுனன் மீது உள்ள வெறுப்பை இழுத்து பிடித்துக்கொண்டவள் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

அனைத்து சடங்குகளும்  முடிந்து பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது யாத்ராவின் கண்களில் கண்ணீர் திரண்டு கொண்டு வந்தது.

இப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் நடக்கவே நடக்காது என்றிருந்த யாத்ராவுக்கு இப்போது தன் வீட்டினரை பிரிய வேண்டுமே என்ற நினைப்பு கவலையை கொடுத்தது .

தன்னவளின் மனநிலையை உணரந்தவனாக அர்ஜுனன்  அவளது கரம் பிடித்து தைரியம் கூற, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது .

மகளை தனியாக அழைத்த சாவித்ரி அவளின் தலையை வருடி,

“உன்னை பாரமா நினைச்சு நாங்க கல்யாணம் பண்ணிக் குடுக்குறோம்ன்னு தயவு செஞ்சு தப்பா நினைக்காத பா …. நீ எங்களுக்கு பாரம் கிடையாது எங்களுக்கு கிடைச்ச வரம் . எங்க காலத்துக்குப் பிறகு உனக்கு பாதுகாப்பான ஒரு நல்ல துணை அவசியம்…. அந்த பாதுகாப்பை நம்ம மாப்பிள்ளை அர்ஜுனனை தவிர வேற யாரும் கொடுக்க முடியாது. அதை நீ புரிஞ்சிக்கணும்” என மகள் தன்னை புரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற தவிப்பில் தன் மனதில் உள்ளதை கூற, அவள் கண்ணீர் வடித்தாள் .

அப்பொழுது அங்கே வந்த அர்ஜுனன்,

 “கவலைப்படாத யாத்ரா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால உன் லைஃப்ல எதுவும் பெருசா  மாறிட போறதில்ல. நீ நீயாத்தான் இருக்கப் போற.”என்று வெளிப்படையாகவே தன் மனைவியை தேற்ற,

ஆனால் அதையெல்லாம் தன் கருத்தில் கொள்ளாத யாத்ரா அர்ஜுனனின்   பக்கம் கூட திரும்பாமல் அவனை அலட்சியப்படுத்தினாள்.

அதைக் கண்டு சாவித்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது,

” நல்ல வாழ்க்கைய இவளே கெடுத்துவிடுவா போலையே ” என மனதிற்குள் பயந்தவர் அவளை ஓரமாக அழைத்து,

 “என்னடி…நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்…மாப்பிள்ளைக்கிட்ட மூஞ்ச காட்டிட்டே இருக்க … சரி இல்லை பார்த்துக்கோ ” என்றவர்,

” மாப்பிள்ளை மனம் கோணாம நடந்துக்கணும், அதை விட்டுட்டு கண்டதையும் நினைச்சிட்டு இருந்த அவ்வளவு தான் சொல்லிட்டேன் ஒழுங்கா  அவர் கூட இணக்கமா வாழ்ந்து சீக்கிரமா குழந்தை பெத்துகிற வழிய பாரு ” என்று சாவித்ரி கூற யாத்ராவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது .

” அம்மா ” என அதிர்ந்தவள் கலவரத்துடன் பார்க்க .

” யாத்து  புடிச்சாலும் புடிக்காட்டாலும் நீ வாழ்ந்து தான் ஆகணும் என் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி நீ நடந்துக்க கூடாது ” என்ற சாவித்ரி மறைமுகமாய் மகளுக்கு நிதர்சனத்தை எடுத்து கூறினார் .

அதன் பின்பு யாத்ராவின் முகம் இருளடைந்து காணப்பட வைத்தீஸ்வரனும், ஜானகியும் தங்களின் மருமகளை ஆறுதல் படுத்தினர் .

இப்படியே ஆரி அர்ஜுனன் மற்றும் யாத்ராவின் திருமணம் இனிதாய் அன்றைக்குரிய கொண்டாட்டத்திலும்,பரபரப்பிலும் நல்லபடியாக முடிந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!