Vaanavil – 3

1eaafb4f4592c45fa474c92c341fa8cb-c03c8653

Vaanavil – 3

அத்தியாயம் – 3

இரவு வீட்டிற்கு வந்த மகளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு அவளுக்கு சொல்லி கொடுக்க பக்கத்தில் அமர்ந்த பரிமளம், “மகிழ் நீ இப்போ எடுத்திருக்கும் குரூப் ஆர்ட்ஸ் வித் கம்பியூட்டர் சயின்ஸ். இதை படிக்கும் பொழுதே நீ மற்ற கம்பியூட்டர் கோர்ஸ் சேர்த்து படிச்சா நல்லது..” என்றார்.

“சரிம்மா” என்றவள் எழுதும் வேலையைத் தொடர, “நாளையிலிருந்து உனக்கு இங்கே யோகா அண்ட் கராத்தே கிளாஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்று சொல்ல அவள்  வகுப்புப் பாடத்தை முடித்துவிட்டு படுக்கையில் சென்று படுத்தாள்.

பரிமளா அவளின் முகத்தையே கேள்வியாக நோக்கிட, “மார்னிங் சீக்கிரம் எழுப்பி விடுங்க அம்மா. நான் கராத்தே கிளாஸ் அண்ட் யோகா கிளாஸ் இரண்டும் போறேன்” என்று கூறிவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்.

மறுநாளிலிருந்து யோகா, கராத்தே மற்றும் ஸ்விம்மிங் மூன்றுமே கற்றுக்கொண்டாள் மகிழ்வதனி. ஒருப்பக்கம் கார்குழலி தன் விவசாயத்தை கண்ணும் கருத்துமாகப் பார்க்க இன்னொருபுறம் இவள் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

அன்று காலை அதே படித்துறைக்கு வந்த மகிழ் தன்னையும் அறியாமல் சிலநிமிடம் அங்கே சோகத்துடன் அமர்ந்தாள். அவன் சொன்ன வார்த்தைகள் இன்றும் அவளின் காதோரம் ஒலிக்க பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

மகிழ்வதனி கல்லூரியில் சேர்ந்தபிறகு ஆளே மாறிபோனாள். படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் முதல் பெண்ணாக வருபவளுக்கு கல்லூரியில் நட்பு பட்டாளம் அமையவில்லை. இன்றுவரை அவளுக்கு தோழி என்றாலே அது கார்குழலி மட்டும் தான்.

அவள் சுற்றி உள்ளவர்களால் தனிமைபடுத்தபட்டாள். ஆனால் அதை உணராமல் அவள் எப்போதும் புன்னகையுடன் வலம் வருவது எல்லோரின் மனதிலும் கேள்வியை எழுப்பியது.

மதியம் பங்குனி மாத வெளியில் கொளுத்தி கொண்டிருக்க மரத்தின் நிழலில் தஞ்சமடைந்த மகிழ்வதனி அசைன்மென்ட் எழுதும் ஈடுப்பட்டிருந்தாள். இதமான காற்று அவளை தழுவிச்செல்ல சுருள் முடி அவளின் முகத்தை மறைக்க அதை காதோரம் ஒதுக்கிவிட்டு தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

அப்போது அவளின் அருகே யாரு அமரும் ஆராவாரம் கேட்டு பட்டென்று நிமிர்ந்து பார்க்க அவன் தான்  அவளின் அருகே அமர்ந்திருந்தான். அலையலையாக கேசமும், அதற்கேற்ற திரண்ட தோள்களும், அகன்ற மார்பு என்று ரோமானிய சிலைபோல இருந்தவனின் மீதிருந்து அவளால் பார்வையை திருப்ப முடியவில்லை.

மெரூன் கலர் ஷர்ட், சாண்டில் நிற பெண்டில் ஆளை வீழ்த்தும் பார்வையுடன் அமர்ந்திருந்தவனின் முகம் பளிச்சென்று இருக்க அவனின் விழிகளோ அவளின் மீதே நிலைத்தது.

அவள் அவனைக் கண்டதும் உதட்டை சுளித்துகொண்டு மீண்டும் தன் வேலையில் பார்வையை திருப்பிவிட அவனின் முகம் வாடிப்போனது. எப்போதும் தன்னைக் கண்டவுடன் மலரும் அவளின் முகம்  இன்று என்னோ கோபத்தை பிரதிபலிக்கிறதே என்ன காரணமாக இருக்கும் என்ற சிந்தனையுடன் அமைதியாக இருந்தான்.

“என்னாலே பேசாம இருக்கிறவ. என்ன சங்கதின்னு சொல்லிட்டு மொகத்த திருப்புனா என்னன்னு எனக்கு எப்படிவ தெரியும்” என்று அவன் கேட்க அவள் சட்டென்று நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

அவளின் கோபத்திற்கு காரணம் புரியாமல், “ஏட்டி இப்போ எதுக்கு என்ன முறக்கிரவ” என்றான்.

“யாரு எக்கேடு கெட்டா எனக்குனென்னன்னு நீனு என்னை தேடி வந்திருவ. எனக்கும் உம்மோடு பேசாம பொழுது போவாது. பொறவு என்னை பாக்கிரவுக பைத்தியக்காரின்னு சொல்லுவாக” வெறுப்புடன் கூற அவன் முற்றிலும் குழம்பிப் போனான்.  

தன்னால் அவளுக்கொரு அவப்பெயர் வருமா என்ற சிந்தனையுடன் அவன் அவளைக் கேள்வியாக நோக்கினான்.

“ஏலேய் உம்மோட பேசக்கூடாதுன்னு நான் போடும் வேலியெல்லாம் உன்னக் கண்டதும் மறந்தே போவுது. நீனும், நானும் பேசறத கண்டு மனோகரன் மவ தனியா பேசிட்டு திரியறான்னு ஊருக்குள் புரளியாக கிளம்புதுலே” வதனிக்கு வருத்தத்தில் முகம் வாடியது.

அவளை அருகிழுத்து மார்புடன் சேர்த்தணைக்க, “என்ன.. ஊருக்குள்ள பைத்தியம்னு சொல்றாவ. குழலி தவிர்த்து மத்தவுக யாருமே எம்மோடு பேச மாட்டேங்கிராவ” அவனின் மார்பில் முகம் புதைக்க கூந்தலை வருடிவிட்டான்.

அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் சிலநொடி திகைத்தவன் பிறகு, “வதனி..” அதட்டலில் சட்டென்று நிமிர்ந்து அவனை கேள்வியாக நோக்கினாள்.

“எட்டி உம்ம எனக்கு சுத்தமா பிடிக்கலடி” என்றான் கோபத்தில் முகம் சிவக்க.

“உமக்கும் பிடிக்கலயோ சரிதான் பைத்தியக்காரியை யாருக்குதாம்ல பிடிக்கும்? நீனு இனி வதனின்னு வந்து நின்ன உம்மோட பேச மாட்டேன் போலே” கலங்கிய கண்ணீரோடு அவனைப் பிடித்து தள்ளினாள்.

அவளின் வருத்தம் அவனின் மனதை என்னவோ செய்ய, “ஒவ்வொரு நாளும் நானா தேடிவர நீதாம்லே காரணம்.. நானும் உன்ன வெறுத்தா நீ தாங்க மட்டாலே. இது நமக்கான நேரம்டி. யாரு என்ன சொன்னாலும் இப்படிதான்  கண்ணைக் கசக்குவியோ?” என்று அதட்டலில் அவளுக்கு வாயடைத்துப் போனது  

“ஊருக்குள்ள அவனவன்  பொழப்பை பாக்கவே நேரமில்லாமல் கிடக்கிறாவ. அவியளுக்கு உம்ம பேச எந்த உரிமையும் இல்லவ. ஒன்னு மட்டும் சொல்லுதேன் மனசுல ஆழமா பதிய வச்சுக்கோ.நீயே என்னை போன்னு சொன்னாலும் நான் போவ மாட்டேல்ல. ஏட்டி என்ன நான் சொல்லுது விளங்குதா?” அவனின் பாசம்கண்டு கண்ணைக் கரித்துகொண்டு வந்தது.

அவனின் மடியில் படுத்து கதறி அழுக, “நீனு உன் விருப்பபடி இரு. நான் சொல்லுத கேட்காம மறுபடியும் அவிய அதச் சொன்னவ. இவிய சொன்னவன்னு வந்தா பொறவு தெரியும் நானு யாருன்னு” என்றதும் நிமிர்ந்தவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் யாருமே இல்லை. அவள் அங்கே அமர்ந்திருப்பது யாரின் கண்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் தெரியாது. செங்கொன்றை மரத்தின் நிழலில் அவள் அமர்ந்திருக்க அவளின் பின்னோடு பசுமையாக வளர்ந்திருந்த மரங்கள் அவளுக்கு அரணாக அமைந்தது.

யாரோ வரும் காலடி ஓசைக்கேட்டு சட்டென்று அவனின் முகம் மாயமாக மறந்தது. மித்ரா வந்து பார்க்கும்போது நோட்டில் முகம் புதைத்து குலுங்கி அழுதவளைக் கண்டு, “ஏட்டி என்ன இங்கன உட்காந்து அழுவறவ” அவளை உலுக்கினாள்.

அவளின் குரல்கேட்டு எழுந்த வதனி திருதிருவென்று விழிக்க தோழிக்கு பின்னோடு, “நான் போயிட்டு பொறவு வாரேன்” சைகையில் சொல்ல கண்ணால் சரியென்றாள்.

தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பவளை மார்க்கமாக பார்த்த மித்ரா, “நீ மொத எந்திருச்சு வாலே..” அவளை இழுத்துச் சென்றுவிட்டாள். மறுநாள் காலை வழக்கம்போல தன் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு கிளம்பிய வதனியை கிளம்ப விடாமல் வழியை மறித்து நின்றார் பரிமளா.

தாயை கேள்வியாக நோக்கியவளிடம், “நேத்து மித்ரா சொன்னதக்கேட்டு எம் மனசு கிடந்து அடிச்சுகிதுவ. கருவாப்புள்ள கோத்தாட்டம் ஒத்த புள்ளய வச்சுருக்கேன். ஊராரோட ஏச்சும், பேச்சும் கேட்டு பெத்த வயிறு எரியுதுலே. உமக்கு என்ன பிரச்சனைன்னு உண்மைய சொல்லுதியா..” என்றார்.

“ஊரு ஆயிரம் சொன்னாலும் நீங்க ஏன் நம்பறீய. நான் சொல்லுதேன் இல்ல.. எனக்கு ஒண்ணுமில்ல..” என்றவள் கேலியுடன் கூற தாயின் மனம் நிம்மதியடைந்தது.

“சரிம்மா நீனு சொன்ன பொறவு எனக்கென்ன கவலை. இந்தா கேசரியை குழலி வூட்டுல கொடுத்துட்டு வாழ்த்து சொன்னேன்னு சொல்லுவ. இன்னைக்கு காலேஜ் போக வேணாம்லே. குழலியை அழச்சிட்டு வெளிய போயிட்டு வாலே” என்று சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்தாள் சின்னவள்.

சிறிதுநேரத்தில் அவள் கார்குழலியின் வீட்டை சென்றடைய, “ஏலே சரவணா வாழ தாரு பத்திரம்லே. நீனு கொஞ்சம் சூதமான வேலய பாருவே” என்றவளின் குரல் கேட்டு வதனி திரும்பிப் பார்க்க வாழை தோப்பின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தாள்.

“என்னவே காலங்காத்தால அவன இந்த விரட்டு விரட்டிகிட்டு கிடக்குறவ” வதனி வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுத்தாள்.

அவளைக் கண்டவுடன் முகம் மலர, “ஏட்டி உம்ம காலேஜிக்கு போவ சொன்ன வயக்காட்டில் என்ன பண்ணிட்டு இருக்கிறவ” என்றாள் அதட்டலோடு.

“ம்ஹும்.. அடியே வதனி உம்ம பாக்காம மாமனால இருக்க முடியல.. உம்ம பாக்க வயக்காட்டு ஓரம் காத்துகேடக்கேன் சீக்கிரம் வாலேன்னு காத்தாட சேதி சொன்னவ.. ஆயித்த மவனைத் தேடி வந்தா எம்மோட ஆருயிர் தோழியில்ல வழிய மறிச்சு நிக்கிற.. பொறவு நானென்ன செய்ய” என்று சலித்துக்கொள்ள குழலி தன்னையும் மீறி வாய்விட்டு சிரித்தாள்.

“எடியே உமக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்திதாம்லே.. இந்த வாய் மட்டும் இல்ல உம்ம ஊருக்கு யாரும் மதிக்க மாட்டாக” என்றவளின் கையில் ஒரு துணிப்பையை திணித்து, “இந்த இந்த கவரில் இருக்கிற துணியை மாத்திட்டு சீக்கிரம் வாடி” என்றாள்.

“இப்போ என்ன வாங்கிட்டு வந்திருக்கிறவ” என்ற கேள்வியோடு கார்குழலி அவளை முறைக்க அவளும் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு சளைக்காமல் அவளின் பார்வையை எதிர்கொண்டாள்.

“இனி உம்மோட பேசி பயனில்ல. இந்த சரவணா என்ன பண்றான்னு கொஞ்சம் கவனிவ” கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று மறைய மகிழ் இறங்கி தோப்புக்குள் சென்றாள்.

“என்னலே சரவணா இன்னைக்கு எதுக்கு வாழை மரத்தாரோட போராடிட்டு கிடக்குறா.. ஆமா என்ன சங்கதின்னு தெளிவா சொல்லுவ முடிஞ்சா நானும் ஹெல்ப் பண்ணுவேன்ல” என்றாள்.

“வாங்க மகிழக்கா” என்றான் சரவணன் மலர்ந்த முகமாகவே.

“எமக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட பணம் வேணும்னு சொன்ன சமயத்திலநம்ம வெள்ளத்துரை அண்ணா பேத்தி சடங்குக்கு கட்ட இரண்டு வாழைத்தாரு  கேட்டு வந்தாப்ல. பொறவு என்ன அக்கா பணத்த வாங்கி எட்ட கொடுத்து கட்ட சொல்லிடுச்சு. நாளைக்கு சடங்கு அதன் தாரை வெட்டிக்கு இருக்கோம்” நிலவரத்தை விவரமாக விளக்கினான்.

ஒரு ஏக்கர் நிலமும், வீடும் தான் என்பதை நன்கு அறிந்த கார்குழலி விவசாயத்தில் அறிவாளியாக இருந்தாள். ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று மாதத்தில் அறுவடை செய்ய கூடிய சம்பா, வாழை மரம் அவளின் வயலுக்கு பாதுகாப்பாக இருக்க தென்னையும் நட்டு இந்த நான்கு ஆண்டில் நன்றாக வளர்த்தி இருந்தாள்.

பின்னாடி கிடக்கும் இடம் சும்மா இருக்குமே என்று சிந்தித்து அங்கே பூச்செடிகளும், கத்திரிக்காய், தக்காளி தோட்டத்தையும் போட்டுவிட்டாள்.

“சரித்தான் உம் அக்காளுக்கு அறிவு அதிகம்லே. நீங்க மூவரும் உலகம்னு வாழ்றாலே. நீயும் சீக்கிரம் படிச்சு வேலைய வாங்குலே” என்றதும் சரியென்று தலையசைத்தான்.

அதற்குள் அனிதா கையில் மோருடன் அங்கே வர, “நான் சொன்னதை செய்யாம இதை செய்துட்டு இருக்காளா?” என்று கேட்டுகொண்டே அதை வாங்கி குடித்துவிட்டு,

“இந்த அக்கா பிறந்தநாளுக்கு அம்மா கேசரி கொடுத்து அனுப்புனவ.. நீயும், காயூவும் நல்ல சாப்பிடுங்க” என்றவளிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, சரவணாவிடம் பக்கம் திரும்பி அவனின் படிப்பை பற்றி விசாரித்தாள்.

அடுத்து அதற்கு தேவையான மேல்படிப்பு என்னவென்று எல்லாம் கூறியவள், “என்னைக்கும் அவ இங்கனயே இருப்பான்னு நினைக்காம சீக்கிரம் தலையெடுக்க பாரு சரவணா. நீனுதான் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்து வைக்கோணும்” அவள் மனதிலிருந்த விஷயத்தை நாசுக்காக கூறினாள்.

அவன் சிறியவன் என்றபோதும் அவனின் மனதில் பொறுப்பு என்ற பயிரை நேரம் பார்த்து விதைத்த மகிழை புன்னகையுடன் பார்த்தான் சரவணன்.

அவனின் மனமோ, ‘உங்க வார்த்தைக்காகவே நான் சீக்கிரம் நல்ல படிச்சு எங்க அக்காவை நல்ல இடத்தில் கட்டிகொடுப்பேன்’ என்று உறுதி எடுத்தான். அதே நேரத்தில் மகிழ் கையில் கொடுத்த கவரைப் பிரித்து பார்க்க அடர் பச்சை நிறத்தில் சேலை அருமையாக இருந்தது. அவள் அந்த சேலையை உடுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தாள்.

“சரிடா சரவணா. நாங்க ரெண்டுபேரும் குற்றால கைலாச நாதர் கோவிலுக்கு போயிட்டு சாயந்திரம் போலத்தான் வருவோம்லே. அதுவரை அனிதா, காயத்ரியை பத்திரமா பார்த்துக்கோ” என்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

அன்று கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு அங்கிருந்த தூணின் அருகே அமர்ந்த மகிழ், “இந்தா உம்மோட கடைசி செமஸ்டர் ஹால் டிக்கெட். டேட் நல்ல பார்த்துக்கோ. டைம்க்கு வந்து எக்ஸாம் எழுதற வழிய பாரு” தோழியிடம் ஹால் டிக்கெட்டை கொடுத்தாள்.

அவள் அதை சிந்தனையுடன் பார்க்க, “விவசாய பயிர் கண்காட்சி மதுரையில நடக்குதுன்னு சொன்னவ. நம்ம இருவரும் சேர்ந்து போய் கலந்துக்கலாம். விதை, உரம் பத்தி கொஞ்சம் தெளிவு கிடைக்கும்லே” தனக்காக யோசிக்கும் தன் தோழியை இமைக்கமறந்து பார்த்தாள்  கார்குழலி.

“எனக்காக இம்புட்டு செய்யறவ. ஏட்டி உமக்குன்னு இந்நாள்வர எதுவுமே செய்யலையே” என்றவளை கனிவுடன் நோக்கியவளின் பார்வையில் பாசம்  சுடரொளி வீசியது.

“உம் தம்பி, தங்கைய யோசிக்க நீனு இருக்கிற.. உன்னைய பத்தி யோசிக்க நான் இருக்கேன். அவிய மூணுபேரும் நீனு சொல்றத கேட்டு நடக்குறவ. நாளைக்கு உம் தம்பிக்கு ஒரு வேலை கிடச்சா அவன் வைப்பதுதான் சட்டம்னு ஆகிடும். தங்கச்சி ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணி போன பொறவு புகுந்த வூட்டுக்காக உம்ம தூக்கி எறிந்து பேசுவாக” என்று சொல்ல அவளும் ஒப்புதலாய் தலையசைத்தாள்.

“உன் சொத்தைக் கண்டு கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பேரு வருவான். உம் மனசைப் புரிஞ்சிட்டு நேசிக்க ஒரு பைய வரமாட்டான். அப்போ போக வழி தெரியாம விழிச்சிட்டு நிக்கும்போது படிக்காம விட்டுட்டோமேன்னு நினைக்க கூடாதுல. பொண்ணுகளுக்கு பாதுகாப்பு அவ படிக்கிற படிப்புதாம்லே” நிதர்சனமான பேச்சில் இருந்த உண்மை அவளை யோசிக்க வைத்தது. 

வதனி முகத்தில் மறைந்த தன் தாய் முகம் கண்ட கார்குழலி, “கடலில் விழுந்தவன் உயிர் தப்பிக்க மரக்கட்டையை பிடிச்சுட்டு நீந்தி வரப்புல, உன் நட்புகூட என்னய கரைசேர்க்க நினைக்குதுவ” என்றாள் அவளின் கைகளைப் பிடித்தபடி.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக, “நான் எம்.பி.ஏ படிக்க போறேன்” என்றதும் கார்குழலி முகம்  மலர, “வாழ்த்துகள்” என்றாள்.

அவளுக்கும் சேர்ந்து அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்து வலுக்கட்டாயமாக கையெழுத்து போட சொல்ல, “எட்டி பேருக்கு பின்னாடி ஒத்த டிகிரி இருந்தா போதாதவ?” என்றவள் புலம்ப,

“இந்த புலம்பல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. நீ எம்.பி.ஏ. படிக்கிற.. விவசாயம் பண்றவளுக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்னு உன்னப் பார்த்து யாரும் கேட்க கூடாதுவ” என்ற மகிழ் அங்கிருந்து எழுந்தாள். இருவரும் வீட்டை நோக்கி பயணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!