Vaanavil – 8

Vaanavil – 8
அத்தியாயம் – 8
அதே நேரத்தில் வெற்றிக்கரமாக பாராட்டு விழாவை முடித்துவிட்டு வீடு வந்த மகளை வாசலில் நிற்கவைத்து ஆரத்தி எடுத்த பரிமளா மகளின் நெற்றியில் திலகமிட்டு வாசலை நோக்கி செல்ல, “மகனில்ல என்ற குறையைப் போக்கிட்ட கண்ணம்மா” மகளின் நெற்றியில் இதழ் பதித்தார் மனோகரன்.
இருவரின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்த பரிமளா,“நீ இன்னும் நிறைய சாதிக்கணும் வதனி. அம்மாவுக்கு உன்னை நினைச்ச சந்தோஷமா இருக்குலே” என்றவரின் கண்கள் கலங்கியது.
“பிரயாணம் பண்ணி வந்தது களைப்பாக இருக்கும்லே. மோதல போய் குளிச்சிட்டு வா சேர்ந்து சாப்பிடலாம்” என்று சொல்ல அவளும் சரியென்று தலையசைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.
பெற்றவர்கள் மகளுக்கு பிடித்த உணவை சமைக்க, ஏர்போர்ட்டில் முக்கியமான பொருளை தவறவிட்ட சிந்தனையோடு படுக்கையில் அமர்ந்தாள்.
திடீரென்று தன்னுடைய போன் ஞாபகம் வரவே கொண்டு தன்னுடைய உடமைகளில் தேடியவளுக்கு ஏர்போட்டில் கிளம்பும் அவசரத்தில் தவறவிட்டது நினைவு வரவே, ‘ச்சே அந்த போனில் சிம் வேற போடலயே. இப்போ எப்படி கண்டுபிடிக்க முடியும்?’ தன் மடத்தனத்தை எண்ணி மனம் நொந்தாள்.
சட்டென்று அந்த புதியவனின் நினைவு நெஞ்சில் எழுந்தது. அதை ஒதுக்கி வைத்தவள், தன் துணியை எடுத்துகொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள். வதனி ஒப்பனைகளை முடித்துவிட்டு வெளியே வரும்போது உணவு தயாராக இருந்தது,
பெற்றோருடன் அமர்ந்து உணவை முடித்தவள், “அப்பா நான் கொஞ்சநேரம் போய் ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் தஞ்சம் அடைந்தாள்.
மகிழ்வதனி ஊரிலிருந்து வந்துவிட்ட விஷயம் கார்குழலி காதுகளுக்கு எட்டியதும், அவளை காண ஓடோடி வந்துவிட்டாள். அவளின் வேகத்தைக் கண்டு மனதிற்குள் புன்னகைத்த மனோகரன், “இப்போதான் ஏதோ சிந்தனைய எந்திருச்சு மாடிக்கு போன போயி பாரு” என்று கூறவே பரிமளாவின் கையில் பிரசாதத்தை கொடுத்துவிட்டு வேகமாக மாடியேறிச் சென்றாள்.
இருள் சூழ்ந்த வானில் பொதி மேகங்கள் கூட்டம் கூட்டமாக செல்ல குளிரில் உடல் விரைத்தபோதும் தன் சிந்தனையைக் கைவிடாமல் வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தவள், ‘இத்தனை நாளாக இல்லாமல் இன்னைக்கு ஏன் நான் அவனைப் பார்க்கணும்? பொக்கிஷமாக வைத்திருந்த செல்லை தொலைக்கணும்?’ என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது.
“ஏட்டி எந்த கப்பல கவுக்க போறதா உத்தேசம்?” என்ற கேள்வியுடன் அருகே வந்தாள் கார்குழலி.
சட்டென்று சிந்தனை களைந்துவிட, “வா குழலி! கப்பல கவுக்கும் எண்ணம் இல்லவே. கார்காலத்தில வானவில் வருமான்னு யோசிச்சேன் அம்புட்டுதான்” என்றாள் எதையோ நினைத்தபடி.
அவளின் கேள்விக்கான அர்த்தம் புரியாதபோதும், “கார்காலத்துல மழை பெஞ்ச வானவில் வருவது சகஜம்லே. இதுக்கா கன்னத்தில் கைவச்சி உட்கார்ந்திருக்கிறவ” என்று அவளின் அருகே அமர்ந்தாள்.
வதனியின் பார்வையில் நம்பிக்கையின்மையை கவனித்தவள்,“என்னைய நம்புவ. வாழ்க்கை இப்படியே போயிரும்னு நினக்காதவ. உம்மோட வாழ்க்கையிலும் கார்கால வானவில் மாறி சந்தோசம் வரும்லே..” தோழியின் கரம்பிடித்து அழுத்தினாள்.
“ஊரே என்னய பைத்தியம்னு சொல்றவ. நீனு அதப்பத்தி என்ன நினக்கிறவ” வதனியின் கேள்வியில் வருத்தம் இழையோடியது.
ஒரு பெண் தன்னுடைய தனித்திறமையால் சொந்த காலில் நின்றாலும் நொண்டி சாக்கு சொல்லி அவளின் மனத்தைக் காயப்படுத்தி வேடிக்கை பார்ப்பவர்கள் சிலர் உண்டு. வதனி அனைத்திலும் திறமையான பெண்ணாக இருந்தாலும் ஊரார் கண்களுக்கு பைத்தியமாகவே தெரிந்தாள்.
“நீனு அடிக்கடி பேசும் அந்தாளு உம்மோட கற்பனையா? இல்ல ஆவியாயோ எனக்கு தெரியாதுலே. அதனால தாம்லே இன்னைக்கு நீனு உயிர்ப்போட இருக்க. உன்னயே அறியாம நீனு அத விரும்பறான்னு நினைக்குதேன். அதுதான் கல்யாண கனவு காணும் வயசுல நீனு அத வெறுத்து ஒதுங்கற” என்றவளை இமைக்க மறந்து நோக்கினாள் மகிழ்வதனி.
சிலநொடிகள் இடைவெளிவிட்டு வானத்தை பார்த்த கார்குழலி, “கல்ல கண்ட நாயா காணோம்.. நாயா கண்டா கல்ல காணோம்னு செந்தில் – கவுண்டமணி காமெடி ஒன்னு இருக்கும்லே. இன்னைக்கு வரைக்கும் நிறைய பேருக்கு அதக்கேட்ட சிரிப்பு வருமே தவிர உள்ளர்த்தம் தெரியாதுவ” என்றதும் மகிழ் சிந்தனை படர்ந்த முகத்தோடு அவளை ஏறிட்டாள்.
“அந்த காலத்துல ஒரு சிற்பி சிலை வடிச்சிட்டு ரோட்டில் போற ரெண்டுபேர கூப்பிட்டு தன்னோட படைப்பைப் பத்தி கருத்து கேட்டானாம். ஒருத்தன் சொன்னானாம் ஏலே அது கல்லுவ. இன்னொருத்தன் இல்லவ இது நாய் சிலைலே உம்மோட படைப்பு அருமையா இருக்குன்னு” பாதியில் நிறுத்திவிட்டு தோழியை நோக்கி கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.
அவளோ சிரிப்புடன், “கல்ல கண்டவன் கண்ணுக்கு நாயா காணல.. நாயா கண்டவன் கண்ணுக்கு கல்ல காணல..” என்றாள்.
“அதுமாதிரிதாம்லே எந்த ஒரு குறையும் பாக்குதவன் பார்வையில இருக்கு. உன்ன நிறைவ பார்க்கிறதால என் கண்ணுக்கு அது குறையா தெரியலன்னு சொல்லுதான். என்னைய மாதிரி உன்ன புரிஞ்சிட்டவன் தானே தேடிவந்து உன்ன கரம்பிடிப்பான் பாருவ..” என்று சொல்ல மகிழ்வதனியின் மனதில் நம்பிக்கை சுடர்விட தொடங்கியது.
அவளின் முகம் தெளிந்திருப்பது கண்டு, “வூட்டுல போட்டது போட்டபடியே கிடக்கும்து. கோவிலுக்கு போனவ நீனு ஊரிருந்து வந்த சேதிகேட்டு இப்படியே வந்துட்டேன், சரி வாலே கீழ போலாம்.” என்று அவளை அழைத்துக்கொண்டு கீழிறங்கி சென்றாள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் மொபைலைத் தொலைத்துவிட்ட வருத்தம் சிறிது இருக்கவே செய்தது. இனி வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது என்று தன் மனதை நிலைபடுத்தி கொண்டு மற்ற வேலையில் கவனத்தை திருப்பினாள்.
தன் தம்பியின் விருப்பம் அறிந்த மணிவண்ணனுக்கு அடுத்து என்ன செய்வதென்று யோசிப்பதில் நாட்கள் பறந்தது. அதே நேரத்தில் வீட்டில் இருந்த பெரியவர்கள் பெரியவனுக்கு பெண் பார்க்கும் படலம் பற்றிய சிந்தனையில் இருந்தனர்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய மேகவேந்தன் குற்றாலத்தில் இருந்து மும்பை வந்து சேர்ந்தான்.
ஒரு முக்கியமான வேலையாக வெளிநாடு போவதாக சொன்ன இளஞ்செழியன், “நான் வருகின்ற வரை கம்பெனியை பத்திரமாகப் பார்த்துக்கோ. அப்புறம் எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக எனக்கு போன் பண்ணுடா” என்று சொல்ல சரியென்று தலையசைத்தான்.
தன் தம்பியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஏர்போர்ட் வந்தவன், அடுத்ததாக சென்னை செல்லும் பிளைட்டை பிடித்தான். அங்கிருந்து தூத்துக்குடியில் வந்து இறங்கியவனின் குறிக்கோள் முற்றிலும் வேறாக இருந்தது.
தன்னுடைய காரில் தென்காசி வந்து சேர்ந்த இளஞ்செழியன் த்ரீ ஸ்டார் ஹோட்டலில் ரூமெடுத்து தங்கினான். பயணக்களைப்பு தீர குளித்துவிட்டு வந்தவன் தனக்கான உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு லேப்டாப்பை எடுத்துகொண்டு படுக்கையில் அமர்ந்தான்.
அவளின் செல்போனில் இருந்த புகைப்படங்களை வேகமாக தன்னுடைய லேப்டாப்பில் ஏற்றி ஒவ்வொரு போட்டோவையும் நிதானமாக பார்வையிட்டான்.
கிட்டதட்ட பள்ளிக்கூட காலகட்டத்தில் தொடங்கி தற்போது இருக்கும் புகைப்படம் வரை அனைத்தையும் பார்வையிட்ட செழியனின் புருவங்கள் முடிச்சிட்டது. ‘இத்தனை வருடமாக சொந்த ஊருக்கே போகாத என்னை எப்படி?’ தலையும் புரியாமல் வாழும் புரியாமல் குழம்பினான்.
இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது. அவனின் மனமெங்கும் கேள்விகள் அணிவகுத்து நின்றது. வெகுநேரம் சிந்தனையில் உழன்றவன் தன்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தான்.
மறுநாள் காலை வழக்கம்போல வேகமாக எழுந்து குளித்து தயாராகி அறையைப் பூட்டிவிட்டு கிளம்பினான். லைட் புளூ கலர் சர்ட் அண்ட் ஒயிட் கலர் பேண்ட் அணிந்து கையில் ஒரு பைலோடு நிறுவனத்திற்குள் நுழைந்தான்.
நேராக இருந்த ரிசப்சனில் சென்று, “இங்கே பி.ஏ. இண்டர்வ்யூவிற்கு வத்திருக்கிறேன்” என்றான்.
“இங்கிருந்து நேரா போய் ரைட் கட் பண்ணுங்க. அங்கேதான் இண்டர்வ்யூ நடக்குது” என்று விவரம் சொல்ல,
“தேங்க்ஸ்” என்றவன் அந்த இடம் நோக்கி நடக்க தொடங்கியவனை பார்வை அந்த இடத்தைச் சுற்றி வந்தது. அவ்வளவு நேர்த்தியாக மனதிற்கு இதம் அளிக்கும் சுவரின் நிறங்களும், ‘ஒன்றே செய்.. நன்றே செய்.. இன்றே செய்..’ என்ற பாரதியாரின் புகைப்படம் அவனிற்கு வியப்பை பரிசாக அளித்தது.
அவனும் சென்று வரிசையில் அமர்ந்த சில நொடிகளில் இண்டர்வ்யூ தொடங்கியது. ஒவ்வொருவரும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியுடன் வெளியே வருவதை கவனித்தபடி தன் போக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் இளஞ்செழியன்.
கடைசியாக இவனது பெயர் வரவும், “மேடம் மே ஐ கமின்” என்று அனுமதியுடன் உள்ளே நுழைந்தவனின் பார்வை அவளின் மீதே நிலைத்தது.
அந்த அறையின் நடுவே டேபிள் போட்டு கணினித் திரையின் முன்பு கம்பீரமாக விற்றிருந்தாள். நீல நிற புடவை அவளின் அழகை சற்று மெருகேற்றி காட்டியது.
சிலநொடி மௌனத்திற்கு பிறகு, “எஸ் கமின். டெக் யுவர் சீட்” அவனை பார்ப்பதை தவிர்த்து பைலில் பார்வை பதித்தவளின் தடுமாற்றத்தை மனதினுள் குறித்துக் கொண்டான்.
“இந்த வேலை உங்களுக்கு ஏன் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிக்கலாமா? உங்க குவாலிபிகேஷனுக்கு இதவிட பெரிய இடத்தில் நல்ல வேலை கிடைக்குமே?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
“இல்ல மேடம். எந்தவொரு வேலையும் அடிமட்டத்தில் இருந்து கத்துக்கொண்டால் ஒரு எக்ஸ்ப்ரீயன்ஸ் கிடைக்கும்” பவ்வியமாக பதில் கொடுத்தான்.
“ஒரு பெண்ணிற்கு கீழே வேலை பார்ப்பதை இழிவாக நினைக்கிறீங்களா?” அவள் சாதாரணமாக கேட்க,
“என்னைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் சரிசமம். நான் என்னை உயர்வாக நினைத்தால் அது பாசிட்டிவ் தாட்ஸ். நான் ஆணென்ற கர்வம் வரும்போது பெண்களை இழிவாக நினைக்கத் தோன்றும். அதனால் கர்வத்தை தலைக்கு கிரீடமாக வைப்பதில்லை” என்றான் பட்டென்று.
அவனின் கேள்வி அவளை வியப்பில் ஆழ்த்தியது.
அடுத்தடுத்த கேள்விகளில் அவளையே திக்குமுக்காட வைக்கும் பதிலை கூறினான். உடனே தன்னுடைய மேனேஜருக்கு அழைத்து இளஞ்செழியனுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரை ரெடி பண்ண சொல்லிவிட்டு, “உங்களோட சம்பளம் மற்ற தகவலை அவரிடம் கேட்டுகோங்க. ஆல் தி பெஸ்ட்” என்று அவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.
“தேங்க்ஸ் மேடம்” என்றவன் அறையைவிட்டு வெளியேறும் முன்பே, “இளஞ்செழியன்” என்றழைக்க சட்டென்று திரும்பி அவளைக் கேள்வியாக நோக்கினான்.
கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு முன்னர் ஏர்போர்ட்டில் தன்னுடைய போனைத் தவறவிட்ட நினைவுவர, “அன்னைக்கு நீங்கதானே ஏர்போர்ட்டில் என்னிடம் பேசியது. அங்கே என்னோட போனைத் தவறவிட்டேன். நீங்க அதை பார்த்தீங்களா?” எதையும் மறைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
தன்னுடைய கையோடு கொண்டு வந்த போனை அவளிடம் கொடுத்து, “நீங்க போனபிறகுதான் கவனிச்சேன். சிம் இல்லாத போன் உயிரற்ற உடல் மாதிரி” என்றான்.
அவனின் கையிலிருந்து போனை வாங்கியவள், “உயிரற்ற அந்த போனில் தான் என்னோட உயிர் இருக்கு. இந்த போனை பத்திரமாக கொண்டு வந்து கொடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்று சொல்லும்போது அவளின் கண்களில் கண்ணீர் பளபளத்தது. அந்த ஒருநொடியில் இளஞ்செழியன் விழிகளில் மின்னல் வந்து சென்றது.
அடுத்த நிமிடமே இடத்தைவிட்டு வெளியேற, ‘அவ்வளவு தூரத்தில் இருந்து இங்கே வந்து வேலைக்கு சேர காரணம் என்னவாக இருக்கும்?’ என்று யோசிக்கும்போது தான் அவனின் பயோடேட்டாவில் அவனின் சொந்தஊர் குற்றாலம் என்று எழுதப்பட்டிருந்தது ஞாபகம் வந்தது.
அந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து வேலைக்கு சேர்ந்த இளஞ்செழியன் அந்த நிறுவனம் பற்றியும், அடுத்தடுத்து அவள் கொடுக்கும் வேலைகளை கர்மசிரத்துடன் செய்தான். அவள் அலுவலகம் தொடங்கி பேக்டரி மற்றும் அவள் அடுத்து கலந்துகொள்ள போகும் மீட்டிங் அன்று அனைத்தையும் தன் நுனிவிரலில் வைத்திருந்தான்.
இந்த விஷயம் அறியாத மணிவண்ணன் தன் இரண்டு தம்பிகளின் திருமணத்தைப் பற்றியும் வீட்டினரிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் ஹாலிற்கு வந்தனர். தர்மசீலன், குணசீலன், செண்பகம், பூரணி நால்வரும் ஹாலில் இருப்பதைக் கண்டு அவனின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.
“இங்கன என்ன நடக்குது?” என்ற கேள்வியோடு சோபாவில் வந்து அமர்ந்தவனின் கையில் போட்டோவைக் கொடுத்தார் செண்பகம்.
அவன் சிந்தனையோடு ஒவ்வொரு போட்டோவாக பார்க்க, “இந்த பொண்ணுல உமக்கு பிடிச்ச பெண்ணா சொல்லுவ..” தன் பேரனிடம் கூறினார் தர்மசீலன்.
அப்படி சொன்னதும் அதை அப்படியே கீழே வைத்துவிட்டு, “எனக்கு இப்போதைக்கு கண்ணாலம் வேணாம்” என்றதும் மற்றவர்களின் முகத்தில் குழப்ப ரேகை ஓடியது.
“என் தம்பியளுக்கு பொண்ணைப் பார்க்கலாம்” என்று சொல்ல,
“ஏம்லே வீட்டுக்கு மூத்தவன் நீயிருக்க இளையவனுக ரெண்டு பேருக்கும் கண்ணாலம் பண்ணலாம்னு சொல்லுத.. உமக்கு எதுவும் கிறுக்குப் பிடிச்சிருக்கா?” – குணசீலன் கோபத்துடன்.
“அதுதான் எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்லுதேன் இல்ல. அதை அப்படியா விட்டு நான் சொல்ற விஷயத்தை கொஞ்சம் கவனமா கேளுங்க” என்றான் மகன்.
குணசீலன் மகனைப் பேச வாயெடுக்கும்போது மகனின் கையைப்பிடித்து அழுத்தி அமைதிபடுத்திய தர்மசீலன், “நீனு ஒரு முடிவெடுத்துட்டு பேச வந்திருக்கேன்னு புரியுதுலே. ம்ஹும் வந்த விஷயத்தை பத்தி நேரடியா சொல்லுவ” என்றார்.
“நம்ம சின்னவனுக்கு கார்குழலி பிள்ளய பிடிச்சிருக்குன்னு சொன்னான். அப்படியே செழியனுக்கு அந்த மகிழ்வதனி புள்ளய பேசிட்ட தம்பிய ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில கண்ணாலம் செய்தரலாம்னு முடிவுல இருக்கேன். நீங்கெல்லாம் என்ன சொல்லிதியா” என்று கேட்டதும் செண்பகத்திற்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.
அதுவரை பொறுமையாக இருந்தவர், “எம்லே உமக்கு என்ன புத்தி பேதலிச்சு போயிடுச்சோ.. சின்னவனுக்கு கார்குழலி பிள்ளய பிடிச்சிருக்குன்னு சொன்னத நான் தப்ப நினைக்கல. ஆனால் இளஞ்செழியனுக்கு வதனிய பேசலாம்னு சொல்லுத. ஊருக்கே ராசா மாதிரி இருக்குறவனுக்கு ஒரு பைத்தியத்த ஜோடி செக்க பாக்குதே..” என்று பேரனை பொரிந்து தள்ளிவிட்டார்.
மற்ற மூவருக்கும் அதே எண்ணம்தான் மனதில் ஓடுவதை மற்றவர் முகம் பார்த்து முடிவிற்கு வந்த மணிவண்ணன், “ஆச்சி பிடிக்கலன்னு சொல்லுதிய சரி.. ஆனால் அந்த பிள்ளய பைத்தியம்னு உம் வாயாலே சொல்லாதே” என்றான் பேரன் கோபத்துடன்.
“ஓஹோ அப்போ வேறென்ன சொல்லணும்னு சொல்லுத..” என்று மகனிடம் சண்டைக்கு வந்தார் பூரணி. அதுவரை இருந்த பொறுமையைக் காற்றில் பறக்க விட்டவனாய் அவனும் தாயை கோபத்தில் பேச தொடங்கிவிட்டான்.