YALOVIYAM 11.2

YALOVIYAM 11.2


யாழோவியம்


அத்தியாயம் – 10

அவன் அழைப்பை ஏற்றதும், “மாறா” என்று பதட்டத்துடன் ஆரம்பித்தவளிடம், “சுடர்! உயிரே போயிடுச்சி தெரியுமா?” என பரிதவிப்புடன் பேசினான். 

“ஏன் இப்படிப் பேசற? உயிரோடதான இருக்கேன். அப்புறமென்ன?”

“வாயிலயே அடிப்பேன்” என அன்பின் வெளிப்பாடாய் அதட்டியவன், “கேர்ஃபுல்லா இருக்கச் சொன்னேன்-ல? அப்புறம் ஏன் இப்படி?” என்று அக்கறையாகக் கேட்டான்.

அவன் அதட்டல் அக்கறை இரண்டையும் அனுபவிக்கும் விதமாக அமைதியாக இருந்தவளிடம், “என்ட்ரன்ஸ் எக்ஸாம் நியூஸ் சம்பந்தமா-தான் இந்த அட்டாக் இருக்கும். உனக்கும் அது தெரிஞ்சிருக்கும். அப்புறம் ஏன் நியூஸ்-ல அந்த மாதிரி எதுவும் வரலை?” என்று கேட்டான்.

தன் அப்பாவிடம் சொன்னதை மீண்டும் சொல்லி முடித்தவள், “அதை விடு மாறா! வேற ஒரு முக்கியமான விஷயம் இருக்கு” என்றாள்.

“என்ன?”

“நம்ம விஷயம்… வீட்ல… தெரிஞ்சிடுச்சி” என்ற சுடரின் குரல் மெதுவாக ஒலித்தது.

“ஓ! நான் கால் பண்றப்போ ஃபோன் உங்கிட்ட இல்லையோ?” என்று சோர்வாகக் கேட்டான்.

“ம்! அப்பாகிட்ட இருந்தது” என்று அசதியுடன் சொன்னாள்.

“என்ன சொல்றாங்க?”

“எதுவுமே சொல்லலை” என்று சொல்லும் பொழுது, குரல் இன்னும் இறங்கிப் போயிருந்தது.

“ஓ! நானும் எங்க வீட்டுலயும் சொல்லிட்டேன்”

“என்ன திடிர்னு?” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“சிச்சுவேஷன் அப்படி”

சிறு பதைபதைப்புடன், “உங்க வீட்ல என்ன சொன்னாங்க?!” என கேட்டதற்கு, மாறன் அமைதியாக இருந்தான்.

அவன் அமைதி வாசித்துக் காட்டிய வார்த்தைகள் அவளுக்குப் புரிந்தது. அது அவளை வருத்தியது. கூடவே அவன் வருந்துவதும் தெரிந்தது. அமைதியாக இருந்தாள்.

‘என்ன நினைத்தானோ?’, “பார்க்கணும் போல இருக்கு சுடர்” என ஏக்கமாகச் சொன்னதும், “ம்ம்ம்” என்று சொன்னவளின் கண்கள் குளமாயின.

அந்த ‘ம்ம்ம்’ சொன்ன விதத்தில் அவளின் உணர்வைப் புரிந்தவன், “எதையும் யோசிக்காத. வீட்ல எதுவும் சொல்லலை-னு நினைச்சிக் கவலைப்படாத. பார்த்துக்கலாம். சரியா?” என அவள் வாட்டத்தை விரட்டும் குரலில் சொன்னான்.

இப்போது தொண்டை அடைத்ததில், சுடருக்கு அந்த ‘ம்ம்ம்’ கூட வர மறுத்தது.

அதையும் புரிந்து, “சொல்றேன்-ல சுடர். இப்படி இருக்காத. பார்த்துக்கலாம்” என்றவன், “ரொம்ப வலிக்குதா?” என்று சங்கடத்துடன் கேட்டான்.

மீண்டும் சத்தமேயில்லாமல் இருந்தாள்.

அவள் படும் வேதனையின் வேகத்தில், “நீ சொன்னா கேட்க மாட்ட. நான் ஹாஸ்பிட்டல் வந்து பார்க்கிறேன். அப்பத்தான் நீ சரியா இருப்ப” என்று அவளுக்காகப் பேசினான்.

உடனே, “இங்கெல்லாம் வர வேண்டாம் மாறா. கட்சி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. இன்னும் அப்பா எதுவும் சொல்லலை. நீ வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களா? அதுக்கு கட்சிக்காரங்க என்ன பேசுவாங்களோ? உனக்கும் தேவையில்லாத கேள்வி வரும்” என அவனுக்காக வாய் திறந்தாள்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.

மீண்டும் அவளே, “மாறா, டேப்லெட் போட்டுருக்கேன். தூங்கட்டுமா?” என்று கேட்டாள்.

“சரி, எதையும் யோசிக்காம தூங்கு. எல்லாம் சரியாயிடும். சரி பண்ணிடலாம். நாளைக்கு காலை-ல திரும்பவும் பேசறேன். பை” என நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.

கைப்பேசியை வைத்ததும், ‘அவளை எப்படி பார்க்க?’ என்று யோசித்தான். ‘யார் என்ன பேசினாலும், கேட்டாலும்… பரவாயில்லை’ என நேராகப் போய் நின்றுவிடலாம். யோசிக்கத் தேவையேயில்லை. ஆனால் பதவிக்குரிய பொறுப்புணர்வு, அவனை யோசிக்கச் சொல்லியது.

கூடவே அப்பாவிடம் பேசியது மனதிற்குள் ஓடியது. ‘எனக்கு சுடர்தான்! சுடர் மட்டும்தான்’ என்ற இடம் வந்ததும், அவன் இதயம் இப்படியொரு முடிவெடுத்த கல்லூரி நாளை நோக்கி ஓடியது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 10

பாண்டிச்சேரி

அன்று சுடரிடம் அப்படிச் சொன்ன பிறகு, மாறன் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் பார்க்கும் நாளில் இருந்த தாக்கத்தை விட, பார்க்காத நாளின் தாக்கங்கள் அதிகமாக இருந்தன.

அதே கல்லூரி வளாகத்திற்குள்தான் இருக்கிறாள் என்றாலும், தன் காதல் வாழ்க்கைக்குள் அவள் இல்லை என்பது அவனை வாட்டியது. அவள் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கோர்த்துப் பார்க்கையில், மனம் ஒருவித திருப்தியைக் காட்டியது

பல நாட்கள் அவளைச் சந்திக்க நினைத்த மனதை, ஏதேதோ சொல்லி அமைதிப்படுத்தினான். சில நாட்களில் அவளைச் சந்தித்த இடங்களில் சென்று அமர்ந்துவிட்டு வருவான்.

சுருக்கமாக அவளுடன் பேசாத நாட்கள் ஒவ்வொன்றும் பூமியில் ‘இருத்தலுக்கான’ கணக்கில்தான் வந்ததே தவிர, ‘வாழ்ந்ததிற்கான’ கணக்கில் சேரவேயில்லை.

இப்படியே நிறைய நாட்கள் கடந்தன. அன்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. தேர்வு எழுதி முடித்த மாறன், நிறுவனர் சிலை இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அங்கே அவனுக்கு முன்பே வந்திருந்த சுடரைக் கண்டதும், ஒரு மரத்தின் பின்புறம் நின்று, ‘அவள் என்ன செய்கிறாள்?’ என்று பார்க்க ஆரம்பித்தான்.

சுடர்… நிறுவனர் சிலை இருக்கும் இடத்தின் பக்கச்சுவரில் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்தாள்.

மாறன்… அன்று தானும் அவளும் அமர்ந்திருந்தது, தன் பெயரை அவள் உச்சரிச்சது என எல்லாம் நினைத்துப் பார்த்தான். 

சுடர்… நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த ‘நாட்டுப்புற பாடல்கள்’ தொகுப்பு அடங்கிய புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். இதை வாங்குவதற்காக, அவனிடம் எடுத்துக் கொண்ட உரிமையை நினைத்துப் புன்னகை வந்தது.

மாறன்… இதே புத்தகத்தால் அன்று அவள் தட்டிவிட்டு போன இடத்தை, இன்று லேசாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

சுடர்… கழுத்திலிருந்த அடையாள அட்டையை கழட்டி, கையில் வைத்துச் சுற்ற ஆரம்பித்தாள். பின் சுற்றுவதை நிறுத்திவிட்டு அதைத் தூக்கிப் பிடித்து, ‘இதில்தானே ஆரம்பித்தது’ என்ற பார்வை பார்த்தாள்.

சட்டென மூண்ட கோபத்தில் அதைத் தூக்கி எரிந்து விடலாம் என கையை உயர்த்தியவள், ‘அதுதான் முடியாதே’ என்று உணர்ந்ததும், இரு கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

மாறன்… அவளது உணர்வுகளை உணர்ந்தவன், ‘என்னாலயும் முடியாது சுடர்’ என்று முணுமுணுத்தான்.

ஒரு சில வினாடிகள் கழித்து சுவரிலிருந்து குதித்துக் கிளம்பினாள்.

அவள் போகும் திசையையே பார்த்தவன், ‘தன்னிடம் பேசாமல் அவள் சரியாகயில்லை’ என உணர்ந்தான். அதைவிட ‘அவள் சரியாக இல்லை என்றால், தான் சரியாக இருக்கப் போவதில்லை’ என்பதையும் புரிந்து கொண்டான்.

‘இது வேண்டாம்’ என்று ஒதுக்கி, வாழ்க்கையில் சாதித்து வெற்றிகள் கண்டாலும், அவளிடம் பேசாமல் இருந்தால் தனக்குள் ஒரு வெற்றிடம் உருவாகும் என்பதைக் கண்டுகொண்டான்.

‘இது சரி வராது’ என சொன்னவனே, ‘இவள்தான் சகலமும்’ என்று சொல்வது போல போய்க் கொண்டிருப்பவளைப் பார்த்தான்.

அடுத்த நொடியே தேர்வுகள் முடிந்ததும் இதுபற்றி சுடரிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் தனிப்பட்ட வாழ்வில் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இதுவாக இருக்காது என்று தெரியும். 

எனினும் ‘தனக்கு சுடர்தான்! சுடர் மட்டும்தான்’ என்ற முடிவிலிருந்து மாறப் போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தான். அந்த உறுதி அவன் உதடுகளில் ஒரு மென்னகையைக் கொண்டு வந்தது.

வெகு நாட்களுக்குப் பின்னர் வரும் மென்னகை. ஆம்! இத்தனை நாட்கள் சுடருடன் பேசவில்லை என்றதும் மென்னகைக்கு கூட பஞ்சமாகிப் போய்க் கிடந்தது அவன் இதழ் தேசம்.

யாழோவியம் அத்தியாயம் -11 தொடர்கிறது…

அவள் நினைவிலிருந்து மீண்டவன், அவளது நிலையை நினைத்து மெல்லிய சோகத்துடன் அப்படியே வெகுநேரம் அமர்ந்திருந்தான்.

இதே நேரத்தில் மருத்துவமனையில்

கூட்டங்கள் குறைந்திருந்தது. சுடர் அனுமதிக்கப்பட்ட அறையின் முன்னே லதாவும், லிங்கமும் இருந்தனர். அந்த நேரம் படபடவென வந்து, ராஜா அங்கே நின்றான்.

அரக்கப் பரக்க வந்து நின்றவனிடம், “இவ்வளவு நேரம் எங்கே போயிருந்த? உனக்கு இப்பத்தான் வரணும்னு தோணிச்சா?” என்று கேட்டபடியே லிங்கம் அவனெதிரில் வந்து நின்றார்.

“கட்சி வேலையா வெளிய போயிருந்தேன்” என்று லிங்கத்திற்குப் பதிலளித்து, சுடர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்லப்போனான்.

“பொய் சொல்லாத! அப்படியென்ன கட்சி வேலை?” என லிங்கம் நேரடியாகக் கேட்டதும், “என்ன இப்படிப் பேசறீங்க?” என லதா குறுக்கே வந்தார்.

கோபத்தில், “நீ கொஞ்சம் பேசாம இரு லதா” என அதட்டியவர், “சொல்லு! என்ன வேலை-ன்னு?” என்று ராஜாவைப் பார்த்துக் கேட்டார்.

லிங்கத்தின் பார்வையில் ‘நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்ற அழுத்தம் இருந்தது. கணவரைப் பார்த்த லதா, “அவனைப் போக விடுங்க. எந்த நேரத்தில கேள்வி கேட்டுக்கிட்டு நிக்கிறீங்க?” என்றார்.

“ஏன் கேட்கக் கூடாது? இவ்வளவு லேட்டா வர்றான். அவன்கிட்ட எதுவும் கேட்கக் கூடாதா? முதல உன்கூட ஏன் பேசாம இருக்கிறான்-னு சொல்லச் சொல்லேன்”

“அதெல்லாம் இன்னொரு நாள் கேட்டுக்கலாம். இப்போ போய் பார்க்க விடுங்க” என்றதும், “நீ அவனுக்காகப் பேசாத” என எரிச்சல் அடைந்தார்.

“போதும்!” என அறைக்குள் செல்லப் போனவனின் முன்னே சென்று, “நானும் கவனிச்சிக்கிட்டுதான் வர்றேன். நீ கட்சி வேலை எதுவும் பார்க்கலை. என்ன பண்றேன்னு தெரியலை. இப்பவும் பொய் சொல்ற. எங்கே போயிருந்த-ன்னு சொல்லிட்டு, தாராளமா போ” என்று அவனைச் சந்தேகிக்கும் தொனியில் பேசினார்.

கணவரின் சந்தேகத்தைக் கவனிக்காமல், “எந்த நேரத்தில…” என்று வந்த லதாவை, “நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாத” என்று கோபப்பட்டார். 

அக்கணம் இவர்களது சத்தத்தில் விழித்த சுடர், “ப்பா!” என்று உள்ளிருந்து சோர்வாக அழைத்ததும், “என்ன சுடர்?” என லிங்கம் கதவைத் திறந்து கேட்டார்.

“ராஜாண்ணா-வை பார்க்கணும்” என்றதும், எதுவும் பேசாமல் “போ!” என சொல்லி, அங்கிருந்த குஷனில் அமர்ந்தார். ‘நான் சொன்னா கேட்கலை. அவர் பொண்ணு சொன்னதும் கேட்கிறாரு’ என முணுமுணுத்துக் கொண்டே, லதாவும் அமர்ந்தார்.

அறையின் உள்ளே

ராஜா உள்ளே வரும் பொழுது சுடர் கண்மூடிப் படுத்திருந்தாள். மெதுவாக அவள் அருகில் சென்று, “சுடர்” என்றதும், கஷ்ட்டப்பட்டுக் கண் திறந்துப் பார்த்தாள்.

‘ஏன் இவ்வளவு நேரம்?’ என்று கேட்பாள் என நினைத்தான். ஆனால் அவளோ, “உட்காரு ராஜாண்ணா” என்றாள்.

பக்கத்தில் அமர்ந்து, “ரொம்ப வலிக்குதா” என கேட்டதற்கு, “இல்லை” என்று சோர்வுடன் சொன்னாள்.

கட்டு போடப்பட்டிருந்த கையைப் பார்த்தவன், “எங்கயும் போகணும்-னா என்னைக் கூப்பிடு. நான் கூட்டிட்டுப் போறேன். இப்படித் தனியா போகாத! சரியா?” என்றான்.

“ம்ம் சரி” என்றவள், “மாறா விஷயம் வீட்ல தெரிஞ்சிடுச்சி. அம்மா-அப்பா ஒன்னுமே சொல்லலை. அவனும் வீட்ல சொல்லிட்டான். அவங்க ஒத்துக்கலை போல. பயமா இருக்கு” என முடிக்கும் போது, கண்கள் கலங்கியிருந்தது.

ஆறுதலாக அவள் கைப்பிடித்து, “உடனே என்ன சொல்லணும்னு நினைக்கிற? பொறுமையா இரு” என்றவன், “இதெல்லாம் இப்ப யோசிக்காத. நீ தூங்கு. நான் வெளிய இருக்கேன்” என்று எழுந்தவனின் கையை விடாமல் பிடித்திருந்தாள்.

“என்ன?” என்று மீண்டும் அமர்ந்தனிடம், “நான் இனிமே எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். நீ இப்படிப் பேசாம இருக்காத ராஜாண்ணா. அது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. பர்த்டே அன்னைக்கு எப்படி அழுதேன் தெரியுமா?” என்று கரகரத்தக் குரலில் சொன்னாள்.

அமைதியாக இருந்தான். பின், “இப்ப இந்தப் பேச்சு அவசியமா? எதையும் நினைக்காம ஒழுங்கா தூங்கு” என அண்ணனாய் அதட்டினான். அதன்பின், பிடித்திருந்த அவள் கையை மெதுவாகத் தட்டிக் கொடுத்தான்.

அந்த அன்பில் கண்கள் மூடியவள், “கொஞ்ச நாள்தான் என்கூட பேசாம இருந்த. அதையே என்னால தாங்க முடியலை. அம்மா, பாவம் ராஜாண்ணா. இத்தனை நாள் பேசாம இருக்க. எப்படித்தான் தாங்குறாங்களோ?” என்றாள்.

அந்த நொடியில், ராஜாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் துளிர்த்தது. அதை பெருவிரலால் துடைத்துக் கொண்டான். அந்தத் கண்ணீர் துளி யாருக்காக?

இரண்டு நாட்கள் கழித்து ராகவன் அலுவலக அறையில்…

நுழைவுத் தேர்வு முறைகேட்டின் இரண்டாம் கட்ட அறிக்கை பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார். நெற்றியை தேய்த்தபடி ‘அடுத்து என்ன செய்ய?’ என்று எண்ணியவர், ஒரு முடிவெடுத்து தன் கைபேசியை எடுத்தார்.

இதே நாள் ராகினி வீட்டில்…

சற்று முன்தான் ராகினியின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அதில்தான் பேசிக் கொண்டிருந்தார். முதலில் நெடு நேரத்திற்கு வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தன.

அதன்பின், “ரெண்டாவது கட்ட அறிக்கையும் சப்மிட் பண்ணியாச்சு. இப்போ என்ன செய்யணும்னு பேசுங்க? இப்படியே விட்டா, எவிடென்ஸோட நம்ம பேரு வெளி வந்திடும்” என்று ராகினி விடயத்திற்கு வந்தார்.

“ம்ம்ம்” என்று மட்டும் அந்த ஆண்குரல் சொன்னது.

“கட்சியில, மக்கள்-கிட்ட கெட்ட பேர் வந்திடும். எல்லாம் அவனாலதான். அவனை ஏதாவது பண்ணனும்” என ஆரம்பத்திலிருந்ததை விட மாறனை பழிவாங்கும் வெறி அதிகமான குரலில் ராகினி பேசினார்.

“கண்டிப்பா பண்ணலாம்!” என்று அந்த ஆண்குரல் ஒரு முடிவுடன் பேசியது.

“என்ன பண்ண?”

“நாம கஷ்டப்படுற மாதிரி, அவனும் கஷ்டப்படணும். அதோட நாம செய்யப் போறதினால, அடுத்தகட்ட அறிக்கை சப்மிட் பண்றது தள்ளிப் போகணும்” என அழுத்தமாய் சொன்ன ஆண்குரல், “அதோட மட்டும் விடக்கூடாது. அவன் பேருக்கு கலங்கம் வர்ற மாதிரியும் ஏதாவது பண்ணனும்” என்றது.

அனைவரின் ஆட்காட்டி விரலும் தன்னைச் சுட்டும் என்றாலும் யாழ்மாறன் மேல் கொண்ட அடங்கா ஆங்காரத்தில், அந்த ஆண்குரல் தன் திட்டத்தைக் கூறியது. அதைக் கேட்க கேட்க ராகினி முகத்தில் அப்படி ஒரு திருப்தி வந்தது.

மேலும், “ஆட்சி உங்ககிட்ட இருக்கு. அதனால என்கொயரி கமிஷன் ஃபுல் ரிப்போர்ட் சப்மிட் பண்ணப்புறம், எந்த ஆக்ஷனும் எடுக்க விடாம பார்த்துக்கோங்க” என்று வழிகாட்டியது.

“ம்ம் சரி”

“அதுக்கப்புறம், இந்த வழக்குக்கு சிபிஐ விசாரணை வேணும்னு ஹைகோர்ட்-ல ஒரு மனு தாக்கல் பண்ணலாம். அதைப் பத்தி கொஞ்ச நாள் பேச்சு போகும். அதுக்குள்ள வேற எப்படியாவது, மக்களை திசை திருப்பப் பார்க்கணும்” என்று அந்த ஆண்குரல் அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டியது.

அதன்பின்னும் சில விடயங்களைப் பேசிவிட்டே, இருபுறமும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…

சென்னை செங்கல்பட்டு நெடுஞ்சாலை!

மூன்றாவது கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க தியாகு சென்னை சென்று கொண்டிருந்தார். அவருடன் துணை ஆய்வாளர்களும் இருந்தார்கள்.

அனைவரும் பொதுவாகப் பேசியபடியே இருந்தனர். சாலையில் கவனம் வைத்தபடி ஓட்டுநர் கார் ஒட்டிக் கொண்டிருந்தார்.

அதே சாலையில், தியாகு பயணிக்கும் காருக்கு எதிரே கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வந்து கொண்டிருந்தது


கதையில் வரும் சம்பவங்களும், பெயர்களும் கற்பனையே. அடுத்த அத்தியாயத்தில் சில விடயங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

Leave a Reply

error: Content is protected !!