அனல் பார்வை 01🔥

அனல் பார்வை 01🔥

 

அமெரிக்காவின் லோஸ் ஏன்ஜல்ஸ் நகரம்,

பார்க்குமிடமெல்லாம் தங்கங்களும், வைரங்களும், இரத்தினங்களும்… பாதம் தொடும் தரையில் கூட தங்கத் துகள்கள்… சுற்றி பல பேர் வித்தியாசமான ஆடையில் உடல் முழுவதும் தங்க ஆபரணங்கள் பூட்டி, ஆண்களோடு சேர்த்து பெண்கள் கூட வீர மங்கைகள் போல தோற்றம்…

திடீர் என்று ஒரு மரணம்! அவன் தலைமையை ஏற்க வேண்டிய கட்டாயம்… சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்து தங்கத்தினால் ஜொலித்த அவனை ஏரியில் மூழ்க சொல்லி எழுப்ப,

சூரிய உதயம் போல் தன்னை ஏரியில் கரைத்து, ஆஜாகுபானுவான தோற்றத்தில் எழுந்து நின்றான் அவன்…

திடீரென, “ஆகு… ஆகு எழுந்திரு! டேய்…” என்ற குரலில் இத்தனை நேரம் வந்த கனவு தடைப்பட, பதறி அடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தான் நம் நாயகன் அக்னி.

முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்திருக்க, ஒருவித பதற்றத்துடன் இருந்த அக்னியை பார்த்த அவன் நண்பன் ராகவ், “ஆகு, என்னாச்சுடா? மறுபடியும் அதே கனவா?” என்று கேட்க, ‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன் ‘ஆம்’ எனும் விதமாக தலையசைத்தான்.

“சரி அதை விடு ஆகு! உன் ஆளுக்கு அவார்ட் கிடைக்க போகுது. லைவ் ஆ அந்த ஃபங்ஷன் அ டெலிகேஸ்ட் பண்றாங்க. நேரம் ஆச்சுடா” என்று ராகவ் சொன்னதும் தான் தாமதம், போர்வையை சுருட்டிக் கொண்டு எழுந்த அக்னி, தன்னவள் விருது வாங்குவது போல் தான் வரைந்திருந்த ஓவியத்தை புன்னகையுடன் பார்த்துவிட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அடுத்து பத்து நிமிடங்களில் தொலைக்காட்சி முன் அக்னி ஆர்வமாக அமர்ந்திருக்க, அந்த ஹோலிவூட் நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழாவும் ஆரம்பமானது.

பல கோடிகள் செலவு செய்து தயார் செய்யப்பட்டிருந்த அந்த அரங்கமே திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மற்றும் விருந்தினர்களால் நிரம்பியிருந்தது. சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் நட்சத்திரங்களிடம் கேள்வி கேட்டு அறிவிப்பாளர்கள் உற்சாகத்தை எழுப்ப,

அவர்கள் சொல்லும் பதிலை ஒன்றுக்கு இரண்டாக எழுதிக் கொண்டு, நாளைய பத்திரிகைக்கான கிசுகிசுக்களை தயார் செய்துக் கொண்டிருந்தனர் ஊடகவியலாளர்கள்.

விழாவும் ஆரம்பமாக, அங்கிருந்த மக்கள் கூட்டமும் சரி, நேரடி ஒளிபரப்பாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்போரும் சரி மேடையை ஆர்வமாக பார்த்தனர். அடுத்தடுத்தென்று சில விருதுகள் வழங்கப்பட்டு, நடனம், பாடல் என பல நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின.

அடுத்த சில நிமிடங்களில் அறிவிப்பாளர் “இந்த வருடத்திற்கான சிறந்த கதாநாயகி” என்ற அறிவிப்பை கொடுக்க, பல முண்ணனி நடிகைகள் தங்களை எதிர்ப்பார்த்து ஆர்வமாக மேடையை பார்த்திருந்தனர். ஆனால், பல பேரின் இதழ்கள் அந்த ஒரு பெயரை கிசுகிசுப்பாக முணுமுணுத்தன.

மூன்று வருடத்திற்கு முன் அறிமுகமான அவளின் உழைப்பு அத்தனை வலுப்பெற்றது. சிபாரிசு மூலமாக துறைக்குள் நுழைந்திருந்தாலும், ‘சாதிக்க வேண்டும்’ என்ற அவளின் வெறியே அவளை இத்தனை உச்சத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

திரைப்பட உலகில் அவள் நடித்த முதல் திரைப்படத்தை பார்த்த பல முண்ணனி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவளின் நடிப்பிலும், அசைவிலும் வியந்து தான் போனர். தங்களின் படங்களுக்கு அவளையே தெரிவு செய்ய, ‘அது வீண் போகவில்லை’ என்பது போலிருந்தது அவளுடைய நடிப்பும், பாவனைகளும்.

வந்த முதல் வருடத்திலே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டவள் அவள்! இன்று சிறந்த கதாநாயகிக்கான விருதை வழங்கும் நேரமும் வர, சினிமாத்துறையின் இரண்டு முண்ணனி இயக்குனர்கள் மேடைக்கு வந்து அந்த பெயரை அறிவித்தனர்.

நீண்ட கருப்பு நிற ஃப்ரோக்கில், இறுகிய முகமாக எழுந்து மேடையை நோக்கி நிமிர்வாக சென்றாள் அவள். “தீ… தீ…” என்ற அழைப்போடு கரகோஷம் எழுப்பப்பட, திமிருடன் கூடிய ஒரு வெற்றிப் புன்னகையுடன் மேடையில் ஏறினாள் நம் நாயகி தீ அருவி.

பெயர் தான் தமிழ் பெயரே தவிர, அமெரிக்காவிலே பிறந்து, வளர்ந்த அவளின் தோற்றம் அந்நாட்டு பெண்களின் தோற்றம் தான். விருதை வாங்கியவளின் முகமோ கண்களுக்கு எட்டாத புன்னகையுடன் இறுகிப் போய் இருந்தது.

மைக்கின் முன் நின்றவள், அந்த விருதை பார்த்த வண்ணம் எப்போதும் சொல்லும் அந்த வசனத்தை சொன்னாள். அதை மட்டும் தான் சொன்னாள். “ஐ டெடிகேடட் திஸ் டூ மை மஹி…”

அங்கிருந்த மொத்த பேருக்கும் ‘யார் அந்த மஹி?’ என்று தான் இருந்தது. ஒவ்வொரு விருது வழங்கும் விழாவிலும் தனக்கான விருதை பெற்று, அவள் கூறும் வசனம் தான் அது…

பல ஊடகவியலாளர்கள் அந்த ‘மஹி’ என்ற பெயரை வைத்து பல வதந்திகளை கிளப்பியிருந்தாலும், இதுவரை தீயின் மஹி யாரென்ற உண்மை யாருக்கும் தெரியவில்லை.

அவள் விருதை பெற்று அதை சொன்னதும், இங்கு தொலைக்காட்சியில் அவ்விழாவை பார்த்துக் கொண்டிருந்த அக்னியின் இதழ்களோ மென்மையாக புன்னகைத்துக் கொண்டன.

“ஒவ்வொரு ஃபங்ஷன்லயும் இதையே சொல்றாளே… நிஜமாவே அந்த மஹி மேல அம்புட்டு லவ்வோ?” என்று சலிப்பாக கேட்ட ராகவ்வை பார்த்தவன், ‘இல்லை’ என்று அழுத்தமாக தலையசைத்தான்.

“அவ்வளவு வெறுப்பு ராகு” என்றான் அக்னி வலி நிறைந்த புன்னகையுடன்.

அடுத்த நாள்,

ராகவ் தன் பொருட்களை வைத்து தயாராகிக் கொண்டிருக்க, வெளியிலிருந்து கையில் ஒரு ஓவிய சட்டகத்துடன் மட்டும் வந்த அக்னியை பார்த்தவன், “ஆகு, போகும் போது அஞ்சு ட்ரோவிங்ஸ் கொண்டு போன… இங்க இருக்குறவங்க உன் ட்ரோவிங்க்ஸ் அ வாங்கினாங்களா?” என்று ஆர்வமாக கேட்டான்.

“ஆமா ராகு, ஓவியத்தை எடுத்து இந்த காசை கொடுத்தாங்க” என்று கையிலிருந்த பணத்தாள்களை டீபாயில் போட்டவாறு அக்னி அவன் பாட்டிற்கு போக, “டேய்… டேய்… டேய்… கொஞ்சமாச்சும் காசோட அருமை தெரியுதா உனக்கு? இப்படி போட்டுட்டு போற. உன் செலவுக்கு கொஞ்சமாச்சும் வச்சிக்கோ டா” என்று திட்டி தீர்த்தான் ராகவ்.

“எனக்கு என்ன செலவு இருக்கு?  வயிறு நிறைய சாப்பாடு போடுற, துணியில இருந்து நீதான் எனக்கு எடுத்து கொடுக்குற. உனக்காக தான் நான் ஓவியம் வரைஞ்சி வெளில விக்கிறேன். நீயே அதை வச்சிக்க ராகு, எனக்கு அதோட அருமை தெரிய வேணாம். இந்த பணம் கூட ஒருவித போதை தான். எனக்கு இது வேணாம்” என்று அக்னி சொல்ல,

‘இவனெல்லாம் திருத்தவே முடியாது’ என்று நினைத்துக் கொண்டவன், “ஆகு, உன் ட்ரோவிங்க்ஸ் அ பார்த்தா யாருக்கா இருந்தாலும் வாங்க தோணுமே… அப்றம் எப்படி இதை வாங்காம விட்டாங்க? அப்படி என்ன இதுல வரைஞ்சிருக்க?” என்று புரியாமல் கேட்டான்.

“அது வந்து ராகு…” என்று திருதிருவென முழித்தவாறு அந்த ஓவியத்தை திருப்பி அக்னி காட்ட, அதை பார்த்தவன், “உனக்கு குசும்பு ரொம்ப கூடிப்போச்சு. நான் அசந்த நேரமா பார்த்து என்னை வரைஞ்சிருக்க. அதுவும் என்னை போய்… நான் சிங்கிள் ஆ சுத்தும் போதே உனக்கு புரியல்லையாடா தெய்வமே!” என்று கோபமாக ஆரம்பித்து பாவமாக முடித்தான்.

“ராகு, வெளில எல்லாரும் எதுக்காக போராட்டம் பண்ணிகிட்டு இருக்காங்க? பார்க்கவே பாவமா இருக்கு” என்று அக்னி வருத்தம் தேய்ந்த குரலில் சொல்ல,

“நானும் நியூஸ்ல பார்த்தேன். கொலம்பியால இருக்க ***** காட்டை அழிச்சி  ஏதோ பில்டிங் கட்ட போறாங்களாம். ஏற்கனவே இங்க நேச்சுரல் ரிசோர்ஸஸ் அ பார்குறது ரொம்பவே கம்மி ஆகிருச்சி. இதுல இருக்குறதையும் அழிக்கிறானுங்க. அதான் அங்க பண்ற வேலைய தடுக்க ஒவ்வொரு நாட்டுலயும் போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று ராகவ் சொன்ன செய்தியை கேட்ட அக்னிக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.

கோபத்தை கட்டுப்படுத்தி விரக்தியாக சிரித்தவன், “இதனால் தான் ராகு சில…” என்று ஆரம்பிக்க அதை குறிக்கிட்ட ராகவ், “சில மர்மமான விஷயங்கள் இன்னும் மர்மமாவே இருக்கு அதானே…? இதோட ஐ திங் முப்பதாயிரத்தி முப்பதாவது தடவையா சொல்லிட்ட” என்று சொல்லி சிரித்தான்.

அக்னிக்கும் அவன் சொன்ன விதத்தில் ஏனோ சிரிப்பு தான் வந்தது. பின் ஏதோ நியாபகம் வந்தவனாக, “நீ மறுபடியும் எப்போ வருவ ராகு?” என்று அவன் கேட்ட விதத்திலேயே அவனுடைய தனிமை ராகவ்விற்கு புரிந்தது.

“இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன், அங்கிள் கூட மெடல்லின்லயே இருன்னு… நீதான் அடம்பிடிச்சி என் கூட வந்த. பர்மிஷன் கேட்டு உன்னை இங்க கூட்டிட்டு வர்றதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும். இன்னையில இருந்து ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. சோ, டீம் கூட தான் இருந்தாகனும். வர்றதுக்கு தாமதமாகும், சம்டைம்ஸ் வர முடியாமலும் போகலாம். நீ தனியா சமாளிச்சிப்பல்ல?” என்று சற்று சந்தேகமாகவே கேட்டான் ராகவ்.

அக்னியோ மலங்க மலங்க விழிக்க, அவனுக்கு தான் ஆயாசமாக போய்விட்டது.

“நாலு வருஷமா என் கூட இருக்க. இன்னும் என்ன ஆகு?” என்று முறைப்புடன் கேட்டவன், “சேலட் செஞ்சி வச்சிக்கிறேன். சாப்பிடு… எங்கேயாச்சும் வெளில போகனும்னா, போயிட்டு வா. ஷூட்டிங் முடிஞ்சதும் டிஸ்கஷன் நடக்கும். எப்படியாச்சும் சார்கிட்ட பர்மிஷன் வாங்கி உன்னை பார்க்க வர ட்ரை பண்றேன்.” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.

அக்னியோ எதையும் காதில் வாங்காது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நிற்க, அதை கவனித்தவன் அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு, “இந்த படத்துல யாரு ஹீரோயின்னு சொல்லு” என்று சிரிப்புடன் கேட்டான்.

அவனுடைய கண்கள் மின்ன, “ஜானுவா?” என்று கேட்டதில், சிரித்தவாறு ‘ஆம்’ என்று ராகவ் தலையசைக்க, தன்னவளின் நினைவுகளில் மூழ்கிப் போனான் அக்னி.

சினிமாத்துறையில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றும் ராகவ்விற்கு இந்த படமே முதல் வாய்ப்பு. இந்த படப்பிடிப்புகளுக்காகவே தன்  குழுவுடன் அவன் லோஸ் ஏன்ஜல்ஸ் வந்திருக்க, அக்னியோ ‘அவனை விட்டு இருக்க முடியாது’ என்று அலுச்சாட்டியம் செய்து கூடவே வந்திருந்தான்.

வேறு வழியில்லாமல் அவனையும் கூடவே இழுத்துக் கொண்டு வந்தவன், குழுவுடன் இல்லாது அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி அக்னியை தனியாக தங்க வைத்துக் கொண்டான். அதற்கு இந்த படத்திற்கான தயாரிப்பாளர் அவனுடைய நெருங்கிய நண்பனாகிப் போனது ராகவ்விற்கு வசதியாகிப் போனது.

இன்றே படத்திற்கான முதல் படப்பிடிப்பு ஆரம்பம். ராகவ் சென்றதுமே அறைக்குள் வந்த அக்னி தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து, தனக்கு எதிரே இருந்த வெற்று காகிதத்தை பார்த்தவாறு ஒரு கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டான்.

தன் ஆழ்மனதில் உள்ள காட்சிகளை படமாக வரைய அவன் கையாளும் முறையே இது. ஓவியத்தில் அவனுடைய திறமையும் அப்படி!

காட்சியை அவன் வரைய ஆரம்பிக்க, அவனின் ஆழ்மனதில் உள்ள அவளவனின் முகம் அவனிதழை தானாகவே மலரச் செய்தது. கண்களை கட்டியவாறு அவன் வரைந்துக் கொண்டிருக்க, திடீரென தோன்றிய சில நினைவுகள் அவன் மனதை மொத்தமாக புரளச் செய்தது.

முயன்றவரை தலையை உலுக்கி தன்னை அவன் சமன்செய்ய போராட, ஒருகட்டத்தில் முடியாமல் கண்களை கட்டியிருந்த துணியை அவிழ்த்து தான் வரைந்திருந்த காட்சியை பார்த்தான். தன்னவளின் முகத்திற்கு மேல் தான் வரைந்திருந்த சின்னம் அவனை நிலைகுழையச் செய்தது.

அதிலிருந்த விடுபட தலையை அழுந்தக் கோதி தன்னை ஆசுவாசப்படுத்திய அந்த ஆண்மகன் அடுத்தகணம் சில விசும்பல்களுடன் ஆரம்பித்து அழ ஆரம்பித்து விட்டான்.

“ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கனும்? நான் நானாகவே இருந்திருக்க கூடாதா? எல்லாமே என்னோட முட்டாள்தனம். ச்சே… என்னை மன்னிச்சிரு ஜானு” என்று தனக்குத் தானே வாய்விட்டு கேட்டு, கதறியவாறு தரையிலேயே சுருண்டு படுத்துக் கொண்டான் அக்னி.

அன்று இரவு, 

படப்பிடிப்பு, கலந்துரையாடல்கள் முடித்து தயாரிப்பாளரிடம் கெஞ்சி கூத்தாடி அக்னியை பார்க்க வந்த ராகவ், உணவு மேசையை பார்க்க அதிர்ந்து விட்டான்.

காலையில் வைத்து சென்ற உணவுகள் அப்படியே இருக்க, அடுத்தகணம் தன் நண்பனின் அறைக்கதவை வேகமாக திறந்துக் கொண்டு உள்ளே சென்றான் அவன்.

அங்கு அக்னி தரையிலேயே மயங்கியிருக்க, ‘இவன…’ என்று பல்லைகடித்த ராகவ், வேகமாக தண்ணீர் தெளித்து அவனை எழுப்ப முயற்சித்தான். கஷ்டப்பட்டு மயக்கம் தெளிந்து கண்களை திறந்தவனை கை தாங்கலாக தூக்கி, கட்டிலில் சாய்வாக அமர வைத்தவன், அவனை முறைக்க தவறவில்லை.

அக்னியும் எதுவும் பேசாது அமைதியாக இருக்க, வேகமாக உணவை தயாரித்து எடுத்து வந்து, அவனே தன் நண்பனுக்கு ஊட்டி விட்டான். தன் கண்களை பார்க்க மறுத்து அமைதியாக உணவை வாங்கிக் கொண்டவனை பார்க்க பார்க்க ராகவ்விற்கு தான் கோபம் உச்சத்தை தொட்டது.

அவன் சாப்பிட்டு முடித்ததும் தட்டை கழுவி வைத்து அவன் எதிரில் வந்து நின்ற ராகவ், “இப்போ பரவாயில்லையா?” என்று இறுகிய குரலில் கேட்க, ‘ஆம்’ என்று அவன் தலையசைத்ததும் தான் தாமதம் அடுத்தநொடி ‘பளார்’ என அவனை அறைந்திருந்தான். ஒரு நண்பனாக அவன் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

-ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!