அனல் பார்வை 09🔥

அனல் பார்வை 09🔥

 

தன் கையில் கிடந்த அருவியையே அக்னி அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்க,  அவளோ சுயநினைவே இல்லாமல் மயங்கிக் கிடந்திருந்தாள்.

‘அய்யோ! இந்த பொண்ணா? அன்னைக்கு தொட்டதுக்கே என் முகத்துல ஜூஸ் அ ஊத்தினாங்க. இப்போ என்ன பண்ண போறாங்களோ…? ஆனாலும், நாம என்ன அவ்வளவு வேகமாவா ஓட்டினோம்? வண்டி ஓட்டத்தெரியாம தட்டுத்தடுமாறி நாம ஓட்டின வேகத்துல இடிச்சா மயங்கி விழுந்திருக்காங்க?’ என்று மானசீகமாக புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவனுக்கு அப்போது ஒரேயொரு யோசனை தான் தோன்ற, அடுத்தநொடி மயங்கியிருந்தவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான் அவன்.

சமைத்துக் கொண்டிருந்த ராகவ் அழைப்பு மணி சத்தம் கேட்டதில் ‘அக்னி தான்’ என்று அறிந்து வேகமாக சென்று கதவை திறக்க, தன் முன் அருவியை தோளில் சாய்த்து இடுப்பில் கைக்கொடுத்து தாங்கிய வண்ணம் நின்றிருந்த அக்னியை பார்த்து அதிர்ந்து, அவன் தோளில் சாய்ந்திருந்த அருவியை பார்த்து பதறியே விட்டான்.

“டேய்! இந்த பொண்ண ஏன் டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க? ஆமா… இவன் ஏன் உன் தோள்ல சாய்ந்து தூங்கிக்கிட்டு இருக்கா?” என்று ராகவ் பதட்டமாக கேட்க,

“ராகு, இந்த பொண்ணு தூங்கல. மயக்கத்துல இருக்கா. நான் வண்டியை ஓட்டிட்டு போனேனா! இந்த பொண்ணு என் வண்டி முன்னாடி வந்து விழுந்துட்டா. நான் மோதிட்டேனா? இல்லை, ஏற்கனவே மயங்கி விழ போன பொண்ணு முன்னாடி தான் நான் வண்டியை கொண்டு போனேனான்னு எனக்கே தெரியல. அதுவும் இந்த பொண்ணு மேல கெட்ட வாடை வேற வருது ராகு…” என்று முகத்தை சுழித்தவாறு சொல்லி முடித்தான் அக்னி.

“க்கும்! சார் ஓட்டிட்டு போன வேகத்துக்கு யாராச்சும் இடிச்சி மயங்கிட்டாலும்… நடந்து போறவனே உன்னை விட வேகமா போயிருப்பான் டா.” என்றவன் அப்போது தான் அருவியை உற்றுப் பார்க்க, அவளோ ஏதேதோ முணுமுணுத்தவாறு அக்னியின் தோளில் சாய்ந்திருந்தாள்.

அவளின் முணங்கலிலும், அவளின் மேலிருந்து வந்த நெடியிலுமே ராகவ்விற்கு புரிந்து போனது. உச்ச கட்ட போதையில் அவள் இருக்கிறாள் என்று…

“ஆகு, இந்த பொண்ணு போதையில மயங்கியிருக்கு டா. நல்லா மூக்கு முட்ட குடிச்சிருக்குன்னு மட்டும் தெரியுது. இவள ஏன்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்த? அப்படியே அங்க விட்டுட்டு வர வேண்டியது தானே…” என்று ராகவ் திட்ட,

உதட்டை பிதுக்கிய அக்னி, “அது எப்படி ராகு, விட்டுட்டு வர முடியும்? ஆமா… இந்த பொண்ணு அப்படி என்ன குடிச்சிருக்குன்னு இப்படி இருக்கா? பாவம்ல…?” என்று புரியாது பேச, ராகவ்விற்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது.

அப்போது தான் ராகவ்விற்கு தன் வண்டியின் நியாபகம் வர, “ஆகு, என் புது பைக் எங்க டா?” என்று அவன் கேட்க, திருதிருவென விழித்தவன் மீண்டும் அருவியை கைகளில் ஏந்திச்சென்று ஹோல் சோஃபாவில் அவளை படுக்க வைக்க, ராகவ்வோ தன்னை கண்டுக்காது சென்றவனை தான் உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான்.

“அது வந்து ராகு… இந்த பொண்ணு கீழ விழுந்ததும் நான் தான் இவங்கள மோதி கொன்னுட்டேனோன்னு பயந்து வண்டியை அப்படியே போட்டுட்டு, இவங்கள வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன்” என்று அக்னி சாதாரணமா சொல்ல, ‘அய்யோ! என் வண்டி…’ என்று அலறியவாறு தன் வண்டியை எடுக்க ஓடினான் ராகவ்.

இரண்டுமணி நேரம் கழித்து,

அக்னியோ கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சோஃபாவில் படுத்திருந்த அருவியையே இமைக்காது பார்த்திருந்தான். ஏனோ அவன் மனதில் இனம்புரியாத உணர்வு.

இதுவரை தான் பார்த்து வளர்ந்த பெண்களை விடவும் அருவியின் தோற்றம் அத்தனை வித்தியாசமாக இருந்தது அவனுக்கு. அதுவும், அருவியின் விழிகள்! அன்று அவளின் விழிகளை பார்த்ததிலிருந்து இன்றுவரை அந்த கண்களை நினைக்காத நாளில்லை.

தான் கனவில் கண்ட அதே கண்கள்! ஆனால், அவனுக்குள் ஒரு சந்தேகம்… அதை அவன் மட்டுமே அறிவான்.

இவ்வாறு அக்னி ஏதேதோ யோசித்தவாறு அருவியையே பார்த்திருக்க, அவனுக்கு பக்கத்திலிருந்த ராகவ்வோ அக்னியை தான் உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான். ‘நடுவீதியில் சாவியுடன் தன் வண்டியை அம்போன்னு விட்டு வந்த தன் நண்பனை என்ன செய்தால் தகும்’ என்றிருந்தது அவனுக்கு.

ராகவ்வுடைய நல்ல நேரமோ என்னவோ? அந்த தெருவில் சில நல்ல உள்ளங்கள் இருக்கப்போய் அவனின் வண்டியை நடுவீதியிலிருந்து நகர்த்தி வீதியோரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தன் நண்பனின் முறைப்பை அறியாதவனா அக்னி! தன் நண்பனின் புறம் பார்வையை திருப்பவேயில்லை அவன்.

லேசாக கண்விழித்த அருவி, ஏதோ தன் வீட்டில் இருப்பது போன்ற நினைப்பில் நிறுத்தி நிதானமாக சோம்பலை முறித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள். மது அருந்தியதாலோ என்னவோ? தலைவலி வேறு அவளை பாடாய்படுத்த, வலியால் முகத்தை சுருக்கியவாறு நெற்றியை ஒருவிரலால் நீவி விட்டுக் கொண்டாள்.

கண்களை முழுதாக திறக்காமலே, “ச்சே… இந்த சனியன இனி தொடவே கூடாது. ஹேங்கோவர் தொல்லை தாங்க முடியல” என்று வாய்விட்டே புலம்பியவாறு கண்களை திறந்தவள், தன் முன் நின்றிருந்த இருவரையும் பார்த்து ‘ஆஆ…’ என்று கத்த, அவளின் கத்தலில் திடுக்கிட்ட இரு நட்புகள் கூட அவளுடன் சேர்ந்து ‘ஆஆ…’ என்று அலறிவிட்டனர்.

“ஏய், நீங்களா? என்ன டா பண்ணீங்க என்னை? புரிஞ்சி போச்சு. எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு. ஒரு பொண்ணு சுயநினைவில்லாம இருந்தா உங்க இச்சைக்கு பயன்படுத்திருவீங்கல்ல… ச்சே… என்ன மனுஷங்க நீங்க? இப்போவே உங்கள போலிஸ்கிட்ட மாட்டிவிட்டு…” என்று அவள் முடிக்கவில்லை, பக்கத்திலிருந்த பூச்சாடியை நிலத்தில் தூக்கிப் போட்டு உடைத்தான் அக்னி.

அருவியோ திடுக்கிட்டு அவனை பார்க்க, அவளை முறைத்து பார்த்தவன், “நீங்க தான் அந்த ரோட்ல மயங்கி விழுந்துடீங்க. நான் கூட என் மேல தான் தப்புன்னு நினைச்சு உங்கள இங்க கூட்டிட்டு வந்தேன். அப்றம் தான் தெரியுது நீங்க போதையில மயங்கியிருக்கீங்கன்னு… பண்ண உதவிக்கு நன்றி சொல்லலன்னாலும் பரவாயில்லை. தப்பான கண்ணோட்டத்துல பார்க்காதீங்க” என்ற அக்னியின் வார்த்தைகள் காட்டமாக விழ,

ராகவ்வோட தன் நண்பனை இமைக்காது பார்த்திருந்தான். அவனுக்கு கூட இதெல்லாம் புரிந்து தானே…

அருவிக்கு கூட ‘தான் பேசியது அதிகப்படியோ?’ என்று தோன்ற, இருவரையும் அழுத்தமாக பார்த்தவள், அப்படியே சோஃபாவில் பொத்தென அமர்ந்து நெற்றியை நீவிவிட்டவாறு, “ரொம்ப தலை வலிக்குது. லெமன் ஜூஸ் போட்டு கொண்டு வர்றீயா? என்ட், ஒரு முக்கியமான கோல் பண்ணனும். என் ஃபோன மிஸ் பண்ணிட்டேன்.” என்று சொல்ல,

‘இந்த பொண்ணுக்கு மரியாதைன்னா என்னன்னே தெரியாதா?’ என்று யோசித்த ராகவ், தன் அலைப்பேசியை அவளிடம் நீட்டி அக்னியிடம் கண்களால் அவளை ஜாடை காட்டிவிட்டு சமையலறைக்குள் நுழைய, அவளோ தன் எண்ணிற்கு தான் அழைத்தாள்.

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும், “ஹெலோ… நான் அருவி பே…” என்று அவள் சொன்னதும் தான் தாமதம், மறுமுனையில் விழுந்த தமிழ், ஆங்கிலம் கலந்த திட்டுக்களில் அலைப்பேசியை காதிலிருந்து தூரமாக தள்ளி பிடித்துக் கொண்டாள் அவள். வேறு யாரு தாரக் தான்!

நன்றாக மூக்கு முட்ட குடித்தவள், உச்சகட்ட போதையில் தனது பொருட்களை அங்கேயே அப்படியே போட்டுவிட்டு வெளியேறிவிட, அவளை கவனிக்கும் அந்த ஸ்பானியன் கூட வேறு வாடிக்கையாளரை கவனித்துக் கொண்டிருந்ததால் இவளை கவனிக்கவில்லை.

அதன்பிறகு தான் இவளை காணாது பதறிய அந்த ஸ்பானியன் பேரர், அடுத்தகணம் தாரக்கிற்கு அழைத்து அவளிடம் விடயத்தை கூறி, அவன் வந்ததும் அவனிடம் பொருட்களை ஒப்படைத்து விட்டான்.

குடித்துவிட்டு வீதியில் நடந்தவள், அக்னியின் வண்டியின் முன்னே சுயநினைவை இழந்து மயங்கிவிழ, தாரக்கோ உச்சகட்ட கோபத்தில் இவளை அங்கு இங்கு என தேடிக் கொண்டிருந்தான்.

“ஓகே… ச்சில் தாரக். இன்னும் டென் மினிட்ஸ்ல வீட்ல இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவள், அலைப்பேசியை டீபாயில் போட்டுவிட்டு தன் முன் நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.

அவனை உற்றுப் பார்த்தவள், “என்ன என்னை சைட் அடிக்கிறியா?” என்று முறைப்பாக கேட்க, புருவத்தை நெறித்து அவள் சொன்னது புரியாது விழித்த அக்னி, எதுவும் பேசாது அப்போதும் அவளையே பார்த்தவாறு இருக்க, அருவிக்கு தான் கடுப்பாகிப் போனது.

அதேநேரம் ராகவ்வும் தேசிக்காய் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க, அதை மடமடவென குடித்தவள், கண்களை மூடி அப்படியே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

“என்ன டா இந்த சரவெடி இங்கேயே டேரா போட்டுட்டா?” என்று ராகவ் தன் நண்பனின் காதில் கிசுகிசுக்க, அவனுக்கோ அவள் தலைவலியில் கண்களை மூடி இருப்பது நன்றாகவே புரிந்தது.

வேகமாக அறைக்குள் ஓடிய அக்னி, ராகவ் தலைவலியின் போது தேய்க்கும் தைலத்தை எடுத்து வந்து, “ராகு தலை வலிக்கும் போது இதை போட்டுக்குவான். உடனே சரியாகிடும்” என்று சொன்னவாறு தயக்கமாக அதை நீட்ட, அவனின் குரலில் கண்களை திறந்தவளுக்கு தன் மஹிமாவே தன் கண் முன் இருப்பது போல் இருந்தது.

சட்டென்று அவள் ஓவென்று அழ, அக்னியோ திடுக்கிட்டு போய்விட்டான். இருவரும் அவளை மிரண்டு போய் பார்க்க, அருவியோ விம்மி விம்மி அழ, அவளை தேற்றுவார் யாருமில்லை. அவளின் அழுகை அக்னிக்கு வேதனையை கொடுத்தாலும், ஒருவித பயம், தயக்கம் அவளை நெருங்க விடவில்லை.

முயன்று தன்னை நிதானப்படுத்தியவள், “சோரி…” என்றுவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, “சாப்பிட்டீங்களா?” என்று அக்னி சட்டென கேட்டதில், விழிவிரித்து அவனை திரும்பி பார்த்தாள் அவள்.

ராகவ்வோ அக்னியின் கையை அழுத்தி, “டேய்! என்ன டா பண்ணிக்கிட்டு இருக்க? அவ சாப்பிடுறாளோ, சாப்பிடல்லையோ அதை பத்தி உனக்கு என்ன? வேலில போற ஓணான வேட்டில விடுற கதையால இருக்கு.” என்று திட்ட,

“நான் எப்போ ராகு ஓணான வேட்டில விட்டேன்? அதுசரி… வேட்டின்னா என்ன?” என்று தன் கேள்விக்கணைகளை அக்னி ஆரம்பிக்க, ராகவ்விற்கோ ‘ஏன் தான் அதை சொன்னோம்?’ என்றிருந்தது.

அக்னியோ ராகவ் பேசியதை மறந்துவிட்டு மீண்டும் அருவியின் பதிலுக்காக காத்திருக்க, அவனை ஏக்கமாக பார்த்தவள், “பசிக்குது. சாப்பிட ஏதாச்சும் இருக்கா?” என்று கேட்டாள். ஏனோ அக்னியுடைய ஒவ்வொரு செயலும் அருவிக்கு அவளுடைய மஹிமாவையே நியாபகப்படுத்தியது.

எந்த பாசம் தொலைந்தது என்று நினைத்தாளோ, அதே பாசம் திரும்ப கிடைத்த உணர்வு. மஹிமா இறந்த இந்த ஒருவாரத்தில் அவளிடம் ‘சாப்பிட்டியா?’ என்று கேட்க கூட நாதியில்லை.

பெற்ற தாய் அவளை கண்டுக்காது இருக்க, தாரக்கோ வேலையிலிருந்து வீட்டுக்கு வருவதே இரவு தாமதமாகத் தான். அதுவும் பாரிலிருந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்பவன், ‘சாப்பிட்டியா?’ என்று ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டான்.

தனக்காக தனக்கு மட்டுமே அன்பு பொழிந்த ஜீவனுக்காக அவள் ஏங்க, சரியாக அக்னியின் இந்த அக்கறை அவளின் மனதை அசைத்துப் பார்த்தது.

உணவு மேசைக்கு அவள் பாட்டிற்கு சென்று அமர, அக்னியோ வேகவேகமாக சமையலறைக்கு சென்றவன் பாத்திரங்களை உருட்டி உணவை தேடினான். அப்போது தான் ராகவ் அவனுக்கென்று செய்து வைத்திருந்த பாஸ்தா அவன் கண்ணில் தென்பட்டது.

அக்னி, ராகவ் விரும்பி உண்ணும் உணவுகளை தொட்டு கூட பார்க்க மாட்டான். ராகவ்வும் அக்னிக்கு பிடித்தது போன்று பழங்கள், காய்கறிகள் வைத்து அவனுக்கான உணவை செய்த பிறகே தனக்கான உணவை செய்வான்.

இப்போது அக்னியில் கண்ணில் அந்த பாஸ்தா தென்படவும் வேகமாக அதை எடுத்தவன், அருவிக்கு கொண்டு வந்து பரிமாற, ‘அட கிராதகா!’ என்று நினைத்த வண்ணம் அவனை ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்தான் ராகவ்.

உணவை உண்டவளுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. அவளுக்கு பார்த்து பார்த்து அக்னி பரிமாற, அவளுக்கு இடையில் புரையேறவும் அவனே அவளுக்கு தண்ணீர் புகட்டினான். அக்னியின் ஒவ்வொரு செயலும் அவளின் ஆழ்மனதை தொட்டுச் செல்ல, அவனை பார்த்தவாறே சாப்பிட்டு முடித்தாள் அருவி.

முதல் சந்திப்பு மோதலாக ஆரம்பித்தாலும், ஏனோ இப்போது அக்னியின் செய்கைகள் அவளுக்குள் புது உணர்வுகளை தோற்றுவிக்க, அக்னிக்கோ அப்படி எல்லாம் இல்லை போலும்!

ஏதோ ஒருவித பாசப்பிணைப்பில் அவளை பார்த்து பார்த்து கவனித்தவன், அவளின் கண்களை மட்டும் அடிக்கடி ஆராயும் பார்வையுடன் நோக்கினான். அக்னியின் அந்த ஆராய்ச்சி பார்வை கூட அருவியின் உடலை சிலிர்க்க வைத்தது.

இருவரையும் மாறி மாறி முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ராகவ்விற்கு அருவியின் அக்னி மீதான ஏக்கப் பார்வை கோபத்தையும், பொறாமையையும் உண்டு பண்ணியது. ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்று தொண்டையை செறுமியவன், “அக்னி உனக்கு தூக்கம் வரல?” என்று அருவியை துரத்துவதற்காகவே கேட்க, அவளும் அப்போது தான் நேரத்தை பார்த்தாள்.

அக்னியோ ராகவ் சொன்னதில் சட்டென திரும்பி அவனை முறைக்க, ராகவ்வோ வேறு எங்கோ பார்ப்பது போன்று பாவனை செய்தான். வாசல் வரை சென்ற அருவி திரும்பி மெல்லிய புன்னகையுடன் அக்னியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற, அடுத்தநொடி அவள் பின்னாலே அக்னி ஓட, “டேய்… டேய்…” என்ற ராகவ்வின் கத்தல் அவனின் காதில் விழுந்தால் தானே!

“உங்களுக்கு இப்போ தலைவலி சரியாகிருச்சா?” என்ற அக்னியின் வார்த்தைகளில் சட்டென நின்று புருவத்தை நெறித்தவாறு அவனை ஆழ்ந்து பார்த்தவள், “என் மேல எதுக்கு இவ்வளவு அக்கறை காட்டுற? எனக்கு இது பிடிக்கல. நீ என்கிட்ட இப்படி நடந்துக்குறது எனக்கு பயமா இருக்கு.” என்ற அவளின் வார்த்தைகளில் அத்தனை வலி!

அக்னியோ எதுவும் பேசாது அவளின் விழிகளையே பார்த்தவாறு இருக்க, “உன் பேரென்ன?” என்று கேட்டு, புன்னகையுடன் அவனை கேள்வியாக பார்த்தாள் அருவி.

அவனும் தன் பெயரை ஆர்வமாக சொல்ல வர, அதற்குள் அவளே “மஹி…” என்றாள் சட்டென்று கண்களில் ஒரு ஏக்கத்துடன். அவளுக்கு ஏனோ தனது மஹிமாவே தன் முன் இருப்பது போல் தோன்றியது. தான் இழந்த தன் வளர்ப்பு தாயின் பாசம் மீண்டும் கிடைத்த உணர்வு அவளுக்கு. அவனின் பெயரை கூட கேட்காது ‘மஹி’ என்று ஏக்கத்தோடு அழைத்திருந்தாள் அருவி.

அக்னியோ அவளின் அந்த அழைப்பில் புருவத்தை நெறித்து குழப்பமாக பார்க்க, மென்மையாக புன்னகைத்தவள், “மஹி…” என்று மீண்டும் அழுத்தி சொல்லி, “ஓகே மஹி, குட் நைட். நாளைக்கு பார்க்கலாம்.” என்று சொல்ல, அவனுக்கும் அவள் தன்னை அழைக்கும் பெயரை தாண்டி அவளின் கண்களில் தெரிந்த ஏக்கம் நன்றாக புரிந்தது.

“நாளைக்கு என்னை பார்க்க வருவீங்களா?” என்று தன்னை மீறி ஆர்வமாக அக்னி கேட்ட கேள்வி அவளுக்கு சிரிப்பை தான் கொடுத்தது.

‘தான் ஏன் இவ்வாறு எதிர்ப்பார்க்கிறோம்?’ என்று அவனுக்கும் தெரியவில்லை. ‘அவனின் அக்கறையில் தான் இவ்வாறு வீழ்ந்து விடுவோம்’ என்று அவளும் நினைத்து கூட பார்த்ததில்லை. இருவருக்குமிடையில் காதல் இல்லாது காதலை தொட்டு விடும் தூரத்தில் ஒரு மெல்லிய உறவு இழையோட, அது இருவருக்கும் பிடித்து தான் இருந்தது.

அந்த நினைவுகளை நினைத்தவாறு தூங்கியவனின் தூக்கத்தை கலைத்தது அழைப்பு மணி சத்தம். அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தவன், சுற்றி முற்றி பார்க்க, அப்போது தான் அவனுக்கு தான் இருக்கும் இடமே புரிந்தது.

அருவி அவனை தன்னுடைய மேலாளர் வேலைக்கு நியமித்துவிட்டு வீட்டுக்கு பின்புறம் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் தங்க வைத்திருந்தாள்.

அன்று தான் அக்னியின் வேலைக்கான முதல் நாள். அழைப்பு மணி சத்தத்தில் ஓடிச்சென்று கதவை திறந்தவன், தன் முன் நின்றிருந்த அருவியின் முன்னைய மேலாளரை புரியாது பார்க்க, “மேடம் வெயிட் பண்றாங்க. உன் மேல ரொம்ப கோபத்துல இருக்காங்க.” என்று  அவர்  சொன்னதும் தான் தாமதம், அவசரமாக நேரத்தை பார்த்தான் அவன்.

நேரம் அதிகாலை ஐந்து மணி என்று காட்ட, அதை பார்த்தவனோ ‘அதுக்குள்ளயேவா…?’ என்று அதிர்ந்தே விட்டான்.

 

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!