அனல் பார்வை 29🔥

ei9JG6G41705-64bc1f50

“ரொம்ப தேங்க்ஸ் அக்னி ப்ரோ, கண்டிப்பா நீங்க இல்லைன்னா என்னோட தேடல் அ நான் அடைஞ்சிருக்கவே மாட்டேன். எத்தனை வருஷம்? ஷப்பாஹ்… இந்த நகரத்தை தேடி தேடி நிறைய பேரு பைத்தியமானது தான் மிச்சம். பட், நான் வந்துட்டேன். வாவ்!” என்று பேசியவாறு மண்டியிட்டு அமர்ந்த தாரக், தங்கத்துகள்கள் கலந்த மணலை கையிலெடுத்து கீழே கொட்டியவாறு, “இந்த மொத்த தங்கமும் ஒருத்தனுக்கு சொந்தமாகிச்சினா, அவன மிஞ்ச எவன் இருக்கான்?” என்று ஏளனப் புன்னகையுடன் கேட்டான்.

“தாரு, நீ என்ன பேசிக்கிட்டு இருக்க? உனக்கு என்னாச்சு? ஆமா… இவங்கெல்லாம் யாரு? நீ தப்பு பண்ற.” என்று அருவி பதட்டமாக சொல்ல, “ஷட் அப் அரு! உனக்கே தெரியும். எல் டொரேடோ என்னோட எத்தனை வருஷ தேடல்னு. இது மட்டும் நமக்கு சொந்தமாகிச்சின்னா பல தலைமுறைக்கு நாம தான் பணக்காரங்க.” என்று பேராசையுடன் தாரக் சொல்ல, அக்னியோ அருவருப்பாக முகத்தை சுழித்தான்.

“அக்னி, என்ன நடக்குது இங்க? நம்ம நகரத்துக்குள்ள வர்ற வழி இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது? ஒருவேள, இது உன்னோட தப்பு தானா?” என்று டார்சி தன் மகனிடம் காட்டமாக கேட்க, அவரை நேருக்கு நேர் பார்க்க தயங்கியவன் தாரக்கிடம் திரும்பி, “நீ ரொம்ப பெரிய தப்பு பண்ற. இயற்கைய நமக்கு சொந்தமாக்கனும்னு நினைக்கிறது பெரிய தப்பு! அது அந்த இயற்கைக்கு செய்ற துரோகம்!” என்று சொல்ல, தாரக்கின் குழுவினரோ வாய்விட்டு சிரித்தனர்.

“அச்சோ ப்ரோ! எங்களுக்கு அதிகமா எல்லாம் வேணாம். ஃபிஃப்டி ஃபிஃப்டி பிரிச்சிக்கலாம். நாங்களும் எவ்வளவு நாள் தான் தேடல்லயே இருக்குறது?” என்று தாரக் சொல்ல, “டேய்! எக்ஸ்ப்ளோர்ல நீங்க கண்டுபிடிக்கிறதை எப்படி உங்களுக்கு சொந்தமாக்க முடியும்? அது அந்த நாட்டு கவர்மென்ட்க்கு சொந்தம். நீ ஏதோ சொந்தமாக்குறேன், பணக்காரனாகுறேன்னு பேசிக்கிட்டு இருக்க?” என்று புரியாது கேட்டான் ராகவ்.

சில பேர் சிரிக்க, சலிப்பாக இருபக்கமும் தலையாட்டிய தாரக், “ஆமா… நாங்க அலைஞ்சி திரிஞ்சி ஒவ்வொன்னையும் கண்டுபிடிப்போம். அதை அழுங்காம குலுங்காம அவங்க எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. நாங்க நாக்கை தொங்க போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டு இருக்கனுமா?” என்று சலிப்பாக ஆரம்பித்து கோபத்தில் முடித்தவன், “இனிமே, நாங்க அடையுறது எங்களுக்கு தான் சொந்தம். அதை எவனும் சொந்தம் கொண்டாட முடியாது.” என்று வன்மத்துடன் சொன்னான்.

“அப்போ உங்க நாட்டுக்கே நீங்க துரோகம் பண்றீங்க. இயற்கையோட வளங்களை அபகரிக்க நமக்கு எந்த உரிமை கிடையாது. அதனால தான் அந்த இயற்கையே உங்களுக்கு எதிரா திரும்புது. பேராசை ரொம்ப மோசமான மிருகம். அதோட விளைவும் ரொம்ப மோசமா இருக்கும்.” என்று அக்னி இறுகிய குரலில் பேசிக்கொண்டே போக,

அதை குறிக்கிட்ட தாரக், “ச்சீ… ச்சீ… ரொம்ப அட்வைஸ் பண்றான் டா. ஓஹோ! இந்த கூட்டத்தோட தலைவன்ல நீங்க? அப்போ, இப்படி தான் பேச தோணும்.” என்று சொல்லி சிரிக்க, அக்னியோ முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டவில்லை. அழுத்தமாகவே அவர்களை அவன் பார்த்தவாறு இருந்தான். ஆனால், இதழ்கள் சிரிக்கிறதா? என்பது போல் இருந்தது அவனிதழ்கள்.

இதில் அருவி தான் தன் தம்பி நடந்துக்கொள்ளும் முறையில் பதறிவிட்டாள். “தாரு, ஏன் டா இப்படி பண்ற? என் சொத்து முழுக்க உன்னோடது தான். அடுத்தவங்களுக்கு சொந்தமானது நமக்கு வேணாம் டா. இது ரொம்ப பாவம்!” என்று சொல்லி அவள் அழ,

“ஹாஹாஹா பாவமா? பெரியப்பா தான் எதையும் வாழ்க்கையில அனுபவிக்கல. அவரோட தேடல் அ கிடைக்குற சின்ன பொருள கூட கவர்மென்ட்க்கு தூக்கி கொடுத்துட்டு ஏதோ தியாகி மாதிரி நடந்துப்பாரு. லுக்! நீ என் அக்கா தான். அதுக்காக நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது. இனிமே இந்த மொத்த கோல்ட்டும் எனக்கு சொந்தம். யாரு குறுக்கு வந்தாலும் சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்போம். நீ இவங்களை விட்டு தள்ளியே இரு!” என்று கோபத்தில் தாரக் கத்த, இவர்களை பற்றி நன்கு தெரிந்த அருவி தான் ‘தன் தம்பிக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ?’ என்று பதறினாள்.

மொத்த மக்களும் தங்கள் தலைவனை பதற்றமாக பார்த்தவாறு இருக்க, தன் மகனின் முகத்தை கவனித்த டார்சிக்கு எதுவோ ஒன்று புரிந்தது.

அவரின் இதழ்கள் தானாக விரிய முற்பட, அக்னியோ தாரக்கை ஏளனச்சிரிப்புடன் பார்த்தவன், “நீங்களே உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னீங்கன்னா…” என்று கேலியாக இழுக்க, “இதுக்கு தான் ப்ரோ நீங்க வேணுங்கிறது. பெருசா எதுவும் இல்லை. அன்னைக்கு உங்க ஆளுங்க உங்க பாரம்பரிய தங்க நகைகளோட பெறுமதிய பத்தி பேசுறதை கேட்டேன். அதை மட்டும் நீங்க கொடுத்தாலே போதும்.” என்று சொல்ல, “ஆஹான்!” என்று இருபுருவங்களையும் கேலியாக உயர்த்தி கேட்ட அக்னி, சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.

ராகவ்வும், அருவியும் அக்னியை புரியாது பார்க்க, தாரக் கூட அவனின் சிரிப்பில் உள்ளுக்குள் பதறத்தான் செய்தான்.

“குட்டிப்பையா! ஐம்பது பேரோட எங்க நகரத்துக்குள்ள வந்து ஐநூறு பேரை மிரட்டி வளங்களை அபகரிக்க பார்க்குற. ஆளு வளர்ந்த அளவுக்கு மூளை வளரல  உனக்கு. எல்லா இந்த பேராசைய சொல்லனும். தப்பு தப்பா யோசிக்க வைக்கும்.” என்று அக்னி சொல்லி சிரிக்க, தாரக்கிற்கோ கோபம் உச்சத்தை தொட்டது.

தன் துப்பாக்கியை அக்னிக்கு நேராக நீட்டியவன், “என்ன பயம் விட்டு போச்சா? நான் நினைச்சா…” என்று சொல்லி முடிக்கவில்லை, அக்னி இதழை குவித்து விசில் சத்தம் கொடுத்த அடுத்தகணம் தாரக்கின் பின்னால் நின்றிருந்த ஐம்பது பேரும் கீழே விழுந்து கிடந்திருந்தனர்.

தன் ஆட்கள் மொத்த பேரும் தரையில் விழுந்ததில் தாரக் அதிர்ந்து பார்க்க, அருவியும் ராகவ்வும் கூட ‘இப்போ என்ன தான் ஆச்சு?’ என்ற ரீதியில் சுற்றி முற்றி கண்களை சுழலவிட்டு பார்த்தனர். ஆனால் என்ன? அவர்களின் கண்ணிற்கு தான் எதுவுமே தெரியவில்லை.

அக்னியோ ஏளனப்புன்னகையுடன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, டார்சியோ தன் மகனை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தார். பதட்டத்தில் தாரக்கிற்கு வியர்க்க ஆரம்பிக்க, அக்னியை பார்த்தவன், “ஏய்! என்ன பண்ண என் ஆளுங்கள? நான் உன்னை… நான் உன்னை…” என்று தன் கையிலிருந்த துப்பாக்கியை எல்லாரையும் நோக்கி பதட்டத்தில் மாறி மாறி நீட்டியவாறு பின்னால் நகர்ந்தான்.

சொடக்கிட்ட அக்னி அங்கிருந்த ஒரு மரத்தை ஒற்றை விரலால் காட்ட, அதை கூர்ந்து பார்த்த தாரக்கிற்கு அப்போது தான் புரிந்தது. அது தான் அன்றைய கால மக்கள் தங்கள் எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் கொரில்லா முறை. மரத்திற்கு மேல் அல்லது மலைக்கு பின்னால் ஒழிந்திருந்து எதிரிகளை தாக்கும் முறை.

ஆட்கள் உள்ளே நுழைந்து மிரட்டும் போதே வேகத்தை விட விவேகமாக யோசித்த அந்த நகரத்து காவலர்கள் சிலர் யாருடைய கண்ணிலும் சிக்காது மரத்திற்கு பின் மற்றும் அங்கிருந்த சிலைக்கு பின் ஒழிந்திருந்து தங்களின் தலைவனின் கட்டளைக்காக காத்திருக்க, ஏனோ சிறுவயதிலிருந்தே எதிரிகளுடன் மோதவென தங்களை தயார்படுத்திய அவர்களுக்கு இது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.

அக்னி குரல் கொடுத்த அடுத்தநொடி தங்கள் ஈட்டியை தாங்கள் குறி வைத்திருந்த ஒவ்வொருத்தரையும் நோக்கி அவர்கள் எறிய, அதுவும் குறி தப்பாது அவர்களை வீழ்த்தியிருந்தது. அக்னியோ சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை அழுத்தமாக பார்க்க, துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டியிருந்த தாரக்கின் கைகளோ பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.

அங்கிருந்த மக்களோ கோபத்துடன் தாரக்கை நெருங்க, பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாது பயத்தில் ட்ரிகரை அவன் அழுத்தியதும், அது அங்கு நின்றிருந்த டார்சியின் தோள்பட்டையை பதம் பார்த்தது.

அடுத்தநொடி எதுவும் யோசிக்காது தன் பக்கத்திலிருந்த காவலனின் கையிலிருந்த ஈட்டியை மின்னல் வேகத்தில் தன் கைக்குக் கொண்டு வந்த அக்னி, அந்த ஈட்டியை தாரக்கை நோக்கி எறிய அதுவோ அவனின் தோளை தாக்கியதில், “ஆஆ…” என்று கத்தியவாறு வலியில் கையிலிருந்த துப்பாக்கியை கீழே போட்டான் தாரக்.

சுற்றி இருந்தவர்கள் டார்சியை வேகமாக மருத்துவ கூடத்திற்கு அழைத்துச் செல்ல, அக்னியோ உச்சகட்ட கோபத்தில் அடுத்த ஈட்டியை தன் கையில் எடுத்து தாரக்கை நோக்கி செல்ல போனான். ஆனால், “தாரு…” என்ற அருவியின் கதறலில் சட்டென்று நின்று திரும்பி பார்த்தான் அவன்.

என்ன தான் இருந்தாலும் கூடப்பிறக்காத தம்பி தானே அவன் அவளுக்கு! பேராசை ஒன்றில் மட்டுமே சறுக்கி விழுந்தவன் அருவிக்கு நல்ல தம்பியாக தானே இருந்தான். ஈட்டியால் காயம் உண்டானதும் அவன் வலியில் கத்த, தன்னை மீறி அவனின் காயத்தை பார்த்து கத்திய அருவி அக்னியின் பார்வை தன் மீது படிந்ததும் அவனை இறைஞ்சும் பார்வையுடன் நோக்கினாள்.

கண்களை அழுந்த மூடி திறந்தவன், ஈட்டியை தரையில் போட்டுவிட்டு காவலர்களிடம் தாரக்கை அழைத்துச் செல்லுமாறு கண்ணை காட்ட, அவர்களும் அடுத்த கணம் அவனை இழுத்துச் செல்ல, “அரு, என்னை காப்பாத்து! தெரியாம பண்ணிட்டேன். பயமா இருக்கு க்கா. ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போக வேணாம்னு சொல்லு!” என்ற தாரக்கின் வார்த்தைகள் காற்றில் கரைந்துத் தான் போனது.

ஆய்வுப்பயணம் மேற்கொள்பவன் அவனின் இந்த நிலைக்கு பேராசையே காரணமாகிப் போனது. அரசாங்கத்திற்கு கொடுக்காது தானே சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசையில் அக்னியின் உதவியால் நகரத்திலிருந்து வெளியேறி, மனோவா நகரத்துக்குள் அருவியுடன் வருவதற்கு முன்னே அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த தனது ஆட்களுடன் திட்டமிட்டு உள்ளே வந்தான்.

ஆனால், அக்னியின் விவேகம் அவனின் பேராசையை மிஞ்சி விட்டது. விளைவுகளை யோசிக்காது அவன் செய்த செயல் அவனுக்கே ஆப்பாக திரும்பி விட, தாரக்கை கொல்லாது தன்னவன் விட்டதே அருவிக்கு போதுமென்று இருந்தது.

தாரக்கை இழுத்துச் சென்றதும் அக்னி வேகமாக சென்றது தன் அம்மாவை பார்க்க தான். அருவியும், ராகவ்வும் கூட பதட்டமாக அந்த மண்டபத்தின் வாசலில் நின்றிருக்க, உள்ளிருந்து வந்த அக்னியை பார்த்த ராகவ், “ஆகு, அம்மாவுக்கு?” என்று பதட்டமாக கேட்டான்.

அக்னி சொல்ல வருவதற்கு முன்னே அருவியோ பதட்டத்தில், “மஹி, நாம வேணா ஆன்ட்டிய காட்டுக்கு வெளில இருக்க நல்ல ஹோஸ்பிடல் ஆ கூட்டிட்டு போகலாமா? இங்க எப்படி?” என்று கேட்க,

அதில் அவளை அழுத்தமாக பார்த்தவன், “பலநூறு வருஷங்களுக்கு முன்னாடி நடந்த யுத்தங்கள்ல உண்டாகுற காயத்துக்கு இந்த மாதிரியான மூலிகை மருந்து தான் பயன்படுத்தினாங்க. உங்க மருத்துவம் குணமாக்கும். கூடவே, அதுக்கு அடிமையாக்கும். உங்க மருத்துவம் குணப்படுத்துறதை விட எங்க மருத்துவம் ரொம்ப சீக்கிரமே குணப்படுத்தும்.” என்றுவிட்டு, “அம்மா இப்போ மயக்கத்துல இருக்காங்க. சிகிச்சை நடந்துக்கிட்டு இருக்கு.” என்று சொல்லி முடித்து நகர, அருவியும் ராகவ்வும் ஒருவரையொருவர் திருதிருவென விழித்தவாறு பார்த்துக் கொண்டனர்.

சிகிச்சை முடித்து டார்சி மயக்கத்தில் இருக்க, அவர் கண்விழிக்கும் வரை அக்னி தான் ஒரு நிலையிலில்லை. தாரக் மீது உச்சகட்ட கோபம் இருந்தும் அருவியின் அந்த யாசிக்கும் பார்வைக்காக விட்டாலும், தன் அம்மாவின் நிலையை நினைத்து இறுகிய முகமாக அவன் இருக்க, அருவி தான் தன்னவனையே குற்றவுணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிலமணி நேரம் கழித்து கண்விழித்த டார்சி தன்னை பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்த தன் மகனை கண்களால் அருகே வரும்படி சைகை செய்ய, அக்னியும் வேகமாக அவரை நெருங்கி அவரருகில் அமர்ந்துக் கொண்டான்.

தவறு செய்ய சிறுகுழந்தையாய் தலைக்குனிந்து அமர்ந்திருந்தவன், “என்னை மன்னிச்சிடுங்க மமா. நான் தான்…” என்று  தயக்கமாக பேச வர, இங்கு அருவியோ, “சாகு, எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு டா. நாம இங்கயிருந்து போயிரலாம். என்னால தான் டா.” என்று ராகவ்விடம் புலம்ப, அவனோ, “நாம என்ன போக? எழுந்து வந்ததும் அவங்களே நம்மள கழுத்தை பிடிச்சி வெளில தள்ள போறாங்க.” என்று சலித்தவாறு சொல்லிக் கொண்டான்.

அக்னியின் மன்னிப்புக்கு எந்த பதிலும் சொல்லாது டார்சி அவனை தாண்டி  கண்களை சுழலவிட்டு யாரையோ தேட, அவனோ தன் அம்மாவை புரியாது பார்த்தான். அவருடைய தேடல் அவரின் கண்களுக்கு சிக்கியதும் கண்களால் அவர் அவளை அழைக்க, அருவியோ பதறிவிட்டாள்.

“அய்யய்யோ சாகு! அவங்க என்னை கூப்பிட்டு திட்ட போறாங்க. நான் போக மாட்டேன்.” என்று அருவி ராகவ்வின் கையை பிடித்து சிறுகுழந்தை போல் சொல்ல, “ஏய் ராங்கி! பெரிய பருப்பு மாதிரி பேசுவல்ல, போ! போய் பேசு!” என்று அவளை பிடித்து தள்ளிவிட்டான் அவன்.

அவளோ பெக்கபெக்கவென விழித்தவாறு அவர் முன் நிற்க, அக்னி தான் தன்னவளையும், தன் அம்மாவையும் மாறி மாறி புரியாமல் பார்த்தான்.

டார்சி பேசும் முன் அவரை இடையிட்டு குறிக்கிட்டவள், “என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி, தாரக் அ நான் தான் அழைச்சிட்டு வந்தேன். என்னால தான் இப்போ பிரச்சினை ஆகிருச்சி. நான் இங்கயிருந்து போயிடுறேன். மஹிய ரொம்ப காதலிக்கிறேன். மறக்க முடியாது தான். அவனோட நினைவுகளே எனக்கு போதும், இனி என்னோட வாழ்க்கைய வாழ. இதுக்கு மேல என்னால என் மஹி கஷ்டப்பட வேணாம்.” என்று அவள் பாட்டிற்கு ஏதோ தனக்கு தெரிந்த அரைகுறை ஸ்பானிஷில் பேசிக்கொண்டே போனாள்.

அவளை புன்னகையுடன் பார்த்தவர், “ஒரு சந்தோஷத்திற்காக இன்னொரு தடவை எங்க மனோவா ஓட சட்டத்தை மீறுறது தப்பில்லைன்னு தோணுது. எங்க இனத்தை சேர்ந்த பொண்ணை விட அவன காதலிக்கிற பொண்ணு தான் அவனுக்கு பொருத்தமா இருப்பா. இனிமே தான் மனோவா மக்களோட தலைவியா உனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று சொல்ல, அக்னியோ, “அம்மா…” என்று சந்தோஷம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தான்.

ஆனால், அருவிக்கு தான் எதுவுமே புரியவில்லை. புருவத்தை நெறித்து அவர் பேசியதை அவள் உள்வாங்கிக்கொள்ள முயற்சிக்க, ராகவ் தான், “அவங்க உன்னை மருமகளா ஏத்துக்கிட்டாங்க டி. சூப்பரு…” என்று சந்தோஷத்தில் கத்தவிட, “நிஜமாவா டா?!” என்று கண்களை அகல விரித்து அதிர்ச்சியாக கேட்டவள், “யாஹூ… தேங்க்ஸ் ஆன்ட்டி அய்யோ! அத்தை… அய்யோ! டேய் அத்தைக்கு ஸ்பானிஷ்ல எப்படி டா சொல்றது?” என்று  சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாது தடுமாற, அக்னியோ புன்னகையுடன் அவளை பார்த்திருந்தான்.

சுற்றி இருந்தவர்கள் அருவியினதும், ராகவ்வினதும் கத்தலில் சற்று மிரண்டு, “ஷ்ஷ்…” என்று உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு சொல்ல, “சோரி… சோரி…” என்றவாறு அமைதியான அருவி கலங்கிய விழிகளுடன் டார்சியை ஏறிட்டு பார்த்தாள். அவரோ புன்னகையுடன் அவளை பார்த்தவர் அக்னியை அதே புன்னகையுடன் நோக்க, அக்னியின் பார்வையோ அடுத்து பதிந்தது என்னவோ ராகவ்வின் மீது தான்.

“ராகு நீ…” என்று அக்னி தன் கேள்வியை கேட்க வர, அவனை இடைவெட்டிய ராகவ், “நான் போகனும் ஆகு, எனக்கான இடம் வெளில தான் இருக்கு. அம்மா அப்பா வாழ்ந்த வீட்டுக்கு போகனும். நான் இங்கயிருந்து போயாகனும்.” என்று சொல்லும் போதே ‘தன் நண்பனை விட்டு பிரிய போகிறோம்.’ என்று மனதில் சுருக்கென்ற வலி தைக்க தான் செய்தது அவனுக்கு!

அக்னிக்கு ராகவ்வுடன் பழகும் போது அவன் சொல்லும், ‘நான் என் அப்பா அம்மா கூட சின்ன வயசுல வாழ்ந்த வீட்டுக்கு போகனும்.’ என்ற அவனது ஆசை தான் நியாபகத்திற்கு வந்தது.

ராகவ்வை இறுக அணைத்துக்கொண்டு, “உன் இஷ்டம் ராகு, எப்போவும் உன் நியாபகம் எனக்கு இருக்கும்.” என்று அக்னி கலங்கிய விழிகளுடன் சொல்ல, “நீ போயே ஆகனுமா சாகு? ஏன் டா இப்படி பண்ற?” என்று அவனை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் அருவி. என்ன தான் அவனுடன் கீரியை பார்க்கும் பாம்பு போல் சண்டை போட்டாலும் அவன் மேல் அத்தனை பாசம் கொண்டவள் அவள்!

ஆனால், இதில் மறைமுகமாக பாதிக்கப்பட்டது என்னவோ ஆலா தான். முதலில் இவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அக்னி டார்சியிடம் ராகவ் திரும்பி செல்வதை பற்றி சொன்னதை கேட்டதும் அதிர்ந்துவிட்டாள். அவளோ அதிர்ச்சியாக ராகவ்வை பார்க்க, அவனோ ஒருகணம் அவள் மீது அழுத்தமான பார்வையை பதித்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

இதுவரை அவளிடம் யாரும் காதலை சொன்னதில்லை. ஆண்களுக்கு சமமாக வளர்க்கப்பட்டவள், ராகவ் காதலை சொன்னதும் தான் தனக்கும் வெட்கம் என்ற உணர்வு இருப்பதை உணர்ந்துக் கொண்டாள். அவளுள் இருந்த பெண்மையை ராகவ் தன் காதலை கொண்டு தட்டியெழுப்பியிருக்க, இப்போது அவன் திரும்பி செல்ல போவதாக சொன்னதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

காலத்தை தாமதிக்காது ஒரு வாரம் கழித்து அக்னி, அருவியின் திருமணத்தை நடத்த டார்சி முடிவெடுத்திருக்க, நண்பனின் திருமணத்தை பார்த்ததும் மனோவாவிலிருந்து வெளியேற முடிவெடுத்திருந்தான் ராகவ்.

அடுத்த நான்கைந்து நாட்கள் அக்னி, அருவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பதவி ஏற்றதிலிருந்து குவிந்திருந்த நகரத்தின் வேலைகளை கவனித்துக்கொள்வதில் அவன் நேரத்தை கழிக்க, அருவி தான் நொந்து போய்விட்டாள்.

அதுவும், டார்சி இருவரையும் பார்த்துக் கொள்ள கூடாதென்று வேறு சொல்லியிருக்க, அக்னி சாதாரணமாக எடுத்தானோ,  இல்லையோ? அருவி தான், “அய்யய்யோ!” என்று பதறிவிட்டாள்.

-ஷேஹா ஸகி