அன்பின் உறவே – 15-2

அன்பின் உறவே – 15-2

அன்பின் உறவே… 15

மடிக்கணிணியில் நன்னீர் முத்து வளர்ப்பு, முத்து அறுவடை, அதற்கான பராமரிப்புகள் போன்றவை தொகுத்த காணொளிக் காட்சிகள் ஒளிப்பரப்பாகத் தொடங்கியிருக்க, கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரவீணா.

“பொறுமையா பார்த்து முடி, இதுக்கான விளக்கத்தை சொல்றேன்” என்றவன் முழுதாக அரைமணி நேரம் கழிந்த பிறகே பேசத் தொடங்கினான்.

“ரெண்டு வருசத்துல ரிடர்ன் பண்ணறேன்னு பாண்டுல சைன் பண்ணி, அண்ணனுங்ககிட்ட கடன் வாங்கியிருக்கேன். அந்த தொகையிலிருந்து மூணுலட்சத்தை தனியா ஒதுக்கிட்டு மிச்சம் உள்ள பணத்தை மூணு பார்ட்டா பிரிச்சுட்டேன். 

அதுல ஒரு பங்கு பணத்தை எடுத்து இந்த முத்து சாகுபடியில இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன். இதுக்காக பாவானியில என் ஃப்ரெண்ட் தாத்தாவோட பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்துருக்கேன்” உற்சாகத்துடன் தொழிலைப் பற்றி கணவன் கூற ஆரம்பிக்க,

“பக்கத்துல இடம் கிடைக்கலையா ப்ரஜூ, அவ்வளவு தூரம் எதுக்கு?” ஆர்வத்துடன் மனைவியும் கேள்வி கேட்டாள்.

“இதுக்கான அட்மாஸ்பியர், கிளைமேட் எல்லாம் அங்கேதான் செட்டாகுது பிங்கி. மொத்தம் பத்து பசங்க அங்கேயே தங்கி, சமைச்சு, சாப்பிட்டு வேலை பாக்கறாங்க. தினமும் அரைநாள் தான் வேலை. சோ, சம்பளமும் நம்ம கையை கடிக்காம குடுக்கலாம்.

வாரத்துல ரெண்டுநாள் கிளாஸ் அரேன்ஞ் பண்ணி ட்ரைனிங் குடுக்கவும் ஸ்டார்ட் பண்ணியாச்சு. ஒரு ஆளுக்கு ட்ரைனிங் பீஸ் ஐயாயிரம் பிக்ஸ் பண்ணியிருக்கோம். கிளாஸ் முடிஞ்சதும் அவங்க கையில ஃபெர்டிலைஸ்டு(கருவூட்டபட்ட) பண்ணின நூறு முத்துசிப்பியும் கொடுக்குறோம். எல்லாமே ஸ்டார்ட்-அப் கண்டிஷன்ல போயிட்டு இருக்கு” மூச்சு விடாமல் பேசியவன், புரிகிறதா என்ற கேள்வி பாவனையில் சற்றே நிறுத்தினான்.

“உனக்கு முன்னாடியிருந்தே இதப்பத்தி தெரியுமாடா? எப்போ இதெல்லாம் கத்துகிட்ட?”

“காலேஜ் செமஸ்டர் லீவுல, விளையாட்டுதனமா ட்ரை பண்ணி பார்த்துருக்கேன். அந்த நேரம் வெளைஞ்ச முத்துக்களை எல்லாம் ஃப்ரண்ட்ஸ்குள்ள ஷேர் பண்ணிகிட்டோம். நம்ம பிரச்சனைக்கு அப்பறமா இந்த தொழில்ல தீவிரமா இறங்க முடிவு பண்ணேன். பத்துநாள் தூத்துக்குடி போயி ப்ராபர் டிரைனிங் எடுத்துட்டு வந்து ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஒன்றரை மாசமா நல்லா போயிட்டுருக்கு.

முறையா முத்து சாகுபடி பண்றதுக்கு ஒரு வருசம் வெயிட் பண்ணனும். அதுவரைக்கும் வருமானத்துக்கு கையை கடிக்காம இருக்கறதுக்காகவே ஏற்கனவே ஃபெர்டிலைஸ்டு பண்ணின முத்துச்சிப்பிகளை விலை குடுத்து வாங்கிட்டேன். இன்னும் நாலு மாசத்துல அதை அறுவடை பண்ணி சேல்ஸ் பண்ணிடலாம். அதுவரைக்கும் துண்டு பட்ஜெட் தான்” தீர்க்கமான குரலில் தனது திட்டங்களைக் விளக்கிக்கொண்டே வந்தான்.

“ஓஹ், நீ சொல்றது எதுவும் எனக்கு புரியல… ஆனாலும் தலையாட்டி வைக்கிறேன். ஒருநாள் என்னை அங்கே கூட்டிட்டு போயி எக்ஸ்ப்ளைன் பண்ணு” அரைகுறை புரிதலோடு ரவீணா சொல்ல, சரியென்று ஒப்புக் கொண்டான்.

மேலும் சிலபல சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டவள், விடாமல் அடுத்த பங்கிற்கான விளக்கத்தை கேட்டு நச்சரிக்கத் தொடங்கினாள்.

“எல்லாத்தையும் மொத்தமா கேட்டா உனக்கு மூச்சுமுட்டிப் போகும், நாளைக்கு சொல்றேன்டீ”

“சொல்லப்போற உனக்கு வாங்காத மூச்சு, கேக்குற எனக்கு முட்டிப்போகுமா பாஸ்? நீ இப்ப சொல்லியே ஆகணும்” ஒற்றைக்காலில் அடம்பிடித்து நிற்க, பொய்யான முறைப்பில் கூறத் தொடங்கினான்.

“செகண்ட் பார்ட் அமௌண்டும் ஆஸ் யூசுவல் இன்வெஸ்ட்மென்ட் தான்”

“…”

“சேலத்துல ஆயிரக்கணக்குல வெள்ளிப்பட்டறைகள் இருக்கு. இங்கே இருந்துதான் நார்த் சைட், அப்ராடுக்கு எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகுது. ஆனா, இந்த பான்டமிக் பீரியட்ல அந்த தொழில் ரொம்ப நொடிஞ்சு போயி நிறைய பட்டறைகளை மூடிட்டாங்க.

அப்படிப்பட்ட மூணு பட்டறையை மார்க்கெட் ரேட்டை விட குறைச்சலா லீசுக்கு எடுத்து திரும்பவும் வொர்க் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். வெள்ளிக் கொலுசு தான் மெயின். அதோட செயின், மோதிரம், மெட்டின்னு எல்லா ஆர்டரும் இப்ப வர ஆரம்பிச்சுடுச்சு. இந்த பட்டறையில பெரும்பாலும் லேடீஸ் தான் வேலை பார்க்கிறாங்க. வெளிவேலைகளை நானும் என் ஃப்ரெண்ட்சுகளும் சேர்ந்து பாக்குறோம். ரெண்டு தொழிலுக்கும் முன்பணம் போட்டதால, நான் முதலாளி ஆகிட்டேன்” கர்வத்துடன் டி-சர்ட் காலரை உயர்த்திக் கொள்ள,

“ஆகமொத்தம் நீ வேலை பாக்கமாட்ட… எல்லாரையும் அதிகாரம் பண்ணி கால் மேல கால் போட்டுட்டு வேடிக்கை பார்க்க மட்டும் செய்யுற, அப்படித்தானே?” நக்கலுடன் கணவனை வாரி விட்டாள் ரவீணா.

“ஹலோ மேடம்… முதலாளியா இருக்கறது அவ்வளவு ஈசியான வேலைன்னு நினைச்சியா? இருபத்திநாலு மணிநேரமும் மூளையில தொழிலை மட்டுமே நினைச்சுட்டு இருக்கணும்.

அடுத்து என்ன செய்ய, எங்கே போகன்னு யோசனை ஓடிட்டே இருக்கும். முக்கியமா மார்க்கெட்டிங் பண்ணனும். அதை என்னோட பொறுப்புல எடுத்துட்டு இருக்கேன்.  ஆன்லைன் ஆர்டர், சில்வர் பர்சேசுன்னு எல்லாம் என் கண்ட்ரோல்ல பார்த்துக்கறேன.

வாராவாரம் டில்லி, மும்பைன்னு போயி நம்ம புராடக்டை  குடுத்துட்டு, சில்வர் பார் வாங்கிட்டு வரணும். ஒருதடவைக்கு ஐஞ்சு கிலோவுக்கு மேல கொண்டுவர முடியாது. டாக்ஸ் ப்ராப்ளம் வந்துடும். ஏகப்பட்ட கெடுபிடி இருக்கும்.

இதோட முடியல, முத்துகுளத்துக்கு மெயிண்டனன்ஸ் பண்றதுக்கும், வீக்லி கிளாஸ் எடுக்குரதுக்கும் ஆள் மாத்தி பிரிச்சு விடணும். அதோட லோக்கல் ஆர்டர்ஸ் எல்லாம் பார்க்கணும். சொல்லப்போனா இதுனால தான் எனக்கு கன்ஸ்ட்ரக்ஷன் வேலையில கவனம் சிதறிப்போகுது” என்றபடி இன்னுமின்னும் விளக்கிக் கொண்டே போக, இமைக்க மறந்து பார்த்தாள் ரவீணா. 

விளையாட்டுத்தனம் நிறைந்த தனது பிஸ்தாவிடம் இப்படியொரு தொழிலதிபன் பரிணாமத்தை நிச்சயமாய் அவள் நினைத்துப் பார்க்கவில்லை. பெருமையும் காதலும் போட்டிபோட ஆச்சரியத்தில் அவனைப் பார்த்து புன்னகைத்தவள் தன்னிலை மறந்து அவன் கன்னத்தில் அன்புப் பரிசினைப் பதிக்க,

“என்னடீ, புருசன் பெரிய ஆளா வரப்போறான்னு தெரிஞ்சதும் இப்ப இருந்தே காக்கா புடிக்க ஆரம்பிச்சுட்டியா?” பதில் முத்தம் கொடுத்து கண்டிமிட்டி கேட்க,

நிகழ்விற்கு வந்தவள், “அப்படியெல்லாம் கனவு காணாதே, ஒழுங்கா வெவரத்த சொல்லு. நீ பார்டர் பாஸா இல்ல ப்ரைட் பிசினஸ்மேனான்னு நான் சொல்றேன். மூணாவது பங்குக்கு கணக்கை சொல்லு மேன்” திடீர் நிதிமந்திரியாக மாறி கேள்வி கேட்டு அசரவைத்தாள்.

“எல்லாம் என் நேரம்டீ… தொழிலை பிசிறில்லாம நடத்துறதுக்கு ரொம்பவே மெனக்கெடனும் பிங்கி. இட வசதி, ரா மெட்டீரியல்ஸ், வேலை பாக்கிறவங்களுக்கு சம்பளம், இடம் வாடகை, டிரான்ஸ்போர்ட் செலவுன்னு எக்கச்சக்கமா இருக்கு, அந்த செலவுக்கெல்லாம் தான் அந்த தேர்ட் பார்ட் அமௌண்டை ஒதுக்கிட்டேன்” என்றவனை ஆராய்ச்சியாகப் பார்த்தவள்,

“ரொம்ப நல்ல பிளான் தான், ஆனா இதெல்லாம் சின்னதா ஆரம்பிச்சா சரிவராதா?” தயக்கத்துடனே தான் கேட்டாள்.

அகலக்கால் வைத்து அவதிபடவேண்டுமோ என பெண்ணாக அவளின் உள்ளம் ஒரேநேரத்தில் தொழிலின் சாதக பாதகங்களை சிந்தித்தது.

“பெரிய இடத்து பிள்ளையா, எல்லாத்தையும் பெருசா பார்த்து, அப்படியே யோசிச்சு, வேலையும் அது போலவே செய்ய வருது. என்னை நம்பி கொடுக்கிற வேலையை சரியா செய்யாத பொறுப்பில்லாதவனா நான் இருக்கலாம். ஆனா, என் மனசுக்கு பிடிச்ச வேலையை செய்யும்போது டோட்டலா நான் மாறிடுறேன். இதைதான் பிளட் நேச்சர்னு சொல்றாங்களோ என்னவோ?” தன்னைத்தானே உணர்ந்து பேசி, சிலாகித்துக் கொண்டான்.

“ரொம்ப பெருமையடிச்சுக்காதே மைபாய்! இதெல்லாம் உங்க வீட்டுக்கு தெரியுமா?”

“அண்ணன்களுக்கு தெரியும், அம்மா அப்பாவுக்கு தெரியாது. எல்லாம் முடியட்டும் சொல்லலாம்” சோர்வுடன் பிரஜேந்தர் முகம் சுருக்கிக்கொள்ள,

“ரூட்டை மாத்தாதே… தனியா ஒதுக்கின மூணு லட்சத்த என்ன பண்ண, சொல்லு?” மீண்டும் கணக்கு கேட்டு கணவனின் மனதை மாற்றினாள் ரவீணா.

“ஓவரா கேள்வி கேக்குறடீ பட்டரூ! அதெல்லாம் சொல்ல முடியாது, எனக்கு தூக்கம் வருது”

“இப்ப நீ சொல்லலன்னா, நாளைக்கு உன்னை சமைக்கவும் விடமாட்டேன்; சாப்பிடவும் விடமாட்டேன்”

“என்னடீ, பயம் விட்டுப் போச்சா உனக்கு?” முறைக்க முயன்றவனின் பார்வையை தூசியாய் தட்டி விட்டவள்,

“நீ என்ன செஞ்சாலும் உன் பொண்டாட்டிக்கு சரி பங்கு இருக்குடா பிஸ்தா. விஷமா இருந்து உள்ளே இருக்குறதை வெளியே எடுக்க வச்சுடுவேன் ஒழுங்கா சொல்லு” செல்லமிரட்டலில் இறங்க, பின்னிரவுப் பொழுதில் ஏகாந்தமாய் சிரித்தான் கணவன். 

“அது உனக்கே உனக்காக ஒதுக்கினது பிங்கி!”

“எனக்கா?”

“ம்ம்ம்… உன்னை கூட்டிட்டு வந்து பிளாட்பாரத்துல குடும்பம் நடத்த முடியுமாடீ? இந்த சிமிண்டு கட்டிடத்துக்கே உன் மூஞ்சி அநியாயத்துக்கு கோணிட்டு போகுது” கன்னத்தை கிள்ளி எடுத்துக்கொண்டே சொல்ல,

“அடி வாங்குற ஐடியால இருக்கியா நீ?” கண்ணை பெரிதாக்கி மிரட்டினாள்.

“இந்த மாகாராணிய கல்யாணம் முடிச்சு, வீட்டுக்கு சாமான் செட்டு வாங்கிப்போட்டு, உன் வீட்டுக்காரனா டூயூட்டில ஜாயின்ட் பண்ண ஒன்றரை லட்சத்தை செலவு பண்ணிருக்கேன் தங்கம்” நெற்றி முட்டிக்கொண்டு கணக்கினை ஒப்பிக்க,

“மிச்ச ஒன்றரை லட்சத்தை உனக்கான சம்பளம்னு ஒதுக்கி வைச்சுகிட்டியா ஹவுச்மெயிட்?” விடாமல் கேட்டு வம்பினை வளர்த்தாள்.

“அடிப்பாவி, பேச்சுக்கு சொன்னா பட்டம் கட்டுறியா? அந்த அமௌண்டுல ஒரு பிளாட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் போட்டு வச்சுருக்கேன். அது முடிய இன்னும் எட்டு மாசமாகும். அதுக்குள்ள நமக்கும் ஓரளவு தொழில் பிடிபட்டு ப்ராஃபிட் எவ்வளவு, எப்படினு தெரிய வந்துடும். அதை பாலன்ஸ் பண்ணி லோன் போட்டுக்கலாம். இன்னும் நாலு மாசத்துக்கு தாரளா மனசோட சுருக்கமான செலவோட குடும்பம் நடத்தனும்” நிறைவாக கூறி பெருமூச்சு விட்டவனுக்கு தப்பாமல் இவளும் மூச்செடுத்தாள்.

“பக்கா பிளானிங்ல ஸ்டார்ட் பண்ணிட்ட சரி… ஃபினிஷிங் நாம எக்ஸ்பெக்ட் பண்ணின மாதிரி வருமா?”

“நாம எதிர்பார்த்ததுல பாதி வந்தாகூட போதும். நெக்ஸ்ட் ஷெட்யூல் ஸ்டார்ட் பண்ணிடலாம். அப்புறம் அப்படியே போயிட்டே இருக்க வேண்டியது தான்” இலகுவாய் கூறியவனை கொண்டாட்டிக் கொள்ள நினைத்தாலும் மனம் முரண்டியது.

“இப்ப இவ்வளவு பொறுப்பா எல்லாம் எடுத்து செய்யுறவன் அன்னைக்கு மட்டும் ஏன்டா அப்படி நடந்துகிட்ட… எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா? தலைக்கு மேல பிரச்சனை வந்தாதான் பொறுப்பா உன் மூளை வேலை பார்க்குமா?” உரிமையுடன் கடிந்து கொண்டாள்.

அன்றைய தினத்தின் தொடர்ச்சியாகத் தானே, இன்று இந்த நிலையில் தனியாக நிற்கிறோம் என்றே அவளின் மனம் ஆதங்கப்பட்டது.

“என்ன பண்ணச் சொல்ற? நீ பக்கத்துல இருந்தா என் மூளை ஏடாகூடமாவே யோசிக்குது. எல்லாம் நல்லதுக்குதான், விடுடீ… இல்லன்னா, இந்நேரத்துக்கு இப்படி என் பக்கத்துல நீ இருப்பியா?” எனக் கேட்டபிறகே, தான் இருந்த நிலையை பார்த்தாள் ரவீணா.

பேச்சு மும்மூரத்தில் கணவனின் மடி மீது அமர்ந்து விட்டிருக்க, தன் அணைப்பில் மனைவியை கொண்டு வந்தவனின் கரங்கள், அவள் மீது அத்துமீறவும் தொடங்கியிருந்தது.

“ப்ராடு பிஸ்தா!” கடுப்புடன் விலக முயற்சிக்க,

“இப்பதானே சொன்னேன், நீ பக்கத்துல இருக்கும் போது நான் அவுட் ஆப் கண்ட்ரோல் மோட்ல போயிடுறேன்னு” என்றவன் மேலும் பல வார்த்தைகளை சென்சார் இல்லாமல் அள்ளித் தெளிக்க, காதலோடு எதிர்காலக் கனவுகளும் கைகோர்த்துக் கொண்டது.

***************************

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆரம்பிக்க, பிரஜேந்தர் முன்னைவிட அதிகமாய் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். இவர்களின் பக்கத்து குடியிருப்பில் மகளிர் தையலகத்தின் பேக்கிங் பிரிவு ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட, அங்கு வேலைக்கு வருபவர்களுடனும் நட்புடன் பழகத் தொடங்கினாள் ரவீணா.

தினமும் வீட்டின் இரண்டு ஓரகத்திகளுடனும், அன்னையுடனும் பேசி ரவீணாவின் பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தது.

சுகந்தி, மகளிடம் பேசும் பொழுதெல்லாம் கேட்கும் ஒரே வார்த்தை சந்தோசமாக இருக்கின்றாயா? கணவன் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றானா என்பதுதான். முதலில் சாதரணமாக பதிலளித்தவள், ஒரே கேள்வி பல ரூபங்களில் வர ஆரம்பிக்க, சற்றே முகம் சுளித்தாள்.

“என் ப்ரஜூவப் பத்தி எனக்குத் தெரியும்மா… எல்லா ஆம்பளைங்களையும் ஒரே கண்ணோட்டத்துல பார்க்காதே” அம்மாவை கடிந்து கொண்டவள், எதற்காக இப்படிக் கேட்கிறாய் என்று விசாரிக்கவில்லை. அதற்கு பதிலாக அவரிடம் பேசிச் செலவளித்த அரைமணி நேரப் பேச்சை, ஆம் இல்லை என்ற அளவில் பத்துநிமிடமாக குறைத்துக் கொண்டாள்.

திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையில், “இந்த வாரம் மளிகை எல்லாமே கொஞ்சமா வாங்கியிருக்கேன். இப்போதைக்கு டைட்டா இருக்கு, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ரவீ!” பிரஜேந்தர் சொல்ல,

“என் கார்டு யூஸ் பண்ணிக்க சொன்னா கேட்க மாட்டேங்கிறாடா நீ!” முகம் சுளித்தாள் ரவீணா.

“உன் வீட்டுக்கு போகும்போது செலவு பண்ணிக்கலாம் பிங்கி” என்றவனை, மனைவி மீண்டும் கடிந்துகொள்ள ஆரம்பிக்க, இவர்களின் சம்பாஷனைகள் தோட்டத்தில் அமர்ந்திருந்த சரஸ்வதிக்கு நன்றாகக் கேட்டது. 

இரண்டு மூத்த மருமகள்களும் அளவில்லாமல் செலவு செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்க, தனது செல்வப் புதல்வன் உணவிற்கே கணக்கு பார்த்து செலவு செய்வதை நினைத்து மனம் ஆறவில்லை அவருக்கு .

‘இந்த வீட்டு வாரிசுக்கு இப்படி ஒரு கேடா, என்ன கொடுமை இது?’ உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த ஆற்றாமை வெளியே எட்டிப் பார்த்தது. இதற்கு நீயும் ஒரு காரணமென்று மனசாட்சி உலுக்கியெடுக்க, என்ன செய்வதென்று தெரியாமல் சரசு தவித்துப் போனார்.

‘அசைவம் இல்லாமல் பிஜூவிற்கு சாப்பாடு இறங்காதே, எதைச் செய்தாலும் காரசாரமா செய் என்று சொல்பவன், இப்போது எதை வேக வைத்து எதை தொட்டு சாப்பிடுகிறானோ? வில்லனுக்கும் வில்லனாக கணவரை  பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன செய்வது?’ என்றே பெற்றவளின் நெஞ்சம் கலங்கியது

“அந்த புதுப்பொண்ணுக்கு சமைக்க வருமா இல்லையான்னே தெரியல. இப்பதான் படிப்பு முடிச்சாளாமே! வந்ததுக்கும் இப்ப கொஞ்சம் மெலிஞ்சும் போயிருக்கா… இவளுக்கு சாப்பிட கூட அரகொறயாத் தான் தெரியும் போலிருக்கு. இந்த சிங்காரி சமைச்சு கொடுத்து, அந்த மகராசன் வயிறு நெறயப் போகுதா? என்னத்த பொங்கித் திங்கப் போறாங்களோ?” இடைவெளியில்லாமல் அம்பிகாவிடம் புலம்பித் தீர்த்தார் சரஸ்வதி.

“மெதுவா பேசுங்க அத்தை… உங்க கௌரவத்துக்கு இப்படி பாவம் பாக்கலாமா? அவங்க மளிகையும் வாங்கட்டும் மரக்கட்டையும் திங்கட்டும் உங்களுக்கென்ன வந்தது? எந்த நேரமும் தோட்டத்துல உக்காந்துட்டு, அங்கே நடக்குறத   எட்டிப்பாக்குறது ஒரு பிழைப்பா? என் மாமியார் கெளரவமென்ன, கம்பீரமென்னன்னு நான் பெருமையடிச்சிட்டு இருக்கேன். அந்த நெனப்பயே கெடுத்துடுவீங்க போல இருக்கே… இங்க நிக்கிற நேரத்துக்கு எனக்கு மசாலா அரைக்க உதவியாவது பண்ணலாம், வாங்க உள்ளே…” வம்படியாக மாமியாரின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் அம்பிகா.

ஆனாலும் சரஸ்வதியின் மூச்சும் பேச்சும் சின்னமகனையே சுற்றிக் கொண்டிருக்க உணவும் தொண்டைகுழிக்குள் இறங்கவே இல்லை அவருக்கு.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்தனை கோபத்துடன் தனது வேலைநீக்கத்தை கூறி, அதற்கு தந்தையின் வாய்மொழியே தான் காரணமென்று விளக்கி விட்டு ஆக்ரோசத்துடன் சென்ற மகனை நினைக்கையில் தாயின் மனம் கலங்கிப் போனது.

“இது என் வாழ்க்கை… என் ஆசை, என் இஷ்டப்படிதான் வாழ நினைப்பேன். தேவையில்லாம மூக்கை நுழைச்சு அசிங்கப்படாதீங்க” பிரஜேந்தர் எச்சரிக்கை விடுத்துச் சென்றிருக்க, கருணாகரனும் ஆட ஆரம்பித்து விட்டார்.

“ஓசி இடத்துல தங்கி, குடும்பம் நடத்துற நாயிக்கு இத்தனை வீராப்பு இருக்ககூடாது? நாலுகாசு சம்பாதிக்கிறதுக்கு முன்னாடியே இப்படி ஆடுனா, நான், நானூறு கோடி சம்பாதிச்சவன் சும்மா இருப்பேனா?” கோபத்துடன் வார்த்தையை விட, வீடு பெரும் கலவரமாகிப் போனது.

கணவரின் பழி வாங்கும் பேச்சை சற்றும் விரும்பாத சரஸ்வதியும் அவரையே குற்றம் சொல்ல வெகுண்டு விட்டார் கருணாகரன்.

“அட யாருடி இவ? என்னமோ நான்தான் இவன் ஆபீசுக்கு போயி வத்தி வைச்சுட்டு வந்தவனாட்டம் குதிக்கற?” என்றவரை, “பின்ன எப்படியாம்?” என்ற கேள்வியுடன் பார்த்தார் சரஸ்வதி.

“அவன் முதலாளிதான் மெனக்கெட்டு எனக்கு ஃபோன் அடிச்சு, இவன் வீட்டை விட்டு வெளியே வந்துட்டானா, ஏன் எதுக்குன்னு காரணம் கேட்டான். நானும் உண்மைய உடைச்சு சொல்லிட்டேன். பொண்ணுக்காக வீட்டைவிட்டு வெளியே போனவனை தலையில தூக்கி வச்சு ஆடச் சொல்றியா? அப்பேற்பட்ட கௌரவம் எனக்கொன்னும் தேவையில்லை” மகனை முற்றிலும் தலைமுழுகியவராய் பேசவும் அயர்ந்தே போனார் சரசு.

“இவனோட முதலாளிக்கு எதுக்காக இந்த வேலையத்த வேல? இவன் எங்கே இருந்தாலும் வேலையை ஒழுங்கா செய்யுறானான்னு பாக்கறதை விட்டுட்டு, இப்படியா எதுடா சாக்கு கிடைக்கும்னு காத்திருந்து வேலைய விட்டு தூக்குவான்?” ஆதங்கத்தில் முடித்தார் சரஸ்வதி.

“அது ஒண்ணுமில்ல’மா… அப்பா, நம்ம மாலுக்கு பக்கத்துல பிஸ்தா காலணின்னு நூறு சின்ன பிளாட்ஸ் கட்ட பிளான் போட்டு இருந்தாரு. அந்த காண்ட்ராக்ட வாங்கறதுக்காக மட்டும்தான் நம்ம சின்னவன, அவர் வேலைக்கு சேர்த்துகிட்டது. போனவாரம் அந்த பிளானை இப்போதைக்கு வேண்டாம்னு அப்பா டிராப் பண்ணிட்டாரு. அவருக்கு அந்த புராஜெக்ட் கிடைக்காத கோபத்தை இப்படி தீர்த்துப்பாரா இருக்கு” ரவீந்தர் காரணத்தை கணித்துக் கூறினாலும் மனம் ஆறவில்லை சரஸ்வதிக்கு.

மகனுக்கும் தந்தைக்கும் சத்தமில்லாமல் சீண்டு முடித்த அந்த முதாலாளியை வஞ்சனையில்லாமல் வசைபாடத் தொடங்கிவிட்டார்.

“ஃபோன போட்டு குடுடா பெரியவனே! அந்த வெளங்காதவன் எதை வைச்சு, உங்கப்பாகிட்ட கேட்டான்னு தெரிஞ்சுப்போம்” என உத்தரவிட, அப்படியே செயல்படுத்தப்பட்டது.

“யாரு, என்னனு தெரியாது சார்! தொடர்ந்து ரெண்டுநாளா ஒரு ஃபோன் வந்தது. உங்க தம்பி பேரை சொல்லி, பழக்கவழக்கம் சரியில்ல, பொண்ணுங்க விசயத்துல அப்டியிப்படின்னு சொல்லியிருப்பாங்க போலிருக்கு. அதை வச்சுதான் சீனியர் எஞ்சினியர் என்கிட்டே சொன்னாரு. நானும் அதை தெளிவுபடுத்திக்கதான் உங்கப்பாகிட்ட கேட்டேன். அவரும், இந்த காரணத்துக்காகத் தான் வீட்டை விட்டு போனதா சொல்லிட்டாப்புல…

ஏற்கனவே எங்கேயும் ஸ்டடியா இல்லாம சுத்துற ஆளு, இப்ப இப்படியொரு ரூமர் வர ஆரம்பிச்சா, தெரிஞ்சே எப்படி சார் வேலைக்கு வைச்சுப்பாங்க?” பதிலையே கேள்வியாக மாற்றி அழைப்பினை முடித்தார் அந்த முதலாளி.

இந்த விளக்கங்களை கேட்டதும் பரபரத்த சரசு, மகனிடம் சொல்லி விடவேண்டுமென்று ஆளாய் பறக்க, ரவீந்தர் தடுத்து விட்டான்.

“அனேகமா இது, அந்த குருமூர்த்தி வேலையா தான் இருக்கும்மா… இப்ப நீங்க சொல்லப் போயி தேவையில்லாம பொண்டாட்டியத் தான், அவன் கரிச்சு கொட்டுவான். அவன்கிட்ட தனியா பேசும்போது நானே மெதுவா எடுத்து சொல்றேன்” என்று அடக்கி விட்டான்.

புதிய திருமணம், புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தவன் வேலையிழந்து, இனி என்ன செய்யப் போகிறான், எப்படி வாழப்போகிறான் என அன்று அலைப்புற ஆரம்பித்த பெற்றவளின் மனம் மகனைப் பற்றிய நினைவுடனேயே சுழல ஆரம்பித்தது.

‘பாவிபய கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருந்தாலாவது, இவர சமாதானப்படுத்தி எதையாவது செய்யச் சொல்லலாம். எல்லாம் இவனா வாங்கிக் கட்டிகிட்டது, அனுபவிக்கட்டும்’ என ஒருநேரம் கடிந்து கொண்டாலும் மறுநொடியே தாய்மை உள்ளம் பாசத்தில் பரிதவிக்க ஆரம்பித்து விடுகிறது.

சமீப நாட்களாக மகனும் மருமகளும் என்ன செய்கிறார்கள் என்று பேரப் பிள்ளைகளை விட்டு பார்க்கச் சொல்பவர், அங்கு நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்தார்.

இன்றும் காலைநேரம், பெரிய பேரன், சித்தப்பாவினை தேடிச் சென்று அவன் நூடுல்ஸ் கிண்டி உண்பதை கண்டு வந்தும் சொல்லிவிட, தாயின் மனம் அடித்துக் கொண்டது.

“என்ன சாப்பிடுறானோ? என்னவோ…” அங்கலாய்க்க ஆரம்பிக்க,

“அதையெல்லாம் பரத்துக்க அவ பொண்டாட்டி இருக்கா… அப்படி வயிறு காஞ்சாவது, வீட்டை முறைச்சிகிட்டுப் போனது எவ்வளவு பெரிய தப்புன்னு மண்டையில உரைக்கட்டும்…” அலட்டிக்கொள்ளாமல் காலை உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் கருணாகரன்.

‘இவரே இப்படி பேசினா மத்ததெல்லாம் இன்னுமில்ல இறக்கி பேசும். இதையெல்லாம் கேக்க ஆளே இல்லையா’ என்கிற ரீதியில் சரசு, கணவரை முறைக்க, தனக்கு பொங்கலும் வடையுமே முக்கியமென உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் அவர்.

இளைய மகனுக்கு ஒரு குடும்பம் இருப்பதே இங்குள்ள யாருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை என்று ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் குற்றம் சொல்லத் தொடங்கி விட்டார் சரஸ்வதி.

அயர்ன் லேடியாக என்னதான் வெளியில் வேஷம் போட்டாலும் உள்ளுக்குள் பித்தாக உருகி கொண்டிருக்கிறார் மாமியார் என்பதையறிந்த மருமகள்களும் ரகசியமாய் புன்னகைத்து கொண்டு தங்களால் இயன்றவரையில் அவரை திசை திருப்பிக் கொண்டிருகின்றனர்.

மாமனாரும் தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டால் இந்த வீட்டிற்க்குள் பிஸ்தாவை அவனது மனைவியுடன் வரவேற்று விடலாமென்று அம்பிகாவும் பிரதீபாவும் எண்ணிக் கொண்டிருக்க, சரஸ்வதியின் மூளை வேறுவிதமாய் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!