அன்பின் உறவே – 15-1

அன்பின் உறவே – 15-1

நன்னீரில் முத்து வளர்ப்பு

இந்தியாவில் நன்னீரில் முத்துகள் வளர்க்கும் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தொடக்கத்தில் சிக்கலாக இருந்த தொழில்நுட்பம் இன்று ஆர்வம் இருந்தால், யாரும் ஏரி, குளம் தேடிப் போக வேண்டியதில்லை.

வீட்டில், தொட்டியில், சிறிய குளத்தில், பிளாஸ்டிக் வாளிகளில் கூட முத்து உற்பத்தி செய்யலாம். அந்த அளவிற்கு முத்து வளர்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும்.

முத்துச் சிப்பிக்குள் மணல் துகள் அல்லது வேறு ஏதாவது துகள், சிப்பி சுவாசிக்கும் போது தற்செயலாக உள்ளே நுழைந்துவிடும். சிப்பிக்குள் போன துகளால் சிப்பிக்குள் இருக்கும் மென்மையான சதை, திசுக்களுக்கு தாங்க முடியாத அசௌகரியம் ஏற்படும். அந்த அசௌகரியத்தைப் போக்க துகள், தசையைத் தொடாமல் படாமல் இருக்க ஒரு திரவத்தை சுரந்து அந்தத் துகளை மூடும்.

அந்த திரவம் தான் நாளடைவில் திடநிலை அடைந்து முத்தாக மாறுகிறது முத்து வளர்ந்ததும் சிப்பி, முத்தை வெளியே உமிழாது. நாம்தான் சிப்பியை திறந்து முத்தை வெளியே எடுக்க வேண்டும்.

துகள் சிப்பிக்குள் நுழைவது அரிதாக நடக்கும் செயல். அதனால் முத்து எல்லா சிப்பியில் உருவாகுமென்று உறுதியாகச் சொல்லமுடியாது. அந்த துகளை பலவந்தமாக சிப்பிக்குள் நுழைப்பது தான் நவீன முத்து வளர்ப்பு.

இதற்கு முத்துச் சிப்பியை மிக எச்சரிக்கையாக, அதே சமயம் மென்மையாக திறந்து பிளாஸ்டிக் துகளை உள்ளே வைக்க வேண்டும். கிட்டத்தட்ட இதனை ஒரு அறுவை சிகிச்சை என்று சொல்லலாம். இப்படிச் செய்வதால் 80 சதவிகித சிப்பிகளில் முத்து வளர்த்து அறுவடை செய்ய முடியும். இயற்கையாக அரிதாக வளரும் முத்திற்கும் வளர்ப்பு முத்திற்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது. ஒரே தரமுள்ளதாக இருக்கும்.

முத்து வளர்ப்பில் முறையான பயிற்சி பெற்று, வீட்டிலும் பிளாஸ்டிக் வட்டாக்களில் பச்சைத் தண்ணீரை நிரப்பி முத்துச் சிப்பிகளை வளர்க்க ஆரம்பிக்கலாம். பாசிதான் சிப்பிகளுக்கு உணவு. தினமும் இரண்டு மணி நேரம் சிப்பிகளை பராமரிப்பதில் செலவிட வேண்டும்.

முத்து வளர்க்கும் முறையில் முத்தை எந்த வடிவத்திலும் வளர்க்க முடியும். துகள் எந்த வடிவில் உள்ளதோ அந்த வடிவத்தில் முத்து வளரும். ஒரு சிப்பியில் இரண்டு முதல் ஆறு முத்துக்களை வளர்க்கலாம். சிப்பியில் ஒருமுறை மட்டுமே முத்து வளர்க்க முடியும். அறுவடை முடிந்ததும் வேறு புதிய சிப்பிகளில் துகள்களை செலுத்தி முத்து வளர்க்க வேண்டும்.

இன்றைய காலச் சூழ்நிலையில் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டங்களின் வரிசையில் முத்து வளர்ப்பும் லாபம் கொழிக்கும் தொழிலாக உருவெடுத்து உள்ளது.

சரியான பயிற்சியுடன் முயற்சித்தால் முத்து வளர்ப்பில் கொள்ளை லாபம் ஈட்டலாம். இதற்கென பயிற்சி நிறுவனங்கள் மத்திய, மாநில அரசாலும், தனியாராலும் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான நன்னீர் முத்து வளர்ப்பு எனும் சான்றிதலுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் ஐந்துநாள் முதல் பத்துநாட்கள் வரை நடைபெறுகின்றன.

தோராயமாக நாற்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் நான்கு லட்சம் வருமானத்தை பார்த்து விடலாம். 10*10 பரப்பளவு இடத்தில் செயற்கையான கான்கிரீட் குளம், அம்மோனியா மீட்டர், பிஹெச் மீட்டர், தெர்மா மீட்டர்கள், மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மவுத் ஒப்பனர் ஆகியவை முத்து வளர்ப்பின் மிக அத்தியாவசியத் தேவைகள்.

சிப்பிகளுக்கான உணவான பாசிகளை சாணம், யூரியா மற்றும் சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றிலிருந்து தயாரித்துக் கொள்ள வேண்டும். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளக்கூடிய டிசைனர் முத்துக்கள், உருண்டை வடிவிலான முத்துக்கள் எனப் பலவித அளவுகளில் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருட கால அளவில் வளர்க்க முடியும்.

செயற்கை குளத்திற்குள் சிப்பிகளை வைப்பதற்கு முன்னதாக, 24மணி நேரம் சிப்பிகள் நன்னீரில் வைக்கப்பட வேண்டும். உடனே பயன்படுத்தத் தொடங்கினால் அவை இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 15 நாட்கள் சிப்பிகளுக்கு தேவையான உணவு அளிக்கப்படுகிறது. அதன் பிறகே சிப்பிக்குள் கருவை உட்செலுத்தும் செயல்முறை தொடங்குகிறது.

ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் முத்து கருவினை கவனமாக உட்செலுத்தி தண்ணீருக்குள் மூழ்கி வைக்க வேண்டும் தண்ணீரின் வெப்பநிலை 15-30 டிகிரி செல்சியஸில் இருக்க வேண்டும். சிப்பிகளுக்கு உணவாக பாசிகளை அளிக்க வேண்டும். உட்செலுத்திய முத்து கரு, ஒரு ஆண்டில் சிப்பி ஓடுகளில் இருக்கும் கால்சியம் கார்பனேட்டை சேகரித்து நேர்த்தியான முத்துக்களை உருவாகும்.

குளத்தை பராமரிப்பதில் பணச்செலவு எதுவும் இல்லையென்றாலும் கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும். நீரின் மட்டம், சிப்பிகளின் ஆரோக்கியம், போதுமான அளவு பாசிகள் இருக்கின்றதா போன்றவற்றை சோதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

சிப்பிகளின் இறப்பைத் தவிர்க்க பி.எச். அளவை 7-8 க்கு இடையில் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு வருடம் பொறுமையாக இருக்க வேண்டும். இதுவே முத்து வளர்ப்பின் முக்கியமான சாராம்சம்.

தரத்தைப் பொறுத்து ஒரு முத்து ரூ.200 முதல் ரூ.1000 வரை சந்தைப்படுத்தலாம். ஒரு ஆண்டிற்கு நாற்பதாயிரம் முதலீட்டில் சுமார் 3000 முத்துக்களை உற்பத்தி செய்து நான்கு லட்சம் வருமானம் ஈட்டலாம்.

இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920-ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

செயற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால் இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் நிலைத்துவிட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இயற்கை முத்தை போலவே விலை உயர்ந்ததாகவும், சில வகை முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

***********************************

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழ்கின்ற முசெல்(mussel) வகையைச் சேர்ந்த சிப்பி போன்ற சில உயரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. 

வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில், சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நியப்பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது.

கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்த வகை முத்துக்களை ஆணிமுத்து என்று அழைக்கின்றனர்.

இந்த ஆணிமுத்து அளவில் சற்று பெரியதாகவும் மிகுந்த அழுத்தம் உடையதாவும் ஒளிரும் தன்மையுடனும் பளபளப்பாகவும் காணப்படும். முட்டை வடிவிலான முத்துகள் பொதுவாகத் தென்பட்டாலும், உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத் தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.

அவிகுலிடி சிப்பிகளிலும், யூனியனி எனும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும். .

சிப்பியின் வகை, உருவான பிரதேசம் போன்றவற்றை பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. அக்கோயா முத்து, தென்கடல் முத்து, தாகித்தியன் முத்து, நன்னீர் முத்து என முத்துக்களில் பல வகைகள் உள்ளன.

சிப்பியின் உட்புறம் முத்து போல் காணப்படும் அழகான மெல்லியபொருள் நேக்கர் ஆகும். நேக்கரின் நிறம், ஒளிர்வு போன்றவையே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும் போது முத்தின் மதிப்பும் கூடுகின்றது..

ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளி தெறிக்கும் தன்மையின் அளவீடும் ஆகும். நல்ல ஒளிர்வும் முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல், மங்கலான, சொரசொரப்பான, வரிவரியான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் வரை உள்ளன.

கூடுதலான ஒளிர்வும் பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை. முத்துக்களை தரம் பிரிப்பதற்கு பலமுறைகள் உள்ளன. அதில் AAA-A முறை, A-D அல்லது தாகித்டியம் முறையில் பெருமளவில் பிரிக்கப்படுகின்றன.

AAA-A முறையில் முத்துக்கள் அவற்றின் தரத்திற்கேற்ப AAA, AA, A என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. AAA முதல் வகை தரமான முத்துக்களாகவும், A மிகக் தரம் குறைந்த முத்தாகவும் பார்க்கப்படுகின்றன.

A-D முறையில் முத்துக்கள் A,B,C,D எனத் தரம் பிரிக்கப்படுகின்றன. இங்கே A என்பது உயர்ந்த தரமாகவும் D என்பது குறைவான தர வகை முத்துக்களாகவும் அடையாளம் காணப்படுகின்றன.

சில முத்துக்கள் கருமை பால் நிறம், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்து மேல் நோக்கி உற்று பார்க்கும்போது வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ‘ஷீன்’ என்று பெயரிட்டு உள்ளனர்.

*****************************

முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள் இருந்தால், அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப்பேறும் உண்டாகும்.

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும், எடை குறையும். முத்தை பயன்படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கைதன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.

கொலுசு

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, பொன்னம்மாபேட்டை, குகை, இளம்பிள்ளை உள்ளிட்ட 60 கிராம பகுதிகளில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகள் ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீஹார், ஜார்கன்ட், மேற்கு வங்காளம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடிசை தொழில் போல, வீடுகளில் இருந்து வெள்ளி கொலுசு, அரைஞாண்கயிறு, மெட்டி உள்ளிட்டவை உற்பத்தி செய்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தில் உள்ள தங்க, வெள்ளி நகை விற்பனையாளர்கள், சேலம் வெள்ளி செயின் உற்பத்தியாளர்களிடம் வெள்ளியை கொடுத்து, அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண்கயிறாக வாங்கிக் கொள்கின்றனர்.

கொலுசு தயாரிப்பு 16 கட்டங்களை கொண்டது. கம்பி மிஷின், உருக்குக்கடை, மிஷின் பாலிசி, கை மெருகுகடை, பூ மிஷின், பொத்துகுண்டு வளையம் மிஷின், அரும்பு மிஷின், குஷ்பூ பட்டறை, எஸ்.செயின், சாவித்ரி சலங்கை, பட்டை மிஷின், குப்பாமிஷின், கெட்டி பூ மிஷின், பொடிமிஷின், கன்னிமாட்டும் மிஷின், லூஸ் பட்டறை இத்தனையையும் கடந்த பிறகே கொலுசு முழுவடிவம் பெறும். அதற்கு 2 முதல் 3 நாட்களாகும்.

வெள்ளிக் கொலுசில் செம்பு, பித்தளை ஆகியவை ‘சேதாரம்’ என்ற பெயரில் சேர்க்கப்படுகிறது. சேலம் மாநகரில் கைகளால் தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகள் 58 கிராம் முதல் 65 கிராம் எடை கொண்டது. நேர்த்தியான வடிவமைப்பும், கலை நயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்த, இந்த கொலுசுகள் மூன்று ஆண்டுகள் நீடித்து உழைக்க கூடியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!