அன்பின் உறவே – 18

அன்பின் உறவே… 18

மனமெங்கும் விரக்தியை சுமந்துகொண்டு வெளியேறிய பிரஜேந்தர் அன்றைய அலுவல்களை மனமின்றியே செய்ய முயன்றான். முயன்றான் மட்டுமே, முடியவில்லை. 

அவனது ஒவ்வொரு மூச்சும் மனையாளின் அதிர்ந்த முகத்தையே நினைத்து துடித்துக் கொண்டிருக்க, வேலையாவது, வேறாவது? அனைத்தையும் அரைகுறையாகவே செய்து சொதப்பி வைத்தான்.

“ஏன்டா புது மாப்ளே! நீ இங்கே வந்து வேலை பார்க்கலன்னு யாரு அழுதா? எல்லாத்தையும் சொதப்பி வைச்சு எங்களையும் கடுப்பேத்தாதே! போயி, சிஸ்டர்கூட டூயட் பாடு, கிளம்பு நீ!” நண்பர்கள் வாரிவிட்டு அவனை வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க, மனம் போன திசையில் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றத் தொடங்கினான்.

திக்கு தெரியாமல் சுற்றியவனின் ஊர் மேய்ச்சலே, அவன் மனதின் அலைகழிப்பை சொன்னது. அன்றைய தினம் காலை முதல் நடந்ததை மீண்டும் மீண்டும் அசைபோட ஆரம்பித்தான்.

முகமறியா பெண்ணின் பொய்யான பேச்சில் உருவான கலகம், பெரியவர்களின் முன் கடைவிரிக்கப்பட்டு இறுதியில் தனது இல்லறத்தையே களங்கப்படுத்தியிருந்ததை தெளிவாக உணர்ந்து கொண்டான். 

முழுக்க முழுக்க வேண்டுமென்றே யாரோ ஒருவரால் இட்டுக்கட்டப்பட்ட வலையில், இவனது எல்லை மீறிய  பங்களிப்பும் சேர்ந்ததை நினைத்து அவனின் மனம் தன்னால் வெட்கிக் கொண்டது.

வாழ்நாளின் கருப்பு பக்கமாக இன்றைய நாளினை மாற்றிவிட்ட தனது மடத்தனத்திற்கு எந்தவொரு நியாயத்தையும் பூசிக்கொள்ள அவன் விரும்பவில்லை.

எல்லாவற்றிக்கும் தனது முன்கோபமும் அவசரபுத்தியுமே காரணமென்று பழியை தூக்கி தன்மேல் போட்டுக்கொண்ட பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

எந்தச் சூழ்நிலையிலும் உனது நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு காரியமாற்றுகிறாய் என மனைவி அடிக்கடி சொல்வதும் நினைவிற்கு வந்து அவனை நோகச்செய்தது.

இனியென்ன செய்ய என யோசித்தவனுக்கு நேரமும் காலமும் சூழ்நிலையினை உணரவைக்க, வீடு செல்ல விரைந்து எழுந்தான்.

‘நல்லநாள்லயே எனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணுவா, இப்ப சுத்தம், என்னென்ன நினைச்சு அழுது புலம்பிட்டு இருக்காளோ! ஒரு ஃபோன் போட்டு திட்டி என்னை கூப்பிட மாட்டாளா இவ’ உள்ளுக்குள் நொடித்துக் கொள்ளும் நேரத்தில்,

அலைபேசியின் ஞாபகம் வந்து, சட்டை, பேண்ட் என தடவிக்கொண்டு தேடியதில் அவனிடத்தில் இல்லவே இல்லை. அலைபேசியை வீட்டிற்குள் மறதியாக வைத்து விட்டு ரோசத்துடன் வெளியே வந்தது அப்போதுதான் தெரிந்தது.

“போச்சா… இதுக்கும் சேர்த்து என்னென்ன வாங்கிக் கட்டிக்கப் போறேனோ? திரும்பின பக்கமெல்லாம் என்னை, ஏழரை சுழட்டி அடிக்குது” சலிப்புடன் விரைந்து வீட்டிற்கு கிளம்பினான் பிரஜன்.

இரவு பதினோரு மணியளவில் இவன் வீட்டினுள் நுழைய, மூத்த சகோதரர்கள் தங்களின் மனைவிகளுடன் இவனை வரவேற்றனர்.

“துரை எந்த பிளாட்பாரத்தை தேய்ச்சுட்டு வர்றாப்புல?” நக்கலாக கேட்ட ரவீந்தரை புரியாமல் பார்க்க,

“பீச்சு இல்லாத ஊருல, பிளாட்பாரத்துல தானேடா உக்காந்து தேய்க்கணும்” குதர்க்கமாக தெளிவுபடுத்தியவனை இப்போது முறைத்துப் பார்த்தான் பிரஜன்.

“நல்லகாரியம் பண்ணினடா சாமி! எங்கேயும் ஓடிப்போகாம  வீட்டுக்கு வந்து எங்களை காப்பாத்திட்ட… இல்லன்னா, உன்னை இந்தப் பொண்ணோட தலையில கட்டிவைச்ச பாவத்துக்கு நாங்களும் பலிகடா ஆகியிருப்போம்” என்றபடியே ரவீணாவை கண்களால் சுட்டிக் காண்பிக்க, அவளோ வெகுவாக களைத்துப் போயிருந்தாள். 

மனைவியின் அழுது ஒய்ந்து போன தோற்றம் அவளின் வேதனையைச் சொல்ல, இதற்கெல்லாம் காரணம் நீதானே என மனசாட்சியும் மானசீகமாகக் கொட்டியது.

“ரொம்ப அழுதுட்டா தம்பி! எதுவா இருந்தாலும் வீட்டுலயே, பொறுமையா பேசி முடிக்கப் பாருங்க. கையை நீட்டுறது எல்லாம் நம்ம குடும்ப வழக்கமில்ல” முகச் சுளிப்புடன் கூறிய அம்பிகா பார்வையாலேயே குற்றம் சாட்டினாள்.

“ஒத்த பிள்ளையா, செல்லமா வளர்ந்த பொண்ணுடா, அவகிட்ட உன் பலத்தை காமிச்சா தாங்குவாளா? உன்கூட பிறந்த நாங்க வந்துட்டு போறத போலத்தானே, அவங்க வீட்டுல இருந்தும் வந்து போவாங்க. இதக்கூட உனக்கு விளக்கிச் சொல்லணுமா? என்னடா நீ…” அலுப்புடன் ராஜேந்தர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினான்.

“எட்டு மணிக்கு மேல ஆச்சு. நீங்க வர்ற வரைக்கும் பங்களாவுல எங்ககூட வந்து இருக்க சொன்னோம். உங்களுக்கு பிடிக்காதுன்னு ரவீணா பிடிவாதமா வரமாட்டேன்னுட்டா.

மனக் கஷ்டத்தோட இருக்குற பொண்ணை தனியா விட்டுட்டு, வீட்டுக்குள்ளயே இருக்க மனசு கேட்காமதான் பெரியவங்க எங்களை, இங்கே இருக்கச் சொன்னாங்க. உங்க ஆசைப்படி உங்களுக்காக அவங்க இறங்கி வந்துட்டாங்க. நீங்கதான் அங்கேயே நிக்கறீங்க மச்சினரே!” நேருக்குநேராய் நின்று குற்றம் சாட்டினாள் பிரதீபா.

“இனியாவது ஒழுங்கா இருக்கப் பாரு. இவன் ஒழுங்கா குடும்பம் நடத்த, நாங்க குடும்பத்தோட தேவுடு காக்கா வேண்டியிருக்கு. பார்த்து நடந்துக்கோ, ஒன்னும் பேசாம சாப்பிட்டு படுங்க!” பொதுவான அறிவுரையுடன் இரண்டு ஜோடிகளும் விடைபெற்றுக் கொள்ள மனைவியை இமைக்காமல் பார்த்தான். 

அவளது கன்னத்தில் இவனது விரல் அழுத்தமாய் கோடுகளை இழுத்திருக்க, இவனுக்குள் வேரறுந்து வீழ்ந்த நிலை. தனக்குள் எழுந்த கேவலை அடக்க அவள் மிகவும் சிரமப்படுவதை பார்த்து நொந்தே போனான். அழுவது தனக்குப் பிடிக்காது எனச் சொன்னதால் அடக்கிக் கொள்கிறாளோ என்ற குழப்பமும் எழுந்தது.

“சாரிடீ! ஏதோ ஒரு கோபம், உன்மேல காமிச்சுட்டேன். நான்தான் முன்கோபி, எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம். ஆனா, இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு பிங்கி? ஒரு ஆம்பளையா, புருசனா உன்னை கேள்வி கேட்டது தப்பா?” மென்மையான குரலில் சூழ்நிலையை எதார்த்தமாக்க கணவன் முயல, முகத்தை திருப்பிக் கொண்டாள் மனைவி.

“ம்ப்ச்… உன்னை கொடுமைபடுத்துற மாதிரி பேசி நீ, என்னை அசிங்கப்படுத்திட்ட… அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டு திரும்ப இன்னொரு சண்டைய தொடங்க நான் விரும்பல. எல்லாமே என் தப்பாவே இருக்கட்டும்” தன்னில் இருந்து வெகுவாக இறங்கி வந்து அவளை சமாதானப்படுத்த பார்த்தான்.

மனைவியின் பார்வையும் பாவனையும் கோபத்தை மட்டுமே தாங்கி நிற்க, சமாளிக்க முடியாமல் திணறினான் பிரஜன். இந்தப் பெண்களை புரிந்துகொள்ள தனியாக ஒரு கோர்ஸ் படிக்க வேண்டுமோ?

‘இன்றைய தினம் எதற்காகதான் விடிந்ததோ? இப்படி ஆளுக்கொரு பக்கம் கோபித்துக் கொண்டும் முறுக்கிக்கொண்டும் நிற்பதற்காகவா இன்றைய விசேஷம் அத்தனை மகிழ்வுடன் நடந்தேறியது’ உள்ளுக்குள் பலவிதமான எண்ணங்கள் படையெடுக்க நீண்டநேரம் மௌனங்களே அங்கே நிலையாய் நின்றன.

சமையலறையில் உணவுப் பொட்டலங்கள் பிரிக்கப்படாமல் இருக்க, உணவை தட்டில் போட்டுகொண்டு வந்து ஊட்டிவிட முனைந்தான். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கட்டிலில் சென்று இவள் படுத்துக்கொள்ள, திண்டாடிப் போனான்.

“எதுக்காக எல்லா ஆம்பளைங்களும் வீட்டுல ஆமாம்சாமி போட்டே அமைதியா இருக்காங்கன்னு இப்ப புரியுது. போதும்டா யப்பா!” அலுத்துக் கொண்டவனின் உள்ளத்தில் காரணமே இல்லாமல் குருமூர்த்தி வந்து நின்றார்.

“எப்படி மாமனாரே, ரெண்டு சேனல் ஒரே நேரத்தில ரன் பண்ணின நீ? உன்கிட்ட டியூசன் வரட்டுமா தலைவரே!” வாய்விட்டு சத்தமாகவே சொல்ல, பறந்து வந்த தலையணை அவனது முகத்தில் அறைந்து விழுந்தது. 

“எனர்ஜியே இல்லாம பால் போடுற பிங்கி! நல்லா சாப்பிட்டு சிக்ஸர் அடிப்பியாம்” என்றவன் மீண்டும் உணவுடன் மனைவியின் அருகில் செல்ல, முகத்தை மூடிக் கொண்டாள்.

“என்னை திட்டறதுக்காவாவது பேசுடீ! என் மேல இருக்குற கோபத்துல என்கூட பேசாம உன்னால இருக்க முடியும். ஆனா, என்னால சத்தியமா முடியாதுடீ!” கெஞ்சலில் இறங்கியவனை கண்டுகொள்ளவே இல்லை.

“வாட்ஸ்-அப்ல பேசுவோமா, எங்கே உன் மொபைல்?” இருவரின் அலைபேசியையும் கொண்டுவந்து பார்க்க, மனைவி அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று கண்ணில்பட்டது.

தான்கோபத்துடன் வெளியேறிய அரைமணி நேரத்தில் அனுப்பியிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவன், படிக்கத் தொடங்கினான்.

“சாரி ப்ரஜூ… நான் அப்படி பேசினது ரொம்ப பெரிய தப்புதான். ஆனா, அதுக்காக நீ அடிச்சதை சரின்னு சொல்லமாட்டேன். உன்னை இன்னும் நல்லாவே புரிஞ்சுக்க எனக்கொரு சான்ஸ் இது. இனிமே நீ எதிர்பார்க்கிற மாதிரி இருக்க ட்ரை பண்றேன். தாங்க்ஸ் ஃபார் எவ்ரி திங்” என்றிருக்க தலையிலடித்துக் கொண்டான்.

“ஏன்டீ, இப்படியெல்லாம் சொல்லி என்னை அன்னியமாக்குற? எல்லாத்துக்கும் தாங்க்ஸ் சொல்ற தூரத்துலயா நாம இருக்கோம்?” படபடப்புடன் கேட்டவனுக்கு கோபமும் துளிர்விட ஆரம்பித்தது.

“நான் உனக்கு யாருன்னு மறந்து போச்சா, அடிக்கடி ஞாபகப்படுத்தணுமா?” என்றவன்,

அவளின் அருகே படுத்துக்கொண்டு பின்புறத்தில் இருந்து அணைத்துக் கொண்டான். கோபத்துடன் விலகியவளை தனது கட்டுக்குள் கொண்டு வருவது அத்தனை கஷ்டமாக இருக்கவில்லை.

“ஒழுங்கா திமிறாம இருந்தா, நானும் நல்லபிள்ளையா இருப்பேன். இல்லன்னா, நான் எப்படின்னு உனக்கே தெரியும். வீணா உன்னோட கொலஸ்ட்ரால செக் பண்ண வைக்காதே!” சிடுசிடுத்தவன் மனைவியை கைவளைவில் அணைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர, இவள்தான் கொட்டக்கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.

‘ஆரம்பிச்சுட்டான் இவனோட அக்கப்போர… கோபமோ, பாசமோ எதையும் அளவுக்கு மிஞ்சியே காட்டி மூச்சுமுட்ட வைக்கிறான். இப்ப இவன் செஞ்ச எல்லாத்தையும் மறந்து மன்னிச்சு, இந்த கோமாளி பிஸ்தாவ கட்டிப்பிடிச்சுட்டு தூங்கிடணுமா? நோ, நெவர், முடியாதுடா’ உள்ளுக்குள் பலவிதமாய் மறுத்தவாறே அசைந்து கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் கணவனின் அணைப்பு தந்த இதத்தில் தன்னையும் மறந்து நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.

மறுநாள் குக்கரின் அலாரமும் நெய் வாசனையும் பிரஜேந்தரை உசுப்பிவிட, காலைநேர புத்துணர்ச்சியோடு சமையலறையில் வந்து நின்றான்.

“வாட் எ சர்ப்பிரைஸ்! என் ஸ்வீட் பட்டர் இவ்வளவு சுறுசுறுப்பா வேலை பார்க்குதே?” என்றவன் பின்னோடு மனைவியை அணைத்துக் கொள்ள,

“ம்ப்ச்… தோசை ஊத்தணும், தள்ளிப் போ!” கடுப்பினை காட்டினாள் அருமை மனைவி.

காலைநேர டிஃபனாக தோசையும் சாம்பாரும் தயார் செய்து, கிட்டத்தட்ட முடித்தும் விட்டிருந்தாள்.

“அசத்துறியேடா செல்லம், எனக்கு நெய்தோசை பிடிக்கும்னு யார் சொன்னது?”

“நேத்து அம்பிகா அக்கா பெரிய லெக்சரே குடுத்துட்டாங்க. ஆம்பளைங்களை கைக்குள்ள போட்டுக்க கிச்சன் கில்லாடியா இருக்கணுமாமே! இத்தனைநாள்ல நான், ஒழுங்கா உனக்கு சமைச்சு போடாததுதான் பெரிய குத்தமா சொல்லிட்டாங்க.

அதான், முன்னபின்ன அனுபவம் இல்லாத விசயத்துல எப்படி டாக்டரேட் வாங்கறதுன்னு யோசிச்சு இப்படி இறங்கிட்டேன்.

நல்லாயில்லன்னா என் மூஞ்சியில ஊத்தி கோபத்தை தணிச்சுக்கோ! வீட்டைவிட்டு வெளியே போயி என்னை கேவலப்படுத்தாதே!” காட்டமாக, அதே சமயத்தில் வேதனையோடு இவள் பேசியது அவனுக்குமே வலித்தது. 

“நேத்தே சாரி சொல்லிட்டேனே பிங்கி! இன்னுமா உனக்கு கோபம் போகல?”

“ஒவ்வொரு தடவையும் உன் தப்புக்கு நீயே நியாயம் சொல்லி நல்லவனாயிடுறடா… அதை அனுபவிக்கிற நான்தான் பாரத்தை இறக்கி வைக்க முடியாம உள்ளுக்குள்ளேயே வெந்துட்டு இருக்கேன்” மனதிற்குள் குமைந்து கொண்டிருந்ததை தக்க சமயத்தில் வெளியே கொட்டிவிட்டாள் ரவீணா.

“எங்கயோ ஆரம்பிச்சு, சம்பந்தமே இல்லாமப் பேசிட்டு இருக்க ரவீ! இந்த டாபிக்கை இதோட நிறுத்திடு ப்ளீஸ்… நான் இப்படிதான்னு உனக்கு தெரியும்தானே!” கணவனின் சமாதான வார்த்தைகள் எல்லாம் காற்றோடு கரைந்தே போயின.

“இப்பவும் உன்னை மட்டுமே மனசுல வச்சுட்டு பேசற நீ! உன் கூடவே இருந்துட்டு, பேசமா அழுத்தமா, அடம்பிடிக்கிற சாமர்த்தியம் சத்தியமா எனக்கில்ல… அது ரொம்ப கஷ்டங்கிறதாலதான் இப்ப உன்கூட நின்னு பேசிட்டு இருக்கேன்” அடக்கி வைத்த கொதிப்பை எல்லாம் இவள் கொட்டிக் கொண்டிருக்க, அவனோ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கு பயமா இருக்கு ப்ரஜூ! இந்த சின்ன பிரச்சனைக்கே நீ வீட்டை விட்டு போயிட்ட… இன்னும் பெரிய பிரச்சனைகள் வந்தா, நினைச்சு பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு. உன்னோட தொழிலுக்கும் முன்னேற்றத்துக்கும் நான் தடையா இருந்தா என்னை வெறுத்துட்டு நீ போயிடுவியா? அப்புறம் என் கதி, ஆஸ் யூசுவல் வாழாவெட்டி, ப்ளா… ப்ளா தானா? திரும்பவும் அம்மா வீட்டுக்கு போவேன்னு கனவுல கூட நினைக்காதே, அதுக்கு பதிலா செத்துப் போயிடுவேன்டா!” இன்னதென்று விளங்காத வேகத்துடன் புலம்பத் தொடங்கியவளை அதட்டக்கூட மனம் வரவில்லை அவனுக்கு.

தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேசுபவளுக்குள் இத்தனை ஆற்றாமைகளா? இவளின் பெற்றோர் வாழ்ந்த வாழ்வினைப் பார்த்து இப்படியான முடிவுகளை மனதிற்குள் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறாளா? இதனை எப்படி சரி செய்வதென பிரஜேந்தரின் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

தன்மீதுள்ள சந்தேகத்தை தானே போக்கினால் ஒழிய மனைவி தெளிவடைய மாட்டாள் என்பதும் நன்றாகவே புரிந்தது. கோபத்தை மறைத்துக் கொண்டு, அவளை தன்புறம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“எதையும் கற்பனை பண்ணாம அமைதியா இரு பிங்கி! உன்னை விட்டுட்டு போறதுக்கா அவ்வளவு இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டேன். உன்னை புரிஞ்சுக்காதது என்னோட தப்புதான்டீ! எந்த சூழ்நிலையிலும் உன்னை நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்” வாஞ்சையுடன் அனுசரணையாய் கூறியவன், நெற்றியில் முத்தம் பதித்து தன் அன்பினை வெளிப்படுத்த, எப்பொழுதும் போல் சிறுகுழந்தையாய் அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

“நேத்து நைட் உன்கூட, நான் பேசியிருந்தா இதைவிட ஹார்ஷா பேசியிருப்பேன் ப்ரஜூ! அவ்வளவு கோபம் உன்மேல இருந்தது. ஆனா இப்போ…” என அவள் நிறுத்த,

“ஆனா இப்ப… என்ன சொல்லு?” மனைவியை ஊக்கப்படுத்தி விட்டு மென்மையாக சிரித்தவன்,

“கவிதை சொல்லி, லவ் டயலாக் பேசி பாசத்தை புரிய வைக்கிற டிராமா எல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராதுடீ! எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஃபார் எவ்ரி ஆக்ஷன் தேர் இஸ் அன் ஈக்வல் அன்ட் ஆப்போசிட் ரியாக்ஷன்” வில்லன் சிரிப்புடன் விளக்கம் கொடுத்தான்.

“இப்படியெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி நல்லவனாகப் பாக்காதே பக்கி! உன்மேல இருக்குற கோபம் இன்னும் உஷ்ணம் குறையாம அப்பிடியேதான் இருக்கு. இது எப்பவும் மாறாது. கோபம், கோபம்தான், உன்னை பாக்கற நேரமெல்லாம் கோபம். ஃலைப் ஃபுல்லா இந்த கோபத்தை செலிபிரேட் பண்ணப்போறேன். தப்பிச்சு போக முடியாது பிஸ்தா” கடுகடுத்தவளின் பேச்சு கணவனுக்கு ரசனை கலந்த சிரிப்பினை வரவழைத்தது.

“பிஸ்தாவோட பொண்டாட்டின்னு ப்ரூப் பண்ணிட்டடீ, என் பட்டரூ!” மெச்சுதலுடன் அவளை கட்டிக்கொள்ள,

“இதுக்கெல்லாம் இனிமே தடாதான்டா!” என்றவளின் வாயை அடைக்கும் தீவீர முயற்சியில் அவன் இறங்க, அடுப்பில் தோசை தீய்ந்து போய் வழக்கம்போல் சொதப்பி வைத்தது.

வாய்க்கு ருசியான சமையலை சமைப்பதும் உண்பதும் கூடவேகூடாது என்பதுதான் இருவரின் வினைப்பயனோ என்னவோ?  

இரண்டு நாட்கள் கணவனின் சீண்டலிலும் மனைவியின் ஊடலிலும் கழிந்துபோக, மூன்றாம்நாள் மீண்டும் பிரச்சனை தலைதூக்கிப் பார்த்தது.

மறுபடியும் முகமறியா பெண்ணின் வாய்மொழிச்செய்தி குறுஞ்செய்தியாக மெசெஞ்சரில் வந்து விழ, இம்முறை பொங்கிவிட்டாள் ரவீணா.

பிரஜேந்தர் கிளம்பி சென்ற காலைப்பொழுதில், அம்மாவிடம் பேசி முடித்து வைத்தவுடன் வந்து விழுந்த அணுகுண்டு குறி தப்பாமல் தாக்கி இவளைச் சீண்டிவிட, இதற்கு காரணமான தன்அப்பாவிடமே நியாயம் கேட்க புறப்பட்டுச் சென்றாள்.

யாரிடமும் இங்குதான் செல்கிறேன் என்று சொல்லவும் இல்லை. ஒரு வேகத்துடன் சுரா டெக்ஸ்டைல்ஸில் வந்து நின்றவளை மரியாதையுடன் வரவேற்றார் குருமூர்த்தியின் உதவியாளர்.

“அப்பா இருக்காரா? அவர பார்க்கணும்” கறார்குரலில் இவள் கேட்க,

“அவர் வர்ற டைம்தான் மேடம். நேத்து நைட்டே இங்கே வந்துட்டாரு. இன்னைக்கு மார்னிங் ஒன்பது மணிக்கெல்லாம் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண போயிட்டாரு. அனேகமா முடிஞ்சிருக்கும், எதுக்கும் நீங்க வந்திருக்கிற விசயத்தை நான் இன்ஃபார்ம் பண்ணிடுறேன்” என்றவர் அலைபேசியை எடுக்க, வேண்டாமென்று தடுத்தாள்.

“இல்ல அங்கிள், அவர் மெதுவா வரட்டும்” அமைதியாக  உரைத்தவளின் உள்ளம், கோப எரிமலையை வெளியே கக்கத் தயாராய் இருந்தது.

எங்கே தான்வந்த விஷயம் அறிந்தால் தந்தை இங்கே வராமல் போய்விடுவாரோ என்ற எண்ணம் தலைதூக்கிவிட தன்வருகையை தெரிவிக்க வேண்டாமென்று தடுத்தாள்.

அடுத்த அரைமணி நேரம் கழித்து விற்பனையகத்திற்குள் நுழைந்த குருமூர்த்தி மகளைப் பார்த்து கேள்வியாய் நிற்க அவளும் முறைத்துப் பார்த்தாள்.

உதவியாளரின் முன்னிலையில் இதென்ன கூத்து என்ற அதட்டல் பார்வையில் தொண்டையை செருமிக் கொண்டவர், “உள்ளே வா!” என மகளை அழைத்துவிட்டு,

“சுந்தரம் நான் சொல்றவரை விசிட்டர்ஸ் அன்ட் போன் கால்ஸ் எதையும் எனக்கு அனுப்பாதீங்க!” உத்தரவிட்டு மகளை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.

“சொல்லு, என்ன விஷயம், எதுக்காக வந்திருக்க?” எவ்வித விசாரிப்பும் இல்லாமல் குருமூர்த்தி கேட்க, இவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“நான் சொன்னபடி அந்தப் பய புத்திய காட்டிட்டானா? என்ன சொல்றான் அந்த ஆகாவலி! என்ன வேணும்னு கேட்டு உன்னை இங்கே அனுப்பிருக்கான்?” தனக்குள்ளேயே யூகித்துக் கொண்டு மகளிடம் பேசத் தொடங்கியவரை பார்வையாலேயே எரித்தாள் ரவீணா.

“அதெப்படி, நான் இந்த பிரச்சனையோடதான் வந்திருப்பேன்னு நீங்களா கெஸ் பண்ணிச் சொல்றீங்க? மனசுக்குள்ள இவ்வளவு குதர்க்கமான நினைப்பு இருந்தா, எந்தளவுக்கு நீங்க இறங்கி வேலை பார்த்துருப்பீங்க… எதுக்காக இந்த ஈனபுத்தி? காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ்வளவு பெரிய குத்தமா?

எங்கள பழி வாங்கறதா நினைச்சு அம்மாவுக்கும் ஓவரா டார்ச்சர் குடுத்திட்டு இருக்கீங்க… இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன். ஓரளவுக்கு மேல எங்களாலயும் பொறுமையா இருக்க முடியாது.

லீகலா ஆக்ஷன் எடுக்க கம்ப்ளைண்ட் பண்ணினா, அடுத்த நிமிசமே நீங்கதான் அசிங்கப்பட்டு நிப்பீங்க! என்னோட அப்பாங்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே ப்ரஜூ பொறுமையா இருக்கான். இல்லன்னா நடக்கிற கதையே வேற…” சரவெடியாக அடுத்தடுத்து பொரிந்து தள்ளியவளை   புரியாமல் பார்த்தார் குருமூர்த்தி.

“என்ன சொல்ற நீ? நான், எதுக்கு உன் அம்மாவை டார்ச்சர் பண்ணப் போறேன். நீ வீட்டை விட்டு போன அன்னைக்கே நானும் அங்கேயிருந்து வெளியே வந்துட்டேன். கம்ப்ளைண்ட் லீகல் ஆக்சன் இதெல்லாம் என்ன? உங்களை பழி வாங்கி, நான் என்ன லாபத்தை பார்க்கபோறேன்?” குழப்பத்துடன் அவரும் வெகுண்டு கேட்க, 

“நியாயம் பேசி நல்லவனாகப் பார்க்காதீங்க. உங்க கேவலமான வேலையெல்லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும். அதெப்படி, என்னோட மொபைல் நம்பருக்கும், நம்ம வீட்டு லாண்ட்லைன் நம்பருக்கும் மட்டுமே அந்த கால்ஸ் வருது. அந்த ரெண்டு நம்பர்ஸ் மட்டுமே தெரிஞ்சவரு நீங்க மட்டும்தான். சோ… எதையும் சொல்லி தப்பிக்கப் பார்க்காதீங்க!” கடுப்பு குறையாமல் பேசினாள் ரவீணா

“நீ சொல்றது எனக்கு ஒன்னுமே புரியல… தெளிவா சொல்லு” இந்த ஒரே பதிலில் குருமூர்த்தி நிற்க, தனக்கு வந்த வாய்ஸ் மெசேஜை ஓடவிட்டாள்.

“என்ன ரவீணா மேடம்! தாலி பெருக்கி போடுற பங்கஷன் ரொம்ப ஜோரா நடந்துச்சு போல, அதை விட ஜோரா நம்ம பிஸ்தா உங்களை நல்லாவே கவனிச்சாராமே! உங்கம்மாவும் வந்து அழுதுன்னு செம்ம சென்டிமென்ட் சீன் எல்லாம் ஓடிச்சாம். நடத்துங்க, நடத்துங்க…

இதெல்லாம் பிஸ்தா உங்களை விட்டு வர்ற வரைக்கும்தானே, ஜோரா நடத்துங்க! எப்போ இருந்தாலும் அவன், என்னை தேடித்தான் வருவான். ஏன்னா உங்களை லவ் பண்றதுக்கு முன்னாடி இருந்தே என்னை லவ் பண்றானே… மை பிஸ்தா!” காதலும் நக்கலும் கலந்து முடிந்தது அந்த வாய்மொழிச் செய்தி.

இதைக் கேட்ட குருமூர்த்திக்கு தலைசுற்றிப் போன நிலைதான். இதில் தான் எங்கிருந்து வந்தேன் என்ற கேள்வியும் தோன்றாமல் இல்லை. ஆனாலும் தன்னிலையை விளக்கிவிடும் அவசியத்தில் இருக்க, அதையே செய்தார்.

“இதப்பாரு வினு! எனக்கு பிடிக்கலன்னா நேருக்குநேரா மோதி இறங்கி அடிக்கிற ஆள் நான். இப்படி யாரோ மாதிரி கண்டதையும் பேசி கலைச்சு விடுற பழக்கம் எனக்கு கிடையாது. நான் முடிவு பண்ணின, உன்னோட கல்யாணம் நின்னு போன விஷயத்துல, நான் நிறைய பிரச்சனைகளை பேஸ் பண்ணிட்டு இருக்கேன். இந்த எழவை எல்லாம் என்னன்னு யோசிக்கக் கூட எனக்கு நேரமில்ல… மொத இடத்தை காலி பண்ணு நீ!” எரிச்சலுடன் பேச மகளோ அசையவில்லை.

“உண்மையை மறைக்க நினைக்காதீங்க, உங்க ஐடி-ல இருந்துதான் மெசேஜ் வருது எனக்கு. அப்போ நீங்க இல்லாம வேற யாரு இதுக்கு காரணம்?”

“ஏன், உலகத்துல எனக்கு மட்டும்தான் குருன்னு பேர் இருக்கா?”

“ஆனா, சுராஜிஎம் ஐடி உங்களோடது தானே. அப்ப நீங்கதானே பதில் சொல்லணும்” விடாமல் இவள் கேள்வி கேட்க குருமூர்த்திக்கு கடுப்பாய் இருந்தது.

“இங்கே பாரு வினுமா, எனக்கு உன் மேல நிறைய கோபம் இருக்கு. ஆனா, இதுக்கு காரணம் நான் இல்ல… யாரோ, எங்கேயோ இருந்து நமக்கெதிரா வேலை பார்க்கறாங்க. என் பேரும் கெடணும், உன்னோட சந்தோசம், உங்கம்மாவோட நிம்மதியும் காணாம போகணும்ன்னு கங்கணம் கட்டிட்டு வேலை செய்யுறாங்க.

அது மட்டும் நல்லா புரியுது. தயவுசெய்து என்ன ஏதுன்னு சைபர் கிரைம்ல குடுத்து விசாரிக்க சொல்லு. இந்த மேட்டர்ல கான்சன்ட்ரேட் பண்ண எனக்கு இப்போதைக்கு  நேரமில்ல” என்றவர் மீண்டும் அந்த வாய்மொழிச் செய்தியினை கூர்ந்து கேட்டார்.

எதையோ கண்டுகொண்டதைப் போல அவரின் புருவம் பலமுறை சுருங்கி விரிந்தது. ஆனால் அவரோ எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நிச்சயமில்லாத ஒன்றை அனுமானத்தோடு வெளியே சொல்லவும் அவருக்குள் தயக்கம் வந்தது.

பொய்யாக இருந்தால் அது மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கி விடக்கூடும் அபாயமிருந்ததால் அமைதியாகவே அந்த எண்ணத்தை தனக்குள் அடக்கிக் கொண்டார். அதுதவிர தொண்டைக்குள் நிற்கும் விஷமாய் அவருக்கு இப்பொழுது பல பிரச்சனைகள் கழுத்தை நெறித்தபடி இருக்க, இந்தப் பிரச்சனையை மகளே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டார்.

பாசத்துடன் எப்படி இருக்கிறாய், என்ன செய்கிறாய் என்றெல்லாம் அன்பான விசாரணை எல்லாம் அவரிடத்தில் இல்லை. மகள் இங்கிருந்து சென்றால் போதுமென்ற பாவனையிலேயே அவரிருக்க, வெறுப்புடன் வெறுமையான மனநிலையில் வீடு வந்து சேர்ந்தாள் ரவீணா.

மதியம் உணவிற்கு வந்திருந்த பிரஜேந்தரிடம் நடந்தவற்றை எல்லாம் ஒப்புவிக்க, அவனோ கடிந்து கொண்டான்.

“நான் இல்லாம, யாரு உன்னை முந்திரி கொட்டையாட்டம் போகச் சொன்னா? ஏதோ உன் அப்பன் நல்ல மூடுல இருந்ததால எதுவும் செய்யாம விட்டுட்டான். இல்லன்னா இதான் சாக்குன்னு உன்னை பிடிச்சு வைச்சிருந்தா என்னடி பண்றது? கொஞ்சம் நிம்மதியா பொழுது போறது உனக்கு பிடிக்கலையா?”

“அப்ப இந்த விஷயத்தை அப்படியே விடச் சொல்றியா ப்ரஜூ?”

“தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழைக்க வேணாம்னு சொல்றேன்டீ. ஏன் என்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?”

“இந்த நம்பிக்கை, பாயசம் எல்லாம் நமக்கே நமக்கானது ப்ரஜூ! எப்ப இந்த விஷயம் வெளியே தெரிய வந்ததோ, அப்பவே வெளியுலகத்துக்கு நம்மை நிரூபிச்சே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு வந்துட்டோம். நான் சொல்றத புரிஞ்சுக்க… நீயும் சென்டிமென்ட்டா பேசி, இதை அப்படியே விட நினைக்காதே” கணவனுக்கு புரியும் வகையில் அன்பாகவும் கண்டிப்புடனும் சொல்ல, அவனுக்கும் இதை என்னவென்று பார்த்துவிட வேண்டுமென்ற வேகம் வந்தது.

நண்பன் ஒருவன் தனியாக துப்பறியும் நிறுவனத்தை  நடத்திக் கொண்டிருக்க, அவனிடத்தில் பிரச்சனையை கொண்டு சென்றான் பிரஜேந்தர்.

“மெசேஜ் வர்ற ஐபி அட்ரஸ் அன்ட் கால்ஸ் வர்ற நம்பர்ஸ் லொகேஷன் எல்லாம் கண்டுபிடிச்சாலே போதும் பிரஜன்! இந்த மாதிரியான கேஸை ரொம்ப ஈசியா மூவ் பண்ணிடலாம். இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப சாதாரணமாகிடுச்சு… டோன்ட் வொர்ரி வித் இன் டூ டேய்ஸ்ல எல்லா டீடெயில்சும் உனக்கு சப்மிட் பண்றேன்” என நம்பிக்கையளிக்க, அதன் தொடர்பான வேலைகள் முடுக்கி விடப்பட்டன.  

ரவீணாவிற்கு வந்த செய்தியும், சுகந்தி வீட்டு தொலைபேசியில் வந்த மூன்று தொலைபேசி இலக்கங்களையும் வைத்து ஆராய்ந்ததில், எங்கே இருந்து இவையெல்லாம் வந்ததென கண்டறியப்பட்டது.

தொலைபேசி அழைப்பு வந்த இடமும், குறுஞ்செய்தி வந்த இடமும் வேறுவேறாக இருந்தாலும் கோவை என்ற மாவட்டத்திற்குள்ளாக என்ற ஒற்றுமையை காட்டியது.

குருமூர்த்தியின் செயல்தான் இது என்ற கணிப்பு தவிடுபொடியாகி, புதியவர் ஒருவர் இந்த ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

யாரிவனோ/வரோ/வளோ?? அடுத்த பதிவு வரும்வரை யோசித்து உங்கள் கணிப்பை கூறுங்கள் நண்பர்களே…