அன்பின் உறவே – 21

அன்பின் உறவே – 21

சங்கனூர் பெரிய பண்ணையாரின் ஒரேமகள் அன்னலட்சுமி. செல்வவளத்திற்கு குறைவில்லை. மகனுக்கு இணையாக மகளுக்கும் சொத்தில் சரிபாதி என்ற நிபந்தனையுடன் பெண்ணிற்கு சம்மந்தம் பேசினார் அன்னலெட்சுமியின் தந்தை.

நிச்சயித்த திருமணத்திற்கு முந்தையதினம் மாப்பிள்ளையின் தாய் பாம்பு கடித்து இறந்துபோக, ராசியில்லாதவள் என்ற பட்டம் தன்னால் வந்து சேர்ந்தது அன்னலெட்சுமிக்கு.

பெரிய குடும்பத்தின் கௌரவம் காக்க, பண்ணையார் பெண்ணின் திருமணம் தடையின்றி நடக்க, அதே கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி திடீர் மாப்பிள்ளை ஆக்கப்பட்டார். தூரத்து உறவு முறையில் அன்னலட்சுமிக்கு இவர் முறைமாப்பிள்ளையும் கூட.

சுயதொழிலில் முன்னேற்றம் காண குருமூர்த்தி, நகரத்தில் தஞ்சமடைந்து அங்கேயே சுகந்தியின் காதலில் மயங்கிக் கிடந்த காலகட்டம் அது. தனக்கான அந்தஸ்து, கௌரவம், சுய அடையாளைத்தை தேடிக்கொள்ள அச்சமயத்தில் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்.

காதலை யோசிக்காமல் எதிர்க்கும் கிராமம் மற்றும் குடும்பத்தின் ஏச்சு பேச்சிற்கு பயந்தும், காதலியின் மீதான மோகமும் சேர்ந்து ஊருக்கு தெரியாமல் சுகந்தியுடன் திருமண உறவில் இணைந்திருந்தார்.

தன்னை அனாதை என்ற பொய்புரட்டில் சுகந்தியையும் அவரின் விதவைத் தாயையும் மிக எளிதாக நம்ப வைத்து விட்டார்.

ஊராருக்கு தெரியாத முதல் திருமணம் இவருக்கு வசதியாகிப் போக, சொத்து, வீடு, நில சம்பத்துக்களுடன் வரும் மனைவியை இவரின் சுயநல மனம் தட்டிக் கழிக்க விரும்பவில்லை.

அன்னலட்சுமியின் சொத்துக்களை ஒப்பிடும்போது சுகந்தியின் சொத்து மதிப்பான இரண்டு சொந்தவீடு, குறைந்தளவு நகை மற்றும் கையிருப்புகள் எல்லாம் கால்தூசிதான்.

குருமூர்த்தியின் மனம் இருபக்கமும் எடை போட்டு பார்த்து, ஒருவரையொருவர் அறியாத வகையில் இரண்டு வாழ்க்கையை வாழ முடிவெடுத்தார்.

அதோடு ராசியில்லாத பெண்ணிற்கு வாழ்வளித்த வள்ளல் என்ற பட்டம் வேறு வந்துசேர, மனிதருக்கு கசந்து போகுமா என்ன? ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு பெண்களை மணந்து கொண்டார்.

திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகள் கழித்து அடிக்கடி நிகழும் கணவரது கிராமத்து பயணம் சுகந்திக்கு சந்தேகத்தை வரவழைத்தது. கையில் ஒருவயது குழந்தையாக ரவீணாவும் இருந்ததில் மனதிற்குள் பலவித அலைகழிப்புகள் முதல் மனைவிக்கு.

அதற்கு தோதாக உறவினர், நண்பர்கள் எனப் பலரும் குருமூர்த்தியின் இரண்டாவது மனைவியுடனான வாழ்க்கையைப் பற்றி பொதுவில் பேச ஆரம்பிக்க, சந்தேகப் பூசலில் வார்த்தைகள் தடித்துவர ஆரம்பித்தன.

குருமூர்த்தியின் சுயநல சுபாவம் சுகந்தியின் தன்மானத்தை சீண்டிவிட, அது விவாகரத்தில் முடிந்தது. இது குருமூர்த்திக்கு பலத்த அடி, காதல் கொண்ட பெண்ணிடம் தோற்றுப்போன அவலநிலை அவரின் மனதை பலமாக காயப்படுத்தியது.

அன்றிலிருந்து தான்அனுபவித்த வலிக்கு மருந்தாக தன்னைச் சார்ந்த பெண் உறவுகளை எல்லாம் தாழ்த்தியும் குதர்க்கமாகவும் பேசிப் பழி தீர்த்துக்கொள்ள பழகிக் கொண்டார்.

முதல் மனைவியிடம் தனது ஆளுமையை காண்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே மகள் ரவீணாவிடம் அன்பாகப் பேசி அவளை தன்பக்கத்தில் இருத்திக் கொள்வார். இதுவும் உள்ளத்தில் உறைந்த பாசமல்ல, வெறும் கண்துடைப்பு மட்டுமே,.

முதல் திருமண முறிவிற்கு, இரண்டாம் திருமண வாழ்க்கையே காரணமென்று அனுமானித்த குருமூர்த்தி, தனது மனஉளைச்சலுக்கு மருந்தாக அன்னலட்சுமியை கடித்துக் குதற ஆரம்பித்தார்.

கிராமத்து பெண்ணிற்கு கணவனை எதிர்த்து பேசும் துணிவு வரவில்லை. பெண்ணின் தந்தையும் உலகநியதியை கூறி மருமகனின் செயலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட, அன்னலட்சுமியின் மனம் விரக்தியில் வீழ்ந்து போனது.

முதல் மனைவியின் மீதான கோபம், துவேசத்தை இறக்கி வைக்கும் வடிகாலாக இருந்த அன்னலட்சுமி, கணவனின் அடங்காத காமத்திற்கும் அடியாளாகிப் போனார்.

“விலை போகாத மாட்டை உரசிப் பார்க்கற பெரிய மனசு யாருக்கு வரும்? சுயமா தொழில் பண்றவன், ராசியில்லாதவள கட்டிகிட்டு வாழுறதுக்கு உங்க குடும்பமே என்னை கோவில் கட்டி கும்பிடணும்.

தாலிகட்டி கௌரவப்படுத்துனதோட கைகழுவி விடாம, புள்ள வரம் குடுத்து உன்ன காப்பாத்துறதுலயே என்னோட பெரிய மனசை நீ புரிஞ்சுக்கலாம்” இளக்காரமாகப் பேசியே இரண்டாம் தாரத்தின் உடலையும் மனதையும் நோக வைத்து தனது ஆசையை தீர்த்து கொள்வார் குருமூர்த்தி.

அன்னலட்சுமியின் தந்தையிடம் நயமாகப் பணிந்து பேசி தனது தொழிலை விஸ்தரித்துக் கொண்டார். அவருடைய காலத்திற்கு பிறகு அந்த உதவி கைநழுவிப் போக, இவரின் கஷ்டகாலம் அன்றிலிருந்து ஆரம்பித்தது.

மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்களை விற்கவோ அடமானம் வைக்கவோ முடியாதவாறு அனைத்தையும் பேரப் பிள்ளைகளின் பெயர்களுக்கு மாற்றியிருந்தார் மாமனார். பெண்ணைப் பெற்றவராக, தந்தையின் பொறுப்புக்களை செயலில் காட்டிவிட்டுப் போயிருந்தார் அன்னலெட்சுமியின் தந்தை.

அதுவும் அவர்களின் திருமணத்திற்கு பிறகே வாரிசுகளின் விருப்பத்தின் பேரில் மட்டுமே சாத்தியப்படுமென்று எழுதி வைத்ததில் குருமூர்த்திக்கு பெரும் தலைகுனிவு. இந்த ஆத்திரத்தில் குடும்பத் தேவைக்கென தம்படி பைசாவையும் செலவு செய்யாமல் தனது எதிர்ப்பினைக் காட்டத் தொடங்கினார்.

தொழிலின் முன்னேற்றமும் மாமனாரின் குடும்ப கௌரவமும் இவரது அந்தஸ்தை மேம்படுத்தியதில் தானாகவே கடன் கொடுக்கும் வள்ளல்களின் வலையில் சிக்கிக் கொண்டார். தொழில் வளர கடனும் வளர்ந்த காலத்தில் இவரின் வஞ்சமும் வளர்ந்து கொண்டே போனது.

சுகந்தியின் நிமிர்வும், மாமனாரின் சூழ்ச்சியும் இவரை புரட்டிப் போட்டதில், சுடுசொல்லால் தனது இரண்டாவது குடும்பத்தை வதைத்துக் கொண்டேயிருந்தார்.

தோளுக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்தபோதும் இவரின் வசைமொழிகளும் அடக்குமுறைகளும் குறையவில்லை. மாறாக அனைவரையும் துரதிர்ஷ்டசாலி பட்டியலில் சேர்த்தே குதறத் தொடங்கினார்.

இருபது ஆண்டுகளையும் கடந்த திருமண வாழ்வில் அன்னலட்சுமி மகிழ்ந்ததெல்லாம் பிள்ளை பேற்றின்போது மட்டுமே. அவர்களின் வளர்ப்பும், ஊரார் மெச்சும்படியான கௌரவமான வாழ்க்கை என்ற மேல்பூச்சுமே போதுமென வாழ்ந்து வந்தவரின் வாழ்க்கையில் இப்போது சிறுசலனம்.

திடீர் அக்கறையாக அன்னலட்சுமியை தன்னுடனே கோர்த்துக் கொண்டு திரிகிறார் குருமூர்த்தி. கணவரின் இந்த அதிரடி மாற்றத்தில் மனைவியின் மனமும் குழப்பக் காடாகி தவித்தது. 

பற்றாகுறைக்கு வீட்டிலிருந்தே படிக்கும் மகளை காரணமே இல்லாமல் கல்லூரி விடுதியில் கொண்டு போய் சேர்த்ததும் அவர் திண்டாடி விட்டார்.

இவரின் பலமே மகளும் மகனும் அல்லவா? வேண்டாமென்று தடுக்கும் உரிமையை இழந்தவராக மௌனப் பார்வையாளராக மாறிப்போனார் அன்னலட்சுமி.

********************

சில வருடங்களாக தந்தையின் மீதான ரவீணாவின் நிராகரிப்பில், குருமூர்த்தியின் அடங்கியிருந்த சீற்றம் மீண்டும் பற்றியெறியத் தொடங்கியது.

பெரியமகளின் மேல் உண்டான மனத்தாங்கலை எல்லாம் ஆராதனாவிடம் இறக்கி வைக்க, இளையவளின் மனதில் வன்மம் சூழ்ந்து கொண்டது.

அதிலும் ரவீணாவின் காதல் திருமணத்தை கூறியே ஆராதனாவை ஓரிடத்தில் அடக்கி வைத்தது பெரும் பாதகமாகிப் போயிற்று.

அம்மாவின் இத்தனை வருட இன்னல்களையும் தாண்டி இப்பொழுது தன்மீது படரத் தொடங்கியிருக்கும் அடக்கு முறைக்கு காரணம் தந்தையின் முதல் குடும்பமே என முடிவெடுத்து மனதிற்குள் கருவிக் கொண்டாள் ஆராதனா.

குருமூர்த்தியின் மகள் என்பதை நிரூபிக்கத் தொடங்கினாள். விளைவு, தந்தை என்ற வில்லனுக்கு வில்லியாகிப் போனாள் ஆராதனா. சத்தமில்லாமல் சுகந்தி மற்றும் ரவீணாவின் மனநிம்மதியை கெடுக்கவென ஆரம்பித்து வைத்த ஆட்டத்தில் தந்தையின் பெயரே அடிபடுமாறு அனைத்து உள்ளடி வேலைகளிலும் ஈடுபட்டாள்.  

பல வருடங்களாக மனதில் சுழன்றயடித்த கோபமும் ஆதங்கமும் எல்லை கடைந்து வஞ்சமாக உருவகம் பெற்று, பின்விளைவுகளை சற்றும் யோசிக்காமல் காரியங்களை செய்யத் தொடங்கியது. சரியான திட்டமிடுதலோடு செய்திருந்தால் இத்தனை சீக்கிரத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்க மாட்டாள் ஆராதனா.

ஏதோ ஒரு வேகத்தில் இவள் எய்த அம்பு, இப்பொழுது திரும்பி வந்து இவளின் நெஞ்சையே குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பழி வாங்கும் படலத்திற்கு என்ன நியாயத்தை கூறப் போகிறாள்?

பழி ஒருபக்கம் பாவம் ஒருபக்கமாய், ஏதுமறியாத அப்பாவி பெண்மணியும், இளஞ்ஜோடியும் குழம்பிக் கொண்டு வேதனையில் தவித்தது மட்டுமே இவள் மேற்கொண்ட முயற்சிக்கு கைமேல் கிடைத்த பலன். இவளுக்கு வேண்டியதும் அதுதானே!

பிரஜேந்தருடன் காரில் தொடங்கிய பயணத்தில் நடந்தவற்றை அசைபோட்டுக் கொண்டே வந்தவளை, அலைபேசியின் அழைப்பு நிகழ்விற்கு வரவழைத்தது. ரவீணா, கணவனை விசாரிக்க அழைத்திருந்தாள்.

“எங்க இருக்க ப்ரஜூ?”

“ஆன் தி வே டா பிங்கி! இன்னும் ஒன் ஹவர்ல உங்கம்மா வீட்டுல இருப்பேன். நீயும் அங்க வந்திரு!”

“அங்கே எதுக்குடா? நேரா இங்கே வா! அம்மாக்கு தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. ஆள் யாருன்னு நான் பார்க்கணும், ப்ளீஸ்” மனைவி கெஞ்ச, ஆராதனாவை ஓரப்பார்வை பார்த்தான் பிரஜன்.

ஆராதனாவின் கண்கள் வெளியே வேடிக்கை பார்த்தாலும், காது இவனது பேச்சினை கேட்டுகொண்டிருந்தது. மனைவியிடம் கொஞ்சிப் பேசியே ஆராதனாவின் கோபத்திற்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தான் பிரஜன்.

“அந்த விஐபி-ய உங்கம்மாதான் மொதல்ல பார்க்கணும் பிங்கி. சோ, நீ அங்கே வந்திரு” என்றுவிட்டு நொடிநேரம் நிறுத்தியவன்,

“ரவீமா!” என உருகி அழைக்க, இப்புறம் ரவீணாவிற்கு திடுக்கிட்டது.

“என்னாச்சு ப்ரஜூ? எனி சீரியஸ்!” பதட்டத்துடன் இவள் கேட்க,

“உஷ்… சொல்றத அமைதியா கேளு டா! ஆள் யாருன்னு தெரிஞ்சதும் கோபத்துல ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதை கேக்க, நீ ரெடியா இருக்கணும். முக்கியமா அந்த பொண்ணை ஹர்ட் பண்ணக்கூடாது” தொடர் உத்தரவுகளை போட, இவளுக்கு சுர்ரென்று கோபமேறிப் போனது.

“நீ ரவீமான்னு குழையும்போதே எனக்கு சந்தேகம்டா! நீ சொல்றத நான் கேட்டே ஆகணும்ன்னா, இப்படி கூப்பிட்டே என்னை தலையாட்ட வச்சிருவ, சரியான கேடி பிஸ்தா” பல்லைக் கடித்துக் கொண்டுகூற, இவனின் முகம் புன்னகையில் விரிந்தது.

பொருளாதார பற்றாக்குறையும் குழப்பங்களும் இருவருக்குமிடையில் நீடித்தாலும், இவர்களின் நேசம் ஆழமான புரிதலில் நாளுக்குநாள் மெருகேறிப் போவதின் சுகானுபவம் அவனது முகத்தினில் எதிரொளிக்க, சத்தமாகவே சிரித்து வெளிப்படுத்தினான் பிரஜேந்தர்.

“இப்படியெல்லாம் என்னை லாக் பண்ணி வைக்காதடீ! சின்ன பையன் எப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியாது” உல்லாசமாய் தன்னை மறந்து கூறியவன், நாக்கை கடித்துக் கொண்டான்.

அருகில் வயதுப்பெண், அதிலும் இவர்களின் மீது அளவில்லா கோபத்தை சுமந்துகொண்டு தன்னோடு பயணிக்கும் பெண்ணை மனதில் கொள்ளாமல் பேசியது தவறோ எனத் தோன்றியது.

‘சாரி’ என சத்தமில்லாமல் உரைத்தவன், “ஓகே டா பிங்கி! சீக்கிரம் வரப்பாக்கறேன்” அழைப்பினை முடித்து விரைந்து வாகனைத்தை செலுத்தினான்.

மனைவியுடன் பேசும்போது தோன்றிய இவனது ரசனையான முகபாவங்களை பார்த்த ஆராதனாவிற்கு உள்ளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

கணவன் மனைவிக்கிடையே பிணக்கை உண்டாக்க, இவள் ஆரம்பித்த விளையாட்டு இவர்களுக்குள் இணக்கத்தை அதிகமாக்கியிருக்கிறதோ! ‘தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்’ என்பது இதனைத்தானோ?

அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் பிடிக்கவில்லை, மௌனச் சாமியாரிணியாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வர, அவனுமே ஆடியோ பிளேயரை ஓடவிட்டு அமைதியாக வந்தான்.

இவனது அசைவுகள் எல்லாம் சேலத்தில் குருமூர்த்திக்கு தெரியவந்த வண்ணமே இருக்க, அன்னலெட்சுமியை உலுக்கி எடுத்துவிட்டார்.

“பாவி, படுபாவி! நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டுடியே சண்டாளி! இப்ப அவன் போலீஸ்ல போயி நின்னா என்ன நியாயத்தை சொல்லிட்டு நான் எதிர்ல போயி நிக்கிறது? ஊரெல்லாம் என் பேரச் சொல்லியே காறித் துப்பும்டீ!

உன் பொண்ணு பண்ணி வைச்சிருக்கிற கேவலத்துக்கு மீடியா கூப்பாடு போடாத குறையா, என்னையே குறி வைச்சு பேசும். இதெல்லாம் உனக்கெங்கே தெரியப்போகுது நாயே!” ஆவேசப்பட்டவரின் கை, மனைவியின் கன்னத்தில் அழுத்தமாய் பதிய, சத்தமில்லாமல் வாங்கிக் கொண்டார் அன்னலெட்சுமி.

இதெல்லாம் அவருக்கு புதிதில்லை. சந்தையில் விலை போகாத மாடு, ராசியில்லாதவள் என்றெல்லாம் வார்த்தை சவுக்கடிகளை விளாசுபவரிடம் மகளிற்கான கரிசனத்தை மட்டும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?. 

கணவரிடம் அன்பும் அனுசரணையும் இதற்குமுன் அனுபவித்திருந்தால் ஒருவேளை ஏங்கிருப்பாரோ தெரியவில்லை?

மகளின் நலனை மட்டுமே பெரிதென எண்ணும் அன்னையாக பொங்கியவர், கணவரின் ஆவேசத்திற்கு கடிவாளம் போடத் தயாரானார். காலம் கடந்த ஞானோதயமோ வீரமோ, சாது மிரண்டு காட்டினை பழிக்க ஆரம்பித்தது.

“இம்புட்டு கௌரவம் உங்களுக்கு தேவையா இருக்குன்னா, நீங்கதான் இறங்கிப் போகணும்ங்க… உங்க சின்னபொண்ணு கிட்ட ஏன், எதுக்காக இப்படி பண்ணினான்னு கேளுங்க…

உங்க மாப்பிள்ளை, பெரியபொண்ணோட காலு, கைய புடிச்சு போலீசுல குடுத்த கம்பிளைன்ட வாபஸ் வாங்கப் பாருங்க. ஆராதனா செஞ்ச தப்ப பெரிய மனசு பண்ணி சுகந்தி அக்கா மன்னிக்கனும்னா, நீங்கதான் அவங்ககிட்ட மக சார்புல மன்னிப்பு கேக்கோணும்.

இதெல்லாம் செய்யுறதுக்கு உங்க மனசு ஒத்துழைச்சா, உங்க கௌரவம், அந்தஸ்து, பேரு எல்லாமே உங்ககிட்டேயே பத்திரமா இருக்குமுங்க!” தெளிவாய் அழுத்தமாய் உரைத்தார் அன்னலெட்சுமி.

திருமணம் முடிந்த இத்தனை ஆண்டுகளில் கோர்வையாக இத்தனை நேரம் மனைவி பேசி கணவர் கேட்டது இதுவே முதன்முறை. எல்லாவற்றிக்கும் தொடக்கம் என ஒன்றிருந்தால் முடிவு என்பதும் இருக்கும்தானே?

குருமூர்த்தியின் இளமைக்காலத்தில் ஆரம்பித்த சர்வாதிகார ஆட்டங்களை முடிவிற்கு கொண்டு வரவே இளையமகள் தனது விளையாட்டினை துவக்கியிருந்தாள் போலும்.

“என்னடீ உளறிக் கொட்டுற?” மனைவியின் பேச்சில் மிரண்டவராய் குருமூர்த்தி கேட்க,

“உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கும் என்ற பொண்ணோட கௌரவம் முக்கியமுங்க… நான் சொன்னத யோசிக்காம செஞ்சா எல்லாருக்கும் நல்லது. இல்லன்னா உங்க இஷ்டம்” விட்டேற்றியாகப பேசி கணவனை கதிகலங்க வைத்தார்.

மனைவியின் கூற்றுப்படியே குருமூர்த்திக்கு சிந்திக்கவும் நேரமில்லை. ஊராரின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்பதை விட, சொந்த பந்தங்களின் முன் மண்டியிட்டு விடலாமென்ற நல்லெண்ணம் தலைதூக்க, சுகந்தியின் வீட்டிற்கு அன்னலெட்சுமியுடன் செல்ல முடிவெடுத்தார்.

‘நேராக இங்கே வா’ என பிஸ்தாவை அழைத்தாலும் அவன் வரவே மாட்டான். வீம்பு பிடித்த மகளும் தந்தையின் பேச்சை கேட்கமாட்டாள் என்பதும் புத்தியில் உரைக்க வேறுவழியின்றி இவரே சமரசத்தில் இறங்கிப் போகத் தீர்மானித்தார்.

இவரின் குடும்பத்திற்குள்ளாக கலவரம் நடந்து, ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாதே என அவரின் மனமெல்லாம் பதைத்துக் கொண்டது.

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்காக ஏற்கனவே கையில் முன்ஜாமீன் வாங்கிகொண்டு வெளியில் அலைபவருக்கு புதிதாக குடும்ப பிரச்சனைக்கென்று அலைய உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை.

சுயபச்சாதாபமும், சுய அலசலிலும் சிந்தனைகளை சிதற விட்டவாறே அன்னலெட்சுமியுடன் சுகந்தியின் வீட்டிற்கு குருமூர்த்தி வந்து சேர்ந்தார்.

குழப்பங்கள் தீர்ந்து பிரச்சனைகள் முடிவினை எட்டும் சமயத்தில் கணவரின் வருகையை சற்றும் விரும்பவில்லை சுகந்தி. அவருடன் வந்த அன்னலெட்சுமியை கண்டவுடன் உடல் விறைத்துக் கொண்டார்.

‘இப்பொழுது என்ன கலவரத்தை உண்டு பண்ணப் போகிறாரோ’ என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்த ரவீணா,

“யாரு இவங்க? இப்ப எதுக்காக இங்கே வந்திருக்கீங்க?” தந்தையிடம் நேரடியாகவே கேள்வி கேட்டாள்.

சுகந்திக்கு அன்னலெட்சுமியின் முகம் பரிச்சயம். ரவீணாவிற்கு அப்படியல்ல. அந்த குடும்பத்தை பற்றிய விவரத்தை மட்டுமல்ல. அவர்களின் புகைப்படத்தையும் கூட மகளுக்கு காண்பிக்காமல் வளர்த்திருந்தார் சுகந்தி. மகளுமே அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சித்ததில்லை.

குருமூர்த்தியோ வெகு சுத்தம். இங்கு வந்தால் அந்த குடும்பத்தை மறந்து விடுவார். இதே பழக்கத்தை அந்த குடும்பத்திலும் கடைபிடித்திருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. எல்லாம் விதியின் வன்மை.  

மகளின் கேள்விக்கு பதில் கூறாமல் எப்பொழுதும் போல, உத்தரவாக,

“போலீஸ்ல குடுத்த கம்பிளைன்ட வாபஸ் வாங்கு வினு!” குருமூர்த்தி படபடப்பு குறையாமல் கூற,

“முடியாது, அது என் கையில இல்ல” ரவீணா மறுக்க, விசும்பத் தொடங்கினார் அன்னலெட்சுமி.

“ஏய், வாயை மூட மாட்ட… பேசிட்டு இருக்கேன்ல!” குருமூர்த்தியின் அதட்டலில் ரவீணாவிற்கு அவர்களின் உறவு புரிந்து போனது.

அன்னையின் பக்கம் வந்து நின்ற ரவீணா, “எதுவா இருந்தாலும் நாளைக்கு வந்து பேசச் சொல்லுங்கம்மா. ப்ரஜூ இப்ப வந்துடுவான். அந்த பிரச்சனைய மொத முடிப்போம்” முடிவாகக் கூறிய நேரத்தில்

“அதுக்குதான் நானும் வந்திருக்கேன் நீ மொத கம்ப்ளையின்ட வாபஸ் வாங்கு” என்பதிலேயே குருமூர்த்தி நிற்க, அந்த நேரத்தில் பிரஜேந்தரும் வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழைந்த ஆராதனா, அங்கே அன்னையை பார்த்து திகைத்து நிற்க, அவரோ மகளை அடிக்க பாய்ந்து வந்த நேரத்தில், பிரஜேந்தர் ஆராதனாவிற்கு அரணாய் அவளின் முன்னே வந்து நின்றான்.

“இவ மேல யாரு கைய வைச்சாலும் பதிலுக்கு பதில் என்கிட்டே இருந்து வரும். உறவு உரிமைன்னு சொல்லி யார் யார் வந்தாலும் தட்டிவிட யோசிக்க மாட்டேன்” தீர்க்கமாக கூறி குருமூர்த்தியை அழுத்தமாகப் பார்த்தான் பிரஜன்.

சுகந்தி, ரவீணா, அம்சவேணி பாட்டி மூவருக்கும் குழப்பம்தான். அன்னலெட்சுமியின் வேகத்தை பார்த்து மகளென்றே சொல்லாமல் புரிந்து போனது மூவருக்கும்.  ‘இத்தனை ஆதரவு, இவளுக்கு எதற்காக’ சுகந்தியின் மனம் நினைக்க,  

‘தொலைபேசியில் பேசிய பெண்ணும் இவள்தானா, ஒருவேளை அனைத்தும் உண்மையோ?’ பாட்டியின் கற்பனையும் தறிகெட்டு ஓடியது.

‘அதான் என் கையை கட்டிபோட்டுடியே பாவி! இன்னும் எதுக்காக என்னை பார்க்கற? என்னென்ன பேசணுமோ நீயே பேசி முடி! பெரிய பிஸ்தாவாட்டம் அவளுக்கு செக்யூரிட்டியா நிக்கிறான் பக்கி!’ உள்ளுக்குள் முளைத்த கடுகடுப்புடன் ரவீணா கணவனை முறைத்து பார்த்து நின்றாள்.