Mk 28

FB_IMG_1631334494200-86f2b606

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 28

இன்றோடு தம்பதியினர் இருவரும் ஊருக்கு திரும்பி ஒருவாரம் ஆகியிருந்தது.

அன்றைய சம்பவத்திற்கு பிறகு இனியாவும் வெற்றியும் ஒற்றுதலுடன் வாழ தொடங்கினர்.

ஒரு ஒரு இடத்திலும் இவர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு அதன் படி அடுத்தக்கட்ட வாழ்க்கையை நகர்த்தினர்.

ஊடலுக்கு பின் கூடலென அவர்கள் வாழ்வு நாளுக்கு நாள் ரசனையாக சென்றது.

இவர்களது பந்தம்  பூந்தோட்டத்தில் பூக்கும் மலர்களை மலரவிக்கும் வேர் போன்றது. எத்தனை அசைத்தாலும் தாங்கி நிற்கும் சக்தி கொண்டது இவர்களது காதல்.

இசை என்பவள் இவர்கள் வாழ்வில் நுழைந்ததை மறந்துவிட்டு நல்லதொரு வாழ்வை வாழ தொடங்கினர்.

நாட்கள் அதன்போல் நகர துவங்கியது .

அன்றைய தினம் சீக்கிரமே வீட்டிற்கு வந்த இனியா அவனுக்காய் காத்திருக்க , அவனோ அன்றைய தினம் பார்த்து நேரம் கழித்தே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .

” என்ன தரு நீங்க இன்னைக்கு போய் இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கீங்க ?”

“இன்னைக்கு ஏதாவது முக்கியமான நாளா என்ன ?” புரியாது மனைவியிடமே கேட்க ,அவளோ தலையில் அடித்து கொண்டாள் .

“எதுவும் தெரியாமல் இருக்கிறதே நல்லது தான் .வாங்க வாங்க ” என வெற்றியை எதிர் வீடு நோக்கி கூட்டிச்சென்றாள் .

“என்ன இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு கூட்டிட்டு வந்திருக்க ? கேட்டப்படி அறைக்குள் நுழைந்தவன் அப்படியே நின்றுவிட்டான் .

அங்கே போனதும் வெற்றிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை . அவளது அறை முழுவதும் அவன் மட்டுமே வாசம் செய்கிறான் . அவனாக இல்லாமல் அவளாக வாசம் செய்துள்ளான் .

மனைவியின் காதலை எண்ணி வியந்து போனான் வெற்றிமாறன் .

அங்கிருந்த ஒவ்வொரு படங்களுக்கும் ஒரு ஒரு கதை வைத்திருந்தாள் . அதை சொன்ன அவளுள் அத்தனை விதமான உணர்ச்சிகள் ஆக்ரமித்திருந்தது . அதை எல்லாம் ஆசையாக கேட்டுக்கொண்டான் .

அவள் விழிகளுக்குள் அவன் வதனம் தான் .

காதலிப்பது ஒரு சுகம் என்றால் , காதலிக்கப்படுவதும் ஒரு சுகம் தானே .அதனை தான் இப்போது வெற்றி அனுபவித்து கொண்டிருக்கிறான் .

“உன் கிட்ட இருக்கிற போட்டோ எதுவுமே என்கிட்ட கிடையாது ” ஒவ்வொன்றாக பார்த்தவாறே கூற , அவளோ மென்னகை புரிந்தாள் .

“இதெல்லாம் ஒரு காலத்துல எப்போ டா சொல்லுவேன்னு இருந்தேன் . அதுக்கப்றம் சொல்லமுடியாம போய்டுமோ காட்டமுடியாம போய்டுமோ பயந்திட்டு இருந்தேன் தரு ” கவலையாக கூற , அவளை அப்படியே ஆரத்தழுவிக்கொண்டான் வெற்றி .

“விடு டா , எல்லாமே நம்ம காதலுக்கான ஒரு பரிட்சை அவ்ளோதான் .எத்தனை பிரச்சனை வந்தாலும் நாம சேர்ந்தே இப்படி கை கோர்த்து அதை கடந்து , மீண்டு வரலாம் ” அவள் கரத்தோடு தன் கரத்தை சேர்த்து அதில் மெதுவாக முத்தமிட்டான் அவளின் மிஸ்டர் இனியா .

“விடுங்க தரு” சிணுங்களாக கூற , கணவன் அவளை சீண்ட ஆசை கொண்டான் .

“விடுறதுக்கா இப்டி கட்டிகிட்டேன் ” கூறியப்படியே அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் .

அதில் பெண்ணவளுக்கு கூச்சம் வரவே அவனை விட்டு தள்ளி நிற்க முயன்றாள் .

முயற்சி வீணாய் போனது தான் மிச்சம் !

“ப்ளீஸ் ” பாவையவள் சிணுங்க ,

” இந்த சிணுங்கல் தான் சில் , என்னை உனக்குள்ள ஆழ புதைய சொல்லுது ” மூக்கோடு மூக்கு உரசி நெற்றி முட்டினான் .

பெண்ணவள் அவனின் செய்கையில் விழி மூடிக்கொள்ள , அதிலும் ஒரு முத்தம் ! அந்த அறை எங்கிலும் முத்த சத்தங்களால் எதிரொலிக்க , புகைப்படங்கள் மின்னலுற்றது .

“என்னை எவ்வளவு பிடிக்கும் சில்?” அனுதினமும் அவளிடம் கேட்கும் கேள்வியை மீண்டும் கேட்டான் .

” என் உயிர் மூச்சே நீங்க தான் தரு . உங்களோட ஒவ்வொரு செய்யலிலும் நான் மயங்கி போய் இதோ இப்படி கிறங்கி போய் இருக்கேன் ” ஆசையாய் அவள் மொழிய ,

“அப்போ காதல் சொல்லலாமே பெண்ணே ?” கேட்கும் ஆவல் அவனுக்கு மிகுந்து இருந்தது .

அவனையே ஆசையாக பார்த்தவள் ,விழி வழி காதலை எய்தி அவன் பார்வைக்குள் தன்னை கலக்க விட்டு ,” ஐ லவ் யூ தரு .லவ் யூ சோ மச் ” பட்டென்று சொல்லவும் கணவனின் விழிகள் விரிந்தது.

அந்த விரிந்த விழிகளில் இதமான இதழொற்றல் ஒற்றி எடுத்தவள் ” என் கணவனுக்கான என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசு ” கூறி அசையாது பிரிந்திருந்த அவனது அதரங்களை மென்மையாக முற்றுகையிட்டாள் .

சொல்லி அடங்காத காதலை

மௌனமாக பேசிடவே

என் இதழ்கள் போதுமே டா !

சொல்லாத காதலையும்

அவை உன்னிடம் சேர்ப்பிக்கும் !

தொடக்கம் பாவையாக இருந்தாலும் முற்றுப்பெறாது தொடர் ஒற்றளாக கொண்டு சென்றது என்னவோ கணவன் தான் .

மென்மையாக ஆரம்பித்த முத்தம் வன்மையாக தொடர்ந்தது.

மனைவி மூச்சுக்கு சிரமப்படுவதை உணர்ந்து அவளை மெதுவாக தன்னிடமிருந்து விலகிவிட்டவன் ” பெஸ்ட் பர்த்டே கிஃப்ட் டா ” சொல்லி மீண்டும் முத்தமிட்டான் .

” நான் என்னோட பிறந்தநாளையே மறந்துட்டேன் . எந்த ஒரு பொண்டாட்டியும் இப்படி ஒரு பரிசு புருஷனுக்கு கொடுத்திருக்க மாட்டாங்க சில் ” சொன்னவனின் குரலில் மாற்றம் தெரிந்தது இனியாவுக்கு .

“மணி பன்னிரெண்டாகுது தரு சாப்பிட போலாமா ?” மாற்றம் அறிந்து பெண் கேட்க ,

“போலாம் தங்கமே ” என்றவன் அலேக்காக அவளை தூக்கிக்கொண்டு அவர்களது வீட்டிற்கு நடையிட்டான்.

அவள் போட்ட பந்தில் இவன் சிக்ஸர் அடித்து விட , மன்னவனது வெற்றியில் ராணியும் அவனோடு இணைந்து கொண்டாள்.

பசி என்று கேட்டவளுக்கு தன்னையே கொடுத்து , மோகத்தின் பசியை அவனும் ஆற்றிக்கொண்டான்.

அடுத்தநாள் காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டே இருவரும் விழித்தனர்.

” ஏங்க கொஞ்சம் கையை எடுத்தா நான் போய் கதவை திறக்க வசதியா இருக்கும்” கூச்சப்பட்டு பெண் மெதுவாக சொல்ல ,

” அதெல்லாம் கையை எடுக்க முடியாது. நேத்து சாப்பிட்ட சாப்பாட்டுக்கு நிம்மதியா தூங்கணும். தூங்கு பார்ப்போம்.. இல்லன்னா திரும்ப சாப்பிட வேண்டியதா இருக்கும் ” தலைநிமிர்த்தி சொன்னவன் கண்ணடிக்க , பெண்ணவளின் முகம் அக்காலை பொழுதில் அந்திவானமாய் சிவந்தது.

” ச்சீ , வர வர நீங்க பேசுறது எதுவுமே சரியில்லை தரு ” சிணுங்கலுடன் கூறி அவனை விட்டு நகர முற்பட்டாள்.

” கொடுக்கிறத கொடுத்திட்டா , நீங்க வெளிய போகலாம் சில்” கணவன் சண்டித்தனம் செய்ய , வெளியே இருந்து கதவு உடைப்படும் அளவிற்கு தட்டப்பட்டது.

” சீக்கிரம்.. சீக்கிரம்..” கணவன் ஊக்குவிக்க மனைவி வெட்கம் கொண்டு முகம் திருப்ப ,

“அப்போ வந்து படு “என அவளை இழுத்து தன்னோடு அணைக்க , வேகமாக அவனை விட்டு விலகி நின்று முறைத்து விட்டு சென்றாள்.

இவனோ குப்புறப் படுத்து உறக்கத்தை தொடர்ந்தான்.

வெளிய வந்த இனியா , வெற்றியின் பிறந்தாளுக்காக வந்திருந்த மொத்த குடும்பத்தையையும் வரவேற்று , அவர்களுக்காக காலை உணவை தயார் செய்ய , அவளுக்கு துணையாக பூங்கோதை சேர்ந்து கொண்டாள்.

பின்னர் , தாமதமாக எழுந்து வந்த வெற்றி மொத்த குடும்பத்தையும் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவன் , பின் புன்னகை முகமாக அனைவரையும் வரவேற்றான்.

தான் குடும்பமாக தனக்கொரு குடும்பமாக , தன்னை தாங்க ஒருத்தி இருக்கிறாள் என்பதே வெற்றிக்கு பெருமிதமாக இருந்தது.

அதிலும் கௌதமை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு கிடைத்த சிறந்த நட்புக்களில்  அவனும் ஒருவன். அவனை தாங்க ஒரு குடும்பம் இருக்கிறது அதுவும் மாமியார் காந்திமதி அவனை தாங்குவதை காண்கையில் கண்கள் இரண்டும் பூத்தது.

அவனது இத்தனை கால தனிமைக்கு வடிகாலாய் அமைந்தது இந்த குடும்பம். பார்க்க பார்க்க திகட்டவில்லை வெற்றிக்கு.

வெற்றியின் பார்வையுணர்ந்த கௌதம் புன்னகைத்தான். அதில் அவனுமே மென்னகை புரிந்தவன் , மனைவியை தேடலானான்.

” என்ன , என் அண்ணனை சைட் அடிக்கிறீங்க போல ?” நக்கலாக கேட்க,

” சைட் அடிக்க அவனோட தங்கச்சி இருக்கா எனக்கு.  ஆனா ஒரு நண்பனா அவனோட சந்தோஷத்தை பார்த்து நிம்மதியா இருக்கு “

” இன்னும் அவரோட முழு சந்தோஷமும் அண்ணனுக்கு கிடைக்கல தரு. நமக்கு இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு “

” ம்ம் , இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதுக்குள்ள எனக்கு நரைமுடியே வந்திடும் போல ” சலித்துக்கொண்டான் வெற்றி.

” எல்லாமே ஒரு நாள் மாறும் தரு.  அதுக்கு கொஞ்ச நாள் ஆகதான் செய்யும். அவளை விட்டு தான் பிடிக்கணும் . ஒரேடியா இழுக்க நினைச்சா , அத்துட்டு போயிடும் தரு” என்க

மனைவியின் கூற்றை ஆமோதித்தான் வெற்றிமாறன்.

பின்னர் , மாலைப்போல் வெற்றியின் இருபத்தி ஒன்பதாவது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடினர்.

பெற்றவர்கள் காலில் இருவரும் விழுந்து ஆசிவாங்கி கொண்டனர்.

ரோஷினி மட்டும் கேக் கட் செய்ய போகும் சிறிது நேரத்திற்கு முன்பு வந்தவள் அடுத்த சில மணி துளிகளிலே கிளம்பியும் விட்டாள்.

கௌதமின் ஏக்கப் பார்வை அவளையும் குழந்தையையும் தழுவி இருந்தாலும் , அதனை கண்டுக்கொள்ளாது இருந்து கொண்டாள்.

அனைவருக்கும் உறங்க இடத்தை  ஒதுக்கி கொடுத்து அறைக்கு வராது போக்கு காட்டி கொண்டிருந்தவளை ஒரே அமுக்காக அமுக்கி அறைக்கு தூக்கி சென்று கதவை அடைத்து விட்டான் வெற்றிமாறன்.

அங்கே நல்லதோர் இல்லறம் அரங்கேறியது.

*******

பெங்களூர்

ராமின் மீது அத்தனை ஆத்திரமாக வந்தது இசையாழினிக்கு . அதிலும் தன்னை ஏதோ கைதி போல் கட்டி போட்டு வைத்திருப்பது மேலும் ஆத்திரத்தை தான் கூட்டியது.

திருவிழா முடிந்த  கையோடு  இசையை பெங்களூர் அழைத்து வந்துவிட்டான் பலராமன்.

அவனுக்கு தன் நண்பனின் வாழ்வு நல்முறையில் செல்ல வேண்டும் என்ற அக்கறையிலும் , இசையின் வாழ்க்கைக்காகவும் தான் தடாலடியாக பெங்களுர் அழைத்து வந்தது எல்லாம்.

வாசுதேவும் இசையின் அன்றைய நிலையை கூறியிருக்க , இசைக்காக வருத்தப்பட்டவன் அவளின் எண்ணத்தை மாற்ற எண்ணினான்.

ராம் மெதுவாக அவளது அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வர ,” எதுக்காக இப்படி பண்ற ராம்? ” கோபமாக வந்தது அவளுக்கு.

” எல்லாம் உனக்காக தான் யாழி “

” எது இப்படி கை கால்லை கட்டி போட்டு வச்சிருக்கதா ” ஆங்காரமாக அதேசமயம் ஆக்ரோஷமாக கேட்க ,

” எனக்கும் கஷ்டமா தான் இருக்கு யாழி.  உன்னை இப்படி கட்டி போட்டு வைக்கணும்னு ஆசையா என்ன? உன்ன சும்மா விட்டா நீ இங்க இருந்து தப்பிக்க தானே பார்க்கிற ” நிதானமாக பேசினான்.

” அப்புறம் இங்கேயே இருக்கிறதா? இன்னைக்கு வெற்றியோட பிறந்தாள் நான் அவங்க கூட இருக்க வேண்டாமா?”

” அதுக்கு தான் அவனோட ஒய்ஃப் இருக்காங்களே யாழி ” என்றதும் ” ஏய் !” அலறி விட்டாள் இசை.

” சாரி.. சாரி ” உடனடியாக மன்னிப்பை கேட்டவன் , அவளிடம் பொறுமையாக பேசத் துவங்கினான்.

” முதல்ல வெற்றி மீது எப்படி  அப்படி ஒரு எண்ணம் வந்தது?”  காதல் என்ற வார்த்தையை நாசுக்காக தவிர்த்தான்.

” அது எதுக்கு உனக்கு?” காட்டமாக கேட்க ,

” சொல்லேன் தெரிஞ்சிப்போம் “

” நீ தான் காரணம் ” என்றதும் நம்பமுடியாது திகைத்து போய் பார்த்தான்.

” நான் என்ன செஞ்சேன்?”

” நீ தான் வெற்றி அப்படி ,வெற்றி இப்படின்னு எப்போதும் வெற்றி பேச்சு தான். அது தான் வெற்றியை பார்க்கணும்னு எனக்குள்ள ஆசையை கொண்டு வர காரணமே. போக போக அந்த ஆசை ஈர்ப்பா மாறி காதலா வந்து நிக்குது ” அவள் கூற கூற தான் செய்த மடதனத்தை எண்ணி வெட்கிபோனான் பலராமன்.

” சரி , காதல் வந்துச்சின்னா நேரா அவன் கிட்டயே சொல்லியிருக்கலாமே எதுக்கு இந்த மாதிரி எல்லாம் செஞ்ச “

” நான் வேணும்னு இந்த பாதையை சூஸ் பண்ணல . என்னால வெற்றியை நெருங்கவே முடியலை. அப்போ தான் ஒரு வேலையா வந்தப்ப இனியா கூட ரூம் ஷேர் பண்ணிக்கிட்டேன். “

” அவ லெட்டர் எழுதி வெற்றிக்கிட்ட கொடுக்க சொன்னதை பார்த்தேன். கோபமா வந்துச்சி அவ மேல , ஆனா அவ எப்படியோ வெற்றியை நெருங்கின்னா , இதை நான் பயன்படுத்திக்க நினைச்சேன் .

வெற்றி திரும்பவும் ஏதாவது லெட்டர் போடுவான்னு பார்த்தா போடவே இல்லை. திடிருன்னு ஒரு நாள் லெட்டர் வந்துச்சி. படிச்சதும் அதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு வெற்றியை பார்க்கவும் போய்ட்டேன். அந்த நேரத்துல வாசு அண்ணா வருவான்னு சத்தியமா நினைக்கல . எல்லாமே முடிஞ்சிடுச்சி ராம் வெற்றி எனக்கில்லாம போய்ட்டான் ” கதறி கதறி அழுதாள் இசையாழினி.

” மறக்க முயற்சி பண்ணு மா. வெற்றி இனியாவை தான் நேசிக்கிறான் . அவங்க வாழ்க்கையில நீ இடையூறு செய்ய வேண்டாமே. அது அவனை கஷ்டபடுத்தும்ல ” கெஞ்சலாக கூற , மேலும் இசை சத்தமிட்டு அழுதாள்.

” இல்ல இல்ல வெற்றிக்கு நான் என்னைக்குமோ கஷ்டத்தை கொடுக்க மாட்டேன் ” அழுகையுடனே கூறினாள்.

அவளை பார்க்கையில் பரிதாபமாக தான் இருந்தது. ஆனாலும் இவள் நினைப்பது சரி வராதே.

அவளை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவன் அவனல்லவா ‌. அவளை மாற்ற முயற்சித்து சிறிது சிறிதாக அதனை செயல்படுத்தினான்.

பின் வரும் நாட்களில் அவள் பலராமனோடு , கவுன்சிலிங் சென்று வந்தாள்.

அவளுக்கு மாற்றம் தேவையாக இருக்க , அவளை மேற்படிப்பிற்காக வெளிநாடு அனுப்பி வைத்தது அவள் குடும்பம்.

சாம்பவி தான் மகனுக்கு ஆறுதலாக இருக்க , வாசுதேவ்  அவனோடு கூடவே இருந்தான்.

பலராமன் அவள்  நல்லபடியாக திரும்பி வரும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினான்.