அன்புடைய ஆதிக்கமே 11
அன்புடைய ஆதிக்கமே 11
Aa 11
“இதெல்லாம் ஒரு பைக்கா டா? பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ.”என்று புலம்பிக்கொண்டே ஜெயக்குமாரின் யமஹாவை சுற்றி சுற்றி வந்தாள் சுருதி…
உடை மாற்றி வந்தவள் தன் மனநிலையும் மாற்றி வந்திருந்தாள்…
ஜெயக்குமாரோ அவளை தான் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்”ஏன் அழுதுகிட்டு என்னை தொத்திக்கிட்டு வந்தப்ப உனக்கு தெரிலையா என் வண்டி எருமை மாடு மாதிரி இருந்துச்சுனு…:”என்று அவள் தன் வண்டியை குறை சொன்னதால் ஆரம்பித்திருந்த கோபத்துடன் கேட்டான் ஜெயக்குமார்.
“அப்ப பயத்துல இருந்தேன் டா. இல்லாட்டி உன்னைலாம் யாராச்சு கட்டி பிடிச்சுட்டு வண்டியில வருவாங்களா?”என்று ஒரு புருவத்தை தூக்கியவாறு கேட்டாள் சுருதி…(நாங்க கூட ரொமான்ஸ்னு நினைச்சு பயந்துட்டோம் மா.)
‘ அதானே கட்டிக்க போறவனே எல்லாம் நீ கட்டி பிடிப்பியா? ஏதாவது பொறுக்கி தானே உனக்கு பிடிக்கும்.’ என்று மனதில் நினைத்தவாறு அவளை முறைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்…
வெளியே சொல்லிருந்தால் அப்போதே அவள் வாயாலோ இல்லை கையாலோ ஒரு முடிவு தெரிந்திருக்கும்….அவன் தான் சொல்லவில்லையே…
சுருதியும் சிறு முனங்கலுடன் வண்டியில் இரு பக்கம் கால் போட்டு அவனின் மீது படாமல் தள்ளி அமர்ந்தாள்…
சிறிது நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு வேடிக்கை பார்த்தது சளித்திருக்க வேண்டும்.அதனால் குமாரு குமாரு என்று அவனை கூப்பிட்டு கொண்டே வந்தாள்…
அவனோ என்னவென்று கூட கேட்கவில்லை.
ஜெயக்குமாரோ அவள் தன்னை தொட கூட காரணம் வேண்டும் என்றவாறு கூறியதும், இப்பொழுது அவள் விரல் கூட தன் மேல் படாதவாறு ஒதுங்கி கீழே விழுவது மாதிரி அமர்ந்து வருவது;கூப்பிடும் போது கூட தன்னை தொட்டு கூப்பிடாமல் வருவது என்று எல்லாம் சேர்ந்து அவனுக்கு ஏதோ சொல்ல தெரியாத அடக்க முடியா கோபம் அவள் மீது வந்துதொலைத்தது.
சிறிது நேரம் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தவள், ஒருவேளை அவன் ஹெல்மெட் போட்டு இருப்பதால் தான் கூப்பிடுவது அவனுக்கு கேட்கவில்லையோ என்று தன் சுட்டு விரலால் அவனது முதுகில் குமார் என்று எழுதினாள்…சிறு வயதில் இப்படி தான் விளையாடுவாள். யாரையாவது குனிய சொல்லி அவர்கள் முதுகில் விரலால் பேரெழுதி கண்டுபிடிக்க சொல்லுவாள்.(இதெல்லாம் ஒரு விளையாட்டா மா.)
இவன் இதற்கு தானே காத்திருந்தான்.உடனே என்ன டி என்று சிறிது சத்தமாக கேட்டான்….
“இல்லை குமாரு. நீயாச்சும் பரவாயில்லை.டூ மார்க் ஆன்சர் தான். ஆனால் எங்க கேகே சார்லாம் ஒன் வர்ட் தான்.”என்று சிரித்தவாறு கூறினாள் சுருதி.
“ஆரம்பிச்சுட்டியா.ஏன் டி? எப்பயுமே புரியாத மாதிரியே பேசுற.வேகாத வெயில்ல ஹெல்மெட் வேற போட்டுக்கிட்டு கடுப்புல வண்டி ஓட்டிட்டு இருக்கேன்.இதுல நீ வேற…நசநசனு…”என்று உட்சபட்ச எரிச்சலில் கேட்டான் ஜெயக்குமார்.
“இல்லை டா…நீ கேள்வி கேட்டா குறுகிய விடையளி மாதிரி பதில் சொல்லுவ. ஆனால் எங்க சார் உனக்கும் ஒரு படி மேல போய் ஒருவார்த்தை ஒரு லட்சம் மாதிரி பதில் சொல்லுவாரு டா…அத தான் சொன்னேன். அதை கூட புரிஞ்சுக்க முடிலை.நீ எல்லாம் அப்படி என்னத்த தான் ஐஐடில போய் படிச்சியோ ?”என்று இதை கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற நக்கல் தொனியில் கூறினாள்.
“அடியே கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வா.என்னை கொலை காரன் ஆக்காதே.”என்று கூறியவன் அமைதியாக வண்டி ஓட்டினான்…
சுருதியும் இவன் ரொம்ப தான் பன்றான் என்ற நினைப்புடன் வாயை இறுக மூடிக்கொண்டு வந்தாள்…
சிலநிமிட இடைவேளையில் ஜெயராம் பள்ளியை அதாவது சுருதி முன்னர் வேலை பார்த்த பள்ளியை அடைந்திருந்தனர். அப்பள்ளியில் சாதாரணமாகவெல்லாம் வந்தவுடன் உள்ளே நுழைந்திட முடியாது. அப்பள்ளியின் ப்ரின்சிபாலின் அனுமதி பெற்று தான் நுழைய முடியும். ஆனால் அங்கிருந்த காவலாள் சுருதியை பார்த்தவுடன் சிரிப்புடன் நலம் விசாரித்துவிட்டு உள்ளே அனுப்பினார்…
அவ்ளோ நல்லவளா நீ என்ற பார்வையோடு கண்ணாடியின் வழியே அவளை பார்த்தான் ஜெயக்குமார்.அவளோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் கண்ணாடியை பார்த்திருந்தாலும் அவனின் கண்ணின் பாஷை அவளுக்கு புரியப்போவதில்லை.ஏனென்றால் அவன் தான் ஹெல்மெட் போட்டிருந்தானே…
இருவரும் வாகனங்கள் நிற்பாட்டும் இடத்தில் வண்டியை நிற்பாட்டிவிட்டு பிரின்சிபால் அறையை நோக்கி சென்றனர் கையில் தங்களது திருமண அழைப்பிதழோடு…
ப்ரின்சிபாலின் அறையின் கதவை ஜெயக்குமார் தட்டப்போகும் நிமிடத்தில் அவன் கையை பிடித்து இழுத்த சுருதி அவனை குனியுமாறு சைகை செய்தாள்…(மறுபடியுமா.)
“ஏய்.இப்ப என்ன டி பண்ணேன்?”என்று கிட்டத்தட்ட அலறலுடன் கேட்டான் ஜெயக்குமார். சும்மாவா பின்னே இன்று வாங்கிய அடி அப்படி அல்லவா…
“கத்தாதே டா…அடிக்க மாட்டேன்…குனிச்சு தொலை.”என்று தனது தலையிலே அடித்தவாறு கூறினாள்…
அவன் குனிந்தவுடன் கலைத்திருந்த முடியை தன் கைப்பையில் இருந்த சீப்பை எடுத்து சரிசெய்து விட்டவள்; மேல் சட்டையில் கழண்டிருந்த முதல் பித்தானை போட்டுவிட்டாள்…பிறகு தன்னையும் குனிந்து ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.
அவள் செய்வதை எல்லாம் ஒரு வித சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்…
“என்ன பாக்குற?எங்க சார்க்கு OCD இருக்கு…அதனால தான்.”என்று கூறியவாறே தனது கைக்கடிகாரத்தை ஒழுங்காக மாட்டினாள்…
‘அதானே பார்த்தேன்…இல்லாட்டி இவளாச்சும் இப்படி எனக்கு பண்றதாச்சும்…ஊருல இருக்கவன் வியாதிலாம் இவளுக்கு தான் டா தெரிஞ்சுஇருக்கு…’என்று மனதினுள் அவளை தாளித்து கொண்டிருந்தான் ஜெயக்குமார் …
இன்றைக்கு அடிவாங்கியதோலோ என்னவோ ஜெயக்குமார் தன் மனதில் நினைப்பதை எதையும் வெளியில் சொல்லாமல் இருந்தான்.
இருவரும் கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே சென்றனர்.உள்நுழைத்தவர்களை பார்த்த கேகே அதாவது இப்பள்ளியின் பிரின்சிபால் எழுந்து வந்து இருவரையும் வரவேற்றான்…
“வா சுருதி மா…எப்படி இருக்க?”என்று அவளை தோளோடு அணைத்து விடுவித்தவாறு கேட்டான் கேகே…பிறகு ஜெயக்குமாரை திரும்பி பார்த்து வரவேற்பாக ஒரு புன்னகை புரிந்து கைகுலுக்கி தன்னை அறிமுக படுத்திக்கொண்டான்…
‘பிரின்சிபால் ஏதோ வயசானவரா இருப்பாருனு நினைச்ச இவர் என்ன இவ்வளவு மேன்லியா இருக்காரு.’ என்று கேகே வை பார்த்தவாறு தனக்குள் நினைத்துக்கொண்டிருந்தான்…
ஆனால் சுருதியோ கேகேவோ அவனை கண்டுகொள்ளவே இல்லை. ஏதோ பள்ளி சம்மந்தமாக பேச ஆரம்பித்திருந்தனர்.ஜெயக்குமார்க்கு தான் ஏதோ எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக அங்கு இருப்பது போல் தோன்றியது.
ஜெயக்குமார்க்கு அவர்கள் இருவரையும் பார்த்து இப்பொழுது ட்ரெண்டிங் மீம் ஆன ஷ்ரூவ்வ்வ்வ்வ்வ் மொமெண்ட் தான்.ஏதாவது மீம் creator பார்த்திருந்தால் சுடசுட ஒரு மீம் ரெடி பண்ணியிருப்பார்கள்…
இந்த உலகத்திலே நீதான் எனக்கு மிகமிக முக்கியமாவன் என்பது மாதிரியும், அடுத்த நிமிடமே நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா என்பது மாதிரியும் தன்னை உணர வைக்க இவளால் மட்டுமே முடியும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்.
” உள்ளே யாரு.வெளிய நாங்க…
உள்ளே யாரு.வெளிய நாங்க…
வெளியே நாங்க.உள்ளே நீங்க…
அதான் யாரு நீங்க…
நீங்க நீங்க தான்.நாங்க நாங்க தான்.
நாங்க நாங்க தான்.நீங்க நீங்க தான்…”என்று நக்கல் மன்னன் கவுண்டமணியின் குரலில் ரிங்க்டோன் அவர்கள் இருந்த அறை முழுவதும் சத்தமாக எதிரொலித்தது.
மூவரில் இந்த அழைப்பு மணி சத்தம் யாருடையது என்று நான் சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்று நினைக்குறேன்.ஆமாம் இது நமது கதாநாயகியின் recent ரிங்க்டோன் தான் மக்களே…
அந்த அழைப்பு மணிஓசையை கேட்டதும் ஜெயக்குமாரும் கே கே வும் ஒரே நேரத்தில் இருவரும் தங்களது நெற்றியிலே அறைந்து கொண்டனர்.சம்மந்தப்பட்டவளோ ஒரு பெருந்தன்மையான சிரிப்புடன் கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்…
“தப்பா நினைச்சுக்காதீங்க…அவ கொஞ்சம்…”என்று இருவரும் ஒரே நேரத்தில் அவளுக்கு பரிந்து மற்றவரிடம் பேச வாய் எடுத்தனர்…
ஒரே மாதிரி ஆரம்பித்தவுடன் இருவரும் சட்டென்று சிரித்துவிட்டு, ஜெயக்குமார் ஆள்காட்டி விரலை நெற்றியில் ஓரத்தில் வைத்து சுற்றி கொஞ்சம் என்று கூறியதும்.…கே கே வும் சிரித்தவாறு ஆமாம் என்று தலையை ஆட்டினான். இருவரும் அடுத்தவரிடம் அடுத்து என்ன பேசலாம் என்று யோசிச்சு கொண்டிருந்த போதிலே கைபேசியுடன் உள்ளே நுழைந்த சுருதி கே கே விடம் கைபேசியை நீட்டினாள்…
யாரு என்று கே கே கேட்டதற்கு “காதுல வைச்சு பேசுங்க சார்” என்றவள் ஜெயக்குமார்க்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்….
“ஹலோ.”
“நா சுருதி அம்மா ஜோதி பேசுறேன் பா.நல்லா இருக்கியா பா….”
“நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?”என்று என்ன சொல்லி அழைப்பது என்ற குழப்பத்தில் வெறுமனாக கேட்டான் கே கே…
அவன் மனதில் இருக்கும் குழப்பத்தை அறிந்தவர் போன்று “சும்மா அக்கானே கூப்டு பா.சுருதி கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துரனும் பா.”என்று பாசமாக அழைத்தார் ஜோதி…
“இல்லை அக்கா…நிறைய ஒர்க் இருக்கு…கல்யாணத்து அன்னைக்கு கண்டிப்பா வரேன்….”
“உன் ஸ்டாப் கல்யாணத்துக்கு கல்யாணத்தனைக்கு வா.ஆனால் உன் அக்கா மகள் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துருக்கணும் பா. நானும் உங்க மாமாவும் வரவேண்டியது தான். ஆனால் பாரு நேரம் ஒத்துழைக்கல அதான்..அவளை அனுப்பிவிட்டோம்.நீ கண்டிப்பா வரணும் ரெண்டு நாளைக்கு முன்னாடியே.”என்று கே கே வை தன் சொந்த தம்பியாகவே நினைத்து அன்பு கட்டளை போட்டார் ஜோதி…
“சரிங்க கா.”என்று குடும்பமே இல்லாத தன்னை தம்பியாக நினைத்து உரிமை கொண்டாடியவரை மறுதலிக்க மனம் வரவில்லை. எதுவோ உடைவது போல் இருந்தது….
திருமணத்துக்கு பிறகு இங்கயே தொடர்ந்து வேலை செய்யுமாறு சுருதிக்கு அழைப்பு விடுத்தான் கேகே. இதை எப்படி கேட்பது என்று தான் சுருதி யோசித்துக்கொண்டிருந்தாள். அதையே கேகே கேட்கவும் சரி என்று சொல்லிவிட்டாள். மீண்டும் அவன் கண்டிப்பாக திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வரவேண்டும் என்று வலியுறுத்திவிட்டு இருவரும் கேகே விடமிருந்து விடைபெற்றனர்.
” அந்த மாலா எதுக்கு தற்கொலை பண்ணிருப்பானு நீங்க நினைக்குறிங்க?”என்று கரும்பலகையில் வரைந்திருந்த மின் சுற்று வரைபடத்தை பார்த்து தன் நோட்டில் வரைந்தவாறு தன் தோழிகளிடம் கேட்டாள் நவீனா.
“அதான் நம்ம கிளாஸ் சந்துரு சொன்னான்ல .ஏதோ லவ் மேட்டர் னு.அந்த பொண்ணோட டிபார்ட்மென்ட் சீனியர் கூட.”என்று வரைந்தவாறு பவித்ராவும் கூறினாள்.
ஆனால் பாரதி இவர்களுடைய உரையாடலிலும் கலந்துகொள்ளாமல்..வரைபடத்தையும் வரையாமல் ஏதோ சிந்தித்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள்.அவர்கள் இருவரும் கூட இவளை கண்டுகொள்ளாமல் தங்களது உரையாடலில் கவனமாக இருந்தனர்….
நவீனாவோ வரைவதை நிறுத்திவிட்டு பவியின் முகத்தை பார்த்து”ஏய்…போன வாரம் நாம காலேஜ் கட் அடிச்சுட்டு திருப்பரங்குன்றம் பார்க் போயிருந்தோம்ல..”என்றாள்.
” ஆமா அதுக்கு கூட நம்ம அலெர்ட் ஆறுமுகம்கிட்ட மானவரியா திட்டு வாங்குனோமே அதுக்கு என்ன இப்ப?”என்று தங்களது கருப்பு தினத்தை ஞாபகப்படுத்திய ஆற்றாமையில் பொரிந்து தள்ளினாள் பவி.
“அட ச்சீ முண்டம். அது இல்லை. அன்னைக்கு கூட அவ யார் கூடயோ கார்ல போறதே பார்த்தோம்ல..ஆனால் அவன் இந்த சீனியர் இல்லை மச்சி..”என்று யோசனையாக கூறினாள் நவீனா.
“நீ நல்லா பார்த்தியா பக்கி. தேவை இல்லாம ஏதாவது அடிச்சு விடாத.”
“சத்தியமா.நீ அந்த பக்கம் பஸ்ல உக்காந்து இருந்ததுனால உனக்கு தெரில.ஆனால் நானும் பாருவும் பார்த்தோம் டி.நாங்க உன்னை கூப்பிட்டு காமிக்கும் போது அந்த கார் மூவ் ஆயிருச்சு அதான்.உனக்கு… பின்னாடி உக்காந்து இருந்த அவ மட்டும் தெரிஞ்சா.”என்றவள் தன் அருகில் கரும்பலகையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருக்கும் பாரதியிடம் “சொல்லு பாரு.நாம அன்னைக்கு பார்த்தது அந்த சீனியர் இல்லைல.”என்றாள்…
கனவில் இருந்து வெளிவந்தவள் போல் “என்ன?ஏன்னது?”என்றாள் பாரதி…
மற்றநேரமாக இருந்திருந்தால் இருவரும் அவளை பார்த்து கிண்டல் பண்ணி சிரித்திருப்பர். ஆனால் அப்படி சிரிக்கும் நிலை இப்பொழுது இல்லையே… பாரதியின் அப்பா மகாலிங்கம் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன் அட்மிட் ஆகிருந்தார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குடல் வால்வு நோய் என்றும், அதை சரியாக கவனித்து பார்க்காமல் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மருந்து தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டதால் அவரது குடல் பாதிக்கும் மேல் அழுகிப்போய் இருப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்டனர்.. உடலில் தேவையான சத்து இல்லாததால் இரண்டு வாரங்களுக்கு பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்…..அறுவைசிகிச்சைக்கு தேவையான பணம் கூட ESI மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மித இதர செலவுகள் மாத்திரை மருந்து எல்லாம் வாங்க கண்டிப்பாக இவர்களின் கைக்காசு வேண்டும். இன்னும் இரு வாரத்தில் தேர்வுகள் வேறு ஆரம்பிக்க போகிறது.இது முடிந்தவுடன் அடுத்த செம்க்கான கல்லூரி கட்டணம். கல்லூரி பேருந்து கட்டணம். பாரதியின் தங்கை பள்ளி கட்டணம் என்று நிறைய இருக்கிறது.
அதை விட இப்பொழுது முக்கியமானது அவளின் அப்பாவின் மருத்துவத்திற்கு பணம் வேண்டும்…
பாரதியின் குடும்பம் ஒன்னும் அவ்வளவு வசதியான குடும்பம் இல்லை தான். அதற்காக ஒன்றும் பரம ஏழைகள் இல்லை. வரும் சம்பளம் கிம்பளம் அனைத்தையும் அவளது தந்தை தன் மகள்களின் படிப்பில் தான் முதலீடு செய்திருந்தார். இக்காலகட்டத்தில் கல்வி தான் அதிக விலை உள்ள அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டதே…
பத்து வருடங்களுக்கு முன் பால்வாடியாக இலவசமாக குழந்தைகள் விளையாடிய இடமாக இருந்தது, தற்போதைய காலத்தில் அப்டேட்டாகி கிரட்ச் என்று பெயர் பெற்று வருடம் 25000தில் இருந்து ஆரம்பித்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் தொழிலாகி விட்டதே.
மத்திய தர குடும்பங்களின் நிலை இதுவே. தங்களது வருமானம் அனைத்தையும் பிள்ளைகளின் படிப்பில் கொட்டுகின்றனர்…இடையில் ஏதாவது அவசரம் என்று வந்தால் சேமிப்பு இல்லாமல் இப்படி அல்லாடுகின்றனர்.
விரலுக்கேத்த வீக்கம் என்பது ஆடம்பர பொருள்கள் வாங்குவதில் மட்டும் காட்டவேண்டியது இல்லை. கல்வியிலும் காட்ட வேண்டும்.
Back to the point…
“இப்ப அதுவா நமக்கு முக்கியம். அதே விடு மச்சி.”என்று நவியிடம் கூறிய பவித்ரா பாரதியை நோக்கி “எல்லாம் சரியாகும் மச்சி…கவலை படாதே…”என்று கூறியவாறே பாரதியை தோளோடு அணைத்தாள் பவி. பவி அருகில் அமர்ந்திருந்த நவியும் எழுந்து பாரதிக்கு அடுத்த பக்கம் அமர்ந்தவள் தோளோடு அணைத்துக்கொண்டாள்…
“விடுங்க டி. ஓவர் செண்டிமெண்ட் சீன் ஓட்டுவீங்க.”என்று இரு ஓரத்திலும் தன்னை அணைத்திருந்த இருவரையும் விலகிவிட்டவாறு கூறினாள் பாரதி…
“அதானே மச்சி. be ஹாப்பி.”என்றனர் இருவரும் ஒருசேர…
என்ன தான் தோழிகளுடன் சிரித்து பேசிவிட்டாலும் உள்ளே ஒரு கனபந்து உருண்டுகொண்டே இருந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசனையுடன் அடுத்து எப்பயும் போல் பேசிக்கொண்டிருந்தாள்…
கண்டிப்பாக கடவுள் ஒரு இலுமினாட்டியாக தான் இருக்க வேண்டும்….
நாட்கள் ஜெட் வேகத்தில் ஓடியது என்று தான் சொல்லவேண்டும்.இன்னும் இரண்டு நாட்களில் சுருதி ஜெயக்குமாரின் திருமணம் நடக்கவிருக்கிறது. இவர்களின் திருமணத்துக்கு மதுரையிலே பெரிய திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடித்திருந்தனர்…
அடுத்த தலைமுறையின் முதல் திருமணம் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக திரிந்தனர். அதிலும் தங்கள் பெண் வெளியே எங்கும் செல்லாமல் தங்கள் உடன்பிறப்பு குடும்பத்திலே கொடுப்பதில் முத்துவேல் சகோதரர்கள் கண்ணா இன்னொரு லட்டு திண்ண ஆசையா என்று விளம்பர பாணியில் பின்னணி ஒலிக்காத குறையாக மகிழ்ச்சி கடலில் நீந்திக்கொண்டிருந்தனர்.
இந்த மகிழ்ச்சி நீடிக்குமா….அவந்திகாவின் ஒருதலை ராகம்….சுருதியின் முற்றுப்புள்ளி அருகே மீண்டும் சில புள்ளிகள் சேர்ந்து நீடிக்குமா? ஜெயக்குமாரின் கோப அவதாரம் அனைத்தையும் குலைக்குமா?
காதலும் கர்ப்பமும் ஒன்றாமமே…யார் காதல் யாருடன்?