birunthavanam-35(Final Episode – Part 1)

Birunthaavanam-52b32818

பிருந்தாவனம் – 35

“கிருஷ், மாதங்கி எப்படி இருக்கா?” அரவிந்த் பதட்டமாக கேட்க, “இன்னும் நினைவு திரும்பலை. டாக்டர்ஸ் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் ஆகும்னு சொல்லுறாங்க. நேரில் வாங்க பேசுவோம்.” கிருஷின் குரலில் சுரத்தே இல்லை.

“அங்க என்ன நிலைமை?” கிருஷ் தன் கேள்வியை தொடுக்க, “நாம பிடித்த ரெண்டு பேரை தாண்டி, இன்னும் மூணு பேரு சிக்கினாங்க. விசாரணை பண்ணிட்டு இருக்கோம். அவங்க கான்டக்ட்ஸ் எல்லாம் சென்னை தான். அங்கிருந்து தான் இவங்களை இயக்குறாங்க. அதுவும்…” அரவிந்த் தயங்க, “சொல்லுங்க…” கிருஷ் நிதானமாக கேட்டான்.

“எதிரிங்க, உங்களுக்கு தான் மாதிரி தெரியுது. மாதங்கியை அடித்தால்…நீ…” அரவிந்த் மென்று விழுங்க, “எனக்கு புரியுது.” கிருஷ் தன் உதட்டை சுளித்தான்.

“மெட்ராஸ் நம்ம ஏரியா. நான் நடவடிக்கைகள் எடுக்க சொல்லிட்டேன். முகுந்தன் கிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். அம்மா, அப்பா ஃபிளைட்டில் கிளம்பி வராங்க. நேரா, ஆஸ்பத்திரிக்கு தான் வருவாங்க. நான் அவங்க வரதுக்குள்ள அங்க வந்துருவேன். ஒருவேளை, நான் வர முடியலைன்னா…” அரவிந்த் இழுக்க, “நான் பார்த்துக்கறேன்.” பேச்சை முடித்துவிட்டான் கிருஷ்.

பிருந்தா, கிருஷின் தாயார், பாட்டி என அனைவரும் மாதங்கி இருக்கும் அறைக்கு வெளியே காத்திருக்க, கிருஷ் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.

மணித்துளிகள் கடந்து கொண்டே இருந்தது. கிருஷ் தன் வலியை மறைக்க முயல்வதை அவன் தாடை இறுக்கம் காட்டியது.

 ‘மாதங்கிக்கு ஒன்னும் ஆகாது.’ அவன் அறிவு அவனை வழிநடத்த, அவன் மனம் தான் துடிதுடித்து போனது.

அரவிந்த் வேகமாக உள்ளே நுழைந்தான். சுயநினைவில்லாமல் இருக்கும் தங்கையை பார்த்து கண்ணீர் வடித்தான்.

கிருஷ் உணர்ச்சி துடைத்த முகத்தோடு, நிற்க அப்பொழுது உள்ளே நுழைந்தனர் மாதங்கியின் தாயும் தந்தையும் முகுந்தனோடு.

வேகமாக உள்ளே நுழைந்த மாதங்கியின் தாய் மரகதவல்லி அரவிந்தை நெருங்கி, “நான் தான் சொன்னேனில்லை. இவன் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்று அவர் கிருஷை காரணம் காட்டி, அரவிந்தை திட்டினார்.

“போதும் நிறுத்துங்க.” கிருஷ் மாதங்கியின் தாயை நோக்கி தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி கர்ஜித்தான்.

“இன்னைக்கு என் மாது இப்படி இருக்கிறதுக்கு காரணம் நீங்க தான். அன்னைக்கு, அரவிந்தும், முகுந்தனும் அடிபட்டு கிடந்தப்ப, நான் தான் காரணமுன்னு நீங்க இப்படி குதிக்காம இருந்திருந்தா, என் மாதுவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. நாங்க அன்னைக்கே யார் பிரச்சனைன்னு கண்டுபிடிச்சிருப்போம்.” கிருஷ் கோபமாக கூறினான்.

“யார் பிரச்சனைக்கு காரணமுன்னு கண்டுபிடிக்க விடாம, பிரச்சனையை எங்க பக்கம் திருப்பி, எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க. என்னால, அன்னைக்கு இருந்த நிலைமையில் யாரையும் எதுவும் கேட்க முடியலை.” கிருஷ் பற்களை நறநறத்தான்.

“கிருஷ் நிறுத்து டா. அவங்க பொண்ணு இப்படி இருக்கும் பொழுது…” வேதநாயகி இப்பொழுது தன் மகனை கட்டுப்படுத்த முயற்சித்தார்.

“உங்களுக்கு இவங்க மேல என்ன அக்கறை? உங்களுக்கு உங்க மகன் வாழ்க்கை முக்கியம். அவ்வளவு தானே?” கிருஷின் குரல் உடைந்திருந்தது.

மாதங்கியின் பெற்றோர் கிருஷை யோசனையாக பார்த்தனர்.

“என் மாது மேல உங்களுக்கு என்ன அக்கறை? அன்னைக்கு அரவிந்தும், முகுந்தனும் அடிபட்டு கிடந்தப்ப, அவளை அடிச்சி கொன்னவங்க தானே நீங்க?” கிருஷ் மாதங்கியின் பெற்றோரை பார்த்து கோபமாக கேட்டான்.

கிருஷின் அன்பு, அங்கு இருந்தவர்கள் அனைவரையும் மௌனிக்க செய்தது.

“அப்புறமும், நீங்க மாதங்கியை கூட வைத்து பார்க்கலை. அவ இத்தனை வருஷம் தனியா தானே இருந்திருக்கா. மாதங்கி, அப்படி ஒன்னும் பெரிய தப்பு பண்ணலையே. அப்படியே அவ தப்பு பண்ணிருந்தாலும், பாதிக்கப்பட்டவன் நான் தானே? அவளை நான் தானே கேள்வி கேட்டிருக்கணும். நீங்க எல்லாரும் அவளை ஏன் தண்டிசீங்க?” கிருஷ் தன் கண்களை இறுக மூடினான்.

“நீங்க அவளை சரியா பார்த்துக்கலை. ஆனால், இன்னைக்கு நானும் அதே தப்பை பண்ணிட்டேன்.” கிருஷ் மடார் மடார் என்று தலையில் அடித்து கொள்ள, “அண்ணா, மாதங்கிக்கு ஒன்னும் ஆகாது.” தன் சகோதரனை கண்ணீர் மல்க சமாதானம் செய்தாள் பிருந்தா.

கிருஷ் வீட்டாரும், மாதங்கி வீட்டாரும் என்ன செய்வது என்ற வழி தெரியாமல், கிருஷை மௌனமாக பார்த்தனர்.

நேரம் சற்று கடினமாகவே கடந்தது.

“மாதங்கி கண்விழித்து விட்டாள்” இந்த சொல்லில் பலரின் உயிர் திரும்பி வந்தது.

அனைவரும் உள்ளே செல்ல, கிருஷ் வெளியே நின்று கொண்டான். சுவரோடு சாய்ந்து, தன் கண்களை இறுக மூடி கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் மல்கியது.

“அம்மா…” மாதங்கி, தன் தாயை இடையோடு கட்டி கொண்டாள்.

மரகதவல்லி தன் மகளின் முதுகை வருடி கொடுத்து, கண்ணீர் வடித்தார். பல வருட பிரிவும், அவர்கள் கோபமும், வருத்தமும் அங்கு கண்ணீராய் வழிந்து அவர்களை விட்டு விலகி கொண்டிருந்தது.

“ஏன்டீ எங்களை இப்படி படுத்துற?” அவர் மாதங்கியை கடிந்து கொள்ள, அவள் தந்தை மகளின் தலையை வாஞ்சையோடு வருடினார்.

பிருந்தா தன் தோழியை கட்டிக்கொண்டாள். “பயந்துட்டியா பிருந்தா?” என்று மாதங்கி கேட்க, பிருந்தா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி. உன்னை நம்பி யார் பொறுப்பை கொடுத்தாங்க?” மாதங்கி கேலி பேச, பிருந்தா கண்ணீரை துடைத்து கொண்டு புன்னகைத்தாள்.

மாதங்கியின் கண்கள் சுழன்றது ஒரு தேடலோடு.

தன் சகோதரனையும், முகுந்தனையும் பார்த்த மாதங்கி, “அண்ணா, அவங்களை பிடிச்சிட்டியா? நான் அவங்க கிட்ட சபதம் எல்லாம் போட்டிருக்கேன். எங்க அண்ணா பெரிய ஐ.பி.எஸ் ஆஃபிஸர் உங்களை எல்லாம் பிடிச்சி தொங்க விட்டிருவாருன்னு.” மாதங்கி கேலி போல் கேட்க, அரவிந்த் எதுவும் பேசாமல் தலை அசைத்தான்.

அரவிந்த் முகத்தில் இப்பொழுது தான் நிம்மதி பரவி இருந்தது.

முகுந்தன் அவளை மௌனமாக பார்க்க, “ஏண்டா, என்னை கடத்திட்டு எல்லாம் போயிருக்காங்க. எதுவோ கடிச்சி, எனக்கு இப்படி உடம்பு எல்லாம் சரி இல்லாம போயிருக்கு, அப்ப கூட நீ எப்பவும் போல் சும்மா தான் இருந்தியா?” என்று மாதங்கி முகுந்தனை வம்பிழுத்தாள்.

அனைவரும் உணர்ச்சியின் பிடியில் மௌனமாக நிற்க, “ச்ச… ச்ச… அப்படி எல்லாம் சும்மா இருப்பேனா? உன்கிட்ட மாட்டினவங்க உயிரோட பிழைக்கணும்னு வேண்டிகிட்டே இருந்தேன்.” முகுந்தன் சூழ்நிலையை சகஜமாக்க முயற்சித்தான்.

‘இவளின் இந்த தைரியத்திற்கு தான் தன் மகனுக்கு மாதங்கியை பிடித்திருக்கிறதோ?’ என்பது போல் வேதநாயகி, மாதங்கியை பார்த்து கொண்டிருந்தார்.

எல்லார் முகத்திலும் மெல்லிய புன்னகை ஒட்டி கொண்டது.

மாதங்கியின் கண்கள் இப்பொழுது வெளிப்படையாகவே தேடலை தொடங்கியது.

அவள் தேடல் அனைவருக்கும் தெரிந்தாலும், எதுவும் உறுதியாக கூற முடியாத நிலையில் யாரும் எதுவும் பேசவில்லை.

“யாரை தேடுற?” என்று வேதநாயகி மாதங்கியை பார்த்து கூர்மையாக கேட்டார்.

தன் தாயின் கேள்வியில் வெளியே நின்று கொண்டிருந்த கிருஷின் செவிகள் இவர்கள் பக்கம் கவனத்தை திசை திருப்பி கொண்டது.

“உங்க மகனை தான் தேடுறேன். எங்க அம்மா, அப்பா வந்துட்டாங்க. நான் அவங்களோட எங்க வீட்டுக்கு கிளம்பிடுறேன். உங்க மகன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பலாமுன்னு தான் தேடுறேன்.” மாதங்கி பட்டென்று கூறினாள்.

“ஓ… சீக்கிரம் வர சொல்றேன். சொல்லிட்டு கிளம்பிடு” வேதநாயகி மெட்டு விடாமல் கூறி வெளியே சென்றார்.

“பேஷண்ட் ரெஸ்ட் எடுக்கட்டும்.” செவிலியர் கூற, அனைவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

‘எதுவும் மாறவில்லை. எதுவும் சரியாகவில்லை’ தனக்கு தானே கூறிக்கொண்டு, கிருஷ் தன்னை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி இருந்தது. ‘என்ன பேசுவது? எப்படி பேசுவது?’ என்று யாருக்கும் தெரியவில்லை.

‘யார் ஆரமிப்பது? எங்கு ஆரமிப்பது?’ என்ற குழப்பம்.

குழப்பத்துக்கு காரணமானவளோ, உங்களுக்கு வந்த விதிக்கு நான் என்ன செய்வேன் என்பது போல் படுத்து கொண்டாள்.

அமைதியை கலைத்தான் கிருஷ். “அம்மா, கிளம்புவோமா ? அது தான், அவுங்க வீட்டு ஆளுங்க வந்துட்டாங்கல்ல?” கிருஷ் தன் தாயை பார்த்து கேட்டான்.

மகளின் தேடலை கண்டு கொண்ட மரகதவல்லி, தன் முதல் அடியை எடுத்து வைக்க முடிவு செய்தார்.

“நீங்க இப்படி போய்ட்டா, உங்க மாதுவை யார் பார்த்துப்பா? நாங்க சரியா பார்த்துபோம்முன்னு சொல்ல முடியாது . அப்படியே நாங்க சரியா பார்த்துக்கிட்டாலும், உங்களுக்கு அதில் திருப்தி வராது.” புன்னகையோடு பேச ஆரம்பித்தார் மாதங்கியின் தாயார்.

“அது… அது… அப்ப, மாதங்கிக்கு உடம்பு முடியாமல் போச்சு. அதனால், கோபத்தில்…” கிருஷ் தடுமாற, “திரும்ப உடம்பு சரி இல்லைனா, நீ அவங்க கிட்ட சண்டைக்கு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்?” கிருஷின் தயார் வேதநாயகி, தன் மகனை பார்த்து புருவம் உயர்த்தினார்.

“அதெல்லாம் மாதங்கிக்கு எதுவும் ஆகாது.” கிருஷ் உறுதியாக கூற, “அப்படி எதுவும் ஆகாதுன்னு பாவம் மாதங்கி வீட்டில் எப்படி உத்திரவாதம் கொடுக்க முடியும். அதனால், நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நீயே அவளை நல்ல படியா பார்த்துக்கோ.” கிருஷின் தாயார் கூற, “அம்மா…” தன் விழிகளை விரித்தான் கிருஷ்.

“என்ன நொம்மா?” வேதநாயகி கேட்க, “இல்லை அம்மா வேண்டாம். நம்ம வீடு மட்டும் இல்லை உறவுகள் நிறைந்த எல்லார் வீடும் பிருந்தாவனம் தான். அவங்க குடும்பத்தையோ, நம்ம குடும்பத்தையோ காயப்படுத்துற இந்த காதல் எங்களுக்கு வேண்டாம் அம்மா.” கிருஷ் மெதுவாக கூறினான்.

“கரெக்ட் அண்ணா. நீ சொல்றது தான் சரி. உனக்கு மாதங்கி வேண்டாம். உள்ள மாதங்கி உன்னை தான் தேடினா, அவங்க வீட்டுக்கு கிளம்ப போறாளாம். உன்கிட்ட சொல்லிட்டு போகணுமுன்னு சொன்னா. வா… வா… சொல்லிட்டு கிளம்புவோம்.” பிருந்தா கண்களில் குறும்போடு கூற, அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

கிருஷ் புன்னகைக்க, “நீ வேற சும்மா இரு பிருந்தா. மனசுல ஆசை இருந்தாலும், அதுங்களே பாதி நேரம் குழப்பத்தில் தான் இருக்கும்.” பாட்டி கேலி பேசினார்.

“சும்மா நடிக்காத டா. போய், அவளை பாரு…” அவனின் மொத்த குடும்பமும், அவனை உள்ளே அனுப்பியது.

கிருஷை கேலி போல் பேசி உள்ளே அனுப்பினாலும், இரு குடும்பமும் அவனை மிக பிரமிப்பாக மிக உயர்வாக பார்த்தது. ‘தன் மகனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.’ வேதநாயகியின் மனதில்.

‘மாதங்கியை கிருஷை விட சிறப்பாக யாரும் கவனித்து கொள்ள முடியாது’ என்ற எண்ணம் மாதங்கியின் வீட்டினர் மனத்தில்.

கிருஷ், மாதங்கி இருக்கும் அறைக்குள் சென்றான். அவள் களைப்பிலும், மருந்தின் தாக்கத்திலும் தூங்கி இருந்தாள்.

அவள் தலை முடி கலைந்திருந்தது. அவர்கள் இத்தனை வருட வாழ்க்கை போல் என்று அவன் மனம் எண்ணி கொண்டது.

‘இவளோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்.’ அவன் மனம் அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.

‘நான் இவளை காதலிக்காமல் இருந்திருந்தால்…’ அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.

அவளை பார்த்து கொண்டே நின்றான். ‘என் மாது… என் மாது….’ அவன் இதயம் துடித்தது. ‘மாதங்கி என்ன சொல்றாளோ நான் அதை செய்வேன்…’ அவன் உறுதி எடுத்து கொண்டான். பல மணி நேரம் அவளை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.

பார்த்து கொண்டே இருப்பதே அவனுக்கு சுகமாக இருந்தது. தன்னை மறந்து நின்றான். காதலில் லயித்து நின்றான்.

அவள் நெற்றியை சுருக்கவும் அவளை நெருங்கி, அவள் தலை முடியை கோதினான். அவன் தீண்டலில் அவள் புருவம் நெளிந்தது. அவன் கண்கள் கலங்கியது. அவள் அருகே அமர்ந்து கொண்டு, அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்து கொண்டான்.

அவள் முழுதாக விழித்துவிட்டாள். அவள் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று.

அவனும் புன்னகைத்தான்.

அவனை பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த காதலை தாண்டிய அக்கறையை பார்த்தாள். ‘நான் இவனுக்கு என்ன செய்துவிட்டேன்? இவன் ஏன் என் மேல் இத்தனை அன்பு செலுத்துகிறான்?’ என்ற கேள்வி எழ அவன் கைகளை அழுத்தி பிடித்தாள்.

அவள் அழுத்தம் அவனுக்கு அவள் எடுத்து கொண்ட உரிமையை கூற, அவன் அவள் உரிமைக்கு இசைந்து கொடுத்தான்.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…