அலைகடல் – 35.2

IMG_20201204_144642-4b38beb3

அலைகடல் – 35.2

அடுத்தடுத்து நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, இடையில் ஒருநாள் அமுதனது தாயின் நினைவிடம் சென்று வந்தனர். பூங்குழலியின் தாய் தந்தைக்கும் தனியாக நினைவிடம் அமைத்திருக்க, தோட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கவும் அவளுள் பெரும் நிம்மதி கலந்த ஆசுவாசம். கூடுதலாக அமுதனை நினைத்து கர்வமும்.               

அன்று அமுதனுடன் அலுவலகம் சென்று தன்னால் முடிந்த வேலைகளைப் பார்த்தவள், மீட்டிங் இருப்பதாக சொல்லவும் அவனிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள்.  

அவள் அப்படிதான். வருவாள், அவளால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து வைப்பாள், ஏதேனும் திட்டத்தில் மாற்றம் தோன்றினால் கூறுவாள், அதற்கு மேல் அவனது வேலையில் அதிகம் தலையிடாமல் ஒதுங்கிவிடுவாள். இத்தனை நாள் கடைபிடித்த அப்பழக்கத்தை இன்றே உடைக்கும் நிலை வரும் என்று அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள். 

செல்லும் வழியில் ஒரு வீட்டின் முன் போலீஸ், ஆம்புலன்ஸ், நிருபர்கள் என்று குமிந்திருக்க, இரத்தம் தோய்ந்த துணியில் சுற்றியிருந்த குழந்தையைத் தர மாட்டேன் என்று அதன் தாய் அப்படி ஒரு அழுகை. அவளிடம் இருந்து கிட்டதட்ட பிடுங்கிச் செல்ல, நெஞ்சில் அடித்துக்கொண்டே மயங்கிவிழுந்தாள் அப்பெண். அவளையும் சேர்த்தே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, பார்க்கவே கொடூரமாக இருந்தது அக்காட்சி. 

“என்ன இது என்னாச்சு? டிரைவர் வண்டிய நிறுத்துங்க” என்றவளிடம், 

“சாரி மேம். சார்க்கு தெரிஞ்சா என்னை வேலைய விட்டே தூக்கிருவார்… அந்த பொண்ணோட புருஷன் குடிகாரன் மேம். நாள் முழுசும் குடிச்சிட்டே பொண்டாட்டி கூட போட்ட சண்டைல கைகுழந்தையை கல்லுல அடிச்சி கொன்னுட்டான்” என்றார் கனத்த குரலில். 

கேட்ட பூங்குழலிக்கு காதில் விழுந்ததை நம்பவே முடியவில்லை. தன் குழந்தையைக் குடிவெறியில் என்றாலும் ஒருவனால் கொல்லமுடியுமா என்ன? 

வீட்டிற்கு வந்த பிறகும் அதே நினைவாகவே இருந்தது பூங்குழலிக்கு. ‘ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த நிலை. குடித்து குடித்து குடும்பத்தோடு, நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் எவ்வளவு எளிதாக அழிக்கின்றனர் இந்த குடிகார ஆண்கள். இதற்கெல்லாம் விடிவே இல்லையா? இந்த குடியை ஒழித்தால்தான் என்ன? என்ன செய்கிறான் இதைக்கூட செய்யாமல். வீடு வரட்டும்… சொல்லி வைப்போம்’ மனம் மணவாளனிடம் முறையிட காத்திருந்தது. 

மாலை வேந்தன் வந்த பின்பு அவனை உண்ண வைத்து சிறிது நேரம் தொலைகாட்சியைப் பார்க்கவிட்டவள் அதன்பின் அவனை படிக்கும் படி சொல்லி அனுப்ப, சற்று நேரத்தில் எல்லாம் ஆரவ் வந்துவிட்டான். இப்போதுதான் வந்திருக்கிறான் உடனே ஆரம்பிக்க வேண்டாம் என்றெண்ணி அமைதியாய் இருந்தவள் அவன் வேலையெல்லாம் முடித்து ஓய்வாக ஹாலில் அமரவும் ஆரம்பித்தாள். 

நடந்ததை அவனிடம் கூறி, “இந்த குடியெல்லாம் எதுக்கு இருக்கு… முழுதா தடை பண்ணிவிடலாம் இல்லையா?” என, 

அவளிற்கே தெரியும்போது அவனின் காதிற்கு அவ்விஷயம் வராமலா இருக்கும். அவனிற்கும் சற்று கஷ்டமாகதான் இருந்தது. இது போல் எத்தனையோ அவன் பார்த்திருக்கிறான். ‘மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்ன செய்ய?’ என்றுவிட்டு அவன் அத்தோடு மறந்தும்விடுவான். மனைவி அளவு அவன் யோசிக்கவில்லை. 

அதனால், “அது அவ்வளவு ஈசி இல்லை பூங்குழலி. இருந்தாலும் நீ சொன்னதை நான் யோசிக்குறேன்” என்று முடிக்கப் பார்க்க, அவளுக்கோ அவன் செய்கிறேன் என்று கூறாமல் யோசிப்பதாகச் சொன்னதே ஏமாற்றமாக இருந்தது. 

“இதுல யோசிக்க என்ன இருக்கு? நீங்க நினைச்சா இப்போ கூட பண்ணலாம்தானே…” என்று வற்புறுத்த, 

“பச் பூங்குழலி… நாட்டுல முக்கால்வாசி பேர் குடிக்குறாங்க. அதுல கால்வாசி பேர்தான் நீ சொன்ன மாதிரி மோடா குடிகாரனா இருக்காங்க… அவங்களுக்காக பார்த்து இப்போ திடீர்னு தடை செய்ய முடியுமா? பொருள் எல்லாம் வீணாகும். அரசு வருமானம்… வரி எல்லாம் கணிசமா குறையும். ப்ராக்டிக்கலா யோசிம்மா… அரசியல்ல எமோஷன் வேலைக்கு ஆகாது” என்று பக்கா அரசியல்வாதியாகப் பேச, 

“சோ இப்போ பேசுறது அமுதன் இல்ல முதலமைச்சர் மிஸ்டர் ஆரவமுதன் இல்லையா? மக்களோட வாழ்க்கை வீணா போறதை விட பொருள் வீணா போறது முக்கியமா போச்சா” என்று குத்தி பேச, இந்த முறை ஆரவ்விற்கு எரிச்சல் வந்துவிட்டது. 

ஏற்கனவே மீட்டிங்கில் இரு அமைச்சர்களுக்குள் சண்டையாகி விட, பேசி தீர்த்து சோர்ந்து வந்தவனை மனைவியின் பேச்சு தூண்டிவிட்டது. 

“ஆமாம் நான் அப்படிதான் போடி. வந்துட்டா உருப்படாத திட்டத்தோட ஊரை திருத்த… அவன் அவன் வாழ்க்கையை அவன் அவன்தான் பார்க்கணும். குடிச்சா நாசமா போவோம்ன்னு தெரியாதா சின்ன பசங்களா குடிக்குறாங்க? தெரிஞ்சே நாசமா போறவங்களுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட சண்டை போடுறியா நீ?” இருந்த டென்ஷனில் அவளிடம் ஏறு ஏறு என்று ஏறிவிட்டான். 

அத்தனை நாள் கொஞ்சி கொண்டே இருந்தவன் இப்படிப் பேசவும் சட்டென்று பூங்குழலிக்கு அழுகை வரப்பார்க்க, தான் பலவீனமாகியதை உணர்ந்தவள் அதை அவனிற்கு காட்டாமல் மேலேறிச் சென்று முதலில் தான் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டினாள். 

கத்தியதும் டென்ஷனும் வெளியேற, அவள் அமைதியாக செல்லவுமே, ‘அச்சோ அமுதா… அவகிட்ட போய் கத்தி விட்டுட்டியே’ என்று உள்ளிருந்த மனம் இடித்துரைத்தது. 

இருந்தும், “அவ மட்டும் புரிஞ்சிக்காம பேசுறா… போகட்டும் தனியா போய் யோசிக்கட்டும்” என்றுவிட்டு ஆற அமர உண்டு, வேந்தனுடன் சிறிது உரையாடி பின் தனதறைக்கு வந்தான். அவள் அங்கில்லை என்றதுமே தெரிந்துவிட்டது பக்கத்து அறையில் தஞ்சமடைந்து இருக்கிறாள் என. 

‘காலையில் முதல் வேலையா எல்லா ரூம் உள் தாழ்ப்பாளையும் எடுக்கணும்… ஆ ஊன்னா உள்ள போய் பூட்டிக்கிறது’ என்றுவிட்டு அக்கடா என்று உடல் சோர்வில் படுத்துவிட்டாலும் மனம் மனைவியைத் தேடியது என்னவோ உண்மை. 

‘ராட்சஸி… அப்படி மயக்கி வச்சிருக்கா என்னை’ அதற்கும் அவளையே திட்டியவனின் செவிகள் பக்கத்து அறையின் கதவு திறக்கும் சத்தத்தில் கூர்மையடைய, பாய்ந்து சென்று கதவைத் திறந்தவன் கீழே தண்ணீர் எடுப்பதற்காக காலி பாட்டிலுடன் சென்ற பூங்குழலியின் கையைப் பிடித்து அறையினுள் இழுத்தான். 

இழுத்த இழுப்பில் பாட்டில் எங்கோ சென்று விழ, உள்ளே வந்தவளோ, “அமுதன் நான் செம கோவத்துல இருக்கேன்… மரியாதையா விட்ரு” என்றவளின் வார்த்தையில் இருந்த மிரட்டல் குரலில் இல்லாமல் போக, அழுததை அப்பட்டமாய்க் காட்டிக்கொடுத்தது அது. 

அவளின் அழுகை முன் கோபமாவது ஒன்றாவது, “பூவே… என்னடா நீ இதுக்கு போய் அழுதிருக்க… கத்துவியான்னு கேட்டு என்கிட்ட சண்டை போட வேண்டியதுதானே” என்று அவளை அவளை ஆறுதலாய் அணைக்க, 

“பேசாத நீ… அந்த பொண்ணோட அழுகைய பார்த்திருந்தா இப்படி பேசியிருக்க மாட்ட” என, 

இப்போது அவனிற்கும் உள்ளே உருகியது. “விடு ஏதோ டென்ஷன். நீயும் வந்ததும் வராததுமா அதை ஆரம்பிச்சிருக்க கூடாது. உனக்கென்ன இப்போ குடியை ஒழிக்கணும் அவ்ளோதானே. அதான் மேடம் தேர்தல்ல நிக்க போறீங்களே. முடியட்டும் உடனே வேலையை ஆரம்பிச்சிடலாம்… இப்போவே பண்ணினா தேர்தல்ல தோற்க வாய்ப்பிருக்கு குழலி… அம்புட்டு குடிகாரனும் வச்சி செஞ்சிருவான். அப்புறம் எப்படி உன் ஆசைய நிறைவேற்ற? வேணும்ன்னா அதுவரை இலவசமா மறுவாழ்வு மையம் ஆரம்பிக்கலாம் சரியா?” என்று சமாதானம் செய்ய, 

“பச்… நான் சும்மாதான் பதவியைக் கேட்டேன். எனக்கு இந்த தொல்லை பிடிச்ச வேலை வேண்டாம் ஆனா நான் சொல்றதையும் நீங்க கேட்கணும்” என்று சலுகையை சாய்ந்து குழந்தையாய்க் கேட்க, 

“பூவே… நீ ரொம்ப அபாயகரமானவடி. சரி கேக்குறேன்னு சொல்ல ஆசைதான் ஆனா சூழ்நிலை பொருத்து நீ கேட்குறது நியாயமா இருந்தா கண்டிப்பா கேட்பேன். அதுக்காக உன்னை அப்படியே விடமாட்டேன் அந்த வேலை வேண்டாம்ன்னா உனக்கு பிடிச்சதை செய்… செய்யணும்” என்றவாறு அவளை முட்டியவன், “வீட்டுல நான் அமுதன்தான். ஆரவ்வை கொண்டு வரக்கூடாது. முக்கியமா இந்த ரூம்ல அரசியல் பேசவே கூடாது அதை என் கண்டிஷனாவே எடுத்துக்கோ” என்று காதலாய் மிரட்டியவன் அதன் பின் அவளை அரசியல் மட்டுமல்ல வேறெதையும் பேச அனுமதிக்கவில்லை. 

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிலிருந்த வேந்தனையும் உறங்கிக்கொண்டிருந்த மனைவியையும் கிளப்பி பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் ஆரவ். 

எதற்கென்று கேட்ட இருவரையும், “சப்ரைஸ்” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கியவன், வீடு வந்த பின் பூங்குழலியிடம் ஒரு அட்டைப்பெட்டியை நீட்டினான். 

என்னவென்று திறந்த பார்த்தவள் அதில் இருந்த உடையை ஆசையாக வருடி, கேள்வியாக கணவனை நோக்க, வேந்தனும், “எதுக்குண்ணா இது?” என, 

“சொல்றேன் சொல்றேன்” என்றவன்,   

“ஹ்ம்ம் போ போ போய் மாத்திட்டு வா” என்றவாறு  மனைவியை அறையினுள் தள்ளினான். உடை மாற்றி வெளியே வந்த பூங்குழலியைக் கண்டு அவன் இதழ்கள் மகிழ்ச்சியாய் மலர்ந்தது. 

தூய்மையான வெண்மை நிற நேவி உடையில் அவளுக்கான பெயர் பொறித்த பேட்ஜ் அணிந்து அந்த உடைக்கு ஏற்ற கொண்டையோடு வந்தவள், “என்ன அமுதன் எதுக்கு இதெல்லாம்?” என்று சிரிப்போடு கேட்டாள். 

பதிலின்றி மற்றொரு அட்டைப் பெட்டியில் இருந்த தொப்பியை எடுத்தவன் வாகாக அவளிற்கு போட்டு விட, சரியாக அதை அணிந்தவள், “ஹ்ம்ம் போட்டாச்சு அப்புறம்” என்றவளை வீட்டின் பின்புறத்து தோட்டம் வழியாக அழைத்துச் சென்றான். 

சிறிது தூரம் சென்றதும் அவளின் கண்களை மூடியவன், “சர்ப்ரைஸ் ஆன் த வே” என்றவாறு நடத்தி சென்று கண்களை விட, தன் முன் நீல நிறத்தில் வெண்மை கலந்து நின்றிருந்த வாகனத்தைக் கண்டு மூச்சுவிட மறந்தாள் பூங்குழலி. 

இனி ஓட்டவே முடியாதோ என்று கடற்படை விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பார்த்த விமானம் அவளின் கண் முன் நின்றுக்கொண்டிருக்க, கைகள் நடுங்க ஆசையாக அதனை வருடினாள் பூங்குழலி. 

கடற்படை விமானம் போன்றே இருந்தாலும் தாக்குதலுக்காக வடிவமைக்கப்படாமல் சாதரணமாக அமர்ந்து பயணிக்க கூடிய அளவில் இருந்தது அது. கண்டிப்பாக இதுவே பல கோடி மதிப்பில் இருக்கும். பார்த்ததும் சந்தோஷத்தில் தோன்றாத விலை இப்போது தோன்ற, “இவ்ளோ காஸ்ட்லில இது அவசியமா?” என்றாள் மெதுவாக. 

“ச்சு… அதெல்லாம் எதுக்கு நீ யோசிக்குற? நான் சம்பாரிக்குறேன் என் பொண்டாட்டிக்கு செலவு பண்றேன். பிடிச்சிருக்கா அதை மட்டும் பார்” என்று அதட்டினான் அமுதன். பின்னே அவளுக்காகப் பார்த்து பார்த்து வாங்கி, லீகலாக அனுமதி பெற்று, சர்ப்ரைஸ் ஆக பரிசளித்தால் விலையை பற்றி பேசுவாளா இவள் என்றிருந்தது. 

“பிடிச்சிருக்கு… ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவள் விமானத்திற்கு முத்தம் வைக்க, ‘பாருடா… வாங்கினது நானு ஆனா முத்தம் அதுக்கா?’ என்பது போல் பார்த்தான் இவன். 

அதை கவனிக்காமல் பழக்க தோஷத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து ஏறி அமர்ந்தவள், “நீங்களும் வாங்க… வந்து உட்காருங்க” என்று கணவனையும் தம்பியையும் அழைக்க, 

வேந்தன், “நாங்க வராம உன்னை விட்ருவோமா… நான்தான் முதல்ல” என்றவாறு தமக்கையின் உதவியுடன் அவன் ஏறி அமர, ஆரவ் அவனாகவே ஏறி அமர்ந்துக்கொண்டான். 

பாதுகாப்பாக அமர்ந்த மூவரையும் ஏற்றி, விமானம் கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறி வானத்தில் பறக்க, வேந்தனை கையில் பிடிக்க முடியவில்லை. தமக்கை விமானம் ஓட்டுகிறாளே!  

பூங்குழலி, “கடல்தான் பார்த்திருக்கிறேன். இப்போ ஊருக்கு மேல ஓட்டுறது கூட சூப்பரா இருக்கு” என்று ரசித்து சொல்ல, 

“அதுவும் சூப்பரா இருக்கும்ல்ல எங்க பார்த்தாலும் கடல்” பதிலுக்கு தமக்கையுடன் வாயடித்தான் பூவேந்தன். 

மனைவியும் தம்பியும் பேசிக்கொண்டே வர, அமைதியாய் இருவரையும் ரசித்திருந்தான் அமுதன். அகமெல்லாம் நிறைந்து அதுவரை இல்லாத ஓர் அமைதி மனமெங்கும் பரவியது. இப்படி ஒரு உணர்வை இதற்கு முன் அவன் அனுபவித்ததாக நியாபகமே இல்லை. 

அரைமணி நேரம் சென்ற பின் விமானத்தைத் தரையிறக்க, பூங்குழலியின் கால்கள் பூமியில் பட்டாலும், ஈடு இணையில்லா இன்பத்தில் மூழ்கி திளைத்த மனமோ வானத்தை விட்டு இறங்காமல் அங்கேயே பறந்துக்கொண்டிருந்தது.

 இத்தகைய இன்பத்தைத் அவளுக்கு அளித்த அமுதனோ அதைப் பற்றிய நினைப்பின்றி முன்னால் நடந்துச் செல்ல, ஓடிச்சென்று அவன் முதுகில் முழுதாய்த் தொற்றினாள் அவள். 

அதை எதிர்பார்க்காதவன் சிறிது தடுமாறினாலும், அவளின் மகிழ்ச்சியை தன்னுள் வாங்கியவனாய், “பூவே என்னதிது… எல்லாரும் பார்க்குறாங்க இறங்கு” என்று பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்து முணுமுணுக்க, உண்மையில் வேந்தன் மற்றும் தோட்டத்தில் ஆங்காங்கே சில ஆண்களும் பெண்களும் இவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். 

“பார்த்தா பார்த்துட்டு போகட்டும். ஐ யம் வெரி வெரி வெரி வெரி ஹாப்பி” என்று கத்தியவள், முகத்திற்கு வெகு அருகில் தெரிந்த அவன் கன்னத்தில் தன் மகிழ்ச்சி மொத்தமும் திரட்டி அழுந்த முத்தம் பதித்தாள்.  

அதைக்கண்டு, “அச்சோ” என்றவாறு வேந்தன் தன் கண்களை மூட, அவனே இப்படியென்றால் மற்றவர்களை கேட்கவா வேண்டும்! 

அதில் ஆண்மகனான அமுதனுக்கே வெட்கம் வந்துவிட, “உன்னை…” என்ற செல்லமாய் தன் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தவளைச் சலித்தவன், அவளை பின்புறமாகத் தாங்கியவாறே வீட்டை நோக்கி கிட்டதட்ட ஓடினான் சந்தோஷமாய். 

உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா

எந்நாளும் மறவாத நாளாகிப் போகாதா

இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா 

என்றும் இதேபோன்ற எல்லையற்ற மகிழ்ச்சியோடு வாழ்க்கையின் எல்லைவரை காதல் வானில் சிறகடித்துப் பறப்பார்கள் பூங்குழலியும் அவளோடு அவளின் அமுதனும்!

                                                                        ***நன்றி***

Leave a Reply

error: Content is protected !!