அழகிய தமிழ் மகள்
அழகிய தமிழ் மகள்
அழகிய தமிழ் மகள் 21
இருளை இருளில் தள்ளிவிட்டு எழுந்து வந்தான் கதிரவன்..
யுக்தா காலையில் கண்விழித்தவள் மனதில் ஏதோ சொல்லமுடியாத ஒரு உணர்வு வந்து வந்து அலைக்கழித்தது.. “என்ன ஆச்சின்னே தெரியல?? ரெண்டு நாளல இந்தத் தாய் கெழவி ஏதோ போல நடந்துக்குது.. எங்க என்னை நிமிர்ந்து பார்த்த நா அது மூஞ்ச வச்சு எதாவது கண்டு புடிச்சிடுவேன்னு என் முகத்தைப் பார்க்கிறதே இல்ல.. நா இந்தப் பக்கம் வந்த அது அடுத்தப் பக்கம் குதிச்சு ஓடுது.. இந்த ஆதித் கூட அடிக்கடி ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு இருக்கு, ரெண்டும் சேர்ந்து எதும் ப்ளான் போடுதுங்களோ?? இந்தக் கெழவி சரியான கேடி பில்லா ன்னா, இதுல கில்லாடி ரங்காவா இந்த ஆதித் வேற எனக்குப் புது ரோதனையா சேர்ந்துக்கிட்டான்.., நா அவனை அவாய்ட் பண்றதுலயே புரிஞ்சுக்குவான்னு நெனச்சேன்.. இவனுக்கு அதெல்லாம் புரியாது போல.. இந்தக் கெழவி வேற என்ன சொல்லி ஆதித் மனச கெடுத்து வச்சிருக்குன்னு தெரியல?? பேசாம அவன் மேல எனக்கு எந்த இன்டர்ஸ்டும் இல்லன்னு கூப்புட்டு தெளிவ சொல்லிட வேண்டியது தான்.. அப்ப தான் இதுக்கு ஒரு முடிவு வரும்” என்று நினைத்தவள் ஆதித்திடம் பேசும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க.. அவள் விதியோ அவளை வேறு பாதையில், அவள் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு இழுத்து செல்ல கையில் கயிரோடு காத்திருந்தது..
காலை வேளையில் சிவகாமி பாட்டி அனைவரையும் வீட்டு ஹாலில் ஆஜர்படுத்தி இருந்தார்..
“இந்த ராங்கி வீட்டுக்கு திரும்பி வந்ததும். இவ கையால நம்ம குலதெய்வத்துக்குப் பொங்க வச்சு பூச பண்றதா வேண்டி இருந்தேன்.. அப்டியே விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் எந்தத் தடையும் இல்லாம நடக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. உங்க அருமை யுக்தாவை செத்த நம்ம ஊருக்கு வந்து சாமிக்கு பொங்க வைக்க முடியுமான்னு கேட்டு சொல்லுங்க” என்று நீட்டி முழக்கி யுக்தாவிற்குக் கொக்கி போட, யுக்தாவிற்குப் பாட்டி மீது சந்தேகம் இருந்தாலும் அவர் தனக்காகத் தான் வேண்டி இருக்கிறார், அதோடு அவரே வலிய வந்து விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் பற்றிப் பேசவும் அவள் மன பாட்டிக்காக இறங்கியது.. ‘ஏன் பாட்டி.. நீ வான்னு சொன்ன நா வரப்போறேன்.!! அதுக்கு ஏன் இப்டி நடு வீட்டுல உக்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிட்டிருக்க..??”
“நா என்னடிம்மா பண்றது, நீ தான் இப்ப பெரிய மனுஷி ஆகிட்ட, இந்தக் கெழவி பேச்செல்லாம் நீ எப்டி கேப்பா, நீ தான் இப்பெல்லாம் என்னை மதிக்கிறதே இல்லயே.. அப்றம் நா வேற என்ன செய்ய முடியும். இப்டி தான் எல்லாரையும் கூப்புட்டு வச்சு உன்கிட்ட பேசவேண்டி இருக்கு.. எல்லாம் என் நேரம். தலைக்குத் தலை நாட்டாமை ஆகிப்போச்சு.. ம்ம்ம் நானும் பாக்குறேன் இதெல்லாம் இன்னும் எத்தனை நாளுன்னு. டேய் வினய் நாளை மறுநாள் நைட் எல்லாரும் ஊருக்கு கெளம்புறோம்.. வண்டிக்கு ஏற்பாடு பண்ணு..”
“பாட்டி எனக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு. நீங்க மதுவையும், சமீராவையும் கூட்டிட்டு போங்க” என்று ராம் சொல்ல.. வினய், விஷ்ணுவும் கூடத் தங்களுக்கும் முக்கிய வேலை இருப்பாத சொல்லிவிட..
“அதெல்லாம் முடியாது.. எவ்ளோ முக்கியமான வேலையா இருந்தாலும் பரவாயில்லை.. நீங்க எல்லாரும் வந்தே ஆகணும்.. பூஜை நடக்கும் போது ஒருத்தர் விடாம நீங்க எல்லாரும் அங்க இருக்கணும்.. இதால உங்க வேலையே போனாலும் எனக்குக் கவலை இல்ல.. எல்லாரும் வந்தே ஆகணும்” என்று பிடிவாதமாகச் சொல்ல நிஷாவும், ஜானுவும் பாட்டியை கூர்ந்து பார்க்க.. பாட்டி கண்ணடித்துக் காட்டி அவர்களை அமைதியாக இருக்கும்படி செய்கை செய்ய இருவரும் இதில் ஏதோ ப்ளான் இருக்கும் என்று புரிந்து வாய்மூடிக் கொண்டனார்..
“என்ன கெழவி இது.?? பூஜைக்கு நா இருந்தா போதாது, எதுக்கு எல்லாரும் வந்தே ஆகணும்னு நீ அடம்புடிக்கிறா?? நிஷா, ராமண்ணா, வெற்றி அண்ணா என்ன வேலை பாக்குறாங்கன்னு உனக்குத் தெரியாத என்ன..?? எப்டி நெனச்ச உடனே லீவ் கெடைக்கும்.. நீ புரிஞ்சு தான் பேசுறீயா??”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.!! பூஜைக்கு எல்லாரும் வந்தே ஆகணும்.. சென்னைக்கே கமிஷனர் பரதன், அவரே வரேன்னு சொல்லிட்டாரு, அப்றம் இவனுங்களுக்கு என்னவாம்..”
“எது மாமா வரேன்னு சொன்னாரா?? இதெப்பா நடந்துது” என்று வெற்றி வாய் பிளக்க..
“அதெல்லாம் நா நேத்தே பேசிட்டேன்.. மரியாதையா நீங்க எல்லாரும் கெளம்புற வழியா பாருங்க.. இல்லாட்டி நீங்க தா வருத்தப்படுவீங்க சொல்லிட்டேன்..”
”இரு இரு… பூஜைக்கு வராம போனா எதுக்கு எல்லாம் வருத்தப்படுவாங்க..?? ஓய்!!! கெழவி நீ எதாவது கிர்மினல் ப்ளான் பண்றீயா என்ன??” என்று யுக்தா முறைக்க??
“அதெல்லாம் ஒரு ப்ளானும் இல்ல.. பூஜை அன்னைக்கு விஷ்ணு, ராஷ்மி கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்னு இருக்கேன். அதான் அன்னைக்கு எல்லாரும் வரணும்னு சொல்றேன்” என்று சிவகாமி பூசி மொழுக. விஷ்ணுவுக்கு, ராஷ்மிக்கும் கல்யாணம் என்று கேட்டதும் யுக்தாவிற்கு வேறு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை.. மறுபேச்சின்றிப் பாட்டி சொன்னதிற்கெல்லாம் தலையாட்டினாள்.. ஆனால் ராம், வினய்க்கு மட்டும் பாட்டி ஏதோ தகுடுதத்தோம் செய்யப் போகிறார் என்று சந்தேகம் வந்தது, நடப்பதை ஒரு தயக்கத்துடன் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கும் ஆதித்தின் முகத்தைப் பார்த்து நிஷா, ராஷ்மி, ஜானுவுக்கும் கூட லேசாகச் சந்தேகம் வந்தது..?? எது எப்படியோ எல்லாம் நல்லபடியாக நடந்த போதும் என்று அனைவரும் ஊருக்கு வர ஒத்துக்கொண்டனார்..
விடியல் காலை பெய்த மழையினால் வந்த மண்வாசம், விளைந்து அறுவடைக்குக் காத்திருந்த நெல் வாசம், புதிதாய் கறந்த பால் வாசமென்று அன்றைய விடியல் யுக்தா குடும்பத்திற்கு அவர்கள் சொந்த ஊரில் மணக்க மணக்க விடிந்தது..
விடியக் காலையிலேயே அந்தப் பெரிய வீட்டில் சிவகாமி பம்பரமாகச் சுற்றி அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.. சாருமதி உதவி செய்வதாகச் சொல்லியும் கேட்காது அனைத்து வேலைகளையும் அவரே இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தார்.. அனைவரும் பூஜைக்குக் கிளப்பிக் கொண்டிருக்க,!! சாதாரணமான ஒரு காட்டன் சுடிதாரில் எந்த அலங்காரமும், நகையும் இல்லாமல் வந்து நின்ற யுக்தாவை பார்த்த சிவகாமி பாட்டிக்கு கண்ணுமண்ணு தெரியாத கோபம் வந்து விட, “ஏன்டி அறிவு கெட்டவளே நம்ம என்ன சாவு வீட்டுக்காடி போறோம். ஒரு நல்லா காரியத்துக்கு வேண்டிட்டு கோயிலுக்குப் போறோம்.. அதுக்குப் போய் இப்டி வெத்து நெத்தியோட, வெறும் கழுத்தா வந்திருக்கீயே உனக்குக் கொஞ்சமச்சு புத்தி இருக்காடி.??” என்று கத்தியவர் திரும்பி ஆனந்தியை பார்த்து முறைத்தவர்.. “ஏன்டி இத்தனை பேர் அம்மான்னு இருந்தும் இவளா இப்டி விட்டு வச்சிட்டு என்ன வேடிக்கையா பார்த்துட்டு இருக்கீங்களா??” என்று முறைத்தவர். தான் ஏற்கனவே யுக்தாவிற்காக எடுத்து வைத்திருந்த பட்டுப்புடவை, பூ, நகையை யுக்தாவின் கையில் கொடுத்தவர்.. தன் நெற்றியில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் அழுத்தி வைத்து விட்டு.. “இனி உன்னை வெறும் நெத்தியோட பாத்தேன்…??? நடு நெத்தியில பழுக்க சூடு வச்சு விட்ருவேன் ஜாக்கிரதை.. இப்ப போய் இந்தப் புடவையா கட்டிட்டு சீக்கிரமா வாடி” என்று கத்த.. யுக்தா ஏதோ சொல்ல வாயெடுக்கப் பாட்டி கோபமாகப் பார்த்த ஒரு பார்வையில் புடவையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.. வினய்க்கு அடுத்து யுக்தா யாருக்காவது அடங்கிப் போவாள் என்றால் அது சிவகாமி பாட்டிக்கு மட்டும் தான்.. அவர் மீது எவ்வளவு பாசம் இருக்கிறதோ அவ்வளவு பயமும் உண்டு அவளுக்கு.. ஆனந்தி, கோதை, சாருமதி மூவருக்கும் யுக்தா திரும்பி வந்த சந்தோஷத்தில் வேறு எதையும் கவனிக்கத் தோன்றவில்லை.. இவ்வளவு நாள் தம் மகள் இருந்த கோலத்தைச் சிவகாமி பாட்டி பார்த்து திட்டிய பிறகு தான் ஆனந்திக்கும் உள்ளுக்குள் வலித்தது.. எப்படி இவ்வளவு நாள் இதைக் கவனிக்காமல் இருந்தோம் என்று நொந்தவர் சிவகாமி பாட்டியை நன்றியோடு பார்த்தனர்..
அனைவரும் கிளம்பி ஹாலுக்கு வந்தனர், நிஷாவை ரொம்ப நாள் கழித்துப் பட்டுப் புடவையில் பார்த்த வினய்யின் கண்கள் அவளையே வட்டமடிக்க.. ஜிவா, ஜானுவை விழுக்கிடுவது போல் சைட்டடித்துக் கொண்டிருந்தான்.. கணவன்மார்களைப் பட்டுவேட்டி சட்டையில் பார்த்த அவர்களுக்கு மலையிட்ட மனைவிகளின் கண்களும் மயக்கத்தில் மலர்ந்திருக்க.. அங்குப் பட்டுவேட்டி சட்டையில் புது மாப்பிள்ளை போல் நடந்து வந்த ஆதித்தை பார்த்ததும் நேற்று பாட்டி தன் போட்டிருக்கும் ப்ளானைப் பற்றிச் சொன்னது ஞாபகம் வர அடுத்த நிமிடம் யுக்தாவை நினைத்து அனைவருக்கும் அடிவயிற்றில் புளியை கரைத்தது..
நிஷா, ஜானு, ராஷ்மி மூவரும் திறந்த வாய் மூடாது பாட்டியை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.. “பாட்டி இதெல்லாம் சரியா வருமா?? உங்களுக்கு யுகி பத்தி நல்லா தெரியும்.. அப்றம் எப்டி பாட்டி இப்டி ஒரு முடிவெடுத்தீங்க..??”
“என்ன வேற என்ன செய்யச் சொல்றீங்க..?? அவர்கிட்ட போய் ஆதிய கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்ன அவ சம்மதிப்பாளா நீங்களே சொல்லுங்க??” என்ற பாட்டி கேள்விக்குத் தோழிகள் மூவரும் இல்லை என்று தலையை ஆட்ட..
“உங்களுக்கே தெரியுதில்ல.. அப்ப இத தவிர வேற வழி இல்ல.!! நாளைக்குப் பூஜையில விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் பேச்சு வரும்போது அவ ஆதிய கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட தான் இவங்க கல்யாணம் நடக்கும்னு நா முடிவா சொல்லிடுவேன்.. விஷ்ணுவும் பாட்டி சம்மதம் இல்லாம நா கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிடுவான்.. ராஷ்மி அம்மாகிட்ட நா ஏற்கனவே நம்ம ப்ளான் பத்தி பேசிட்டேன்.. அவங்களும் உடனே விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் நடக்கணும் இல்ல நாங்க ராஷ்மிக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செஞ்சு வச்சிடுவோம்னு சொல்லிடு வாங்க.”
“அச்சோ அவங்க அப்டி சொல்லிட்ட அப்றம் ராஷ்மி நெலம என்ன ஆகும் பாட்டி” எனறு ஜானு பதறா??
“ம்ம்ம்.. விஷ்ணு ராஷ்மி கல்யாணத்துக்கு நம்மால எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நெனச்சு., பை சான்ஸ் யுகி ஆதி அண்ணாவை கல்யாணம் பண்ண சம்மதிக்கலாம் அப்டி தானா பாட்டி..??” என்ற நிஷாவை “என் பேரன் பெண்டாட்டிக்கு எவ்ளோ அறிவு” என்று நெட்டி முறித்தவர்.. “அதோ தான் டி பேத்தி.. கண்டிப்பா விஷ்ணு, ராஷ்மிக்காக அந்த ராங்கி இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்குவா..”
“இல்ல பாட்டி.. அவ விஷ்ணு, ராஷ்மியை கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணி வைச்சாலும் வைப்பாளே தவிர, இந்த மாதிரி பிளாக்மெயிலுக்கெல்லாம் கண்டிப்பா பயப்படவே மாட்ட அது உங்களுக்கே தெரியும். அதோட இதுல ஆதியும் கூட்டுக் களவாணி, இவருக்காகத் தான் நீங்க விஷ்ணு ராஷ்மி கல்யாணத்துல வெளயாடுறீங்கன்னு மட்டும் அவளுக்குத் தெரிஞ்சுது…. ஆதி நிலைமை அதோகதி தான்… கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாட்டி..”
“நல்லா கேளுங்க சிஸ்டர்.. இந்தப் பாட்டிகிட்ட நானும் பலமுறை சொல்லிட்டேன்.. அவகிட்ட ஒரு தடவை பேசிப் பாப்போம்.. இப்டி ப்ளாக்மெயில் பண்ணி அவளைக் கஷ்டப்படுத்த வேண்டான்னு ஆனா பாட்டி கேக்க மாட்டோங்கிறாங்க” என்று ஆதித் தன்னவளுக்காக வருந்த..
“அவ ஒத்துக்கிட்டா தா இந்தக் கல்யாணம் நடக்கும்னா இந்த ஜென்மத்தில் உங்க கல்யாணம் நடக்காது.. அவ நான் தூக்கி வளர்த்த பொண்ணு.. அவளா பத்தி என்னைவிட யாராலயும் புரிஞ்சிக்க முடியாது.. அந்த நாய் உதய் செத்திருந்தாலும், அவளோ அவ கையால அவனைக் கென்னிருந்தாலும், இன்னும் அவ மனசுல அவன் ஒரு கருப்புப் பக்கமாக இருந்துட்டு தான் இருக்கான்.. அவனோட பொண்டாட்டின்ற நெனப்பு அவ அடி மனசுல பதிஞ்சு போயிருக்கு.. அதனால தா அவ வேலையையே விட்ட.. அந்த நெனப்பு அவ மனசுல இருக்க வரை அவ பழைய சம்யுக்தாவா மாறமாட்டா.. காக்கிச்சட்டையும் போடா மாட்டா.. அவ மாறனும்.. சம்யுக்தா இளம்பரிதியா இருக்கும் போது எவ்ளோ கெத்தோட போலிஸ்காரிய மிடுக்க இருந்தாளோ.. அப்டி மாறனும்.. அது அவ இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டி ஆனா மட்டும் தான் நடக்கும்.. அதுவும் சீக்கிரம் நடக்கணும்.. அவ இப்ப இங்க இருக்குறதே கல்யாணம் பண்ணியும் பிரிஞ்சிருக்க இவங்க எல்லாரையும் ஒன்னு சேக்கத்தான்.. அது நடந்துட்டா அடுத்த நிமிஷம் அவ ப்ரணவ்வை கூட்டிட்டு இங்கிருந்து போய்டுவா.. அது நடக்கக்கூடாதுன்னா அவளுக்கு உடனே கல்யாணம் நடந்தகணும்” என்று பாட்டி முடிவாகச் சொல்லிவிட அதில் இருந்த உண்மை அனைவருக்கும் புரிந்தது. ஆதிக்கு கூட யுக்தா ஏன் இப்படி இருக்கிறாள் என்ற காரணம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.. ஒரு குற்றவாளியின் மனைவி என்ற ஞாபகமே அவளை உள்ளுக்குள் கென்று கொண்டிருக்கிறது என்று அதிக்கு தெளிவாகத் புரிந்தது..
“பாட்டி இனி யுக்தா பத்திய கவலை உங்களுக்கு வேணாம்.. இந்த நிமிஷத்துல இருந்து அவ என்னோட பொறுப்பு” என்று தீர்க்கமாக ஒலித்த ஆதித்தின் குரலில் இருந்த அழுத்தம் பாட்டிக்கே சற்று வியப்பை கொடுத்தது..