uyirodu vilaiyadu – 2

uv 3-e6c869fc

(நாடு தழுவிய,‘கும்பல் செயல்பாட்டை/  gangster activities’ அடக்குவதற்கு,  எந்த மத்தியசட்டமும் இல்லை.   உத்தரபிரதேச மாநில கேங்க்ஸ்டர்ஸ்  மற்றும் சமூக விரோத  நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1986 இல் இயற்றப்பட்ட மிகவும்  சக்தி   வாய்ந்ததாகும்.It applies only   to   the    state of  uttar   Pradesh)

அத்தியாயம் -2

திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வந்த  கவிதா,  சம்யுக்தாவிற்கு  தலை நிறைய பூச்சூட்டி  மனம் நிறைந்தார்.

சம்யுக்தாவின்  வெட்கம்  கலந்த   அழகை, ஒரு  தாயின்  வாஞ்சையோடு  பார்த்துக்  கண்  கலங்கினார்.

“இந்தப்  புடவையில் பார்க்க,  அப்படியே, மஹாலக்ஷ்மி  மாதிரி  இருக்கேடீ!… என்  கண்ணே  பட்டுடும்  போலிருக்கே!…

ஹ்ம்ம்!… இதைப்  பார்க்க  உன் அம்மாவுக்குத்  தான்  கொடுத்து வைக்கலை…  இந்நேரம்  அந்த  மகராசி  இருந்திருந்தா, உன்னைப்  பார்த்து  அப்படியே   பூரித்து  இருப்பா…” என்றவர்  கண்களிலிருந்து   கண்ணீர் வழிய, நின்றவரின்  பாசத்தை கண்ட   சம்யு,  அவரின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

கவிதா கைகளால் அவளுக்குத்    திருஷ்டி கழிக்க, மென்னகையுடன்  அவரை அணைத்து  கொண்ட  சம்யுக்தா, 

“அம்மா  இல்லைன்னா  என்னமா…  அம்மாவுக்கு அம்மாவாய்  நீங்க  இருக்கீங்க… மணி  அப்பா  இருக்கார்… மூர்த்தி அங்கிள்,  பூக்கார  சுமதி  அக்கா,  இதோ  என்  தோழி இருக்கா …

நான்  நல்லா இருக்கணும் என்று மனமார  நினைக்கும்  நீங்க எல்லாம், உடன்  இருக்கும் போது, எனக்கு  என்ன கவலை…  கண்ணைத்  துடைங்க…” என்றாள் புன்னகையுடன்.

கண்ணைத் துடைத்துக் கொண்டவர்  புன்னகையுடன்,  “அப்படியே  உங்க  அம்மா, ஒரு  கணம்  எதிரில்  நின்று  பேசுவது  போலிருக்கு… அவ  கூட இப்படி  தான்  ஒரு  வார்த்தை  பேசினாலும், எதிரே  இருப்பவர்  மறுவார்த்தை பேச முடியாமல் செய்துடுவா. மாலினி  வளர்ப்பு  என்றால்  சும்மாவா என்ன?…”   என்றார் கவிதா  புன்னகையுடன்.

தாயை  பற்றிய பேச்சு, மீண்டும் வந்ததும், சம்யுக்தாவின்  மனம்  நெகிழ்ந்து  தான்  போனது.

தன் அன்னையை பற்றிய எண்ணங்களில்  மூழ்கியவளாய்,  அங்கிருந்த  பிரகாரத்தில்  அமர்ந்தாள் சம்யு.

மாலினி  ஹரிச்சந்திரா!…

சம்யுக்தாவின் அன்னை.

சென்னையின்  புகழ்  பெற்ற, ‘சந்திரா குரூப்ஸ்’  என்ற   பழமையான  தொழில்  குடும்பத்தின் கடைசி வாரிசு.

சட்டென்று பார்க்க நடிகை,  ‘ஜெயப்ரதாவின்’ சாயலில் இருப்பவர்.

சம்யுக்தாவின் அழகு எங்கிருந்து வந்தது  என்பதை, இவரைப்  பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 

ஒரு  காலத்தில், மதராஸ்  இளைஞ்சர்களின், ‘கனவு   கன்னியாய்’  வளம்  வந்தவர் என்று  சொன்னால்  கூட  மிகையல்ல.

சென்னையின் வளமான குடும்ப பின்னனியை கொண்டிருந்தாலும், ‘டவுன் டு  எர்த்’ என்று சொல்வார்களே, அப்படிபட்ட குணம் கொண்டவர்.

முன் பின் தெரியாதவருக்கு,  ஒன்று  என்றால்  என்ன, ஏது என்று  கூட யோசிக்காமல், உதவ செல்லும் இளகிய மனம்.  

இதனாலேயே, ‘அசடு’ என்ற பட்டத்தை, இவர் குடும்பம்,  இவருக்குக் கொடுத்து  இருந்தது.

‘அவளுக்கு எதுவுமே  தெரியாது.’  என்று  சொல்லி விடுவார்கள்.

மாலினியை போல் மனதிற்கு மதிப்பு தரும் மனிதர்கள் உண்மையில் வைரத்தைவிட உயர்ந்தவர்கள் என்ற உண்மை ஏற்று கொள்ள சிலர் முன் வருவதில்லை. 

ஈகோ,  ஆணவம், டாம்பீகம்,  திமிர் என்ற குணமும்  இல்லாத,  நம்  குடும்பத்து  அன்னை  போன்ற    மனம் கொண்டவர்.

பணம்,    ஸ்டேட்டஸ்  என்ற  மாய  வலைக்குள் சிக்காதவர் என்பதால், பணத்தை, ஸ்டேட்டஸ் வைத்து மட்டுமே பழகும், அவர் குடும்பத்திற்கு    இவரைக்  கண்டால் இளப்பமே!…

இவரின்  இந்த இளகிய மனம்,  இவரை மிகப்    பெரிய  பிரச்சனையில்  சிக்க வைக்கப் போகிறது,  அது இவரின் வாழ்வையே  தடம்  மாற வைக்கப்    போகிறது  என்று யாராவது    முன்னரே  சொல்லி    இருக்கலாம். 

எவ்வளவு  பெரிய  சுழல்  அது!.. 

சிக்கியவர்கள் மீளவே  முடியாத புதைமணல்…   

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமே!….’ என்ற    உண்மை  தெரியாத வெகுளி. 

வளம்  மிக்க குடும்பம், பெண்ணும் அழகிஎன்று    இருக்க, இவரை மணக்க  நான், நீ என்ற   போட்டி    இருந்தது  என்னவோ  உண்மை.

வந்து குவிந்த  திருமண  ஜாதகத்தில், எதைத்  தேர்ந்து எடுப்பது  என்று புரியாமல், மாலினியின்    குடும்பம் திணறியது என்று  சொன்னால்   கூட    மிகையல்ல.

அந்தக்  கால முன்னணி  நடிகர்கள் முதல், தொழில் ஜாம்பவான்கள், மந்திரி வீட்டு சம்பந்தம்   என்று    தினமும் யாராவது  ஒரு தரகரை  அனுப்பி வைத்து  விடுவார்கள்.      

மனதாலும், அழகாலும் தேவதை பெண்ணான  மாலினியின்  காதல் கிட்டியது என்னவோ பல்தேவ்  குப்தாவிற்கு  தான்.

மாலினியை காதலித்து  கரம் பிடித்தார் பல்தேவ்.

சம்யுக்தா பிறந்த ஒரு வருடம்வரை இந்தியாவில் வேலை செய்து கொண்டிருந்தவர், சம்யுக்தா பிறந்தபிறகு வெளிநாட்டில் தன் தொழிலைத் தொடங்கி இருந்தார்.

சொந்த தொழில், அவரின்  உழைப்பால் பல்கி    பெருகி  கொண்டு  இருந்தது.

‘பணம்  தான்  எல்லாம்  என்று, யாருக்காக  ஓடிக்  கொண்டு இருக்கிறோம்’ என்பதே தெரியாமல்,    சில பெற்றோர்  ஓடிக்  கொண்டு இருப்பார்கள்.

‘இந்த  ஓட்டத்திற்கு  எல்லை என்பதே    இல்லை’ என்பது  தான்  வலிமிகுந்த  உண்மை.

ஒரு  கட்டத்தில்  இந்த  ஓட்டம் நிற்கும்போது  யாருக்காக  ஓடி இருந்தார்களோ, அந்தக்    குடும்பம் இவர்களை   விட்டு, மனதளவில்    விலகி    இருப்பார்கள்.

மன சுணக்கம் என்பது தெளிந்த  நீரில், சிறு கல் விழுவதை  போன்றது  அல்ல… கடலில்விடாமல் எழுந்து கொண்டே  இருக்கும்  அலை போன்றது.

அதிகளவு பணமும், வாழ்க்கை  முறையும்  ஒரு விதத்தில்  திகட்டும் இனிப்பாய் மாறி  விடும் போது, அங்கே மனங்களுக்குத்தேவையான அரவணைப்பு இருப்பதில்லை.

அதைப் போல்ஓடிக்  கொண்டு  இருக்கும்   தந்தை,    பல்தேவ்குப்தாவின் அன்பு  கிடைக்காமல்,  வளர்ந்தவள்  சம்யு.

இந்தக் பணத்தின் பின் கணவன் ஓட, வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர்மாலினி என்றுசொல்ல  வேண்டுமோ!…

காதலிக்கும்போது இருந்த  காதல்,நிஜ வாழ்க்கை    என்ற  நிதர்சனம்  வைத்த, அக்னி பரீட்சையை    சமாளிக்க  முடியாமல் திணறிக்  கொண்டு    இருந்தது.

‘வாழ்வாதாரம் என்ற அரக்கன்’ விஸ்வரூபம்   எடுக்க, காதல்  பின்னால் செல்ல வேண்டிய   கட்டாயம்.  

‘வேலை’  என்ற  முதல்  மனைவிமுன்னால், மாலினி   என்ற உயிருள்ள  மனைவியால் ஜெயிக்க    முடியவில்லை.    

கிட்டத்தட்ட  இருபத்தி ஐந்து வருடமாய், வருஷத்திற்கு, ஒரு முறையோ ரெண்டு முறையோ, அதுவும்  இங்கே செய்ய வேலைகளை வைத்துக்    கொண்டுதாயகம்  திரும்பும்  கணவன்.

முந்நூற்றி அறுபத்து  ஐந்து  நாட்களில் ஏழு நாட்கள் மட்டும்  வாழ்வது ஒரு வாழ்வா?..இதற்கு  அர்த்தம்    தான்  என்ன?…

எப்பொழுது தான் கணவர் தன்னிடம்  முழுதாய்    திரும்பவருவார்?….  

பதில் கிடைக்காத கேள்விகள். 

பல வெளிநாடுகளில் சொந்தமாய் பல  நிறுவனங்கள். எங்கே, எத்தனை மாதம்    தங்குவார் என்று அடுத்தநொடிவரை பல்தேவே  அறியாத வேலை.

‘இன்னும்…  இன்னும்…. இன்னும்…’ என்று    பணத்தின்பின், வெற்றிகளின் பின், ‘ட்ரக் அடிக்ட்’    மாதிரி,  வெறி கொண்டு வாழ்ந்து கொண்டு    இருப்பவர் பல்தேவ்.

காலைத்  துபாய், மாலை ஈரான், மறுநாள்  துருக்கி,  இரவு உக்ரைன் என்று  பயணம் செய்தே,    அவர் வாழ்க்கை, வேலையில் கழிந்து    கொண்டிருக்க,  ‘இதில் குடும்பம் என்ற ஒன்று      தன் கணவனுக்கு   நினைவு இருக்குமா?…’ என்று    மாலினி தன்னை தானே கேட்காத  நாள் இல்லை    என்று சொல்ல வேண்டுமோ!….

‘ராமன் இருக்கும்  இடமே சீதைக்கு அயோத்தி’    என்று இருப்பதை  வைத்து  வாழ இப்பொழுதும்  மாலினி தயார் தான்.ஆனால், அது  அவரின்    கணவன்  காதில்  விழுந்தால் தானே!…

வேலை  ஒரு  காரணம்  என்றால் மாலினி, சம்யுக்தாவின் பாதுக்காப்பு   இன்னொரு  தடையாய் இருந்தது.  

கோடீஸ்வரர்களாக  இருப்பதில்  இன்னொரு  பிரச்சனை பாதுக்காப்பு.

பணத்திற்காகக் கடத்தப்படுவது/    kidnapping   for ransom எல்லாம் மனசை கொன்றுவிட்ட இந்தக்    கால  கட்டத்தில்  வெகுசாதாரணம் என்னும்போது, ‘தன் குடும்பத்தார்  இந்தியாவில் தான்    பாதுகாப்பாய் இருப்பார்கள்.’ என்ற கணவன்    பேச்சுக்கு  மாலினியால்பதில்பேச      முடியவில்லை.   

தன் வேர்களை முற்றிலும் அறுத்துக் கொண்டு செல்லவும் மாலினிக்கு விருப்பம் இல்லை. என்றாவது தன் குடும்பம் தன்னை தேடும்போது அவர்கள் அழைக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம். 

கணவர் வேலை என்று உலகத்தைச் சுற்றி கொண்டிருக்க, மகளுக்கு நிலையான ஒரு வாழ்வை கொடுக்கத் தான் மாலினியின் மனம் விரும்பியது.

ஆயிரம் தான் வெளிநாட்டில் இந்திய முறைப்படி வளர்க்கிறேன் என்று சொன்னாலும், எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் தாக்கம் பிள்ளைகளிடம் நிச்சயம் இருக்கும். பல வருடம் பார்த்து, பழகி, அதிலேயே ஊறி இருக்கும் பிள்ளைகள் வாழ்க்கை முறை வேறு மாதிரியாகத் தான் இருக்கும்.

இங்கு வளர்ந்து அங்கே  செல்பவர்களுக்கும்,  அங்கேயே  வளர்ப்பவர்களுக்கும், இங்கேயே வளர்ப்பவர்களுக்கு   நிறைய  வித்தியாசங்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தில் சொல்லி விடலாம்.

குடும்பம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் COMPULSION, விருப்பம், சாய்ஸ் என்று பிள்ளைகள் மாறுவதை மாலினியால் ஏற்க முடியவில்லை .      

இந்திய குடும்ப முறை, பிள்ளைகள் பெற்றோர்கள் மேல் வைத்திருக்கும் அந்தப் பாசம், மரியாதை வெளிநாட்டவரே வியந்து பாராட்டிக் கொண்டு இருக்கும் வாழ்க்கை முறை.அது தான் தன் மகளுக்கு வேண்டும் என்பதில் மாலினி உறுதியாக இருந்தார்.        

கணவனுக்கு இருந்த வெளிநாட்டு மோகம், அந்த மேல்தட்டு வாழ்க்கை மாலினிக்குபிடிக்கவில்லை.  

மாலினி ஒருவாறு  தன்னை தேற்றி, இந்த வெறுமையான வாழ்க்கைக்கு பழகிக்    கொண்டார் என்றாலும் சம்யுக்தாவால்  அது முடியவில்லை.

தந்தை என்ற உறவிற்காக,  அந்த    மகளின்   மனம்   தவித்துக் கொண்டிருந்தது.

“மம்மி!…  நம்ம   கிட்டே   இருக்கும்  பணமே,  நாலு    தலைமுறைக்குப்  போதும்… இன்னும்  டாடி,   ஏன்    இப்படி வெளிநாட்டில்  தங்கிட்டு இருக்கார்?…  ஐ ஹேட்   திஸ்   மா…”  என்ற  சம்யுக்தாவிற்கு    தாயின் கலங்கியகண்களே   பதிலாய்    வரும்.

“என்ன செய்யறது சம்யு!… அவங்க  என்னைத் திருமணம் செய்தபோது, அவங்க  வீட்டில் அவரை  ஒதுக்கி வச்சிட்டாங்க.”  என்றார்  மாலினி    கண்ணீருடன்.

“அவங்க  எல்லாம்  எங்கே  இருக்காங்கமா?..மீட்    செய்து  இருக்கீங்களா?”   என்றாள்  சம்யுக்தா.

ஒருவேளை இப்படி குடும்பம் என்ற மூத்த தலைமுறை, உறவுகள் இல்லாததால் தான் தன் தந்தைக்கு குடும்பம் என்பது பணம் அனுப்புவது மட்டும் இல்லை என்று தெரியவில்லையோ!.. இல்லை குடும்பத்தில் யாராவது இருந்தால், இப்படி வேலையே கதி என்று தந்தையை இருக்க விட்டு இருக்க மாட்டார்கள் தானே!…

அப்படியே தந்தை வெளிநாட்டில் வேலைக்குக் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தாலும், இரு பக்க உறவுகள் இருந்திருந்தால், அன்னையும் இப்படி தனிமையை உணர மாட்டார் தானே!

மினி, மைக்ரோ குடும்பங்கள் ஒரு வகையில் வரம் என்றால் இன்னொரு பக்கம் சாபமே.

பல்கலைகழங்களுக்கு, ஒரு நூலகத்திற்கு ஈடான மூத்த தலைமுறை, அன்பை கொட்டி வளர்க்கும் உறவுகள் இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கு மனதளவில் அன்பு, விட்டுக் கொடுக்கும் தன்மை, பகிர்ந்து கொள்ளுதல், போன்றவை தெரிவதில்லை.

இது போன்ற குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாய் இருந்தால், குழந்தையின் பாதுகாப்பும் கேள்வி குறியாகி விடுகிறது.       

“அப்பா வீட்டினர் எங்கே இருக்காங்கமா?…  மீட்    செய்து  இருக்கீங்களா?” என்றாள்  சம்யுக்தா.

“அவங்க   எல்லோரும்  கோவாவில்  இருப்பதாய் உங்க  அப்பா  சொல்லி  இருக்கார்…   இத்தனை வருஷமாய் அவங்க கோபம்    தீரலை…  நாங்களும் போய் யாரையும் பார்த்தது இல்லை சம்யு…” என்றார்மாலினி  வேதனையுடன்.

காதலித்து, வீட்டை எதிர்த்துக் காதலித்தவனை கரம் பற்றியபோது, உலகத்தையே   வென்று விட்ட  சந்தோஷம்,காலம்  பல உருண்டோடிய  பிறகும்,    ஏற்று  கொள்ளாத  இரு  பக்க குடும்பத்தையும்  நினைத்து    வேதனையாக    மாறி  இருந்தது.

சுகம்,   துக்கம் என்று எதற்குமேகலந்து  கொள்ளாத, அனாதைபோன்ற வாழ்க்கை தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டது தான்  என்றாலும்,வலியின்   அளவு நாளுக்கு    நாள் ஏறிக்  கொண்டு  தான்  இருந்தது.

பல்தேவ்  துணையிருந்திருந்தால், இப்படியெல்லாம் தோன்றி  இருந்தாலும்,  மாலினி    அதைக்  கடந்து இருப்பாரோ என்னவோ!…  ஆனால், பல்தேவிற்கே  தொழிலில்,ஆயிரம்    பிரச்சனை இருக்கும்போது, மனைவியின் மன    குமுறல்  எல்லாம்,  புரிந்து    கொள்ளும்    நிலையில் அவர்  இல்லை.  

“அங்கிள், அவங்க  குடும்பம்    பூர்விக கோவாவாசிகளா ஆன்ட்டி?…”  என்றாள்  ஹேமா கனத்த  அந்தச்  சூழ்நிலையை  இலகுவாக்க.

“இல்லைமா  சம்யு தாத்தா மும்பைக்காரர்… மும்பையில், ‘குப்தா’  என்ற  பழம்பெருமையான குடும்பமாம்.

அண்ணன்,  தம்பி,பங்காளிங்க  இடையில்  சொத்து  பிரச்சனையில், அங்கே    நிறைய   உயிர் போய்டுச்சாம்.

மீதம் இருப்பவர்களைக் காக்கஎன்று, அங்கிருந்து ரெண்டு தலைமுறைக்கு முன்னரே, அவங்க    கோவாவில் செட்டில் ஆகிட்டாங்களாம்.

அவருடைய  தாத்தா  குடும்பத்திற்கு  தமிழகத்திலிருந்து,  அங்கே   கோவாவில்  செட்டில் ஆகியிருந்த ஒரு தமிழ் குடும்பம்  உதவியதாம். அந்தக்  குடும்ப பெண்ணையே அவர்   தாத்தா  திருமணம்   செய்து  கொண்டாராம்.” என்றார்  மாலினி.   

“அப்பா ஒரே பிள்ளையாமா?… கூடப் பிறந்தவங்க    யாராவது  இருக்காங்களா?… அவங்க யார்    கிட்டேயாவது  பேசி, அப்பாவை அவங்க    குடும்பத்தோடு,  சேர்த்து வைத்திருக்கலாம்      இல்லையா  நீங்க?…”  என்றாள்    சம்யு.

“ஒரு அக்கா இருந்தாங்க என்று சொல்லியிருக்கார்   சம்யு…  அவங்களை  பத்திபேசினாலே   அப்படியே   இறுகி போயிடுவார்.

பண வெறி   பிடித்தவங்களாம்…  இல்லைன்னா வீட்டின் ஒரே ஆண்  வாரிசான இவரைப் பணத்திற்காக,  எவளோ  ஒரு பணக்காரிக்கு மூன்றாம்  திருமணம் செய்ய    ஏற்பாடு செய்வார்களா?….

அந்தப்  பெண், ‘ கோடிகோடியாய்    பணம்    தரேன்’ என்று சொன்னதும்,  இவரை  விற்க முயன்று  இருக்காங்க….

அது  பிடிக்காமல் தமிழ்நாட்டுக்கு  ஓடி வந்துட்டார்   உங்க  அப்பா… இப்பவும்  அதைப் பத்தி  பேசினால் கோபம் வந்துடும்… இப்படிபட்ட பண வெறி  பிடித்த மிருங்கங்கள் உறவே   தேவையில்லை..”  என்றார் மாலினி வெறுப்புடன்.     

இது போன்றவர்களிடம் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது பணத்தால் இல்லை… இரு மனம் இணையும் திருமணத்தில் வியாபாரம் என்பது இருக்க கூடாது என்று யார் சொல்வது?  

திருமணம் என்பதில் எப்பொழுது கட்டாய வரதட்சணை என்பது நுழைகிறதோ அப்பொழுதே அங்கு மணமகன் என்பவன் விற்பனை பொருளாகி விடுகிறான்.

மகளின் வாழ்வுக்காக என்று பெற்றோர்களாய் பணம், பொருளைக் கொடுப்பது வேறு…இப்படி பணத்தை காட்டி வாங்க முயல்வதோ, பணத்தை கேட்டுத் திருமணம் செய்ய முயல்வதும் வியாபாரம் மட்டுமே.

வருங்கால சந்ததியை, நாட்டின் தூண்களை உருவாக்கும் இல்லறத்தில், இது போன்ற கசடுகள் கரும்புள்ளியாய், கண்ணில் விழுந்த துரும்பாய் உறுத்தி கொண்டே தான் இருக்கும்.         

ஆட்டம் தொடரும்…