ஆதிரையன் -அத்தியாயம் 18
ஆதிரையன் -அத்தியாயம் 18
அத்தியாயம் 18
அவனோடு என்ன பேச,அவனை எப்படி சாமாதானம் செய்யவென்றே தெரியாது தவித்துக் கொண்டிருந்தாள் அதிதி. ரேவதியைப்பார்க்க கீழிறங்கி வந்தவள் அவர் நன்றாக உறங்கியிருக்க, அப்படியே படிக்கட்டுகளில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்திருந்தாள். அப்படியே உறங்கியும் போயிருந்தாள்.
நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஆதிரையனோ அதிதி ரேவதியோடு உறங்கியிருப்பாள் என்று அவனறையில் உறங்கியிருக்க, இவளோ அப்படியே படியில் அமர்ந்தவாறே உறங்கியிருந்தாள்.
இடையே தூக்கம் கலைந்து எழுந்த ரேவதிக்கு உடல் காய்ச்சலில் அனலாய் கொதித்தது. முன்னறை விளக்கு ஒளிர்வதைக்கண்டு அதை அணைக்கலாம் என எழுந்து வந்தார். வந்தவர் படிகளில் சுவற்றில் சாய்ந்தவாரு உறங்கிய அதிதியை கண்டவருக்கு மனம் பிசைந்தது.
மெல்லமாய் சென்று விளக்கை அணைத்தவர் அவள் அருகேச் சென்று அமர்ந்துக்கொண்டார்.
“அதிம்மா…. “
லேசாய் அவள் கைகளை தொடவுமே விழித்துக் கொண்டாள்.
“அச்சோ அத்த இங்கேயே தூங்கிட்டேன் போல. நீங்க ஏன் எழுதுட்டீங்க? “
அவர் கைகளை தொடவுமே அவர் உடல் சூட்டினை உணர முடிந்தது.
“அச்சோ அத்த உங்களுக்கு காய்ச்சலா இருக்கு. என்ன பண்ணுது?”
“அது மாத்திரை போட்டா சரியா போய்டும் அதி.”
“சரி இருங்க எடுத்துட்டு வரேன்.”
அவள் எழுந்து செல்லப்பார்க்க,
“அதி இப்படி இரு.” அவளை அமர்த்திக் கொண்டவர்,
“அன்னைக்கு நாம தீபா வீட்டுக்கு போயிருந்தோம்ல. அப்போது செல்வா அண்ணா என்னோடு கதைத்தார். உன்னை பற்றித்தான் நிறையா சொன்னாங்க.
எனக்கு என்ன சொல்றதுன்னே பதில் இருக்கல அதி. ஆதி அப்பா இப்டி பண்ணிருக்காங்கன்னு என்னால ப்ச்… சொல்லத் தெரில.
ஆனா இந்த ஊர் விட்டு போனதோட உங்க வீட்டோட இருந்த உறவு மொத்தமாகவே விட்டுப்போச்சு. எனக்கு நல்லாவேத் தெரியும், நாம இந்த ஊருக்கு வந்த நாள் முதல் உங்கப்பாவும் அம்மாவும் தான் எங்களுக்கு எல்லாமே. அவ்வளவு உதவியா, ஏன் கொஞ்ச மாசமா அவங்கதான் எங்களுக்கு சோறு போட்டாங்கன்னே சொல்லுவேன். இவங்கப்பாவும் உங்கப்பாவும் எவ்வளவு ஒற்றுமையா ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தாங்களோ அதே போலத்தான் உங்கம்மா கூடவும் நான் இருந்தேன்.
என் பையன்னா உங்கப்பாக்கு ரொம்ப இஷ்டம்.”
அதிதிக்கு கண் குளமென நிறைய அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஆதி அப்பாவுக்கு அரசியல்னா அத்தனை இஷ்டம். காலேஜ் டைம்ல இருந்தே ரொம்ப ஆர்வமா இருப்பாங்க.எனக்கு அப்போல இருந்தே பிடிக்காது. ஆனாலும் உங்கப்பா தான் அவங்கள ஊக்கப்பப்படுத்தி அவங்க மூலமா எல்லாமே பண்ணுனாங்க. பதவியும், தரமும் ஒரு மனுஷனை கண்டிப்பா மாற்றும். என் புருஷ்ன் மட்டும் விதிவிலக்கா என்ன.எல்லாருமே ஊர்ல அரசியல்னு வந்துட்டா பெயர் கெட்டுப்போய்டும். ஆனா இவங்க உயிர் விட்றவரைக்கும் அவர் பெயருக்கு இழுக்கா எதுவும் பண்ணி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும்,யாருக்கு துரோகம் பண்ணக்கூடாதோ அவங்களுக்கு பண்ணுனாங்க.”
“அத்தை, அதைப் பற்றியெல்லாம் இப்போ பேசவேணாம்.”
“இல்ல அதிம்மா.எனக்கும் பேசிட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும் தோணுது. உங்களைப் பற்றி அப்பப்ப கேட்டுட்டே இருப்பேன். ஆனாலும் சரியான பதில் எப்போவும் கிடைக்கல. அப்றமா ஒரு நாள் உங்கப்பா நிலம் எல்லாத்தையும் அடகு வச்சு மீட்டுக்க முடியாம இருக்காங்க, அதை மொத்தமா வாங்கிட்டேன்னு சொன்னாங்க. நீங்க இப்போ ஊர்ல இல்லைணும் சொன்னாங்க. அவ்வளவு தான். அதற்கு பிறகு, எப்போவாவது நினைச்சுப்பேன் உங்களை. அடிக்கடி ஆதி கிட்ட உன்னைப் பற்றி சொல்லிட்டே இருப்பேன். காலம் போக எல்லாம் மறந்து போயிடுது.
அதோட எனக்கு யாரோட ஞாபகமும் வர்ற அளவுக்கு என்னை அவங்க நடத்தல. எனக்கான அன்பு துளியும் குறைச்சதே இல்லை. எனக்கு அவங்க தப்பானவங்க இல்லை. அவங்களைப் பற்றிக்கேட்டால் எங்கிட்ட பதில் அவ்வளவு தான்.”
அதியின் கைகளை பிடித்துக்கொண்டவர்,
“எனக்காக அவங்களை மன்னிச்சிரு அதிம்மா. “
“அத்த என்னதிது. நீங்க ஒன்னும் பண்ணல. இப்டில்லாம் பேசி என்னை கஷ்டப்படுத்தாதீங்க. நான் சின்ன வயசுல இருந்தே மனசளவுல உள்ளுக்குள்ள ரொம்ப உடைஞ்சுப்போய்ட்டேன். இல்லாமலே வாழ்ந்துட்டா அது வேற, இருந்து எதுவும் இல்லாம ஆகிட்டா எவ்ளோ கஷ்டம்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அப்பாவை இழந்து, அதுக்கப்றம் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்பா இல்லாம எங்கம்மா இருக்கவே மாட்டாங்க. அப்பா அம்மாக் கூட எவ்ளோ பாசம்னு அந்த சின்ன வயசுலேயே உணர்ந்திருக்கேன். அப்றமா செல்வா அப்பா வீட்டுக்குப் போய் அம்மா அங்க சமையல் பார்த்து அந்த சின்ன வயசுலேயே…’
சற்று இடைவெளி விட்டவள்,
‘கடவுள் இப்படித்தான் உங்க வாழ்க்கை அப்டின்னு அமைத்த பின் அதை எம்மால மாத்திக்க முடியாதே. அதெல்லாம் இனி எப்போவும் நாம பேச வேண்டாம்த்த.’
‘வாங்க முதல்ல போய் மாத்திரை போடலாம்.”
அவரை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றவள் அவர் காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்தாள்.
“இருங்க குடிக்க பால் எடுத்துட்டு வரேன்.குடிச்சிட்டே தூங்கலாம். “
அவர் பதில் எதிர்பாராது சமையலறைச் சென்று பால் காய்ச்சு எடுத்து வந்தாள்.அவர் குடித்ததும்,
“நீங்க மனசை வருதிக்க வேணாம்.
எல்லாம் சரியாகும் அத்த. எல்லாருமே மனுஷங்க தானே.காலம் போக எல்லாம் மறந்து மாறும்.”
“சரி,அதெல்லாம் இனி வேண்டாம். நானும் பேசல. எனக்கு நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்ந்தாலே அதை பார்த்து நான் என் மிச்ச காலத்தை வாழ்ந்துப்பேன்.”
“கண்டிப்பா அத்த. “
“அதி,உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும். நீ எப்டி எடுத்துப்பன்னு தெரில.”
“சொல்லுங்கத்த.”
“கொஞ்சம் நாள் முன்னால இரவு ரொம்ப நேரம் ஆதி அவன் ஆபிஸ் ரூம்லேயே இருந்துட்டு ரொம்ப சோர்வா தெரிஞ்சான். கண்ணெல்லாம் கூட சிவந்து அழுத்திருப்பானோன்னு கூட எனக்கு தோணுச்சு. அவன் போனத்துக்கப்றம் அறைக்குப் போய் என்ன பிரச்சினையோன்னு பார்த்தேன். அவன் மில் சம்பந்தமா எதுவும் இருக்கும்னு தான் நான் நினச்சேன். ஆனாலும்,”
அதிதியை அவர் பார்க்க அவளும் அவரையே பார்த்திருந்தாள்.
“அவன் யாரோ ஒரு பொண்ண லவ் பண்ணிருக்கான் போல. இன்னும் அந்த பொண்ணையே நினைச்சுட்டு… எனக்கு எப்டி சொல்றதுன்னே தெரிலம்மா. கண்டிப்பா அவன் தப்பு பண்ண மாட்டான். ஆனாலும் அவன் மனசுக்குள்ள ஏதோ சொல்ல முடியாம கஷ்டப்படறான்னு தோணுது. நீதான் அவங்கிட்ட என்னனு.”
புன்னகைத்தவள்,
“சரித்த, பார்க்கலாம்.”
“இல்லை, நீ அவனை தப்பா எடுத்துக்காத. அவன் மனசுக்குள்ள ஏதோ சொல்ல முடியாம இருக்கான். அதான், நீங்க ரெண்டுபேருமா பேசி சரி பண்ணிக்கோங்க. அவன் உன் மேல ரொம்ப பாசமா இருப்பான். நீ சின்னதா இருக்கப்ப,உங்கப்பாக்கு கூட உன்ன தூக்கிக்கக்கூட கொடுக்க மாட்டான். இப்போவும் அது அப்படியேதான் இருக்கும்.”
“தெரியும் அத்த. நீங்க அதையெல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்க வேணாம். நல்லா தூங்கி எந்திரிங்க. காலைல பார்த்துட்டு டாக்டர்கிட்ட போகலாம். நான் அவங்க கூட பேசுறேன்.”
அவருக்க போர்வையை போர்த்தி விட்டவள் மெல்லமாக மாடியேறினாள்.
கட்டிலில் குறுக்காக குப்புற படுத்திருந்தான் ஆதிரையன். அவனைப்பார்த்தவள்,
‘இப்டி தூங்குனா
நான் எங்க தூங்கவாம்.’
‘ஏன்,அவன் மேல தூங்கிக்கோ.’
‘அதானே தூங்கிக்கலாமே.’
‘ஆமா இருக்க கோவத்துக்கு என்ன பண்ணுவாங்களோ தெரில இதுல முதுகு மேல தூங்கவா?’
அவளும் மனமும் பேசிக்கொண்டு,
கொஞ்சமாய் அவன் கால்களை நகர்த்தியவள் அவன் கால் பக்கமாய் தலையணை வைத்துப் படுத்தாள். அவனோடு நாளை எப்படியாவது பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும், அவள் கவிஞனை முழுதாய் எடுத்துக்கொள்ள வேண்டும், அதோடு முக்கியமாக, இந்த தாத்தாவுக்கு ஏதேனும் ஒரு வழி செய்திட வேண்டும் என எண்ணியவளாய் உறங்கிப்போனாள்.
விடியலில் கண் விழித்த ஆதிரையனின் கண் முன்னே பின்னிக்கொண்ட அவளின் கால்கள் இரண்டும்.
தேன் கலந்த சந்தன நிறத்தில் வாழைதண்டாய் முழங்கால் வரை தெரிந்தது.மெல்லிய சலங்கை ஒரு காலில் மட்டும் அணிந்திருந்தாள். அப்படியே பார்த்திருந்தான். அவன் விரல்கள் அதைத் தீண்டவேண்டும் என்றே துடிக்க கடினப்பட்டு தடுத்து கையிரண்டையும் தலைக்கு கீழ் வைத்துக்கொண்டான். எப்படியும் இப்போது எழுந்துக்கொள்வாள் என பார்த்திருக்க அதிதியும் தூக்கம் கலைந்து எழ, அவள் கால்களோ ஆதிரையன் முகத்தில்.
துயில் கலையாது போலவே அவன் கண்கள் மூடியிருக்க, இவள் கால்கள் சரியாக அவன் மூக்கை பதம் பார்த்தது.
“ஐயோ அம்மா…” என மூக்கை தேய்த்துக்கொண்டு எழுந்தமர்ந்தான்.
“ஹேய், சாரி சாரிங்க, இந்தப்பக்கம் தூங்குனது ஞாபகமே இல்ல. அதான், ரொம்ப அடியா?”
அவன் மூக்கை தேய்த்து விட இவளும் அவன் மூக்கை தொட வர இருவரும் ஒருவரை ஒருவர் மிக நெருங்கி அமர்ந்திருந்தனர்.
அவன் அவளையே பார்க்க,அவளும் அவனையே பார்த்திருந்தாள்.
“நான் உங்க கிட்ட…”
“ஒன்னும் பேச வேணாம் அதி.”
கூறியவன் எழுந்து சென்று விட்டான். இவளோ எப்படி அவனோடு பேசவென்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
அன்று நேரம் சென்றே செல்ல வேண்டிய தேவை அதிதிக்கு இருந்தது. அதற்குள் இவனோடு பேசிட வேண்டுமே என அவன் போகும் திசை மொத்தம் கண்களால் தொடர்ந்துக்கொண்டே இருந்தாள். அவனும் கண்டும் காணாதவனாய் இருந்தான். அவன் அறை விட்டு கிளம்பி வெளியே செல்லப்பார்க்க,
“நான் பேசணும் கவிஞரே…”
ஆமாம்.சொல்லியே விட்டாள். வரிகளில் அவள் எழுத்துக்களில் கண்ட கவிஞர் அவள் இதழ் வழி ஒலியாக.
அவன் நின்று இவளைப் பார்க்க,
“அது… நான்… நீங்க வேணாம்னு… ஒத்துக்க மாட்டீங்கன்னுதான் மறைச்சுட்டேன்…”
திக்கித் திக்கி அவளும் கூற, அவனோ உள்ளத்தில் மேலெழும் காதலை உள்ளுக்குள் அடக்கத் தெரியாது தடுமாறினான். ஆதிரையன் பதில் பேசாது அவளைத் தாண்டி வெளியேறப்பார்க்க,
“என்னை புரிஜிக்க மாட்டிங்களா ப்ளீஸ்…”
அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்க, அவளை அப்படியே சுவற்றோடு நிறுத்தி அவள் முன்னே மிக நெருக்கமாய் நின்றவன்,
“என் நிலைமை உனக்கு புரிலயா? எத்தனை கஷ்டப்பட்டு,’
நெஞ்சை தன் விரலால் சுட்டிக்காட்டியவன்
‘அவளை உள்ளுக்குள்ள வச்சுட்டு ,’ அதிதியை அதே விரலால் சுட்டி
‘இவளை ஏத்துக்கிட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். தப்புதான் நான் செல்பிஷ் தான். ஆனாலும் என் தீக்கு என்னால ஞாயமா இருக்க முடியலன்னு, இவளுக்கு உண்மையா இருக்க முடிலன்னு தினம் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.”
“எனக்கும் தெரியும்ங்க. என்னால எப்டி உங்களை… “
“என்ன தெரியும் சொல்லு என்ன தெரியும்…? “
“உங்ககிட்ட என் மனசை வெளிப்படுத்துனப்றம் என்னால முடில. அதான் நான்தான்னு தெரிஞ்சு நீங்க எல்லாமே எனக்காகப் பண்ணிட்டீங்கன்னா, இங்க வீட்ல, உங்க நிலைமைனு எனக்குள்ள கஷ்டமா,ஏதோ சொல்லத் தெரில. அதான் நான் இப்டியே உங்களை…”
“உன்னால முழுசா இந்த கல்யாணத்தை சந்தோஷமா அனுபவிக்க முடிஞ்சதா?”
அவள் இல்லையென தலையாட்ட,
“அப்புறம் ஏன்டி…? “
“ஏன்னா ரொம்ப நேசிக்கிறேன் உங்களை… நீங்கன்னு தெரிஞ்சு அதுக்கப்றம் உங்களை விட்டு இருக்க முடியும் தோணல.”
அவர்கள் இருவருக்குமான நெருக்கம் இருவருமே அறியாது, உணராது கூடியிருந்தது. அவள் கண்களையே பார்த்திருந்தவன் கண்கள் வழியே கண்ணீர் கன்னம் நனைத்து கீழிறங்க அதன் வழியே கண்ணால் பயணம் கொண்டான். மெல்லமாய் அவள் கன்னத்தை தன் பெருவிரல் கொண்டு துடைக்க அவனையே கலங்கிய விழிகளினூடே பார்த்திருந்தாள் அதிதி.
அவன் விரல்கள் அவளைத் தீண்ட தீயும் தீயாய் ஆனாள். அவள் முகம் அவனையே பார்த்திருக்க அவன் செய்கை அப்போதே உணர்ந்தான். சட்டென விலகியவன் கீழே சென்றுவிட்டான். அதிதி சில நிமிடங்கள் அங்கேயே அப்படியே நின்றிருந்தாள். பின்னர்தான் ரேவதிக்கு இரவு காய்ச்சல் இருந்தது நினைவுக்கு வர, கீழே அவசரமாகச் சென்றாள்.
அவரோ காலை உணவை மேசையில் எடுத்து வைப்பதைக் கண்டவள்,
“அத்த சாரி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.
“அதுக்கென்ன அதி, முதல்ல வந்து சாப்பிடுங்க ரெண்டு பேரும்.”
“உங்களுக்கு பிவேர் குறைஞ்சிருக்கா? எதுக்கு டையர்ட் ஆகுறீங்க? “
அவர் நெற்றித் தொட்டுப் பார்க்க சில்லென்றுதான் இருந்தது.
“அது அப்போவே சரியாகிடுச்சுமா. நீ முதல்ல சாப்பிடு. இன்னிக்கு வேலைக்கு போகலயா? “
தனக்கு எதிரே அமர்ந்து யாருக்கு வந்த விருந்தோ என உண்டுக் கொண்டிருந்தான் ஆதிரையன். அவனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்தவள்,
“போகணுமத்த. அதை விட முக்கியாமான வேலை, ஆனா எப்டி கரெக்டா செய்து முடிக்கபோறனோ தெரில.”
“என்னாச்சு எப்போவும் சரியாதானே பார்த்துப்ப? “
“ஆமாத்த, நான் சரின்னு பண்ணிவச்சுருக்க மொத்தமும் தப்பாகிடுச்சு. சம்பந்தப்பட்டவங்க ஹெல்ப் பண்ணாங்கன்னா கண்டிப்பா சரி பண்ணிப்பேன் அத்த.”
அதுக்ககென்னம்மா கொஞ்சம் பேசிப்பார்களாமே. புரிஜிக்க மாட்டாங்களா என்ன. “
“புரிஜிப்பாங்க அத்த, ஆனால் பேச விருப்பப்படமாட்டேங்குறாங்க. அதான் பிரச்சினையே”
“ஆதி, நீ சும்மாதானே மில்ல போய் உட்கார்ந்துட்டு இருப்ப, அதிகிட்ட என்ன ஏதுன்னு கேட்டு நீ கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே. “
“ஏதே,நா வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்கேன்னு நீ பார்த்த? எனக்கே அங்க தலைக்கு மேல வேலை. எனக்கு துணையா யாரையும் கேட்டனா? அவங்கவங்க வேலை அவங்கதான் பார்த்துக்கணும்மா.”
அதிதி சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் கெஞ்சுவது போல பார்க்க, அதிதியை முறைத்தவன், எழுந்து சென்று கைகளை கழுவிவிட்டு வந்தான்.
“சரி, நைட்மட்டும் எப்டி பிவர் உனக்கு? அந்த மனுஷனை எல்லாம் பார்த்து உனக்கு பயத்துல பிவர். அந்தாளு அதான் இந்த வயசுலயும் இப்டி பண்ணிட்டு திரியுறார். எங்கிட்ட மட்டும் தான் உன் வாயி. நைட் இருந்த பிவர் இப்போ எங்க போய்டுச்சு? ஈவினிங் ரெடியா இரு டாக்டர்கிட்ட போலாம்.”
“எனக்கொன்னும் இல்லடா, நான் நல்லாத்தான் இருக்கேன். “
“அதான் பிரச்சினையே. உனக்கொன்னும் இல்லையே என்ன காரணம்னு போய் பார்க்கலாம். சும்மாவே தலைவலின்னா என் உயிர வாங்குவ, நேத்திக்கு அந்தாளு வந்து பழைய ரீலெல்லாம் சுத்திட்டு போயிருக்கார், நீ என்னென்னா ஸ்டெடியா இருக்க.”
அதிதியும் அப்போது தான் ரேவதியை சரியாகக் கவனித்தாள். முயன்று சிரித்துப்பேசிகொண்டிருக்கிறார் போல.
“ஈவினிங் நாலுமணிக்கெல்லாம் வந்துருவேன், கிளம்பி இரு.” கூறியவன்,அழைப்பொன்று வர அதில் பேசிக்கொண்டே வெளியேறிவிட்டான்.
“அத்த,நான் போய்ட்டு முடிஞ்சா சீக்கிரமே வர முயற்சிபண்றேன். நீங்க ஒன்னும் பண்ண வேணாம்.”
‘சரி’ என்பதாய் புன்னகைத்தார்.அவரிடம் வந்தவள்,
“அத்த உங்களுக்கு எவ்ளோ கஷ்டம்னு எனக்கு புரிது. ஆறுதலா உங்ககூட பேச முடியுமே தவிர என்ன சொல்றதுன்னு தெரியல. நேத்திக்கு தாத்தா வந்தது பற்றியோ, அவங்க பேசுனதை எல்லாம் நீங்க கண்டுக்கவே வேணாம். இப்போவும் உங்க மேல பாசமா சொந்தபந்தம் வேணும்னு வந்து உங்களை திட்டிருந்தா பரவால்ல. அவங்க இன்னுமே அப்படியேதான் இருக்கங்கன்னா என்னதான் பண்ண முடியும். நாம அதை பற்றி யோசிச்சு நம்ம நிம்மதி கெடுத்துக்க வேண்டாம்.”
“சரிங்க பெரிய மனுஷி, டைமாச்சு போய் கிளம்பு.’
அவள் கன்னம் தடவி,
‘நீங்க ரெண்டுபேரும் என் கண் முன்னாடி சந்தோஷமா இருந்தாலே நான் அதைப் பார்த்து சரியாகிடுவேன். அதுக்கு என்ன பண்ணலாம்னு பாரு.”
கூறிவிட்டு அவரும் உள்ளே செல்ல, இவளும் ‘அதற்குத்தான் வழி தெரிலயே’ யோசித்தவாறே அன்றைய நாளையும் கடத்தினாள்.