Rose – 11

418-6GbN9bL-122cede4

அத்தியாயம் – 11

அன்றைய காலைப்பொழுது ரம்மியமாக விடிய, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில்லென்ற தென்றல் காற்றில்  அசைந்தாடிய மரத்தின் கிளைகளில் இருந்த உதிர்ந்த பூக்களோ, பச்சைப் பசையேல் என்ற புல்வெளியின் அழகினை மெருகேற்றிக் காட்டியது.

வெகுநாட்களுக்கு பிறகு மீனா தந்த காஃபியை ரசித்துப் பருகிய யாதவ், மெல்ல நடந்து சென்று தோட்டத்தில் அமர்ந்தான். தன்னைச் சூழ்ந்திருந்த குழப்ப மேகங்கள் விலகி நெஞ்சமெங்கும் ஒருவிதமான நிம்மதி பரவியது. ஆனாலும் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் அவளின் நினைவுகள் வந்து செய்த தவறை உணர்த்தி மனதை வதைத்தது.

தன் மகன் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “என்னப்பா இங்கே வந்து உட்கார்ந்துட்டே! ஹோஸ்பிட்டல் போகலையா?” என்றபடி வந்த தாயைப் பார்த்து அவனின் முகம் பிரகாசமானது.

“அப்பா இறப்பிற்கு பிறகு எனக்குள் நானே இறுகிப் போயிட்டேன். மற்றவர்களுக்காக வெளியே சிரித்தாலும், நெஞ்சினில் ஏதோவொரு வெற்றிடம் இருக்கும். வெகுநாட்களுக்கு பிறகு இன்னைக்கு தான், மனசு ரொம்ப லேசாக இருக்கு” இலக்கின்றி வானத்தை வெறித்த மகனைக் கனிவுடன் நோக்கினாள் மீனா.

அந்த பார்வையில் இருந்த வெறுமை மனதை பாதிக்க, “யாழினி புதுசாக வீடு வாங்கி பால்காய்ச்சி போகிறாள். அங்கே போகலாம்னு நினைக்கிறேன். நீயும் வருகிறாயா?” அவனை ஓரவிழிகளால் அளவிட்டபடி கேட்க, அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

சில காலமாக அவள் எடுக்கின்ற முடிவுகளை நினைத்து தலைவலி ஒருபக்கம் முணுக்கென்றது.  தன்னவளின் திடீர் முடிவு மனதை பதைபதைக்க வைத்திட, “ராம் வீட்டில் இருப்பதில் அவளுக்கென்ன பிரச்சனை?” யாதவ் பல்லைக் கடிக்க, அவனது மனதை நொடியில் படித்துவிட்டாள் மீனா.

“ராம் குடும்பத்துடன் இருப்பது அவளுக்கு பாதுகாப்புன்னு நீ நினைக்கிற, மத்தவங்க கண்ணுக்கு அது தவறாகத்தான் தெரியும். நம்ம மனசில் கள்ளம்கபடம் இல்லை என்றாலும், ஊரில் இருக்கிறவங்க பேசியே இல்லாததை இருக்குன்னு ஒத்துக்க வச்சிடுவாங்க” பேச்சைப் பாதியில் நிறுத்த, அவன் அதிர்வுடன் தாயைப் பார்த்தான்.

“இதே நிலை தொடர்ந்தால், பின்நாளில் யாழினியை தன் மகனுக்கு மணமுடிக்கும் எண்ணம்கூட ராம் பெற்றோர்களுக்கு வரலாம். இதற்கு இடம் கொடுத்தால், பாதிக்கப்பட போவது உங்க மூவரோட வாழ்க்கை தானே?” தாயின் கேள்வியில் இருந்த நியாயம் மூளைக்கு புரிந்த போதும்,  யாதவின் காதல் மனம் அந்த கருத்தை ஏற்க மறுத்தது.

“அவங்க இருவரும் அண்ணன் – தங்கை தான்!” உள்ளே சென்றுவிட்ட குரலில் கூறிய மகனைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தாள் மீனா.

ஏற்கனவே தன்னவளின் முடிவை நினைத்து கவலையுடன் அமர்ந்திருந்த யாதவ், “ப்ச்! இப்போ எதுக்காக சிரிக்கிறீங்கம்மா?!” என்றான் எரிச்சலோடு.

“ஒவ்வொரு முடிவுக்கு பின்னாடியும் உன்மீதான காதல் இருக்குன்னு உனக்கு புரியலையா?” என்றவர் ஆழ்ந்த குரலில் கேட்க, சடாரென்று திரும்பி தாயைப் பார்த்தான்.

தன் மகனின் முகத்தை நிதானமாக ஏறிட்டு, “உதட்டளவில் வெறுப்பும், உள்ளத்தில் பாசமும் வைத்திருப்பது பெண்களின் குணம்! மென்மையான பெண்ணை இப்படி பேச வைத்தவன் நீதான். அதை நீதான் சரி பண்ணணும்” என்ற மீனா எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட, சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தான் யாதவ்.

தன்னுடைய உடமைகளை எடுத்து பெட்டியில் அடுக்கும் வேலையில் மதுரயாழினி மும்பரமாக ஈடுபட்டிருக்க, “என்ன செஞ்சிட்டு இருக்கிற?” கையில் காஃபியுடன் அறைக்குள் நுழைந்தாள் வைஜெயந்தி.

அவரைப் பார்த்தும் உதடுகளில் புன்னகை அரும்பிட, “என்னோட நிறுவனத்திற்கு பக்கத்திலேயே விலைக்கு வந்த வீட்டை வாங்கிட்டேன். இன்னைக்கு பால்காய்ச்சிவிட்டு மற்ற பொருட்களை எல்லாம் வாங்கி ஒழுங்குபடுத்திவிட்டால் போதும்மா…” என்றவள் இயல்பாகக் கூற, சட்டென்று அறைக்குள் நுழைந்த ராம்குமாரின் முகம் கோபத்தில் சிவந்தது.

அவனது பார்வையைக் கண்ட யாழினி உதட்டைக் கடித்து மெளனமாக, “நீ நினைக்கிற மாதிரி இந்தியா கிடையாது. இங்கே ஒரு பெண் தனியாக இருப்பது எவ்வளவு கஷ்டம்னு புரியாமல் எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவெடுத்துட்டு இருக்கிற” என்றான்.

தன் மகனின் பேச்சினில் இருக்கும் நியாயம் உணர்ந்து, “கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு இங்கே பாதுகாப்பு கிடையாதும்மா. நாங்க உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம்” அவளை தடுத்துவிடும் நோக்கத்துடன் வைஜெயந்தி கூற, அதை காதிலேயே வாங்காமல் நின்றாள் யாழினி.

“எனக்கு உறவென்று சொல்ல இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களையும் இழக்க நான் தயாராக இல்லம்மா. இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி இருக்கிறேன். அதுதான் எல்லோருக்கும் நல்லது” காரணத்தையே சொல்லாமல் அவரை சமாதானம் செய்தாள்.

ராம்குமாரிடம் பார்வையால் அவள் கெஞ்சிக் கேட்க, “அவளோட விருப்பம் போல செய்யட்டும் அம்மா” அறையைவிட்டு கோபத்துடன் வெளியேற, அவனைத் தடுத்தது யாழினியின் கணீர் குரல்.

“தங்கச்சி புது வீட்டுக்குப் போறேன். எனக்கு தேவையான பொருள் எல்லாம் கடையில் வாங்கணும் ராமண்ணா. பிளீஸ் இன்னைக்கு ஒருநாள் மட்டும் லீவ் போடுங்க” என்றாள் குறும்புடன்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமை காற்றில் பறக்கவிட்டு, “இதுக்கு மட்டும் நாங்க வேணுமா? நான் இன்னைக்கு கண்டிப்பா ஹோஸ்பிடல் போகணும்” பிடிவாதத்துடன் கூறிய தமையனைப் பார்த்து பழிப்பு காட்டிவிட்டு, பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பினாள்.

“அம்மா லீவ் நாட்களில் நான் இங்கே வந்துவிடுவேன். நீங்களும் டைம் கிடைக்கும்போது வீட்டுக்கு வாங்க” வைஜெயந்தியிடம் சமாதானம் செய்தபடி, வீட்டின் வாசலை நெருங்கினாள்.

 நியூஸ் பேப்பரைப் புரட்டிய சிவசந்திரன், “என்ன யாழினி எங்கே கிளம்பிட்டே?!” அவளின் கையில் இருந்த பெட்டியைப் பார்த்தபடி விசாரித்தவர், சட்டென்று எழுந்து வந்தார்.

வைஜெயந்தியின் பார்வை கணவனின் மீது அழுத்தத்துடன் படிந்து மீள, “அவளோட வீட்டுக்குப் போறாளாம். நம்மள அங்கே வந்து பாருங்கன்னு சொல்ற…” பல்லைக் கடித்த மனைவியின் பேச்சின் சாராம்சம் புரியவே, அவரின் முகமும் கடுகடுவென்று மாறியது.

“நீ கம்பெனிக்கு இங்கிருந்தே போ… தனிவீடு எல்லாம் சரிவராது” அவளுக்கு கட்டளையிட, “ஏன்” என்றாள் சின்னவள்.

“இது அமெரிக்கா கிடையாதும்மா.இங்கே பெண்கள் தனியாக இருப்பதைக் கண்டால், ஊரே உங்களைத்தான் தப்பும் தவறுமாக பேசும். சில ஆண்கள் வரம்பு மீறி நடக்கும்போது, அவங்களைத் தடுக்க உன்னால் முடியாது. பிரச்சனை நிறைய வரும் சொன்னால் புரிஞ்சிக்கோ” சிறுபிள்ளைக்கு சொல்வதுபோல பொறுமையாக கூறினார் சிவசந்திரன்.

அவரது பேச்சில் இருந்த அக்கறை மனதைத் தொட, “அப்பா எனக்கு எந்த பிரச்சனையும் வராது. அதனால் நீங்க கண்டதையும் நினைத்து மனசைக் குழப்பிக்காதீங்க” கலங்கிய விழிகளை பிறர் அறியாமல் துடைக்க, அவளது பெட்டியை எடுத்துசென்று காரின் டிக்கியில் வைத்து மூடினான் ராம்குமார்.

மூவரின் வாக்குவாதம் கேட்டு சிந்தனையில் இருந்து மீண்டவன் பார்வை தன்னவளின் மீது படிந்தது. எந்தவிதமான ஒப்பனைகளும் இன்றி பால்நிலவு போல ஜொலித்த முகம் கண்டு, ‘எதுக்கு இந்த பிடிவாதமோ?!’ மனதினுள் நினைத்த யாதவ் எழுந்து வீட்டிற்குள் சென்றான்.

“மதுராவைக் கொண்டுபோய் விட்டுட்டு வந்துவிடுகிறேன்” காரின் முன்பக்கம் கதவைத்திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தான் ராம்குமார்.

“நம்ம எல்லோரும் சேர்ந்தே போகலாம்” தன் மனவருத்தத்தை மனதோடு மறைத்துவிட்டு வைஜெயந்தி கூற, சின்னவளின் முகம் பூவாக மலர்ந்தது. பெற்றோர்  வீட்டினுள் சென்று மறைய, காருக்குள் அமைதி நிலவியது.

சிறிதுநேரத்தில் அவர்களும் தயாராகி வந்து காரில் ஏற, ராம்குமார் ஸ்டார்ட் செய்தான். அந்த பயணத்தில் ஒருவரையொருவர் விளையாட்டாக பேசியபடியே செல்ல, யாழினி புதிதாக வாங்கியிருக்கும் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான்.

அவளது உடமைகளை எடுத்து வீட்டின் முன்பு வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, காம்பவுண்ட் சுவருடன் கூடிய அழகிய வீடு அனைவரின் மனதையும் வெகுவாகக் கவர்ந்தது. அதுவும் பாதுக்காப்பிற்காக வீட்டின் முன்பு பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமரா பார்த்த பிறகே ராம்குமாரின் முக, தெளிந்தது.

வாசலில் நிழலுடன் கூடிய வரண்டாவில் மர ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது.  வீட்டின் முன்பு இடம் காலியாக இருக்க, அதை சுத்தம் செய்ய ஆள்களை நியமித்து இருந்தாள் யாழினி. ஒரு ஹால், சமையலறை, பூஜையறை மற்றும் படுக்கையறையுடன் அட்டாச் பாத்ரூம் இருந்தது.

சிவசந்திரன் – வைஜெயந்தி, ராம்குமார் மூவரும் வீட்டைச்சுற்றி பார்க்க யாரோ கேட்டின் கதவு திறக்கும் சத்தம்கேட்டு வாசலை நோக்கினாள் யாழினி.

வயதான தம்பதிகள் நுழைவதைக் கண்டு வாசலுக்குச் சென்று, “வாங்கம்மா – வாங்கப்பா” அவர்களைப் புன்னகையுடன் வரவேற்றாள்.

“யாழினி வீடு ரொம்ப அம்சமாக இருக்கும்மா” என்றபடி அங்கே வந்த வைஜெயந்தியிடம் அவர்களை அறிமுகம் செய்து வைக்க நினைத்தாள்.

அவர்களைப் பார்த்ததும் மற்ற மூவரின் முகமும் மலர, “சௌந்தர்யா எப்படி இருக்கிற…” வைஜெயந்தி ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்டார். சிவசந்திரன் ஆனந்தனின் கரம்பற்றி விசாரிக்க, அதை விழிவிரிய நோக்கிய யாளிணியைக் கண்டு சத்தமில்லாமல் சிரித்தான் ராம்குமார்.  

“என்ன முழிக்கிற! உனக்கு இவங்களை இப்போதான் தெரியும். எங்களுக்கு எல்லாம் சின்ன வயதில் இருந்தே தெரியும்” ராம்குமார் விளக்கம் கொடுக்க, மற்றவர்களின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது.

தன் பின்னந்தலையில் தட்டிய யாழினி, “இதே ஊரில் இருக்கும் உனக்கு தெரியாமல் இருக்குமா? நான்தான் யோசிக்காமல் பல்பு வாங்கிட்டேன்” என்ற சொல்ல, அவளது பேச்சில் அங்கே சிரிப்பலை பரவியது.

“சரி பால்காய்ச்ச தேவையான பொருள் எல்லாம் எடுத்து வைக்கலாம் வா” சௌந்தர்யா கையோடு எடுத்து வந்த பொருட்களோடு சமையறைக்குச் செல்ல, மற்ற இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ஆனந்தனின் கனிந்த பார்வை யாழினியின் மீது படிவத்தைக் கண்ட சிவசந்திரன், “என்ன இப்படி பார்க்கிற?” என்று விசாரிக்க, அவரும் நடந்ததை சொல்ல தொடங்கினார். மீனலோட்சனி நிர்வாகம் கைமாறியதை அறிந்ததும், அந்த வேலையை விட்டுவிட முடிவெடுத்தாள் சௌந்தர்யா.

“யாழினி எங்க வீட்டைத்தேடி வந்து, எனக்கு இந்த தொழிலைப் பற்றி தெரியாது. உங்க அனுபவமும், வழிகாட்டுதலும் கட்டாயம் எனக்கு வேணும்” ஆனந்தன் இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“எங்களால் மறுக்க முடியாமல் நின்றபோது, என்னை உங்க மகளாக நினைச்சுக்கோங்க. உங்களுக்கு எந்தவிதமான நெகட்டிவ் எண்ணமும் வராது” என்றவளின் வார்த்தையைக் கேட்டு விழிகளிரண்டும் சட்டென்று கலங்கியது.

ஆனந்தனின் தோளைத் தட்டிக் கொடுக்க, “எங்க முதல் குழந்தை கருவிலேயே கலைந்து போனதில் நான் ரொம்பவே நொடிந்து போயிட்டோம். அன்னைக்கு அந்தப் பொண்ணு சொன்ன வார்த்தை மனசை நெகிழ வச்சிடுச்சு” என்றபோது அவரின் விழிகளில் லேசாக கண்ணீர் திரையிட்டது.

உடனே சிவசந்திரனின் கவலையைப் போக்க நினைத்த சிவசந்திரன், “வயசுப் பொண்ணு எங்க வீட்டில் இருக்க முடியாதுன்னு இங்கே வந்துவிட்டாள். இனி நீங்கதான் அவளைப் பத்திரமாக பார்த்துக்கணும்” யாழினி மீதான அக்கறையில் சொல்ல, அதை ஆமோதிக்கும் விதமாக அவனை ஒருமுறை கட்டியணைத்து விலகினார் ஆனந்தன்.

மீனலோட்சனி மற்றும் யாதவ் காரில் வந்து இறங்குவதைக் கண்ட ராம்குமார், “வாங்க ஆன்ட்டி” என்றவன், “வாடா நல்லவனே!”  அவரின் பின்னோடு வந்த யாதவ் தோளில் கைபோட்டபடி வீட்டினுள் அழைத்துச் சென்றான்.

“உன் தங்கச்சிக்கு என்ன பைத்தியமா? அவ்வளவு பெரிய வீட்டைவிட்டு இங்கே வந்து எதை சாதிக்க போகிறாள்?” நண்பனிடம் எரிச்சல்பட்டான் யாதவ்.

அவனை ஏறயிறங்க ஒரு பார்வை பார்த்த ராம்குமார், “இதில் மட்டும் அவ உன்னை மாதிரியே இருக்கிறாடா… அவளால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு நல்ல யோசித்து இந்த முடிவெடுத்து இருக்கிறா” வேண்டுமென்றே கூற, யாதவின் முகம் கோபத்தில் சிவந்தது.

இத்தனை நாளாக தன்னவள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்ற எண்ணத்தில், தானுண்டு தன் வேலையுண்டு என்று நிம்மதியாக இருந்தான். இன்று காலை மீனாவின் மூலமாக அவள் தனியாக வீடெடுத்து தங்கும் விஷயமறிந்து அவன் மனம் நிலையின்றி தவித்தது.

“இதென்ன அமெரிக்கா வா… அவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னா, அந்த சமயத்தில் யார் வந்து காப்பாற்றுவார்?” அடுத்த கேள்வியைத் தொடுத்த யாதவை வேற்றுகிரகவாசியைப்போல பார்த்தான் ராம்குமார்.

அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன்பு, “சரி எல்லோரும் வாங்க” அதட்டியபடி அங்கே வந்த யாழினி முகம் பளிச்சென்று பிரகாசமாகி சட்டென்று இருளடைந்தது.

எதிர்பாராத விதமாக சந்தித்த அதிர்ச்சியில் மூச்சுவிட மறந்து நின்ற தன்னவளைப் பார்த்தும் இமைக்க மறந்தான் யாதவ். பச்சை நிற பட்டுப்புடவையில் அழகு ஓவியமாகத் திகழ்ந்தவளைக் கண்டு அவன் கோபம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனது.

என்ன என்பதுபோல யாதவ் புருவத்தை ஏற்றியிறக்க, அதில் தன்னிலைக்கு மீண்டாள் யாழினி. “வாங்க ஆன்ட்டி” புன்னகையுடன் வரவேற்றவள் சமையறைக்குச் செல்ல, யாதவ் பார்வை அவளைப் பின்தொடர்ந்தது.

யாழினி பாலைக் காய்ச்சி எடுத்து வந்து பூஜையறையின் புகைப்படங்களின் முன்னே வைக்க, அனைவரும் அங்கே வந்து நின்றனர். வைஜெயந்தி சொல்வதை உள்வாங்கிச் செய்யும் யாழினியைக் கனிவுடன் பார்த்தனர்.

அனைத்தும் நல்லபடியாக முடியவே, “சரி நாங்க கிளம்பறோம்” என்று ஆனந்தன் – சௌந்தர்யாவும் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  

வீட்டிற்குத் தேவையான பொருட்களை அருகில் இருக்கும் ஃபர்னிச்சர் கடையில் ஆர்டர் கொடுக்க, மற்றவர்கள் சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

எந்த பொருட்களை எங்கே வைப்பது என்ற சிந்தனையுடன் வீட்டைச் சுற்றி வந்த யாழினியிடம், “இது என்னோட ஸ்மால் கிப்ட்” யாதவ் அவளிடம் கொடுக்க, அதை வாங்காமல் அவனை முறைத்ததாள். அதுவொரு போட்டோ பிரேம் என்பது மட்டும் புரிய, அதை வாங்கி திறந்து பார்த்தாள்.

அவளுடைய பெற்றோரின் புகைப்படத்தை கொஞ்சம் பெரிது செய்து பிரேம் போட்டு எடுத்து வந்திருந்தான். அதைப் பார்த்து விழிகள் இரண்டும் கலங்கிட, “தேங்க்ஸ்!” என்றவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

இந்த காட்சியை தள்ளி நின்று ரசித்த ராம்குமார், “எல்லாமே சீக்கிரம் சரியாகணும்” மனதில் நினைத்துகொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அவர்கள் அனைவரும் விடைபெற்றுக் கிளம்பிச் செல்ல, அவளைச்சுற்றி தனிமை சூழ்ந்தது.