ஆதிரையன்-அத்தியாயம்06
ஆதிரையன்-அத்தியாயம்06
Epi6
காலை விடியலே அடைமழையோடு ஆரம்பித்திருந்தது. அலுவலகம் செல்ல தயாராகி அமர்ந்திருந்த அதிதியின் எண்ணமெல்லாம் நேற்று இரவு வந்த அழைப்பை பற்றியே சுற்றிகொண்டிருந்தது…
“என்னம்மா நல்லா இருக்கியா?
நம்மபய வந்து சொல்லவும் ரொம்பவே சந்தோஷம். நம்ம குமரனோட பொண்ணு இவ்வளவு பெரிய பதவியில இருக்குன்னதும் நம்மளுக்கும் பெருமை தானே. கண்டிப்பா நாளைக்கே நாம பார்க்கணுமே. நல்ல விடயங்களை தள்ளி போடக்கூடாது இல்லையா?
ஒருவிஷயத்தை தள்ளி போடுட்டதாலத் தான் இன்னிக்கு பிரச்சினையா வந்து நிக்குது. சரி கண்ணு நாம நாளைக்கு பார்க்கலாம். அப்ப வச்சிரவா?”
நேற்று அதிதி வீடு வந்து மாலைப்பின்னே அமைச்சர் அழகன் அழைத்திருந்தார். அவளை பேசவிடவே இல்லை. அவரே பேசி வைத்திருந்தார்.’இன்று என்ன ஆகுமோ?’ சற்றே படபடப்பு இருந்தாலும் தன் தைரியத்தை விடாமல் பற்றிக்கொண்டாள்.
அமைச்சர் அழகனின் பிஏ அதிதியை சந்தித்து விட்டு வந்தவர்,
“அமைச்சரே அந்த பொண்ணு ரொம்ப பேசுது.உங்களை வேணும்னா அவளை பார்க்க வாங்கன்னு சொல்லுறா. அப்டின்னா ஏதாச்சும் பண்ணலாம்னு பேசுறா.”
அமைச்சர் அழகனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்…
“வேறெதாவது சொன்னாளா?”
“நீங்க அதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேணாம் அமைச்சரே. நீங்க போய்தான் அந்த வேலை நடக்கணுமா என்ன? நான் அந்த பொண்ணுகிட்ட சொல்விட்டுதான் வந்தேன், ‘இங்கெல்லாம் அமைச்சர் வரணும்னு இல்லை, அவருக்கு என்ன பண்ணவேண்டும் என்று நன்றாக தெரியும்னு.'”
“ஆனா ஒன்னு அமைச்சரே, ‘நான் சொன்னேன்னு போய் சொல்லுங்க, அமைச்சர் நாளைக்கே என்னை பார்க்க வந்துருவாங்கன்னு சொன்னா.”
சிரித்த அமைச்சர், “இள ரத்தம்ல, அதான் இப்டில்லாம் பேசுது போல.”
“அது என்னவோ, அதிதி அருள் குமரன்னு சொல்லுச்சி.”
“என்னடா சொல்ற?”
“ஆமாங்க அமைச்சரே. என் பேர் சொல்லுங்க இப்போவே போலாம்னு சொல்லுவார் கையோட கூட்டி வாங்கன்னு சொல்லுச்சு.”
“டேய், இப்போ எப்பிடிடா போகமுடியும், நாளைக்கு காலைலேயே போக ஏற்பாடு பண்ணு. யாருக்கும் சொல்லிட்டு இருக்காத, ஊருக்கு போறதா இருக்கட்டும். வீட்லயும் அவ முன்னாடி இதைப்பற்றி பேசிறாத.”
“வந்ததும் இதை தானே நீ சொல்லிருக்கணும், அத விட்டுட்டு என்னென்னவோ பேசிட்டு இருந்த.”
அழகனின் முகத்தில் குழப்பங்கள், இருந்தும் அவளால் செய்திட ஒன்றும் இல்லை, தன் வசம் அனைத்தும் சரியாகவே இருக்கிறது. இருந்தும் அவளை சந்தித்து பேசுவதும் இப்போதைக்கு அவசியம் என்று முடிவெடுத்தார்.
“அமைச்சரே எதாவது சிக்கலா?”
“அப்டில்லாம் ஒன்றுமில்லை. என் நண்பனோட பொண்ணு, அதான் பேர் சொல்லி சொல்ல சொல்லிருக்கா. ரொம்ப வருஷம் முன்ன பார்த்தது. ஓரெட்டு போய் பார்த்துட்டு வந்துரலாம்.”
“சரிங்க. “
அடுத்த நாள் விடியலையும், அதிதியை சந்திக்கும் நேரத்தினையும் கணக்கிட்டுக்கொண்டு காத்திருந்தார் அமைச்சர் அழகன்.
அதிதி அலுவலகம் செல்ல அரைமணிநேரம் தாமதமாகி இருந்தது. இடிமின்னலோடு மழைக்கூடிக்கொண்டே சென்றதைத் தவிர சற்றும் குறையவில்லை.அவள் அறை யன்னலினூடே வெளியே பார்வை பதித்திருந்தவள் ஆனந்தனின் அழைப்பில் அவள் இருகைக்கு வந்து அமர்ந்தாள்.
“என்ன ஆனந்தன்?”
“அம்மா, அமைச்சர் வந்திருக்காங்க.”
அதிதியின் முகத்தில் தெரிந்தது, பயமா;பதற்றமா;ஆச்சர்யமா பிரித்தறியா பாவனையை வெளிப்படுத்தினாள்.
சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள்,
“உள்ள வரச்சொல்லுங்க ஆனந்தன். “
“இல்லம்மா அவர் வண்டிலேயே இருக்கார். அவரோட பி.ஏ தான் நீங்க வந்து அழைத்தால் நல்லா இருக்கும்னு… “
“என்னை பார்க்கத்தானே வந்திருக்காங்க.
விருப்பம்னா உள்ளே வரச் சொல்லுங்க ஆனந்தன். எனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல மீட்டிங் இருக்குனு சொல்லுங்க.”
ஆனந்தன் யோசனையாகவே வெளியில் வர, “என்னைய்யா உங்க மேடம் வர்ராங்களா? “
“இன்னும் பத்து நிமிஷத்துல அவங்களுக்கு மீட்டிங் இருக்கு, அதுக்கு முன்ன வர முடியும்னா அமைச்சரை வர சொல்லச் சொன்னாங்க.”
“ஓஹ்! அவ்வளவு திமிரேறிப்போச்சு. இரு வரேன்.” என கோபமாய் வெளியில் சென்று அமைச்சர் வந்திருந்த வண்டியின் பின்பக்க கதவின் அருகே குனிந்து எதுவோ கூற, அமைச்சர் கதைவைத் திறந்துகொண்டு இறங்கினார்.
விடாது அடைமழை பொழிந்துக் கொண்டு இருப்பதால் அமைச்சரின் வரவு அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திட, அவர்களுக்குமே ஆச்சர்யம் தான்.
அமைச்சர் அழகன் முன்னே நடக்க அவரைத் தொடர்ந்து அவரது பிஏ வும் பின்னோடு சென்றார்.அலுவலகத்தில் இருந்த ராம் எழுந்துச் சென்று பேசினால் தன்னை அதிதி கண்டுக்கொள்ளக் கூடும் என்று அவர் இருக்கை விட்டு நகரவில்லை.
அதிதியின் அறைக்கதவை அனுமதி வேண்டி தட்டிவிட்டு தானாகவே திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் அழகன்.
அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவள் அவர் உள்ளே நுழையவும்,” சரிண்ணா நான் கொஞ்சம் கழிச்சு உங்ககூட பேசுறேன்.” என்றவள் அலைபேசியை வைத்தாள். வைத்தவள் மரியாதை நிமித்தம் எழுந்து இரு கை கூப்பி,
“வணக்கம் சார்.உட்காருங்க.” என அவள் முன்னிருந்த இருக்யை காட்டி அமருமாறு அழகனைக் கூறினாள்.
“எப்டிம்மா இருக்க? ரொம்ப சின்னதா இருக்கப்ப பார்த்தது.”
புன்னகைத்தவள்,
“ரொம்ப நல்லா இருக்கேன்.”
“அப்றம், அம்மா எப்டி இருக்காங்க? “
“அம்மா?’
‘ஹ்ம்ம் ரொம்ப நல்லாவே இருக்காங்க.”
“சரி சார்,என்ன விஷயமா பார்க்க வந்திங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? “
“என்னோட நிலம் சம்பந்தமான விடயம் தான்மா.சில பத்திரங்கள் நீ… “
“என்ன? “
“என் பிஏ நேற்று நீங்க சில பத்திரங்கள் கேட்டதாக வந்து சொன்னார். அதனோட பத்திரங்கள் எல்லாமே எங்கிட்ட சரியாத்தான் இருக்கு. உங்ககிட்ட அதை நிரூபிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. ஆனால் நம்ம அருள் பொண்ணுன்னதும், நீங்க கேட்டு நான் காமிக்கலைன்னா நல்லா இருக்காதுல. அதான் கையோட காமிச்சிட்டு, அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.”
“ஓஹ்!அந்த இடத்தோட தகவல் திரட்றப்ப உரிமையாளர் பெயர் வேறு ஏதோ இருந்தது. அதான் நான் கொஞ்சம் குழம்பிட்டேன்.
“அதுவா? அது உங்க அப்பா…”
“அமைச்சரே, நான் இப்போ இங்க கலெக்டர் மட்டும் தான். நீங்க அமைச்சர் அழகன் மட்டும் தான். மேல சொல்லுங்க.”
அழகனுடைய முகம் கோபத்தில் சிவந்து போக, அருகே நின்றிருந்த பிஏ எதுவோ கூற வாயெடுக்க கை காட்டி அவரை தடுத்து,
“அந்த நிலங்கள் என்னோட நண்பன் ஒருத்தன் அந்த ஊர்ல வட்டிக்கு பணம் தர ஒருத்தர்கிட்ட அடமானம் வச்சுட்டான்.அப்றம் அவனால அதை மீட்ட முடில, திடீர்னு இறந்தும் போய்விட்டதால் அதை மொத்தமா நானே மீட்டு எடுத்துட்டேன்.
“எதற்காக இடங்களை அடமானம் வச்சாங்க உங்க நண்பர்?”
அதிதியை கூர்ந்து பார்த்தார் அழகன்.
“சொல்லுங்க அமைச்சரே எதுக்கு? “
“அவனுடைய தொழில் தேவைக்கு. “
“அப்போ,உங்ககிட்ட இருக்க உங்க நிலத்தை அடுத்து இருக்க அவர் அடமானம் வைக்காத நிலங்கள் எப்படி உங்களுக்கு உரிமை ஆச்சு?”
“அந்த நிலங்களுக்கு நான்தான் பொறுப்புனு அப்போவே எனக்கு எழுதி கொடுத்திருக்கான்.”
“அந்த பத்திரத்துல,அந்நிலங்களுக்குன்னு மட்டும் இருக்கா இல்ல அருள் குமரன் பொண்ணோட சொத்துக்களுக்கு பாதுக்காவலர்னு சேர்த்து சொல்லிருக்கா? “
அமைச்சரிடம் வார்த்தையில்லை.
“அமைச்சரே என்ன பதில் இல்லையா? “
“நான் இத்தனை வருடங்கள் அரசியல் பண்ணிட்டு இருக்கேன். என் மேல துளிக்கூட கறை இல்லை. ஏன்னா, அத்தனை சுத்தமா, என் இருக்கைக்கு உண்மையா நடந்துட்டு வரேன்.”
“நான் உங்களோட அரசியல் வாழ்க்கை பற்றி கேட்கவே இல்லை. எனக்கு தேவையும் இல்லை. நான் உங்களுக்கு ஓட்டு போடவும் இல்லை.அதுபோக, உங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நல்லது பண்றீங்க
அது உங்க கடமை தானே.”
“நீங்க கட்டணும்னு நினைக்குற தொழிற்சாலை அந்த இடத்துல உங்களால கட்ட முடியாது. “
“அதுக்கு நான் ஏற்கனவே அப்ரூவல் வாங்கிட்டேன்.”
“தெரியுமே. அந்த இடத்துல நீங்க இப்போ பண்ணனும்னு நினைக்குற தொழில் ஏற்கனவே எட்டு வருடங்களா நடந்துக்கொண்டு இருப்பதாகவும் உங்ககிட்ட பத்திரங்கள் பத்திரமா இருக்குன்னும் தெரியுமே.”
அதிதியின் மேசையில் கண்ணாடிக் குவளையில் மூடிவைத்திருந்த தண்ணீரை அவராகவே எடுத்து பருகியவர்,
“எனக்கு இப்படி உட்கார்ந்து உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கவெல்லாம் நேரமில்லை. அந்நிலங்கள் இப்போ என்கிட்ட இருபது வருடங்களாக இருக்கு. அதுல என் பையன் இப்போ தொழில் பண்ணிட்டு இருக்கான். உனக்கு உன்னோட இடத்தை பிரிச்சு கொடுத்துர்றேன். என்னோட தொழில் விஷயங்கல்ல தலையிடறது இதுவே கடைசியா இருக்கட்டும்.
“இத்தனை சுத்தமான நேர்மையான அரசியல் மனிதர் தன்னை உயர்த்தி விட்டவனை மதிக்க வேணாம், மிதிக்காம இருந்திருக்கலாமே.”
“என்ன பேசுற நீ? நான் எப்போவும் அப்படி நடந்துகொண்டதில்லை.”
“சரிங்க அமைச்சரே. என்கிட்ட அந்த நிலங்களோட மூலப்பத்திரம் அப்றம் அதனோட விவரங்கள் இருக்கு. நீங்களா திருப்பி கொடுத்தீங்கன்னா பேசாம வாங்கிட்டு போய்டுவேன். நானா எடுத்தேன்னா உங்களுக்குத்தான்… “
“என்ன பொண்ணு நீ, இவ்வளவு படிச்சிருக்க சின்னப்புள்ளத்தனமா பேசிட்டு இருக்க. எத்தனை காலமா அதுல தொழில் பண்ணிட்டு இருக்கேன். மாசம் லச்சதுல வருமானம் வந்துட்டு இருக்கு. உங்கப்பா இருக்கப்ப இருந்த நிலமில்லை இப்போ. லட்சங்கள் நான் அதுல நட்டிருக்கேன். “
அந்த நிலத்துக்கு நீங்க தர வட்டியா அதை வச்சுக்குறேன் அமைச்சரே. சீக்கிரமா என் கைக்கு என் நிலம் வர்றதுக்கு வழி செய்யுங்க.’
‘இல்ல வட்டியெல்லாம் தரமாட்டேன் அப்டின்னு நினைச்சீங்கன்னா உங்க தொழிற்சாலை இடிச்சிட்டு நிலமாவே திருப்பி கொடுத்துருங்க. “
“ஹேய்..”
கர்ச்சித்துக்கொணடு எழுந்த அழகன்,
“உன்கிட்ட பேச வந்திருக்கவே கூடாது. போனாப்போகுதேன்னு வந்தா, உனக்கு சாதகமா எடுத்துப்பியா? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. உன்னை நம்ப இங்க யாரும் இல்லை. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்.”
கூறியவர் கதவை திறந்துக் கொண்டது வேகமாக வெளியேறிவிட்டார்.
வெளியே அடை மழை நில்லாது பொழிந்துக்கொண்டிருக்க, அதிதியின் மனதில் இத்தனை நாள் சேர்த்துவைத்திருந்த ரணங்களில் சில இறங்கி மனம் இலகுவானதாய் உணர்ந்தாள்.இருந்தும் மனதில் ஏதோ சஞ்சலம். அன்றைய நாள் முழுவதும் தான் பேசியதில் ஏதும் பிழைகள் உண்டா என தான் பேசியவற்றை பலமுறை மீட்டி பார்த்துக்கொண்டே இருந்தாள் அதிதி. மதியத்தோடு அன்று வீடு திரும்பியிருந்தாள். மழை சற்றே மட்டுப்பட்டிருந்தாலும் பெய்து கொண்டுதான் இருந்தது. மணி மூன்றிருக்கும் ஆனந்தன் அழைத்திருந்தார்.
“ஹலோ அங்கிள் சொல்லுங்க. “
“ம்மா, அமைச்சர் நம்ம ஆபிஸ்ல இருந்து போறப்ப அக்சிடன்ட் ஆகிட்டாராம்.”
“என்ன சொல்றீங்க? “
“ஆமாம்மா.ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல அட்மிட் பண்ணிருக்காங்கலாம். பிலைக்குறதுக்கு வாய்ப்பில்லைனு சொல்லிக்கிறாங்க.”
“யாரு உங்களுக்கு சொன்னா? “
“நம்ம ராம் தன்மா, அதோட இப்போதைக்கு டிவி எல்லாம் அவரோட செய்தி தான்மா.”
“நான் பார்க்குறேன் அங்கிள்.”
“ம்மா, நம்ம ஆபீஸ்க்கு வந்துட்டு போறப்பதான்னு சொல்ராங்க, அதோட யாரோ விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தி இருக்காங்கன்னு வேற செய்தில சொல்லிட்டு இருக்காங்க.”
அதிதியின் கைகளில் நடுக்கம்.உடலில் ஏதோ ஓர் பதற்றம்.எத்தனை கேள்விகள் எழும். படப்படப்போடு பேச்சும் வரவில்லை.
“அம்மா இருக்கீங்களா?”
“ஹான்… இருக்கேன், சரி அங்கிள்,நான் கொஞ்ச நேரத்துல கால் பண்றேன். “
அலைபேசியை வைத்தவள் அப்படியே மடிந்து அமர்ந்தாள். அரசியல் புள்ளிகளோடு மோதிடல் அத்தனை எளிதல்ல.அத்தோடு அவரோடு போரிடும் நோக்கத்தில் இவள் இந்த சொத்துக்களை எடுக்க நினைக்கவும் இல்லை. இப்போது எழும் கேள்விகளுக்கு பதில் எங்கு தேடுவாள், தனக்கு யார் துணை, அப்படியே அமர்ந்திருந்த வாக்கில் தொலைக்காட்சியையும் உயிர்ப்பித்தாள்.
அவள் பார்க்கவுமே அவள் கண்களுக்கு தெரிந்தது ‘அமைச்சர் அழகனின் மகன் ஆதிரையன்.’எனும் ஒலியோடு ஆதிரையனின் முகம் மட்டுமே.நிரூபர்கள் எதுவோ கேட்க விளக்கம் அளித்துக்கொண்டிருந்தான்.அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்றெல்லாம் இவள் காதை எட்டவே இல்லை.
அதிதி அன்று விடுதியில் அவள் இருக்கும் அறையில் வைத்துவிட்டு வந்திருந்த சில புத்தகங்களை எடுத்துக்கொண்டிருந்தாள். அதில் அவளுக்கு வரும் கடிதத்தின் தபால் உறைகள் இரண்டிருக்க, அதை எடுத்தவளுக்கு காணக் கிடைத்தது என்னவோ ஏஏ.ஆலை என்ற பெயர் மட்டுமே. எப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்ளவே இல்லை. அப்படியிருக்க இரண்டு பேருமே கண்டிப்பாக விலாசத்தினை வைத்து இடம் அறிந்துக்கொண்டிருப்பர். அதிதியின் விடுதி விலாசமும், கவிஞரின் முன்னிருந்த அலுவலக விலாசமுமே பகிரப்பட்டிருக்க, சில நாள் முன்னே தன்னுடைய விலாசம் என அனுப்பியிருந்தது இப்போது இவள் வசிக்கும் இவளது ஊரின் பெயரில். வெறுமே ஊர் பெயர் மட்டுமே இட்டு அனுப்புமாறு சொல்லிருந்தான். தபால் அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்வதாக கூறியும் இருந்தான்.
இவளும் இங்கு வந்தது முதல் ‘தெரிந்துகொள்வோமா’ என நினைத்தாலும் இப்போதைக்கு தனக்கிருக்கும் வேலையை நினைத்து அதுபற்றி மேலும் யோசிக்க மறுத்தாள்.
ஆனால் அன்று கிடைத்த உரையில் ஆலையின் பெயரிருக்க யாராயிருக்கும் என்று தேடியவளுக்கு அவ்வாலையினை பற்றி தேடும் போதுகிடைத்த தரவில் இருந்த கையொப்பம் கண்டு திகைத்துப் போனாள்.
அதனை அப்படியே அப்போதைக்கு மறந்து, மனதோடு வலிக்கொண்டு புதைத்துக் கொண்டவள் இன்று ஆதிரையனின் முகம் காண்கிறாள்.
இனி இவர்களின் சந்திப்பு எவ்வாரிருக்கும்?
இனிவரும் பதிவுகளில் காணலாம்.