அன்பின் உறவே – 14

அன்பின் உறவே – 14

அன்பின் உறவே- 14

வாழ்க்கை பாடத்தின் பரீட்சைகள் இத்தனை சீக்கிரமாய் ஆரம்பிக்குமென்று இருவருமே நினைக்கவில்லை.

அடுத்த கட்டம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில் மனம் மண்டிய கடுப்புடனும் கோபத்துடனும் பிரஜேந்தர் நடமாடிக் கொண்டிருக்க, அவனைப் பார்க்கவே அச்சமாகவும் பாவமாகவும் இருந்தது ரவீணாவிற்கு.

புதிய வேலையைத் தேடுவதா அல்லது ஆரம்பித்த தொழிலில் மட்டுமே கவனம் செலுத்துவதா என்ற குழப்பமும் சேர்ந்து கொதிநிலையில் இருந்தவனை இயல்பு நிலைக்கு திருப்புவதற்குள் மூச்சுமுட்டிப் போய்விட்டாள். 

இதற்கிடையில் ஒருநாள் மகளைப் பார்க்கவேண்டுமென வீட்டுவேலையாள் மூலம் தகவல் அனுப்பிய சுகந்தி, அருகிலுள்ள டிபார்மெண்டல் ஸ்டோருக்கு வரச்சொல்லி நாளும் நேரமும் குறித்து அனுப்பிவிட, கணவனுடன் அங்கே சென்றாள் ரவீணா.

அன்னை அழைத்த விஷயத்தை கணவனிடம் தெரிவிக்காமலேயே வெளியே இழுத்து வந்திருந்தாள் மனைவி. விஷயம் இப்படியென்று கூறியபிறகு, மீண்டும் இவன் மலையேறிவிட்டால் என்ன செய்வதென்ற மலைப்பே கணவனிடம் சொல்லாமல் மறைக்க வைத்தது.

“வம்படியா காய்கறி வாங்கணும்னு என்னையும் இழுத்து வந்துட்டு, என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க?” உச்சிவெயில் உஷ்ணத்துடன் பிரஜன் கேட்க, அவனைப் பார்த்து அசடு வழிந்தாள் ரவீணா.

காய்கறி வாங்கவென சூப்பர் மார்க்கெட்டிற்கு ஜம்பமாக புறப்பட்டு வந்தவளுக்கு எதை, எப்படி எடுப்பதென்று தெரியவில்லை. இவள் முழிக்க, அவன் கேள்வி கேட்கவென பொழுதும் ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கு முன் ரவீணாவிற்கு காய்கறி வாங்கிப் பழக்கமில்லை என்பது அவளது தடுமாற்றத்திலேயே தெரிந்தது.

“ஒரு வெங்காயமும் தெரியல, அப்புறம் எதுக்குடீ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பையத் தூக்கிட்டு வந்தே?” கணவன் செல்லமாக கடிந்துகொள்ள ஈயென்று இளித்து வைத்தாள்.

“வெஜிடபிள்ஸ்ல இத்தனை வெரைட்டி இருக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்? கிச்சன்ல சின்னச்சின்ன ஹெல்ப் பன்றவ சமைக்க கத்துகிட்டா இப்படிதான் முன்னபின்ன ஆகும்” கடைவாசல் என்றும் பாராமல் சிரிப்போடு வம்பினை வளர்த்தாள்.

“அந்த சின்னச்சின்ன ஹெல்பும்கூட, காபி குடிக்கிறதும் மூணு வேளையும் மொக்குறதுமாதான் இருக்கு. உன் சமையல்ல என் வருங்காகாலத்தை நினைச்சாலே வயித்த கலக்குதுடீ” நக்கலுடன் அலுத்துக்கொள்ள, அப்பாவியாக முகத்தை சுருக்கிக் கொண்டாள் ரவீணா.

“நான் என்ன வேணும்ன்னேவா செய்யாம இருக்கேன்? உன் கைப்பக்குவத்துல ருசிக்கிற நூடுல்ஸ் கூட, நான் செஞ்சா கன்றாவியா வருதுடா, நான் என்ன செய்ய?”

“சரி, சரி… இதான் சாக்குன்னு மூஞ்சிய சுருக்காதே! வெங்காயமும் தக்காளியும் எடுத்து வை! நான் அந்த பக்கம் போயி மஸ்ரூம் வாங்கிட்டு வந்துடுறேன்” சமாதானமாக கணவன் விலகிப்போனதும், தட்டுத் தடுமாறி தக்காளியை எடுத்து வைக்க ஆரம்பித்தவளுக்கு உதவியாக அன்னையின் கரம் வந்து சேர்ந்தது.

ஒருவாரம் கழித்து அம்மாவை அங்கே சந்தித்ததில் மனம் மகிழ்ந்து போனாள் ரவீணா. அத்தனை எளிதில் அம்மா தன்னை பார்க்க நினைப்பார் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. சுகந்தியின் மனநிலையோ முற்றிலும் வேறாக இருந்தது. மகளைப் பார்த்து விட்டோம் என்கிற பரவசமோ, வாஞ்சையோ எதுவுமில்லை அவருக்கு.

“நீ எப்படிம்மா இருக்க, என்னை பாக்கத்தான் இங்கே வந்தியா?” சந்தோஷ படபடப்புடன் ரவீணா கேட்க,

“நான் வந்தது இருக்கட்டும், நீ எப்படி இருக்க?” சுரத்தில்லாமல் விசாரித்தார் சுகந்தி.

“ம்ம்… நல்லா இருக்கேன் மா! நீ எப்படி இருக்க, பாட்டி எப்படி இருக்காங்க?” கேள்விகளை அடுக்கும்போதே, பிரஜன் வந்துவிட, அம்மாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று முகக்குறிப்பால் அனுமதி கோரினாள் ரவீணா.

‘உன் இஷ்டம்’ என்பதுபோல் தோள்களை குலுக்கியவன் மறுபக்கம் சென்று வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டான்.

“அமைதியா வளர்ந்த பொண்ணு, இப்படி அவமானத்தையும் தலைகுனிவையும் கொடுத்திட்டு போவான்னு கனவுல கூட நினைக்கல. காலம் முழுக்க மறக்கமுடியாத அளவுக்கு எல்லார் வாயிலயும் என்னை விழ வெச்சுட்ட…” தன் மகளுக்கு மட்டும் கேட்கும்படி இறங்கியகுரலில் கடிந்து கொண்டார் சுகந்தி. மிதமிஞ்சிய ஏச்சுகளையும் பேச்சுகளையும் தாங்கிக் கொண்டதில் அவரின் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.

ரவீணாவால் பதில் சொல்ல முடியவில்லை. அம்மாவையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள். இந்த ஒருவாரத்தில் அன்னையின் அதீத உடல் மெலிவிற்கு அவளின் உள்ளம், அவளையே குற்றஞ்சாட்டி விட, கண்களில் தன்னால் நீர் கோர்த்துக் கொண்டது.

“அப்… அப்பா, ரொம்ப திட்டிட்டாராம்மா?” மென்று முழுங்கியபடியே வார்த்தைகளை தேடியெடுத்தாள் மகள்.

“அது நடக்கிறதுதானே? என்ன இந்த தடவை கொஞ்சம் எல்லை மீறிப் போயிடுச்சு ரெண்டு பக்கமும்” என்றவரின் உள்ளம், மகளிடம் கூட வீட்டில் நடந்ததை வெளிப்படையாக கூற விரும்பவில்லை. 

ஒட்டாமல் ஊருக்கென வாழ்ந்த வாழ்க்கையில் இதையெல்லாம் ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டுமென்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் சுகந்தி.

“நீ சந்தோசமா இருக்கியா? உங்கப்பா வந்துட்டு போனதா கேள்விப்பட்டேன். அவரால எந்தப் பிரச்சனையும் இல்லையே உனக்கு?”

“அதெல்லாம் எதுவுமில்லம்மா, ப்ரஜூ எல்லாத்தையும் சமாளிச்சுட்டான்” நடந்ததைக் கூறி, கண்கள் மின்ன கணவனின் பெருமை பேசியவளைக் கண்டும் மகிழவில்லை தாயின் மனம்.

“எப்படியோ சந்தோசமா இருந்தா சரி! நாள் கடத்தாம மாமனார் வீட்டோட போய் சேர்ந்துக்கப் பாரு… அதுதான் உனக்கு நல்லது” தாயின் ஒவ்வொரு வார்த்தையும் வெகு பூடகமாய் ஒலித்தத்தின் சாராம்சத்தை உணரவில்லை மகள்.

“ஏன்மா இப்படி சொல்ற, தனியா இருந்தா என்ன பிரச்சனை வந்திடப் போகுது? அதான் ப்ரஜூ என்னை நல்லா பார்த்துக்கிறானே!”

“இப்ப பார்க்கலாம்டீ! ஆனா, எப்படிச் சொல்ல? ஏதோ ஒண்ணு என் மனச உறுத்திக்கிட்டு இருக்கு. கேக்கறேன்னு தப்பா நினைக்காதே… அந்தப் பையன் உண்மையிலேயே உன்னை லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணியிருக்கானா?” முதன்முறையாக மகளின் கணவனை, சந்தேகப் பார்வையோடு சலித்தெடுத்தார் சுகந்தி.

கடந்த இரண்டு நாட்களாக அவரை உலுக்கியெடுக்கும் குரலால், மருமகனின் மீதான நம்பிக்கை சறுக்கியிருந்ததை எப்படி வெளியில் சொல்வதென்று அவருக்கும் தெரியவில்லை.

“இதுல என்னம்மா சந்தேகம்? நாம தனியா பேசிக்கட்டும்னு தான் அவன், உங்களை பார்த்ததும் அந்த பக்கம் போயிட்டான். இருங்க… அவனை கூப்பிடுறேன்” அவசரமாய் பிரஜனை அழைக்க எத்தனித்த மகளைத் தடுத்தார் சுகந்தி.

“பார்த்து பத்திரமா இருந்துக்கோ! அவ்வளவு சீக்கிரமா யாரையும் நம்பிடக் கூடாது. இதை மட்டும் மனசுல வச்சுட்டு இனி வாழ்கையை ஓட்டப்பாரு!” அறிவுறுத்திய அம்மாவின் வார்த்தைகளில் என்ன அர்த்தம் ஒளிந்துள்ளது என்பதை அறியாது போனாள் ரவீணா.

“நேரடியா உங்க வீட்டுக்கே வந்து பார்க்கற அளவுக்கு இன்னும் என் மனசு சமாதானமாகல… சீக்கிரம் புகுந்த வீட்டுல பேசி குடும்பமா இருக்கப்பாருங்க” மீண்டும் அதையே வலியுறுத்தியவர், கையோடு கொண்டு வந்திருந்த மகளது அலைபேசியை அவளிடம் கொடுத்து விட்டு,

“ஃப்ரீடைம்ல ஃபோன் பண்ணு வினுமா! ஒரு வருஷம் ரீசார்ஜ் போட்டு விட்டுருக்கேன். ஃபோன் கவருக்கு அடியில ஏ.டி.எம் கார்டு இருக்கு, யூஸ் பண்ணிக்கோ… எதுவும் தேவைன்னா கேளுடா!” தகவலாய் சொன்னவர், மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்காமல் கிளம்பி விட்டார்.

மாமியாரின் பாராமுகம், புது மாப்பிள்ளையின் தன்மானத்தை சீண்டி விட, குற்றப்பாட்டை படிக்க ஆரம்பித்தான் பிரஜன். அத்துடன் முன்கூட்டியே பேசி வைத்துதான் இந்த சந்திப்பு நடந்ததும் தெரிந்து விட, கோபத்தில் உச்சாணிக் கொம்பேறி விட்டான்.

“ப்ரஜூ… அம்மாவுக்கு ஆல்ரெடி வீடு, ஸ்கூல்னு ஏகப்பட்ட பிரசர் இருக்கும். அதோட, என்னோட பிரச்சனையும் சேர்ந்த அதிர்ச்சி வேற. அதான், உன்கூட முகங்குடுத்து பேசல…” வீட்டில் அவனையே சுற்றிச்சுற்றி வந்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் ரவீணா.

மனைவியின் வெள்ளைக்கொடியை தூரம் வைத்து முறுக்கிக்கொண்டு திரிந்தவன், அவளது சாம, தான, பேத தண்டம் எதற்குமே அசைந்து கொடுப்பதாக இல்லை அவனை குளிர்ச்சியாக்கவென, அவள் பிழிந்து கொடுத்த பழச்சாறும் தீண்டுவாரில்லாமல் கிடந்தது.

“அம்மாவை பார்த்த சந்தோசத்துல உன்னை பத்தி யோசிக்காம விட்டுட்டேன். எனக்குதான் புத்தியில்லாம போச்சு. இனி இப்படி நடக்காது” பலவிதமாய் கெஞ்சியும் கொஞ்சியும் களைத்துப் போனவளுக்கும் கோபம் தலைதூக்கியது.

“இந்த அம்மாவ, உன்கூட பேச வைச்சுட்டு மறுவேலை பாக்கறேன்” வேகமாய் அவள் அலைபேசி எடுக்க, அதே வேகத்தில் பாய்ந்து மனைவியை அணைத்தான் பிரஜன்

“உங்கம்மா அவ்வளவு இளப்பமா நினைக்கற அளவுக்கா நான் இருக்கேன்? நீ சொல்லு, நான் எப்படி இருக்கேன்னு…” புருவம் உயர்த்தி, வில்லன் பார்வையில் மனைவியைப் அளவெடுக்க, அவளுக்கும் விசயம் பிடிபட்டுப் போனது.

“டேய், கோபமா இருந்தா அதை மட்டும் மெயிண்டன் பண்ணு… இப்படி பல கோணத்துல உரசிப் பாக்காதே” பதிலுக்கு அவளும் அவனைப் போலவே உதட்டை மடித்துச் சிரிக்க,  

“ஆஹாங், பார்த்தா என்னவாம்? இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” கேட்டுக்கொண்டே அவள் கண்களுக்குள் பார்த்தான் பிரஜன். இருவரின் கண்களிலும் கோபமும், காதலும் கலந்த ரசாயன பரிமாற்றம் நிகழ்ந்தது.  

“என்ன அர்த்தம்ன்னு என்னைக் கேட்டா, என்ன சொல்றது? ஒருநேரம் ரொம்ப நல்ல பிள்ளையா நடந்துக்கற, சில நேரம்…” சன்னக் குரலில் புன்னகையுடன் ரவீணா தலைகுனிந்து கொள்ள,

“ரௌடியா தெரியறேனா?” கோபமாய் கேட்டவனின் செய்கையிலும் சினம் கலந்திருந்தது. இடையினை இறுக்கிப்பிடித்து வன்மையுடன் கன்னத்தையும் சேர்த்துப் பிடித்தான்.

முரட்டுவிரல்களின் பிடியில் சிக்கிய மென்மையானவளின் தேகம், மூர்க்கதனத்தின் வலி தாங்காமல் துடிக்க, உதட்டைக் கடித்து அமைதியுடன் பொறுத்துக் கொண்டாள் ரவீணா.

ஆண்களின் கோபத்தை மடைமாற்றும் முயற்சி காமத்திற்கு உண்டென்பதை படித்ததெல்லாம் நிஜமாகிக் கொண்டிருப்பதை கண்கூடாக உணர்ந்தாள்.

அவளுக்கு வலிக்க வேண்டும் என்பதற்காகவே மென்மையான கழுத்தில் அணிலாக மாறி கடிக்க, துடித்துப் போனவளின் கரம் அவனது சிகையினை பிடித்திழுத்து கோபத்துடன் தள்ளிவிட்டது.

ஆனாலும் அந்தச் செயலே அவனுக்கு போதையேற்றி விட, “உனக்கு கொழுப்பு கூடிபோச்சுடீ!” எச்சரித்தவன் அன்றைய தினம் கொடுங்கோலனாகவே மாறிப்போனான். 

காளையின் சீற்றத்தில் திணறத் தொடங்கியவள், ஒரு கட்டத்தில் அவனைக் கெஞ்சலாய் பார்க்க ‘உனக்கு மன்னிப்பே இல்லை’ என்கிற ரீதியில் தண்டனைகளை செயல்படுத்த ஆரம்பித்தான்.

உடலைச் சுருட்டிப் போட்ட வலியில் உறங்கி மீண்டும் கண்விழித்தபோது நளபாகத்தின் நினைவு வந்து மீண்டும் அவளை கதிகலங்க வைத்தது.

‘அச்சோ.. சமைக்காததுக்கு வேற தனியா வச்சு செய்வானே பிஸ்தா’ அலறியவளின் வயிறும் பசியில் அரற்றியது. கட்டிலில் கணவனைக் காணாமல் மெல்ல எழுந்து வெளியே வர, சமையலறையில் கைவரிசை காட்டிக் கொண்டிருந்தான் பிரஜன். 

இவளுக்கு வந்த பசி அவனுக்கும் வந்து தொலைத்ததில் திடீர் உப்புமாவை வாணலியில் கிண்டிக் கொண்டிருந்தான்.

“என்ன செய்ற?” தூக்க கலக்கத்துடன் அவன் முதுகோடு ஒண்டிக்கொண்டு ரவீணா கேட்க,

“அதீத உழைப்பில் அடங்காத பசி வந்துடுச்சு… வா சாப்பிடுவோம்” என்றவன் அவர்களின் வழக்கப்படி, தரையிலேயே அமர்ந்து உண்ண அனைத்தையும் கொண்டுவந்து வைத்தான்.

மனைவியின் களைத்த முகம், நடந்து முடிந்ததை நினைவுபடுத்தியதில் பிரஜன் கண்ணடித்துச் சிரிக்க,

“கொன்னுடுவேன்டா, ஓடிரு!” என்றபடி கோபத்தோடு உப்புமாவையும் சேர்த்தே அதிகப்படியாக உள்ளே தள்ளினாள் ரவீணா.

அதற்குப் பிறகான பொழுதுகளை தோட்டத்தில் உலாவிக்கொண்டு வாஞ்சைகளும் வம்புகளுடனும் கழித்தனர்.

“பிஸ்தா பாய், இப்ப கோபம் போயிடுச்சா? என் பேச்சை கேப்பியா?” அவனுடன் கைகோர்த்துக் கொண்டே நடந்தவள் கொஞ்சலுடன் கேட்க, அவளின் கைக்கு முத்தம் வைத்தே “லைட்டா” என சிரித்தான்.

“நானும் ஏதாவது வேலைக்கு ட்ரை பண்ணட்டுமா ப்ரஜூ? ப்ரைமரி டீச்சர் இல்லன்னா பிரைவேட் டியூஷன் அந்த மாதிரி…” தயக்கத்துடன் கேட்க,

“ஏன், உன் புருஷன், உனக்கு சோறு போடமாட்டேன்னு சொல்லிட்டானா? இல்ல, வேலை வெட்டி இல்லாதவனுக்கு எங்கே இருந்து வருமானம் கொட்டப்போகுதுன்னு உனக்கு சந்தேகம் வந்துடுச்சா?” எகத்தாளம் குறையாத குரலில் பதில்கேள்வி கேட்டான்.

“அதுக்கில்லடா… யாரோட சப்போர்ட்டும் இல்லாம லைஃப்ல முன்னுக்கு வரணும்ன்னா நாம ரெண்டுபெரும் சேர்ந்து முயற்சியெடுத்தா தானே முடியும். நீயும் வேலைக்கு அலையுற, நான் மட்டும் வெட்டியா தனியா வீட்டுல இருந்து என்ன செய்ய? ஒரு பார்ட்டைம் ஜாப் கிடைச்சாக் கூட, பாமிலியை ரன் பண்ண யூஸ் ஆகும். மாசம் பொறந்தா ஈ.பி.பில், மளிகை, முக்கியமா உன் பைக்குக்கு பெட்ரோல் போடவாவது காசு வேணுமேடா” பெரும் யோசனையுடன் கவலைப்பட்டாள் ரவீணா.

“இவ்வளவுக்கு நீ யோசிக்கிறதுல எனக்கும் ரொம்ப சந்தோசம் பிங்கி. ஒரு பொறுப்பான பொண்டாட்டியா மாறிட்டடீ! அதுக்காக நீ வேலைக்கு போகணும்னு அவசியமில்ல, என்ன செலவு வந்தாலும் நானே சமாளிக்கிறேன்”

“ம்ப்ச்… உம்மேல நம்பிக்கை இல்லாமல் சொல்லல ப்ரஜூ…” இடையிட்டுப் பேசியவளை முறைத்துப் பார்த்தே வாயடைக்க வைத்தான்.

“வீராப்பா, வீட்டை எதிர்த்து லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்தவன், பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பி சோறு சாப்பிடுறான்னு ஊரே அசிங்கமா சொல்லிக்காட்டும். அது தேவையா எனக்கு?

அதுவுமில்லமா எங்க குடும்பத்துல பொண்ணுங்கள வேலைக்கு அனுப்பி பழக்கமில்ல. அதுக்காக உன்னை வீட்டோட அடங்கியிருக்கச் சொல்லல… என்னோட தொழில் எல்லாம் செட்டாகி நார்மலுக்கு வரும்போது உன்னோட கேரியர் பத்தி யோசிக்கலாம். ஹோப் யூ கேன் அண்டர்ஸ்டான்ட்!” எனப் பேசி முடிக்கும்போது அவனுக்கும் நிதானம் திரும்பியிருந்தது.

சிறிதுநேரம் அமைதியாக இருந்தவன், “தனியா இருக்க ஒரு மாதிரியிருந்தா, உங்க அம்மாவை வேணும்னா இங்கே வந்துட்டுப் போகச்சொல்லு!” ஆறுதலாகப் பேச, முகத்தை சுளித்தாள் ரவீணா.

“அதெல்லாம் அவங்க வரமாட்டாங்க… அப்படியொரு எண்ணம் இருந்திருந்தா இன்னைக்கே இங்கே வந்திருப்பாங்கடா” சோர்வுடன் முடித்தவளை, ஆதரவாய் தோளணைத்துக் கொண்டான்.

அன்றைய இரவு வீட்டிற்குள் வந்தும் நீண்டநேரம் பேச்சு சுவாரசியத்தில் கழிந்து கொண்டிருந்தது. தன் பெற்றோர்களுக்குள் நடக்கும் சின்னச்சின்ன சண்டைகளைப் பற்றி ரசனையுடன் சொல்லிக் கொண்டிருந்தான் பிரஜன்.

தன் அண்ணன், அண்ணிகளைப் பற்றியும், ரவீந்தரின் இரண்டு குழந்தைகளைப் பற்றியும் பேசும்போது முகம் மலர்ந்து சிரித்தான். அண்ணன் மகன்களுக்கு இவன் கற்றுக் கொடுக்கும் விளையாட்டுகள் மற்றும் நீச்சல் பயிற்சியை  பற்றி விளக்கும்போது பொறுப்பான சித்தப்பனாய் தெரிந்தான்.

கணவன் சொல்வதைக் கேட்கக்கேட்க இவளுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. எந்த சூழ்நிலையையும் எளிதாகக் கடக்கும் இவனது மனோதிடம் வந்த வழியில் இவளுக்கும் பயணிக்க ஆசை வந்தது.

இது போன்ற சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள ரவீணாவின் நினைவடுக்குகளில் எதுவுமே சேமித்து வைக்கப்படவில்லை. அம்மா மற்றும் பாட்டியின் கண்டிப்பான முகமும், தந்தையின் உத்தரவான குரலும் அவர்களுக்கு தலையாட்டும் தனது முகம் மட்டுமே என்றும் அவளின் நினைவிற்கு வரும்.

எதிரெதிர் துருவங்களாக நிற்கும் பெற்றோரை நினைத்து பல சமயங்களில் வாழ்க்கையை வெறுத்திருக்கிறாள் ரவீணா. அவள் பிறந்த வீட்டில் சிறிதேனும் உற்சாகம் இருக்குமானால் அது அவளுடைய செய்கைகளால் மட்டுமே இருக்க முடியும், அல்லது உறவினர்கள் யாராவது வருகை தரும்போது மட்டுமே வீடு கலகலவென்று இருக்கும்

மற்ற நேரங்களில் அம்மா ஒரு இயந்திரம் போல வேலைக்கு செல்வதும், பாட்டியும் தந்தையும் சத்தமில்லாமல் அலட்டிக் கொள்வதும் என்று இறுக்கமான சூழ்நிலையில் வாழுந்து பழக்கப்பட்டு விட்டவள் ரவீணா.

“நீ, உங்க வீட்டை ரொம்ப மிஸ் பண்றியா ப்ரஜூ?” உள்ளடங்கிய குரலில் கேட்டவளுக்கு உள்ளமும் படபடத்தது.

உற்சாகமாக வாழ்க்கையை தன்போக்கில் ரசித்துக் கொண்டிருந்தவனை, காதலென்ற மாயவலையில் சிக்க வைத்து பெரும் இக்கட்டில் தள்ளிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் தவித்துப்போனாள் ரவீணா.

அவளது எண்ணத்தை கண்டு கொண்டவன், ”தேவையில்லாம எதையும் நினைச்சு வொரி பண்ணிக்காதேடீ! உண்மையை சொல்லனும்னா, நான், எனக்கு பிடிச்ச புரஃபஷனுக்காக நிச்சயமா வீட்டை விட்டு வெளியே வந்திருப்பேன்” வெளிப்படையாக பேச ஆரம்பித்தான்.

“ஏன்டா? உன் படிப்பு சம்மந்தமான தொழில் பார்க்க உனக்கு இஷ்டமில்லையா?”

“இஷ்டம்ங்கிறத விட, அதுலயே மனசு லயிக்கணும் பிங்கி. என்னோட சின்ன வயசுலயிருந்தே நகைக் கடைக்கு போயி, வியாபாரம் பண்றத பார்த்து, அதோட நுணுக்கமெல்லாம் எனக்கு அத்துபடியாகிடுச்சு. படிப்பு மூளைக்குள்ள பதிஞ்சு போனாலும், மனசு ஒன்றிப்போயி அது சம்மந்தமான தொழில்ல கவனம் வைக்க முடியலடீ”

“அப்ப என்னதான் முடிவு பண்ணியிருக்க? வேலைய பத்தி கேட்டா இன்னும் கொஞ்சம் பொறு, சொல்றேன்னு என் வாயத்தான் அடைக்கிற நீ!” சிணுங்கலுடன் முகம் திருப்பிக்கொண்டவளை ரசனையாகப் பார்த்தான் பிரஜேந்தர்.

“உன் அவசரத்துக்கு ஸ்பீடு பிரேக்கர் போட்டது குத்தமா போச்சா? நான் சொல்றத தெளிவா கேக்க பொறுமை வேணும், கோபப்படக்கூடாது சரியா?” உத்தரவாய்  சொன்னவனுக்கு சலாம் போட்டு தொடரச் சொன்னாள் மனைவி.

“உன் புருஷன் வேலையில்லாதவனா இருந்தாலும் ஐம்பது லட்சத்துக்கு கடனாளியா இருக்கேன்டீ!” அலட்டிக்கொள்ளாமல் கூற, ரவீணாவிற்கு தூக்கி வாரிப்போட்டது

“என்னடா சொல்ற? கடன் வாங்கி செலவு பண்ற அளவுக்கு என்னத்தை செஞ்சு தொலைச்ச? என்னையும் வேலைக்கு போகாதேன்னு பெருமைபாட்டு பாடுற… என்னை சீண்டிப் பார்க்கவே பொய் சொல்றியா?” படபடவென்று வெடிக்க ஆரம்பித்தாள்

“கடனாளியானா தான்டீ, முதலாளியாக முடியும், பெரிய மனுசன்னு பேரு வாங்க முடியும்” கேலியுடன் இவன் சிரித்தபடி சொல்ல,

“ஏதெது இருநூறு கோடி, முந்நூறு கோடின்னு கடன்வாங்கி, கண்டம் விட்டு கண்டம் கம்பி நீட்டுறவங்கள தான் நீ சொல்றேன்னு நல்லாப் புரியுது. அப்படியொரு யோசனை இருந்தா, நானே உன்னை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் பார்த்துக்கோ!” கண்ணும் மூக்கும் கோபத்தில் சிவக்க கொதித்தெழுந்தாள் ரவீணா.

“சில்… சில் பிங்கி! என்னோட புரஃபஷனை மாத்திக்க தான் கடன் வாங்கியிருக்கேன் போதுமா? அதை என்னென்ன செஞ்சேன்னு உனக்கு விளக்கமா சொன்னதான் புரியும் என்றவன் தனது மடிக்கணினியோடு வந்தமர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!