ஆழி சூழ் நித்திலமே 10(அ)

  10

 

தடம் மாறும் போது தட்டிக் கேட்பவனும், தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனுமே உண்மையான நண்பன்…  வெற்றி உண்மையான நண்பன். கொஞ்சம்கூட விருப்பமில்லாத போதும், நண்பன் சொன்ன ஒற்றை வார்த்தைக்காய் நித்திலாவைப் பார்க்க, அந்த அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். 

பாரியை ஸ்டேஷனில் தனியே விட்டு வரவே மனதில்லை வெற்றிக்கு. பிடிவாதமாய் நிற்பவனை என்ன செய்ய? நாதன் வழக்கை பதிந்தது முன்பே தெரிந்திருந்தால் முன்ஜாமீனாவது  எடுத்திருக்கலாம். வெறும் புகார்தானே, எப்படியும் வழக்கு இன்றி பேசி முடித்துவிடலாம் என்றே அசால்ட்டாக எண்ணியிருந்தனர். 

இதுவரையில் வந்த பிரச்சனைகள் எல்லாம் தங்களுக்குள்ளாகவே வரும். அடிதடியில் முடியும். அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்துக் கொள்வர். சங்கத்தைத் தாண்டி எதுவும் சென்றதில்லை. அப்படியே யாராவது புகார் கொடுத்தாலும், பேசியோ மிரட்டியோ வாபஸ் வாங்க வைக்கப்படுவர். 

ஆனால் இந்த முறை பிரச்சனையே வேறு.  திட்டமிட்ட படுகொலை, என்ற பிரிவில் வழக்கைப் பதிந்திருந்தனர். எப்ஐஆரும் போடப்பட்டிருந்தது. 

அதிலும் அந்த நாதன் தெளிவாய் திட்டமிட்டுதான், சரியாக வேறெதுவும் முடிவெடுக்க முடியாதபடிக்கு நேரத்தையும் ஐந்துமணி வரை வளர்த்தியிருந்தான்.  நித்திலாவிடம் பேசி வாபஸ் வாங்க வைப்பதற்கு பாரியும் ஒத்துக் கொள்ள மறுக்கவே வேறு வழியின்றி போனது அவர்களுக்கு. 

பாரியின்மீது கொலை வழக்கு என்பது, மகேந்திரனுக்கு மனதே ஆறவில்லை. “நாமெல்லாம் இத்தனை பேரு இருந்தும் எதுவுமே செய்ய முடியலயேடா. அவனை எப்படிடா ஸ்டேஷன்ல விட்டுப் போறது.” வெகுவாக வருந்தியவரை, பாரிதான் பேசி சமாதானப் படுத்தினான். 

 “என்னவோ கல்யாணம் முடிஞ்ச புதுப்பொண்ண மாமியார் வீட்ல விட்டுப் போற மாதிரி ஓவரா கலங்கறீங்க…  ஓ…! இதுவும் மாமியார் வீடு தானோ…! கவலைப்படாதீங்க. நல்ல்ல்லாவே கவனிச்சிக்கிறேன்.” 

 நாதனின் நையாண்டி பேச்சும் நல்லாவே என்ற வார்த்தையில் தந்த அழுத்தமும் அனைவரையும் கொந்தளிக்க வைத்தாலும் எதுவுமே செய்ய முடியாத நிலை. 

“நாதன், ஓவரா பேசாதீங்க. பாரி மேல ஒரு அடி விழுந்தாகூட கோர்ட்ல நீங்க பதில் சொல்லியாகனும். நான் சும்மா விடமாட்டேன்.” வக்கீல் எச்சரிக்க, 

“அது எனக்குத் தெரியாதா லாயர் சார். கவலையேப் படாதீங்க. வெளிக்காயம் எதுவுமே இருக்காது.” நாதனின் நக்கலில் கடுப்பானவர்கள், வேறு வழியின்றி எதுவுமே செய்ய முடியாத நிலையில் வெளியேறியிருந்தனர். 

“யார்டா அந்தப் பொண்ணு? அவகிட்ட வாபஸ் வாங்கறதுக்குகூட கேக்கக்கூடாதுங்கறான். உன்னையும் அந்தப் பொண்ணுக்குப் போய் ஹெல்ப் பண்ணுங்கறான். எங்களுக்குத் தெரியாம யாருடா அது… அவனுக்கு அவ்வளவு முக்கியமான பொண்ணு?”

ஞானவேலு வெற்றியை உலுக்க, “என்னை ஏன் கேக்கற?  அவன்கிட்டயே கேட்டிருக்க வேண்டியதுதான. எனக்கு எதுவும் தெரியாது.”  எரிந்து விழுந்தவன், கோபத்தை வண்டியில் காட்ட வாகனம் பறந்தது. 

நித்திலாவை முன்பின் அறிமுகமில்லை வெற்றிக்கு. அன்றைக்கு படகில் வைத்து சில நிமிடங்கள் அவளிடம் அலைபேசியில் பேசியதுதான். அதுவுமே அவளுக்கு நினைவிருக்குமோ இல்லையோ. அப்படியே நினைவிருந்தாலும் என்னவென்று இப்போது போய் அறிமுகம் செய்து கொள்வது. 

மருத்துவமனை வாயிலில் நின்று குழம்பியபடி யோசித்தவனுக்கு தாமஸ்ஸின் தம்பி சவரிமுத்துதான் நினைவுக்கு வந்தான். அவன் நித்திலாவின் தம்பி நிகிலேஷின் நண்பனல்லவா. உடனடியாக தாமஸூக்கு அழைத்தவன் சவரியை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னான். 

நிகிலேஷின் நண்பர்களுக்கு அவனது தந்தையின் மறைவு செய்தி தெரிந்திருந்தது. ஆனால் அவரது மரணத்துக்கு காரணம் பாரிதான் என்பது தெரியாது. அது நிகிலேஷூக்கேத் தெரியாது. யாரோ ஒரு ரௌடி என்கிற அளவிலேதான் அவர்களுக்கு விபரம் தெரிந்திருந்தது. 

அரசு மருத்துவமனையின் வெளியே நின்றிருந்த வெற்றியிடம் வந்து சேர்ந்தனர் தாமஸ்ஸூம் சவரியும். பொழுது சாயத் துவங்கியிருந்தது. 

“என்னா வெற்றிண்ணா எதுக்கு கூப்பிட்டீங்க? என் ஃபிரெண்டு நிகிலேஷோட அப்பா இறந்துட்டாங்கண்ணா. அன்னைக்கு நம்ப போட்லகூட வந்தானே. கடல்ல வுழுந்தவன பாரியண்ணன்கூடத் தூக்குனுச்சே அவனோட அப்பாதான். அவனைப் பார்க்கதான் கிளம்பிக்கினு இருந்தேன்.”

“ம்ம், தெரியும் சவரி. உன்னால எனக்கொரு ஜோலியாவனுமே.”

“சொல்லுண்ணா.”

“உன் ஃபிரெண்டோட அப்பாவ அடிச்சது நம்ப பாரிதான். அவரு பொண்ணுதான் அவன்மேல கம்ப்ளைன்ட் குடுத்திருக்கு.”

மெதுவாய் வெற்றி உரைக்க, திக்கென்று அதிர்ந்தனர் தாமஸ்ஸூம் சவரியும். 

“எதுக்குண்ணா?”

“ஏன் வெற்றி? என்னாச்சி?”

“என்னாச்சின்னு எனக்கும் தெரியாது தாமஸ்ஸூ. பாரி இப்ப ஸ்டேஷன்லதான் இருக்கான். உன் ஃபிரெண்டோட அப்பாவ போஸ்ட்மார்ட்டம் பண்ண இங்கதான் கொண்டாந்து வச்சிருக்காங்க. இங்க அவரு பொண்ணுதான் கூட இருக்குது. அந்தப் பொண்ண உனக்குத் தெரியுமா?” தாமஸிடம் ஆரம்பித்து சவரியிடம் முடித்தான் வெற்றி. 

“ம்ம்… அந்தக்காவ எனக்கு நல்லாவேத் தெரியும்ண்ணா.”

“வெற்றி… பாரிய வெளிய எடுக்கலயா?” பாரி ஸ்டேஷனில் இருப்பது வெகுவாக உறுத்தியது தாமஸ்ஸை. 

“ம்ம்… எடுக்கனும். இன்னைக்கு எதுவுமே செய்ய முடியாது தாமஸ்ஸூ. திங்கக்கிழம கோர்ட்ல ஜாமீன் வாங்கிதான் அவனை வெளிய எடுக்கனும்.”

“அந்தப் பொண்ணான்ட ஒருதபா பேசிப் பார்க்கலாம்ல.”

“பேசனும். ஆனாலும் சனி ஞாயிறு இரண்டு நாளைக்கு பாரி உள்ள இருக்கறத ஒன்னும் பண்ண முடியாது. எதா இருந்தாலும் திங்கக்கிழமதான் பாரிய வெளிய எடுக்க முடியும். அதனால பொறுமையா பேசிக்கலாம்.

அதுவரைக்கும் நம்ப பாரிதான் அவங்கப்பாவ அடிச்சதுன்னு அந்தப் பொண்ணுக்குத் தெரிய வேணாம்.”

“உன் ஃபிரெண்டுக்கும்தான்டா” சவரியைப் பார்த்துச் சொல்ல, தயக்கமாகத் தலையாட்டிக் கொண்டான் சவரி. 

“சரி, இப்ப என்கூட வா. அந்தப் பொண்ணு தனியா இருக்குது. எதனா ஹெல்ப் வேணும்னா செய்வோம்.”

பாரி என்னதான் நித்திலாவிடம் வழக்கு பற்றி பேசாதே என்று கூறியிருந்தாலும். வெற்றிக்கு சமயம் பார்த்து பொறுமையாக நித்திலாவிடம் பேசி கோர்ட் கேஸ் என்று அலையாமல் வழக்கை வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மூவரும் மருத்துவமனையினுள் நுழைந்து நித்திலாவின் அருகே சென்ற போது சவரியைக் கண்டதும், நாம் பெரும் துக்கத்தில் இருக்கும் போது தெரிந்த ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் நமது துக்கம் அதிகரித்து அழுகை பொங்கும் அல்லவா, அப்படிதான் இருந்தது நித்திலாவுக்கு. கண்கள் கலங்கி வழிய அவர்களைப் பார்த்திருந்தாள். 

தம்பிதான் சவரியை அனுப்பியிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டாள்.  சவரி தனது அண்ணனையும் வெற்றியையும் அறிமுகப்படுத்த, வெற்றியைத் தெரிந்த பாவனைக் காட்டியது அவள் கண்கள். 

அவர்களைப் பார்த்து கண்களில் பெருகிய கண்ணீரோடு சோபையாய் ஒற்றை புன்னகை சிந்தி தலையசைத்துக் கொண்டாள்.

உண்மையில் அந்த கள்ளமில்லாத பெண்ணின் முகத்தில் தெரிந்த சோகமும் கண்ணீரும் வெற்றியை உலுக்கியது. 

அந்நேரம்வரை தன் நண்பனைப் பற்றி மட்டுமே நினைத்திருந்த வெற்றிக்கு, தந்தையை இழந்துவிட்டு ஆதரவற்று நிற்கும்  அவளைக்கண்டு பாவமாய் இருந்தது. பரசுராமனைப் பற்றி அவன் மனதில் நல்ல அபிப்பிராயம் இல்லாததால் அவரது இழப்பு தராத பரிதாபத்தை அவளது சோகமான ஒற்றை புன்னகை வரவழைத்திருந்தது.

இந்தப் பெண் இப்படி ஆதரவற்று நிற்க நண்பன் காரணமாகிப் போனானே என்று குமைந்தவன், அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று மனமுவந்து எண்ணிக்கொண்டான். 

“நிக்கி அனுப்பினானா?” கரகரத்த குரலில் நித்திலா வினவ, வெற்றியைப் பார்த்தவாறு தலையாட்டிக் கொண்டான் சவரி. ஏனோ உடன்பிறந்தவன் உடனிருக்கும் உணர்வு தோன்றியதில் லேசாய் தெளிந்தது அவள் முகம். 

“இன்னும் போஸ்ட்மார்ட்டம் ஆரம்பிக்கலயாம்மா?” வெற்றியின் கேள்விக்கு அருகில் இருந்த சதாசிவம்தான் பதில் கொடுத்தார். 

“இல்ல தம்பி, டாக்டர் வரலன்னு சொல்றாங்க.”

போஸ்ட்மார்ட்டம் நடைபெறும்போது உடனிருக்க வந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவர் சற்று தூரத்தில் நின்றிருந்தார்.  அவர் வெற்றிக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர்தான். அவரருகே சென்ற வெற்றி நிலவரம் குறித்து விசாரித்துக் கொண்டான். மீண்டும் நித்திலாவின் அருகே வந்தவன், 

“சரிம்மா, எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. நீ உங்கம்மாவ அட்மிட் பண்ணியிருக்க ஹாஸ்பிடல்க்கு கிளம்பும்மா. நாங்க இங்க இருக்கறோம். ஃபார்மாலிட்டீஸ் முடிஞ்சதும் ஃபோன் பண்றோம் அப்ப அம்மாவக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துக்கலாம்.”

“இ… இல்லண்ணா. நான் அப்பா கூடவே இருக்கேன்.” சொல்லிவிட்டுத் தேம்பியவளை வேதனையோடு பார்த்துக் கொண்டனர். 

“அம்மாடி, இந்தத் தம்பி சொல்றதுதான்ம்மா சரி. அம்மா எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க. அவங்களுக்கு நீதான தைரியம் சொல்லனும். பாவம் தம்பி மட்டும் தனியா என்ன செய்வான் சொல்லு. நீ அம்மாகூட போய் இரும்மா. இங்க நாங்க பார்த்துக்கறோம்.” 

சதாசிவமும் வற்புறுத்தவும் கிளம்பியவளை சவரியோடு அனுப்பி வைத்தான் வெற்றி. அதன்பிறகு சற்று நேரத்தில் டாக்டரும் வந்துவிட போஸ்ட்மார்ட்டம் முடிந்து, பரசுராமனின் உடலைக் கொடுத்தனர். 

சவரிக்கு ஃபோன் செய்து, அவனையும் நிகிலேஷையும் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு, வீட்டில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் செய்து வைத்தனர். சவரிக்குத் துணையாய் வெற்றி வந்திருப்பதாய் நினைத்துக் கொண்ட நிகிலேஷ்க்கு வெற்றியின் உதவிகள் அவ்வளவு ஆதரவாய் உணர வைத்தது. 

இதற்கிடையில் பாரியை நினைத்து கயல் அழுது கொண்டிருப்பாளே என்று வேதனையோடு எண்ணியவன் ரதிமீனாவுக்கு அழைத்தான்,

“வெற்றி, என்னடா இந்தப் பாரி இப்படி பண்ணி வச்சிருக்கான்? அவனை வெளிய எடுக்கவே முடியலயாடா?” எடுத்ததுமே அங்கலாய்த்தாள் மீனா. 

“ம்ப்ச்… இன்னைக்கு எதுவுமே செய்ய முடியாது மதினி. நீ புள்ளைங்களக் கூட்டிக்கிட்டு கிளம்பி பாரி வீட்டுக்குப் போ.”

“எதுக்குடா?”

“கயலு அழுதுக்கிட்டு இருக்கும். ஆயாவும் அதும் சாப்ட்ருக்கக்கூட மாட்டாங்க. நீ போய் கொஞ்சம் பார்த்துக்கோ மதினி.”

அவன் குரலில் என்ன கண்டாளோ மறுப்பேதும் சொல்லாமல் கயலைப் பார்க்கச் சென்றாள் ரதிமீனா. 

****

பாக்கியலஷ்மியின் உடல்நிலை சற்று நிதானத்துக்கு வந்திருந்ததில், கணவரை நினைத்து அழுகையில் கரைந்தவரை ஆறுதல் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள் நித்திலா. 

பரசுராமனின் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டதும் நித்திலாவையும் பாக்கியலஷ்மியையும் வீட்டுக்கு வரவழைத்தனர். அதன் பிறகு தெரிந்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் என்று ஒவ்வொருவராய் வரத் துவங்கியதும் வெற்றி சற்று ஒதுங்கி நின்று கொண்டான். 

ஆனால் நிகிலேஷின் நண்பர்களை முன்னிருத்தி அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தான். 

அவ்வளவு வேதனையோடும் கண்ணீரோடும் கதறி அழும் நித்திலாவிடமோ நிகிலேஷிடமோ பாரியை பற்றியோ கேஸை வாபஸ் வாங்குவது பற்றியோ பேச முடியும் என்றே தோன்றவில்லை வெற்றிக்கு.

அதுமட்டுமல்ல அந்த கேஸ் கோர்ட்டில் நிற்காது ஈசியாக ஜெயித்து விடாலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அப்படியே நித்திலா வாபஸ் வாங்கினாலும் திங்கள்கிழமைதான் வாங்க முடியும்.

 எப்படி இருந்தாலும் பாரி இரண்டு நாட்கள் ஸ்டேஷனில் இருப்பதை தவிர்க்க முடியாது. திங்கள்கிழமை ஜாமீனிலே எடுத்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டவன் நித்திலாவிடம் வாயே திறக்கவில்லை. 

பாரியை ஸ்டேஷனில் வைத்திருக்கும் விஷயம் தெரிந்ததும் கொந்தளித்த குப்பத்து ஆட்களையும் தாமஸ்ஸூம் வெற்றியும் சேர்ந்து சமாதானப்படுத்தியிருந்தனர். 

கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகளின் கண்ணீரோடும், உற்றார் உறவினர்களின் இரங்கல்களோடும் பரசுராமனின் இறுதி பயணம் மறுநாள் சனிக்கிழமை துவங்கியது. ஆறடி மனிதனின் இறுதி கைபிடி கலயத்தில் அடங்கிவிட அவரது அஸ்தியோடு வீடு வந்து சேர்ந்தனர். 

பாக்கியலஷ்மி கணவரின் மாலை போட்டு பொட்டிட்ட படத்தின் முன் சுருண்டிருக்க,  அவரை வற்புறுத்தி உணவு உண்ண வைத்த நித்திலா, சோர்ந்து இருந்த தம்பியையும் தேற்றிக் கொண்டிருந்தாள். 

எவ்வளவுதான் கழுத்தை இறுக்கும் அளவுக்குத் துக்கமிருந்தாலும் தாயையும் தம்பியையும் தேற்றும் பொறுப்பு தனக்கிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவள் கொஞ்சமாகத் தன்னைத் தேற்றிக் கொண்டாள். 

அப்பொழுது பரசுராமனின் மரணம் உறவினர்களால் அலசப்பட, யாரோ ஒரு ரௌடியை எதிர்த்து நித்திலா கொடுத்த புகார் பற்றி தெரிய வரவும் அதிருப்தியைக் காட்டினர் அனைவருமே. பாக்கியலஷ்மிக்குமே பயமாய் இருந்தது. 

“யாரு நித்திம்மா அந்த ரௌடி? அவனால உனக்கு எதுவும் பிரச்சனை வரப்போகுதுடா.”

“அம்மா, அதெல்லாம் எதுவும் வராதும்மா. போலீஸ் ஸ்டேஷன்ல அந்த இன்ஸ்பெக்டர் கேஸை மட்டும் வாபஸ் வாங்கிடாதீங்க. அந்த ரௌடிய நானே கவனிச்சிக்கிறேன்னு சொல்லியிருக்காரும்மா. போலீஸ் நம்ம பக்கம் இருக்கறப்ப என்னம்மா பயம்.” வெகுவாக நம்பிக்கையிருந்தது அவளது குரலில். 

“இதோட முடியுமா இது. நாளைக்கு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுவான், கோர்ட்டுக்கு வரச் சொல்லுவான். எந்தம்பி இருந்தப்ப எப்புடி வளர்த்தான் உங்கள. அவனே போயிட்டான். நீ கோர்ட்டு கேசுன்னு அலையப் போறீயா?” நித்திலாவின் அத்தை வசந்தா திட்ட மற்ற அத்தைகளுமே அதையே ஆமோதித்தனர். 

“என்ன அத்த பேசறீங்க நீங்க? அப்பா எந்த வம்புக்குமே போக மாட்டாங்க. அவரை ஒருத்தன் அடிச்சிருக்கான். அவனை எப்படி சும்மா விடமுடியும்?” கண்ணீரோடு கேட்டவளின் நியாயம் எல்லாருக்குமே புரிந்தது என்றாலும் நடுத்தர மக்களின் இயல்பான பயமும் இருந்தது அவர்களிடையே. 

“அதில்லடா… நம்ம ஊராயிருந்தாலும் பரவாயில்ல நாங்கல்லாம் கூட இருப்போம். இங்க நீங்க இனி தனியா இருக்கனும். எதாவது பிரச்சனைன்னா நாங்க அவசரத்துக்கு உடனே ஓடி வரமுடியாது. 

அதுமட்டுமில்ல புகார் குடுத்திருக்கறது சாதாரண ஆள் மேலன்னாலும் பரவாயில்ல யாரோ ரௌடிங்கற…  இப்ப பேப்பர்ல வர்ற நியூஸெல்லாம் பாக்கறப்ப இந்த சென்னைய நினைச்சாலே பயமா இருக்கு நித்திம்மா. 

இவ்வளவுநாள் உங்களுக்கு பாதுகாப்பா இருந்த மாமாவும் இப்ப இல்ல. நம்ப நிக்கி சின்ன பையன். எதாவது பிரச்சனைன்னா அவனால என்ன செய்ய முடியும்? யதார்த்தத்தை யோசிச்சி பாரு நித்திலா.” தன்மையாகவே எடுத்துரைத்தான் பெரிய அத்தை உமாவின் மகன் அருணாசலம். 

ஆனால், அந்த நேரம் தன் தந்தையின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு சிந்தனைகள் இல்லை நித்திலாவிடம். நாதன் அன்று கொடுத்திருந்த உறுதி, நம்பிக்கையாய் வைத்திருந்தது அவளை. 

‘அவ்ளோ பெரிய ரௌடியா அவன்! என்ன செஞ்சிடுவான். எங்கப்பா சாவுக்கு காரணமான அவனை சும்மா விடமாட்டேன்’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டவள் உறவினர்களைப் பேசி சமாளித்திருந்தாள். 

ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் நாள் காரியம் முடியவுமே உறவினர்கள் அனைவரும் சென்று விட பரசுராமன் இல்லாத அந்த வீடே வெறுமையாய் உணர வைத்தது மூவரையும். 

*****