ஆழி சூழ் நித்திலமே,.. 18 (அ)

1596006291531

18(அ)

கடவுளையும் கணவரையும் நினைத்து மனமுருக மகளின் நல்வாழ்வுக்காய் பிரார்த்தித்தபடி இருந்த பாக்கியலஷ்மி, எதிர்பாராத குழப்பமாய் நடந்து முடிந்திருந்த இந்த திருமணத்தை அதிர்ந்து பார்த்திருந்தார்.

ஒரு சில நொடிகள் அனைவருமே ஸ்தம்பித்துதான் போயிருந்தனர் பாரியின் செயலில். முதலில் சுயத்துக்கு வந்த வசந்தாதான்,

“டேய், யார்ரா நீ?” என்று அலறியவள்,

அருகே நின்றிருந்த தனது மகனிடம், “நீ தாலிகட்ட வேண்டிய பொண்ணுக்கு எவனோ ஒருத்தன் வந்து தாலியக் கட்டியிருக்கான். நீ என்னடா மரம் மாதிரி பார்த்துக்கிட்டு நிக்கிற?” என்றலற.

தாயின் வார்த்தைகளைக் கேட்டு வீரம் வந்தவன் போல ராஜசேகர் பாரியின் மீது பாய்ந்தான். சேர்த்து வைத்திருந்த மொத்த கோபத்தையும் திரட்டி பாரி விட்ட ஒரு அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீர் தட்டுகளில் போய் விழுந்தான் ராஜசேகர்.

ஆயிரம் இருந்தாலும் ராஜசேகர் தங்களது உறவினன். எவனோ ஒருவன் திருமணத்தில் வந்து மணப்பெண்ணுக்கு அத்துமீறி தாலி கட்டியதுமில்லாமல், மாப்பிள்ளையாய் நின்றிருந்தவனையும் அடிப்பதா என்று அதிர்ந்து போன நித்திலாவின் உறவினர்கள், பாரியை சூழ்ந்து தாக்க முயல…

பாரியின் பின்னோடு வந்திருந்த வெற்றியும் தேவாவும் அவர்களை எளிதாய் தடுத்திருந்தனர்.

வாக்குவாதங்களும் கைகலப்புமாய் சூழல் மாறியது. இடையில் புகுந்த ராஜசேகர் வெற்றி மற்றும் பாரியால் பலமாய் கவனிக்கப்பட்டான்.

இப்படி பெரும் கூச்சலும் குழப்பமுமாய் சூழலிருக்க, அதையெல்லாம் பார்த்தபடி நின்றிருந்த நித்திலாவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சியும் முகத்தில் தென்பட்ட மிரட்சியும் பாக்கியலஷ்மியின் மனதை உலுக்கியது.

‘ஐயோ! இனி என் மகளின் வாழ்வு என்னாகுமோ?’ என்ற மனக்குமுறலோடும், “நித்திம்மா…” என்ற அலறலோடும் தளர்ந்து மடங்கி அமர்ந்தார்.

மடங்கிச் சரிந்த பாக்கியலஷ்மியைப் பார்த்ததும் மற்றதெல்லாம் பின்னுக்குப் போக, அம்மா என்றழுதபடி வந்து பாக்கியலஷ்மியைத் தாங்கிக் கொண்டாள் நித்திலா.

அதுவரையில் நிகழ்வுகளை செய்வதறியாமலும் நம்பமுடியாமலும் வெறித்துக் கொண்டிருந்த நிகிலேஷ் தாயின் அலறலில் சுயத்துக்கு வந்தவன், அவனும் வந்து பாக்கியலஷ்மியைத் தாங்கிக் கொண்டான்.

உமாவும் உடனடியாக அருகே வந்து பாக்கியலஷ்மியின் மாத்திரையை எடுத்துக் கொடுத்து விழுங்கச் செய்தவள், தண்ணீரையும் குடிக்கச் செய்து ஆசுவாசப் படுத்தினாள்.

ஈனஸ்வரத்தில், “நித்தி… நித்திம்மா…” என்றழைத்தபடி கன்னம் வருடிய தாயின் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நித்திலாவுக்கு,

பாக்கியலஷ்மிக்கும் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பெரும் பயம் ஆட்கொண்டதில் தன்னைமீறி வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,

“அம்மா, ப்ளீஸ்ம்மா ரிலாக்ஸா இருங்க. எனக்கு ஒன்னுமில்லம்மா. எல்லாம் சரியாகிடும்மா.” என்று திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தாள்.

இவ்வளவு களேபரங்கள் கோவிலுக்குள் நடந்து கொண்டிருக்க, கோவில் வாசலில் இரண்டு வேன்கள் சர்… சர்ரென்று வந்து நின்றன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வசந்தாவின் மருமகள் குடும்பத்தினர் அவ்வளவு பேரும் வந்திருந்தனர்.

குலதெய்வம் கோவிலுக்குப் போயிருந்த நேரத்தில் ராஜசேகரின் திருட்டுத் திருமணசெய்தி கிடைத்ததால் கொதித்துப்போன அங்காளி பங்காளி அனைவரும், வசந்தாவின் மீதும் ராஜசேகரின் மீதும் பெரும் வெறியோடு படைதிரண்டு இரண்டு வேன்களில் வந்திருந்தனர்.

கன்னியாக்குமரியிலிருந்து சென்னைவரை கிட்டத்தட்ட பதினாறு மணிநேரங்கள் உண்ணாமல் உறங்காமல் வண்டியை ஒரு இடத்தில்கூட அநாவசியமாய் நிறுத்தாமல் விரட்டிக்கொண்டு வந்திருந்தனர்.

தங்கள் மகளின் வாழ்வு என்னாகுமோ ஏதாகுமோ என்ற பதட்டமும், வசந்தா ராஜசேகரின் மீதான கோபமும் ஒருங்கே சேர்ந்து கொந்தளிப்போடு வந்தவர்கள், வந்த வேகத்தில் ஒருவரையும் சட்டை செய்யாமல் ராஜசேகரை கோவிலின் வெளிப்பிரகாரத்திற்கு இழுத்துவந்து, தூக்கிப்போட்டு மிதிக்கத் துவங்கினர்.

மகனைக் காக்க இடையில் வந்து விழுந்த வசந்தாவுக்கும் பாரபட்சமின்றி மிதி விழுந்தது.

குற்றுயிரும் குலையுயிருமாகத் தரையில் கிடந்தவனை இழுத்துக்கொண்டுபோய் தாங்கள் வந்திருந்த வேனில் ஏற்றிய ராஜசேகரின் மச்சினன்கள், அழுது அரற்றியபடி இருந்த வசந்தாவிடம்,

“மொத மருமக, எங்க தங்கச்சி குத்துக்கல்லாட்டம் இருக்கும்போதே உம்மகனுக்குத் திருட்டுத்தனமா ரெண்டாம் கல்யாணமா பண்ற? வகுந்து போட்ருவோம் உன்ன. எங்கவீட்டுப் புள்ள வாழ்க்கைக்காகதான் இதுவரை அடங்கிப் போனோம்.

இனி உங்க ஊரு பஞ்சாயத்துக்குலாம் நாங்க கட்டுப்பட மாட்டோம். உன்னால ஆனதைப் பார்த்துக்க.
உம்புள்ள எங்க கண்பார்வையில, எங்க ஊர்ல, எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையா ஒழுங்கா இருந்தான்னா அவனுக்கு உசிராவது மிஞ்சும்.

இல்லைன்னா எந்தங்கச்சிக்காக அவனை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குக்கூட நான் போவேன்.”

எச்சரித்தவர்கள் வேனைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டனர். நடுநடுவே பேச வந்த வசந்தாவின் உறவினர்கள் ஒருவரையும் தம்படிக்குக்கூட மதிக்கவில்லை அவர்கள்.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத வசந்தாவைத் தேற்றி, “இனி இங்கயிருந்து என்ன பண்ணப்போற. ஊருக்குப் போய் உன் மருமக வீட்ல எதனா பேசிப் பார்க்கலாம் வா”

என்று தாங்கள் வந்த வண்டியில் வசந்தாவை ஏற்றிக்கொண்டு வந்திருந்த உறவினர்களும் பின்னோடு கிளம்பிவிட பெரும் புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அந்த இடமே.

நடப்பது என்னவென்றே புரியாத அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்த பாக்கியலஷ்மிக்கு வசந்தாவின் உண்மை முகத்தை எடுத்துச் சொன்ன உமாவும் அருணாச்சலமும், வசந்தாவின் மருமகள் வீட்டினரை வரவழைத்து கல்யாணத்தை நிறுத்த தாங்கள் முயன்றதைக் கூறினர்.

“ராஜசேகர் கையால தாலி வாங்காம நம்ம புள்ள தப்பிச்சுதேன்னு நினைச்சிக்க லஷ்மி. உன்னோட உடல்நிலையவும் மனநிலையவும் காரணம் காட்டி, உம்பொண்ணு இந்தக் கல்யாணத்தை நிறுத்த நினைக்காதீங்கன்னு எங்க கைய கட்டிப் போட்டுட்டா.

தன்னோட வாழ்க்கையே அழிஞ்சாலும் பரவாயில்ல அம்மாவோட நிம்மதிதான் முக்கியம்னு நினைச்ச புள்ளையோட வாழ்க்கைய, எந்தம்பிதான் கூடவேயிருந்து காப்பாத்தினதா நான் நினைக்கிறேன்.

பட்டுக்கோட்டைக்காரனுங்களைக் கடைசிவரை காணலங்கவும் நாங்க பட்ட தவிப்பையெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாது.

ஆனா, கடவுளே நேர்ல வந்து அவ வாழ்க்கைய காப்பாத்தின மாதிரிதான் எனக்குத் தோனுது. இனி நம்ம புள்ள வாழ்க்கைதான் நமக்கு முக்கியம். அந்தப் பையனோட வீட்டுப் பெரியவங்ககிட்ட பேசி நல்லமுடிவா எடுக்கனும் லஷ்மி.”

நடந்த களேபரங்களை அதிர்ச்சியாகவும் வியப்போடும் பார்த்துக் கொண்டிருந்த கோவில் குருக்கள், “என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல இப்படியொரு கல்யாணத்தை நான் பார்த்ததேயில்ல.

ஒரு மோசக்காரன் கையில உங்க பொண்ணு வாழ்க்கை சிக்காம அந்த அம்பாள்தான் காப்பாத்திருக்கா. அவ சந்நிதானத்துக்குள்ள அநியாயம் நடக்க விட்ருவாளா?

லஷ்மிம்மா நேக்கென்னவோ இது தெய்வ சங்கல்பமா தோன்றது. அவசரப்படாம, அந்த பையனாத்துக்காராளோட நிதானமா பேசி முடிவெடுங்கோ.” என்றபடி கோவில் மண்டபத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்றார்.

இதற்கிடையில் வெற்றி மகேந்திரனுக்குப் ஃபோன் செய்து பாரிக்குத் திருமணம் நடந்த விபரத்தை சொல்ல, அதிர்ந்துபோன அவரும் உடனடியாகக் கிளம்பி வந்திருந்தார். நடந்ததை அவருக்கு விளக்கமாகக் கூறினான் வெற்றி.

பாரி செய்த செயலை ஏற்கவும் முடியவில்லை, அதேநேரத்தில் அதை தவறென்று கூறவும் முடியவில்லை மகேந்திரனால். இருந்தாலும்,

“என்னா காரியம்டா பண்ணி வச்சிருக்கீங்க? அந்தப் பொண்ணோட மனசைப் பத்திக் கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தீங்களாடா?

கல்யாணத்தை நிப்பாட்ட வேற வழியேத் தோனலையா உங்களுக்கு.” பாரியையும் வெற்றியையும் கடுமையாகக் கடிந்து கொண்டார்.

“அப்பா, பாரி அந்தப்புள்ள மேல உசுரையே வச்சிருக்கான்பா. அந்தப்புள்ள வாழ்க்கை நல்லாயிருக்கனும்னுதான் இவ்ளோ நாளு ஒதுங்கி நின்னான். கடைசி நேரத்துல இப்படிங்கவும் எங்களுக்கு வேற வழி எதுவும் தோனலப்பா.

அந்த நேரத்துல பாரியத் தவிர வேற யாராலயும் அந்தப் பொண்ணு வாழ்க்கைய நல்லபடியா வச்சிக்க முடியாதுன்னுதான் எனக்குத் தோனுச்சி. அதான் தாலியக் கட்டச் சொன்னேன்.” மெல்லிய குரலில் விளக்கம் கொடுத்தான் வெற்றி.

“பாரி விரும்பினா மட்டும் போதுமாடா? உன் நண்பன் பண்ணியிருக்கறது கட்டாயக் கல்யாணம். அவன் தாலி கட்டினதும் அந்தப் பொண்ணு உடனே அவன்கூட வாழ வந்திரனுமா? அந்தப் பொண்ணுக்குன்னு ஒரு மனசு இல்ல. அதைப்பத்தி யோசிச்சீங்களாடா? முட்டாப்பசங்களா?”

பதிலே கூற முடியாமல் அமைதியாய் நின்றனர் இருவரும்.

“இந்த விஷயத்துல அவங்க குடும்பமும் அந்தப் பொண்ணும் என்னா முடிவு எடுக்கறாங்களோ அந்த முடிவுதான் என் முடிவும். அது எதுவா இருந்தாலும் நீ கட்டுப்பட்டுதான் ஆகனும் பாரி.” என்றவர்,

சற்று வாடிய முகத்தோடு, “சரிங்கய்யா” என்ற பாரியைப் பார்த்து,

“இப்பவரைக்கும் தாலியக் கழட்டி உன் மூஞ்சில வுட்டெறியல அந்தப்புள்ள. அதுக்கே நீ சந்தோஷப்பட்டுக்கனும்.”

“…”

“அவங்க என்ன சொல்றாங்கன்னு அவங்களோட பேசிப் பார்க்கலாம் வா” என்றபடி கோவில் மண்டபத்தினுள் நுழைந்தார். வெற்றி, பாரி, தேவா, சவரி அனைவரும் அவர் பின்னே சென்றனர்.

அங்கேயிருந்த இருக்கையில் பாக்கியலஷ்மி தளர்ந்துபோய் அமர்ந்திருக்க, அவரது கைகளைப் பற்றியபடி அருகே அமர்ந்திருந்தாள் நித்திலா.

கண்களை மூடி அமைதியாய் அமர்ந்திருந்தாலும் பாக்கியலஷ்மியின் மனதுக்குள் பெரும்புயல் வீசிக்கொண்டிருந்தது.

‘இப்படியும் ரத்த சொந்தங்கள் இருப்பார்களா? நித்திலா யார் வசந்தாவுக்கு? உடன்பிறந்த தம்பியின் மகள். அவளது வாழ்க்கைபற்றி ஒரு நொடிகூட யோசிக்கவில்லையா அவள்? அவ்வளவு சுயநலமாகவா மனிதர்கள் இருக்கின்றனர்?’ மனதே ஆறவில்லை அவருக்கு.

‘என் மகளுக்கு எப்பேர்ப்பட்டக் கெடுதலை நானே செய்யவிருந்தேன்?’ எண்ணியதும் உடல் தானாய் தூக்கிப் போட்டது. தாய் மனம் மருகுவதை உணர்ந்து கொண்டவள்,

“அம்மா, ப்ளீஸ்ம்மா எதையும் நினைக்காம அமைதியா இருங்கம்மா.”

“உன்னோட வாழ்க்கை…?” மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் பாக்கியலஷ்மி மௌனமாய் கண்ணீர் வடிக்க, அங்கிருந்த அனைவருக்குமே மனம் பாரமாய் போனது.

“லஷ்மி அவங்க பேச வராங்க பாரு. நீ அமைதியா இருந்தாதான் தெளிவா யோசிக்க முடியும். இப்ப நாம நிதானமா யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். மனச அமைதியா வச்சிக்கோ.” உமா அதட்டவும் சற்று நிமிர்ந்து அமர்ந்தார் பாக்கியலஷ்மி.

மகேந்திரன் வரவும் அவருக்கு ஒரு இருக்கையை எடுத்துப் போட்டார் கோவில் குருக்கள்.

“வணக்கம் லஷ்மிம்மா.” என்று கும்பிட்டவாறு பாக்கியலஷ்மியின் எதிரே அமர்ந்து கொண்டார் மகேந்திரன். பதிலுக்கு கும்பிட்டாலும், தெளிவற்ற முகத்தோடு தளர்ந்து போயிருந்தவரை கரிசனத்தோடு அளவிட்டுக் கொண்டது மகேந்திரனின் விழிகள்.

“லஷ்மியம்மா, நானும் ரெண்டு புள்ளைங்களோட தகப்பன். இப்ப உங்க மனசு உங்க பொண்ணோட வாழ்க்கைய நினைச்சி பாடுபடறது எனக்குப் புரியுது.” கணீர் குரலில் பேசியவர், சற்று இறங்கிய மன்னிப்புக் கேட்கும் த்வனியில்,

“கல்யாணத்தை நிறுத்தனும்னா எத்தினியோ வழியிருக்கு, பசங்க அறிவுகெட்டத்தனமா இப்படி பண்ணிட்டானுங்க. அதுக்காக எல்லார்கிட்டயும் முதல்ல மன்னிப்புக் கேட்டுக்கறேன்.”

“ஐயா, பெரியவங்க நீங்க… மன்னிப்புக் கேக்கறதால என்னங்க ஆகிடப் போகுது? அடுத்து என்ன செய்யறதுன்னுதான் நாம யோசிக்கனும்.” மகேந்திரனை இடைமறித்து அருணாச்சலம் பேச, அதை ஆமோதித்தவர், தன்னைப் பற்றிய விவரங்களைக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“பாரி எங்‌‌க வூட்டுப் பையன்‌. அதனால மட்டும் நான் பேசலங்க. அந்தப் பொண்ணோட வாழ்க்கையவும் மனசுல வச்சிதாங்க பேசறேன்.

பாரிக்குப் பத்து வயசு இருக்கும்போதே அவனைப் பெத்தவங்க சுனாமில இறந்துட்டாங்க. அவன்கூட தூரத்து உறவா அவனோட ஆயாவும் அவுங்க பேத்தியும்தான் இருக்காங்க.

அவன் பெருசாப் படிக்கலைங்க. மீன்பிடி தொழில்தான் எங்களது. குப்பத்துல அவனுக்கு சொந்தமா வீடு நிலமெல்லாம் இருக்கு. அவன் பேர்லயே ரெண்டு போட் இருக்கு. அதுமட்டுமில்ல, எம்மவனும் அவனும் சேர்ந்து ஐஸ் பேக்டரி ஒன்னும் வச்சிருக்கானுங்க.”

அவர் பேசப் பேச சலனமில்லாத முகத்தோடு பார்த்திருந்தனர் அனைவரும்.

“அவனோட இந்த இருபத்தேழு வயசுக்கு அவனுக்கு வரும்படி நல்லாவே இருக்குது.

அதுமட்டுமில்ல காசிமேடு மீனவர் சங்கத்துல நல்ல பொறுப்புல இருக்கான். இன்னும் பெரிய ஆளாவும் வருவான்.
எந்தவிதமான கெட்ட பழக்கமும் அவனுக்குக் கிடையாது. அதுக்கு நான் கேரண்டி தரேன்.”

“…”

“இதெல்லாம் நிஜமா நான் பெருமைக்காக சொல்லலங்க… வீட்ல பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கிறோம்னா நாலையும் அலசி ஆராய்வோமில்லையா அதுக்காகதான் சொல்றேன்.”

“…”

“ரொம்ப நல்லவன். பாசக்காரன். வேண்டியவங்களுக்கு ஒன்னுன்னா உசுரக்கூடத் தருவான். என்ன…? கொஞ்சம் முன்கோபம், அவசரபுத்தியிருக்கு அவனுக்கு. அது உங்களுக்கே நல்லாத் தெரியும்.” சற்று சங்கடமாய் சொல்லிக் கொண்டவர்,

“கடவுள் சந்நிதானத்துல நடந்த இந்த கல்யாணம் காலத்துக்கும் நிலைச்சு நிக்கனும்ங்கிறதுதான் என்னோட விருப்பம்ங்க. எங்க எல்லாரோட விருப்பமும் அதுதான்.

ஆனா, கல்யாணம்ங்கறது ஒரு நாள் கூத்தில்ல. இன்னையோட பேசி பஞ்சாயத்து பண்ணி முடிக்கிற விஷயமுமில்ல. ரெண்டு பேரும் மனசு ஒப்பி காலம் முழுக்க வாழனும். குலம் தழைக்கனும்.”

“…”

“வீட்டுக்கு வாழவர்ற மகராசி மனசுநிறைய சந்தோஷமும் நிம்மதியும் சீரா எடுத்து வரனும்னு நினைக்கிறவன் நான். அந்தப்புள்ளைய கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்தி இந்த பந்தத்துல சிக்கவைக்க எனக்கு விருப்பமில்லங்க.”

“…”

“லஷ்மியம்மா, உங்க முடிவும் உங்க பொண்ணோட முடிவும்தான் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்க பொண்ண நிறைஞ்ச மனசோட பாரி வீட்டுக்கு வாழ அனுப்ப உங்களுக்கு விருப்பமா? உங்க பொண்ணுகிட்டயும் கலந்து பேசி உங்க விருப்பத்தைச் சொல்லுங்க.

அந்தப் புள்ளைக்கும் விருப்பமிருந்தா சந்தோஷமா சேர்த்து வைப்போம்.

அப்படி உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்துல, நடந்தத ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திட்டு, இந்த கோவில் உண்டியல்லயே பாரி கட்டின திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக்கிடுங்க.

வருங்காலத்துல என்னைக்குமே உங்க பொண்ணோட வாழ்க்கையில குறுக்க வரமாட்டேன்னு அவனை கைபட எழுதி கையெழுத்துப் போட்டுத் தரச்சொல்றேன். சாட்சிக்கு நாங்களும் போட்டுத் தரோம்.

நீங்க ரெண்டு பேரும் நல்லா யோசிச்சி சொல்லுங்க. நீங்க சொல்றதுதான் இறுதிமுடிவு. உங்க முடிவு எதுவாயிருந்தாலும் அதுக்கு நாங்க கட்டுப்படுவோம்.”

மகேந்திரன் பேசி முடிக்கவும் அங்கே நித்திலாவின் விசும்பலைத் தவிர வேறு ஓசையின்றி பெரும் நிசப்தம்.

நித்திலாவின் வீட்டினர் பேசி முடிவெடுக்கட்டும் என்று இவர்கள் சற்று தள்ளி அமர்ந்து கொண்டனர்.