2
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூர்… லட்சுமிபுரம்… ஓரளவு வசதியானவர்கள் வசிக்கக்கூடிய பகுதி. புறநகர் ஏரியா. ஸ்ரீராம் அப்பார்ட்மெண்ட்… தளத்திற்கு நான்கு வீடுகள் வீதம் நான்கு தளங்களைக் கொண்டு நிமிர்ந்து நின்றது.
மூன்றாவது தளத்தில் கிழக்குபுறம் இருந்த வீட்டின் மூடிய கதவுகளை மீறி மிகச் சப்தமான இசை வெளியே கசிந்து கொண்டிருந்தது..
ஹேய் பேட்ட பாய்…
ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய்…
பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய்…
காசு இல்லாட்டிகூட ஹேப்பி பாய்…
ஜில் ப்ரோ… ரொம்ப தில் ப்ரோ…
கோ பார் கில் ப்ரோ…
வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்…
வீறிட்டுக்கொண்டிருந்தது இசை… கூடவே அதற்குப் போட்டியாய் கத்திப் பாடியபடி நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான் ஒருவன். அவன் நிகிலேஷ். வளர்ந்தவனும் இல்லாமல் சிறுவனும் இல்லாமல் நடுத்தர வயது. பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் காலெடுத்து வைத்திருக்கும் இளம் பருவம். அரும்பு மீசையும் குறும்புப் பார்வையும் அணிகலனாகியிருந்தது.
இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் சோபா, கட்டில், சேர் என்று எதிர்ப்பட்ட அனைத்துப் பொருட்களின் மீதும் ஏறி தரையில் கால் பாவாமல் தாவிக் கொண்டிருந்தான்.
ஒரு நொடி அவன் நின்றாலும், அவனைச் சட்னியாக்கி விடும் வேகத்தோடு துரத்திக் கொண்டிருந்தாள் பெண். அவள்தான் நித்திலா. நிகிலேஷின் அக்கா.
பரசுராமன் பாக்கியலஷ்மி தம்பதியரின் சீமந்த புத்ரி. திருமணமாகி வெகு நாட்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் கோவில் கோவிலாக வேண்டித் தவமிருந்து பெற்ற மகள். கல்லூரியில் முதுகலை விலங்கியல் பட்டம் முதலாண்டு படிக்கும் பெண்.
பளீரென்ற பால் வண்ணத்தில் மின்னும் முத்து போன்ற நிறம். அவள் பிறந்து கையில் கொடுத்த போது அவளது தந்தைக்கு நிலவொளியில் மின்னும் நித்திலமாகத்தான் தெரிந்தாளாம்… காரணப்பெயர்.
அம்மாவுக்கு நித்திலா, நிதி, நித்தி, நிலா, எருமை, அடங்காத கழுதை, என்று சந்தர்ப்பத்துக்கு தகுந்த பெயர்கள் மாறிக்கொண்டே போகும்.
நிகிலேஷூக்கோ காரியம் ஏதும் கனிய வேண்டுமென்றால் நித்திக்கா, இல்லையென்றால் அவனுக்கு வாயில் வசதியாக வருவதெல்லாம் எதுகை மோனையோடு அவளுக்குப் பெயராக உபயோகித்துக் கொள்வான்.
ஆனால் அவளது தந்தைக்கு மட்டும் என்றுமே செல்லமாய் நிலாம்மாதான். தன் தாயின் சாயலில் பிறந்த மகள் மீது மிகுந்த பாசம் உண்டு அவருக்கு.
உயர்த்தி உச்சியில் எண்ணெய் தடவி ஊறுவதற்காக போடப்பட்ட நாரதர் கொண்டையும் முகம் கை கால்களில் போடப்பட்டிருந்த கடலைமாவு பேக்குமாக, பார்ப்பதற்கு வினோத ஜந்து போல இருந்தவளை மேலும் மேலும் கலாய்த்து வெறி ஏற்றிக் கொண்டிருந்தான் இளையவன்.
“டேய், மரியாதையா நில்லு. வந்து ஒரு அடி வாங்கிட்டுப் போயிடு.” ரோடு ரோலரை ஒற்றை ஆளாய் கையால் தள்ளியவள் போல மூச்சு வாங்கிக் கொண்டு கத்தியவளை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தபடி,
“எப்படியெப்படி… நாங்களே உங்ககிட்ட வந்து அடி வாங்கனும், அதுவும் மரியாதையா வேற வந்து வாங்கனுமா? அரை மணிநேரமா துரத்துற. உன்னால என்னை டச் பண்ண முடிஞ்சுதா? விளையாட்டுல தோத்த மாதிரி இதுலயும் நீதான் தோத்துட்ட… தோத்தாங்குளி தோத்தாங்குளி…” பழிப்புக் காட்டிக் கொண்டே ஓட மேலும் கடுப்பாகித் துரத்தினாள் பெண்.
“கையில மாட்டின செத்தடா மவனே.”
“மாட்டினாதான… முடிஞ்சா புடிச்சிக்கோ. இல்லைன்னா தோத்துட்டேன்னு ஒத்துக்கோ.” கூறிவிட்டு கையில் சிக்காமல் ஓட…
“ஃபிராடு… ஃபோர் டுவென்டி… ஏமாத்தி விளையாடி ஜெயிச்சிட்டு என்னைய தோத்தாங்குளி சொல்றியா? நில்லுடா?”
விடுமுறை தினமான அன்று காலையிலேயே சீட்டுக்கட்டு விளையாடியதில் நிகிலேஷிடம் நித்திலா தோற்றுவிட, ஏமாற்றித் தோற்கடித்துவிட்டான் என்று ஏற்கனவே ஏகப்பட்டக் கடுப்பில் இருந்தவளின் தலையில், “தோற்றதற்காக ஒரு கொட்டு” என்று அடித்து வைத்துவிட்டு ஓடியவனைத்தான் துரத்திக் கொண்டிருக்கிறாள்.
“நீ விளையாடத் தெரியாம விளையாண்டு தோத்துப் போனா… நான் ஃபோர் டுவென்டியா?” என்றபடி ஒரு நொடி நின்றவன் கையில் கிடைத்த தலையணையை அவள் மீது வீசி எறிய, தப்பாமல் அவள் முகத்தில் மோதி வீழ்ந்தது அது.
“அம்மா… இங்க பாரும்மா இவன…” உச்சஸ்தாயில் அம்மாவைத் துணைக்கு நித்திலா அழைக்க, இவர்கள் அடிக்கும் கூத்தில் ஏற்கனவே ஏகப்பட்டக் கடுப்பில் இருந்தவர், வெளியே வந்து ஹாலைப் பார்த்து அதிர்ந்து போனார்.
வீடெங்கும் சிதறிக் கிடந்த ப்ளேயிங் கார்டுகளும், தலையணைகளும் சோபா குஷன்களும் போர்க்களம் போலக் காட்டியது வீட்டை.
“என்னடி வீட்டை இப்படி பண்ணி வச்சிருக்கீங்க. பத்து நிமிஷத்துல வீட்டை ஒழுங்கு படுத்தல ரெண்டு பேருக்கும் உதை விழும். எருமை மாடுங்க மாதிரி வளர்ந்தாலும் இன்னும் சின்னப் பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு…
நித்தி, உன்னை குளிக்கப் போகச் சொல்லி எவ்வளவு நேரமாச்சு. எங்கயோ வெளிய போகனும்னு சொல்லிட்டு அவன்கூட வம்பு வளர்த்துக்கிட்டு இருக்கற? அப்பா வந்துடுவாரு இப்ப.”
“அம்மா, நான் ஒன்னுமே பண்ணல, அவன்தான் ஒட்டகம் மாதிரி வளர்ந்துகிட்டு என்னை தலையிலயே கொட்டுறான்.” மகள் சினுங்கியதும் மகனை முறைத்தவர்.
நிகிலேஷ், அக்காவ எதுக்குடா அடிச்ச? அப்பா வர்ற நேரத்துல வீட்டை எப்படி பண்ணி வச்சிருக்கீங்க. முதல்ல இதையெல்லாம் எடுத்து வைங்க ரெண்டு பேரும்.” அங்கங்கே பறந்து கிடந்த தலையணை புத்தகங்களைக் காட்டி அதட்டல் போட, தாயின் குரலில் அடங்கிய இருவரும் அமைதியாக வீட்டை ஒழுங்கு படுத்தினர்.
தந்தை என்ற வார்த்தை இருவரையும் கட்டுப்பட வைத்திருந்தது. அதற்காக பரசுராமன் டெரரான தந்தையெல்லாம் கிடையாது. தவறு செய்த பிள்ளைகளை அவர் பார்க்கும் குற்றம் சாட்டும் ஒற்றை பார்வையே தவறை உணர வைத்துவிடும். அதைமீறி அவர் அதிர்ந்து பேசியதைக் கூட கண்டதில்லை இவர்கள்.
தந்தையை மீறி எதையும் செய்ய துணிபவர்களும் இல்லை இருவரும். அந்த வயதுக்குரிய விளையாட்டுத்தனங்கள் இருக்குமே தவிர மிகவும் பொறுப்பான பிள்ளைகள் இருவருமே.
பரசுராமன் பாக்கியலஷ்மி தம்பதிக்கு திருமணமே மிகவும் தாமதமாக நடந்த ஒன்றுதான். குடும்பத்துக்காக தன்னையே ஓடாய் தேய்த்து உழைத்தவர் பரசுராமன். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவரின் தோள்களில் குடும்ப பாரம் தானாய் ஏறியது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் பரசுராமன். தனது பதினேழாவது வயதிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்து உள்ளூரிலேயே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியராய் தன் பயணத்தை துவக்கியவர், இடையில் மேலும் படித்து தன் தகுதிகளை உயர்த்தி இன்று அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியராய் பணிபுரிகிறார்.
தன்னுடன் பிறந்த மூன்று அக்காள்களுக்கும் திருமணம் செய்து வைத்து, தீபாவளி, பொங்கல், ஆடி சீர்களையும் சீமந்தம் பிள்ளை பேறு என்று கடமைகள் அனைத்தையும் பார்த்து முடித்து கடன்களை எல்லாம் அடைத்து நிமிரும் போது திருமண வயதைக் கடந்திருந்தார் அவர்.
திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அக்காள்களின் குடும்பங்களுக்காய் உழைத்துக் கொண்டிருந்தவருக்கு, வற்புறுத்தி தூரத்து உறவினப் பெண்ணான பாக்கிய லஷ்மியை மணமுடித்து வைத்த அவர் தாயார் தன் கடமை முடிந்ததாய் எண்ணிக் கண்மூடினார்.
பாக்கிய லஷ்மியும் பரசுராமனுக்கேற்ற பத்தினி. தன் வீட்டில் ஒற்றை பெண்ணாய் வளர்ந்ததாலோ என்னவோ கணவன் அவனுடைய தமக்கைகளுக்கு செய்யும் செய்முறைக்கோ மற்ற எந்த செயல்களுக்கோ எதிர்த்துக் கேள்வி கேட்பதோ தடை போடுவதோ செய்யாத மனைவி. சம்பாத்தியத்தில் பாதிக்கு மேல் தன் கணவரின் சகோதரிகளின் குடும்பங்களுக்கு செலவு செய்வதைத் தடுக்க நினைக்காமல் அனைத்திலும் கணவனுக்குத் துணையாய் உடனிருந்தவர்.
எப்பொழுதுமே குடும்பங்களில் பாரங்களை ஏற்றுச் செய்பவர் செய்து கொண்டே இருக்க வேண்டும். செய்வதை நிறுத்தினாலோ, தன் குடும்பம் தன் மக்கள் என்று வாழத் துவங்கினாலோ மோசமானவன், பாசமில்லாதவன், சுயநலவாதி என்ற பட்டங்கள் மட்டுமே கிடைக்கும். இது நிதர்சனம்.
திருமணமாகி நான்கைந்து வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு வரமாய் வந்து பிறந்தவள் நித்திலா. தனக்கென்று குழந்தை பிறந்ததும் செலவுகள் அதிகரிக்க, அடுத்தது நிகிலேஷூம் பிறக்க, தமக்கைகளுக்குச் செய்வதும் குறைந்து போனது.
அதற்குபின் பரசுராமனும் பாக்கிய லஷ்மியும் செய்யும் அனைத்திலும் குற்றம் குறை கண்டுபிடித்து, சண்டை போட்டு ஒதுங்கிக் கொண்டனர் அவரது உடன்பிறப்புகள்.
உடன்பிறப்புகளின் உண்மை முகத்தைக் கண்டு அதிர்ந்து போனாலும், ஏதும் பேசவோ சண்டை போடவோ மனதின்றி தானும் ஒதுங்கிக் கொண்டார் பரசுராமன்.
தமக்கைகளை தஞ்சாவூரைச் சுற்றியே திருமணம் செய்து கொடுத்திருக்க, இவருக்கு சென்னையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பதவி உயர்வுடன் கூடிய மாற்றல் வரவும் மாறிக் கொண்டார்.
பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் சென்னை வசதியாய் இருக்க, வாடகை வீட்டில் வாழ்க்கையைத் துவங்கினர். பின்னர் சிறுகச் சிறுக சேமித்து குருவிக்கூடு போல புறநகரில் அப்பார்ட்மெண்ட்டில் வீட்டையும் வாங்கி இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குடும்பத்தை இங்கு குடியமர்த்தினார். இதற்குள்ளாகவே அவருக்கு ரிடையர்டு ஆகும் வயதும் வந்துவிட்டது.
இந்த வருடம் பணி ஓய்வும் கிடைத்துவிடும். ஆனால் இன்னும் தன் பிள்ளைகளைக் கரையேற்றவில்லையே என்ற கவலை அவருக்கு உள்ளூர உண்டு. நிகிலேஷ் ஆண்பிள்ளை. கரணம் போட்டாவது பிழைத்துக் கொள்வான். நித்திலாவுக்கான கடமைகளை தான் நன்கு திடத்தோடு இருக்கும்போதே முடித்துவிட வேண்டும்.
தன் தமக்கைகளின் பொறுப்பு தனக்கு இருந்தது போல நிகிலேஷூக்கு எந்தப் பொறுப்பையும் தான் சுமத்தி விடக்கூடாது என்ற கவலை அவருக்கு உண்டு.
பாக்கிய லஷ்மிக்கும் அந்தக் கவலை நிரம்ப உண்டு. நித்திலா இளநிலைப் பட்டம் பெற்ற கையோடு அவளுக்கு வரன் பார்க்கச் சொன்னவர்தான் அவர். கணவர் பணி ஓய்வு பெறும் முன் பெண் பிள்ளைக்கான கடமைகளை முடித்துவிடத் துடித்தார்.
ஆனால், நித்திலாவின் பிடிவாதத்தாலும், தன் பிள்ளைகளுக்கு நிறைவான கல்விச் செல்வத்தை அளிக்க வேண்டும் என்கிற பரசுராமனின் ஆசையாலுமே அவள் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பது.
நித்திலாதான் பரசுராமனுக்கு இளவரசி. அவர் தாயின் மறுபிம்பம். அவளுடைய வாழ்க்கையைப் பற்றி ஏக கனவுகள் அவருக்கு உண்டு. அவள் மனதிற்கு பிடித்த வகையில் அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று எண்ணிக் கொள்வார்.
ஆனால், நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் என்ற ஒன்றை நாம் நினைக்கக் கூட மாட்டோம். தன் மகளின் வாழ்க்கை அவளுக்குச் சற்றும் பொருந்தாத ஒருவனோடு, அவளுடைய விருப்பத்திற்கு மாறான மனநிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிணைத்து வைக்கப்படும் என்பதை அறிவாரா அவர்.
காலம் போடும் கணக்குகளை நாம் அறிந்து கொள்ளாதவரை மட்டுமே நம் மன அமைதி நம்மிடம் நிலைக்கும். வரும் காலத்தில் நாம் படப்போகும் துன்பத்தில் ஏதேனும் ஒன்றை முன்பே தெரிந்து கொண்டாலும் நம் நிலை கவலைக்கிடமே… இது நித்திலாவுக்கும் பொருந்தும் பரசுராமனுக்கும் பொருந்தும்.
*****