ஆழி சூழ் நித்திலமே 21 (2)

ஆழி சூழ் நித்திலமே 21 (2)
“கயல் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?”
“இன்னா கேக்கனும்? கேளுக்கா.”
“ஆயா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படறாங்க. ஏன் அவங்க கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குற?”
“…”
தன்னால்தானே இவளது நியாயமான ஆசைகள் எல்லாம் நிராசையானது என்ற எண்ணம் நித்திலாவுக்குள் வலுவாய் இருக்க, தற்போது கயலின் பதில்கூறா மௌனம் குற்றவுணர்ச்சியைக் கூட்டியது.
“இ… இன்னும் பழசெல்லாம் நினைச்சிட்டுதான் இருக்கியா கயல்? அதனாலதான் கல்யாணம் வேணாங்கறியா?” இதைக் கேட்கையில் ஏனோ நித்திலாவுக்குள்ளும் ஒரு அதிர்வு. வார்த்தைகளில் மெல்லிய நடுக்கம்.
“சேச்சே… அதுலாம் ஒன்னியும் இல்லக்கா.” பட்டென்று வந்த கயலின் மறுப்பில் ஒரு ஆசுவாசத்தை உணர்ந்த நித்திலா,
“உன் மாமா உன்னை ஏமாத்துனது தப்புதான். அறிவில்லாம அவர் செஞ்ச வேலையால…” பேசிக்கொண்டே செல்ல, அவளை முடிக்கக்கூட விடாமல்,
“இன்னக்கா பேசுறீங்க? என்னிய மாமா ஏமாத்துனுச்சா…? அப்படின்னு உங்களுக்கு யாரு சொன்னா?” கயல் கோபத்தோடு வினவ,
“அது… வந்து… அன்னைக்கு இங்க எல்லாரும் பேசினாங்களே.” தயக்கமாய் வந்தன நித்திலாவின் வார்த்தைகள்.
“ஊர்ல யார்வேணா இன்னாவேணா பேசுவாங்கக்கா. அதெல்லாம் உண்மையாவுமா? என் மாமா ஒருநாளும் என்னாண்ட ஆச வார்த்தை பேசினதில்ல. தொட்டுகிட்டு பழகினதில்ல. என்னியத்தான் கட்டிக்குவேன்னு வாக்கு குடுத்துட்டு மாறல. எதுவுமே இல்லியேக்கா. அது என்னை ஏமாத்துனுச்சின்னு எப்படி சொல்ல முடியும்?” அவ்வளவு ஆதங்கம் கயலின் குரலில்.
“…”
“அதோட கண்ணுல இப்பவரை பாசத்தை மட்டும்தான் நான் பார்த்திருக்கேன்.
அது என்னய பாக்கற பார்வையகூட என்னிக்குமே மாத்திக்கலக்கா. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்லயிருந்து இப்ப வரைக்கும் அது ஒரே மாதிரிதான் இருக்கு.
அது என்னிய என்னைக்குமே ஏமாத்தலக்கா. நான்தான் எதைஎதையோ மனசுல நெனைச்சு என்னையே ஏமாத்திக்கினு இருந்திருக்கேன்.”
“…”
“ஆனா அப்ப எம்மனசு முழுக்க இருந்த ஆச எம் பார்வைய மறைச்சி இருந்துச்சி. அதும் பார்வையோட அர்த்தம் அப்ப எனக்குப் புரியல. ஆனா இப்ப, உங்க புருஷனா அதப் பாக்குறப்ப என்னோட தப்பு தன்னால எனக்குப் புரியுது.”
இப்போதும் இம்மியளவுகூட தன் மாமனை விட்டுக் கொடுக்காமல் பேசும் கயலின் பாசமும் நேசமும் நித்திலாவுக்கு நன்கு புரிய, பாரியின் மீது இன்னும் கடுப்பாய்தான் வந்தது அவளுக்கு.
“உன்னோட நெனைப்பும் ஒன்னும் தப்பில்லயே கயல். கூடவே வளர்ந்தவர் மேல ஆசைப்பட்டதுல என்ன தப்பிருக்கு? அவர் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். நீ அவர்மேல வச்சிருந்த நேசம் அவருக்குத் தெரியும்தான? உன்னைப் பத்தி ஒரு நிமிஷம் கூட யோசிக்கலயே அவரு.”
“ம்ப்ச்… இல்லக்கா… அந்த நேரத்துல அது மனசு முழுக்க தன்னால ஒரு உசுரு போச்சேங்கற குற்றவுணர்ச்சியும், தப்பு செஞ்சிட்டோமேன்னு மன ஒளைச்சலுந்தான்க்கா. அத சரி பண்ணிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கயில அதுக்கு வேற எதையுமே யோசிக்கத் தோனியிருக்காது.
அதுங் கண்ணு முன்னாடியே உங்க வாழ்க்கை வீணாப் போறதைப் பார்த்துக்கிட்டு எப்படி சும்மா இருக்கும் அது? அந்த நேரத்துல யாரப் பத்தியும் அதுக்கு நினைக்கத் தோனியிருக்காது. அதோட சூழ்நில எனக்கு நல்லாவே புரியுதுக்கா.
ஆனா அதுமட்டுமே உங்க கண்ணாலம் நடக்க காரணமில்ல.”
கேள்வியாய் கயலை நித்திலா நோக்க,
“இப்ப நான் சொல்றது புரியலன்னாலும் கட்டாயம் ஒருநாள் உங்களுக்கு புரியும்க்கா. பரிதாபத்துலயும் கட்டாயத்துலயும் மட்டும் உங்களை கண்ணாலம் பண்ணல என் மாமா.
அது மனசு என்ன சொல்லுதோ அதைதான் அது செய்யும். உங்க கண்ணாலமும் அப்படிதான்.”
தன் மாமனின் செயல் சரிதான் என்று உறுதியாய் வாக்குவாதம் செய்யும் கயல் எப்போதும் போல ஆச்சர்யமூட்ட, இவளது வாழ்க்கை நன்றாய் இருக்க வேண்டும் என்று உளமார நினைத்துக் கொண்டாள் நித்திலா.
“வயசு கம்மின்னாலும் எவ்வளவு மெச்சூர்டா பேசுற கயல்… பாட்டியோட ஆசையும் நியாயமானதுதான அதைப் புரிஞ்சுக்க மாட்டியா?”
“…”
“நீ எவ்வளவுதான் உன் மாமாவுக்கு சப்போர்ட் பண்ணாலும் அவர் பண்ணது தப்புதான். என் மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது. உன் வாழ்க்கைய தட்டிப் பறிச்ச குற்றவுணர்ச்சி எனக்குள்ள இருக்கு கயல்.
நீ நல்லபடியா கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தாதான் என் குற்றவுணர்ச்சி குறையும்.” சற்று வேதனையோடு வந்தன நித்திலாவின் வார்த்தைகள்.
“ஐயோ அக்கா! யாரோட வாழ்க்கையவும் யாரும் தட்டிப் பறிச்சுக்க முடியாது. கடவுள் போட்ட முடிச்சுக்கா உங்க கண்ணாலம். நீங்க இம்மாம் வெசனப்படத் தேவையே இல்ல.
புதுசா ஒரு வாழ்க்கைய ஏத்துக்கிட்டு வாழறதுக்கு எனக்கு கொஞ்ச நாளாவும்னு நெனச்சேனே தவிர கண்ணாலம் பண்ணாம இப்படியே இருக்கனும்னுலாம் நினைக்கவேயில்ல.
இப்ப என்ன? நான் கண்ணாலத்துக்கு ஒத்துக்கனும் அவ்ளோதான? ஆயாகிட்ட நான் கண்ணாலத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு சொல்லுங்க. மாமாவ சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுங்க.”
புன்னகையோடு கூறிய கயலை அணைத்துக்கொண்ட நித்திலா, “உன்னோட நல்ல மனசுக்கு உனக்கு நல்ல லைஃப் அமையும் கயல்.”
கயல் திருமணத்திற்கு சம்மதித்ததை ஆயாவிடமும் பாரியிடமும் கூற, வெகுவாய் மகிழ்ந்து போனவர்கள் கயலுக்காக வரன் பார்க்க முனைந்தனர்.
கயலுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைக்கையில் பாரிக்கு முதலில் நினைவுக்கு வந்தது என்னவோ வெற்றிதான். ஆனால் எப்படி அவனிடம் கேட்பது என்றுதான் புரியவில்லை.
அவர்களாய் பெண்கேட்டு வந்தால் பரவாயில்லை. தானாகப் போய் எப்படிக் கேட்க முடியும்? குழம்பியவன், கயலுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தையாவது அவன் காதில் போட்டு வைப்போம் என்று எண்ணியபடி அவனுக்கு அழைத்தான்.
பாரியின் அழைப்பை எடுத்ததும், “என்னடா புது மாப்ள…! இத்தினி நாளா ஃபோனே போடாம முறுக்கிக்கினு இருந்த. இப்ப இன்னாத்துக்கு ஃபோனைப் போட்டிருக்க?” நக்கலாய் வினவ…
“நியாயமா நான்தான் காண்டாவனும். நீ என்னவோ நக்கலடிச்சினுக்கற. உன்னைய அடக்க ஒரு ஆளு இல்ல பாரு.”
“என்னைய அடக்க வர்ற ஆளுகிட்ட நாங்க அடங்கிக்குவோம். உன் கதைய நீ சொல்லு. இன்னுமா உன்னைய உசுரோட வுட்டு வச்சிருக்குது அந்த புள்ள?”
“போடாங்… ரொம்ப நல்ல பொண்ணுடா அது. இன்னா சூழ்நிலையா இருந்தாலும் அதுக்குத் தகுந்தாப்ல அட்ஜஸ் பண்ணிக்குது தெரியுமா?
எம்மேல இருக்கற காண்டுல ஆயாகிட்டயும் கயலுகிட்டயும் பேசாமப் பூடுமோ பழகாமப் பூடுமோன்னு ரொம்ப பயந்துக்கினு இருந்தேன். ஆனா அப்புடியில்ல வெற்றி. அவுங்களோட அது உயிரா பழகுதுடா.
எம்மேல இருக்கற கோவம் கூட கொஞ்ச நாளு போனா சரியாப்பூடும்னு தோனுதுடா.”
பாரியின் குரலே அவன் மனநிறைவின் அளவைச் சொல்ல வெற்றிக்குள்ளும் பெரும் நிறைவு.
“ம்ம்… சரியாகிடும் பாரி. உன்னை உன் மனசை அந்தப் புள்ளைக்குப் புரிய வைடா. எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்.”
“ம்ம்… பேசனும் வெற்றி. எம்மனசுல இருக்கற அல்லாத்தையும் அதான்ட கொட்டனும். சீக்கிரம் பேசிடுவேன்.”
“தனியா எங்கனா கூட்டிக்கினு போ பாரி. அதுக்கு பறவைங்களை பார்க்கறதுன்னா ரொம்ப புடிக்குமாம். அந்த மாதிரி இடத்துக்கு கூட்டிக்கினு போ. அது மனசு சந்தோஷமா இருக்கும். அங்க போய் பேசு புரியுதா? சரி… என்ன விஷயமா ஃபோன் பண்ண?”
“அது ஒன்னியுமில்ல, கயலுக்கு மாப்ள பார்க்கலாம்னு யோசிக்கிறேன்.” பாரியின் வார்த்தையில் முகம் மலர்ந்தவன்,
“கயலு கல்யாணத்துக்கு ஒத்துக்கிச்சா?”
“பின்ன ஒத்துக்காமலா, மாப்ள பார்ப்பேன். அதுக்கு நல்ல மாப்ளையா பார்க்கனும் வெற்றி. எம்மாம் செலவானாலும் கண்ணாலத்தை ஜாம்ஜாம்னு பண்ணனும்.
உனக்கு எதனா நல்ல வரன் தெரிஞ்சா சொல்லுடா. நல்ல பையனா இருக்கனும். ஐயாகிட்டயும் சொல்லி நம்ம ஆளுங்ககிட்ட விசாரிக்க சொல்லனும். நானு சாயங்காலம் வூட்டுக்கு வந்து பேசறேன்.”
பாரி பேசிக்கொண்டே போக, மிகுந்த கடுப்பான வெற்றி,
“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சாயங்காலம் நானே வர்றேன் உங்க வீட்டுக்கு.” கடுப்போடு வார்த்தைகளைக் கடித்துத் துப்ப…
வெற்றியின் திடீர் கோபத்தில் குழம்பிப் போனான் பாரி.
“இன்னாடா இன்னா ஆச்சு? கோவமாக்கிறியா?”
“இல்ல நல்லா குளுகுளுன்னு இருக்கேன். கயலு கல்யாணம் பத்தி என்கிட்ட சொல்லிட்டல்ல. இனி அது என் பொறுப்பு. நீ மூடிக்கிட்டு ஃபோனை வை.” கடுப்போடு அலைபேசியை அணைத்த வெற்றி தனது வாகனத்தை வீட்டுக்கு விரட்டினான்.
மகேந்திரன் வீடு…
சமையலறையில் இட்லிக்கு மாவு அரைபட்டதும் பதம் பார்த்து வழித்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா. விடுவிடுவென்று உள்ளே வந்த வெற்றி,
“மதினி சீக்கிரம் வா. ஒரு இடத்துக்குப் போகனும்.”
வந்த வேகத்துக்கு விபரமேதும் கூறாமல் பரபரப்பாய் ரதிமீனாவை அழைக்க
“எங்கடா” கேள்வியோடு நோக்கினாள்.
“எனக்கு பொண்ணு பாக்கனும் பொண்ணு பாக்கனும்னு புலம்புவியே. இப்ப வா பொண்ணு பார்த்து பேசி முடிச்சிட்டு வரலாம்.”
ஒரு கை கிரைண்டருக்குள் மாவோடு இருக்க ஒரு கை வெற்றியின் பிடியில் இருக்க, வெற்றி இழுத்த இழுப்புக்குச் சென்றவள்,
“டேய் வெற்றி கைய விடுடா. கையெல்லாம் மாவு வழியுது பாரு. பொண்ணு பாக்கறதுன்னா சும்மாவா? உடனே வா வான்னா… கடையிலயா விக்குது பொண்ணு? உடனே வந்து வாங்கிக்குடுன்னு கேக்கற மாதிரி கேக்கற.”
“ம்ப்ச், ஏன் பேசி டைம் வேஸ்ட் பண்ற? நீதான எப்ப கல்யாணம் பண்ணிக்குவன்னு என்னைய டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்த?”
“அதுக்கு? பொண்ணு பார்க்க போறதுக்கு மாமா உங்கண்ணன் எல்லாரும் வேணாமா? ஜாதகமெல்லாம் பாக்க வேணாமா? முதல்ல பொண்ணு யார்டா?”
“அதெல்லாம் யாரும் வேணாம். நீயும் நானும் மட்டும் போய் முதல்ல பேசி முடிக்கலாம். அப்புறமா அவங்க வரட்டும். பொண்ணெல்லாம் உனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான் மதினி.”
“தெரிஞ்ச பொண்ணா? யார்ரா?”
“கயலு… கயல்விழி…” மிக மிருதுவாய் ஒலித்தது அவன் குரலில் அவள் பெயர்.
“கயலா? நம்ம கயலா? ஆனா… அவ…” முடிக்கவில்லை ரதிமீனா.
“அவதான் இந்த வீட்டு மருமக. வேற எதுவும் பேசாத. நீ வர்றியா? இல்ல நான் மட்டும் போயி பேசிட்டு வரவா? அந்தப் பரதேசி வேற கயலுக்கு மாப்ள பார்க்க என்கிட்டயே கேக்கறான்.” கடுப்போடு வெற்றி மொழிய,
விஷயம் விளங்கியது மீனாவுக்கு, வந்த சிரிப்பை மென்றவள், “நீ உள்ளுக்குள்ளயே வச்சிருந்தா நெஞ்சைப் பொளந்தாடா பார்க்க முடியும். சொன்னாதான எங்களுக்கு தெரியும். இரு கைய கழுவிட்டு சேலை மாத்திட்டு வரேன்.”
‘எங்க சொல்றது? என் லவ்வே ஊசலாடிக்கிட்டு இருந்துச்சி. எதைச் சொல்லுவேன் நான். இப்பதான் அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும்தான் எனக்கே நம்பிக்கை வந்திருக்கு.’ தனக்குள் முணுமுணுத்தவன்,
“ஏன் இந்த சேலையே நல்லாதான இருக்கு இப்புடியே வா” என்க,
“போடா… எடுத்து வச்ச புது சேலைங்களை எல்லாம் எப்பதான் நான் கட்றதாம். உனக்கு நடக்கற விசேஷத்துலதான் கட்ட முடியும்.
கொஞ்சம் பொறு அஞ்சே நிமிஷத்துல கிளம்பி வந்துடறேன்” என்றவாறு அறைக்குள் புகுந்து கொள்ள,
அவசர அவசரமாய் கிளம்பி வந்த ரதி மீனாவைப் பாரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் வெற்றி.
___ஆழி சூழும்.