இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 18

எப்பொழுதும் போல் பூஜை அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

அங்கிருந்தவர்களின் போட்டோவைப் பார்க்க மீண்டும் பழைய நினைவுகள் அவள் மனதை சூழ்ந்தது.

அன்று கோதை கூறியது இன்று நினைவில் வந்தது, ‘ஸ்ரீ ஏன் அதிகம் படிக்கவில்லை?’ மனம் யோசனையில் ஆழ்ந்தது.

அதே நேரம் போட்டோவை ஊன்றிப் பார்க்க அங்கிருந்தவர்களில் யாரிடமும் ஸ்ரீ சாயல் கொஞ்சமும் ஒட்டவில்லை மனம் மீண்டும் குழம்பியது. 

இதையெல்லாம் நினைத்தப்படியே பூஜை அறையை சுத்தம் செய்துக் கொண்டிருக்க, திடீரென விக்கல் வந்தது.

     “மனுஷன் பக்கத்துல இருந்தாலும் தொந்தரவு பண்ணுறான், தூரத்துல இருந்தாலும் நினைச்சே தொந்தரவு பண்ணுறான்” சலித்தவள், டைனிங் டேபிள் மேல் இருந்த நீரை எடுத்து குடிக்க, விக்கல் நின்றபாடில்லை.

மீண்டும் தண்ணீர் குடிக்க, விக்கலின் நாயகனே அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் மனதில் அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் விடைப் பெற்றிருக்க, அவன் மட்டுமே அவள் மனதில் நிறைந்து இருந்தான்.

அவனோடான இந்த வாழ்கை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இது எதனால் என்று அவள் ஆராய முற்படவில்லை. அவள், அவளது  கணவனை நேசிக்கிறாள் அது மட்டும்தான் அவளது எண்ணமாய் இருந்தது.

அவனை நினைத்து அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இவன் மாறினான் என்று. கல்யாணத்திற்கு முன் வீட்டில் அவளைப் பார்த்தாலும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளமாட்டான் அதிலும் அன்று அவளை எப்படி திட்டினான் அதற்கு நேர்மாறாக இப்பொழுது மாறியிருந்தான்.

ஷிவானியிடம் சரி வராது என்றுக் கூறியவன் இப்பொழுது அவளுக்கு எல்லாமுமாக இருக்கிறான். எப்படி, இப்படி மாறினான்?

இப்படியான  யோசனைகள் அவளவன் அருகில் இல்லாத போது அவளை அழுத்தும், அவன் அருகே வந்தானானால் மாயமாய் மறைந்து விடும். இன்றும் அப்படியே மறைந்து விட்டது. 

அவள் பல முறை தண்ணீர் குடித்தும் விக்கல் நின்றபாடில்லை, அங்கிருந்த  தண்ணீரை குடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடன் குறும்பு கொந்தளிக்க,

அவளின் முன் வந்து நின்று இன்னொரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி இவன் வாயில் சரித்துக் கொண்டான்.

இவன் செய்வதை அவள் பார்த்தும் பார்க்காமல் மறுபடியும் நீரை அருந்த,

வாய் முழுவதும் நீரை நிரப்பியவன், அவளை நெருங்கி வந்தவனின் கண்களில் குறும்பு தாண்டவமாடியது.

‘இவன் எதுக்கு இந்த பக்கம் வாரான்?’ இவள் கண்களை உருட்டி பார்க்க, அவன் கண்களால் சிரித்தான்.

அதற்குள் அடுத்த விக்கல் வந்திருக்க, 

அருகில் நெருங்கி, அவளை அணைத்தவன், அவளின் இதழோடு இதழ் பொருத்தி, தன் வாயில் இருந்த நீரை அவளில் கடத்தியிருந்தான்.

இவள், அவனிடமிருந்து விடுபட போராட, அதே நேரம் அவளின் விக்கலும் நின்றிருந்தது.

இப்பொழுது, அவளை விட்டு விலக்கியவன் அவளைப் பார்த்து வேகமாக சிரித்தான்.

வாயில் இருந்த தண்ணீரை வெளியே துப்பவும் முடியாமல், உள்ளே விழுங்கவும் முடியாமல் முழிக்க அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

அவள் காலை தரையில் உதைத்து முறைக்க, அவளின் கொலுசு ஓர் இன்னிசையை வெளியிட்டது.

அதை ரசித்தபடியே, அவளின் முகம் நோக்க, அப்படி ஒரு கோபம் அவளிடம்.

“எதுக்கு முறைக்குற, அதுதான் உன் விக்கலை நிறுத்திட்டேன்தானே? எப்படி என் அதிர்ச்சி வைத்தியம்?”   

‘இப்படி தான் நிறுத்துவியா?’ இவள் முறைக்க,

“எப்படி நிறுத்தினா என்னம்மா? உனக்கு விக்கல் நின்னுட்டுதானே, ஐயாவோட ட்ரீட்மெண்ட் எப்படி?” கண்ணடிக்க,

முகத்தை அந்த பக்கமாய் இவள் திருப்ப, அவள் முன் வந்து நின்றான் ஸ்ரீ.

‘வாயில் வைத்திருக்கும் நீரை விழுங்கு’ என்பதாய் இவன் பார்த்திருக்க, முகத்தை வேண்டுமென்றே மறுபக்கம் திருப்பினாள்.

அவள் முகத்தை திருப்புவது அவனுக்கு சிரிப்பை உண்டாக்க, “புப்” என்று இருந்த அவளின் ஒரு கன்னத்தை கண்டு முகத்தில் குறும்பு கொப்பளிக்க ஒரு விரல் கொண்டு அவள் கன்னத்தை அழுத்த வர,

அந்த நேரம் அவள், அவனை நோக்கி திரும்பினாள்.

இதை எதிர்பார்க்காத ஸ்ரீ, அதற்குள் அவளின் கன்னத்தை அழுத்த , அவளின் வாயில் இருந்த நீர் இப்பொழுது அவன் முகத்தில் அபிஷேகமாய் மாறியிருந்தது.

முகத்தை துடைத்தபடியே, இவளைப் பார்த்து முறைக்க,

சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள் வைஷ்ணவி. “என்ன பாக்குற? நீ தான ஆரம்பிச்சு வச்ச, இப்போ உன்கிட்டையே முடியுது பார்த்தியா?” என, 

“உனக்கு நல்லது பண்ண நினைச்சா? நீ என்னையே கிண்டல் பண்ணுவியா?” அவன் அவளை நெருங்க,

டேபிள் மேல் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் ஊற்றியவள் “அப்படி தான் பண்ணுவேன்” விலகி நகர,

“நான் எது பண்ணினாலும் எனக்கு திரும்பி பண்ணுவியா நீ?” இவன் முறைக்க,

“ஆமா பண்ணுவேன்” இவள் குரல் கொடுத்து ஓட,

சிரித்தபடியே இவன், அவளை துரத்த,

“ஆ… அம்மா” என்ற அலறல் அவளிடம் இருந்து வந்தது.

இத்தனை நாள் அவளின் கொலுசின் ஓசையில் இருந்தவனது, இதயம் அவளது அலறலில் அதிர்ந்து, அவளை நோக்கி வேகமாய் அவனை ஓட வைத்திருந்தது.

  அவளின் சத்ததில் ‘என்னதோ… ஏதோ?’ என்று சமையல் அறை நோக்கி சென்றான் ஸ்ரீ.

தரையில் அமர்ந்திருந்து கால்களை அழுந்த பற்றியிருந்த வைஷ்ணவியின் தோற்றம் அவனை கலங்க வைத்திருந்தது.

“என்னடி… என்ன ஆச்சு? என்ன பண்ணி தொலைச்ச?” இவன் டென்சனில் கத்த,

“உரல்ல இடிச்சுக்கிட்டேன், கால் வலிக்குது” என்றாள் சிறுபிள்ளையாய்.

“அந்த வாய் பேசுற? பாத்து வரமாட்டியா?” இவன் முறைக்க,

“நான் ஓடி வரும்போது தெரியாம இடிச்சிக்கிட்டேன்” என்றாள் மீண்டும்.

“அப்படி என்ன ஓட்டம் உனக்கு, இப்போ பாரு கால் எப்படி வீங்கி இருக்குனு?”

பெருவிரலுடன் சேர்ந்து, இரண்டாவது விரலும் வீங்க ஆரம்பித்திருந்தது.

“விக்கல் வந்தா அப்படிதான் குடிக்க தண்ணி தருவியா?”

“நான் எது பண்ணுனாலும் திருப்பி பண்ணுவ தான, நான் குடிக்க தண்ணி தந்தா, நீயும் தர வேண்டியது தான?” அவள் காலைப் பார்த்து இவன் முறைக்க,

“இனி நீ இப்படி பண்ணாத, நானும் ஓடமாட்டேன்” என்றாள் சிறுபிள்ளையாய்.

“சரி… சரி… இனி பண்ணல, கை குடு தூக்குறேன்”

“ஒன்னும்  வேண்டாம் நானே எழுந்துப்பேன்” என்றாள் வீம்பாய்.

“அப்ப சரி… இனி விக்கல் வரட்டும் ஸ்ட்ரால குடிக்க தண்ணி தாரேன்” என,

“வேண்டாம்… வேண்டாம்… இந்தா கையை பிடிச்சுக்கோ” என அவனை நோக்கி கையை நீட்டியிருந்தாள்.

கையை பிடித்து அவளை அப்படியே தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தவன், “ஏன்டி இப்படி எல்லாம் பண்ணுற?” குரல் மிகவும் கலங்கி இருந்தது ஸ்ரீக்கு.

“நான் வேணும்ன்னே பண்ணல, தெரியாம இடிச்சுக்கிட்டேன்” என்றாள் மெதுவாய்.

“பாத்து வரமாட்டியா? கண்ணை எங்க வச்சிருந்த?” வேகமாய்… கோபமாய் கத்த,

“நீ ஏன் இப்படி கத்துற?” அவனுக்கு மேல் இவள் கத்தினாள்.

“ஏன்டி இப்படி கத்துற?” முறைக்க,

“நீ மட்டும் கத்துற, நான் கத்த கூடாதா? உன் கத்தலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்றாள் வீரமாய்.

“நான் எது பண்ணுனாலும் நீயும் பண்ணுவியா?” அவளை நோக்கி குனிய,

“கால் வலிக்குது” என்றாள் அவன் முகம் பார்த்து.

இறங்கி இருந்த டென்ஷன் மீண்டும் அவன் முகத்தில் பரவ,

“இல்ல… இல்ல… மெதுவா வலிக்குது” என்றாள்.

“அதென்னடி மெதுவா?” இவன் முறைக்க, 

“ரொம்ப வலிக்கு ஸ்ரீ” என்றவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

அவளின் வலியை பார்த்திருந்தவன் கண்கள் கலக்கத்தை காட்டியது.

அவள் காலை, அவன் நன்றாக பார்க்க, வீக்கம் பாதத்தில் ஏற ஆரம்பித்திருந்தது.

“சரி… சரி… கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றவன், ஃபோன் எடுத்து ஷிவானியை அழைக்க,

அடுத்த நிமிடம் அவர்கள் முன் நின்றாள் ஷிவானி.

காலில் இருந்த கொலுசை கழட்டிய ஷிவானி, அவள் காலை ஆராய்ந்திருக்க,

அவனை மகிழ்வித்த அந்த கொலுசில்லாத வெறும் காலை முதல் முறையாக வேதனைப் பொங்க பார்த்திருந்தான் ஸ்ரீ.

***

வைஷு காலுக்கு மருந்திட்டு ஷிவானி கிளம்பவும், “கொஞ்ச நேரம் படுத்துக்கோ வைஷு நான் வயல் வரைக்கும் போயிட்டு வாரேன்” இவன் அவளிடம் கூற,

அவனின் கையை பிடித்தவள், “எங்க போற ஸ்ரீ, என்கூடவே இரேன்” அவனது கண்களைப் பார்த்து கூற,

அவள் கண்ணில் என்னக் கண்டானோ, “சரி” என்றவன் சிவாவை போனில் அழைத்தான்.

“என்ன ஸ்ரீ” என,

“வைஷுவுக்கு கால்ல அடிபட்டுட்டு சிவா, நீ கொஞ்சம் வயல் வரைக்கும் போயிட்டு வாரியா?”

“என்னாச்சு ஸ்ரீ அடிபலமா?”

“அதெல்லாம் இல்லா சிவா, ஜஸ்ட் சுளுக்குதான் ரெண்டு நாள் காலை கீழ ஊனாம இருந்தா சரியா போய்டும்னு ஷிவானி சொல்லிருக்கா. மத்தபடி பிரச்சனை இல்லை”

“ஓகே ஸ்ரீ பாத்துக்கோ. நான் இங்க கவனிச்சுகிறேன்” என்றவன் அழைப்பை நிறுத்திக் கொண்டான்.

அவனையே பார்த்திருந்தாள் வைஷு.

“என்னமா?” என,

“எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கணும்”

“வலிக்குதா?” என்றான் அவளது கையை பிடித்து.

அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல், “நான் உனக்கு சரி வரமாட்டனா?” கேட்டுவிட்டாள்… கேட்டே விட்டாள் வைஷு.

அவன் நெருங்கி, நெருங்கி வரும்பொழுது இவள் விலகி போவது, அவளுக்கே சிலநேரம் வருத்தமாய் இருக்க கேட்டே விட்டாள்.

“என்ன பேச்சு வைஷு இது” என்றவன் ‘என்னைபார்த்தா இப்படி கேட்டாய்?’ என்ற   கேள்வியை கண்களில் வழிய விட்டான்..

“இல்ல என் மனசுக்குள்ள இது ஓடிகிட்டே இருக்கு. நீ நெருங்கி வரும்போது நான் விலகி விலகி போறேன் அதை என்னாலயே தாங்கிக்க முடியல, அப்போ உனக்கு எப்படி இருக்கும்? என் மனசுக்குள்ள என்னமோ இருக்குன்னு நினைப்ப தானே? நீ சொல்லு நான் உனக்கு சரி வரமாட்டேனா? இல்ல நாங்க உன் தகுதில இல்லன்னு நினைக்குறியா? எதுனாலும் சொல்லு நான் தெரிஞ்சுகிறேன்” என்றாள் அவன் கண் பார்த்து.

“இப்போ என்ன பேச்சு பேசுற வைஷு, உனக்கு கால்லதான அடிபட்டிருக்கு தலையில இல்லல?” அவளின் மனவோட்டம் அறியாது அவன் பேசினான்.

“இல்லை. நீ சொல்லு எனக்கு. நீ சொல்லலனா என்னால நிம்மதியா உன் கூட வாழ முடியாது. உனக்கு என்னை முன்னாடியே பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதை ஒவ்வொரு நேரமும் உன் கண்ணு காட்டும், ஆனா அதை ஏன் என்கிட்ட மறைச்ச நான் உன் தகுதியில் இல்லைன்னுதானே?

நான் விளையாட்டுக்கு கேட்கல ஸ்ரீ. உண்மையாவே கேட்கிறேன் உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா சொல்லவேண்டாம்.  இப்போ இருக்க போலவே கண்டினியூ பண்ணு. போ”

“ஏன் இப்படி பேசுற வைஷு. நா… நான் உன்கிட்ட நடந்துகிறது எல்லாம் பார்த்தா அப்படியா உனக்கு தெரியுது? எப்பவாது அதுமாதிரி உன்கிட்ட காட்டிகிட்டேனா? ஏன் இப்படி பேசுற” அவன் குரலில் கோபமோ, ஆதங்கமோ என்று ஏதோ ஒன்று இருந்தது.

அவள் எப்படி அப்படி நினைக்கலாம், ‘அவனுக்கு அவள் இணை இல்லையென்று?’ அவளை அப்படி தான் முன்னே நினைத்திருந்தான் என்பது அவனுக்கு வசதியாக இப்பொழுது மறந்துப் போனது.

“ம்ம்ஹும்… இல்ல ஸ்ரீ உன் மனசுல ஏதோ ஒன்னு இருக்கு. இல்லனா நீ அன்னைக்கு அப்படி பேசி இருக்க மாட்ட?” அவள் கூற, கேள்வியாய் அவளை ஸ்ரீ பார்ப்பதை உணர்ந்து,

அன்று ஷிவானிக்கும், ஸ்ரீக்கும் இடையிலான உரையாடலை தான் கேட்க நேர்ந்ததை அவனிடம் கூறினாள். அதனால் தன் மனதில் உண்டான அழுத்தத்தையும் சொல்லிவிட்டாள். 

‘அவளின் மனநிலையை அறிந்த பின்னும் இதுக்கு மேலும் அவகிட்ட சொல்லாம இருந்து என்ன பண்ண? அவளுக்கு சொல்லவேண்டிய கட்டாயம்’ என்பதை உணர்ந்த ஸ்ரீ அவளிடம் கூற எண்ணினான்.

“அது… உன்னை, எனக்கு ரொம்ப புடிக்கும் வைஷூ. நிஜம் சொல்லணும்னா அதை விட உன் கொலுசு சத்தம்” காதலோடு கூடிய மென்மையான குரலில் கூறிக் கொண்டே வந்தவனது பார்வை அவளின் கொலுசில்லா காலை கண்டு சிறு வருத்தம் காட்டியது.

“முதல் முறை உன்னை நம்ம தெருவில நீ நடந்து போகும் போது வந்த உன்னோட கொலுசு சத்ததுலதான் உன்னை கவனிக்க ஆரம்பிச்சேன். நீ எங்க வந்தாலும் அந்த கொலுசின் ஒசை அப்படியே என்னை கட்டி உன் பின்னாடி என்னை இழுத்திட்டு வரும்” என்றான்.

அவனின் மென்மையான குரலில் கட்டுண்டு இருந்தவள் அவன், அவளது கொலுசைப் பற்றிக் கூறியதும் அதிர்ச்சியாகி, ‘இது எப்போ?’  என்று இவள் அவனையே பார்த்திருக்க. அந்த அழகு முகத்தை பார்த்தவன் ஒரு புன்னகையை அவளை நோக்கிவெளியிட்டான்.

“உன்னோட கொலுசுதான் வைஷு என்னை, உன்னை நோக்கி இழுத்திச்சு. என்னோட மனசுக்கு ரொம்பவே நெருக்கமானதும் உன் கொலுசுதான். இப்படிதான் உன்னோட கொலுசுக்கு நான் அடிட்க் ஆனேன்னு கூட சொல்லலாம். ஒருநாள் உன் கொலுசு சத்தம் என் காதுல கேட்கலன்னா  கூட என்னமோ மாதிரி இருக்கும்.

எதையோ இழந்த போல ஃபீல் பண்ணுனேன். அப்போ அதெல்லாம் காதல்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது வைஷு. அந்த நேரம் அதை நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல. 

அதுக்கு பிறகு உன்னை எப்பவும் நான் ஏதோ ஒரு விதத்துல தொடர்ந்து வந்தேன். கொஞ்சம் கொஞ்சமா நீயும் எனக்கு நெருக்கமா மாறின போல தெரிஞ்சது.

அப்போதான் விக்ரம் வந்தான்.  அவன்கிட்ட நீ பேசின விதம் பிடிச்சது. நீ எனக்கு வாழ்க்கை துணையாய் வந்தா  நல்லாருக்கும்னு தோணிச்சு.

அதே எண்ணம் அவனுக்கும் வந்திருக்கும் போல உங்க வீட்டுல பேச சொன்னான். நானும் சரி அவன் உனக்கு சரிவரலாம்னு  பேசுறதா வாக்கு குடுத்துட்டேன்.

உங்கப்பா அவனைப் பத்தி பேசும்போது நானும் கொஞ்சம் நல்லவிதமா சொன்னேன் வைஷூ. ஆனாலும் என் மனசு ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒரு தவிப்பு.

உங்கப்பா என்கிட்ட வேலை பார்த்திருக்க, அவரோட பொண்ணு எனக்கு எப்படி சரி வருவான்னு எனக்குள்ள ஒரு எண்ணம்.

ஆனாலும், விடாம என் மனசு உன் பின்னாடி வர வர எனக்கு உன் மேல பயங்கரகோபம். நீ எப்படி என் மனசுக்குள்ள வரலாம்னு. அந்த கோபத்தோடதான் நான் பொண்ணு பார்க்க போனேன். அந்த பொண்ணோட வீடு எல்லாம் எங்க வீட்டோட ஒத்துப்போச்சு சரின்னு சொல்லிட்டேன்.

அதுக்கு பிறகு என் மனசு ஒரு விதமா தவிப்பா இருந்திச்சி. வேற யாரையாவது கல்யாணம் பண்ணுனா சரியாகும்னு நினைச்சுதான் பொண்ணு பாக்க சம்மதிச்சு நிச்சயம் வரை போனேன். 

உண்மையாவே அந்த பொண்ணு இப்படி பண்ணும்னு எனக்கு தெரியாது. சொல்லப்போனா அது ஒரு வகையில நல்லதுதான். காதலுக்கு எதுவுமே தேவையில்லன்னு பொட்டுல அறைஞ்சது போல சொல்லிட்டு போனா அவ. அப்போதான் என் காதல் எனக்கே சரியா புரிய ஆரம்பிச்சது.  மனசுக்கு ரொம்ப சந்தோஷமா வேற இருந்திச்சி.

அவ போனபிறகுதான் தெரிஞ்சது. நான் உன்னை எந்தளவுக்கு விரும்புறேன்னு. உன்னை யாருக்கும், எதுக்கும் விட்டு குடுக்கக்கூடாதுன்னு நான் நினைச்சுட்டு இருக்கிற நேரம்,

நீ சிவா கிட்ட சிரிச்சு பேசுனது ரொம்ப கோபத்தை எனக்கு உண்டு பண்ணிட்டு அதுதான் உன்னை கொஞ்சம் அதிகமா திட்டிட்டேன்.  பதிலுக்கு நீ என்னை அடிக்கவும் செய்துட்ட” என்றான் கன்னத்தில் கைவைத்து.

அந்த கல்யாணம் நிக்க, தாத்தா மறுபடியும் ஒரு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு நான் உன்னை பாக்குறதை வெளிப்படையா காட்ட ஆரம்பிச்சேன்.

நீ எனக்கு மட்டும்தான் அப்படின்ற எண்ணம் என் மனசுக்குள்ள வலுப்பெற ஆரம்பிச்சது.

என்னையே கவனிச்சிட்டு இருந்த ஷிவானி கண்டுபுடிச்சிட்டா. பல வழில கேக்க ட்ரை பண்ணுனா ஆனா நான் எதையும் காட்டிக்கல. அந்த நேரம் எதையும் காட்ட தோணல.

ஷிவானி என்கிட்ட வந்து கேட்டு , அதுக்கு பிறகு அவளேதான் எல்லாம் பண்ணினா இதோ இப்போ நீ என் மனைவியா என் பக்கத்துல இருக்கிற.

நீ விக்ரம் கிட்ட பேசினதை கேட்டதுல இருந்து உனக்கு காதல் பிடிக்காதுன்னு ஒரு பிம்பம் என் மனசுல இருந்துகிட்டே இருந்தது. அதுவே பல பயம் எனக்குள்ளே. அதுதான் கல்யாணம் வரை உன்கிட்ட பேசல. ஒருவேளை என்னை புடிக்கலன்னு நீ சொல்லிட்டன்னா, என்னால் தாங்கிக்க முடியாது. அதனாலயே கல்யாணம் வரை உன்னை பார்க்க, பேச நான் முயற்சிக்கலை.

நான் பண்ணினது, செய்தது எல்லாத்துக்கும் சாரின்னு ஒத்த வார்த்தையில் சொன்னா சரி கிடையாது. ஆனாலும் எனக்கு வேற வழி இல்ல… காலம் எல்லாம் மறக்க வைக்கும் வைஷூ. நான் உனக்கு மறக்க வைப்பேன்” என்றவன் அவளைப் பார்த்து,

“அந்தஸ்து, தகுதி பார்த்துதான், நீ என் பின்னாடி சுத்தினதை என்கிட்ட சொல்லலியா? என்ன காரணம் இருந்தாலும் எப்படி உன்னால இப்படி இருக்க முடிஞ்சது? என்னை தினமும் பார்த்துடேதான் இருந்த அப்போ கூட சொல்லனும்னு தோணலியா உனக்கு.”

“நீ என்கிட்ட வேலை பாக்குற பொண்ணு. நீ என்கிட்ட வேலைப்பாத்துட்டு இருக்கும்போதே நான் உன்கிட்ட வந்து லவ் சொன்னா நீ என்னை எப்படி பார்ப்ப. உன் மனசுல நான் ரொம்ப கீழ இறங்கி போய்டுவேன். யார் மனசுலயும், யார் முன்னாடியும் நான் கீழ இருக்க கூடாதுன்னு நினைப்பேன்.

அப்படி இருக்கும் பொழுது என் மனசுக்கு பிடிச்ச உன் முன்னால எப்படி என்னால் கீழ போகமுடியும்?  இப்படிநான் நிறைய நிறைய யோசிச்சேன் அதுதான் உன்கிட்ட சொல்லமுடியல.

ஆனாலும் உன்னை விட்டு இருக்க முடியும்னு தோணல வைஷு. அதுதான் ஷிவானி கேட்டதும் சரின்னு விட்டுட்டேன்”

‘தகுதி பார்த்துதான் காதலை உன்கிட்ட சொல்லவில்லை’ என்றதும் அவளுக்கு கோபம் வர அவனைப் பட்டென்னு அடித்தாள்.

“நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா. ஒரு மில், கொஞ்சம் நிலம் வச்சிருந்தா நீ பெரிய இவனா? அதிலும் எல்லாம் உன் தாத்தா சொத்து. என்னமோ நீயே சம்பாதித்து வாங்கின போல பேசுற, நீ எல்லாம் தகுதிப்பார்த்து காதலை வேற சொல்லமாட்டியா? இதெல்லாம் ஒரு தகுதியா வச்சிட்டு நீ ஏன்டா என்னை காதலிச்ச?

இதெல்லாம் பார்த்தா நான் உன்னைவிட பெரிய நிலையில இருக்கவ. சுயமா படிச்சு முன்னுக்கு வர நினைக்குறவ. இப்போ நான் சொல்லுறேன் நீ என்னை காதலிக்க தகுதி இல்லாதவன். உன்னை எனக்கு பிடிக்கல” கோபமாய்… வேகமாய் கூற,

‘எந்த ஒரு வார்த்தையை இவள் வாயில் இருந்து கேட்க கூடாது என்று எண்ணினானோ அதே வார்த்தை இப்பொழுது அவள் வாயில் இருந்து வந்ததும் மிகவும் துடித்து விட்டான் ஸ்ரீ.

மனதில் அவனது பழைய வாழ்க்கை வரிசை கட்டி அவனை சுழற்ற, “உண்மைதான் வைஷூ நான் உனக்கு தகுதியே கிடையாது. ஜெயிலுக்கு போன நான் எப்படி உனக்கு சரிவருவேன்? வெறும் 12 படிச்ச நான் எப்படி உனக்கு சரிவருவேன்? யாருக்குமே என்னை பிடிக்காது வைஷு” என்றவன் அவளது கையை பிடித்துக் கொண்டு அப்படியே கட்டிலின் கீழே மண்டியிட்டு அமர்ந்து விட்டான். அவனை அறியாமலே கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது.

 “என்ன சொல்லுற? ஜெயிலுக்கு போனியா!?” இது மிகவும் புதிய செய்தி. மிகப் பெரிய அதிர்ச்சி அவளுக்கு.

அவன் பிடித்திருந்த கையை வெறித்துப் பார்த்தப்படி அமர்ந்திருந்தவளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் வெடித்து சிதறிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!