இதயம் – 07

eiHJN6N67051-78656dc9

இதயம் – 07

 

பூஜா மற்றும் சக்தி அந்த ஹாஸ்பிடல் வாயிலின் முன்னால் ஒருவரிடம் ஒருவர் என்ன பேசிக் கொள்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க, அவர்களை இன்னும் காத்து நிற்க வைக்காமல் வெங்கட் மற்றும் விஷ்ணு அந்த இடத்தை விரைவாக வந்து சேர்ந்திருந்தனர்.

பூஜாவின் ஓய்ந்து போன தோற்றமும், சக்தியின் சோர்ந்து போன முகமும் நண்பர்கள் இருவரையும் மனதளவில் பாதிக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் முன்னால் வந்து நின்றவர்கள், “சக்தி” என்று அழைக்க, அந்த குரலைக் கேட்டதுமே சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் அவர்களைத் தாவி அணைத்துக் கொண்டான்.

என்னதான் பூஜாவின் முன்னிலையில் தன்னை தைரியமாக அவன் காட்டிக் கொண்டாலும் தன் கண் முன்னால் விஷ்வா இறந்து போனது, இரத்தம் சொட்ட சொட்ட அவனைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு வந்தது என சிறிது நேரத்திற்கு முன்பு நடந்து முடிந்திருந்த விடயங்கள் எல்லாம் அவனை வெகுவாக கலக்கம் கொள்ளச் செய்திருந்தது.

தன் நண்பன் எப்படியான மனநிலையுடன் இருக்கிறான் என்பதை விஷ்ணு மற்றும் வெங்கட் புரிந்து கொண்டதனால் மேலும் மேலும் ஏதேனும் பேசி அவனை இன்னமும் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தவர்கள் அவனை ஆறுதலாக தட்டிக் கொடுக்க, ஒரு சில நிமிடங்களில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு பூஜாவின் புறம் திரும்பிப் பார்த்தான்.

தன் முன்னால் நின்று கொண்டிருந்த புதியவர்களையும், சக்தியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து சிறு புன்னகை செய்த சக்தி, “இது என்னோட பிரண்ட்ஸ் விஷ்ணு அன்ட் வெங்கட். இவங்களும் உங்க ஊர் தான்” என்று விட்டு,

தன் நண்பர்களின் புறம் திரும்பி, “போகலாமா?” என்று கேட்டான்.

“சரிடா போகலாம். நானும் வெங்கட்டும் ஒரு பைக்கில் வர்றோம், நீ அவங்களை மற்ற பைக்கில் கூட்டிட்டு வா” என்றவாறே விஷ்ணு தன் கையிலிருந்த சாவியை சக்தியின் புறம் நீட்ட, அவனோ அதை வாங்கிக் கொள்ளாமல் தன் கையை பிசைந்து கொண்டு நின்றான்.

சக்தி தயங்கி நிற்பதைப் பார்த்து அவனது தோளில் தட்டிய வெங்கட், “என்னடா அப்படியே நிற்கிற? நேரம் ஆகுது. சீக்கிரம் கிளம்பலாம் வா” என்று கூற,

அவர்களைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “நான் பைக்கில் வரலடா. இங்கே பக்கத்தில் ஆட்டோ ஏதாவது இருந்தால் அதில் நானும், பூஜாவும் வர்றோம்” என்று கூறினான்.

அவன் கூறிய விடயத்தைக் கேட்டு ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்ட வெங்கட் மற்றும் விஷ்ணு, “என்னவோ பண்ணு” என்று விட்டு தங்கள் பைக்கில் ஏறி அமர்ந்து கொள்ள, பூஜா மற்றும் சக்தி ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டு அவளது வீட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கு முன்பு விஷ்வாவின் வீட்டை சக்தி பார்த்தது இல்லை என்பதனால் என்னவோ அந்த வீட்டின் வெளித்தோற்றமே அவனுக்கு அச்சம் ஏற்படுத்துவது போலத் தான் இருந்தது.

கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் வீட்டை விட அளவில் சிறியதாக அந்த வீடு இருந்தாலும் சுற்றிலும் முட்கம்பிகளும், பெரிய அரண் போன்ற கதவும் ஏதோ ஒரு இராணுவ பகுதிக்கு வந்தது போல அவனை உணரச் செய்தது.

வீட்டு வாயில் திறந்து கிடந்த நிலையைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்ட நால்வரும் சிறிது தயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைய, அந்த வீடு இருந்த நிலையோ அவர்கள் அனைவரையும் முற்றாக கதிகலங்கி போகச் செய்தது.

வெளியே தோட்டத்தில் இருந்த மரங்கள், தளபாடங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டும், வெளியே வீசப்பட்டும் இருக்க, நெருப்பு எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே அத்தனை பயங்கரமாக இருந்தது.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் உடைக்கப்பட்டு, கதவுகள் எல்லாம் பாதி நொறுங்கியும், நொறுங்காமலும் இருக்க, சமையலறையினுள்ளும் மற்றும் அங்கிருந்த மற்றைய அனைத்து அறைகளினுள்ளும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இருக்கும் வீட்டிற்குள் பூஜாவை தனியாக விட்டுவிட்டு செல்வது சரியில்லை என்பதை அங்கு நின்று கொண்டிருந்த ஆண்கள் மூவருமே புரிந்து கொண்டு அவளை அவளது பெற்றோரிடம் விட்டுச் செல்லலாம் என்று அழைக்க, அவளோ அந்த இடத்தை விட்டு அசையாமல் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“பூஜா, பூஜா” சக்தியின் குரல் அவள் செவிகளை எட்டினாலும் அவள் கண்கள் இரண்டும் அந்த வீட்டை விட்டு நகரமாட்டேன் என்பது போல நிலைகுத்தி நின்றது.

அவளது அந்த ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்க்கும் போதெல்லாம் சக்திக்கு அவ்வளவு வேதனையாக இருந்தாலும் அதை அவள் முன்னிலையில் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன் இப்போது சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளது தோளில் மெல்ல தட்ட, அவனது தொடுகையில் அவளது பார்வை அவனது புறம் திரும்பியது.

“இப்படியே நின்று கொண்டிருந்தால் எதுவும் நடக்கப் போவது இல்லைங்க. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம். இந்த வீடு இருக்கும் நிலைமையில் நீங்க இங்கே இருக்க வேண்டாம், நீங்க இப்போதைக்கு உங்க அம்மா, அப்பா கூட போய் இருங்க”

“சரி, ஆனா அங்கே போவதற்கு முன்னாடி இங்கே இருந்து ஒரு பொருளை மட்டும் நான் எடுத்துட்டு வர்றேன்” என்று விட்டு பூஜா பாதி எரிந்தும், எரியாமலும் இருந்த வீட்டிற்குள் நுழையப் போக,

அவசரமாக அவள் முன்னால் வந்து நின்றவன், “இந்த வீடு இருக்கும் நிலைமையில் நீங்க உள்ளே போக வேண்டாம், நீங்க போவது பாதுகாப்பு இல்லை” என்று கூற, அவளது முகமோ மேலும் வாடிப் போனது.

“உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் போய் எடுத்துட்டு வர்றேன்” அவளது முகவாட்டத்தை தாங்காமல் சக்தி தன் மனதில் தோன்றியதைக் கூற, அவனது நண்பர்கள் இருவரும் அவனை வெட்டவா? குத்தவா? என்பது போல பார்த்துக் கொண்டு நின்றனர்.

“நிஜமாகவே நீங்க எடுத்து தருவீங்களா?” சக்தி சொன்ன விடயத்தைக் கேட்டு பூஜாவின் கண்களில் சிறு மலர்ச்சி பரவ, அந்த மலர்ச்சியைப் பார்த்ததுமே அவனது தலை ஆமோதிப்பாக அசைந்தது.

சக்தி இங்கே பூஜாவைப் பார்த்து தன்னை மறந்து என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அவனது நண்பர்கள் அவனைப் பார்த்து, ‘வேண்டாம், வேண்டாம்’ என்று பலவாறு சைகைகள் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களது எந்த அசைவையும் கண்டு கொள்ளாதது போல சக்தி நின்று கொண்டிருந்த வேளை, “இந்த வீட்டு ஹாலில் நானும், விஷ்வாவும் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எடுத்த போட்டோவை பெரிதாக செய்து மாட்டி இருந்தோம், அதுதான் எனக்கு வேணும்” என்று பூஜா கூற, அவள் கூறியதைக் கேட்டு சக்தியின் முகம் போன போக்கைப் பார்த்து விஷ்ணு மற்றும் வெங்கட் சலித்துக் கொண்டனர்.

அவர்கள் இருவரது சத்தம் கேட்டதும் பூஜா என்னவென்பது போல திரும்பிப் பார்க்க, உடனடியாக தங்கள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டவர்கள், “சாரி சிஸ்டர், புகை வந்து மூக்கில் அடைச்சுடுச்சு” என்று கூற, அவளும் அதை நம்பிக் கொண்டு சக்தியின் புறம் திரும்பிப் பார்த்தாள்.

“உங்களால் முடியுமா?” பூஜா மீண்டும் சக்தியைப் பார்த்துக் கேட்க,

கனவில் இருந்து விழிப்பவனைப் போல அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஆமாங்க, இதெல்லாம் சின்ன விஷயம் தான்” என்று விட்டு தன் நண்பர்களின் முறைப்பையும், வேண்டாம் என்கிற மறுப்பையும் கவனத்தில் கொள்ளாமல் அந்த வீட்டிற்குள் உள் நுழைந்தான்.

வீடு முழுவதும் ஒரே புகை மண்டலமாக இருக்க, இருமிக்‌ கொண்டே தட்டுத்தடுமாறி ஒரு சுவர்ப்புறமாக வந்து நின்றவன் தன்னை மறைந்திருந்த புகையை தன் கையால் விலக்கி விட்டபடியே அந்த சுவற்றை ஆராய்ந்து பார்த்தான்.

அவன் எதிர்பார்த்து வந்தது போல அந்த சுவற்றில் பூஜா கேட்ட‌‌ புகைப்படம் இருக்க மெல்ல அதைக் கழட்டி எடுத்தவன் புகை படிந்திருந்த அந்த புகைப்படத்தை தன் கையால் துடைக்கப் பார்க்க, அதில் ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடித்துண்டுகள் அவனது கையை நன்றாக பதம் பார்த்து இருந்தது.

தன் கை வெட்டிப்பட்டதும் வலியால் முகம் சுருக்கிக் கொண்டு தன் கையை உதறியவன் அந்த கையை தன் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு மற்றைய கையினால் பூஜா கேட்ட புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

சக்தியின் கையிலிருந்த புகைப்படத்தைப் பார்த்ததுமே ஆவலாக ஓடி வந்து அதை வாங்கியவள் அந்த புகைப்படமிருந்த நிலையைப் பார்த்து விட்டு தன் முகம் வாடிப் போக நின்றாள்.

அவளது முகவாட்டத்தைப் பார்த்த பின்பே சக்தியும் அந்த புகைப்படத்தை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தான்.

அந்த புகைப்படத்தின் மேலிருந்த ஒரு புற கண்ணாடி மாத்திரம் உடைக்கப்பட்டிருந்ததால் என்னவோ வீடு முழுவதும் எரியும் போது அதில் இருந்த விஷ்வாவின் புகைப்படமும் பாதி எரிந்து போய் இருந்தது.

அதைப் பார்த்ததும் பூஜா என்ன மாதிரியான மனநிலையுடன் இருப்பாள் என்று சக்தி உணர்ந்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்க்க, தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள், “போகலாம்ங்க” என்று கூற, ஆண்கள் மூவரும் அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டபடியே பின் தொடர்ந்து சென்றனர்.

ஒரேநாளில் ஒட்டுமொத்தமாக தன் வாழ்வு முற்றிலும் மாறிவிட்ட நிலையை எண்ணி பூஜா மனதளவில் உடைந்து போய் அமர்ந்திருக்க, ஆட்டோ ஓட்டுனரிடம் சக்தியே அவளது வீட்டுக்கு வழி சொல்லி அழைத்துச் சென்றான்.

மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்த பூஜாவின் மூளைக்கு சக்தி தன் வீட்டிற்கு வழி சொல்லி அழைத்துச் செல்வதோ, அவனுக்கு தன் வீடு இருக்கும் இடம் எப்படித் தெரியும் என்பதோ எதுவும் பிடிபடவே இல்லை.

அதன் பிறகு வந்த நிமிடங்கள் எல்லாம் பூஜாவின் கவலையிலும், சக்தியின் பரிதவிப்பிலும் கழிந்து செல்ல அவர்கள் அனைவரும் அவளது வீட்டை வந்து சேர்ந்திருந்தனர்.

தன்னுடைய வீட்டைப் பார்த்ததுமே ஏதேதோ எண்ணங்கள் அலைமோத பூஜாவின் கண்கள் தானாக கண்ணீர் விடத் தொடங்க, அவளைப் பார்த்து வேண்டாம் என்பது போல தலையசைத்த சக்தி, “வாங்க போகலாம்” என்று அழைக்க, அவளோ அந்த வீட்டின் வாயிலில் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் விஷ்வா இறந்து விட்ட செய்தி கொஞ்சம் கொஞ்சமாக திருச்சி மொத்தமும் பரவ ஆரம்பித்திருக்க, பூஜாவை அங்கே பார்த்ததும் ஒரு சிலர் பரிதாபமாகவும், இன்னும் ஒரு சிலர் அவளை ஏளனமாகவும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நபர்களின் பார்வை ஒட்டுமொத்தமும் தங்கள் மேலேயே இருப்பதைப் பார்த்து சக்தியின் தோளில் தட்டிய வெங்கட், “உள்ளே போகலாம். இங்கே ரொம்ப நேரம் நிற்க வேண்டாம்” என்று கூற, சக்தி பூஜாவைத் திரும்பிப் பார்த்தான்.

“பூஜா, உள்ளே போங்க. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” சக்தியின் கூற்றில் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டவள் தங்கள் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

விஷ்வா இறந்து விட்ட செய்தி ஏற்கனவே பரசுராமனுக்கு தெரிந்திருக்க, அந்த செய்தியைக் கேட்ட நொடியில் இருந்து இடிந்து போய் அமர்ந்திருந்தவர் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கவில்லை.

பரசுராமன் இந்த நிலையில் இருக்கும் போது அவரது மனைவி செல்வியின் நிலையோ அதை விட பாவமாக இருந்தது.

தங்கள் மகளின் வாழ்க்கை தங்கள் விருப்பத்திற்கு எதிராக நடந்திருந்தாலும் அவள் எங்கே இருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று தானே நித்தமும் அவர் அந்த இறைவனிடம் வேண்டியிருந்தார், அப்படியிருக்கும் போது இன்று அவர்கள் அறிந்த செய்தி அந்த பெற்றோர் மனதை எந்தளவிற்கு பாதித்திருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பூஜா தன் சொந்த வீட்டிற்குள் நுழைவதற்கே வெகுவாகத் தயங்கி நிற்க, அவளது கையில் இருந்த விஷ்வாவின் உடைமைகளை வாங்கிக் கொண்ட சக்தி, “உள்ளே போங்க பூஜா” என்று கூற, அவனைப் பார்த்து தயங்கி நின்றவள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து தங்கள் வீட்டிற்குள் உள் நுழைந்தாள்.

வாயிலில் ஏதோ நிழலாடுவது போல இருக்க கண்ணீரால் மறைந்திருந்த தன் கண்களைத் துடைத்து விட்டபடியே நிமிர்ந்து பார்த்த செல்வி அங்கே நின்று கொண்டிருந்த பூஜாவைப் பார்த்ததும், “பூஜா” என்றவாறே அழுது கொண்டு அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டார்.

அத்தனை நேரம் தன் துக்கத்தை சொல்லி சாய்ந்து அழ ஒரு நபர் இல்லாமல் தனக்குள்ளேயே கல்லென இறுகி இருந்த பூஜா இப்போது தன் அன்னையைக் கண்டதுமே கண்ணீர் விட்டு கதறியழ, சக்தி அவள் அழுவதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வேறு புறமாக திரும்பி நின்று கொண்டான்.

அவள் அழுது முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த பரசுராமன் அவளது அழுகை சிறிது குறைந்ததும் அவள் முன்னால் வந்து நிற்க, தன் தந்தையின் வரவினால் பூஜா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

ஒரே மகள் என ஆசையாக வளர்த்த பெண் இப்போது இப்படி ஒரு நிலையில் வந்து நிற்பதைப் பார்த்து அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் முன்னால் விறைப்பாக நின்று கொண்டிருந்தவர், “எங்கே வந்த?” ஒற்றைக் கேள்வியில் அந்த இடத்தையே மொத்தமாக அமைதியில் மூழ்கிப் போகச் செய்தார்.

“என்னங்க கேள்வி இது? அவ இனி எங்கே போவா?” தன் கணவரின் கேள்வியில் செல்வி குழப்பமாக அவரைப் பார்த்து வினவ,

அவரைப் பேச வேண்டாம் என்பது போல எச்சரிக்கை செய்தவர், “சொல்லு, எங்கே வந்த?” மறுபடியும் அதே கேள்வியை பூஜாவைப் பார்த்து வினவினார்.

“அப்பா…”

“யாருக்கு யாரு அப்பா? அந்த உறவு எல்லாம் மூணு மாதத்துக்கு முன்னாடியே முடிந்து போச்சு. எங்க பொண்ணு இறந்து போயிட்டா. அதோ பாரு” அந்த வீட்டின் ஹாலில் பெரிதாக மாலை போடப்பட்டு மாட்டப்படிருந்த பூஜாவின் புகைப்படத்தை அவளுக்கே சுட்டிக் காட்டியவர்,

“எங்களுக்கு இருந்த ஒரே பொண்ணு இறந்து போயிட்டா, அதனால தயவுசெய்து நீங்க இங்கே இருந்து போகலாம்” என்றவாறே வாயில் புறமாக கை காட்ட, அவளோ முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு தன் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

தன் செல்ல மகள் அழுவதைப் பார்த்ததும் அவரது மனமும் சேர்ந்து கண்ணீர் வடிக்க, அவளை அழ வேண்டாம் என்று கூற எண்ணித் தன் கையை அவளை நோக்கி கொண்டு சென்றவர் பின்னர் ஏதோ நினைவு வந்தவராக சட்டென்று தன் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டார்.

தன் கணவரின் விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து சிறிது கோபம் கொண்ட செல்வி, “என்னங்க பேசுறீங்க நீங்க? எல்லாவற்றையும் இழந்துட்டு நிர்க்கதியாக வந்து நிற்கிற பொண்ணு கிட்ட கூட உங்க வீராப்பைக் காட்டணுமா? அவ பாவம்ங்க. நம்மை விட்டால் அவளுக்கு வேறு யாருங்க துணை?” என்று கேட்க,

“அதுதான் ஒருத்தனை நம்பி போனாங்கலே, அவனுக்காக இத்தனை வருடங்களாக பெற்று, வளர்த்தவங்களையே தூக்கி எறிந்துவிட்டு போனாங்க. அவங்களுக்கு இப்போதும் ஏதாவது வழி இல்லாமலா இருக்கும்? ஏதாவது ஒரு வழியைப் பார்த்துட்டு போகட்டும்” என்ற பரசுராமன் அப்போதும் தன் முடிவில் இருந்து மாறமாட்டேன் என்பது போல நின்று கொண்டிருந்தார்.

தன் கோபம், கவலை, ஆற்றாமை, வெறுப்பு, சோர்வு என எல்லா உணர்வுகளும் ஒட்டுமொத்தமாக தன்னை விட்டு நீங்கும் வரை ஒரு மூச்சு அழுது முடித்த பூஜா தன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்று, “உங்களைத் தேவையில்லாமல் தொந்தரவு செய்ததற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்க அப்….சாரி…சார்” என்றவாறே அவரை நிமிர்ந்தும் பாராமல் அங்கிருந்து வெளியேறி விட, அவளைப் போக வேண்டாம் என்று கூற எண்ணி அவளை நோக்கிச் செல்லப் போன செல்வியின் கரங்கள் பரசுராமனின் கரத்தினால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டது.

விஷ்வாவின் இறப்பு செய்தி கேட்டதன் பின்னர் முதல் பூஜா அங்கே வரும் வரை, ‘பூஜா, பூஜா’ என்று அவளது பெயரையே மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருந்த தன் கணவர் இப்போது அவளை அங்கே பார்த்ததும் இவ்வளவு விசித்திரமாக ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்ற குழப்பத்தோடு செல்வி அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, மறுபுறம் வீட்டிற்கு வெளியே பூஜா சக்தியின் முன்னால் தலை குனிந்து, தன் கண்ணீரை அவனுக்கு காட்டிக் கொள்ளக் கூடாது என்பது போல நின்று கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் நடந்த விடயங்களை எல்லாம் ஆண்கள் மூவரும் கேட்டுக் கொண்டிருந்தால் தனியாக அவர்கள் மறுபடியும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்கவில்லை, மாறாக அடுத்து என்ன செய்வது என்றே கேட்டனர்.

” எனக்கு இந்த திருச்சியை விட்டால் வேறே எங்கே போறதுன்னு கூடத் தெரியாது. அடுத்து என்ன செய்யப் போகிறேன்னும் தெரியலை. எனக்காக நீங்க ரொம்ப உதவி பண்ணீட்டீங்க, இதற்கு மேலும் நான் உங்களை சிரமப்படுத்த விரும்பல. இனி ஏதாவது பிரச்சினை வந்தால் நான் சமாளித்துக் கொள்ளுறேன்ங்க. நீங்க செய்த உதவிக்கு நான் என் வாழ்நாள் பூராவும் நன்றிக் கடன் பட்டு இருக்கேன். இனி ஏதாவது ஒரு வழியை நான் தேடிக் கொள்கிறேன். நீங்க செய்த உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி” பூஜா இரு கரம் கூப்பி சக்திக்கு தன் நன்றியைத் தெரிவிக்க,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “உங்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் விடுவேன்னு உங்களுக்கு வாக்குத் தந்திருக்கேன்ங்க. அப்பிடியிருக்கும் போது உங்க உயிருக்கு ஆபத்து இருக்கும் இடத்தில் எப்படி உங்களை விட்டுட்டு போறது? அப்புறம் இவ்வளவு நேரமும் நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிப் போய் விடும்” என்று கூற,

“அதற்கு இப்போ என்ன பண்ணலாம்ங்குற?” விஷ்ணு சிறு சலிப்புடன் அவனைப் பார்த்து வினவினான்.

“என்ன பண்ணுறது?” என்றவாறே யோசனை செய்தபடி சக்தி தன் போனைப் பார்த்து விட்டு தன் பர்சை திறந்து பார்க்க, அதில் அவனது புதிய கம்பெனி திறப்பு விழாவிற்கான பொருட்கள் வாங்குவதற்கான பட்டியல் இருந்தது.

அதைப் பார்த்ததும் அவனது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பை போட்டது போல பிரகாசம் தோன்ற அதே சந்தோஷமான மனநிலையுடன் பூஜாவின் புறம் திரும்பியவன், “நீங்க என்ன படித்து இருக்கீங்க?” என்று கேட்டான்.

“எம்.காம் படித்து இருக்கேன்ங்க. ஏன்?” அந்த சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு கேள்வி தேவைதானா என்கிற பாவனையுடன் பூஜா அவனைப் பார்த்து பதிலளிக்க,

“அடுத்த வாரம் நான் ஒரு சைல்ட் திங்க்ஸ் ப்ரொடெக்ஷன் கம்பெனி ஆரம்பிக்க இருக்கேன். அதற்கு வேலைக்கு ஆட்கள் எல்லாம் ரொம்ப மும்முரமாக ஊரில் தேடிட்டு இருக்கோம். இப்போதைக்கு எல்லாம் செட் ஆனாலும் அக்கௌன்ட் செக்ஷனுக்கு இன்னும் ஆள் கிடைக்கல, நீங்க வேணும்னா அதில் சேர்ந்துக்குறீங்களா?” என்று விட்டு சக்தி அவளை ஆவலுடன் பார்க்க, சிறிது நேரம் அமைதியாக நின்றவள் என்ன சொல்வது என்று தெரியாமல் தன் கைவிரல்களை பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்று கொண்டாள்.

அவளது தயக்கம் எதனால் என்று புரிந்து கொண்ட சக்தி, “நான் உங்களை கட்டாயப்படுத்தல பூஜா, உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்தி தரணும், உங்களுக்கு எந்த ஆபத்தும் வர விடக்கூடாது என்று நான் வாக்கு கொடுத்து இருக்கேன், அதனால்தான் நான் என் கம்பெனியிலேயே ஒரு வேலையை எடுத்து தரலாம்ன்னு பார்த்தேன். உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா பரவாயில்லை, நாம வேறு ஏதாவது வழி யோசிக்கலாம்” என்று விட்டு மீண்டும் சிந்தனையில் மூழ்க, அன்றைய நாள் முழுவதும் அவன் தனக்காக எவ்வளவு உதவிகளை எல்லாம் செய்து தந்திருக்கிறான் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டவள் அவன் மேல் நம்பிக்கை வைத்து தனக்கும் இப்போது இருக்கும் நிலையில் ஒரு சிறு மாற்றம் தேவை என்பதால் என்னவோ அவனது கேள்விக்கு சரியென்று சம்மதம் கூறியிருந்தாள்.

அவள் சம்மதம் சொன்ன அடுத்த கணமே உடனடியாக கோயம்புத்தூரில் தங்கள் கம்பெனி இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் அவள் தங்குவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்தவன் அன்றிரவு மாத்திரம் திருச்சியில் விஷ்ணுவின் வீட்டில் பூஜாவை தங்கியிருக்கச் சொல்லி விட்டு தான் வெங்கட்டின் வீட்டில் தங்கி விட்டு அடுத்த நாள் பூஜாவுடன் கோயம்புத்தூர் நோக்கிப் புறப்பட்டான்….

**********
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி
உன் கார் குழலும் அந்த மழை துளியும்
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே
விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்
**********

Leave a Reply

error: Content is protected !!