kiyyaa… kiyyaa… kuruvi-14

coverpage-3c8919ca

கிய்யா – 14

சூரிய வெளிச்சம் அறையை நிரப்ப, தன் கண்களை திறந்தான் விஜயபூபதி. தன் கைகளால், அவன் மீது எதையோ மாட்டி கொண்டான். அவன் எதையோ திருக, அவன் கட்டில் மேலே உயர்ந்தது.

பொன்னிற சூரிய கதிர்கள் அவனை தீண்ட, சூரிய ஒளியை துர்காவோடு ரசித்து பேசி சிரித்த பொழுதுகள் நினைவு வர, அவன் எண்ணங்கள் துர்காவை சுற்றி வந்தது.

‘துர்கா நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வாளா?’ அவன் மனம் அவளுக்காக பரிதாபப்பட்டது.

‘ஆஃபீஸ் சம்பந்தமான வேலையை பார்த்திட்டு தான் இருக்கா. மெயில் அனுப்பறா, வேற எதுவும் பேசறதில்லை. துர்கா இங்க இருந்து வேலையை விட்டு போய்ட்டா நல்லாருக்கும். என் நினைப்பே அவளுக்கு வராது. எந்த வலியா இருந்தாலும், மூணு மாசம் ஆனா சரியாகிரும். இது தானே இயல்பு’ அவன் துர்காவை பற்றி சிந்திக்க, “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக் கொண்டு குருவி அவனை ஜன்னல் வழியாக எட்டி பார்த்தது.

குருவியின் சத்தத்தில் அவன் கவனம் கலைந்தது.

‘கிய்யா கிய்யா மேஜிக்…’ இலக்கியா கூறியது நினைவு வர, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.

மீண்டும், “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழ, “உனக்கு தான் சாப்பாடு கொண்டு வரேன். வெளிய எவ்வளவு சாப்பாடு இருக்கு. நீ தினமும் என் கிட்ட சாப்பாடு கேட்குற?” கூறியபடி அதற்கு உணவிட்டாள் இலக்கியா.

“குருவிக்கு சாப்பாடு போட தெரியுது. கட்டின புருஷனுக்கு என்ன வேணுமுன்னு செய்ய தெரியலை.” அவன் நக்கலாக கூறினான்.

“ஹலோ, நான் உங்க ஆசை பொண்டாட்டி எல்லாம் இல்லை. சும்மா கல்யாணம் கட்டிகிட்டேன். உங்களுக்கு பணிவிடை செய்ய தான் நிறைய பேர் இருக்காங்களே?” அவளும் மெட்டுவிடாமல் கூறினாள்.

“ஓ! மதர் தெரசா போஸ்ட்க்கு நியூ அப்பாயிண்ட்மெண்ட்டா? என் கிட்ட யாருமே சொல்லலையே?” அவன் விழிகளை உயர்த்த, “அத்தான், காலையிலையே என் கிட்ட வம்பு வளர்க்காதீங்க. அப்புறம் நான் உங்களை கதற விட்டிருவேன்” அவள் தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்டினாள்.

“என்ன மிரட்டல் எல்லாம் பயங்கரமா இருக்கு?” அவன் புருவம் உயர்த்த, “எனக்கு வேலை இருக்கு விஜயபூபதி. நான் உங்களை மாதிரி பணக்காரங்க கிடையாது. நான் வேலை பார்த்தா தான் என்னக்கு வருமானம்” அவள் கூற, அவள் அலைபேசி ஒலித்தது.

“…” எதிர்முனையில் ஏதோ கூற, “இல்லைங்க, நான் என் ஹஸ்பேண்ட் கூட இருக்கணும். அதனால், நான் இப்ப வெளிய வறதில்லை. மெஹந்தி போடுறேன். கேக் ஆர்டர் எடுக்கறேன். ஆனால், மெஹந்தி இங்க வந்து போட்டுட்டு போகணும். கேக் யாரையாவது வந்து வாங்கிட்டு போக சொல்லுங்க. பேக்கிங் பக்காவா இருக்கும்” அவள் பேசி முடிக்க, அவன் அவளை ஆழமாக பார்த்து கொண்டிருந்தான்.

‘என்ன?’ அவள் விழி உயர்த்த, “ஹஸ்பேண்ட் யாரு?” அவன் உதட்டோரம் கேலியில் வளைந்தது .

“வேற யாரு நிர்மலாதேவி மகன் தான்” அவள் தோள்களை குலுக்க, “அடிங்… எங்க அம்மா பெயரை சொல்ற?” அவன் அவள் மீது தன் அருகே இருந்த தலையணையை தூக்கி எறிந்தான்.

“உங்களுக்கு இப்ப என்ன வேணும் விஜயபூபதி?” அவள் கேட்க, “என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். அதுக்கு எல்லாம் ஆளுங்களும் இருக்காங்க. நான் உன் தயவில் இல்லை. நீ பழைய மாதிரி உன் வேலையை பார்க்க போ” அவன் கட்டளையாக கூறினான்.

அவள் அவனை சட்டை செய்யாமால் திரும்பி போக, “இலக்கியா” அவன் கோபமாக அழைத்தான்.

அவள் கண்டுகொள்ளவில்லை.

“இலக்கியா…” அவன் அழைப்பு இன்னும் உயர, அவள் சட்டை செய்யாமல் செல்ல, “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, “நானே கடுப்பில் இருக்கேன். நீ வேற ஏன் என்னை நொய்நொய்ன்னு கூப்பிட்டு இருக்க?” அவள் குருவியை பார்த்து சிடுசிடுத்தாள்.

“நான் கூப்பிட்டா திரும்ப மாட்ட. குருவி கூப்பிட்டா மட்டும் திரும்பி பேசுற?” அவன் கேட்க, அவள் மௌனித்து கொண்டாள்.

“எதுவா இருந்தாலும் என் கிட்ட நேரடியா சொல்லலாம்” அவன் கூற, “என்னத்த சொல்ல சொல்லுறீங்க? எப்பப்பாரு போ போன்னு சொல்லிகிட்டே இருக்க வேண்டியது. கல்யாணம் நடந்திருச்சு. உங்களுக்கு சரியாகுற வரைக்கும் இது தான் வாழ்க்கை. அது வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன். எதையாவது இடக்கு மடக்கா பேசிட்டு இருக்காதீங்க” அவள் கோபமாக பேசினாள்.

“எனக்கு சரியே ஆகலைனா?” அவன் கேட்க, “அதெல்லாம் சரி ஆகும்” அவள் அழுத்தமாக கூறினாள்.

“ஆகலைனா?” அவன் குரல் உடைய எத்தனிக்க, அவன் அருகே ஓடி சென்றாள் இலக்கியா.

அவன் குரலில் இருந்த மாற்றத்தில், அவள் கோபம் பறந்து போனது.

‘எப்படி கம்பீரமா இருக்கும் அத்தான். எப்படி என்னை மிரட்டுவாங்க’ அவள் இதயம், அவன் குரலுக்கு முன் உடைந்து போனது.

“அத்தான்…” அவன் முகத்தை கைகளில் ஏந்தினாள்.

அவள் அருகாமை அவனுக்கு ஆறுதல் மட்டுமே கொடுத்தது. அமைதி காக்க எண்ணினாலும், அனைத்தையும் சகஜமாக எடுத்து கொள்ள முயற்சித்தாலும், அவனால் தனியாக அதை செய்ய இயலவில்லை.

“என் முகத்தை பாருங்களேன்.” அவள் குரலில் கட்டளை இருந்தது.

கண்களில் கணீர் மல்க, அவள் முகத்தை பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை.

அவன் தன் விழிகளை இறுக மூடி கொண்டான். அவன் விழி நீர் வெளிவர துடித்தது.

“அத்தான், எனக்கு அம்மா, அப்பா முகம் நியாபகம் இல்லை. திட்டினாலும், என்னை கேலி செய்தாலும், என்னை நீங்க விலகி போக சொன்னாலும், எனக்கு எல்லா விஷயத்திலும் வழிகாட்டி நீங்க தான். நீங்களே இப்படி உடைஞ்சி போனால் என்ன அர்த்தம்?” அவள் உரிமையோடு கோபித்து கொண்டாள்.

“நான் உனக்கு நியாயம் செய்யலை இலக்கியா. என் மனசெல்லாம் பாரமா இருக்கு.” அவன் குரல் கதறியது.

தன் நிலையை கூட யோசிக்காமல், மற்றவர்களுக்காக யோசிக்கும் விஜயபூபதியை அவள் மரியாதையோடு பார்த்தாள்.

அவள் அவன் இதழ்களை மூடி மறுப்பாக தலை அசைத்தாள். அவன் முகம் மூடி கதறி அழுதான்.

“அத்தான்… அத்தான்…” அவள் அவன் கைகளை விலக்க முயன்று தோற்று போனாள்.

அவனின் உடல்நிலை, அவன் மனப்போராட்டம் எல்லாம் இலக்கியாவிற்கு தெளிவாக தெரிந்தது. ஆனால், என்ன செய்வது என்று தான் புரியவில்லை.

அவன் நிமிடங்களில் தன்னை நிதானித்து கொண்டான்.

அவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். “அத்தான்… எனக்கு ஒரு உதவி செய்யறீங்களா?” அவள் பரிதாபமாக கேட்டாள்.

“என்ன பாத்திரம் கழுவி தரணுமா?” அவன் சூழ்நிலையை சகஜமாக முயன்றான்.

“என்னை போன்னு சொல்லாதீங்க அத்தான். என் கடமை முடிந்தால் நானே போய்டுவேன்” அவள் குரல் கொஞ்சம் தடுமாறியது.

“நீ பேசுறது ரொம்ப அபத்தம்மா இருக்கு.” அவன் கூற, “நீங்க சொல்றதை தான் நானும் சொல்றேன். கொஞ்ச கால அவகாசம் கேட்குறேன்” அவள் தன்மையாக கூறினாள்.

“ம்… ச்…” அவன் குரல் சலிப்பை வெளிப்படுத்தியது.

“நான் குளிக்க போகணும். உதவிக்கு ஆளை கூப்பிடு.” அவன் கேட்க, அறையை விட்டு வெளியே சென்றாள்.

உதவியோடு அவன், குளிப்பதற்கான நாற்காலிக்கு மாற்றப்பட்டான்.

“நான் குளிச்சிட்டு கூப்பிடுறேன். நீங்க வெளிய போங்க” அவன் கூற, ஷவரை திறந்து விட்டு வெளியே வந்தனர்.

இலக்கியா குளியலறைக்கு வெளியே நிற்க, மற்றவர்கள் அறைக்கு வெளியே நின்றனர்.

அவன் உள்ளே சென்ற சில நிமிடங்களில், “அம்மா…” என்று அலறினான்.

பிடிமானம் சரி இல்லாமல், அவன் சரிந்து விழ “அத்தான்…” அலறிக்கொண்டு அவள் உள்ளே ஓடி அவனை பிடித்தாள்.

அவன் அவள் கைகளை வேகமாக தட்டிவிட்டான். ‘குளிக்க கூட நான் யார் உதவியையாவது நாடனுமா? நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்.’ அவனிடம் சலிப்பு தட்டியது.

அவன் வேகமாக தட்டியதில், அவள் கைகள் கன்றி சிவந்து அவளுக்கு வலித்தது. வலியில் கண்ணீர் அவள் கண்களை சூழ்ந்து முத்துக்களாய் அவனை தொட, அவன் பதறிவிட்டான்.

“சாரி…” அவன் உதடுகள் முணுமுணுக்க, அவள் தண்ணீரை திறந்துவிட்டாள்.

“எதுக்கு அத்தான் சாரி?” அவள் புன்னகையோடு கேட்டாள். அவனை தீண்டிய விழிநீரை அவன் குற்ற உணர்ச்சியோடு பார்க்க எத்தனிக்க, அவள் திறந்துவிட்ட தண்ணீர், அவள் முகத்தை நனைத்து அவள் விழி நீரோடு இணைந்திருந்தது.

அவள் முகத்தில் புன்னகை மட்டுமே!

‘கண்ணீரை அதுக்குள்ள மறைச்சிட்டா?’ அவன் அவளை பார்க்க, “அத்தான், என்னை சைட் அடிக்குறீங்களா?” அவள் கண்களை சுருக்கி சந்தேகமாக கேட்டாள்.

“அதுக்கு நீ அழகா இருக்கணுமே?” அவன் குறும்போடு பேசினான்.

“அழகு இருந்தா மட்டும் போதாது அத்தான். அதுக்கு ரசனையும் வேணும். அதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க. கற்பூர வாசனை அப்படின்னு…” அவள் அவனை கேலி செய்து அவன் மனநிலையை மாற்றினாள்.

பேச்சோடு, அவன் தலைக்கு தண்ணீரை ஊற்றினாள்.

அவனை தனியே விட்டு செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.

அவள் கைகள், அவன் சிகையை வருட அவளுள் ஏதோவொரு உரிமை அமர்ந்து கொண்டது.

பணிவிடை என்று எண்ணியே அவனை நெருங்கி நின்றாள். அவள் அறிவு அவனை விலகி நின்றே பார்த்தது. ஆனால், அவள் இதயம் அவன் அருகாமையை ரசித்தது.

அவள் விரல்கள் தீண்டிய அலையலையாய் இருந்த அவன் கேசம், திண்ணிய அவன் தோள்கள், அவள் கண்முன் அவன் கம்பீர நடையை கொண்டு வர, ‘அத்தான்…’ அவன் இன்றைய நிலைக்கு அவள் மனம் அவனை எண்ணி உருகியது.

அவன் மூச்சு காற்று அவள் கைகளை தீண்ட, அவள் கவனம் அவன் பக்கம் திரும்பியது.

அவள் அவன் மீது நீரை ஊற்ற, அவன் பளிச்சென்ற மாநிறம், வளைந்த சற்று அடர்த்தியான அவன் புருவம் அதன் கீழிருந்த அழுத்தமான கண்கள் கூரிய மூக்கு, மடிந்த அவன் இதழ்கள் அவளை மயக்க, அவன் அருகாமையில் அவள் தன்னையே மறந்து போனாள்.

“அத்தான் நீங்க செம ஹண்ட்ஸம்மா இருக்கீங்க” அவள் இதழ்கள் கள்ளங் கபடமில்லை, அவன் அருகாமையை ரசித்து கூறியது. அவன் ஒரு நொடி பதறிவிட்டான்.

அவன் அவளை வெறித்து பார்க்க, அவள் முகத்தில் முத்துமுத்தாய் நீர்த்துளிகள்.

அவன் அவளை படிக்க முயன்று தோற்று போனான். ‘இவ சாதாரணமா சொல்றாளா இல்லை…’ மேலும் சிந்திக்க அவன் மனம், அறிவு இடம் தரவில்லை.

‘எப்படி இருந்தாலும் இது நல்லதுக்கு இல்லை. இனி இவளை என் பக்கம் விடவே கூடாது.’ அவன் அவசர உறுதி மொழி எடுத்து கொண்டான்.

“வழக்கமா வர்ற நர்ஸ் இன்னைக்கு வரலைன்னு இவகிட்ட உதவி கேட்குற மாதிரி ஆகிருச்சு. இனி, இலக்கியாவை பக்கத்தில் விட கூடாது.” அவன் அவளை விலக்கி நிறுத்த தான் முடிவு செய்தான்.

அப்பொழுது, அவன் அறைக்கு நிர்மலாதேவி வர, “விஜய்…” அவர் அழைக்க, “அம்மா, குளிக்கிறேன்…” அவன் சத்தம் கொடுத்தான்.

“இலக்கியா…” அவர் குரல் சற்று தோரணையாக ஒலிக்க, “உங்க அம்மா என்னை கூப்பிடுற லட்சணத்தை பார்த்தீங்களா?” அவள் அவன் காதில் கிசுகிசுத்தாள்.

 “புருஷன் பொண்டாட்டி ரூமில் வந்து ஏன் அத்தை எப்பப்பாரு டிஸ்டர்ப் பண்றீங்க?” அவள் குரல் கொடுக்க, அவன் அவள் கைகளை கிள்ளினான்.

அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்.

“உங்க அம்மாவுக்கு இப்ப ஒரே ஸ்டொமக் பர்னிங் ஆகும் பாருங்களேன்.” அவள் அவன் காதில் கிசுகிசுக்க, “நீ வெளிய போ. எனக்கு உதவிக்கு ஆள் அனுப்பு” அவன் கண்டிப்போடு அவளை வெளியே அனுப்பினான்.

“நீ என்ன பண்ற?” அவர் கண்டிப்போடு கேட்க, அவள் தன் அத்தை முன் நின்றாள்.

“மேஜிக்…. கிய்யா… கிய்யா… மேஜிக்.” அவள் நமட்டு சிரிப்போடு கூறினாள்.

அவள் பேசியதை கேட்ட அவன் முகத்தில் கேலி புன்னகை வந்தமர்ந்தது.

‘இவ எதோ வில்லங்கமா அர்த்தம் வச்சிருக்கா’ அவன் மனம் எண்ணி கொண்டது.

“ஏய், என்ன எப்ப பார்த்தாலும் சும்மா கிய்யா கிய்யான்னு… என் மகன் ஒன்னும் உன்னை விரும்பி கட்டிக்கலை. அவன் உன்னிடம் ஒருநாளும் மயங்க மாட்டான்.” அவர் சவால் விட, “சட்டென்று காதல் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே….” அவள் ராகமாக பாடினாள்.

நிர்மலாதேவி அவளை முறைக்க, “அத்தான், உதவிக்கு ஆள் கூப்பிட்டாங்க. நான் போறேன்.” ஓடியே விட்டாள் இலக்கியா.

அதே நேரம் துர்கா அலுவலக கணக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

‘எல்லாமே நஷ்டமா போகுதே. பூபதி எப்படி சமாளிக்க போறான்?’ துர்காவின் எண்ணம் அவன் அலுவலக எண்ணத்தில் ஆரம்பித்து, விஜயபூபதியை சுற்றி வந்தது.

சட்டென்று அவன் நினைவுகளில் இருந்து தன்னை மீட்டு கொண்டாள்.

‘இந்த வேலையை விடணும். எனக்கும் பூபதிக்கும் இருக்கும் எல்லா சம்பந்தத்தையும் முடிச்சிக்கணும். இப்ப விட்டுட்டு போனா, நஷ்டத்தில் விட்டுட்டு போற மாதிரி ஆகுமோ?’ துர்கா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

விலகி செல்லவே அவள் விரும்பினாள். ஆனால், விதி?

அதே நேரம், விஜயபூபதி வீட்டில்.

“விஜய், ஒரு கல்யாண வீடு வருது. அவங்களுக்கு சீர்…” என்று ஆரம்பித்து நிர்மலா தேவி கூறிய வரிசையில், இலக்கியாவிற்கு தலையே சுற்றியது.

“எதுக்கு இவ்வளவு?” என்று அவள் பட்டென்று கேட்க, “பணம் காசு இருந்தா தான் மனுஷங்க மதிப்பாங்க.” என்று அவர் கூற, “எல்லாரும் உங்களை மாதிரி இருக்க மாட்டாங்க” சட்டென்று கூறினாள் இலக்கியா.

“அதை தான் நானும் சொல்றேன். எல்லாரும் என்னை மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்க. உன்னை மாதிரி தான் இருப்பாங்க. பணத்தை தான் மதிப்பாங்க. பணத்துக்காக என் மகனை கல்யாணம் செய்து கிட்டல்ல?”அவர் நக்கலாக கூற, இலக்கியா அடிபட்ட பார்வை பார்த்தாள்.

“இப்ப அந்த பணத்தை நாலு பேருக்கு கொடுக்க உனக்கு மனசில்லை” அவர் அழுத்தமாக கூற, இலக்கியா வாயடைத்து போனாள்.

அனைத்தையும் பார்த்து கொண்டு அமைதியாக இருந்த விஜயபூபதியை பார்த்தாள். அவன் மௌனமாக இருக்க, ‘அத்தானும் அப்படி தான் நினைக்குறாங்களா?’ அவள் மனம் கதறியது.

‘நான் வேற கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அத்தான் கிட்ட உரிமை எடுத்து கொண்டேனே? விளையாட்டா கேலி பேசினேனே. என்னை கேவலமா நினைச்சிருப்பாங்களோ?’ மண்ணுக்குள் புதைந்து கொள்ள வேண்டும் என்பது போல் அவமானம் அவளை பிடுங்கி தின்றது.

விலக வேண்டும் மட்டுமில்லை. விலகியும் நின்று கொள்ள வேண்டும் அவள் அறிவு முடிவு எடுத்து கொண்டது. ஆனால், மனம்?

சிறகுகள் விரியும்…