இனிய தென்றலே

தென்றல் – 6

பொறுமை என்னும் பூங்காற்றை சுவாசிக்கத் தெரியாத சராசரி ஆண்மகன்தான் அசோக்கிருஷ்ணா.

எந்த ஒன்றையும் சரியாக அனுமானிக்காமல், தன் அவசரபுத்தியில் ஸ்திரப்படுத்திக் கொள்பவன். தனக்கான ஒன்று மறுக்கப்படும் பட்சத்தில், ஏன் எதற்கு என்று ஆராயாமல், முன்கோபம் கொண்டு தனது விருப்பங்களை தனதாக்கிக் கொள்ள நினைப்பான்.

ஒரு பெண்ணின் அழகு, நடை உடை பாவனைகளில் விருப்பம் ஏற்பட்டு பழக நினைத்தால் அதை காதல் என்றும், முதற்பார்வையிலேயே அவள் பேச்சால் மட்டுமே கவரப்பட்டு மீண்டும் மீண்டும் அவளுடன் பேசிப் பழக வேண்டும் எனத் தோன்றினால், அவளுடன் தோழமை கொள்வதில் தவறில்லை என்பதும் அசோக்கின் திண்மையான எண்ணம். அதனால்தான் வைஷாலியை தனது நட்பு வட்டத்தில் இழுத்துக் கொள்ள நினைத்தான்.

திருமணத்திற்கு வேண்டாமென்று வைஷாலியை தவிர்த்து விட்டு வந்த பிறகும், அவளுடன் பேசிய தருணங்களை மனம் லயிக்க அசைபோட்டுக் கொண்டிருந்தவனுக்கு,  அவளுடனான சிநேகத்தை தொடர்ந்தே ஆகவேண்டும் என்ற வீம்பான எண்ணம் ஆக்கிரமிக்க தொடங்கியது.

அவளுடன் நட்பாகப் பழக வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே, அவளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டவன், அவள் செல்லும் இடங்களுக்கு தானும் சென்று தன்விருப்பத்தை பகிர நினைத்தான். 

அவளை வெளியிடங்களில் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒருதயக்கம் அல்லது யாரோ ஒருவர் உடனிருப்பது போன்ற தடங்கல்கள்வர, மற்றவர்கள் முன்னிலையில் தன்விருப்பத்தை பகிர அசோக் விரும்பவில்லை.

இந்த ஒரு எண்ணத்தை அவன் அலசி ஆராய்ந்திருந்தாலே போதும், தனக்கு அவளிடத்தில் வேண்டுவது நட்பல்ல, அதையும் தாண்டியது என்பதை அவனது மனம் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும். அவன்தான் காதலையும், திருமணத்தையும் எட்டிக்காயாக தூர நிறுத்தி வைத்திருப்பவன் ஆயிற்றே!

அதனால்தான் பார்க்கும் யாவரையும் தனது நட்பென்னும் வட்டத்தில் இழுத்து கொண்டு, அதற்கு அடுத்த கட்டத்திற்கு  செல்லாமல் முற்றுப் புள்ளியும் வைத்து விடுகிறான்.  

தனியாக வைஷாலியை சந்திக்கும் சந்தர்ப்பம் கிராமத்தில் மட்டுமே வாய்க்குமென்ற முடிவெடுத்த பிறகுதான் அவளிடம் பேசவென இவன் கிராமத்திற்கு சென்றது.

ஆனால் அவனது தந்தையின் சிறப்பான முயற்சியால் முற்றிலும் அவனது எண்ணம் நிலைகுலைந்துபோய், வேறு பலஇன்னல்கள் படையெடுத்து அவளை பற்றிய நினைவுகளை சற்று தள்ளி வைத்திருந்தது.

அன்று வணிக வளாகத்தில்(மால்) அவளை சந்திக்கும் வரையிலும்கூட, அவளைப் பார்த்து பேச வேண்டுமென்ற எண்ணம் அவனது மனதை ஆக்கிரமிக்கவில்லை.

மனதிற்கு பிடித்தவளை பார்த்ததும் அடக்கி வைத்திருந்த ஏக்கங்கள் எல்லாம் அவனையும் அறியாமல் ஒருசேர உடைப்பெடுக்க, தானாகவே சென்று அவளிடம் பேச்சை ஆரம்பித்தான்.

வைஷாலியும் அவன் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டதோடு, தப்பானவனாகச் சித்தரித்து விட்டு, வெறுப்புடன் காரித்துப்பியும் சென்றுவிட, அவன் வெகுவாய் தவித்துப் போனான்.

அவளின் நிராகரிப்பும், குற்றச்சாட்டுகளும் மீளமுடியாத வலிகளை கொடுத்திட, அதனை சமன் செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் அசோக்கிருஷ்ணா…

எந்தவொரு நிர்பந்தமும் இல்லாத வெளிப்படையான தோழமையை அவளிடத்தில் வேண்ட, அவளோ, அதை முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டு தன்னை நிந்தித்து விட்டாளே என்ற ஆதங்கமும் கோபமும் ஒருசேர மனதை ஆக்கிரமித்து பொறுமையிழக்கச் செய்தது.

அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள எத்தனையோ முறை முயன்றான். இரண்டு முறை தோழிகளை விட்டு தனக்கு பேச விருப்பமில்லை என்ற பதிலை அனுப்பியவள், அதற்கடுத்து அவனது அலைபேசி எண்ணையே பிளாக் செய்து, அழைப்பு வருவதை தடை செய்தும் விட்டாள். இந்தச் செயல் சற்று அதிகப்படியாய்பட அவள் மீது கோபமும் சேர்ந்து கொண்டது.

தன்மீதான இழிவான பார்வையை வைஷாலியிடமிருந்து அகற்றி, தன்னைப் புரிய வைத்து விடவேண்டும் என்ற வைராக்கியம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டேபோக, ஒருவாரம் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன், மறுநாள் தன்னையும் மீறி அவளைத் தேடி விடுதிக்கு சென்று விட்டான்.

அவளோ அறையை காலி செய்துவிட்டு கிராமத்திற்கே சென்று விட்டதாக தகவல் கிடைக்க, சற்றும் யோசிக்காமல் அடுத்த நிமிடமே கிராமத்திற்கு தனது வெள்ளை ஸ்கோடாவை செலுத்தி  விட்டான்.

அவனது அவசரபுத்தியும் தன்மீதான தப்பர்தத்தை களைந்திட வேண்டும் என்ற தீவிரம் மட்டுமே மனமெங்கும் உழன்று கொண்டிருக்க, தனது வேலை, வீடு என அனைத்தையும் மறந்தே பயணித்தான்.

நடுநிசியில் இவன் வீட்டிற்கு வரவில்லை என்று தன் அன்னை அழைத்த பிறகே சுயம் உரைக்க, அவசர வேலையாக அலுவலகத்தில் இருக்கிறேன் என்று பொய்யும் சொல்லி முடித்தான்.

வைஷாலியை பார்க்கச் செல்கிறேன் என்று சொன்னால் அதற்கு என்ன மாதிரியான எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே தனது பயணத்தை மறைத்தான்.

பின்விளைவுகளை கருத்தில் கொள்ளாது அதிகாலையில் வைஷாலியின் வீட்டை அடைந்தவனை வரவேற்றது அன்னபூரணி பாட்டியே…

அவரைப் பார்த்தவுடன், தேடி வந்தவளின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற சுணக்கத்தில் படபடப்புடன் பெரியவரிடம் வார்த்தை வளர்க்க ஆரம்பித்தான்.

“நான் வைஷாலிய பார்க்க வந்திருக்கேன் பாட்டி..! அவள கூப்பிடுங்க…” என்று அவசர அதிகாரமாய் சொல்ல, பெரியவருக்கு கோபம் வந்து விட்டது.

கிராமத்தில் வயது வந்த பெண்ணைத்தேடி, ஓயாமல் ஒருவன் வருவதென்றால் அது என்ன மாதிரியான வதந்திகளை உருவாக்கக்கூடும் என்பதை யூகித்தவர், அசோக்கின் பேச்சினை மட்டுமல்ல அவனது வருகையையும் வெறுத்தார். அந்த அதிருப்தியுடனே,

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு தம்பி! நீ இந்த மாதிரி அடிக்கடி இங்கே வர்றது அவ்வளவு நல்லதில்ல…” நேருக்கு நேராய் சொல்லிவிட்டார்.

“அவகிட்டதான் பேசணும், அவளை கூப்பிடுங்க…” விடாமல் இவனும் வீம்பாய் நிற்க, இப்பொழுது பெரியவர் கோபத்தை வெளிப்படையாகவே காட்டி விட்டார்.

“என் பேத்தி பத்தின எந்த விஷயமும் என்னை தாண்டித்தான் போகும், போகணும். நீ வந்து அதிகாரம் பண்றதுக்கு இது உன் இடம் கிடையாது. வந்த விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புர வழியப் பாரு..!” அவனை வெளியே தள்ளிவிடாத குறையாக முறைப்புடனே கண்டித்தார்.

பாட்டியின் கண்டிப்பு, ஏற்கனவே கோபத்தில் கனன்று கொண்டிருந்தவனின் மனதிற்கு தூபம் போட்ட கதையாகிப் போக, நிதானத்தை கைவிட்டு, அவரின் பேச்சினை சற்றும் மதிக்காமல், “வைஷாலி எங்கே இருக்க? வெளியே வா!” சீற்றத்துடன் உரிமைக்காரனாக வரவேற்பறையை தாண்டி, வீட்டின் உள்ளறைக்கே வந்து விட்டான்.

வீட்டில் வேலையாட்களும் அப்பொழுது வர ஆரம்பித்திருக்க, இவனது அதிரடியான வருகையும் செய்கையும் அனைவருக்கும் கண்காட்சியானது.

இவனது வரவை அனைவரும் கர்ம சிரத்தையாக கவனிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், அன்னம் பாட்டி சுதாரித்து அனவைரையும் வெளியே செல்லுமாறு கண்களால் உத்தரவிட, அனைவரும் வெளியேறி விட்டனர்.

இப்பொழுது வீட்டில் நடப்பதை வெளியாட்கள் யாராலும் பார்க்க முடியவில்லை என்றாலும் இவனது வருகை எல்லோரும் அறிந்த ஒன்றாகிப் போனது.

வைஷாலியும் பேச்சுச் சத்தம் கேட்டு தனது அறையில் இருந்து வெளியில் வந்து, அசோக்கின் வருகையை அதிர்வுடன்தான் எதிர் கொண்டாள்.

“ஏன் ஷாலி, அன்னைக்கு அப்டி பேசிட்டு போன? அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்னு உனக்கு அவ்வளவு கோபம் வந்தது? ஊரு உலகத்துல இல்லாததையா நான் சொன்னேன்…” அவளின் அதிர்வை கண்டுகொள்ளாது சற்றும் பொறுமையின்றி தன்மனதில் எழுந்த ஆதங்கத்தை எல்லாம் சத்தமாகவே அடுக்கிக் கொண்டேபோக, அவளுக்கோ முள்ளின் மேல் நிற்கும் நிலைதான்.

‘இவன் படிச்சவன் தானா? பொறுமையாவே இவனுக்கு எந்த காரியமும் பண்ணத் தெரியாதா! இவன் மடத்தனத்துக்கு பதில் தெரிஞ்சுக்கதான் இப்டி அவசரமா ஓடி வந்திருக்கானா?’ மனதோடு சரமாரியாகத் திட்டியவள், அவன் மீது கசப்பான பார்வையைத்தான் பதித்தாள்.

இவனுக்கு இப்பொழுது பதில் சொன்னால், பாட்டிக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த விஷயம், சபையில் வெகு சிறப்பாய் அரங்கேறி விடுமென்று மனம் எச்சரிக்க, அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றாள்.

அசோக் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் வெளியே இருக்கும் அனைவருக்கும் காற்று வழிச் செய்தியாக சென்றடைய, இவர்களின் பழக்கம் சென்னையில் தொடர்கின்றது போலவும் இப்பொழுது ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் இவன் சமாதானப்படுத்த வந்திருக்கிறான் என்றே நினைக்கும் சாதகமான சூழ்நிலையை அவனே உருவாக்கிக் கொண்டிருந்தான்.

அசோக்கின் நிதானமற்ற செயல்களைப் பார்த்து பாட்டியின் மனம், உலைக்கலனாய் கொதிக்க ஆரம்பித்து, ‘என்ன இதெல்லாம்’ என்ற அனல் தெறிக்கும் பார்வையை பேத்திக்கு பரிசளிக்க, அவளோ பதில் சொல்லத் தெரியாமல் பெருத்த சங்கடத்துடன் தலை குனிந்தாள்.

பேத்தியின் அவஸ்தையை அனுமானித்தவருக்கு அப்பொழுது தோன்றியதெல்லாம் இவனை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே!

ஏற்கனவே அசோக்கின் வருகையை வெறுப்புடனே பார்த்துக் கொண்டிருந்தவர், இவனது அடாவடித் தனத்தை தடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் குரலை உயர்த்தி விட்டார்.

“உங்க குடும்பத்து மேல நிறைய மரியாதை வச்சிருக்கேன். என்னை பெரிய பேச்சு பேசவைக்காம இப்பவே கிளம்பிடு தம்பி! என் பேத்திகிட்ட நீ பேசுற பேச்சு சரியா படல…” என்று எச்சரிக்க,

அவன் அதனையும் மீறி வைஷூவிடம், “எனக்கு பதில் சொல்லு ஷாலி!” தன்பிடிவாதத்தில் நிற்க,

அடுத்த நிமிடம் பேத்தியின் கன்னத்தை பாட்டியின் கை பதம் பார்த்தது. சட்டென்று வைஷாலிக்கு விழுந்த அடியில், அதிர்ச்சியாகி வாயடைத்துப் போனான் அசோக்.

இவனது அதிகப்பிரசங்கி தனத்தை நிறுத்த வேண்டிய அவசியத்தில் இருந்த பெரியவருக்கும், இவளால்தானே என்ற எண்ணத்தில், பேத்தியின் மீதும் கோபம் வர ஆரம்பித்திருக்க, தன்பொறுமையின் எல்லையைக் கடந்தே கையை நீட்டியிருந்தார். அவரின் செயலில் அமைதியான அசோக்கிடம்,

“என்னடா ஆம்பள இல்லாத வீட்டுல நாட்டாமை பண்ண வந்தியா? என் பேத்திய வேணாம்னு சொல்லிட்டு போனவனுக்கு, அவகிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? போன தடவ நீ வந்தப்பவே உன்னை சந்தேகப் பட்டேன்… அது சரின்னு சொல்ற மாதிரிதான் நீ இப்போ நடந்துக்குற…

உன் மனசுல என்ன இருந்தாலும் வீட்டு பெரியவங்கள கூட்டிட்டு வந்து பேசு… அப்டி செய்ய இஷ்டமில்லாம, சும்மா பார்க்க, பழகனு மட்டுமே வந்திருக்கேன்னா, இந்த நிமிசமே அந்த நெனைப்ப அழிச்சிடு..!” பொறுமையை கைவிட்டு கோபக்கணலை கொட்டிய பெரியவரின் கை, அடுத்த கணம் வீட்டை விட்டு வெளியேறு என்று வாசலை சுட்டிக் காட்டியது.

“இப்டி ஒருத்தன் தேடி வர்ற அளவுக்கா, நீ சென்னையில ஆட்டம் போட்டுட்டு இருந்திருக்க..! ஒழுக்கமுள்ளவளா உன்னை வளர்த்துருக்கேன்னு பெருமைப்பட்ட என் நெனைப்புல மண்ணை அள்ளிப் போட்டுடியேடி…” என்று மனமொடிந்த குரலில் பேத்தியையும் கடிந்து கொள்ளத் தவறவில்லை அன்னபூரணி பாட்டி.

வைஷாலிக்கு கிடைத்த அடியில், தனது பைத்தியக்காரத்தனம் மெல்ல மெல்லப் புலப்பட்டு, அசோக் வெளியேறாமல் தன்நிலை மறந்து சிலையாகி நிற்க,

“அடேய் முத்து! குமாரசாமிய கூட்டிட்டு வர ஒருஆள அனுப்பு! அது வரைக்கும் இந்த தம்பிய தோட்டத்து பெரிய அறையில உக்கார வச்சு, துணைக்கு நீயும் அங்கே இரு!” நொடிப்பொழுதில் குரலை உயர்த்தி வேலையாளை ஏவியவர், வெகு சாதுரியமாக அசோக்கை வீட்டில் சிறைப்படுத்தி விட்டார்.

தற்பொழுது இவனை மட்டுமே வெளியேறச் சொன்னால் மீண்டும் இப்படி திடுதிடுப்பென்று வருவான் என்பதில் ஐயமில்லை என்பதை உணர்ந்தவர், அதனை தடுக்கவும் இவனை சார்ந்தவர்களுக்கும் நடந்தவைகளை விளக்கவும் குமாரசாமியை வரவழைக்க கட்டளையிட்டார்.

பெரியவரிடம் பேச்சு வாங்கிய அவமதிப்பிலும், அவரது திடீர் உத்தரவிலும் அசோக் பெரிதும் திண்டாடித்தான் போனான். தன்மனது சரியென்று பட்டதை செய்ய வந்தவனுக்கு சூழ்நிலையும், தனது அவசரபுத்தியுமே தனக்கு எதிராக சதிசெய்து, தன்னை மீண்டும் குற்றவாளியாக்கி நிற்க வைத்து விட்ட அதிர்ச்சியில் தலைகுனிந்தே அங்கிருந்து வெளியேறினான்

தன்கையை மீறிப் போய்விட்ட தனது முட்டாள் தனத்தின் விளைவுகளை என்ன செய்தும் மாற்றி அமைக்க முடியாது என்று நொந்தவன், பெரியவரின் சொல்லிற்கு கட்டுப்பட்டு தோட்டத்து அறையில் காத்திருந்தான்.

இங்கே பாட்டியும், பேத்தியை முறைத்த பார்வையிலேயே இதுவரை நடந்தவற்றை ஒன்று விடாமல் அவளும் ஒப்பித்து விட, அந்தநேர இடைவெளியில் குமாரசாமியும் வந்து சேர்ந்தார்.

விஷயம் இன்னதென்று தெரியாமல் வந்த குமாரசாமியை எந்தவித கடுகடுப்பும் இல்லாமல் வரவேற்றவர், அந்த நிமிடமே தோட்டத்து அறைக்கு அழைத்து சென்று, அசோக்கை முன்னே வைத்து நடந்து முடிந்த அனைத்தையும் விளக்கி விட்டார்.

“எனக்கும் மனசு கஷ்டமா இருக்கு குமாரசாமி! சொல்லச் சொல்லக் கேக்காம உங்க வீட்டு பையன் அதிகப்படியா நடந்துக்கப் போயி, நானும் அதுக்கு பதில் குடுக்க வேண்டியதா போச்சு! பெரிய படிப்பு படிச்சு, கௌரவமா உத்தியோகம் பாக்குற பிள்ளைக்கு நான் செஞ்சது சரியில்லதான்… ஆனா, என்பேத்திய முன்னிறுத்தி பேசும்போது என்னால வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியல…” என்று தன்னால் முடிந்த சமாதானத்தை குமாரசாமியின் மூலமாக அசோக்கிடம் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்லி விட்டார் பாட்டி.

ஒரு பெரியவருக்கே உண்டான தெளிவில் சூழ்நிலையின் கனத்தை வெகுவாக மாற்றி வைத்து இருவரையும் அனுப்பி வைத்தார். தவறு தங்கள் பக்கம்தான் என்பதை அறிந்த குமாரசாமியும் அமைதியாகவே வெளியேறினார்.

அன்னபூரணியின் பொறுமையான பேச்சும், அங்கே கிடைத்த சிறிதுநேர தனிமையும் அசோக்கின் கோபத்தை பெருமளவு தணிய வைத்திருந்தது. தனக்கு ஏற்பட்ட அவமானத்தைவிட, தன்னைப் புரிய வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அவன் மனமெங்கும் வியாப்பித்திருந்தது.

இப்பொழுது தனது குடும்பத்தாரை என்ன சொல்லி சமாளிப்பது, வைஷாலியிடம் இன்றைக்கான செயலுக்கு எப்படி மன்னிப்பை வேண்டுவது என்ற எண்ணமே அசோக்கின் மனதில் நிறைந்திருக்க, அதை முழுதும் கலைக்கும் விதமாய் அவனது வெள்ளைரதம் அவனை வாவாவென அழைத்தது.

முன்தின இரவில் தன்கோபத்தை எல்லாம் அதனிடம் காட்டி, தறிகெட்டு கையாண்டதன் பலனும் அதனுடன் மழைச்சாரலோடு செம்மண் சாலையில் வந்த பயணமும் அவனது வெள்ளை ரதத்தை தாறுமாறு தக்காளிச் சோறாய் மாற்றம் கொள்ள வைத்திருக்க, அதன் முன்னிரண்டு சக்கரங்களும் காற்று இறங்கிய பலூனாய் பஞ்சராகியும் போயிருந்தது.

அதனை பார்த்த மறுகணமே ‘கடவுளே! இதுவும் சேர்ந்து சதி பண்ணுதா…’ நொந்தவாறே தலையில் கைவைத்து அதன்மேல் சாய்ந்து விட்டான்.

“மனச அமைதிப்படுத்திக்கோ அசோக்! கிராமத்து பெரியவங்க அப்படிதான்…” என்ற குமாரசாமி, நடந்த செயலுக்கு அசோக் வருந்துகிறானோ என்று ஆறுதல் அளிக்க, அதனை தலையாட்டி மறுத்தவன், தனது ரதத்தை காட்டி,

“இப்போ இத சரி பண்றதுதான் பெரிய கவலையா இருக்குண்ணா…” உணர்வுகள் வடிந்த குரலில் கவலை கொண்டான். 

தனக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்து, காரினை ஒப்படைத்த குமாரசாமி, வேலை முடிந்து காரினை வீட்டிற்கு கொண்டு வந்து விடுமாறு சொல்லி விட்டு, அசோக்கை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு இழுத்து சென்றார்.

“சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ அசோக்! அதுக்குள்ள வண்டியும் ரெடியாகிடும்” என அறிவுறுத்தி அவனை ஒய்வெடுக்க வைத்தார்.

அசோக் நிதானமில்லாமல் இருக்கிறான் என்பதை அவனது ஒவ்வொரு தடுமாறிய செயலிலும் கண்டவர், அவன் தந்தை ராமகிருஷ்ணனுக்கு அழைத்து இங்கு நடந்ததையும் ஒப்பித்து விட்டார்.

இடைவிடாத அலைச்சலும், மன அயர்ச்சியும் சேர்ந்து அசோக்கை சோர்வு கொள்ள வைக்க, தன்னையும் மீறி உறங்கி விட்டான். அவன் கண் முழித்த பின்மாலைப் பொழுதில் ராமகிருஷ்ணன், விமானம் மூலம் திருச்சியில் இறங்கி, துறையூருக்கு வாடகை வண்டி மூலம் வந்து சேர்ந்திருந்தார்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்த ராமகிருஷ்ணன் மகனை திட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார். தானும் நிதானம் தவறி திட்டுவதால் மட்டும் நடந்த கூத்தை மாற்ற முடியாதென சலித்துக் கொண்டவர், உஷ்ணப் பார்வையில் மகனை துவம்சம் செய்து கொண்டிருந்தார்.

அதே நேரம் அசோக்கின் தாத்தாவும், ராமகிருஷ்ணனின் தந்தையுமான மாணிக்கத்திற்கும் பேரனின் செயலில் மனம் ஒப்பாமல்போக, வைஷாலியின் வீட்டிற்கு சென்று ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு வந்து விடுமாறு அறிவுறுத்தினார்.

“நாளபின்ன கிராமத்து நல்லது கேட்டதுக்கு நாமளும் முகத்தை பார்த்துக்கணும்யா… அதோட இந்தப்பய மனசுல என்னதான் இருக்குனு தெளிவா யோசிக்க சொல்லு. அந்த பொண்ணுதான் வேணுமுன்னா சம்மந்தம் பேசிட்டும் வந்துடு! இனியும் தள்ளிப்போட்டு நாலுபேர் வாய்க்கு அவல் ஆக வேணாம்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட, மறுபேச்சின்றி ராமகிருஷ்ணனும் சென்றார்.

எக்காரணம் கொண்டும் தன்மகனுக்கு ஒருபெண்ணை கல்யாணம் செய்து வைத்து, அந்த பாவத்தை கட்டிக் கொள்ள வேண்டாம் என்ற வெறுத்த மனநிலைக்கு வந்திருந்தவர், திருமணம் சம்மந்தம் போன்றவற்றை பேசவேண்டாம் என ஒதுக்கி வைத்தே அங்கு சென்றார்.

அன்னபூரணியும் மாணிக்கத்தின் எண்ணத்தையே மனதில் கொண்டு பேச்சினை வளர்க்க, ராமகிருஷ்ணன் தன்மகனின் பழக்க வழக்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டி, இந்த திருமணம் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

பாட்டியும் ‘இந்த விவரம் எல்லாம் உனக்கு தெரியுமா’ என்ற கேள்விப் பார்வையை பேத்தி மீது செலுத்த, அவளும் ஆமாம் என்ற பாவனையில் தலைகுனிய, இன்னும் எதையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாளோ என்ற வெறுத்த பார்வையில் மனம் கசந்தார்.

தனது மனச்சுணக்கத்தை வெளியில் காட்டாமல், ராமகிருஷ்ணனை அனுப்பி வைத்து, பேத்தியின் புறம் திரும்ப,

“நான் தப்பு பண்ணிட்டேனா பாட்டி!” குற்றம் புரிந்தவளாக அவரின் முன் மண்டியிட்டு விட்டாள் வைஷாலி.  

“உனக்கு எப்படி தோணுது கண்ணு?” பேத்தியை ஊடுருவும் பார்வையில் பார்த்து, அமைதியாகவே கேட்டார். நடந்த தவறுக்கு தனது பேத்தியின் நடவடிக்கையும் கூட அச்சாரமாக இருந்துள்ளது என்பதை நன்றாகவே அறிந்து கொண்டு விட்டார்.

“தெரியல பாட்டி! இவர் சம்மந்தப்பட்ட எந்த விசயத்துலயும் நான், இது வரைக்கும் தெளிவில்லாமாதான் இருக்கேன்..!” மனதை மறைக்காமல் தவிப்புடனே பேசினாள்.

“ஒருத்தன் உன் கண்ணுல ஓயாம படுறான்னா, என்ன ஏதுன்னு விசாரிக்க தோணலையா? இந்த அளவுக்குகூட சுதாரிப்பு இல்லாமய நீ வெளியே தங்கி, படிச்சு வேலை பார்த்துட்டு இருக்க…” என கண்டித்தவர்,

“இவன் இப்படி பேசினான்னு என்கிட்டயாவது சொல்லியிருந்தா, அவங்க வீட்டுல சொல்லி இத்தனை தூரத்துக்கு போகவிட்டுருக்க மாட்டேனே!” ஆதங்கமாய் கேட்டு முடித்தார்.

இதற்கு எப்படி விளக்கம் சொல்வாள்? இவன் வந்து சென்றதற்கெல்லாம்தான் தோழிகள் வேறொரு சாயம் பூசி அவளையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தனரே! அந்த நேரத்தில், அவளும் அதனை ரகசியமாக மனதோடு ரசித்துக் கொண்டிருந்த அவலத்தை எவ்வாறு வெளிப்படுத்துவாள்?

“அன்னைக்கு அந்த கடையில கோபப்படாம அவன்கிட்ட நீ பேசி இருக்கலாம். நீ வளர்ந்த விதம், உன்னோட பழக்க வழக்கம் எல்லாம் பொறுமையா விளக்கி சொல்லி, அவனை நீ தவிர்த்திருக்கலாமேடா!” அமைதியாக வந்த பாட்டியின் சொல்லம்புகளில் மொத்தமாக உடைந்தே போனாள் வைஷாலி.

“உன் பேத்தி தப்பான பொண்ணு இல்ல பாட்டி… எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே புரியல…” என இவள் கதறி அழ, பெரியவருக்கும் மனமெங்கும் பாரமேறிய உணர்வில் கண்ணில் நீர்படலம் வெளியேறி விடவா என்று கேட்டு நின்றது.

எத்தனை அருமையாக வளர்த்திருக்கிறேன் என்று பெருமைபட்ட தன்னை, இவளின் மனதில் ஆட்கொண்ட சலனம் சடுதியில் கீழிறக்கி விட்டதே என்ற மனத்தாங்கலும் சேர்ந்துகொள்ள, மௌனமாக பேத்தியின் அழுகையை மிகுந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் கதறிய அழுகை விசும்பலாக மாறிவிட, அவரின் தோள்சாய்ந்து கொண்டு, “என்னை இதுக்காக வெறுத்துடுவியா பாட்டி?” சிறு பிள்ளையாய் கேட்டபடி அவர் மார்பில் தஞ்சம் அடைந்து கட்டிக்கொண்டாள் வைஷாலி.

“அசட்டுப் புள்ள… என்ன பேச்சு பேசுற நீ! வளர்ந்திருக்கியே தவிர, கொஞ்சங்கூட சூதானமில்ல…” என்றவரின் குரலும் கரகரத்து ஒலித்தது. இன்னமும் அறியாத குழந்தையாய் அரற்றுபவளை போய் கடிந்து கொண்டு விட்டோமே என்று தன்னைதானே நொந்து கொண்டார்.

“என்னை நல்லா திட்டு பாட்டி! நீ ரொம்ப செல்லம் குடுத்துதான் இப்டி ஒண்ணுமே தெரியாத தத்தியா இருக்கேன்…” நொடியில் துடுக்குப் பெண்ணாய் மாறி பாட்டியை வாரி விட,

“அடிக் கழுத! இவ்ளோ நேரம் அழுதிட்டு, இப்போ என்னையே குறை சொல்றியா..!” என்று காதினை திருகிய போது வீட்டு தொலைபேசி அழைக்க, உடனே குரலினை சரிசெய்து கொண்டு வைஷாலி அழைப்பினை எடுத்தாள்.

அசோக்கினால் ஏற்பட்ட இன்றைய அமளிகள் இன்னமும் முடியவில்லை, இதோ மீண்டும் தொடர்கிறது என்பதைப் போல அவனே அழைத்திருக்க, இவன் குழப்பவாதியா, அல்லது பிடிவாதக்காரனா என்ற சந்தேகம் முதன்முறையாக வைஷாலியின் மனதில் எழுந்தது.