இயற்கையின் காதல்!

இயற்கையின் காதல்!
இயற்கையின் காதல்!
-அபிராமி
“மௌனம் சம்மதம் என்று எவ்வளவு சுலபமாகச் சொல்லி விடுகின்றனர். எல்லா மௌனங்களும் சம்மதத்தை மட்டுமே அர்த்தமாகக் கொண்டிருப்பதில்லை என்று யார்தான் புரிந்து கொள்வாரோ? யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அவன் புரிந்துகொள்வான். என்னவன் என்னைப் புரிந்துகொள்வான். நிச்சயம் புரிந்துகொள்வான்” அவன்மீது அவளுக்குத்தான் எத்தனை நம்பிக்கை. நம்பிக்கையும் கண்ணாடி போல்தான் என்று அவளுக்குச் சொல்பவர் யாரோ? உடைந்துவிட்டால் அந்தக் கூரிய துகள் தரும் ரணத்தின் வலியைச் சொல்லிதான் மாளுமோ? ‘என் மௌனத்தைச் சம்மதமாக மொழிபெயர்க்காதீர்கள்!’ என்று கத்த வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஆனாலும் மௌனமாகவே நின்றிந்தாள்.
“நான் பார்த்தேன். நிஹாரிகா அந்த டீம் ஹெட்டோட பேசிட்டு இருந்தாங்க”
“நானும் பார்த்தேன். என்னடா இவங்க இப்படி பேசிட்டு இருக்காங்களேன்னு நினைச்சேன். கடைசில சோறு போடுற நிறுவனத்துக்கு இப்படி துரோகம் பண்ணுவாங்கனு நினைக்கல”
“சார் இவங்களை எப்படி எல்லாம் தலையில தூக்கி வச்சிட்டு ஆடினாரு. அவருக்கு இது நல்லா வேணும்”
“மனுஷன் பொய் சொல்லுவான். எந்திரம் பொய் சொல்லுமா? அவங்க இதுல இருந்துதான் ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் எல்லாம் போகியிருக்குனு ஐடி டீமே சொல்லுறாங்களே”
அவள்முன் இருந்தவர்கள் அவளைத் தனது யூகங்களுக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். அவளது மௌனபூட்டு எத்தனை தூரம் தாக்குப் பிடிக்குமென்று அவளால் உறுதியாகச் சொல்வதற்கில்லை. பூட்டு உடைபடும் தருணத்திற்காகவே அவளும் சற்றே பொறுத்துதான் இருந்தாள் என்று சொல்ல வேண்டும்.
காரணம் அவள்மீது சுமத்தப்பட்ட பழி அவ்வாறிருந்தது. சூழ்நிலைகளும் அவளுக்கு எதிராகவே இருத்தது. அவள் நிலையில் யாராக இருந்தாலும், ஒன்று அழுதுதீர்த்திருப்பர் இல்லை, மனதளவிலாவது உடைந்திருப்பர். அவளோ உறுதியாக நின்றாள்.
செய்யாத தப்பிற்கு நான் எதற்குக் கவலைப்பட வேண்டுமென்ற மனோபாவம். அவள் நிஹாரிகா. கட்டுமானத்துறையில் படிப்படியாக உயர்ந்து வரும் இளம் தொழிலதிபனான ப்ருத்விராஜனின் காரியதரிசி. அதோடு, அவனது பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவன்மீது காதல் கொண்ட நங்கையும்தான்.
எங்கும் எதிலும் அவளை அவன் விட்டுக்கொடுத்ததேயில்லை எனலாம். அப்படியொரு நம்பிக்கை அவள்மீது அவனுக்கு. அதைக் காதலென்று இவள் மொழிபெயர்க்க, அவனோ எப்படி மொழிபெயர்த்தான் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ட்ரீம்ஸ் வேர்ல்ட். ப்ருத்விராஜனின் கனவு ப்ராஜெக்ட்.
ரெசார்ட் மட்டுமில்லாமல் அதைச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அதைக் கட்டியமைப்பதே அவனுக்கு விழுந்த சவால். “இந்த ப்ராஜெக்ட்டை மட்டும் நம்ம நல்லா பண்ணிட்டா, கம்பெனி லெவல் எங்கயோ போய்டும் நிக்கி” ப்ருத்வி இதை அடிக்கடி அவளிடம் கூறும் வார்த்தைகள்.
இன்று நிகழும் ஒப்பந்த கூட்டத்தில், நால்வர் கொண்ட குழு, சிறந்த திட்டத்திற்கு அந்த ப்ராஜெக்ட்டைத் தேர்வு செய்ய ஏற்பாடாகி இருக்க, இவனது திட்டத்தை எதிரணி தனது திட்டமென்று பிரசண்டேஷன் கொடுத்தது, இவன் சற்றும் எதிர்பாராதது.
“என்னதான் கனவாக இருந்தாலும் நிதர்சனத்தோடு இயல்பாக இருந்தால்தான் அதுக்கும் ஒரு அழகு இருக்கும். அப்படி பார்த்தால் இயற்கை சூழ்ந்த சூழல்தான் ஒவ்வொருத்தருக்கும் சொர்க்கமாக இருக்கும்”
ப்ருத்வி பேச நினைத்துத் தயாரித்த ஸ்பீச்சில் வார்த்தைகளைக்கூட மாற்றாமல், எதிரணியின் ஹெட் ஆகாஷ் பேசியபடி இருக்க, மிதமிஞ்சிய கோபத்தில் ப்ருத்வி அவ்விடம் விட்டுச் சென்றுவிட்டவன், அலுவலகத்தில் அத்தனை பேரையும் அவர்கள் வேலை செய்யும் சிஸ்டம் என்று எல்லாவற்றையும் சோதனையிட ஆணையிட்டான்.
வெளிவந்த முடிவோ ப்ருத்வியே சற்றும் எதிர்பாராதது. “நிஹாரிகாவோட சிஸ்டமிலிருந்துதான் சார் டிடெய்ல்ஸ் எல்லாம் இடம் மாறி இருக்கு. சிசிடிவி கூடச் செக் பண்ணிட்டோம். அவங்கதான் பண்ணிருக்காங்க” ஐடி டீம் உறுதியாகச் சொல்லிவிட ப்ருத்வி ஸ்தம்பித்துவிட்டான்.
தேர்ந்த தொழிலதிபன் அல்லவா, உடனே தன்னை மீட்டுக்கொண்டு கம்பெனி அலுவலர்கள் அனைவர் முன்னிலையிலும் நிஹாரிகாவைத் தனது நண்பன்மூலம் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தான்.
“சொல்லுங்க நிஹாரிகா. எவிடென்ஸ் எல்லாம் உங்களுக்கு எதிராகத்தான் இருக்கு. சிசிடிவியும் நீங்கதான் பண்ணிருக்கீங்கனு சொல்லுது. நீங்க பிரசண்டேஷன் நடக்குறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி ஆகாஷோட பேசினதாக வேற ஸ்டாப் சொல்லுறாங்க. இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இதுக்கு நீங்க என்ன காம்பென்சேஷன் பண்ண போறீங்க?”
ப்ரித்வியின் நண்பனும் பிசினஸ் பாட்னருமான அக்னி கேள்விகளை அடுக்க, அப்போதும் ‘நீ ஏதேனும் பேசுடா. நான் இதுலாம் பண்ணிருக்க மாட்டேன்னு சொல்லுடா’ நிஹாரிகாவின் கண்கள் ப்ருத்வியைதான் பரிதாபமாகப் பார்த்தது.
கல்லெனச் சமைந்தவன் எங்கே பேசுவான்? மௌனமே அங்கு ஆட்சி புரிந்தது. காதலெனும் வானம், சுயகௌரவம் என்ற மேகத்தால் மெல்ல மெல்ல நிஹாரிகாவின் மனதில் மறைய, நிமிர்ந்து நின்றாள்.
“நான் இனிமே என்ன காரணம் சொல்லியும் நான் இதைப் பண்ணலன்னு ப்ரூவ் பண்ண முடியாது. பண்ணவும் மாட்டேன். இதை நான் பண்ணலனு ப்ரூவ் பண்ணிதான் காட்டணும்ங்கிற அவசியம் இருக்காதுன்னு நான் இதுவரை நினைச்சிட்டு இருந்தேன். கொஞ்சம் ஓவர் கான்ஃபிடென்ஸ். ஆனால், இந்தக் கம்பனிமேல நான் வச்சிருக்க மரியாதை இன்னும் என் மனசுல இருக்கு. எனக்கு இன்னும் இருவது நாள் டைம் கொடுங்க. இந்த ப்ராஜெக்ட் நம்மளுக்கே கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், இந்த ப்ராஜெக்டோட ரிசல்ட்டை நான் இருவது நாள் கழிச்சு அனௌன்ஸ் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டு ஏற்பாடு பண்ணிருக்கேன். யாரோ என்னை நம்பி செஞ்சியிருக்காங்க. இந்தக் கம்பெனில நான் பண்ண ஒர்க்ல கொஞ்சமாச்சும் நம்பிக்கை இருந்தால், அவங்க செஞ்சதை நீங்களும் செய்வீங்கன்னு நம்புறேன்”
அத்தனை அழுத்தம் அவளது வார்த்தைகளில். ப்ருத்வி சிறிதாகச் சிரித்துக் கொண்டான். ‘என்னோட நிக்கி இஸ் பாக்’ என்று மனதோடு சொல்லிக்கொண்டான். வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை அவன். மெலிதாகத் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான், அடுத்து அவன் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற திட்டத்தோடு.
நிஹாரிகா நேராக ஒப்பந்த கூட்டத்தின் தலைவரும், இவர்கள் ரெசார்ட் கட்ட தேர்ந்தெடுத்த நிலத்தின் உரிமையாளருமான பவன் குமாரிடம் சென்று நடந்ததை கூறியவள், சரியான ஆதாரம் இல்லாமல் எப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்பதென்று முதலில் மறுத்த அவர், பிறகு நிஹாரிகா கூறிய திட்டத்திற்கு செவிசாய்த்து, அதற்கு ஒப்புதலும் அளித்திருந்தார். ப்ருத்வியின் வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்து பார்த்துக்கொண்டுதான் வருகிறார் அல்லவா? என்னதான் பண்ணுகிறாள் பார்ப்போமே என்ற ஆர்வத்தில்!
நிஹாரிகா ஒப்புதல் பெற்ற பிறகு துளியும் தாமதிக்கவில்லை. பனி சூழும் நவம்பர் மாதத்தில், மூணாரின் அழகு மென்மேலும் பெருகியது என்றே சொல்லலாம். அதுவும் சிறு குன்றின் மீது அமைந்துள்ள அந்த இடம், பார்ப்பதற்கு அத்தனை ரம்மியமாக இருந்தது. அந்த இயற்கை அழகில் எத்தகையவரும் நிம்மதியான பரவசத்தை அடைந்துவிடுவார்.
காணும் இடமெல்லாம் மலையும், மலையோடு கொஞ்சிச் செல்லும் மேகமும், அங்கே அங்கே எட்டி பார்க்கும் அருவியும், டீ எஸ்டேட்களும் இன்னும் வாழ வேண்டுமென்ற உத்வேகத்தைக் கொடுக்கும். கண்ணுக்கெட்டும் தூரம்வரை பூமித்தாய் பச்சை வண்ண பட்டாடை அணிந்ததுபோல் காட்சி அளிக்கும் அந்த இடம், நிச்சயம் நகர்வாழ் மக்களைக் கவர்ந்திழுக்கும்.
ஆனால் அதை எல்லாம் ரசிக்கும், ஏன் கவனிக்கும் நிலையில் கூட நிஹாரிகா இருக்கவில்லை. அவளது குறிக்கோள் எல்லாம் ப்ருத்வியின் கனவு நனவாக வேண்டும் என்பதிலே இருந்தது. ப்ருத்வியின் ஒப்புதலோடு, ஏற்கனவே அந்த இடத்தின் நடுநாயகமாக நிற்கும், அந்தப் பளிங்கு நிற பங்களாவில் சிலபல மாற்றங்களைச் செய்தவண்ணம் இருந்தாள்.
இருபது நாட்கள் அல்லும் பகலுமென வேலைகள் நடந்தவண்ணம் இருந்தது அங்கே. ஆம்! சுழற்சி மாற்றத்தில் ஆட்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். முப்பதிற்கும் மேலான ஓவியர்களும் பல அழகான சிற்பங்களும் அங்கே குவிந்தவண்ணம் இருந்தது. ‘அடுத்தென்ன அடுத்தென்ன’ என்ற கேள்வியும், அதற்கு விடை தேடுவது மட்டுமே, நிஹாரிகாவின் எண்ணமாக இருந்தது.
பசி, தூக்கம், தாகம் எல்லாவற்றையும் அவள் மறந்திருந்தாள். ‘என்னை எப்படி அவன் சந்தேகப்படுவான்?’ என்ற கேள்வி மட்டுமே அவளைத் தூங்க விடாமல் செய்தது. அப்படியே உடல் அசதியில் படுத்திருந்தாலும் திட்டங்கள் அவளது மனதில் ஓடியவண்ணம் இருந்தது!
காலம் நிற்காமல் அதன் பாட்டில் ஓட, இருபத்தி ஒன்றாம் நாளும் அழகாகப் புலர்ந்தது. வேலை எதிர்பார்த்த அளவிற்கு முடிக்க முடியவில்லை என்றாலும், அவளது திட்டத்தை எல்லாம் ஒரு பிரசன்ட்டேஷனாக அவள் செய்திருந்தாள்.
ப்ருத்வியும் நிஹாரிகாவும் பவன், ஆகாஷ், அக்னி மற்றும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைவரையும் ரெசார்ட் அமைக்கப் போகும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தனர். “அப்படி என்னதான் நீ பண்ணிருந்தாலும் எனக்குதான் இந்த ப்ராஜெக்ட் வரும் நிஹா. எதுக்கு நீ இவளோ ஸ்ட்ரைன் பண்ணுற?” ஆகாஷ் ஏளனமாக நிஹாரிகாவை பார்த்துக் கூற, ‘அதையும்தான் நான் பார்க்கப் போறேனே!’ கண்ணிலே செய்தி அனுப்பினாள் அவள், சிறு கேலியைக் கலந்து.
“யார்வேனா ஒருத்தரோட படைப்பைத் திருடலாம். ஆனா ஒருத்தரோட திறமை அந்தப் பொக்கிஷத்தை எதையும் பண்ண முடியாது. அது தோண்ட தோண்ட முளைக்கும் அக்ஷயபாத்திரம். வளர்ந்துட்டேதான் இருக்கும். பவன் சார் எங்களோட ஐடியாவை உங்க கண்ணு முன்னாடி சாட்சியாக இருக்கு. கிடைச்ச கொஞ்ச நாளில் எங்களால லோக்காஸ்ட்ல எவ்வளவு தூரம் முடியுமோ அப்படி பண்ணிருக்கோம். பார்க்க நீங்க ரெடிதானே?” ப்ருத்வி சிறு கம்பீரதோடு பேசினானோ?
“கண்டிப்பா” ஒப்புக்கொண்ட பவன் முன்னேறிச்செல்ல, அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அந்தப் பங்களா மொத்தம் பதினாலு அறைகளைக் கொண்டிருக்கும். உள்நுழைந்ததுமே ஹாலில் நடுநாயகமாகக் கிருஷ்ணரும் ராதையும் பிருந்தாவனத்தில் ஆடி மகிழும் சிற்பமும், அதோடு ராமரும் லக்ஷ்மணனும் சீதையும் மரவுரி அணிந்து காட்டில் கழிக்கும் சிலைகளும் கண்ணைப் பறிக்கும். அதிலிருந்து கண்களை எடுக்கவே முடியாது, அத்தனை அழகு! கையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும்போல் தோன்றும்.
சுற்றியும் கண்ணைச் சுழற்றினால், ராமாயண மஹாபாரத கதைகள் ஓவியங்களாகச் கதை சிற்பங்களாக மாறி இருக்கும் அழகை கண்டுகொண்டே இருக்கலாமென்று தோன்றும். ” பாரத நாட்டின் முக்கிய காவியத்தை நடுநாயகமாக இங்க வச்சிருக்கோம் சார். இன்னும் மற்ற அறைகளைப் பாக்கலாமா?” நிஹாரிகா அடக்கத்தோடு கேட்கப் பவன் அசந்துவிட்டார்.
காரணம் சிற்பங்களை அடுக்கிய விதமும் ஓவியத்தைத் தேர்வு செய்த விதமும் அவரை நன்றாகவே ஈர்த்திருந்தது. மற்ற அறைகள் எல்லாம் பாரத நாட்டின் இருபத்தியெட்டு மாநிலங்களை, ஒரு அறைக்கு இரண்டு மாநிலமென்ற முறையில், அந்த மாநிலத்தின் முக்கிய அம்சத்தை ஓவியங்களாகச் சுவரிலும், அந்த மாநிலத்தின் ஆடல் நிகழ்ச்சியைச் சிற்பங்களாகவும் அரங்கேற்றி இருந்தனர்.
மேலும் பாதாள அறையில் தியான மண்டபமாகவும் மொட்டை மாடியில் கூரைத் தோட்டமாகவும் மாற்றி இருந்தனர். பலவண்ண ரோஜாக்களும் செம்பருத்தி மலர்களும் சாமந்திப்பூக்களும் நித்தியமல்லி பூக்களும் நம்மைப் பார்த்து அழகாய் சிரிக்கும். பார்க்கும் யாவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. இப்படியும் ரெசார்ட்டில் பண்ண முடியுமா என்ற கேள்வியே அவர்களைச் சுற்றி வந்தது.
சிற்பங்களின் கீழ் அமைந்த பூக்கோலங்களும், எல்லா அறையிலும் தொங்கிய தோரணமும், அறையைச் சூழ்ந்த வினோதமான வாசனையும், கண்ணெதிரே இருக்கும் பாரத நாட்டில் சிறப்புகளும், நிச்சயம் அது ஒரு சொர்க்கபூமி என்றே யாவரும் சொல்லுவார்.
“ஏதோ பிரசண்டேஷன் இருக்குனு சொன்னீங்களே அதென்ன?” ஆர்வம் அவரது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது என்றே சொல்லலாம்.
“இதுவரைக்கும் நாம இந்தப் பங்களா வரைக்கும்தான சார் கண்ணெதிரே பாத்துட்டு இருக்கோம். ஆனா நம்ம ரெசார்ட் எப்படி இருக்கும்னு பாக்குறதுக்குதான் இந்தப் பிரசண்டேஷன். நம்ம பங்களா சுத்தி சின்ன சின்னக் குடிகள் மாதிரி அமைப்புள்ள அறைகள் வைக்குறதா ஐடியா இருக்கு. அதுவும் ஒரு பக்கம் முழுக்க கண்ணாடி கதவுகளால் வைக்கப்போறோம். அதுனால இயற்கையோட அழகை கஸ்டமர்ஸ் அவங்க அறையில் இருந்தே அனுபவிக்கலாம். இப்பா நம்ம ரெசார்ட்டோட வான்வழி காட்சி பார்க்கிறோம். நம்ம ரெசார்ட்டோட ஜிம், பார்ட்டி ஹால், ஸ்பா, ரெக்ரியேஷன் ஆக்டிவிட்டீஸ் பண்ண ரூம்செல்லாம் நட்சத்திர வடிவத்தில் பங்களா சுத்தி இருக்கும். ரெசிடெண்டல் குடில் எல்லாம் ஹெக்சகன் வடிவில் இருக்கும். ஸ்விம்மிங் பூல் பங்களாவின் ஈஸ்ட் வெஸ்ட்டில் இருக்கப்போகுது. பங்களாவின் நார்த் அண்ட் சவுத்தில் வாக்கிங் ட்ராக் அரேஞ்ச் பண்ணப்போறோம். நம்ம பங்களா மட்டுமில்லாம இந்த ரெசார்ட், பெயருக்கு ஏத்த மாதிரி சொர்க்க பூமியாக இருக்க பிளான் பண்ணிருக்கோம். எதிர்ப்பார்த்த அளவு சில ஓவியங்களை எங்களால முடிக்க முடியல. சீக்கிரம் அதற்கு ஏற்பாடு பண்ண ட்ரை பண்றோம். இயற்கையோடு கலந்த இந்த இடத்தைத் துளி கூட இயல்பு மாறாம, இயற்கை சூழ்ந்த இடம்தான் நிஜமான சொர்க்க பூமின்னு நாம சொல்லாம சொல்லுவதாக இருக்க போகுது!”
நிஹாரிகா ப்ரெசென்ட்டேஷனை முடிக்க, பவனும் பார்த்துக்கொண்டு இருந்த அனைவரும் பேச்சிழந்து போனர். ஆகாஷும் வெட்கினான் தனது தவறை எண்ணி. ஆம்! ஆகாஷ்தான் ப்ருத்வியை எப்படியாவது இந்த ப்ரொஜெக்ட்டில் தோற்கடிக்க வேண்டுமென்று எண்ணி தனது கையால் நிஹாரிகாவின் சிஸ்டெமிலிருந்து அனைத்து டாக்குமெண்ட்ஸையும் திருடிச் சிசிடிவியை மாற்றி நிஹாரிகாவை தனது வலையில் அவளே அறியாமல் மாட்டிவிட்டுருந்தான். அதை ப்ருத்வியும் கண்டுபிடித்திருந்தான்.
பவன், ப்ருத்வியின் கையைக் குலுக்கி அவரது பாராட்டுகளை வெளிப்படுத்த, மாறுவேடத்தில் வந்த போலீஸ் ஒருவர், ஆகாஷ் செய்த திருட்டை ஆதாரத்தோடு நிரூபித்து அவனை அழைத்துச் செல்ல, இனியும் கேட்க வேண்டுமோ? பவன் அந்த நொடியேதான் எடுத்து வந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த ப்ரொஜெக்ட்டைப் ப்ருத்விக்கு தந்திருந்தார்.
ஆனால் இதையெல்லாம் பார்க்கதான் நிஹாரிகா அங்கே இருக்கவில்லை. ‘என் வேலை முடிஞ்சுருச்சு. இனி எனக்கு இங்க என்ன வேலை?’ என்று அவள் சென்றிருந்தாள். அவளைக் காண அலுவலகத்திற்கு சென்ற ப்ருத்விக்கு அதிர்ச்சி.
“என்னோட பேரோட அர்த்தத்தை நீதான் முதல் முறையாகச் சொன்ன ப்ருத்வி. மண்ணில் விழும் முதல் மழைத்துளினு. உன்னை நான் அந்தத் துளியைத் தாங்கும் பூமியாகதான் நினைத்து, என்ன ஒரு அற்புதமான பெயர்ப் பொருத்தம் நமக்குன்னு அன்னிக்கு நான்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லாம போய்டுச்சு. ஆனா எப்போதும் என்னை விட்டுக்கொடுக்காத நீங்க இப்போ மட்டும் ஏன் எனக்குச் சப்போர்ட் பண்ணாம போனீங்க ப்ருத்வி? எல்லாரும் கேவலமா பேசியபோதுகூட எனக்குப் பெருசா தெரியலை. ஆனா நீங்க என்ன ஒரு பார்வைல கொன்னுட்டிங்க ப்ருத்வி. இதுக்கு அப்புறமும் நான் இங்க வேலை செஞ்சா, அது என்னோட சுயகௌரவத்தை நானே அழிச்சுக்குற மாதிரி ஆகிடும். என்னால இந்தத் தப்ப யாரு பண்ணினாங்கனு கண்டுபிடிக்க முடியலை. நானே பண்ணினதா இருக்கட்டும். அதுக்கு பிராயச்சித்தமாக நானே இந்த ப்ராஜெக்ட் உங்களுக்குக் கிடைக்கற மாதிரியும் பண்ணிட்டேன். என்னால அவளோதான் பண்ண முடிஞ்சுது. நான் என்னென்னவோ கனவு கண்டேன். அதுதான் பலிக்காம போய்டுச்சு. அட்லீஸ்ட் உங்க கனவாவது உங்களுக்குத் திரும்பக் கிடைச்சுதே. அதுவரை சந்தோஷம் ப்ருத்வி. குட்பை!”
படபட பட்டாசாக வெடித்தவள், தனது ராஜினாமா கடிதத்தை அவனது மேஜையில் வைத்துவிட்டு திரும்பியும் பாராமல் கண்ணீரோடு சென்றுவிட்டாள். இங்கே ப்ருத்வியின் நிலையோ இன்னும் பரிதாபமாகி விட்டது.
தனது செயலைத் தன்னவள் புரிந்து கொள்வாள் என்றே அவன் நினைத்தான். ஆம்! நிஹாரிகாவை அவனவளாக அவன் ஏற்றுக்கொண்டிருந்தான், அவனுக்கே தெரியாமல்! காதல் எப்போது மனதினுள் நுழைகிறது என்று யாருக்கு தெரிகிறது. தனது கோபத்தைத் துக்கத்தைக் கழிவிரக்கத்தை எல்லாம் அந்த ராஜினாமா கடிதத்தைச் சுக்கல் சுக்களாகக் கிழிப்பதில் காட்டினான்.
“உங்கிட்டயிருந்து இதையாடி நான் எதிர்பார்த்தேன். எப்போதும் கூடவே இருப்பனுதானடி நெனச்சேன். இப்படி பாதிலே விட்டுட்டுப் போற” நாற்காலியில் போட்டிருந்த தனது கோட்டைக் கையிலெடுத்து கொண்டு ஆத்திரத்தை எல்லாம் வண்டியைச் செலுத்துவதில் காட்டி எங்கோ சென்றுவிட்டான்.
நிஹாரிகா ஏதாவது விபரீத முடிவு எடுத்திருப்பாள் என்று அறிந்தே அங்கு வந்த அக்னி, “நினைச்ச மாதிரியே பண்ணிட்டல்ல? ப்ருத்வி என்னயெல்லாம் பண்ணிருக்கானு உனக்குத் தெரியுமா நிஹி? உன்னோட மொத்த திறமையும் எல்லாருக்கும் தெரியும்னு அவன் இத்தனை நாளாக வேணும்னே உன்மேல கோபமா இருக்குற மாதிரி நடிச்சுட்டு இருந்தான்”
நடந்த எல்லாவற்ற்றையும் அக்னி கூற, அவன் முடிக்கும் முன்னே அவள் ப்ருத்வியைத் தேடி கடற்கரைக்குச் சென்றிருந்தாள், அவன் அங்குதான் சென்றிருப்பான் என்ற எதிர்பார்ப்போடு!
அவள் வந்ததை அறிந்த அவன், ஒரு முத்து மோதிரத்தை ஏந்திக்கொண்டு,” நீ முதல் மழைத்துளிதான். நான் ஒத்துக்கறேன். ஆனா, உன்னைத் தாங்கும் பூமியாக மட்டும் நான் இருக்க ஆசைப்படல. உன்னை ஒரு சிற்பிக்குள்ள சேமித்து வைத்து, உலகத்துக்கு உன்னை மாதிரி ஒரு உயர்ந்த முத்து இல்லைன்னு காட்ட ஆசைப்பட்டேன். என்னோட கனவுக்காக உழைக்கிற உன்னோட உண்மையான திறமையை எல்லாருக்கும் காட்ட ஆசைப்பட்டேன். எல்லாரும் என்னவோ நாந்தான் உன்னைப் பெருசா புகழ்ந்து சொல்லுறேன்னு நினைச்சிட்டுருக்காங்க. அப்படி இல்லடா, அவளோட திறமைக்கு நான் அவளை ரொம்ப கம்மியாதான் புகழ்ந்திட்டு இருக்கேன். அவளோட திறமைக்கு, அவளோட நிலைமை எங்கயோ இருக்கணும். அவ எனக்காகத் தன்னை சுருக்கிட்டு இருக்கானு கத்தி சொல்லணும்னு தோணும். உன்னை உலக அளவுல எல்லாரும் பாராட்டணும்னு நான் நெனச்சேன். நான் கூடவே இருந்தா, நீ தன்னிச்சையாக இயங்கமாட்டன்னுதான், உன்னை வெறுக்கற மாதிரி நடிச்சேன். அதனால நீ உன் இயல்பையே இழப்பனு நான் யோசிக்காம போய்ட்டேன் நிக்கி. அதுக்கான தண்டனையை என் வாழ்நாள் முழுக்கவும் கொடுக்கலாம், தப்பில்லை. ஆனா அதை என்கூட இருந்து கொடுடி. உன்னைப் பார்க்காம, உன்கூட பேசாம என்னால இருக்க முடியலை. என்கூடவே என் பொண்டாட்டிய வந்துருடி நிக்கி”
ஒரு காலில் மண்டியிட்டு, ஒரு கையில் மோதிரத்தை ஏந்தியபடி, அவன் பேச, கேட்டுக் கொண்டிருந்த ப்ருத்வியின் நிக்கி ஆனந்த தாண்டவம் கூட ஆடிருப்பாளோ? அத்தனை சந்தோஷம் அவளுள்.
இனியும் அவனைக் காக்க வைக்க மனம் இல்லாமல், அவளது கையை நீட்ட, நீட்டிய அவளது கையில் மோதிரத்தை அணிவித்து, அவளவனாக்கி கொண்டான் நிஹாரிக்காவின் ராஜன்.
காதல் விட்டுக்கொடுப்பதில் மட்டும் அடங்கியிருப்பதில்லை. சிறுசிறு சண்டைகள் போட்டு, ஊடலும் கூடலும் கலந்ததே காதல்! சுவாரசியமான பொழுதுகளைப் பகிர்வது மட்டும் காதலில்லை! சுவாரசியமான பொழுதுகளை உருவாக்குவதே காதல்!
ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்வது காதலில்லை! இருவரது லட்சியத்திற்காக இருவரும் சேர்ந்து போராடி ஜெயிப்பதே காதல்! மொத்தத்தில் காதல் இயற்கையைப்போலதான். இயல்பாக இருந்தால் அழகாக, ரம்மியமாக, சொர்க்கமாகத் தெரியும்!
காதல் கணவா
உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய்வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில்
நீள என் உயிர் தருவேன்
*-*முற்றும்*-*