mp8a

மது பிரியன் 8A

 

கோலாகலத் திருமணத்தை திருவிழாபோல இரண்டு ஊர் மக்களும் கொண்டாடித் திளைத்திருந்தனர்.

வீட்டினரின் அடி, உதைக்குப் பயந்து மேடையில் தனது முகத்தில் ஒட்ட வைத்த நாடகச் சிரிப்போடு அஞ்சனா இருக்க, அவளின் புன்னகையை விஜயரூபன், அவனது குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் உண்மையென்றே நம்பினர். வீட்டிலுள்ளவர்கள் அனைவருக்குமே எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில் நிகழ்வுகள் நேர்த்தியாக நடந்தது.

“மாப்பிள்ளைக்கு ஏத்த பொண்ணுதான்” எனும் நற்சொல்லைக் கூறி வந்தவர்கள் அனைவரும், மணமக்களை வாழ்த்தி விடைபெற்றனர்.

அன்று இரவு, மணமகள் வீட்டிலேயே மணமக்கள் தங்குவதாக முடிவு செய்யப்பட்டது. உலகநாதனின் முடிவை மறுக்கும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை என்பதே உண்மை. ஆகையால் அவரின் சொல்படி, அன்று இரவுத் தங்கல் அஞ்சனாவின் வீடாகிப் போனது.

முதலிரவு கனவுகளோடு அறைக்குள் இருந்தவனுக்குள், கொதிப்போடு இருந்தவளின் உள்ளத்து வெக்கை தெரிந்திருக்க நியாயமில்லை. அறைக்குள் தலைகுனிந்தவாறு நுழைந்தவளை “வா அஞ்சனா.  இப்டி வந்து உக்காரு” சரசமாகவே அழைத்தான் விஜய்.

உட்காராமல், ஒதுங்கி நின்றபடியே, “அலைச்சல்னால ரொம்ப அசதியா இருக்கு” கழுத்தில் தாலி கட்டிக் கணவனாக பதவி உயர்வு பெற்றவனை, ஏற்றுக்கொள்ள விரும்பாத மனம், காட்டானைப் பற்றித் தெரிந்துகொள்ள துப்பு எதுவும் கிடைக்குமா என எண்ணிப் பேச்சுக் கொடுத்தது. 

மனைவி என்கிற ரீதியில் அஞ்சனாவிடம் இலகுவாகவே பேசத் துவங்கியிருந்தான் விஜய்.

“ஆமா அஞ்சனா. எனக்கும் ரொம்ப டயர்டாத்தான் இருக்கு” என்றவன், “பொண்ணு பாத்திட்டு இப்போதான் போன மாதிரி இருக்கு.  அதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சுருச்சு.  ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சிக்க இப்போதான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நீ உன்னைப் பத்திச் சொல்லு” நடந்த திருமணத்தில் அவன் மனம் லயித்திருக்க, அதனை மனைவியிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டதோடு, மனைவியைப் பற்றி அறிய ஆவலோடு இருந்தான்.

கணவனது பேச்சைக் கேட்டு கசப்பாக எண்ணியவள், “நாளைக்குப் பேசிக்கலாமே”

“பாத்திட்டுப் போனதில இருந்தே, உங்கிட்ட பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அஞ்சனா.  ஆனா கொஞ்சம் வேலை அதிகமானதால பேச முடியலை.  அதனால எம்மேல கோபமா?” கத்தரித்துப் பேசியவளின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இயல்பாகவே உரையாடினான்.

“ச்சேச்சே,  அதுனாலலாம் கோபமில்லை“  விஜய் பேசியிருந்தால், இந்நேரம் அவளது வாழ்க்கை திசைமாறியிருக்குமோ என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மனைவியின் பதிலில் துணிந்து, “நீ டிகிரிய டிஸ்கண்டினியூ பண்ணிட்டதா அக்கா சொல்லிச்சு.  உனக்கு மேல படிக்கணும்னு ஆசைனா, அங்க வந்து கண்டினியூ பண்ணிக்கலாம்”

“ம்ஹ்ம்” தலையசைப்போடு தனது ஆமோதிப்பைக் கூறினாலும், விஜய்யைப் பற்றிய பயம், அவனது பேச்சில் லேசாக மறையத் துவங்குவதுபோல உணர்ந்தாள் அஞ்சனா.

படுக்கையில் இருந்த தலையணை, படுக்கை விரிப்பு ஒன்றை கையில் எடுத்தவள், “எனக்கு கீழ படுத்தாத்தான் நல்லா தூக்கம் வரும்.  நான் இன்னைக்கு கீழயே படுத்துக்கிறேன்”

விஜய் அஞ்சனாவின் பேச்சைக் கேட்டு, தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் விதமாக, “எனக்கும் கீழ படுத்துத்தான் பழக்கம்.  ரெண்டு பேத்துக்கும் சேத்து விரி அஞ்சனா.  ரெண்டுபேரும் கீழயே படுத்துக்கலாம்”

விஜய்யை தவிர்க்கும் பொருட்டே, கீழே படுக்க எண்ணினாள் அஞ்சனா.  அதற்கு பொய்யாக சாக்குக் கூறி அவனிடமிருந்து விலக எண்ணினாள்.  ஆனால் அவனும் உடன் படுக்க வருவதாகக் கூறியவுடன் பதறியவள், “இல்ல. நீங்க கீழ வேணாம்” என்றவள், தனது சொல்லில் விஜய்யின் முகம் மாறுவதைக் கண்டு, “எனக்கு ரொம்ப அசதியா இருக்கறதால, தூக்கத்துல உங்களை மிதிச்சாலும் மிதிச்சிருவேன்.  அதான் நான் மட்டும் கீழ படுத்துக்கறேன்.  நீங்க மேலயே படுத்துக்கங்க” தேவையில்லாத பிரச்சனையில் தற்போது மாட்டிக் கொண்டால், வீட்டில் தன்னைக் கொன்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனத் தோன்றவே, விஜய்யுடன் சமாதானமாக உரையாடினாள்.

“அப்டியா சொல்ற” என இழுத்துத் தயங்கியவன், “சரி அஞ்சனா” என படுக்கையில் படுத்தான். அடுத்தடுத்து அஞ்சனாவைப் பற்றித் தெரிந்து கொள்ள எண்ணி விஜய் பேசத் துவங்க, ரெண்டொரு பதில் வார்த்தைகளில் உறங்கியதாக பாசாங்குடன் பதில் கூறாமல் அமைதி காத்தாள் அஞ்சனா.  இதை அறியாதவனோ, அஞ்சனா உறங்கியதாக எண்ணி, அவனும் உறங்க முற்பட்டான்.

அடுத்தடுத்த நாள்களிலும், அஞ்சனாவின் விலகல் தொடர்ந்தது. தோளோடு சேர்த்து அணைத்தவனின் கைகளை விலக்கிக் கொண்டு தள்ளி நின்றாள் ஒரு முறை.  அதற்குமுன், கைபிடித்து அவனருகே இழுத்தபோது, “ஆஹ், ஏன் இப்டிப் புடிச்சி இழுக்கறீங்க. கை வலிக்குது” என மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டு, வலிப்பதுபோல கையை உதறி நாடகமாடினாள்.  விஜய்யும் உண்மையென நம்பி, “இங்க காமி.  சுளுக்கானு பாப்போம்” அருகே வர, “ஒன்னுமில்லை.  நானே பாத்துக்கறேன்.  அங்க உங்க அக்கா கூப்பிட்ட மாதிரி இருந்தது. அங்கபோயி என்னானு பாருங்க” என பாரி அழைத்ததாகப் பொய்கூறி, கணவனை திசை திருப்பிவிட்டிருந்தாள்.

ஒவ்வொன்றையும் ஆழ்ந்து கவனிக்காது இயல்பாக நடந்ததாக ஆரம்பத்தில் கடந்து வந்தவன், தற்போது மனதில் எழுந்த ஆழமான நெருடலால், “என்ன அஞ்சனா என்ன பிரச்சனை.  எதுக்கு எங்கிட்ட இருந்து இன்னும் விலகிப் போற?”

“எனக்கு இப்பத்தான உங்களைத் தெரியும்.  அதான் என்னையறியாமலேயே அப்டித் தானா விலகிப் போறேன்.  போகப் போக எல்லாம் சரியாகிருங்க” அஞ்சனாவைப் பொறுத்தவரையில், வீட்டினரின் கட்டாயத்தால், மனதொப்பி விஜய்யுடன் வாழ நினைத்தாலும், சஞ்சய்யுடன் கொண்ட காதலின் ஆழம் காரணமாக கருத்தொப்பி விஜய்யுடன் வாழ முடியாததால், தலை குனிந்தவாறே மனதில் தோன்றிய காரணத்தை திணறியபடிக் கணவனிடம் சமாளிப்பாகக் கூறினாள்.

பெற்றவர்களை நினைத்தும், உடன் பிறந்தவனை நினைத்தும் பயந்து இருந்தவளுக்குள், காட்டானாகத் தெரிந்தவன், கட்டெறும்பைக் காட்டிலும் குறைவாக மதிக்கத்தக்க வகையில் தெரிந்தான்.

இரண்டொரு நாளில், விஜய்யை ஓரளவு புரிந்து கொண்டாள் அஞ்சனா.  எதற்கும் கட்டாயப்படுத்துவதோ, ஆக்ரமிப்பதோ, கோபப்படுவதோ என்றில்லாமல், தனது பேச்சிற்கு மதிப்புத் தந்தவனை, மதிக்கத் தோன்றவில்லை அஞ்சனாவிற்கு. மாறாக, அவனை எதற்கும் லாயக்கில்லாத மனிதனாக, ஏமாளியாகவே எண்ணத் துவங்கியிருந்தாள்.

சஞ்சய்யைப் பொறுத்தவரை, அஞ்சனா அருகில் இருக்கும் வேளைகளில், ஆசையுடனான ஆக்ரமிப்பும், வலுக்கட்டாயத்தோடு தன்னை இழுத்து முத்தமிடுவது, சில்மிஷம் செய்வது, யாருமற்ற தனிமையில் இறுக அணைத்துக் கொள்வது என இருந்தவனை அஞ்சனாவின் பேதை மனம் கொண்டாடியது. அவனை மட்டுமே சிறந்த ஆணாகவும், அழகனாவும் எண்ணியதோடு, அஞ்சனாவின் மனதில் விஜய்யைக் காட்டிலும், சஞ்சய் உயர்வாகவே மதிக்கப்பட்டான்.

பெண்ணின் உணர்வுகளை மதிக்க வேண்டும், மனைவியானாலும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என வளர்க்கப்பட்ட விஜய், மனைவியின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தது, அஞ்சனாவின் மனதில் கேலிக்குறியதாகியதோடு, அவனை ஏளனமாகவும் எண்ணச் செய்திருந்தது

‘உருவந்தான் பயமுறுத்தற மாதிரி இருக்குது.  மத்தபடி உள்ளுக்குள்ள, ஒன்னுமில்ல’ எனும் தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள் அஞ்சனா.

உலகநாதன், விஜய்யை அழைத்து நேரடியாகப் பேசாமல், மறைமுகமாக, “என்னப்பா.  இங்க நம்ம ஊருப்பக்கமா மாத்திக்கிட்டு வந்திரலாம்ல.  இன்னும் எவ்வளவு நாளைக்கு அடுத்த மாவட்டக்காரனுக்கு உழைக்கப் போறீங்க” விஜய்யின் எண்ணத்தை அறிந்துகொள்ளவேண்டி கேட்டார்.

“இங்க எல்லாரும் நம்ம உறவுக்காரங்க இல்லைனா, ஊர்க்காரங்கதான் மாமா.  நான் கவர்மெண்ட்ல வேலை பாக்கறேன்.  நம்ம மக்கள் எதாவது எதிர்பார்த்து வந்து சகாயமாக் கேட்டா, மேலிடத்துக்கு எதிரா எதுவும் என்னால செய்ய முடியாது.  ஆனா அதை நம்ம ஆளுங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.  இந்தப் பிரச்சனை எதுவும் வேணானுதான், நான் சிவகங்கையில போஸ்டிங் கேட்டு வாங்கினேன்.  அதனால அங்கேயே இருக்கறதாதான் முடிவு பண்ணியிருக்கேன்” தனது முடிவிற்கான காரணத்தைத் தெளிவாகக் கூறியதோடு, தனது எண்ணத்தையும் பகிரங்கமாக தெரிவித்துவிட்டான் விஜய்.

“சொந்தம், சுருத்துனு எல்லாரும் இங்க பக்கத்துல இருக்கும்போது, ஒரு வேலைக்காக, நீங்க அங்க தனியா இருக்கறது எனக்கு என்னமோ அவ்ளோ சரியாப்படலைப்பா.  யோசிச்சு சொல்லுங்க.  எனக்கு தெரிஞ்ச ஆளுங்களை வச்சி, சல்லிக்காசு இல்லாம, நம்ம ஊருப்பக்கமா மாத்திட்டு வந்திக்கலாம்”

“இங்க வர ஐடியா இருந்தா, கண்டிப்பா உங்ககிட்டச் சொல்றேன் மாமா.  இப்ப அப்டி ஒரு அபிப்பிராயம் எனக்கில்லை” தனது முடிவை தெளிவாகக் கூறியதோடு, அங்கிருந்து அகன்றுவிட்டான் விஜய்.

உலகநாதனின் அருகே நின்றபடி, தந்தையின் பேச்சையும், தங்கையின் கணவன் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த அஞ்சனாவின் அண்ணன், “இவங்கிட்டப் போயி எதுக்கு இப்டி நயந்துபோயி பேசிட்டுருக்கீங்கப்பா.  என்ன காரணத்துக்காக இவனை நம்ம வீட்டு மாப்பிள்ளையாக்குனோமோ, அதை நேரிடையாச் சொல்லி, இப்டிச் செய்யினு சொல்றதை விட்டுட்டு, எதுக்குப்பா இவ்ளோ அமைதியா இவங்கிட்டப்போயிப் பேசிட்டுருக்கீங்க” கோபத்தில் கொந்தளித்துப் பேசிய மகனை அடக்கினார் உலகநாதன்.

“எடுத்தம், கவுத்தோம்னு செய்ய முடியாதுப்பா.  எல்லாம் நல்லா யோசிச்சு வச்சிருக்கேன்.  நான் பாத்துக்கறேன்.  நீ போயி வேலையப் பாரு” சமாதானம் செய்து அங்கிருந்து மகனை அனுப்பி வைத்தார்.

விடுப்பு முடிந்ததும், காரைக்குடிக்கு தம்பதியர் சகிதமாய் கிளம்பி வந்திருந்தனர். இருவீட்டுப் பெரியோரும் வந்திருந்து முறையாக அனைத்தையும் செய்துவிட்டுக் கிளம்பியிருந்தனர். 

அஞ்சனாவின் அப்பத்தா, பேத்தியை தனியாக அழைத்து, “பையன் நல்லவனாத் தெரியறான். நீந்தான் இன்னும் பழசை நினைக்காம இருக்கணும். ஒழுங்கா அவங்கூட ஒத்து, சந்தோசமா வாழப் பாரு. தேவையில்லாம பிரச்சனை எதையும் இழுத்து, நீயும் அசிங்கப்பட்டு, எங்களையும் நாலுபேரு காரித் துப்புற அளவுக்குப் பண்ண மாட்டேன்னு நம்பித்தான் தனியா அங்க குடித்தனம் வைக்கறதுக்கு சரினு விட்ருக்கோம். குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைச்சிராதடீ” பேத்திக்கு உரைக்குமாறு நறுக்கெனப் பேசித்தான் விடைகொடுத்திருந்தார்.

அப்பத்தாவின் பேச்சைக் கேட்கும்போது, தனது எண்ணம் போகும் பாதையை எண்ணி வெட்கியவள், தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள நினைத்தாலும், விதி அவளை விடுமா எனும் கேள்விக்கான பதில் தெரியாமலேயே கணவனோடு கிளம்பியிருந்தாள் அஞ்சனா.

அஞ்சனாவின் திறன்பேசி அவள் திருமணம் முடிந்து கிளம்பும்வரை பயன்படுத்தப்படாமல், அவள் வீட்டுப் பெரியவர்களின் கைவசமிருந்தது.  காரைக்குடி கிளம்பும்போது, புதிய திறன்பேசியொன்றை வாங்கித் தந்த அவளின் சகோதரன், “எதாவது கோக்குமாக்குப் பண்ண மாட்டேன்னு இதை வாங்கித் தந்திருக்கோம்.  ஒழுங்கா அந்தாளோட சந்தோசமா வாழற வழியப் பாரு.  எதாவது  ஏடாகூடமாப் பண்ணேனு தெரிஞ்சா, அவ்ளோதான் பாத்துக்கோ” மிரட்டலான அறிவுரையைக் கூறி வழியனுப்பி வைத்திருந்தான்.

இதைப்பற்றி எதுவும் அறியாத விஜய், மனைவியோடு காரைக்குடியில் தனிக்குடித்தனம் துவங்கியிருந்தான்.

வந்த அன்றே, விஜய்யை நோக்கி, “உங்கட்ட நான் நிறையப் பேச வேண்டியிருக்கு” அவளின் பேச்சில், நாணமோ, பயமோ, தயக்கமோ எதுவுமே இல்லை.

“என்னனாலும் உக்காந்து பேசலாமே” இலகுவான குரலில் சோபாவில் அமர்ந்திருந்தவாறே தனதருகே இருந்த இடத்தைக் காட்டி, அருகே வந்தமருமாறு கூறினான் விஜய்.

நின்ற நிலையிலேயே அஞ்சனா கூறிய விசயத்தைக் கேட்கத் துவங்கியவன், முடிவில் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான் விஜய்.

õõõõõ