இராசாத்தி அம்மன் வரலாறு 1

இராசாத்தி அம்மன் வரலாறு – 1

 

1

தேவர்கள் உலகத்தில் அன்று இந்திரவிழா

விழா என்பது மனிதர்களின் புலன்கள் எழுச்சியறச் செய்து, களிப்படைய வைக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும். விழாவில் இசை, எழில், மணம், ருசி, எழுச்சி என்று எல்லாமே கூடி இருக்கும். விழாவிலே அன்று,

 

பாட்டு

தும்புரு நாரதர், சிம்புடர் இசை முழக்க

ரம்பை , திலோத்தம்மை, மேனகை நாட்டியம் ஜொலிக்க

தானவர் வானவர் தாளத்துடன் தலை அசைக்க

காளையர் கன்னியர் கண்டு கழித்துள்ளம் களிக்க

வேதனும் ஊழ்வினை விட்டபடி வாழ்வை அமைக்க

காதல் வலையிலே கந்தர்வன் ராஜிதா துடிக்க

விழாவுக்காக அங்கே யஷர், கின்னவர், கிம்புருடர், தேவ உலக ஆண், பெண் பலரும் ஒன்று கூடி கண்டு களித்தனர். அந்த விழாவிலே கந்தர்வனான அஷ்வினி, தேவ மங்கை ராஜிதா இவர்களின் மனமும் பார்வையும் வேறுவிதமாக அமைந்திருந்தது. காதல் மயக்கத்தில் அவர்களின் கண்ணும் கருத்தும் ஒன்றின. மீண்டும் மீண்டும் அவர்கள் கண்கள் கலந்தன. நெஞ்சம் நெருங்கி, நெருங்கி நெகிழ்ந்தனர். வஞ்சக உலகில் மறைந்தேனும் வாழத் துணிந்தனர். விழா ஒரு வகையாக முடிவுக்கு வந்தது.

ஆண்மகனான அஷ்வினி ஒரு படி முன்னேறி அவளைப் பற்றிய விவரங்களை நன்கு அறிந்து கொண்டான். ஆம், அவள் இந்திராணியின் தோழி. பெயர் ராஜிதா, இந்திராணியின் நித்ய பூஜைக்காக பூந்தோட்டம் சென்று மலர் பறித்து கொடுப்பது இவள் வேலை. நாளை பூந்தோட்டத்தில் அவளைக் காண முடியும்.

ஆனால் தெளிந்த மனதுடனே விழா பார்க்க வந்த ராஜிதா நெஞ்சில் வாலிபனைச் சுமந்து, கனத்த மனதுடன் வீடு திரும்பினாள். இனி நான் எப்போது அவரை காண்பேன்? வெளியே செல்ல முடியாத பெண்ணாயிற்றே நான்… இவ்வாறு பலவித ஏக்கத்துடன் அன்றிரவு தூக்கமின்றி படுக்கையில் புரண்டாள். மறுநாள் பொழுது விடிந்தது. கலக்கத்துடன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு கடமையாற்றப் புறப்பட்டு விட்டாள் ராஜிதா. ஆயினும் அவள் மனதில் காதல், களிப்பு, வெறி, கவனமின்மை எல்லாமே தொற்றிக் கொண்டது.

கையிலே பூக்கூடை சுமந்து, கருத்திலே காதலை சுமந்து கண்கள் மலங்க, கால்களே தடுமாறி வழிகாட்ட அந்த பெரிய பூந்தோட்டத்தின் வாயிலில் ஒருவாறு நுழைந்தாள்.

வழி பார்த்திருந்த வாலிபன் அவள் காலடி ஓசையிலே அவளை இனம் கண்டுவிட்டான். சிறிது நடந்து அவள் வரும் வழியில் பூத்துக் குலுங்கி நின்ற ஒரு செண்பக மரத்தின் நிழலில் நின்று அவளைப் பார்த்தான். ராஜிதாவும் அவனை இனம் கண்டுவிட்டாள். உணர்ச்சி கலந்த உயிர் பொம்மையாக ஓடிச் சென்று அவன் அருகாமையில் நின்றாள். அங்கே பேச்சுக்கே இடம்மில்லை. ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் பார்த்து வியந்து நிற்கின்றனர்.

இந்த மன்னன் யார் தெரியேன் என்னிடம் வந்த

இந்த மன்னன் யார் தெரியேன்

அந்தர உலகத்தை ஆளும் இந்திரனோ

அழகிய கிரணங்கள் பொழியும் சந்திரனோ

எந்த மாது தன்மையும் இணைக்கும் சுந்தரனோ

எனக் கொன்றையன் படைத்து விடுத்த கந்தர்வனோ

என ராஜிதா நினைக்க,

இந்த மாது யார் அறியேன் என்னிடம் வந்த

இந்த மாது யார் அறியேன்

கந்தர்வ உலகில் கண்டிடும் ரதியோ

கண்டவர் மயங்கிடும் பெண் கலாவதியோ

பந்தமுடன் வந்து சொந்தம் காண் சதியோ

சுந்தரப் பெண் சிலையோ மந்தகாச மலரோ

என அஷ்வினி நினைத்தான்.

இவ்வாறு எண்ணி நின்ற வாலிபன் தன்னை அறியாமலே அவளுடைய ஒரு கையை தன கையால் பற்றி தன் கண்ணத்தில் வைத்தான். அதை அவள் மறுக்கவில்லை. அவ்வளவு தான், தன் கடமை உணர்வால் திடீரென்று விழித்துக் கொண்ட ராஜிதா பூக்கூடையை விரைந்து எடுத்து மளமளவென்று பூப்பறிக்கத் தொடங்கினாள். கூடவே அவனும் பூப்பறித்தான். பலவாறு பேசிக்கொண்டே பூப்பறித்தனர். நேரம் கடந்து விட்டது. நாளை சந்திக்கலாம் எனக் கூறி மிக அவசரமாக பூக்கூடையை எடுத்துக் கொண்டு ராஜிதா ஓடினாள்.

இந்திரானியிடம் சென்று பூவை நீட்டினாள். பூவை வாங்காமல் இந்திராணி, “ராஜிதா பூஜை நேரமோ கடந்து விட்டது. பூஜையும் முடிந்து விட்டது. இனி பூ தேவையில்லை. அதிருக்கட்டும் உன் கலக்கத்தின் காரணம் என்ன? ஏன் தாமதம் ஏற்பட்டது? உண்மையைக் கூறு” எனக் கேட்டாள்.

இந்திராணியின் கோபத்தை அறிந்த ராஜிதா, “தாயே உண்மையை கூறிவிடுகிறேன்… நேற்று இந்திரா விழாவிலே ஒரு வாலிபனைச் சந்தித்தேன், மனதை பறிகொடுத்தேன், அதனால் வந்த விபரீதம் தான் இது” என பதிலளித்தாள்.

“அதனால் சிவபூஜை உனக்கு பெரிதாக தெரியவில்லை, அப்படித்தானே?” எனக் கோபித்தாள் இந்திராணி.

“அன்னையே, தாய் அறியாத சூல் உண்டா? பெண் மனம் பெண் அறியாததா? பெண்ணாகிய என் நெஞ்சு கறைப்பட்டு விட்டது. கட்டுப்படவும் மறுக்கிறது. அவருடன் வாழ  எனக்கு வரம் தாருங்கள். அல்லது மரணத்துக்கு வழி விடுங்கள்” என்று தடாலென்று இந்திராணியின் காலைப் பிடித்தாள் ராஜிதா.

“ராஜிதா… அவனுடன் சேர்ந்து வாழ உனக்கு வரம் தந்தேன். ஆனால் இங்கல்ல, மண்ணுலகில்… அந்த வாலிபனும் நீயும் மண்ணில் பிறப்பீர்கள், நாற்பது ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்து மீண்டும் தேவலோகம் வருவீர்கள்.

பூலோக விதியின் படி வளர்ச்சி, நுகர்ச்சி, மகிழ்ச்சி, வீழ்ச்சி அனைத்தையும் அனுபவிப்பீர்கள்” என்றும் வரம் அளித்தாள்.

அவ்வளவு தான், தேவனாகிய பிரம்மதேவனும் இவர்களின் ஊழ்வினைப் படி வாழ்வை வகுத்து விட்டான். இருவரும் தேவலோகத்திலிருந்து மறைந்தனர்.

***

அஷ்வினி பூ உலகில் மங்களபுரி மன்னன் ஜெகநாதனுக்கு மகனாக பிறந்தான். உரிய காலத்தில் ராஜிதா மதுரையின் தளபதி லிங்கப்பநாயக்கன், சிதம்பரவல்லியின் மகளாக பிறந்தாள். பெற்றவர்கள் குதூகலித்தனர்.

சிறிது நேரத்தில் கூக்குரலிட்டபடியே ஒரு இளம்பெண் ஓடி வந்து, இந்திராணியின் முன் விழுந்தாள்.

“அம்மா, இது அடுக்குமா? என்னே கொடுமை இது? அவர் என் புருஷன் அல்லவா? நான் என்ன தவறு செய்தேன்? எனக்கேன் இந்த விதி? அவரை என்னிடம் திருப்பித் தர வேண்டும்” எனக் கெஞ்சினாள்.

இது என்ன விபரீதம் என இந்திராணி தனது ஞான திருஷ்டியினால் என்ன காரணம் எனக் கண்டார்.

“அம்மா ஊழ்வினை உன்னைத் தொட்டு விட்டது. நீ தேவலோக பெண்ணாக இருந்தும், சிவராத்திரி அன்று அதன் வழிபாட்டை மறந்து விட்டாய். கணவனுடன் களிப்பாய் இருந்தாய். விரத காலங்களில் பெண்ணல்லவா முன்னின்று முடிக்க வேண்டும். நீ செய்யத் தவறினாய், அதன் தண்டனை தான் இது” எனக் கூறினாள்.

“தாயே, மன்னிக்க வேண்டும். என் கணவர் மீண்டும் எனக்கே கிடைக்க வேண்டும்” என்றுக் கதறினாள்.

“நீ இருபது வருடங்கள் சிவபார்வதியை வழிபடவேண்டும், அதன்பின் பார்வதி தேவியார் உனக்கு வரமளிப்பார். பின் பூலோகத்தில் மீண்டும் பிறப்பாய். உன் கணவனைக் காண்பாய், மீண்டும் உன் கணவன் உனக்கு கிடைப்பான்” என ஆசீர்வதித்துச் சென்றார்.

விடைபெற்ற கமலினி இருபது வருடங்கள் தவமிருந்து பார்வதி தேவியின் வரத்தை பெற்றார். பின்பு பூலோகத்தில் மலையாள மண்ணில் தவசி தம்பிரான் என்ற ஒழுக்க சீலருக்கும் மதுரவாணி அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தாள்.

அவளுக்கு கயல்விழி எனப் பெயரிட்டு, கயலி என அழைத்து வந்தனர். ஒரே ஆண்டில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தாள். இவை அனைத்தும் உரிய காலங்களில் நடந்தது.

***

கருவென்று அறிந்தவுடன் கனியும் உள்ளம்

கண்களிலே கண்டவுடன் புரியும் இன்பம்

திருமருவும் சீரிழமை சேர்ந்தபோது

வெருவி ஓடும் உருபகையும் வெந்துமாயும்

ஆம். மங்களபுரி மன்னன் ஜெகனாதன், மீனாட்சி தம்பதிகளுக்கு வாரிசு கிடைத்துவிட்டது. மன்னரும் மக்களும் குதூகலித்து சடங்குகள் பல செய்து இறைவனை வணங்கிய பின் பிள்ளைக்கு அரசப்பன் என்று பெயரிட்டு வளர்த்தனர். பருவம் வளர வளர கருமங்கள் பல செய்வதற்கு அவனை தயார் படுத்தினார் மன்னன் ஜெகனாதன். கல்வி, கடமை, கடவுள் என்று அறிந்த அரசப்பன் அரசை ஆள்வதற்கு வேண்டிய ஆயுதப் பயிற்ச்சிகள், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வேல்எறிதல், படை நடத்துதல் என்று அத்தனையிலும் முதன்மை அடைந்தான்.

இவ்வாறு அரசப்பன் வளர்ந்தான், நாட்டில் வீரமும் பக்த்தியும் வளர்ந்தன; விளைச்சல்கள் வளர்ந்தன; கல்வியும் மக்களின் வாழ்வும் தர்மமும் வளர்ந்தன என்றாலும் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக வேரூன்றிய அஞ்சகம், திருட்டு, கொலை, கொள்ளை, பெண் அடிமை என்பது மறையவில்லை. இதையெல்லாம் தெரிந்து ஒழித்துக் கட்ட இளவரசன் முற்பட்டான். கடுமையான பல சட்டங்கள் தோற்று விக்கப்பட்டன. படைகளைப் பெருக்கி, தானே தலமைப்பூண்டு ஆயுதபானியானான்.  நாடு முழுவதும் பல தடவைகள் சுற்றினான். கள்வர்களைப் பிடித்து கடுமையாக தண்டித்தான். பயம் நீங்கி எழுச்சியளைந்த மக்களும் இழிப்புடன் பலத் தகவல்களைத் தெரிவித்தனர். கள்வர்கள் முழுவதும் ஒடுங்கியும் ஓடியும் அறவே தொலைந்தனர்.

 இவ்வாறு கள்வர்களை முழுவதுமாக வென்று ஒழித்த இளவரன் அரசப்பனுக்கு மக்கள் கூடி ‘கள்வர் வென்றான்’ என்று காரணப் பெயர் சூட்டினர். அது முதல் மங்களபுரி இளவரன் ‘ராசா அரசப்பன்’ ‘கள்ளர் வென்றான்’ என்றே அழைக்கப்பட்டான். மைந்தனால் மணம் பெற்ற ஜெகனாதன் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

அரசப்பன் உரிய வயதை அடைந்ததும் மன்னன் ஜெகனாதன் அவனுக்குத் திருமணம் செய்யவும் முடி சூட்டவும் அரசு உரிமையை ஒப்படைக்க ஆசை கொண்டார்.

ஆகவே அக்கால வழக்கப் படி இளவரசனை பல தேச நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.  இளவரசர் அரசப்பனும்  அவன் தோழனும் மகா வீரனுமான அரசடியாதருடன் புறப்பட்டு வங்கம், கலிங்கம், மாளவம், மலையாளம், விதேகம் என்று பல நாடுகளுக்கும் சென்று சிறிது நாள் தங்கி அங்கே அறிய வேண்டியவைகள் அனைத்தும் அறிந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு தமிழ் நாட்டின் மதுரை மாநகர் வந்து அடைந்தான்.

அங்கே மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகழ் பெற்ற ஆலயத்திற்கு நேராகச் சென்று முதலில் வணங்கினான். பின் அரசரடியானுடன் சென்று அரண்மனையில் தான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மதுரை மன்னனின் எண்ணப்படி கள்ளர் வென்றான் அரண்மனை விருந்தாளியாக அரண்மனையிலேயே சில நாள் தங்கினான்.   

***

மதுரைத் தளபதி லிங்கப்பநாயக்கருக்கும்  சிதம்பரவல்லிக்கும் குலக்கொழுந்தாய் பிறந்தாள் ராஜிதா. அந்தப் பெண்ணுக்கு ராசாத்தி என்று பெயர் சூட்டினார்கள். ஆண்டுகள் பல மறைந்தன…

பருவ வளர்ச்சிக்குத் தக்கவாறு படிக்கவேண்டிய கலைகள் எல்லாம் படித்தாள். நாணம், ஒழுக்கம், நல்லறிவுடன் மட்டில்லாததீரமும் தெளிவுடன் இருந்தாள் பாவை.

கற்பகவல்லியோ, கடல் திருவோ

கலை போக்கிஷானியோ, பூமகளோ

அற்புத பொற்சிலைச் சுந்தரி யாரிவள்,

முற்பிறப்பில் இவள்தான் ரதியோ

என்று கண்டார்கள் வியந்து பாராட்டினர். ஆயினும் அவள் பெற்றோர்களுக்கு மகளைப் பற்றிய கவலை வளர்ந்து கொண்டு வந்தது. லிங்கப்பன் தினமும் போர் பயிர்ச்சிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். நமது மண்ணில் ராவனர்களுக்கு தான் பஞ்சமில்லையே? ஆகவே இதைப் பற்றி அரசரிடம் பேசத் தொடங்கினார்.

அரசரே இதுபற்றி நன்றாகவே அறிந்து முன்னதாகவே திட்டமிட்டிருந்தார். அதன்படி ராசாத்தியை அரண்மனையில் தன் மகளுடன் தங்க வைப்பது என்றும், அரசியாரின் மேற்பார்வையில் ராசாத்தி படிப்பில் வளர்ச்சி பெறுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. பிறகு அரசகுமாரியுடன் அரண்மனியில் ராசாத்தி நிரந்தரமாகத் தங்கினாள்.

***

துளு நாட்டு இளவரசன் அன்று மாலை அரண்மனைத் தோட்டத்தில் உலாவச் சென்றான். அரசரடியானும் அவனுடன் சென்றான். அந்த பெரிய தோட்டத்தில் நீண்டும் குறுகியும் பசுமையான மரங்கள் பல இருந்தன.  நறுமணம் கமழும் பூஷ்பங்களை ஏந்தியபடி பல பூமரங்களும், செடி, கொடிகளும் அங்கு இருந்தன. தோட்டத்தின் அருகில் மதுரையின் புகழ் வாய்ந்த அரசர்கள், அரசிகள், படைத்தலைவர்களின் உருவங்களும் அவர்களின் வீரவரலாருகளும் பொறிக்கப்பட்டிருந்தன. மேலும் யானை, குதிரை, புலி, சிங்கம் போன்ற பல சிற்பங்களும் இருந்தன. படிக்கவும், விளையாடவும் பொழுது போக்கு அம்சங்கள் பலவும் இருந்தன. அங்கே தற்கால அரசன் தளபதி லின்கப்பநாயக்கன் சிலைகளையும் அரசப்பன் பார்த்தான்.

எல்லாவற்றையும் மனதி ரசித்தப்படி வந்த இலாரச்ன் அங்கேயுள்ள நாகதாழி என்ற ஒருவகை மலரைப் பார்த்தான். பூவின் நடுவே சிவலிங்கமும் சிவலிங்கத்திற்கு ஆபரனாமாகவும், குடையாகவும் நிற்கும் நாகத்தின் தோற்றமும் இருந்தது. இறைவனின் இந்த மலர் கொடையை எண்ணி வியந்தான்.  ஒவ்வொருவரும் இந்த அற்புதத்தைக் காண வேண்டும் என எண்ணினான். சிறிது நடந்தால் ஒரு ஷேன்பகமறம், அந்த மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. பூவின் வாசமோ வாலிபனுக்கு போதையை ஊட்டியது. அடியாநிடமிருந்து வில்லை வாங்கி ஒரு இளம் கோப்பைக் எய்தான். அதில் கொத்தான பூக்கள் பல இருந்தன.

அதைக் கையில் பிடித்து அதன் நறுமணத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, கலகலவென்று சிரித்த வண்ணம் ஐந்து பேர் கொண்ட இளம்பெண்கள் கூட்டம் தன்னை நோக்கி எதிர்வருவதைக் கண்டான். அதில் ஒரு மங்கை சிரிப்பினூடே தன்னை அடிக்கடி கூர்ந்து நோக்குவதையும் கள்ளர் வென்றான் காணத் தவறவில்லை. நெருக்கம் கூடியவுடன் ஒருவரை ஒருவர் நன்றாகவே பார்த்துக் கொண்டனர். மன்மதனும் தன் வேலையை செய்யத் தொடங்கிவிட்டான். இருவர் உள்ளமும் ஒன்றுபட்டு விட்டன.

கன்னி இவள் யாரோ கல்யாணமனவளோ

பொன்னி மகள் தானே புன்னகையும் தேனோ

வண்ணமலர் மேனி மாந்தளிரோ மலரோ

பண்ணின் இசை குரலோ பசும்பொன் இவள் நிறமோ

 

மன்னன் இவன் யாரோ என்னை மாலையிடுவாரோ

கண்ணன் இவர் தானோ கந்தன் என்று பேரோ

சொந்தமுடன் என்னைத் தொட்டு மகிழ்வாரோ

கண்ணா இதழ் தேனை ஓட்டிச் சுவைப்பாரோ

என இருவரின் மனங்களும் பாடிக் கொண்டன.

இப்படியாக ஒருவருக்கொருவர் எண்ணித் தவிக்கையில் அந்தப் பெண்கள் அரசப்பன் அருகில் வந்துவிட்டனர். கையிலே ஒரு மலர் கொத்தையும் மற்றொரு கையில் ஒரெஉ மாங்காயையும் வைத்துக் கொண்டு பெண்களை எதிர்பார்ப்பவன் போல அங்கு நின்ற இளவரசன் தன் அரண்மனைக்கு வந்த விருந்தாளி, துளு நாட்டு வாரிசு என்பதை அரசகுமாரி முன்னமே அறிந்திருந்தாள்.

இளவரசி, “இளவரசே… இது பெண்களின் பகுதி.”

இளவரசன், “அப்படியானால் ஆண்களை விரும்பாத தவசிப் பெண்களின் பகுதியா? அதுவும் மன்மதன் விரும்பும் இந்த அழகிய தொட்டத்திலா?”

 “இல்லை இல்லை… அதுசரி உங்கள் கையில் என்ன பூங்கொத்து? இதை ஏன் பறித்தீர்கள்? தலையில் சூட்டிக் கொள்ளவா? அதை இப்படிக் கொடுங்கள்” என அவரிடம் கேட்டார்.

“இதில் ஒரு மலர் வேண்டும்” என்று பெண்களைச் சுட்டிக் காட்டிக் கேட்டான்.

“எந்த மலர் வேண்டும்.

“இந்த மலர் தான் வேண்டும்” என ராசாத்தியை தன் விரலால் கட்டினான்.

பெண்கள் எல்லோரும் கலகலவென்று சிரிக்க, ராசாத்தி நிலத்தை நோக்கினாள். பூமாதேவி அவளை ஆசிர்வதித்தாள்.

“இந்த மாங்காயை ஏன் பறித்தீர்கள்?”

“ஆம்… இதை தந்த மரத்தில் தான் பறித்தேன். ருசியாக, மணமாக இருந்தது. இதை மரத்தில் பறித்தது போல, இவளை யாரிடமிருந்து எப்படி பறிப்பது என்று தான் நானும் யோசிக்கிறேன்” என தன் காதலை உறுதிபடுத்தினான்.

“அரசே, பெண்களை இவ்வாறு பறித்து செல்வது முறையல்ல. தாய் தந்தையரிடம் முறைப்படி கேட்கவேண்டும். தெர்யுமா? என நக்கலாக வினவினாள்.

அனைவரும் சிரித்துக் கொண்டே திரும்பி சென்றனர்.

மறுநாள் அரண்மனை கலகலத்தது. மன்னனுக்கும் ராசாத்தியின் பெற்றோருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டதில், அவர்கள் பேருவகை அடைந்தனர். மன்னன் ஜெகனாதன் மற்றும் மீனாட்சி விவரம் அறிந்து குதூகலம் அடைந்தனர்.

துளு நாட்டு மன்னன் தன் மனைவி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் மதுரையை வந்து அடைந்தார். ப்ரோஹிதர்களும், பெரியோர்களும் அழைக்கப்பட்டனர். மதுரை மாநகரம் திருவிழா கோலம் பூண்டது.

குறிப்பிட்ட அந்த நாளும் நேரமும் வந்தது. அழகிய மனமேடை அமைக்கப்பட்டது. இசைகள் பல விதமாக முழங்கினமுழங்கின. வேத முழக்கங்கள் பெரிய கூத்தாடி கும்மி பாட, பட்டாடை உடுத்தி அந்த தெய்வப் பாவை பவ்யமாய் மணவறையில் வீற்றிருக்க, தெய்வ மகனான கள்ளர் வென்றான் ராசாத்தியின் கழுத்தில் மாங்கல்யம் அணிந்து மகிழ்ந்தான். அந்த திருமணத்தை மதுரையின் மன்னனே முன்னின்று நடத்தினார்.

வாழ்க சதிபதிகள் வளமுடன்

வாழ்க அனுதினமும் – அந்த

மங்கள நாட்டின் அதிபதியாகவே

வாழ்க தினம் தினமும்

பூவின் நறுமணமாய் – எரி

பொன்னின் தனி நிறமாய்

ஆவின் அமுதினை உண்டு துள்ளி

ஆடிடும் கன்றினமாய்

வாசப் பொருளாக பலபல

 வண்ண அழகாக

தேசப் பிதாவாக உண்டும்

தெவிட்ட அமுதாக

நேசத்தின் காதலர்கள்

நெருங்கி நின்றாடும் களிப்பாக

ஆசைப் பொருள்களெல்லாம் அடைந்ததில்

ஆடிடும் கூத்தாக

பருவச் சோலையிலே பறக்கின்ற

பச்சைக் கிளி நீவிர்

உருவும் நிழலும் போல் ஒன்றி

சேர்ந்து சிறகடிப்பீர்

ஓவியத்தின் அழகில் உயிர் கண்டு

உவக்கும்  கலைஞனைப் போல்

காவியப் பாவினிலே கருத்தாளும்

காட்டுப் புலவனைப் போல்

***

டில தினங்கள் கழித்து ஒரு நாள் நல்ல நேரம் கணித்து துளு நாட்டு மன்னன் ஜெகனாதன் தன் மைந்தன் மற்றும் மருமகளுடன், மதுரை அரச தம்பதி வழி அனுப்ப தன் சொந்த நாடு செல்ல கிளம்பினர்.

அதற்கு முன்பு புது மன தம்பதிகள் மீனட்ச்சியின் ஆலயம் சென்று பூஜைகள் செய்து உருக்கத்துடன் வணங்கி நின்றனர். எதிர் நின்று வனாகிய தம்பதிகளை மீனாட்சி அம்மன் கவனித்தாள்.

“நாதா! உங்களின் சிறு கோவத்தின் விளைவால், பூமியில் பிறந்து எதிர் நின்று வணங்கும் இந்த தம்பதிகளைப் பார்த்தீர்களா? இவர்களுடைய எதிர்காலம் மிகவும் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளது.

மேலும் என்னுடைய பக்த்தை கயல்விழி மலையாளத்தில் தவசித் தம்புரானுக்கு மகளாகப் பிறந்து தாயை இழந்து தவிக்கிறாள். அவளுடைய பருவகாலம் மிக ஆபத்தாக உள்ளது. இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

“சரி, செய்வாயாக!” என சிவபெருமான் கூறினார்.

உடனே தாயான மீனாட்சி வடக்கு வாசல் கருப்பனை அழைத்து, ” கருப்பனே! நீ கிளி வடிவில் சென்று குழந்தையான காளிக்கு அவள் பருவ காலம் வரை உதவி செய்ய வேண்டும்” என பணித்தார்.

இவ்வாறே அன்னை ராக்கம்மையை அழைத்து, “நீ ராசத்திற்கு உறுதுணையாக இருந்து ஆபத்து நேரங்களில் ஆளையும், குறிப்பாக குழந்தைகளையும் காப்பாற்றி ஞானத் தொண்டு செய்ய வேண்டும்” என்று கூறினாள்.

 

கருப்பனும், ராக்கமையும் உடனே அவரவர் இடங்களுக்குச் சென்று செய்யவேண்டியவைகளை செய்தனர்.

சிவபெருமானையும் தேவி மீனாட்ச்சியையும் பணிந்து, மதுரை மன்னனிடம் உதவும் ஒப்பந்தமும் பெற்றுக் கொண்டு மங்களபுரி மன்னன் தன் மகன் மருமகளுடன் சொந்த நாடு வந்து சேர்ந்தான்.

ராக்கமையார் ஒரு நாள் இலவரசனியும் ராசத்தயையும் கண்டு தான் மதுரையிலிருந்து மங்களபுரிக்கு ஞானபணி செய்ய வந்துள்ளதாகவும், அரசன் தனக்கு உதவ எண்டும் என்று கேட்டாள்.

ராசாத்திக்கும் ராக்கம்மைக்கும் தமிழ் மொழித் தொடர்பு பந்தப்படுத்தியது. ராக்கம்மையின் பக்தியும், அறிவான திட்டங்களும் அரச தம்பதிகளை வசீகரப்படுத்தின.

ஆகவே அரண்மனைக்கு மிக அருகாமையில் ஒரு வீட்டில் அவள் குடியமர்த்தப்பட்டாள். நாளடைவில் அரண்மனையின் ஒரு சிறு பகுதியே அவளது தாங்கும் இடமானது. ஒரு நாள் ராக்கம்மையார் இளவரசினடம் கேட்டாள், ” அரசே! நாட்டில் உள்ள கள்வர்களை நீங்கள் ஒழித்துக்கட்டி, கள்ளர்வென்ளான் என்ற காரணப்பெயரையும் பெற்றுள்ளீர்கள். எழிலான இந்த நாட்டில் எல்லா விதமான திருட்டுகளும் ஒழிக்கப்பட்டு விட்டனவா என அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.

இளவரசன்,” அம்மையாரே தயக்கமின்றி சந்தேகத்தை கேளுங்கள்” சொல்கிறேன் என்றார்.

ஆகவே பாடுகிறாள் ராக்கம்மை.

எது போச்சு சொல்லுங்கள் அரசே இந்த

எழிலான நாட்டிலே இழிவான செயலிலே

தப்பான குடிப்பழக்கம் போச்சா அல்ல

தட்டிப் பறிக்கின்ற திருட்டுதான் போச்சா

கள்ளிலும் போதை விஷம் சேர்த்து பணத்தை

அள்ளிக் குவிக்கின்ற அவலங்கள் போச்சா

 

வறுமைக்கும் பெண்ணைவிலை பேசி தங்கள்

வாழ்வை வளமாக்கும் வழக்கங்கள் போச்சா

பெருமைகள் பலபல பேசி நாட்டில்

பிச்சை எடுப்பவர் குணம் மாறி போச்சா

 

அஞ்சுக்கும் மேலயும் வட்டி வாங்கி

அஞ்சாது குடித்து அடிப்பாரே லூட்டி

கஞ்சிக்கு வழி இல்லை என்று ரோட்டில்

கை ஏந்தும் கணவான்கள் நிலை மாறி போச்சா.

 

பெற்றோர்கள் சோத்துக்கு தவித்தும் மகன்

கற்றதொரு கல்வியால் கன தனம் குவித்தும்

பெண்டாட்டி சொல் கேட்டு ஆடும் அந்தச்

 சண்டாளன் பிள்ளைகள் மனம் மாறியாச்சா

 

சாதிக்கோர் முத்திரைகேட்டால் அதில்

பாதிக்கு மேலயும் பணத்திற்கு விறபார்

ஆதியில் நீர் அய்யர் என்பார் பணத்தை

அள்ளிக் கொடுத்தாலோ பறையரே என்பர்.

 

அதிகாரம் பெற்றதொரு அமைப்பு அதுக்கு

சதிகாரர் தருகின்ற பணமே தான் இனிப்பு

கதியற்றோர் சொல் உண்மை கசப்பு நேரில்

கண்டவர்கள் சொன்னாலும் வந்து விடும் கடுப்பு

 

இவ்வாறு அம்மையார் கேட்க ,

கள்ளர்வென்றான், ” இதில் முடிந்தது பாதி, முடிக்கவேண்டியவை மீதி என்ற வகையில் அத்தனையையும் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தான்.

மாதங்கள் பல அமைதியுடன் கழிந்தன. ஜெகநாதன் மகனுக்கு மகுடம் சூட்டி மகழவெண்ணினான். தன் சபையைக் கூட்டி விளக்கம கேட்டான். அனைவரின் வேண்டுகோளின்படி இளவரசன் சம்மதித்தான்.

 

சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு திருவிழா கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மன்னர்களும் , மாவீரர்களும் முன் நிற்க மந்திரங்களும், மங்கள இசைகளும் முழங்க ஜெகநாதன் பொற்கிரீடத்தை எடுத்து மகனுக்கு சூட்டினான். அரசப்பனின் பொற்கால ஆட்சியில் மக்கள் எந்தவித இடையூறும் இன்றி மகிழ்வுற்றனர். மழைகள் தவறாமல் பெய்து தான்யமணிகள் குவிந்தன.

 

ஆயினும் பல ஆண்டுகள் கழித்தும், குறைவில்லா மனைவியைப் பெற்றும் கள்ளர்வென்றான் ராசாத்திக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதற்குள் ஜெகநாதன் தம்பதிகளும் மதுரை மன்னனுடன் லிங்கப்பன் தம்பதிகளும் இறைவன் அடி எய்து விட்டார்கள்.

குழந்தை பேறுக்காக அரசப்பன் பல வேண்டுதல்களை செய்திருந்தான். தானதருமங்களை குறைவற நடத்தி வந்தான். இவ்வாறு இரண்டு குழந்தைகளுக்குக்கு தகப்பனான அரசப்பன் பக்தியுடன் குறைவில்லா வாழ்க்கை வாழ்ந்து வளர்ந்து வந்தான். விதி தேவனும் தன் கடமையாற்ற முற்பட்டான்.

***

கூந்தல் அழகாய் சுருண்டிருக்க அந்தக்

காந்தச் சிலையைச் சிறைப்பிடித்தேன், மனம்

சேர்ந்த பொழுது அதைப் பார்த்து இருப்பேன் உயிர்

தீரும் வரை மனம் சேர்ந்திருப்பேன்

பூவுலகில் அஸ்வினி ராஜிதா வாழ்வு இவ்வாறிருக்க (சிறிது முன்கதை தொடர்ச்சிக்கு செல்வோம்)

 

அன்று இந்திராணியிடம் வரம் பெற்று அதன் மூலம் அஸ்வினியும் ராஜிதாவும் பூலோகவாசியானார்கள். இதை அறிந்த அஸ்வினின் மனைவி இந்திராணியிடம் அழுது அடம்பிடித்து தன் கணவனை மீண்டும் பெற வேண்டினாள். பின்பு இந்திராணியிடம் ஆசி பெற்று பல ஆண்டுகள் பார்வதியை பணிந்து வரம் பெற்று தன் கணவனை அடையும் முயற்சியாக தேவன் வகுத்த வழிப்படி பூலோகம் மலையாளத்தில் ஏழையும் ஒழுக்கசீலருமான தம்பிரான் மதுரவாணிக்கு மகளாக பிறந்து சிறு வயதில் தாயையும் இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவளுக்கு மதுரை மீனாட்சியின் ஆணைப்படி கருப்பன் கிளி வடிவாக உதவிக்கு வந்தான் என் இதுவரைப் படித்தோம்.

 

கிளியாக வந்த கருப்பன் குழந்தையான கயலிக்கு பல விளையாட்டுகளைக் காட்டி மகிழ்வூட்டினான். கிளியின் உதவியைக் கண்ட தம்பிரான் ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தான். தன் பிள்ளையைக் கிளியோட விளையாட விட்டு பயமின்றி தன் வேலைகளைச் செய்தான். கிளிக்காக ஒரு கூடும் உண்டாக்கினான். அப்பொழுது கயலியையும் கிளியையும் அறியாதார் அவ்வூரில் இல்லை. அந்த பிள்ளையை அன்று முதல் அனைவரும் கிளிப்பெண் என்றே அழைத்தனர்.

 

வருடங்கள் பல கடந்தன. வளர்ச்சி பெற்ற கயலி ஒப்பற்ற வடிவழகியானாள். கந்தர்வ கன்னியின் அழகு அப்பிடியே மின்னியது. அழகோ அழகு… அப்படி சொல்லும்படி வளர்ந்து பருவமாகி மங்கையாகி மலர்ந்திருந்தாள்.(இவ்வாறு கயலி குடிசையில் வாழ்ந்து வந்தாள்)

 

பாம்பையும் தவளையையும் ஒரே கிணற்றில் வாழவிட்டு வேடிக்கை பார்ப்பது பகவானின் விளையாட்டல்லவா….

மலராக கயலி இருக்க, அதைப் பிய்த்தெறியும் குரங்காக ஒருவன் வாழ்ந்து வந்தான்.

 

அந்த ஊரின் மறுபக்கம் அனிச்சன் என்ற கொடியவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மிகப் பெரிய மலைத்தோடத்தின் அதிபதி. பணபலமும் படைபலமும் கொண்டவன். இருள் அடைந்த மனமும் பொருள் அடைந்த இல்லமும் பெற்றவன். அவனைக் கண்ட பெண்கள் கருநாகத்தைக் கண்டது போல் ஓடிஒளிவார்கள்.

அவனைப் பற்றிய குறிப்பாக ஒரு பாடல்…

 

கல் தூண் போல கால் இருக்கும்

கள்ளமுள்ள நெஞ்சிருக்கும்

மீசைமுடி அடர்ந்திருக்கும்

மேனி நிறம் கருத்திருக்கும்

ஆசையுள்ள நெஞ்சிருக்கும்

அகந்தை அதில் குடியிருக்கும் – வீட்டில்

வேசியரின் படம் இருக்கும்

வீணர்களின் செயல் இருக்கும்

வில் இருக்கும் , வாளிருக்கும்

விந்தையான சொல் இருக்கும்

கள்ளிருக்கும் கரி இருக்கும்

காம வழி நூல் இருக்கும்

மந்திரக்கோல் கை இருக்கும்

மற்றொரு கை தடி இருக்கும்

தந்திரங்கள் பல இருக்கும் – அதில்

சதி செயலே மறைந்து இருக்கும்

 

அவன் பெரிய மந்திரவாதியாகவும் இருந்தான். யானையின் மீது வீணர்கள் புடை சூழ பவனி வருது அவன் வழக்கம். பெண்கள் அவனுக்கு வேட்டைப பொருள். மதுவும் மங்கையும் மாமிசமும் அவன் விரும்புபவை. இப்படியான ஒரு பெருங்குடிமகனும் கயலி வாழ்ந்த ஊரில் வாழ்ந்து வந்தான்.

***

வருடத்திற்கு ஒரு முறை வரும் நவராத்திரி திருநாள் அன்று வந்தது. நல்ல தமிழ் பெண்ணின் ஆச்சாரப்படி அன்று காலையில் கயலி எழுந்தாள்.வழக்கம்போல் வீட்டுப் பணிகளை விரைவாகவே முடித்தாள். பிறகு ஆற்றில் குளித்து வர எண்ணினாள். தண்ணீர் குடத்துடன் புறப்பட்டாள். வழக்கம்போல் கிளியானது அவள் குடத்தின் விளிம்பில் தொற்றிக்கொண்டது. அன்னம் போல் வழி கடந்துஆற்றினை அடைந்தாள். அங்கு பல பெண்களுடன் உரையாடியபடியே குளிக்க முற்பட்டாள். கிளி அருகில் உள்ள மரத்திற்கு பறந்து சென்றது.

 

ஆற்றுநீரில் விளையாடிக் குளித்துவிட்டு நெற்றியில் சுருண்ட முடியை சீர்செய்துக் கொண்டே நெற்றியில் மங்கள சின்னமிட்டு நிமிர்ந்தாள். அவள் வானுலக தேவதை தானோ என்று மற்ற பெண்கள் அதிசயித்தனர். முறையே குனிந்து தன் நீர்க்குடத்தை இடுப்பில் தூக்கினாள். மிக மெதுவாக வீடு நோக்கி புறப்பட்டனர். அப்போது அவள் உடலுடன் ஒட்டியிருந்த ஈரச்சேலை அவள் அழகுக்கு மெருகூட்டியது. அந்த சமயம்அங்கு கூடியிருந்த பெண்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. அவரவர் தனக்கு தோன்றியவாறு ஒடிமறையத் தொடங்கினர். ஏன் இவ்வாறு என்று கயலி முழுமையாக அறியுமுன்னரே யானையின் மீது அமர்ந்துகொண்டு வீணர்கள் புடைசூழ அவள் அருகினில் வந்தான்.

அவள் அருகில் வந்த யானை அவளின் முன்பு மண்டியிட்டது. “பெண்ணே ஏறிக்கொள்” என நகைத்தான் அனிச்சன்.

 

பயந்து கலவரம் அடைந்த மங்கை படபடத்தால் தண்ணீர் குடம் தடாலென்று வீழ்ந்து உருண்டது. “கிளியே , கிளியே” என்று கத்தினாள். கிளி வரவே இல்லை. ஒற்றை பாதையில் மான் போல் ஓடிக்கொண்டே இருந்தாள்.

யானை அந்த பாதையில் புகமுடியாது என அனிச்சன் கட்டளையிட்டான், “தோழர்களே இன்று மதியத்திற்குள் அந்த பெண் என் கையிலிருக்க வேண்டும், துரத்திப் பிடியுங்கள்.”

 

கயவர்கள் துரத்தினார்கள, கயலியைக் கண்டுவிட்டனர், அவளை வழிமறைத்தார்கள். விபரீதம் சூழ்ந்துவிட்டது.

கயலியோ, ” கிளியே, கிளியே, வந்துக் காப்பாற்று” எனக் கதறினாள்.அலறினாள். அழுதாள்.

 

நடந்த அத்தனையையும் அறிந்துக்கொண்ட கிளிகருப்பன் ஒரு கணம் யோசித்தான். பின் நான்கு வேடனாக நான்கு வேட்டை நாய்களை கை பிடித்து வீணர்களை வம்புக்கு இழுத்தான். எங்களுடைய வேட்டை மான் இவ்வழியாக ஓடி வந்தது. அதை நீங்கள் கொன்று எங்கையோ மறைத்து வைத்துள்ளீர்கள். மரியாதையாக தந்துவிடுங்கள் என்று குற்றம் சாட்டி ஒவ்வொருத்தரையும் நைய்யப் புடைத்தான். அவர்கள் ஓடி ஒளிந்தனர்.

 

இந்த கலகத்தைப் பயன்படுத்தி கயலியும் ஓடி மறைந்து விட்டாள். சாதுவாக கிளிக்கருப்பன் எங்கிருந்தோ பறந்து வந்து அவள் தோளிலே அமர்ந்து கொண்டான்.

கயலி தன் துன்பத்தைக் கூறி கிளியை வெகவாக கடிந்துகொண்டாள்.இருவரும் வீட்டை அடைந்தனர். கயலி தனக்கு நேர்ந்தவற்றை தன் தகப்பனிடம் கண்ணீருடன் கூறினாள்.

 

அனிச்சனை முன்னமே நன்றாக அறிந்திருந்த தம்புரான் அப்பொழுதே மறைந்து வாழ தலைப்பட்டான். இரவோடு இரவாக ஊரை விட்டுப் புறப்பட்டனர். கிளியின் வழிகாட்டுதலோடு கயலியுடன் பல கஷ்டங்களைக் கடந்து சில நாள் கழிந்து நெடுந்தூரமுள்ள அச்சன்கோவிலை அடைந்தனர்.

 

அந்த ஊர் அவர்களுக்கு பிடித்தமாகவே இருந்தது.தப்பினோம் என்ற தைரியம் பிறந்தது. மறுநாள் அச்சன்கோவில் தெய்வம் தர்மசாஸ்தாவின் கோவிலுக்கு சென்று வணங்கினர். அந்த கிளியோ மிக சாதுர்யமாய் ஊர்மக்களின் மனதைக் கவர்ந்தது. புதிய வரவான் அந்தக் குடும்பத்தினரிடம் அங்குள்ள மக்கள் பாந்தமுள்ள தோழர்கள் ஆயினர்.

 

இவர்கள் கல்வியையும் பரிசுத்தத்தையும் பார்த்த ஊர்மக்கள் தம்புரானைக் கோவில் பூசாரி ஆக்கினர். ஊதியமும் தந்தனர். கோவிலைச் சுத்தம் செய்வதும் மலர்மாலை தொடுப்பதும் அங்குள்ள பெண்டுப் பிள்ளைகளுக்கு பாட்டுகள் கற்பிப்பதும் கயலியின் வேலையாயிற்று. கருப்பன் கிளியோ ஊர்மக்களை கவர்ந்துநின்றது. ஆகவே பழையனவற்றை மறந்தனர். ஊருடன் ஒன்றிவாழ்ந்தனர்.

***

அன்று கயலியைத் தப்ப விட்டுவிட்டு கருப்பனிடம் செமையாக உதைப்பட்டு ஓடிய அனிச்சன்கூட்டத்தினர் அனிச்சனை அனுகி பயந்து நடுங்கி ஓரளவு உண்மையைக் கூறினர்.

கயிலியின் வரவை ஆசையுடன் எதிர்பார்த்த அனிச்சனுக்கு பெரும் கோபமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. அத்தனையும் தன்னை விட்டு போனதுபோல புலம்பினான். தவித்தான். பிறகு கூறினான், “தடியர்களே, இந்த நிமிஷம் முதல் அவளைத் தேடுங்கள். இமயத்தின் எல்லைக்கும் சென்று தேடிக் கண்டுபிடியுங்கள். இன்று முதல் இதுவே உங்கள் வேலை.எனக்கு அவள்வேண்டும் .

 

உங்களுக்கு வேண்டும் உபகரணங்கள் மற்றும் சம்பளப்பணம் அதிக பணம் எல்லாம் மாதாமாதம் பெற்றுக் கொள்ளுங்கள்.ஆனால் ஒன்று, சீக்கிரம் கண்டுபிடித்தால் விருப்பம் போல் பணம் தருவேன் இல்லையெனில் மூன்று மாதங்கள் கழித்து உங்கள் சிரம் துண்டிக்கப்படும் . உடனே தேடுங்கள் ஓடுங்கள்” என்று கட்டளையிட்டான். தப்பினோம் என்று வெளியே வந்த வீணர்களுக்கு அன்று முதல் கயலியைத் தேடுவதே தொழிலாயிற்று.

***

மங்களபுரி மன்னன் அரசப்பன் இப்போது பண்பட்ட மனிதனாக இருந்தான். அரசமைப்பில் எந்த சிக்கலும் இல்லை. இரண்டு குழந்தைகளின் தகப்பனாக இனிய மனைவியுடன் குதூகல வாழ்க்கை நடத்தினான். தனக்கு குழந்தை பாக்கியம் குடுத்து, நல்வாழ்வு தந்த தெய்வங்களை கோவில் சென்று நேரில் வணங்கத் திட்டமிட்டான். நேர்த்திக் கடன்களை முடிக்க உறுதி கொண்டான். உதாரணமாக ஸ்தலயாத்திரை, தீர்த்த யாத்திரை என்று திட்டமிட்டான். நாட்டின் அரசன் அல்லவா, அதற்கு வேண்டிய சீர்த்திருத்தங்கள் பல செய்ய வேண்டி இருந்தது.

 

தன் பல நாள் எண்ணத்தை ஒரு நாள் மனைவியிடம் கூறினான், இதைக் கேட்ட தேவி ராசாத்தி இடியோசை கேட்ட நாகம் போல் பதறினாள். மறுத்தாள், மன்றாடினாள், வேண்டாம் என்று பல நடைமுறை காரணங்களை கூறினாள். இதைப் பற்றி பல நாள் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

 

கள்ளர்வென்றான் ஒருநாள் தன் மனைவியைப் பார்த்துக் கூறினான், ” தேவி நீயோ வீர தளபதியின் ஒரே மகள். இந்த தேசத்தை ஆண்ட அரசிகள் பல உண்டு. நான் மூன்றே மாதத்தில் திரும்பிவந்து விடுவேன். இதற்கு மேல் என்னைத் தடுத்தால் நிற்கப்போவதில்லை. உடனே நீ முடிசூட்டி நான் திரும்பி வரும்வரை மக்களைக் காக்க வேண்டும். என்னுடைய பயணம் உறுதியானது” என்று வாதிட்டான்.

 

அதற்கு மேல் வாதிட முடியாத ராசாத்தி, “அப்படியானால் மூன்று மாதத்திற்கு மட்டுமே முடிசூட்டிக்கொள்வேன், அதற்குள் திரும்பாவிடில் நான் வாழ மாட்டேன். உயிரை மாய்த்துக்கொள்வேன் இது சத்தியம்” என்றாள்.

 

இவ்வாறு அரசப்பனின் யாத்திரை பயணம் உறுதியானது. சில நாட்களில் ராசாத்தி அரசின் பொறுப்பை ஏற்றாள். அரசப்பன் கள்ளர்வென்றானின் மேனியிலும் நெற்றியிலும் விபூதி, சந்தணம், குங்குமம் பளிச்சிட்டன. தன் மெய்காப்பாளனான அரசடியான் ஒருவன் மட்டுமே தன்னோடு வர அனுமதித்தான்.

 

அரசரடியான் வீரவாளும் வேலாயுதமும் ஏந்தி தயாராகி நின்றான். கள்ளர்வென்றான் கதிகலங்கி நிற்கும் ராசாத்திக்கும், கண்ணீருடன் கூடிய நாட்டு மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஆறுதல் கூறினான்.பின்பு சிவகோஷம் முழங்க அரசனும் அடியானும் இரண்டு குதிரைகளில் ஏறிப் புறப்பட்டனர்.

 

நேராக மதுரைக்குச் சென்றனர். அங்கே தாய் தந்தையான மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி அங்கிருந்து யாத்திரையைத் தொடங்குவது என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. அதன்படியே பயணமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தது.

 

மூன்று மாதத்தில் பிரயாணம் முடிக்க வேண்டும் எனவே கோவிலுக்கு செல்வது வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. தொடரும் பயணத்தில் அரசியார் சில ஏற்பாடுகளை செய்திருந்தார். மதுரையிலிருந்துஅரசன் நேராக அம்பலவாணின் சிதம்பரத்திற்குச் சென்றார். வணங்கினான். பாடினான். உள்ளம் உருகி நின்றான்.

அப்போது அவன் எண்ணுகிறான், ” ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறது, பார்க்க வரும் பாட்டியின் முதல் கேள்வி குழந்தை அசைகிறதா? அழுகிறதா? என்பதே. ஏன் அவ்வாறு கேட்கிறாள? குழந்தை ஆடினால் தான் உயிர் குழந்தை என்று பொருள். இதை சித்தரித்துக் காட்டும் அந்த அரங்க ஆடல் மேடையின் தத்துவத்தை எண்ணினான்.

 

இவ்வாறு மனித வாழ்வும் இந்து மதத்தின் சிலை சொல்லும் கதைகளும் கள்ளர்வென்றானுக்கு தெளிவாகப் புரிந்தது.

 

அங்கிருந்து புறப்பட்டு சீர்காழி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவாரூர், திருவண்ணாமலை, திருகாளத்தி என்றுபல கோவில்கள் சென்று வணங்கி ஒவ்வொரு கோவிலிலும் இரவு தங்கி தியானம் செய்து விட்டு நேராக தஞ்சாவூர் வந்து அங்குள்ள பஎரிய லிங்கத்தையும் முறைப்படி வணங்கி விட்டு கோயம்புத்தூரை அடைந்தனர்.

 

பேரூரில் எம்பெருமான் பட்டீஸ்வரனை பயபக்தியுடன் வணங்கினான். ஒருநாள் தங்கி மேலும் பயணத்தை மலையாள மண்ணில் தொடங்கினான்.

மலையாளத்தின் இயற்கை அழகும் குளுமையும் அவனை மிகவும் கவர்ந்தன. மலையும் மடுவும் அந்த பிரதேசத்தில் அதிகம் உள்ளதால் தமிழர்கள் அதை மலை-ஆளம் என்றுபெயரிட்டு அழைத்தனர்.

 

பாலக்காடு வழியாக மலையாளத்தின் உள்ளே கள்ளர்வென்றான் புகுந்தான்.  புகழ்பெற்ற குருவாயூரப்பன் குழந்தை வடிவையும் பார்த்து ஆனந்தித்துவிட்டு அவ்வழியே சோட்டானிக்கரை என்ற ஊர் வந்தடைந்தான். மறுநாள் காலையில் குளித்து சிவசின்னங்கள் அணிந்து அங்குள்ள தேவியின் உக்கிர கோலத்தை கண் குளிர கண்டான்.

 

பரமனின் அங்கத்தில் பாதியைப் பெற்ற தேவிபார்வதி பத்திரகாளி ஈசனின்பாதுகாப்பு. பணியிலும் பாதியை முடிக்கிறாள் அல்லவா.

அப்போது வெளியிலிருந்து மக்களின் அவல ஓசை கேட்டது. அடியானும் அரசனும் விரைவாக வெளியே வந்து பார்த்தனர்.

 

அங்கே மதம் பிடித்த யானை ஒன்று மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தது. தன் துதிக்கையில் பெண் ஒருத்தியை சுருட்டிப் பிடித்துக்கொண்டு இருந்தது. இப்போது சிவக் கோலம் பூண்டிருந்தாலும் அரசை ஆண்ட அரசனால் இந்தக் கொடூரத்தை சகிக்கமுடியவில்லை. யானையைக் கொன்று மக்களைக் காக்கும்படி அடியானுக்கு உத்தரவிட்டான்.

 

எல்லாவிதமான மர்மக்கலையும் கற்றறிருந்திருந்த அரசடியான் தன் கையில் உள்ள வேலால் பல இடங்களில் யானையைக் குத்தினான். பிறகு திடீரென்று யானையின் மீது தாவி ஏறினான். தன் நீண்ட உடைவாளால் யானையின் துதிக்கையை வெட்டினான். பெரும் அலறலுடன் யானைவீழ்ந்தது. அந்த பெண் காப்பாற்றப்பட்டாள்.

 

அந்த யானை அனிச்சனுக்கு சொந்தமானது. எனவே மக்கள் பயந்து கொண்டே அரசடியானிடம் பலவாறு அனிச்சனின் குணத்தையும்சக்தியையும் கூறினார்கள். அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாத அடியானும் அரசனும் வழக்கம் போல அன்று தங்கி மறுநாள் பார்புகழும் ஐயன் ஐய்யப்பன் திருக்கோவில் நோக்கி சபரிமலைப் புறப்பட்டான்.

 

மதி விழுங்கும் இரவு, கதி அடைக்கும் கபாலம்

உயிர் குடிக்கும்கூனி, நரகிழுக்கும் கூற்றம்

 

காமத்தின் கொடூர விளைவுகளைப்பற்றி இப்படி எல்லாம் பெரியவர்கள் கூறினாலும் மணி நகையாறே தெய்வம், வாக்கே உபதேசம், அணைவதே முக்தி என்று வாதிடும் காமூகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

மறுநாள் விடியல் அனிச்சனுக்கு மகிழ்வாகவும் கயலிக்கு சோதனையாகவும் விடிந்தது…

***

தொடரும்