ரசவாச்சியே விழி சாச்சியே!

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் 13

மும்பையில் இருந்து கோவை வந்த நிதின் சூழ்நிலை என்னவென அறிய மில்லுக்கு செல்ல ஆயத்தமானான்.

அங்கு மில்லை சுற்றி, சில போலீஸ் அதிகாரிகளை கண்டு யோசித்தவன் உடனே சைத்தனை அழைத்துக் கூறியிருந்தான். இவன் கூறவும் சைத்தன் இங்கு வந்தும் விட்டான்.  

இவன் முன் யோசனையாக நின்றுக் கொண்டிருந்த அசோகனை பார்த்து, “எப்படி இருக்கீங்க அங்கிள்?” என்று கேட்டான் நிதின்.

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் தம்பி.” என்றவர் அருகில் நின்றிருந்தவரைக் காட்டி, “இது என்னோட ஃப்ரெண்ட் கமிஷனர் ஜனார்த்தன்.” என,

“வணக்கம் அங்கிள்.” என்றான் அவரைப் பார்த்து.

 “அங்கிள்… ஆரா எங்க? அவளை பார்த்து பேசலாம்னு வந்தேன்.” என்றான் இவன்.

“அது வந்து தம்பி…” இவர் இழுக்க,

“என்ன அங்கிள்.” இவன் கேட்கவே,

“ஒன்னும் இல்லப்பா. அவ வேலையா சென்னை வரை போயிருக்கா.” என்றார் மெதுவாக,

“ஓ… அவளை பார்க்கலாம்ன்னு.” கூறியவன் முகம் வருத்தத்தில் சுருங்க,

“ரெண்டு நாள்ல வந்திடுவா தம்பி.” அவர் கூறவே,

“சரி அங்கிள். அப்போ நான் கிளம்புறேன். வந்ததும் சொல்லுங்க. ***** ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன்.” அவன் கூற,

“சரிப்பா” என்றவர் அவனுக்கு விடைக் கொடுத்தார்.

வெளியே செல்லும் பொழுது சைத்தனை பார்த்து, ‘டன்’ என்பதாக  பெருவிரலை காட்டி சென்றான் நிதின்.

“நீ அங்க மும்பை போனா இங்க யார் பார்ப்பா அசோகா?” நிதினை பார்த்துக் கொண்டிருந்த அசோகனை பார்த்து கேட்டார் ஜனார்த்தனன்.

“பொண்ணை விட வேலை பெருசு இல்லை ஜனா. இது எல்லாமே நான் என் பசங்களுக்காகதான் செய்யுறேன். அவங்களுக்கே பிரச்சனைன்னு வரும் போது நான் இங்க இருந்தா எப்படி?”

“எல்லாம் சரி அசோகா இங்க ஆர்யனும் இல்ல இப்போ நீயும் இல்லன்னா சரி வராது. பிஸினெஸ் மட்டும் நான் சொல்லல ஆரியனையும் நீ பாக்கணும் இல்ல… கொஞ்சம் நிதானமாக இரு யோசிச்சு முடிவெடுப்போம்.

அதோட யாரும் இல்லாம ஆராவோடதோ, இல்ல ஆரியனோட விசயமோ லீக் ஆயிட்டா என்ன பண்ணுறது?”

“ம்ஹும்… ஜனா நீ புரிஞ்சுக்க மாட்ற அங்க மாட்டி இருக்கிறது என் குழந்தை… இங்க ஆரியனை பார்க்க என் அம்மா இருக்காங்க. ஆனா ஆரா அங்க என்ன எப்படி இருக்கான்னு ஒன்னுமே தெரியலையேடா.

நான் போகணும் போயே ஆகணும்… அதே சமயம் இங்க எந்த பிரச்சனையும் இல்லன்னு காமிக்கணும் எப்படிடா?” அய்யோவென தலையை பிடித்து அமர்ந்தவரின் மனதிற்குள் சட்டென தோன்றி மறைந்தான் சைத்தன்.

“சைத்தன்… சைத்தன் தாண்டா இதுக்கு பெஸ்ட் சாய்ஸ். அவன் இங்க எல்லாம் பொறுப்பா பார்த்துப்பான்.” என்றவர் எழ, 

“யார் சைத்தன்?” அவர் கேட்கவே,

“நம்ம மில் மேனேஜர்… ரொம்ப நல்ல பையன். பொறுப்பானவன் திறமையானவன். அவனுக்கு உதவிக்கு யாருமே இல்லடா. நான்தான் இங்க தங்க வீடு பார்த்து வைச்சிருக்கேன்.” அசோகன் கூற,

யோசனையாக முகத்தை சுருக்கியவரைக் கண்டு, “உன் போலிஸ் மூளையை இவன் கிட்ட காட்டாத. நீ நினைக்கிற மாதிரி இவன் இல்லை.” அவர் கூறவே,  

“சரிடா. நீ பேசிட்டு வா நான் வெளிய நிக்குறேன்.” என்றவர் வெளியே சென்றார்.

கார்மெண்ட்ஸ் மிஷின் சரி செய்ததில் இருந்து சைத்தன் மேல் ஒரு பாசம் வந்திருந்தது அசோகனுக்கு. தன் மகள் கூறியதை எல்லாம் அன்றே மறந்துவிட்டிருந்தார்.

அங்கிருந்த குறிபேட்டில் எழுதிக் கொண்டிருந்த சைத்தனை நோக்கி சென்றார் அசோகன்.

“சைத்தன் தம்பி.”   

“சொல்லுங்க சார்?”

‘இதுதானே தனக்கு வேண்டும்.’ என்ற எண்ணத்துடன் அவரை ஏறிட்டுப் பார்த்தான் சைத்தன்.

“அது வந்து…” எப்படி சொல்வது என்று தெரியாமல் இழுத்தார் அவர்.

அவனிடம் கேட்பது சரியா என்று கூட அவருக்கு தெரியவில்லை. ‘ஆனால் அவர் கட்டாயம் மும்பை செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்படி மேனேஜரிடம் பொறுப்பை விட்டு செல்வது எல்லாம் பெரிய விஷயம் இல்லைதான்.’

ஆனால், அப்படி பொறுப்பை கொடுக்கும் பட்சத்தில் ஆரா இல்ல, இவர் யாராவது வந்து கவனித்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

ஆனால், இப்பொழுது முதல் முறையாக முழு பொறுப்பும் மேனேஜர் கையில் கொடுக்கிறார் அசோகன்.

“சொல்லுங்க சார் என்ன விஷயம்?” என்றான் மீண்டும்.

“இன்னும் இரண்டு நாளுக்கு நம்ம மில் முழு பொறுப்பையும் உன்கிட்ட குடுக்கலாம்னு நினைக்கிறேன் சைத்தன்.” என்றார் அவர்.

“வாட்!” போலியான அதிர்ச்சி அவனிடம். “என்ன சொல்லுறீங்க சார்… நா… நான் எப்படி?” அதிர்ச்சியுடன் கொஞ்சம் பதட்டத்தையும் சேர்த்துக் கொண்டான் சைத்தன்.

“உனக்கு அபார திறமை சைத்தன். அதை இன்னும் மேம்படுத்துறதுப் போல் இந்த பொறுப்பை கொஞ்ச நாள் பார்த்துக்கோ.”

“அது சரிவராது சார்.” போலியான மறுப்பு அவரிடம்.

“நான் சொன்னது சொன்னதுதான்.” என்றவர் அங்கிருந்தவர்களை அழைத்து,

“சைத்தன் சொல்வதை எல்லாரும் கேளுங்கள். இன்னும் சில நாட்கள் இவன்தான் உங்களுக்கு எல்லாம்.” என்றவர் சைத்தனிடம் மில் பற்றிய சில விஷயங்கள் கூறி ஜனார்தனிடம் இணைந்துக் கொண்டார்.

வெளியில் நின்ற காவலர்களை அழைத்து அவர் ஏதோ கேட்க, அவருக்கு பதில் அளித்தவர்கள் அவ்விடம் விட்டு சென்றிருந்தனர்.

“என்ன ஜனா, ஏதும் தெரிஞ்சதா?” என கேட்க,

“இங்க விசாரணை நடந்தவரை ஒரு க்ளூவும் கிடைக்கல அசோகா. இப்போ இருக்கிற ஒரே க்ளூ மும்பைல இருந்து வந்த பார்சல்தான். பார்சல் டீடெயில்ஸ் கேட்டு மெயில் பண்ண சொல்லி இருக்கேன்.

அதோட டீடெயில் கிடைச்சாதான் மேல என்ன பண்ணலாம்னு யோசிக்க முடியும். நீ கிளம்பு.” என்றவர் அசோகனையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

சீக்கிரமே எல்லாரையும் அனுப்பியவன், கடையை நோக்கி சென்றான். சில உணவு பொருட்களும், ஆராவுக்கான உடை அவனுக்கு தெரிந்த அளவில் வாங்கிக் கொண்டவன், நியாபகமாக அவள் காலுக்கான மருந்தை வாங்கிக் கொண்டான்.

நிதினை அழைத்தவன், “நிதின் இது ஆரா புடவை. இதை நீ சென்னைக்கு போய் அன்னைக்கு அனுப்பின மாதிரி சென்னை மட்டும் அட்ரெஸ் போட்டு பார்சல் அனுப்பிடு.”

“ஏண்டா?” இவன் கேட்கவே,

“இல்லடா… இந்த அசோகன் நாம நினைச்சது போல் இல்லடா. அதிலும் ஆரா அவளை சொல்லவே வேண்டாம். ரெண்டு பேரையும் இன்னும் கொஞ்சம் கவனிச்சாதான் நாம நினைச்ச காரியம் நடக்கும்.” யோசனையுடன் சைத்தன் கூறவே,

“சரிடா.” என்றவன் காரை அமைதியாக செலுத்தினான். 

எப்பொழுதும் போல் பாதியில் இறங்கியவன் மலை மீது ஏறி ஆரா இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

                                        ***    

குகையின் அருகில் வர, ஏதோ விலங்கின் கால் தடம் இருக்க, வேகமாக  குகையை நோக்கி ஓடினான்.

வாசலில் வைத்திருந்த முள்ளை நகர்த்தி வைத்தவன் உள்ளே நுழைய, இன்னும் எழவில்லை ஆரா.

‘யப்பா,’ ஏதோ இனம் புரியாத நிம்மதி பரவியது அவன் முகத்தில்.

வாங்கி வந்திருந்த பொருட்களை சத்தம் இல்லாமல் வைத்தவன் அவளையே பார்த்திருந்தான்.

அவள் முகத்தில் எறும்பு ஒன்று ஏறுவதைப் பார்த்தவன், அவள் அருகே போக, அப்பொழுதுதான் கவனித்தான் அவள் காலில் இருந்த காயத்தை எறும்பு மொய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்,

‘என்ன வேலை பண்ணி வச்சிருக்கடா.’ அவன் தலையிலே சட்டென்று தட்டியவன், அவள் காலை ஆராய்ந்தான்.

அவன் செல்லும் பொழுது உப்பி இருந்த கொப்புளம் எல்லாம் இப்பொழுது உடைந்து இருந்தது. அதை சுற்றி எறும்பு வேறு இருக்க,

அவளுக்கு வலிக்காத வண்ணம் எறும்பை தட்டி விட்டவன், அடுப்பை பற்ற வைத்து, சுடுநீர் வைத்தான்.

நீர் கொஞ்சம் சூடானதும், ஏற்கனவே தீ பற்றியிருந்த போர்வையின் ஓரத்தில் கிழித்தவன், சுடுநீர் வைத்து அவளது காலை சுத்தம் செய்து தான் இப்பொழுது வாங்கி வந்திருந்த ஆயில்மென்ட்டை அவளது காலில் தேய்த்தான்.

அதன் எரிச்சலில், காலை அசைத்தவள் மிகவும் கஷ்டப்பட்டு கண்களை திறக்க முயற்சித்தாள்.

காலை பிடித்தபடி அமர்ந்திருந்த சைத்தன் அவள் கண்ணில் விழ, வேகமாய் எழுந்தவள்,

“ஏய்! என்ன பண்ணுற நீ… என் காலை விடு.” அவனிடம் இருந்து வலுகட்டாயமாக காலை இழுத்துக் கொண்டாள்.

“ஏய் லூசு. மருந்து போட்டாதான் சீக்கிரம் ஆறும்.” அவன் கூறவே காது கொடுத்து கேட்டாளில்லை.

“அடம் பிடிக்காத ஆரா. சீக்கிரம் ஆறணும்னா இந்த மருந்தை போடு. இல்லன்னா நாளைக்கு பிரச்சனை ஆகிடப் போகுது.” நல்லவிதமாகத்தான் கூறினான்.

ஆனால், அவள்தான் அவன் கூறுவதைக் கேட்கும் மனநிலையில் இல்லை.

“ஏய்! உன்னைத்தாண்டி.” இவன் கத்த,

‘நீ என்ன வேணா கத்து என் காது கேட்காது.’ என்பது போல் அமர்ந்திருந்தாள் அவள்.

“உன்னை இப்படி நான் விட்டு வச்சிருக்கதே தப்புடி.” அவளது செயல் அவனுக்கு அப்படி ஒரு கோபத்தை கிளப்பியது.

அவளது கையை புதிதாக வாங்கி வந்த சங்கிலியில் இணைத்து மரத்தோடு கட்டியவன், அவளது காலை அழுந்த பிடித்தான்.

“நீ விடுடா… விடுடா.” அவள் காலை அசைத்து அசைத்து கத்த,

“கொஞ்ச நேரம் உன் காலை அசைக்காம வை ஆரா.” கோபம் தணிந்தவன் மெதுவாக கூற,

“ஒரு பொண்ணு காலை இப்படி வெட்கமே இல்லாம பிடிச்சிருக்கியே, உனக்கு சூடு சுரணை கிடையாதா?” என்றாள் கோபத்துடன்.

“லூசா உனக்கு. உன் காலை என்னமோ ஆசையா பிடிச்சு வச்சிருக்கிறது போல பேசுற.”

“இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டாள் கேலியாக,

“மருந்து போட பிடிச்சிருக்கேன்.” புரியாமல் அவன் கூறவே,

“நானே கம்முனு இருக்கேன். உனக்கு என்னடா வந்திச்சு. நான் உன்கிட்ட என் காலுக்கு மருந்து போடுன்னு உன்கிட்ட வந்து நின்னேனா?” இவள் கேட்க,

“லூசாடி உனக்கு.” அவன் கத்த,

“யாருக்குடா லூசு. நீதான் லூசு… உங்கம்மா லூசு, உன்னை இப்படி பெத்து வளத்து விட்டிருக்க உங்கப்பன் லூசு…” மேலும் இவள் கூறிக் கொண்டே போக,

“எனாஃப் ஆரா.” அவனது காட்டு கத்தலில்,

“என்னடா என்ன?” இவள் எகிற,

 “உனக்கு கால்ல சுடுதண்ணிய ஊத்திருக்க கூடாதுடி. உன் வாயில ஊத்திருக்கணும். நீயெல்லாம் ஒரு பொண்ணா?”

“நான்தான் பொண்ணே இல்லையே. இதை நீதான் சொன்ன நியாபகம்.”

“ச்சை… உன்கிட்ட மனுஷன் பேசுவானா…”

“என்கிட்ட மனுஷன் எப்படி பேசுவான். உன்னை மாதிரி பிச்சைக்காரன்தான் காலை பிடிச்சு பேசுவான்.” இவள் நக்கலாகக் கூற, 

மருந்தை அவள் மீது வீசியவன், “உன்னை எல்லாம்… இருக்குடி உனக்கு.” கறுவிக்கொண்டவன், குகையை விட்டு வெளியேறினான்.

“உனக்கு இன்னும் இருக்குடா. இந்த ஆரா யாருன்னு உனக்கு சரியா தெரியல. தெரியும் போது நீ இந்த உலகத்தை விட்டே போயிருப்ப.” அவனுக்கு நன்கு கேட்கும் வண்ணம் கத்தியவள், அவன் வீசி சென்ற மருந்தை எடுத்து காலில் போட ஆரம்பித்தாள்.

அவள் கூறுவதை அவன் காது கொடுத்து கேட்கவேயில்லை. சுருங்க சொல்ல வேண்டும் என்றால், அவளை, அவன் மனுஷியாகக் கூட நினைக்கவில்லை.

கடையில் வாங்கி வந்த பிரட்டை இரவு உணவாக உண்டவன் அவளுக்கும் நீட்ட, எதுவும் கூறாமல் அமைதியாக வாங்கி உண்டாள்.

அவளது அமைதியில் இவனது முகம் யோசனையானது. ‘அடுத்து என்ன பிளான் வச்சிருக்கா தெரியலையே?’ அவளையே பார்த்திருந்தான்.

“என்ன பாக்குற?” அவளது குரல் கூட மிகவும் மென்மையாக ஒலித்ததுப் போல் இருந்தது.

அவளிடம் எதுவும் கூறாமல், தான் வாங்கி வந்திருந்த புது பெட்ஷீட்டை எடுத்துக் கொண்டு எப்பொழுதும் போல் பாறையில் வந்து படுத்துக் கொண்டான்.

                                        ***

காலையில் அவனுக்கு முன் எழுந்தாள் ஆரா. எழுந்தவள் முகம் பெரும் யோசனையில் இருந்தது. சைத்தன் எழும் ஓசை கேட்கவும், காலை அழுந்த பிடித்துக் கொண்டாள்.

“ஏய்! என்னாச்சு வலிக்குதா?” அவள் எழுந்து அமர்ந்திருந்ததைப் பார்த்துக் கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் கூறாதவள், காலையேதான் பார்த்தாள்.

“உன்கிட்டதான் கேட்குறேன் ஆரா?” மீண்டும் அவன் கேட்கவே,

“வலிக்குது.” என்றாள் இப்பொழுது.

 “மருந்து போட்டியா?” அவளிடம் கேட்டவன், எழுந்து பெட்ஷீட்டை மடித்தபடி அவள் அருகே வந்தவன், அவள் காலை ஆராய்ந்தான்.

“கொப்புளம் உடைஞ்சதுனால சீக்கிரம் ஆறிரும்.” என்றவன், நேற்று வாங்கி வந்த பையில் இருந்து அவனுக்கான பிரஸ் பேஸ்ட் எடுத்தவன் வெளியே நடந்தான்.

“நீ மட்டும் பல்லு விளக்குற. நான் விளக்க வேண்டாமா? எத்தனை நாள் கையால தேய்க்கிறது?” அவள் கேட்கவே,

‘என்ன இன்னைக்கு மேடம் அமைதியா எல்லாம் கேட்குது?’ யோசனை வர, அவளை பார்த்தான்.

“என்ன பாக்குற நீ மட்டும் பிரஷ்ல விளக்குற?” என்றாள் மீண்டும்.

அவளிடம் ஏதும் கூறாமல், உள்ளே வந்தவன் இன்னொரு பிரஷ் எடுத்து அவளிடம் நீட்டியவன் வெளியே நடந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்தவன், தனக்கான உடையை எடுத்துக் கொண்டு வெளியே வர,

“சைத்தன்” என்றாள் அவள்.

ஒரு நிமிடம் பறக்கும் பறவைகள், ஆடும் மரங்கள் எல்லாம் நின்றது போல் இருக்க, அப்படியே அதிர்ச்சியில் விழித்தான் சைத்தன்.

“சைத்தன் உன்னைத்தான்.” மீண்டும் அவள் அவனை அழைக்க,

“ஆங்… என்னையா கூப்பிட்ட?”

“இங்க வேற யாரும் இருக்காங்களா?” அவள் கடுப்பாக வினவ,

“என்ன சொல்லு?” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்து.

“நீ மட்டும் குளிக்க போற. நான் மட்டும் நாத்தம் புடிச்சு இருக்கணுமா?” அவள் கேட்கவே,

‘சைத்தன் உஷாரா இருந்துக்கோ பயங்கரமா ஏதோ பிளான் பண்ணிட்டா?’ தனக்குள் கூறியவன்,

“இல்லை… நீ இன்னும் ரெண்டு நாள் கழிச்சு குளி. கால் புண் இன்னும் ஆறல.” அவன் கூறவே,

“அதெல்லாம் எனக்கு தெரியும் நீ சொன்னதை மட்டும் செய்.” என,

‘உன்னிஷ்டம்’ என்பது போல் தோளை குலுக்கியவன், அவளுக்கும் வாங்கி வந்திருந்த உடையை எடுத்துக் கொடுத்தவன், ஒரு காலில் மட்டும் சங்கிலியை கட்டியவன், அவளை அழைத்து சென்றான் முகம் பெரும் யோசனையில் இருந்தது.

‘இவ பிளான் என்னன்னு தெரியலையே? ஒரே நாளில் திருந்தும் ஜென்மம் இவள் கிடையாதே?’ இவன் யோசித்துக் கொண்டிருக்க,

“டிரஸ் எப்போ எடுத்துட்டு வந்த?” அவள் கேட்கவே,

“இதெல்லாம் உனக்கெதுக்கு.” அவள் மேல் பாய்ந்தான்.

“அழகா செலக்ட் பண்ணிருக்க.” என்றாள் அவள்.

‘சரிதான். பிளான் பண்ணிட்டா.’ மிகவும் அலார்ட் மோடுக்கு சென்றான் சைத்தன்.

காயம் இருந்த காலில் பாலிதீன் கவர் கட்டியவன், அவளை அங்கிருந்த மரத்தோடு கட்டியவன், “இந்த பாறையில் இருந்து குளி. நீ சொல்லுறதை நான் ஏண்டா கேட்கணும்னு. உள்ள இறங்கி குளிச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை.” என்றவன் எழுந்து அந்த பக்கமாய் குளிக்க என்றான்.  

என்னே ஆச்சரியம்! அவன் கூறியதுப் போல் அங்கிருந்த குட்டி பாறையில் இருந்து குளித்துக் கொண்டிருந்தாள் ஆரா.

காலையில் எழுந்ததில் இருந்து அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துக் கொண்டிருந்தாள் ஆரா.

குளித்து நைட்டியை போட்டு, அங்கிருந்த பாறையில் அமர்ந்திருக்க குளித்து முடித்த சைத்தன் அவளை வந்துப் பார்க்க, காலில் நீர் படாமல் குளித்திருந்தது தெரிய, அவளை பார்த்தவன் ஒன்றும் கூறாமல், அவள் அலசி வைத்திருந்த துணியை கையில் எடுத்தவன், அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் குகை நோக்கி நடந்தான்.

“சைத்தன்” அவன் அழைக்கவே,

அவளை திரும்பிக் கூட பார்க்காமல் முன்னே நடந்தான்.

“டேய் உன்னைத்தான்.” அவன் தோள் தொட்டு அழைக்க, 

அவளை திரும்பிப் பார்த்தவன், ஒன்றும் கூறாமல், அவளை குகையில் மீண்டும் கட்டி வைத்தவன், அவள் முன் ஒரு பிரட் பாக்கெட் எடுத்து வீசியவன், வெளியே நடந்தான்.

“என்ன இவன் நான் எது கேட்டாலும். பதில் சொல்லாம போறான். டேய் சைத்தன்.” இவள் மீண்டும் கத்த, அவன் சென்றே விட்டான்.

அவன் கொடுத்த பிரட் எல்லாம் காலி செய்தவள், அவன் பேக்கை எடுத்து ஆராய்ந்தாள்.

துணி, பிரட் இப்படியான இதர ஐட்டம் இருக்க, அதை மூடி வைத்தவள், காலில் ஆயில்மென்ட் போட்டு பாறையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

                                           ***

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவன் சுள்ளிகளை அடுப்பின் முன் வைத்து, பறித்து வந்த பழங்களை அவள் கையில் கொடுத்தான்.

அமைதியாக வாங்கி உண்டவள், “நீ சாப்டலியா சைத்தன்.” கேட்க, அவளிடம் எதுவும் கூறாதவன், அடுப்பில் தீயை மூட்டி மதிய உணவு செய்ய ஆரம்பித்தான்.

சமைத்த உணவை அவள் முன் வைத்தவன், அவளிடம் ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டான்.

‘என்னாச்சு இவனுக்கு.’ யோசனையுடன் அவனை பார்த்தாள் ஆரா.

‘உன்கிட்ட பேசினாதானடி… என்னை நீ டார்ச்சர் பண்ணி ஓட ஓட விரட்டுவியா?’ சிரித்தவன் அவளை கண்டுக் கொள்ளவேயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!