இளைப்பாற இதயம் தா!-14ஆ

இளைப்பாற இதயம் தா!-14B

          எதுவாக இருந்தாலும் அவன் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.  எத்தனை வீரியமிக்க துன்பமானாலும் ஓடி ஒளியும் ரகமல்ல ரீகன்.  அதனால் சிங்கத்தின் குகையிலேயே இருப்போம் எனும் முடிவோடு அருகே கிடந்த ஐடாவின் படுக்கையில் அமர்ந்துவிட்டான்.

          அயர்ச்சியும் உறக்கமின்மையும் அவனை அதற்குமேல் யோசிக்கவிடவில்லை.

          “உனக்குப் பசிக்கும்போது என்னையும் கூப்பிடு ஹனி.  நான் ரெண்டு நாளா நல்லாத் தூங்கலை!” என்றவன் அவளின் படுக்கையிலேயே குறுக்காக படுத்துவிட்டான். அவளின் அருகே தலைவைத்து எதிர் புறமாக காலை நீட்டி படுத்தவன் உறங்கிவிட்டான்.

          ஐடாவின் படுக்கையில் ரீகனால் முழுமையாக படுக்க முடியாது என்பதால் எப்போதுமே இங்கு வந்தாலும் அந்தப் படுக்கையை பயன்படுத்த எண்ணமாட்டான்.

          அதில் சற்று நேரம் அமருவான். அத்தோடு உறக்கம் வந்தாலும், ஐடாவை அழைத்துக்கொண்டோ அவள் தாமதித்தால் அலேக்காகத் தூக்கிக்கொண்டோ தங்களின் அறைக்குச் செல்ல முனைவானே அன்றி இப்படி தனது படுக்கையில் படுத்த ரீகனை இதுவரை ஐடா பார்த்திருக்கவில்லை.

          மேலும் பாதிக்குமேல் கால் வெளியே இருக்க கணவனையே பார்த்தாள்.  ஆனால் ரீகன் படுத்ததுமே அசைவில்லை.  

ஐடா ரீகனிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.  அவன் மீதான பற்றுதலும், பாசமும் மேலேழ… அடுக்களைக்குச் சென்று பார்த்தாள்.  உண்ண என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு தாமஸிடம் வேண்டியதைச் செய்யும்படி பணித்தாள்.

அரைமணித் தியாலத்தில் டைனிங்கில் உண்ண வேண்டியதை எடுத்து வந்து வைக்கச் சொல்லிவிட்டு, அறைக்குள் விரைந்தாள்.  உறங்கியவனை, “ரீகன்… வாங்க சாப்பிடலாம்” அழைத்தாள்.

அசைவில்லை.  நல்ல அசதிபோலும்.  ஆழ்ந்த உறக்கத்தில் ரீகன் எழவில்லை.  கேசுவலுக்கு மாறாமல் அப்படியே உறங்கியவனின் முகத்தைப் பார்த்தபோது, அதில் அவனது கடந்துபோன தினங்களின் அலைச்சலின் வாட்டம் தெரிந்தது.

ஐடாவிற்கு அவனது வாட்டத்தில் மனம் வேதனையான உணர்வு. ‘இவ்ளோ நேரம் என்னென்னவோ யோசிச்சிட்டு இருந்தேன். இந்த முகத்தைப் பார்த்தா… எனக்குள்ள அப்டியொரு சந்தோசம் வந்திருதே… எப்டி?’ என யோசித்தவள், ‘நான் இந்த வீட்டுக்கு வந்தது முதல்… எந்தக் குறையும் சொல்றமாதிரியா நடந்துகிட்டதில்லையே இந்த ரீகன்’ என்று தோன்றியது.

அப்படித் தோன்றியதும், இந்த ஆராய்ச்சியை இப்படியே விட்டுவிடலாமா என்று அவளின் மனம் கூப்பாடு போட, அறிவு சொன்னது… ‘அப்படியே விட்டுட்டா… உண்மை தெரியாமப் போயிருமே’ என்று.

நான்சி ரீகனைத்தானே தனது எக்ஸ் என்று கூறி வந்தாள்.  அவள் கூறிய விசயங்களை வைத்துப் பார்த்தால், ‘ரெண்டு பேரும் சேந்து நல்லா சுத்திட்டு, ஆளுக்கொரு திசையில போயிருக்குங்க… கிடைச்சவன் சரியில்லைன்னதும் இவ பழைய ஆளைத் தேடுறா… இல்லைன்னா நிச்சயமா இவனை யோசிச்சிருக்கவே மாட்டானு தோணுது’ என்று சமீபத்தில் நான்சியின் பேச்சைக் கேட்டு நினைத்திருக்கிறாள் ஐடா.

ஆனால் அப்படி அவள் உருகி உருகிக் காதலித்தவன் ரீகனா என்று யோசிக்கும்படி இருந்தது அந்த சந்திப்பு.  சாதாரணமாக நான்சியிடம் உரையாடினானே அன்றி முதல் சந்திப்பு என்பதால் அதீத ஆர்வத்தையோ, சந்தோசத்தையோ காட்டவில்லை.  மேலும் தன்னை நிராகரித்துவிட்டு அவளிடம் ஒட்டுதல் காட்டாமல் நார்மலாகத்தானே இருந்தான் ரீகன் என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியது ஐடாவின் ரீகன்மீது அன்புகொண்ட மனது.

ஆனால் நான்சி மற்றும் ஜான்வியின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியும் திகைப்பும் இப்போதும் கண்முன் தோன்றி பயமுறுத்தியது.  அதிர்ச்சி திகைப்பைவிட ஐடாவின் மீதான அவர்களின் பார்வையில் இருந்தது என்னவென்று வந்தது முதலே யோசித்தவளுக்கு, அது வயிற்றெரிச்சல் என்பது புரிந்திட, ‘என்னைப் பாத்து வயிறெரிய என்ன இருக்கு?’ என்று ஐடாவிற்கு குழப்பம்.

இது அனைத்தும் சட்டென மனதில் வந்திட, ‘உண்மை தெரிஞ்சு உபயோகமா இருந்தா ஓக்கேதான்.  வேற எதாவது புது பிரச்சனை வந்துட்டா நீ என்ன பண்ணுவ’ என்று அறிவு எச்சரித்தது.

கணவனது வாட்டமான முகத்தையே பார்த்திருந்தவள் தனது மனதிற்குள் நிகழ்ந்த பட்டிமன்றத்தை ஓரங்கட்டிவிட்டு ரீகனை உலுக்கி, “சாப்பிட்டுத் தூங்குங்க” என்று எழுப்பினாள்.

“ஹ்ம்” என்றவன் கண்ணைத் திறக்க முடியாமல் மீண்டும் முடிக்கொள்ள, ரீகனது சிகையை மேலெழுந்தவாரியாக கைகளால் கோதியவள், “எந்திரிச்சு ரெண்டு வாய் சாப்பிட்டுத் தூங்குங்க” என்றாள்.

அவளின் செயலில் மேலும் அவனது உறக்கம் கூடியதே அன்றி எழும் முகாந்திரமே இல்லை. இதுபோல சில நேரங்களில் உறங்குபவனை, சீலியோ ரூபியோ அழைத்துப் பார்த்துவிட்டு விட்டுவிடுவார்கள்.  ஐடா வந்தது முதல் அப்படி அவனை விட்டதில்லை. இது அனைவரும் அறிந்ததுதான்.  ரூபிக்கு ஐடா வந்தது முதலே நிம்மதியும் திருப்தியும்.

பேரனை ஐடாபோல இதுவரை யாருமே பார்த்துக்கொண்டதில்லை என்பதைவிட ஐடாவின் பின்னே இத்தனை நேசத்தோடு இருக்கும் ரீகனை நேரில் பார்க்கிறார்தானே.  அதனால் ரீகனைப் பற்றிய செயல்பாடுகளால் உண்டாகியிருந்த பயம் முழுமையாக மாறியிருந்த வேளை.

‘ஆசை அறுபது. மோகம் முப்பதுன்னு… திரும்பவும் பய போயிருவானோ’ என பயந்துபோய் இருந்தவர்தான் ரூபி.

மேலும் சில மாதங்கள் அவனைக் கண்காணித்து, ஐடாவின் கவனிப்பும் நேசமும் புரிதலுமே அவனை இழுத்து வைத்திருப்பதாக அவர் நம்பியது ஐடா பங்களூர் சென்றதும் அவள் பின்னோடு ரீகனும் சென்றபோதுதான்.

தன்னிடம் சொல்லாமல்கூட பங்களூருக்கு போனவன் இரண்டொரு நாளில் மனைவியோடு சென்னைக்குத் திரும்பியதுமே அத்தனை மகிழ்ச்சி பாட்டிக்கு.

 ‘இனி பய முன்ன மாதிரி சாப்பாட்டுக்காக வெளிய திரிய மாட்டான்.  வெளிய சாப்பிடறது டேஸ்ட்டா இருக்கற மாதிரித் தெரியும்.  ஆனா உடம்பு கெட்டுடும்னு பய புரிஞ்சிக்கிட்டான்’ என்று அவருக்கு பேரனது உணர்வு போராட்டங்களைத் தீர்க்க வேண்டி வெளியில் சென்று வந்தது நின்றதை சட்டென சாதகமாக எடுத்துக்கொள்ளாமல்… ஒரு தீர்மானத்திற்கு வர அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசம் முடிந்ததும்… மாறாமல் இருந்த பேரனை நினைத்து நிம்மதியாக இருந்தார் பாட்டி.

ரீகனை விடாமல் தொணத்தி எழ வைத்து, “டைனிங்கிற்கு வர முடியலைன்னா இங்க சாப்பாடு எடுத்துட்டு வரவா” என்று ஐடா கேட்டபின்புதான் நன்கு விழித்தான் ரீகன்.

“இல்ல ஹனி. வா சேந்தே போயி சாப்பிடலாம்” என ஐடாவையும் தோளோடு அணைத்தபடி டைனிங்கை நோக்கிச் சென்றான்.

          கையைக் கழுவிக்கொண்டு உண்ண அமர்ந்தவன் முதல் கவளைத்தை எடுத்து ஐடாவிடம் நீட்ட, அதுவரை உண்ணாமல் பட்டினியாக இருந்தவள் மறுக்க மனமின்றி ஆனால் வாங்க யோசித்து சற்று தாமதிக்க…

          கையில் இருந்த உணவை தட்டில் போட்டவன் எழ முயற்சிக்க, “ஏன் எழறீங்க…?” என்று பதறினாள் ஐடா.

          “நீ காலையில சாப்பிட்டது. அதுக்கப்புறம் அங்க பாதாம் பால் குடிச்சேன்னு சொன்ன… அப்புறம் இதுவரை சாப்பிடாமத்தான இருக்க… வயித்துல நம்ம புள்ளையோட நீ ஃபாஸ்டிங் இருக்கும்போது, இந்த ஒரு வேளை நான் சாப்பிடலைன்னா எனக்கு ஒன்னும் ஆகாது ஹனி” என்றவன், வாஸ்பேசினை நோக்கி நடக்க, வேக எட்டுக்கள் வைத்து கணவனைத் தடுத்தவள், கரம் பிடித்து டைனிங்கை காட்டி, “வாங்க” என்று அழைத்தாள்.

          “மெதுவா நட ஹனி” அப்போதும் ஐடாவின் மீது அக்கறை காட்டியனைக் கண்டு ஐடாவிற்கு கரித்துக்கொண்டு வந்தது.  ஆனால் அதனைக் காட்டாமல் கணவனது கரங்களைப் பற்றி டைனிங்கிற்கு இழுத்து வந்து அமர வைத்தவள், “ம்… தாங்க” என்றாள்.

          ஒரு வாய் கவளைத்தை எடுத்து மனைவியின் வாயில் திணித்தவன், “உனக்கு என்னன்னாலும் எங்கிட்டப் பேசு.  சண்டை போடணும்னாலும் போடு.  அடிக்கறதா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சு சாத்து.  எதாவது ஆர்க்யூ பண்ணணும்னாலும் பண்ணு.  எதுனாலும் உனக்கு மட்டுந்தான் எங்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.  ஆனா இப்படி பேசாம இருந்து என்னைக் கொல்லாத ஹனி” என்றவன் அடுத்து அவளின் பதிலுக்கு எதிர்பாராமல் தட்டில் இருந்ததை சில நொடிகளில் உண்டுவிட்டு அவனது அறைக்குள் சென்று படுத்துவிட்டான்.

ஐடாவிற்கு எதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் தானாக எதையேனும் கேட்டு, இருவருக்கும் இடையே இருக்கும் பந்தத்தை தவறாக மாற்றிக்கொள்ளக்கூடாதே என்கிற விழிப்பு இதுவரை அவளை அவனிடம் அமைதியாக வைத்திருந்தது.

இந்த ஒரு நாளுக்கே ரீகன் இப்படிச் சொன்னால் இனி வரும் நாளில் ஏதேனும் அவனின் பழைய விசயங்களை அறிய நேர்ந்தால் தான் இதேபோல இல்லாமல் இன்னும் மோசமாக நடக்க நேரிடலாம்.

அப்படி தான் நடக்கும்பட்சத்தில் ரீகனது நிலையை எண்ணிப்பார்க்கவே ஐடாவால் முடியவில்லை.  பேருக்கு உண்டதாக இரண்டு வாய் உண்டுவிட்டு தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள் ஐடா.

மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடர அடுத்தடுத்து விசயங்கள் தெரிய வர, ஐடாவின் நிம்மதி அவளைவிட்டு வெகுதூரம் போயிருந்தது.

இதுவரை முகநூல் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை காண நேரம் ஒதுக்காதவள், மனம் இடறியவர்களின் சமூக வலைப்பக்கங்களை நோட்டமிட்டாள்.

ஏதோ ஒரு கனத்தில் ஃபாலோ அல்லது ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் அக்செப்ட் செய்து வைத்திருந்தது, இன்று அவளின் நிம்மதியைத் குலைத்திருந்தது.

நான்சியின் பழைய படங்களை காண நேரிட்டதில் ரீகனோடு அவள் எடுத்துக்கொண்ட பல படங்களைப் பார்க்க நேரிட்டது.  அதில் இருவருக்கிடையே இருந்த நெருக்கம் ஐடாவிற்குத் தெரிய வந்ததும் தனது வாழ்வைப் பற்றிய எண்ணம் அருவெறுப்பு மிகுந்தாற்போலத் தோன்றத் துவங்கியிருந்தது ஐடாவிற்கு.

உறங்காமல் அப்படியே விழித்திருந்தாள் ஐடா ராக்கோழிபோல. அனைத்தையும் உடனே தெரிந்துகொண்டாகவேண்டும் என்கிற வெறி.  இதில் ஆர்வம் என்பது தனக்கு சாதகமான விசயங்களைப் பற்றி அறிந்துகொள்வதல்லவா.  இது பாதகமாகலாம் என்று தெரிந்தும் உள்ள ஆர்வம் வெறியின் கீழ் வருகிறது.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஐடாவிற்கு டிராவல்ஸில் இருந்து வாய்ஸ் மெசேஜ்.  உடனே கேட்டவளுக்கு அன்று பயணித்தவர்களின் பட்டியலோடு அவர்களின் தொடர்பு எண்ணையும் சேர்த்து அனுப்பிவிட்டு, ஐடாவிற்கு மெசேஜிலும் சொல்லியிருந்தார். மீதிப் பணத்தை அனுப்பிவிடுமாறும் அதில் சொல்லியிருந்தார்.

அவர் சொன்ன பணத்தையும் அவளின் அக்கவுண்டில் இருந்து அன்று மதியத்திற்குள் முழுமையாக அனுப்பிவிடுவதாக ஆடியோ நோட்டில் அனுப்பினாள் ஐடா.

பணம் என்றால் எத்தனை சீக்கிரத்தில் வேலை நடக்கிறது என்பதைவிட, அந்த நாளில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் ஜான்வியோடு மதுமிதா என்ற பெண்ணும், ராபர்ட் ரீகனுடன் பார்த்தசாரதி என்கிற நபரும் அடுத்தடுத்த எண்ணுள்ள ஸ்லீப்பரில் பயணித்ததாக பதிவாகியிருந்தது.

நெஞ்செங்கும் அன்றைய தினத்தில் தான் கண்ட விசயங்களை அசைபோட்டதும் தீப்பற்றியதுபோல எரியத் துவங்கியிருந்தது ஐடாவிற்கு.  அழுகை அவளையும் அறியாமல் வந்தது.

தான் முதன் முதலாக அவனது கையில் கண்ட டாட்டூவைப் பார்த்ததும் தான் யோசித்தது நினைவில் வந்தது.  அந்த விசயத்தை பெரிதுபடுத்தாமல் புறக்கணித்தது எத்தனை தவறு என்பது காலம் கடந்து புரியவர தனது தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டதை எண்ணி அழுகை பொங்கியது.

வயிற்றுக் குழந்தையை எண்ணி அடக்க பெரும்பாடுபட்டாள்.  தனது இந்த நிலை குழந்தையை பாதிக்குமே என்கிற பயமும் வர, நேரத்தைப் பார்த்துவிட்டு காலை நேர இறைவணக்கத்தைத் துவங்கினாள்.

பிரேயரில் முழுமையாக மனதை ஈடுபடுத்த முடியவில்லை.  இருப்பினும் முயன்று பிரேயரை முடித்தாள்.  மனது சற்று லேசாற்போனது போலிருந்தது.  ஆனால் சஞ்சலம் இனிதான் என்று மனம் கிண்டல் செய்தது.  யாரும் இன்றி அனாதரவாக ஊனுக்கும், உயிருக்கும், உறவுக்கும் இடமில்லாமல் தனித்து நிற்கும் உணர்வு.

பெற்றோர் அனைத்தையும் விசாரித்தார்களே!  எப்படித் தவறு நடந்திருக்க முடியும்? என்று கேள்வி எழுந்தது.  நடந்திருக்கிறதே என்று உண்மை சுட கேவலமாகத் தோன்றியது.

‘இப்டியெல்லாம் ஒருத்தவன் இருக்கான்னு… யாருக்குமேவா தெரியாது.  நாம பாத்தோமே… வேற தெரிஞ்சவன் ஒரு பய சொல்லலையே!’ என்று நினைத்ததுமே அஸ்வின் தன்னிடம் கூறியது நினைப்பில் வந்து கேலி பேசியது.

‘கர்த்தர் அவன் வழியா வந்து என்னை சேவ் பண்ண நினைச்சிருக்கார்.  நாந்தான் அவனை தப்பா புரிஞ்சிட்டு அவாய்ட் பண்ணிட்டேன்போல’ என்று அன்று நடந்ததை எண்ணி வருந்தினாள்.

இந்த வருத்தங்கள் தனது கடந்துபோன வாழ்க்கையை மாற்றாது எனும் நிதர்சனம் அவளை தொய்வடையச் செய்தது.  ரீகனைக் காண, அவனோடு சாதாரணமாகப் பேச, வாழ இனி தன்னால் முடியாது என்கிற உண்மை சுட்டது.  ஏற்றுக்கொள்ள முடியாத மனம் கண்களில் நீரை உற்பத்தி செய்தது.

அந்த தினத்தின் விசயம் மட்டும் உறுதி செய்யப்பட்டதிலேயே இத்தனை கண்ணீரென்றால், இன்னும் மற்றவர்களைப் பற்றியும், ரீகனது உண்மையான முகத்தையும் அறிய நேர்ந்தால் தனது நிலை என்னவோ என்று ஆயாசமாக இருந்தது.

உண்டான கண்ணீரின் விரயத்தில், நிம்மதி விளைவதுபோலத் தோன்றியது.  அது மாயை என்பதும் புரிந்தது ஐடாவிற்கு. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை.  கதவு தட்டும் சத்தம் கேட்கும்வரை பல நினைவுகள்! சில முடிவுகள்!

விடியல்வரை அசதியில் உறங்கியவன் காலையில் தனதருகே மனைவியைக் காணாமல் அவளில்லாத படுக்கையை வெறுத்தவன் வெளியே வந்து ஐடாவைத் தேட… அவளின் அறைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தில், ‘வேலைனாலும் இப்படி ராவா பகலா உக்கார மாட்டாளே!’ என கதவை திறக்க முனைய அது லாக் செய்யப்பட்டிருந்தது.  எப்போதும் அப்படி செய்ய மாட்டாளே என்றெண்ணியவன், ‘ஏன் இப்படி ரூமை லாக் பண்ணிட்டு உக்காந்திருக்கா?’ யோசித்தபடியே கதவில் தட்டி, “ஹனி…!” என்றழைத்தான்.

பதிலில்லை!

மீண்டும் அழைத்தான்.

 நாற்காலி நகரும் ஒலியில் ஐடா எழுந்து வருவது தெரிய, கதவைத் திறக்க காத்திருந்தவனின் முன் நின்றவளை அவனால் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.

ரீகன் ஐடாவின் ஓய்ந்துபோன தோற்றத்தைக் கண்டு பதறி அவளைப் பற்ற இரு கரங்களை அவளை நோக்கி நீட்டியபடி, “என்ன பிரச்சனை ஹனி?” என்று முன்னேற,

ரீகன் தன்னைத் தொடுவதை விரும்பாதவள் பின்னோக்கி நகர்ந்தவாறு, “உங்க பாஸ்ட்தான்!” ஓய்ந்துபோன தோற்றத்தில் தலையைக் குனிந்தபடியே உரைத்தவள் அதற்குமேல் அவளின் அறைக்குள் திரும்பிவிட்டாள்.

***