இளைப்பாற இதயம் தா!-20இ

இளைப்பாற இதயம் தா!-20இ

இளைப்பாற இதயம் தா!-20C

கணவனின் மீதான அன்பு ஊற்றெடுத்து பிரவாகமாக வழியும் வேளையில்… அந்த எண்ணத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டவள், ‘இதை நம்பி இவ்ளோ காலம் வீணாப் போனது போதும்’ எனும் முடிவோடு, ரீகனை இங்கிருந்து எப்படி அப்புறப்படுத்துவது எனும் யோசனையோடு தாயின் அறையை நோக்கி நடக்கத் துவங்கினாள் ஐடா.

பயமென்பதெல்லாம் இதுவரை ரீகனுக்கு என்னவென்றே தெரியாது என வளர்ந்திருந்தவனுக்கு, எதிர்காலத்தை எண்ணிய பயத்தை ஐடா தனது விவாகரத்து எனும் பேச்சின் மூலம் முதன் முறையாக விதைத்திருந்தாள்.

அந்த நிலைக்கு அவள் சென்றுவிடக்கூடாதே என்பதில் தெளிவாக இருந்தவன் அவளைக் கண்காணிப்பதை வாடிக்கையாக்கி, அவளின் தேவையை உணர்ந்து அவள் கூறாமலேயே செயல்படத் துவங்கியிருந்தான்.

அறைக்குத் திரும்பியபோது வேறு அட்டெண்டர் இருந்தார்.

மாலையில் கண்விழித்த ஸ்டெல்லா மகளின் தெளிவான முகத்தைக் கண்டு மகிழ்ந்தாலும், இது எதனால் என்பது புரியாதபோதும் மனதிற்குள் மகளின் தற்போதைய நிலையை எண்ணிய வருத்தமும் தோன்ற அப்படியே பார்த்தபடி படுத்திருந்தார்.

‘வயிற்றுப் பிள்ளையோட என்னையும் பாத்துட்டு ரொம்ப கஷ்டப்படுறா.  கர்த்தாவே… என் பிள்ளைக்கு பெரும் பாரத்தை நான் கொடுத்திராத வகையில எனக்கு உடல்நிலையில முன்னேற்றத்தைக் கொடு.  இல்லையா… உனக்குள்ள நித்திரையடையும்படி செய்திடு’ எனும் வேண்டுதலை மனதிற்குள் வைத்தபடி, “அய்தா… ப்பைபிலு க்கொன்ச்சம் வ்வாஆசிக்கிதியா…” என்று பைபிளை வாசிக்கும்படி மெல்லிய ஆனால் தெளிவற்ற குரலில் மகளிடம் கேட்டார்.

தாயின் பேச்சு முதலில் அதிகம் குழறியபோது புரியாமல் விழித்தவளுக்கு, தற்போது உண்டான சிறு முன்னேற்றத்தில் புரிந்துகொள்ளத் துவங்கியிருந்தாள் ஐடா.

தாயின் பேச்சைக் கேட்டு உடனே பைபிளோடு தாயின் அருகே அமர்ந்து வாசிக்க… கண்களை முடியபடி கேட்டுக்கொண்டு படுத்திருந்தார் ஸ்டெல்லா.

அந்நேரம் அறைக்குள் நுழைந்திட்ட ரீகனைப் பார்த்ததும் திரும்பி நோக்கி வாசிப்பை தேக்கிவிட்டு தொடர்ந்த மகளின் இடையூறுக்கான காரணத்தை அறிய எண்ணி கண்ணைத் திறந்தார் ஸ்டெல்லா.

ஸ்டெல்லாவிற்கு ரீகனைப் பார்த்ததுமே மகளின் முகத்தில் தோன்றிய மாறுதலுக்கான காரணம் விளங்கிற்று.

‘மகள் மருமகனை நேசிப்பதன் அளவு அவளின் விரக்தியான நிலையிலும் புரிந்திட… அதுவரை வாயிலில் நின்ற ரீகனை வரவேற்கத் தயங்கிய மனது தாமதமாக அனிச்சையாக தலையை அசைத்து, “வ்வாங்ங்கப்ப்பாஆஆ” என்று மெல்லிய குரலில் அழைத்தார்.

என்ன தோன்றியதோ ஐடாவிற்கு.  அட்டெண்டரை அழைத்து, “இந்த மெடிசன் எல்லாம் வாங்கணும்” என்று மருத்துவர் கொடுத்துச் சென்றிருந்த ஸ்லிப்பை அவரிடம் கொடுத்து அனுப்பியிருந்தாள்.

ஸ்டெல்லாவின் வார்த்தையைக் கேட்கும்வரை வாயிலருகிலேயே நின்று தாமதித்தவன் அவரின் வரவேற்பில் தைரியம் வரப்பெற்றவனாக அவரின் படுக்கை அருகே வந்து, “ஆண்ட்டி…” என்று அவரின் இரு கரங்களையும் ஆதரவாகப் பற்றியபடி, “எல்லாம் சரியாரும்.  நீங்க பழையபடி வந்திருவீங்க!”

“ம்ஹ்ம்” எனும் ஒலியெழுப்பி அவனது பேச்சை ஆமோதிப்பதாக தலையைய லேசாக அசைத்தார். சற்று நேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தவன் தலையைக் குனிந்தபடியே, “நடந்தது எதையும் நான் நியாயப்படுத்தலை.  அது தப்புதான்.  ஆனா அது மேரேஜ்கு முன்ன…” என்றபடியே ஸ்டெல்லாவின் முகத்தைப் பார்த்து,

“இனி அப்படியெல்லாம் நடக்காதுன்னு உறுதி தர முடியும் என்னால!  நீங்க ஐடாவை நினைச்சு வருத்தப்படாதீங்க!  எப்பவும் அவளை எதற்காகவும் விட்டுத்தர மாட்டேன்!” என்று கூறியவன்,

“அவளுக்கு எம்மேல இருக்கற கோபம் நியாயந்தான். அதை தப்பு சொல்ல முடியாது.  அவ சரியாகி வரவரை நான் வெயிட் பண்ணுவேன்” என்றுவிட்டு,

“எனக்காக நீங்க ஒன்னே ஒன்னு செய்யணும்” என்று நிறுத்தியவன்,

 “அவளோட ஹெல்த்தையும் கன்சிடர் பண்ணணும்னு அவகிட்ட நீங்கதான் சொல்லணும் ஆண்ட்டி.  ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க.  நான் இருக்கறேன்.  எல்லாம் பார்த்துக்கறேன்” என்றான்.

உடல் நோவோடு அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு இதுபோன்ற ஆறுதல் வார்த்தைகள் அவர்களின் நிலையை மேம்படுத்துமல்லவா!

மகளின் ஒதுக்கம், அதை கண்டுகொள்ளாது மருமகனின் சேவைகள் அனைத்தையும் அடுத்து வந்த நாள்களில் கண்கூடாகக் கண்டபடியே மனதில் முன்பிருந்த அழுத்தம் குறைந்து நல்ல முன்னேற்றம் ஸ்டெல்லாவின் உடல்நிலையில் உண்டானது.

வந்த அன்றே மாமானார் இங்கில்லை என்பது ரீகனுக்குத் தெரிய வந்திட ஐடாவிடம், “அங்கிள் இல்லாம நீ ஒருத்தியாவே எப்டி சமாளிச்ச… பாட்டி பேசலைன்னா தனியாவே இருந்து கஷ்டப்பட்டிருப்ப…” என்றதற்கும் எந்த ரியாக்சனும் ஐடாவிடம் இல்லை. அதற்காக ரீகன் தனது பேச்சைக் குறைத்துக் கொண்டானில்லை.

‘நீ பேசாட்டா… எனக்கென்ன!  நான் பேசுவேன்’ என்று பேசிக்கொண்டிருந்தான் ஐடாவிடம்.

இடையிடையே இரண்டு முறை ஆல்வின் மூன்றாம் நபரைப்போல வந்து பார்த்துவிட்டு… மருமகனிடமே, “ஏன் இப்டி இவ மாறினான்னு யோசிச்சிட்டே இருந்தேன்! எல்லாம் நீங்க கொடுக்கற இடம்.  இதுக்கு முன்ன ஐடா இப்டியில்ல…!” என்று மருமகனிடமே மகளைப் பற்றிய குறையைக் கூறிவிட்டு சற்று நேரம் இருந்தவர் கிளம்பிவிட்டார்.

பதினைந்து நாள்கள் மருத்துவமனையில் இருந்தவரை அதன்பின் வீட்டிற்கு சென்றுவிட்டு வாரமிரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லும்படி கூறியதும், அங்கேயே வீடு பார்த்து வேண்டியவற்றை செய்து கொடுத்தான்.

சென்னைக்கும் கோவைக்குமாக அழைந்தான்.

விட்டேத்தியாக ஐடா, “தேவையில்லாம எதுக்கு இங்க வந்து உக்காந்துட்டு… போயி பிழைப்ப பாக்கச் சொல்லுங்கம்மா” என்று தாயிடம் கூறினாளே அன்றி ரீகனிடம் பேசுவதில்லை.

ரீகன் சிலவற்றை ஸ்டெல்லாவிடம் கூறிச் சொல்லச் செய்தான் ஐடாவிடம்.  பெரும்பாலும் அவளிடம் பேசிவிடுவதையே வாடிக்கையாக்கியிருந்தான்.

ஐடாவிற்கு கணவன் மீது தற்போது சந்தேகம் வலுத்திருந்தமையால் ஒவ்வொரு நிலையிலும் கணவனைக் கண்காணித்தாள் அவனறியாமல்.  ஆனால் அவன் யாருமறியாமல் அனைவரையும் குறிப்பாக பெண்களை அளவெடுப்பதில் வல்லவன் என்பது அவளுக்கு மட்டுமல்லாது யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது பழகிவிட்டது ரீகனுக்கு.  அதனால் சட்டென்று மாற்றிக்கொள்ள முடியாது அவனால்.

அடுத்து பதினைந்து நாள்கள் சென்றிருந்தது.

ஐடாவிற்கு எட்டு மாதம்!  ஐடா மிகவும் சிரமப்பட்டாள்.

ஒரு மாதத்தில் ஸ்டெல்லாவின் உடலில் நல்ல முன்னேற்றம்.  வேலைக்கு ஒரேடியாக விடுப்பு எடுக்க முடியாத நிலை.  தாயோடு தேவகோட்டைக்குச் செல்ல விரும்பாதவள், சென்னையில் தரகரிடம் சொல்லி தனி வீடு பார்க்கும்படி கூறினாள்.

இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அலுவலகத்திற்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் ஐடாவிற்கு.

ஐடாவிற்கு வேண்டியவற்றைச் செய்ய ரீகன் இருந்தாலும் சமீப காலமாய் அவனிடம் எதையும் பெறுவதை விரும்பாமல் தனக்கு வேண்டிய அனைத்தையும் தனது சொந்தப் பணத்திலேயே பார்த்துக்கொள்ள விரும்பினாள்.

சற்று தாமதமாக ரீகனுக்கும், ஸ்டெல்லாவிற்கும் சென்னையில் ஐடா தனிவீடு பார்ப்பது பற்றி தெரியவர ஸ்டெல்லா மகளின் முடிவில் இடையுறாது அமைதியாக இருந்தார். 

ரீகன், “அவ்ளோ பெரிய வீடு நமக்கு இருக்கும்போது எதுக்கு வெளிய தங்கணும்.  அத்தை நீங்க ஐடாகிட்டச் சொல்லுங்க” என்று பஞ்சாயத்தை அவரிடம் கொண்டு செல்ல என்ன பேசியும் பலனில்லாமல் போயிருந்தது ஐடாவிடம்.

ஸ்டெல்லாவும் மகளின் முடிவே தன் முடிவு என்றுரைக்க எதுவும் செய்ய முடியாதவனாகிப் போனான் ரீகன்.

தாயோடு சென்னைக்கு வந்தவளை, சொந்த பந்தங்களோடு அலுவலக அன்பர்களும் நேரில் வந்து பார்த்துச் சென்றனர்.

சொந்தங்களுக்கு தம்பதியரிடையே ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தெரிய வரவில்லை.  அதனால் சாதாரணமான நலன் விசாரிப்பாக சந்திப்புகள் இருந்தது.

ஐடா சென்னை வந்தது முதல் அவளிருக்கும் வீட்டில் பெரும்பாலும் ரீகன் தங்குவதை வாடிக்கையாக்கி இருந்தான். இடையிடையே வேலை என்று செல்பவன் திடீரென்று இரண்டு நாள்கள் காணாமல் போய்விடுவான்.  பிறகு வருவான்.  இப்படியே நாள்கள் சென்றது.

ஸ்டெல்லாவிற்கு மருமகனின் முயற்சிகள் அனைத்தையும் மகள் முறியடிப்பதையும், மகளின் மீதுள்ள நேசத்தால் அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் மருமகனையும் பார்க்கும் போது சற்று நிம்மதி.

அதை மகளிடமும் ஒரு சந்தர்ப்பத்தில், “அந்தப் பையன் ஏற்கனவே வேற மாதிரி இருந்திருக்கு.  நல்லா இருக்கறவனே பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னா வேற இடத்தைத் தேடிப் போயிற காலமிது.  நீ என்ன யோசிச்சு… அந்தப் பையனை இந்த விரட்டு விரட்டுறன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்பதை திக்கித் திணறி கேட்டிருந்தார் மகளிடம்.

“மண் பாண்டம் மாதிரி உடைஞ்ச மனசை என்னால ஒட்ட வைக்க முடியும்னு தோணலைம்மா” என்று அழுது கரைந்தவளிடம்,

“என்ன செய்யப் போறதா இருக்க?”

“டெலிவரிக்குப் பின்ன யோசிக்கலாம்னு இருக்கேன்”

“டெலிவரிக்கு ஆளு தேவைப்படும்.  என்னால உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.  இப்படி இருக்கும்போது அவங்களையும் விரட்டினா யாரு உன்னைப் பாக்கறது ஐடா”

“அதுக்காக… எல்லாத்தையும் மறந்துட்டு இருக்கச் சொல்றீங்களா?” என்று தாயிடமே சீறினாள்.

“அப்டியெல்லாம் உடனே இருக்க முடியாது.  ஆனா… காலம் போகப் போக எல்லாம் மாறும்.  அதனால உன்னோட வெறுப்பை ரொம்பக் காட்டாத… முடிஞ்சவரை அமைதியாப் பேசு!”

“எப்டிம்மா…!” என்ற மகளிடம்,

“நீ வேணானு போனா… அந்தப் பையனுக்கு அடுத்து பொண்ணு தர ஆயிரம் பேரும்மா… அப்டியிருந்தும் உன்னையே சுத்தி வந்து மன்னிப்புன்னு நிக்கற புள்ளைய ரொம்பவும் உதாசீனப்படுத்தாத…  வார்த்தைகளை விடாத…” என்று ஸ்டெல்லாவும் மகளிடம் எடுத்துரைத்தார்.

ஸ்டெல்லாவைப் பார்க்க வருவதாக ரீகனது குடும்பம் வந்தபோது, அவனது மாமன் குடும்பமும் சேர்ந்து வந்திருந்தது.  அப்போது அவன் மாமன் மகள் யாமினியும் உடன் வந்திருக்க, அவள் ரீகனை நெருங்கி நின்று ஒட்டி உரசியபடி பேசுவதைக் கண்டு உடலெங்கும் தீ பற்றியது போன்றிருந்தது ஐடாவிற்கு.

அவளால் அந்தக் காட்சியை அத்தனை எளிதில் கடக்க முடியவில்லை.  ரீகன் தள்ளி நின்றாலும் அவன் மீது விழாத குறையாக விழுந்து விழுந்து பேசியவளை கண்ணகியாக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே எரித்திருப்பாள்.

மனைவியின் நிலை உணர்ந்து உடனே யாமினியை அங்கிருந்து அப்புறப்படுத்திடும் முயற்சியில் இறங்கியிருந்தான் ரீகன்.  ஆனால் சமயம் கிட்டும்போது ரீகனை என்ன செய்தால் தனது ஆத்திரம் அடங்கும் என்று யோசித்து எரிமலையாய் மாறியிருந்தாள் ஐடா.

“சர்ச்சிலேயே தோளுல அவளைத்தான தொங்கவிட்டுக் கூட்டிட்டு வந்தீங்க… எனக்கு அப்பவே தெரியல… தெரிஞ்சிருந்தா… அன்னைக்கே உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு போயிருக்கலாம்” என்று துவங்கியவள் அடுத்து என்ன பேசுவாள் என்பது ரீகனுக்குப் புரிய, தாமதிக்காமல் உடனே கிளம்பிவிட்டான்.

இப்படி கிளப்பினால் மட்டுமே அங்கிருந்து ரீகனை அகற்ற முடியும் ஐடாவால்.  இல்லையெனில் ஐடாவிற்கு உதவுகிறேன் பேர்வழி எனும்பெயரில், அவளோடு ஈஷிக்கொண்டும், அவளின் கைவிரலைத் தொட்டும் அமர்ந்திருந்தாள் அவளின் பின்பக்கமாக நின்றபடி எதையேனும் எடுக்கிறேன் என்று அவளை அணைப்பதுமே ஐடாவை எரிச்சல்படுத்திவிட்டுத்தான் ஓய்வான் ரீகன்.

இது அனைத்துமே நன்றாக இருவருக்கிடையே உறவு இருந்த காலங்களில் ரசிக்கத்தக்கதாக ஐடாவிற்கு இருந்தது.  ஆனால் அதுவே தற்போது வெறுப்பாக மாறியிருந்தது.

ஐடாவின் வார்த்தைக் கேடயத்தைக் கேட்க நேர்ந்ததும் அங்கிருந்து சென்றவன் அடுத்தடுத்து அலுவலகப் பணிகளும் இழுத்துக்கொள்ள அடுத்து வந்த இரண்டு தினங்கள் வந்து தலையைக் காட்டுவதோடு சரி என்று வந்ததும் கிளம்பிச் சென்றிருந்தான்.

ஐடா அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு அஸ்வினால் தொந்திரவு துவங்கியிருந்தது.

“என்ன ஐடா?  எதுவும் பிரச்சனையா?” என்று ஒரிருமுறை கேட்டவன்,

“உனக்கு என்ன இஸ்யூனாலும் எங்கிட்ட சொல்லு ஐடா.  நானிருக்கேன்.  யாருமில்லைனு எல்லாத்தையும் நீ சகிச்சிக்கிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.  எப்டி இருந்தவ நீ.  இப்போ உன்னைப் பாக்கும்போது கஷ்டமா இருக்கு!” என்று வழிய வந்து பேசியவனை விரட்டி அடிக்காத குறையாகப் பேசினாலும் எதையும் உணராதவன்போல மீண்டும் மீண்டும் வந்து பேசி ஐடாவைத் தொந்திரவு செய்தான்.

“அம்மாவுக்கு முடியலை.  வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை!” என்றவளிடம்,

“எனக்குத் தெரியக்கூடாதுங்கறதுக்காக நீ சமாளிக்காத ஐடா.  எனக்கு எல்லாம் தெரியும்!” என்றவனிடம் அதற்குமேல் நின்று பேச ஐடாவால் முடியவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில், “உங்கிட்ட பல முறை நான் சொல்லியும் நீ நம்பலை.  இப்ப உனக்கே ரீகன் பத்தின விசயம் தெரிய வந்ததும் என்ன செய்யறதுன்னு பயப்படாத!  உனக்கு எல்லாமா நான் இருக்கேன்!” என்று ஆறுதல் கூறுவதுபோல பேசியவன் மீது அத்தனை வெறுப்பு ஐடாவிற்கு.

மாலையில் ஐடா வீடு திரும்பியதுமே உதவுகிறேன் பேர்வழி என்று அவளின் வீட்டிற்கே வந்தவனை வெளியேற்றும் வழி தெரியாமல், ரீகன் தற்போது வந்தால் நன்றாக இருக்குமே என்று விரட்டிய கணவனையே எதிர்நோக்கி இருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தாள் ஐடா.

ஸ்டெல்லாவிற்கு மகளின் கஷ்டங்கள் புரிந்தாலும் அவரால் சமாளிக்க முடியாத நிலை!

ஐடா ரீகனை அழைக்க மாட்டாள் என்பது தெரிந்ததால், ஸ்டெல்லாவே ரீகனுக்கு அழைத்திருந்தார். எதிரில் எடுத்தவன் ஹலோ ஹலோ என்று கேட்க… எதுவும் மருமகனிடம் பேசாமல் அப்படியே போனை வைத்துவிட்டு அமைதி காத்தார் ஸ்டெல்லா.

சற்று நேரம் ஹலோ ஹலோ என்று கேட்டவனுக்கு ஐடாவிடம் அஸ்வின் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்ததா?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!