இளைப்பாற இதயம் தா!-21A
ரீகன் தனது தொழில் விசயமாக சென்ற வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தான். செல்லும்போது இருந்த தொழில் சார்ந்த நினைவுகள் வந்த வேலை முடிந்ததும் மாறியிருந்தது. ஆம் தற்போது மனைவியின் நினைப்பு. தொழில் சார்ந்த பேச்சின்போதுதான் இரண்டரை மாதங்களுக்கு முன் சென்றிருந்த திருமண நாளைப் பற்றிய நினைப்பு வந்தது.
‘லாஸ்ட் இயர் போட்ட அக்ரிமெண்ட் முடிஞ்சு மூனு மாசமாச்சு’ என்று அங்கு சொல்லிய பிறகு அதை எடுத்து தேதி பார்த்த போதுதான் அது அவன் திருமணத்திற்கு முந்திய மாதம் போடப்பட்ட அக்ரிமெண்ட் என்பது நினைப்பு வந்தது ரீகனுக்கு.
தான் மறந்துபோன என்பதைவிட தங்களின் முதல் திருமண நாளை மறந்துபோகும் நிலைக்கு காரணமாகிப் போயிருந்த விசயங்கள் நினைப்பு வந்ததும் மனைவியின் நினைப்பும் சேர்ந்து வந்திருந்தது.
யாருக்கும் இப்படியொரு முதல் திருமணநாள் வந்திருக்க வேண்டாமென்று ரீகனது மனத்திலுமே வந்த போனது. எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென்று இருவரும் நினைத்திருந்தது எல்லாம் நினைப்பில் வந்து வருத்தியது.
பெண்கள் இதுபோன்ற முக்கிய தினங்களை நினைவில் வைத்திருப்பதையும், ஆண்கள் மறந்து போய்விட்டு வீட்டுப் பெண்களிடம் குட்டு வாங்குவதையும் வீட்டில் கண்டிருக்கிறான்.
ஆனால் இன்று எல்லாமே மாறிப் போயிருப்பதை எண்ணும்போது ஏதோ கலக்கம் எட்டிப்பார்த்தது.
தன்னைவிட்டு ஐடா சென்று விடுவாளோ என்று எண்ணுவதையே நினைக்க மறுத்தவன்,
விழிமூடும் போதும்
உன்னை பிரியாமல்
நான் இருப்பேன் கனவுக்குள்
காவல் இருப்பேன்
நான் என்றால்
நானே இல்லை நீ தானே
நானாய் ஆனேன் நீ அழுதால்
நான் துடிப்பேன் எனும் முத்துகுமாரின் வார்த்தைகள் ஹரிசரணின் ஒலியில் சுழன்று வர சுற்றத்தை கவனித்தபடியே வந்தான். காதல் எனும் வார்த்தையில் இதுகாலம்வரை அத்தனை நம்பிக்கை இல்லாதவன். பிறர் இதுபோன்ற பாடல்களைக் கேட்டபோதும், காதல் வலையில் விழுந்து பிதற்றியபோதும் அவர்களைப் பித்தனாகப் பார்த்தவன் இன்று அவனே அதுபோன்றதொரு நிலையில் இருப்பதை எண்ணி சிரிப்பு வந்தது. ஆனால் அது உதடுகளை எட்டவில்லை.
வந்துகொண்டிருந்தவனின் பார்வையில் பட்டது OYO. On Your Own Room என்பதே அதன் விரிவாக்கம்!
ஏறத்தாழ இரண்டு மாதங்களாக இடுப்புக்கு கீழே இருக்கும் அவஸ்தை அந்தப் பெயர்ப் பலகையுடன் கூடிய கட்டிடத்தைப் பார்த்ததும் சட்டென்று கூடிப்போனாற் போன்றதொரு நிலை.
கூடலின் ஸ்வரம் உணர்வுகளுக்குள் அவஸ்தையாய் கூடிப்போக… ஐடாவின் அருகாமைக்குத் தவித்த ரீகனுக்கு தாங்கவொண்ணா பெரும் வேதனையாய்த் தோன்றிட வண்டியின் வேகம் அவனை அறியாமலேயே படிப்படியாகக் குறைந்தது.
ஐடாவைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்புவரை அவன் மோக தாகம் தீர்த்து வைக்கும் சொர்க்கபுரியாக இருந்த இடம் அது!
ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிந்த மனிதனுக்குள் சில இயற்கை உபாதைகளைக் கட்டுக்குள் வைக்கும் வித்தை தெரியாமல்தான் பாதை மாறி பயணிக்கும் நிலைக்கு மாறிப் போகிறான்.
வண்டியை பார்க் செய்ய மனம் உந்த, மனைவியின் நினைப்பும் வந்து ஒரு முடிவுக்கு வர முடியாமல்… சில மணித்துளி நேர போராட்டம் அவனுக்குள்!
ஐடாவைப் பார்த்தால் அவளோடு இருக்க, நேரம் செலவளிக்க மனம் விழையும். ஆனால் அது தற்போது நடக்க வாய்ப்பில்லையே! கண்டிப்பாக இன்று அவளின் தரிசனம் தனக்கு அவசியம் என்பதும் புரிய… அவளை வற்புறுத்தி தனதாக்கிக்கொள்ள பிரியமில்லாதவன், உணர்வுக் கொந்தளிப்பின் இயற்கை உபாதையை கழித்துவிட்டு மனைவியை சென்று காணும் நிலைக்கு மனதால் மனதிற்குள் ஒப்பந்தம் செய்துவிட்டான்.
செயலின் வீரியம் என்னவென்பது இன்னும் புரியாத நிலையில், தனக்குத் தேவையாகத் தோன்றுவதால் தேவையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு மட்டுமே மீந்திருந்தது.
இப்படி ஒரு விசயம் மனைவிக்கு எத்தனை துன்பத்தையும், தாங்கவொண்ணாத மன உளைச்சலையும் தரும் என்பதை நிச்சயமாக எந்த ஒரு ஆண் மகனாலும் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்ட விசயத்தை செய்யும் வேட்கையோடுதான் ரீகனும் தற்போது இருந்தான்.
இங்கு தவிர்த்தால், மனைவியைத் தவிர்க்க முடியாமல் அவளைத் தான் கட்டாயப்படுத்தி தவிக்க விடும் நிலைக்குச் செல்லும் அபாயம் வேறு அவனை எச்சரித்தது.
பல தனக்குச் சாதகமான சால்ஜாப்புகள் தோன்றி உடலின் வேட்கைக்கு அவனை அடிமையாக மாறச் செய்திருந்தது.
வேண்டாமென்றும், வேண்டுமென்றும் மாறி மாறி அலைக்கழித்த மனம்… இறுதியில் வேண்டுமென்று முடிவு செய்துவிட்டது.
காமம் என்ற ஒன்று மனதில் சிறு பொறியாக இருந்து சுடர்விட்டு எரியத் துவங்கிவிட்டால் ஆண்கள் மோக தர்மத்தைப் பற்றி சிந்திப்பதேயில்லை!
நீண்ட மாதங்களுக்குப்பின் என்று சொல்வதைவிட ஏறத்தாழ ஓராண்டிற்குப்பின் அந்த எண்ணை எடுத்து அழைக்கிறான். சட்டென முதல் ரிங்க்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டது.
இந்தத் தொழிலில் இருப்பவர்களின் தொழில் பக்தி அது!
ஒரு நொடி தாமதித்தாலும் வருமானம் போய்விடுமே. அத்தனை பொறுமை எந்த ஆண்மகனுக்கும் இல்லை. அடுத்து அதே எண்ணுக்கு அழைத்து பொறுமையாக வேண்டியதைப் பேசி தேவையை பெற்றுக்கொள்ள முடியாத அவசரம்.
காம தர்மனின் அடிமையானவன் எழையென்றால் அது அவன் பார்வையில் தெரிந்துவிடும். எதிர்பாலினத்தை பார்வையாலேயே துகிலுரிந்து, விழியாலேயே கற்பைக் களவாடும் வக்கிர நிலையில்… வேறு வழி அவனுக்கில்லை! சாபம்!
பணம் இருப்பவனுக்கு தோன்றும் நேரங்களில் பாரத்தை இறக்கிவிடுதால் இலேசாகி விடுகிறான். மனம் அவன் கட்டுக்குள் இருக்கும். அது அவன் பார்வையில் விகாரமாகத் தெரிய வருவதில்லை.
தாமதத்தை பொறுத்துக்கொண்டு போக முடியாத வேதனை வந்தவனுக்கு. பைத்திய நிலை! அது முற்றி கட்டுப்பாட்டை இழக்கும் முன் அடுத்த தரகருக்கு அழைத்து… வந்த வேலையை முடித்ததும் காற்றாகப் பறக்கும் வேகம் அவனுக்கு!
அதுவரை சுற்றம் மறந்திருந்தவனுக்கு பாரம் இறங்கியதும் தன்னிலை நினைவில் வந்திட… மானம், மரியாதை, புகழ் என்று பலதும் முன்மண்டைக்குள் ஏறி யாருமறியாமல் அங்கிருந்து ஓடச் செய்திடும்!
பிறர் காணாதவரை ஓடிய ஓட்டம் முதல்முறை தயக்கத்தையும், அவமானத்தையும் பிறரை எதிர்கொள்ளும்ம்போது அசிங்கமானதாகவும் தோன்றியது நாட்பட சாதாரண நிகழ்வாக மாறிப்போகும் அவலம்.
ரீகன் இரண்டாவது நிலையில் இருந்தான். பணமிருக்கிறது. உடனிருக்க மனையாள் இசையவில்லை. அவள் உடனிராத இரவுகளை தவிப்போடும், தனிமையோடும் கழிக்கிறான். ஆனால் இதுவரை அதற்கென மெனக்கெட்டு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள எண்ணாமல் இருந்தவனுக்கு சூழ்நிலை அதுவாக அமைய அவன் திட்டமிடாமலேயே வந்து நிற்கிறான்.
பயன்படுத்திக்கொள்ளாது போனால் அவனை அவனாலேயே மன்னிக்க முடியாது! அப்படியொரு அவசர நிலை ரீகனுக்கு.
அழைப்பை ஏற்றவன், “சார்… ரொம்ப நாளாச்சே சார்! வெளியூறு எங்காச்சும் போயிட்டீங்களா?”
அவன் கேட்பதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும். அவனுக்கு வேண்டியதைக் கேட்டான். “எவ்ளோ நேரம் வயிட் பண்ணணும்”
“இதோ… பாத்துட்டு ஒன்மினிட்ல லைன்ல வரேன் சார்!” பவ்வியமாக உரைத்தவன் ரீகனது டேஸ்ட் தெரியுமென்பதால் மண்டைக்குள் எழுந்த பலரை ஓரங்கட்டிவிட்டு,
‘இது வேணா… அதுஉஉ… ம்… வேணா… ஃப்ரெஷ் பீஸ்னா கூடக் காசு தருவாறு… இப்ப ஆரு புதுசா வந்தது…’ இப்படி மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்க, ரீகன் பேசியை வைக்கும் முன்பே ரீகனுக்கான புது கிளியைத் தேர்வு செய்திருந்தான் தரகன்.
“ம்ஹ்ம்… சீக்கிரம்!” என்றவன் வைத்ததும், தரகன் ரீகனுக்காக OYO ஆப்பைப் பயன்படுத்தி அவனுக்கான சூட்டை புக் செய்து முடிக்க முனையயில் வண்டியை பார்க் செய்ய வேண்டி அதனை அங்கிருந்த செக்யூரிட்டியின் வசம் ஒப்படைக்க இறங்க நினைக்கையில் ஐடாவின் தாயிடமிருந்து ரீகனுக்கு அழைப்பு.
‘இந்நேரத்தில… யாரு?’ என நினைத்தபடியே பேசியை எடுத்து திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்வையிட்டான்.
அதுவரை இருந்த உணர்வு சட்டென வடிய முகம் சுருங்க, ‘எதுக்கு ஆண்ட்டி கால் பண்றாங்க…’ எனும் நினைப்போடு அழைப்பை ஏற்று ஹலோ… ஹலோ என்க… எதிர்முனையில் பேச்சில்லை.
‘ஒரு வேளை ஐடாவுக்கு எதுவும் பிரச்சனையா?’ என்றெல்லாம் மனதில் ஓடியது.
செக்யூரிட்டி இவனுக்காக காத்திருக்க, செய்கையால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றபடியே மீண்டும் ஹலோ என்றான். தவறாக அழைத்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றவில்லை. அடிக்கடி தனக்கு அழைத்திராதவர். தற்போது அழைக்கிறார் என்றால் அதனை சாதாரணமாக அவனால் கடக்கமுடியவில்லை.
சில மணித்துளிகள் எந்த பதிலும் இன்றிப்போக கடுப்பாகி காதுக்கு கொடுத்திருந்ததை எடுத்து கண்ணுற்றான். அழைப்பு துண்டிக்கப்படவில்லை. ஒருவேளை ஹோல்டில் உள்ளதோ என்று நினைத்தபடியே மீண்டும் காதுக்குக் குடுக்க அங்கு பேசும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஸ்டெல்லா அல்ல. ஒரு ஆணின் பேச்சு சத்தம்.
கட் செய்துவிடப் போனவன், “ஐ மிஸ் யூ லாட் ஐடா!” என்ற குரலைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்துப்போன உணர்வில் மிச்சமிருந்த அவனின் கூடலின் உணர்வுகள் மொத்தமாக மரித்துப் போயிருந்தது.
இந்தக் குரல்… குரல்… உள்ளம் பதைபதைக்க யோசித்தவனுக்கு எங்கோ கேட்ட நினைவு.
‘இப்டியெல்லாம் எங்கிட்ட பேசறதா இருந்தா இங்க இருந்து கிளம்புங்க முதல்ல!’ எனும் ஐடாவின் ஆணித்தரமான வார்த்தை அடுத்து வந்தது.
‘கூல் ஐடா! உன்னை நினைச்சிட்டுத்தான் நான் இன்னும் காத்திருக்கேன்.’ என்பதை ஆங்கிலத்தில் உரைத்தான் அவன்.
‘நான் மிசஸ் ராபர்ட் ரீகன்ங்கிறது உங்களுக்கு மறந்து போச்சா!’ அங்கிருந்து அனலாக வந்த ஐடாவின் குரலை இங்கு ரீகனுமே உணர்ந்தான்.
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு எங்கிட்ட சொல்லு ஐடா…!’
‘எதைவச்சி பிரச்சனைனு நீங்களா ஒரு முடிவுக்கு வந்தீங்க’ பெண் புலியாக ஐடாவின் சீறல். குறைந்த குரலாக இருந்தாலும் அவளின் கோபம் ரீகனுக்குப் புரிந்தது.
ஆனால் ஐடாவுடன் பேசுவது… யார்? ஊன்றிக் கவனித்தவனுக்கு, ‘இது அஸ்வின் வாய்ஸ் மாதிரி இருக்கு… இவன் இப்ப அங்க எப்டி’ என்று யோசித்தபடியே… மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தவன் அழைப்பைத் துண்டிக்காமலேயே ஹோல்டில் வைத்து வயிட்டிங்கில் இருந்த தரகனின் காலை அட்டெண்ட் செய்தான்.
இனி எப்போதுமே இது போன்றதொரு இடத்தில் தனக்கு வேலை இராது என்பதை சற்று முன் தோன்றிய இதயம் பிளந்துபோய் மனம் சோர்ந்து நா வரண்டுபோக உணர்ந்தவன் தெளிவாக “வேணாம்!”
“ஏன்… சார்? எல்லாம் பக்காவா ரெடியாயிருச்சு சார்!” பதறினான் லைனில் வந்தவன். வந்த வருவாயை தக்க வைத்துக்கொள்ள முடியாத பதற்றம் அவனுக்கு.
“உனக்கு வரவேண்டியதை அனுப்பிடறேன்!” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அஸ்வின், ஐடா உரையாடலைக் கேட்டபடியே அசுர வேகத்தில் வீட்டை நோக்கி வண்டியை கிளப்பினான்.
அஸ்வின் பேச்சின் சாரம் ரீகனுக்குள் கொலைவெறியை உண்டு செய்தது. தனக்கான ஒன்றை நைச்சியமாகப் பேசி அவன் வசப்படுத்த நினைப்பவனை வெட்டி எறிந்தால்கூட ரீகனுக்கு கோபம் குறையாது என்று தோன்றியது.
அத்தனை கோபம் அஸ்வின் மீது. ஐடா மீது அதற்குமேல். ‘வீட்டுக்குள்ள வந்து ஒரு பேடிப் பய… இவ்ளோ பேசிட்டிருக்கான். இவ பேச்சை அவன் ஒரு பொருட்டாவே எடுக்கலைன்னு தெரியுது. அப்ப இவ என்ன செய்யணும். காலுல கிடைக்கிறதையோ, இல்லை கைக்கு கிடைக்கறதையோ எடுத்து நாலு சாத்து சாத்தின அங்க நிப்பானா!’ என உள்ளுக்குள் குமுறியபடி வந்தவனுக்கு,
தன்னை ஐடா முறைத்தது தன்னை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தும் வகையில் கோபமேற்படுத்தும் வகையில் பேசுவது எல்லாம் நினைப்பில் வர, “இந்த லெட்சணத்துல கட்டுனவனை கண்ணுல காண விடாம நாய விரட்டற மாதிரி விரட்ட மட்டும் தெரிஞ்சி வச்சிருக்கா!’ உள்ளுக்குள் பொறுமியபடியே கண்மண் தெரியாத வேகத்தில் வந்தான்.
வரும் வழியில் அஸ்வினின் பேச்சைக்கொண்டு ரீகனுக்கு எளிதாக ஒரு முடிவுக்கு வர முடிந்திருந்தது.
தங்களின் திருமணத்திற்கு முன்பே ஐடாவை அவன் எச்சரித்திருந்தது எல்லாம் அஸ்வினின் பேச்சின் மூலம் தெரிய வந்திருந்தது. ஆனால் ரீகனுக்கு ஐடாவுடனான சந்திப்பின்போது இருவரும் ஒருவரையொருவர் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் கடந்ததுமே நினைப்பில் வந்து போனது.
அஸ்வின், ‘ரீகன் பத்தி உனக்கு தெரிய வந்ததால நீங்க பிரிஞ்சிட்டதா…’ என்று அவன் துவங்கியதுமே, ‘ம்ஹ்ம்… ரீகன் பத்தி என்னது!’
‘தெரியாத மாதிரி கேக்காத ஐடா’
‘நீங்க என்ன சொல்ல வரீங்கனு பிராமிஸா தெரியலை’ இது ஐடா.
ரீகனது பெண் சினேகம் பற்றியெல்லாம் மேலோட்டமாக அஸ்வின் கூற, சற்று நேரம் பொறுமையாகக் கேட்டவள், ‘ஓஹ் அதுவா’ என்று ஐடா சாதாரணமாகக் கேட்டது ரீகனுக்கே சங்கடமாக இருந்தது.
‘என்ன ஐடா… எவ்ளோ பெரிய விசயம் அது. இப்படி சாதாரணமாக் கேக்கற’ அஸ்வின்
‘இப்ப அதுக்கென்ன?’ என்று அஸ்வினிடம் கேட்ட மனைவியை ரீகனுக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அஸ்வின் விடாமல், ‘அது தெரிஞ்சு உனக்கு அவன் மேல வெறுப்பு வந்து பிரிஞ்சிட்டனு…’
‘அப்டி நான் யாருகிட்டயும் சொல்லலையே’ இப்படி ஐடா பேசியதைக் கேட்டவனுக்கு நேரில் தன்னை விரட்டியடிப்பதும், அஸ்வினிடம் அது பெரிய விசயமா என்று முன்னுக்குப்பின் முரணாக பேசுவதும் எதனால் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ரீகன் வீட்டை அடைவதற்குள் பல விசயங்கள் தெரிய வந்திருந்தது.
ஐடா மீது அஸ்வினுக்கு ஒரு தலைக் காதலாக இருந்திருக்கலாம் என்பது வரை தீர்மானமாகத் தெரிய வந்தாலும், அதனை ரீகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கைப்பொருள் ஒன்று கைவிட்டுப் போய் விடுமோ எனும் புரிதலில்லாத மனவேதனை புதிதாய் அவனுக்குள் முளைத்திருந்தது. தாள முடியாமல் நெஞ்சில் பாரம்.
‘யாரு பொண்டாட்டிக்கு வந்து யாரு ஆறுதல் சொல்றது… இவனை ஆரு இங்க கூப்பிட்டா… வர கோவத்துல நேருல பாத்ததும் நெஞ்சிலயே ஏறி நாலு மிதி விடணும்போல இருக்கு’ பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பியபடி அவன் வேதனையை குறைக்க முயன்று தோற்றான்.
அஸ்வின், ஐடாவின் தாய் ஸ்டெல்லாவின் இயலாமையைப் பயன்படுத்திக்கொண்டு அவனாகவே ஐடா மீது உரிமை எடுத்துக்கொள்ள முயலும் தன்மை வெட்ட வெளிச்சமாக அவனது பேச்சில் ரீகனால் உணர முடிந்தது.
ஐடா அஸ்வினிடம் பாம்பிடம் மாட்டிய கீரிபோல சீறினாலும், அவன் விடாது அவளிடம் பேசுவது புரிந்தது.
‘எப்போ வந்தான்னு தெரியலை. இவ எதுக்கு அவனை வீட்டுக்குள்ள அலவ் பண்ணணும். இப்ப இப்டி கஷ்டப்படணும். எனக்கு இவ கால் பண்றேன்னு சொன்னா… உடனே போகப் போறான். இப்டி ஆளுங்கட்ட மரியாதை என்ன வேண்டிக் கிடக்கு இவளுக்கு.
இவங்கிட்டயெல்லாம் எப்டி நடந்துக்கணும்னு தெரியாம முழிக்கற இவதான் இத்தனை நாள் என்னை கிட்டயே நெருங்கவிடலை.’ அவளோட மனநிலை புரிய முடியாமல்… அஸ்வினிடம் அவளின் பேச்சைக்கேட்ட கோபத்தோடு, ஆனால் அங்கிருந்து உடனே அஸ்வினை அகற்றிவிடும் வெறியோடு வந்தவன் எப்படி எவ்வளவு வேகத்தில் வீட்டிற்கு வந்தான் என்பதே அவனுக்குத் தெரியாமல் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தியிருந்தான் ரீகன்.
இதே நிலையில் உள்ளே சென்றால் அஸ்வின் அவ்வளவுதான். அதனால் காருக்குள் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லும் லேப்டாப் பேக்கோடு மிதமான வேகத்தில் உள்ளே நுழைந்தான்.
ஆனால் ஐடாவிற்கு இந்த சூழலை சமாளிக்கத் தெரியவில்லை. அத்தனை பேசியும், சிடுசிடுத்தும் ஐடாவின் பின்னேயே தெரிந்தவனை… என்ன பேசி அகற்றுவது என்று புரியாமல் ரீகனை அழைக்கும் தைரியமும் இல்லாமல் உடல்நிலையும் ஓய்வுக்கு ஏங்க ஓய்ந்து போயிருந்தாள்.
அஸ்வினைப் பேசி விடலாம். ஆனால் அடுத்தடுத்து அலுவலகத்தில் அவனைத் தவிர்க்கவே முடியாத நிலையில் எப்படி அலுவலுக விசயங்களை அவனிடம் பேசுவது என்கிற தயக்கம் அவளைக் கட்டிப் போட்டிருந்தது.
சில முக்கிய விசயங்களை அஸ்வினிடமும் அலுவலகத்தில் விவாதித்துச் செயல்படுத்தும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் அவனை எப்படி எதிர்கொள்வது? இவ்வாறு நினைத்து தனக்கே கடிவாளமிட்டு அஸ்வினது முயற்சிகளை இயன்றளவு தனக்கு பாதிப்பில்லாமல் கடக்கும் முயற்சியில் இருந்தாள்.
அதுதான் அவளுக்கு இத்தகைய பிரச்சனையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பது புரிந்தாலும், சில பெண்களின் மூடத்தனம் இதுவாகவே இருக்கிறது.
கணவனது வண்டிச் சத்தம் கேட்டதும் தலையைச் சுற்றுவதுபோன்ற பிரம்மை. ‘அய்யோ… அஸ்வின் வந்ததை எங்கிட்ட ஏன் சொல்லலைன்னு ரீகன் கேட்டா… என்ன சொல்றது’ என்று பதறியது மனது. இது போன்றதொரு சூழலை எதிர்கொண்டிராதவளாதலால் பதற்றம் அவளுக்கு.
இத்தனை நாள் ஓட ஓட விரட்டிய ரீகனை அழைத்திருந்தாலும் என்னவென்று அஸ்வினை வைத்துக்கொண்டே கணவனிடம் பேசுவது என்கிற சங்கடமும் நினைப்பில் எழ, அஸ்வினை அகற்ற ரீகனை நாடியிருந்தால் அவன் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் உரிமைப் போக்கை நிச்சயம் தற்போது அவளால் அனுமதித்திருக்க முடியாது என்பதால்தான் அவனை தான் அழைக்கவில்லை என்று தனக்குள் நியாயம் கற்பித்தபடி நின்றிருந்தாள் ஐடா.
அத்தனையையும் கவனித்துக்கொண்டு தன்னால் எதையும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தோடு பேசியை அப்படியே வைத்துவிட்டு பிரார்த்தனையோடு கண்களை மூடி அறைக்குள் படுத்திருந்தார் ஸ்டெல்லா.
***