இளைப்பாற இதயம் தா!-21B
மிதவேகத்தில் உள்ளுக்குள் குமுறலை மறைத்தபடியே வந்த ரீகனை மெயின் கேட் திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த அஸ்வின் அதுவரை இருந்த மனநிலையிலிருந்து மாறி பதற்றம் தொற்றிக்கொள்ள, “ஐடா… அம்மாவை நல்லா பார்த்துக்கோ. நான் நேரம் கிடைக்கறப்போ வந்து பாக்கறேன்!” கிளம்பும் தொனிக்கு மாற, இந்த மாற்றம் ரீகனின் வருகையால் என்பது புரியாத முட்டாளல்லவே ஐடா.
இதழில் அஸ்வினின் நடத்தை கண்டு புன்முறுவல் தோன்றினாலும், ரீகனது கடுமையான முகத்தைப் பார்த்ததும் ஐடாவிற்குள் எழுந்த சிறு நிம்மதியும் குறைந்து… இதுவரை தோன்றிடாத கணவனை எதிர்கொள்ள முடியாது தயக்கம் தோன்றியிருந்தது.
‘ஏனிப்படி இருக்கார். எப்பவும் இப்படி இருக்க மாட்டாரே. இதுவரை இப்படி இருந்து நான் பார்த்ததில்லையே’ எனும் நினைப்போடு கணவனை ஏறிட்டவளை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
இதுவரை இப்படி ஒரு நிலையில் தன்னைக் கடந்திராதவன் இன்று கண்டுகொள்ளாமல் போனது நெருஞ்சில் முள்ளாய் மனதில் தைத்து ரணத்தை உண்டு செய்தது ஐடாவிற்கு.
தற்போதுதான் அஸ்வினை எதேச்சையாக சந்திப்பதுபோல, “ஹாய்… அஸ்வின்!” என்றபடியே உள்ளே வந்தவன் மனைவியின் புறம் திரும்பாமலேயே, “ஐடா… ஒரு காஃபீ!” அஸ்வினுடன் கைகுலுக்கியபடி உரைத்தவன் அவனைப் பார்த்து,
“ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்திறேன் அஸ்வின்! ப்ளீஸ் ப்பீ சிட்டவுன்!” அங்கிருந்த ஷோபாவைக் காட்டிக் கூற,
அமராமல் அப்படியே நின்றிருந்த அஸ்வினின் தோளில் தட்டி “ஏன் நின்னுட்டு இருக்க. உக்காரு. இப்ப வந்திருவேன்!” மற்றொரு அறைக்குள் சென்றுவிட்டான்.
அஸ்வினுக்கு ரீகனது இந்த உரிமையான செயல் குழப்பத்தை ஏற்படுத்த, ஆனால் அதைப்பற்றி தற்போது ஐடாவிடம் என்ன பேச முடியும் என நினைத்தவனாக, ரீகனைத் தவிர்க்க எண்ணி… தான் இப்போது கிளம்பினால் அது நன்றாக இராது என உணரப்பெற்றவனாக தர்மசங்கடமான நிலையில் அங்கிருந்த ஷோபாவின் நுனியில் அமர்ந்தான்.
தன்னைத் தவிர்க்க எண்ணியே ஐடா இதுபோன்று பேசுகிறாள் என்று இதுவரை எண்ணியிருந்த அஸ்வினுக்கு குழப்பம்.
கேசுவல் உடைக்கு மாறி வந்தவனைக் காண அஸ்வினுக்கு மேலும் அதிர்ச்சி. ‘அப்போ ஐடா ரீகனைப் பிரிஞ்சு தனி வீட்ல இருக்கறதா கொலீக் எல்லாம் பேசிக்கிட்டாங்களே’ என்று மனதிற்குள் ஓட, இதற்குமேல் தாமதிக்க முரண்டியவனாக தனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிவதை சகிக்க முடியாதவனாக, “நான் கிளம்பறேன் ரீகன்” எழ முயன்றவனை கையைப் பிடித்து அமர வைத்தவன்,
“அஸ்வினுக்கு எதாவது குடுத்தியா?” சமையல் கட்டு புறமாகப் பார்த்து ஐடாவிடம் கேட்டவன் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல்போக,
“மெய்ட் இன்னைக்கு வரலையா ஐடா… நீ வந்துதான் எல்லா வேலையும் பாத்தியா? ரொம்ப டயர்டா தெரியறே… உனக்கு முடியலைன்னா நானே ரெடி பண்ணிக்கறேன்” பேசியபடியே சமையலறைப் பக்கமாகப் போனவனைக் கண்டு தலை சுற்றியது அஸ்வினுக்கு.
ரீகனது இந்த அவதாரத்தை ஐடாவாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை.
அவளுக்கு இத்தனை சீக்கிரம் இதுநாள்வரை வீட்டிற்கு வராத ரீகன் இன்று விரைவாக வந்தது ஆச்சர்யம் என்பதைவிட அதிர்ச்சி. வந்தது முதல் அவளிடம் உரிமையாக காஃபீ கேட்டது, அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தது. அவனது உடை எதுவும் இங்கு இல்லாதபோது எப்படி கேசுவலில் வெளி வந்தான் என்பதே புரியாத குழப்பம் ஐடாவிற்கு.
லேப்டாப் பேகிற்குள் அவன் ஆடைகள் வைத்திருப்பதை இதுவரை அவள் பார்த்ததுமில்லை. சில நாள்களாக வீட்டிற்கு சென்றால் ஐடாவின் நினைவு வாட்டுவதை தாங்க முடியாமல் ரீகன் பல இரவுகள் காரிலேயே வாசம் செய்வதை யார் வந்து ஐடாவிடம் சொல்வது. அப்படி அவன் வைத்திருந்ததை எடுத்து இந்த பேகில் எடுத்து வைத்துக்கொண்டு நிலமையைச் சமாளித்திருந்தான்.
அதற்குமேல் ஐடாவிற்கு ரீகனிடம் எதுவும் பேசாமல் இருப்பது, அதுவும் அஸ்வின் முன் பேசாமல் இருப்பது அவனை பலதும் யூகிக்கத் தூண்டும் என்பது புரியவர, “ஆமா ரீகன். மெய்ட் டூ டேஸ்ஸா வரலை. வீடே அலங்கோலமா இருக்கு. அதுல அம்மாவைப் பாக்க கொலீக்ஸ் ரிலேட்டிவ்ஸ்னு வந்துட்டே இருக்காங்க. என்னால தனியா சமாளிக்கவே முடியலை” அலுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவனிடம் மெல்லிய குரலில் பதிலளித்தாள் கணவனிடம்.
அது அஸ்வினுக்கும் கேட்டது. ஐடாவின் இயல்பான பேச்சு அவன் காதிலும் விழுந்தது. அதில் எந்த வேறுபாடும் அவனால் உணர முடியவில்லை.
ரீகனுக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சி. ஐடாவின் மென்மை தாங்கிய குரலைக் கேட்டுத்தான் எத்தனை நாள்களாயிற்று.
அஸ்வினுக்குள் ஏராளமான புதிய கேள்விகள். அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள இது தக்க சமயமல்ல என்பதும் புரிய இருவரும் சமையலறையில் இருக்கும்போது அங்கு சென்று விடைபெறத் தயங்கிய மனதோடு, “ஐடாவை சிரமப்படுத்த வேணாம் ரீகன். நான் வந்ததுமே எனக்கு எதுவும் வேணானு சொல்லிட்டேன். அதான் அவங்க எதுவும் தரலை” என்று கூறியதோடு, “நான் கிளம்பறேன் ரீகன். நேரமாச்சு” என்று மீண்டும் உரைக்க,
“ஒரே ஒரு நிமிசம். இதோ ரெடியாகிருச்சு.” என்று கூறிய சற்று நேரத்திலேயே அவனுக்கும் அஸ்வினுக்கும் காஃபீயை எடுத்துக்கொண்டு வெளிப்பட்டவனைக் காண அஸ்வினுக்கு அத்தனை எரிச்சல்.
அதனைக் காட்டவும் முடியாமல், அவன் குடுத்ததை வாங்கி அவசர அவசரமாக அருந்தியவனுக்குள், ‘வந்தவனுக்கு ஒரு பச்சைத் தண்ணி வேணுமானு அவ கேக்கலை. இவ புருசங்காரங்கிட்ட இப்படியெல்லாம் பொய் பேசற நிலைக்கு கொண்டு வந்து என்னை நிறுத்திட்டாளே’ என நொந்தபடியே அதை வெளிக்காட்டாமல்,
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து, “ஐடா… காஃபீ சூப்பர்!” என்று குரல் கொடுத்தான் அஸ்வின்.
சமையலறையில் இருந்து வெளி வராதவள், “அது ரீகன் ப்ரிபேர் பண்ணது!” அவளின் குரல் மட்டும் வந்தது.
ரீகனும் அத்தனை லேசில் அஸ்வினை விடும் உத்தேசமின்றி கேள்வி கேட்டுத் திணறடித்தான்.
அதற்குமேல் அவனால் அங்கு தாமதிக்கவே முடியாது எனும் நிலையில் எதையெதையோ சொல்லி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளிவந்த பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அஸ்வினால்.
***
அஸ்வின் சென்று பத்து நிமிடங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தான் ரீகன். அடுக்களைப் புறத்தை விட்டு வெளியே தலைகாட்டவே இல்லை ஐடா.
ஏதோ ஒரு தயக்கம் அவன் முன்னால் வர. சாதாரணமாக இதற்கு முன்பு அஸ்வினோடு ரீகன் முன்பாகப் பேசியிருந்தால் இந்தத் தயக்கம் ஐடாவிற்கு வந்திருக்காதோ என்னவோ.
ரீகனுக்கு அவன் மீதே வெறுப்பாக வந்தது. ‘இங்க தங்க நினைச்சா கேக்கக் கூடாததை எல்லாம் கேட்டுட்டே வந்த டென்சன்ல எதையாவது ஐடாகிட்ட கேட்டு… மேலும் பிரச்சனைய இழுத்து வைக்கிறதை விட இங்க இருந்து கிளம்பிறது நல்லது’ என்று தோன்றியது.
எழுந்து ஸ்டெல்லாவின் அருகே சென்றவன், “ஆண்ட்டி… உங்களுக்காக இல்லைனாலும் எனக்காக இன்னைக்கு நான் இங்க வந்தேன்னு சொன்னாலும், இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் என்னால வந்து நிக்க முடியும்னு தோணலை.
நான் செய்தது தப்புதான். இல்லைனு சொல்லலை. ஆனா… அதுக்கு ஐடா எனக்கு கொடுக்க நினைச்சது அதிகப்படினு தோணுது.” பகிர்ந்தவன்,
“சமைக்கறவ… சாப்பாட்டை கண்ணுலயே காட்டாம உனக்குக் கிடையாதுன்னு என்னை சமீப காலமா விரட்டியடிக்கறா… எல்லாத்தையும் பொறுத்துகிட்டு பல காலம் பட்டினியா கிடக்கணும்னு வைராக்கியத்தோட இருக்க முடிஞ்சா… நான் இருக்க மாட்டேனா!”
“பசி தாங்க முடியாதவன் என்ன செய்வான்னு அதுக்கும் வழியும் சொல்லச் சொல்லுங்க அவகிட்டயே” என்று இலைமறை காயாக பின்னாடி நின்றபடியே கேட்டிருந்தவளுக்காக பேசியவனை இடைமறித்த ஐடாவை திரும்பி பார்வையாலேயே பேச விடாமல் முறைத்தவன்,
“உங்கிட்ட நான் பேச வந்தா… காதுலயே வாங்கறதில்லை! எவனவனோ பேசுறதை எல்லாம் மணிக்கணக்கா உன்னால பொறுமையாக் கேக்க முடியுது. ஆனா கட்டுனவன் பேசுனா உனக்கு கசக்குது!” என்றுவிட்டான் ஒரு நொடியில்.
கணவனிடமிருந்து இதை எதிர்பார்த்திராதவள் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள். மனதிற்குள் நினைத்ததை அவன் சொல்லிவிடக்கூடாதே என்று பயந்ததை அவளிடமே உரைத்துவிட்டதை உணராமலேயே பேசிக் கொண்டிருந்தான் ரீகன்.
ஸ்டெல்லாவின் புறம் திரும்பியவன், “யாரையும் வற்புறுத்தி என்னோட பிடிச்சு வச்சா… என்னோட நிம்மதியோட அவங்க நிம்மதியும் போயிரும்னு இப்போ வந்துட்டுப் போனவனைப் பாத்ததும் புரிஞ்சது.
உங்க பொண்ணுக்கு வேற எதாவது ஐடியா இருக்கலாம். அதுக்கு நான் தடங்கலா இருக்கறதை நினைச்சா எனக்கே என்மேல அருவெறுப்பு வந்திரும். அவ இஷ்டம்போல என்ன செய்யணும்னு நினைக்கறாளோ நானும் அதுக்கு கட்டுப்படறேன்.” என்றுரைத்ததுமே ஸ்டெல்லாவின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தது.
ஐடாவிற்கு கண்களில் நீர் திரண்டு இப்போது விழவா எனும் நிலையில் கணவன் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டதை ஏற்க முடியாத வேதனையோடு நின்றிருந்தாள்.
மாமியாரின் கண்ணீரைப் பார்த்தவன், “நீங்க அழறதுனால எதுவும் மாறிடாது ஆண்ட்டி. உங்க பொண்ணே எல்லாம் பாத்துப்பா… அவளால எல்லாத்தையும் சமாளிக்க முடியும். இனி நான் தேவையில்லைனு இன்னைக்கு அவளே ஃரூவ் பண்ணிட்டா!”
“நீங்க அவளை இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலை” என்று ஸ்டெல்லா உரைக்க,
“அவளைப் புரிஞ்சிக்கத்தான இப்ப ஒருத்தன் வந்திட்டுப் போறான்” எனும் வார்த்தையை ரீகன் விட,
அதுவரை அமைதி காத்தவள், “வாயிக்கு வந்ததைப் பேசாதீங்க ரீகன். என்னைப் பத்தித் தெரிஞ்சிருந்தும் இப்படி மோசமா எப்படிப் பேச முடியுது” அவளை அறியாமலேயே கன்னங்களில் கண்ணீர் வழிய கேட்டாள்.
அவள் புறமே திரும்பாமல், “எனக்கு உன்னைப் பத்தித் தெரிஞ்சிருந்தா… என்னோட பாஸ்ட்டை எல்லாம் உனக்குத் தெரிய விட்ருப்பேனா? இல்லை என்னை வேணானு சொல்லிட்டுக் கிளம்பினவளை விடாம… பின்னாடியே இப்படித் தொரத்திட்டு… நீ விரட்டினாலும் உம்பின்னாடியே மானங்கெட்டு இப்படித் திரிவேனா? நான் உனக்கு ஒன்னுமே இல்லைன்னு ஒவ்வொரு முறையும் நீ அடிக்காத குறையா என்னை விரட்டினதையெல்லாம் யோசிக்காம… இன்னைக்கு உங்களுக்கு இடைஞ்சலா வந்து நின்னிருப்பேனா!… சொல்லு!”
“ரீகன்… யோசிக்காம வார்த்தைய விடாத…” என்றவள், “நீ இப்ப வந்தது எனக்கு இடைஞ்சல்னு உங்கட்ட நான் சொன்னேனா?” கத்தினாள்.
“ஒரு கொலீக் வந்தா எவ்வளவு நேரம் அவனுக்காகன்னு டைம் ஸ்பெண்ட் பண்ணுவ… அதுவும் உன்னோட இந்த நிலமைல… சரி உன்னை விடு. ஆண்ட்டியோட நிலைமையை யோசிச்சுப் பாத்தியா? உன்னால அவனை சமாளிக்க முடியலைன்னா… என்ன செய்திருக்கணும் நீ?” என்று கேட்டவன்,
அவனாகவே தொடர்ந்தான். “வேலை இருக்கு. நீ கிளம்புன்னு தயவு தாட்சண்யம் பாக்காம அவங்கிட்ட முகத்திலடிச்ச மாதிரி நீ சொல்லியிருக்கணும்.!”
“எப்டி…” ஐடா பேச எண்ணி இடையுற விடாது தொடர்ந்தவன், “கொஞ்சம் நான் பேசிக்கறேன். தயவு தாட்சண்யம் பாக்காம என்னை ஓட ஓட உன்னால விரட்ட முடியுது. ஆனா அவங்கிட்ட முடியலைன்னா என்ன அர்த்தம்?”
“முடியலைன்னு யாரு சொன்னா” ஐடா கேட்டதும்,
“என்னைவிட அவன் முக்கியம்னு நினைக்கிற… அப்டித்தான?”
“அய்யோ… அப்டியில்லை!” காதைப் பொத்தியபடி கத்தினாள்.
இடையில் ஸ்டெல்லாவும் குழறலாகப் பேச, “ஆண்ட்டி… நீங்க எனக்கு கால் பண்ணலைன்னா நான் இங்க வந்திருக்க போறதில்லை. நான் வரலைன்னா அந்த அஸ்வின் இங்க இருந்து இப்போதைக்கு கிளம்பியிருப்பான்னு நீங்க நம்பறீங்க!” என ரீகன் உரைத்ததும் தளம் நழுவியது ஐடாவிற்கு.
‘அப்போ அம்மா கூப்பிட்டதாலதான் இந்நேரத்துக்கு வந்திருக்காரா’ என்ற நினைப்போடு, அவன் தாங்கள் பேசியதில் எதைக் கேட்டிருப்பானோ எனும் ஐயத்தோடு, அவன் அனைத்தையும் கேட்டுவிட்டான் என்பதே தெரியாமல் நின்றிருந்தாள்.
“அவன் எப்படா வாய்ப்பு அமையும்னு பாத்திருந்து உள்ளே வந்து சகடை மாதிரி உக்காந்து கண்டதையும் பேசறான். இவளும் மழுப்பலாத்தான் பதில் சொல்லுறா…
உங்க பொண்ணுக்கு பேசவே தெரியாதுன்னு நீங்க சொன்னா அதை நம்ப இப்ப நான் தயாரா இல்லை. எங்கிட்ட அவ நடந்துக்கறதுக்கும், அவங்கிட்ட பேசறதுக்கும் வித்தியாசம் தெரியாம நான் இல்லை ஆண்ட்டி.
அவன் அந்தப் பேச்சு பேசறான். அவனை சகிச்சிக்கிட்டு அவங்கூட பேச முடியுது. என்னை சகிச்சிக்க முடியலைன்னுதான வீட்டுல இருக்க மாட்டேனு கிளம்பி வந்தா…
அதை விடுங்க… கல்யாணம் பண்ணி ஒன்னே கால் வருசமாகப் போகுது. அது முதல்ல அவ ஞாபகத்துல இருக்கா…!” எனும் கேள்வியை அவன் முன்வைத்த அந்த நொடி பூமி பிளந்து போய் அதற்குள் தான் சென்று விட மாட்டோமா என்று கதறிவிட்டாள் ஐடா.
‘எப்படி தங்களின் திருமண நாள் தன் நினைப்பிலிருந்து போனது’
‘ஆண்டவரே… எனக்கு மட்டும் ஏனிப்படி’ தாரை தாரையாய் கண்ணீர் வடிய தன் பேச்சு ரீகனை மேலும் கோபப்படுத்தும் என்று உணர்ந்தவளாய் அமைதி காத்தாள் ஐடா.
ஆனால் அதுவே தப்பாகப் போயிற்று. அவளின் அமைதியை ரீகன் தப்பாகப் புரிந்துகொண்டான்.
“அவ இஷ்டத்துக்கு நீங்களும் தலையாட்டி இப்போ உங்களுக்கும் இங்க கஷ்டம்” என்று ஸ்டெல்லாவைப் பார்த்துச் சொன்னவன், “உங்களுக்கு ஏதும் உதவின்னா கால் பண்ணுங்க ஆண்ட்டி. உங்க பொண்ணு என்ன முடிவெடுத்தாலும் ஐ மீன்… எங்க மேரேஜ் விசயமா என்ன முடிவெடுத்தாலும்… நான் உடன்படறேன். இப்ப நான் கிளம்பறேன். இதுக்கு மேல இங்க இருந்தா இன்னும் நான் எதாவது பேசுவேன். அது ஐடாவுக்கு புடிக்காது” தாமதிக்காமல் கிளம்பிவிட்டான்.
ஐடாவிடம் எந்த பதிலையும் எதிர்பாராமல் அனைத்தையும் கொட்டிவிட்டு அகன்றிருந்தான் ரீகன். தற்போது ஐடாவிற்கு தனது நிலையை கணவனுக்குப் புரிய வைக்க முடியாத வேதனை.
தனது பேச்சைக் கேட்கவே பிரியமில்லாதவனைப்போல இங்கிருந்து அகன்றவனை பிடித்து வைக்க ஈகோ தடுக்க வேறு என்ன வழியென்று புரியாமல் அழுதாள்.
ஒரே நாளில் கணவன் முன் தான் குற்றவாளியான நிலையை எண்ணி அழுதவளை ஸ்டெல்லா தேற்ற முயன்றார். ஆனாலும் ஐடாவால் முடியவில்லை. அவளின் நியாயங்களைச் செவியுற அங்கு யாருமில்லை.
தன்னை கணவன் தவறாக எண்ணியதை அவளால் தாள முடியவில்லை. இத்தனை கோபத்தோடு தன்னைக் காணவே பிடிக்காமல் முதன்முறையாக தன்னை தவிர்த்துச் சென்றவனைக் காண முடியாமல் தவித்துப் போனாள்.
ரீகன் தன்னை விடாமல் சுற்றியபோது இல்லாத வெறுமை ஐடாவைத் துரத்தியது. அவனது அருகாமை வேண்டி மனம் பித்தானது. அதனை எப்படி கணவனிடம் சொல்வது என்று புரியாத சோகத்தோடு வலம் வந்தாள் ஐடா.
இதனால் பணியைத் தொடர முடியாத மன அழுத்தம். அவளின் பிள்ளைப்பேறு காலம் நெருங்க வர்க் ஃபிரம் ஹோம் எனும் நிலையில் வீட்டிலிருந்து பணி செய்ய அலுவலகம் அனுமதியளித்தும் வேலையை விட்டுவிட்டாள்.
ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தேவகோட்டைக்குச் செல்வதாக ஸ்டெல்லா ரீகனிடம் பேசினார். அதனால் அன்று வந்து அவர்களை வழியனுப்பி வைத்தவன் அப்போதும் மனைவியைக் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பின் அலைபேசியில்கூட மனைவியோடு பேச முனையவில்லை.
மனம் கணவனது செயலில் ரணமானது.
தானும் அவனை இதேபோல அலைக்கழித்த நேரமெல்லாம் வந்து ஐடாவிடம் நியாயம் கேட்டது.
ஆல்வின் மகளின் நிலையைக் கண்டு கேள்வியெழுப்பினாலும் எந்த பதிலும் தாயிடமிருந்தோ, மகளிடமிருந்தோ அவருக்குக் கிடைக்கவில்லை.
வயிற்றுப் பிள்ளைக்காகவேனும் சாப்பிட வேண்டும் எனும் நிர்பந்தத்தில் ஏனோதானோ என்று நான்கு கவளம் உணவுண்டாள். அதன்பின் போதும் என்ற மகளிடம், “இப்படித்தான் இனி டெலிவரி ஆகற வரை சாப்பிட முடியாது. அதற்காக அப்படியே இருக்கக்கூடாது ஐடா. மூனு வேளை சாப்பிட்டதை ஆறு வேளையாக பிரிச்சி சாப்பிடு” என்று வற்புறுத்தி உண்ண வைத்தார்.
ஸ்டெல்லாவின் உடல்நிலை தேறியிருந்தாலும், முன்புபோல அவரால் பணிகளைக் கவனிக்க முடியவில்லை. அதனால் வீட்டு வேலைக்கு ஆளை நியமித்தார்.
ஐடா, “இவ்ளோ நாளா நான் சொன்னப்போ எல்லாம் கேட்கலை. இப்போவாவது ஆளு வைக்கணும்னு தோணுச்சே” என்று சலித்துக்கொண்டாள்.
ஸ்டெல்லா மகளின் பிரசவ நேரம் நெருங்குவதால் தன்னால் அத்தனை தூரம் அனைத்தையும் எடுத்துச் செய்ய முடியாது என்று வேலைக்கு ஆள் வைத்திருந்ததை மகளறியவில்லை.
மகளின் மனம் தாயிக்குப் புரிந்தது. அவ்வப்போது ரீகன் அவருக்கு அழைத்து ஐடாவைப் பற்றி விசாரிக்கும் வேளையில், “உங்க நினைப்புதான் அவளுக்கு. திடீர்னு இப்படி மாறுவான்னு நான் நினைக்கவே இல்லை. நீங்க வந்து பாத்திட்டுப் போங்க” என்றால்,
“வரேன் ஆண்ட்டி” என்பதோடு அங்கு வரத் தூண்டும் நினைவுகளை கட்டுப்படுத்தி அவன் படும் அவஸ்தைகளை யாருமறியமாட்டார்கள்.
அடுத்து பேசும்போது, “சாரி ஆண்ட்டி. இந்த தடவை கண்டிப்பா வரேன்” என்று சமாளித்தானே அன்றி மனைவியின் மீது இருந்த வருத்தம் இன்னும் குறையவில்லை.
தன்னைத் தேடாதவளை தான் மட்டும் எதற்கு சென்று துன்புறுத்த என்று அவனைத்தானே கட்டுப்படுத்தியபடி வலம் வந்தான்.
இரவு நேரங்களில் மதுப்பழக்கமும் தொடர்ந்திருந்தது. ரூபி பாட்டிதான் ஐடாவிடம் பேசுவதோடு, “நீ போனபின்ன அவன் ரொம்ப மாறிட்டான். நீ வந்தா அவன் சரியாகிருவான். பிள்ளையப் பெத்து தூக்கிட்டு சீக்கிரம் நீ வந்தா எல்லாம் பழையபடி மாறிரும்!” என்பதையே மீண்டும் மீண்டும் கூறினார்.
நவம்பர் மாத இறுதியில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக ஸ்டெல்லா உரைக்க, திருச்சி மற்றும் சென்னையில் இருந்து அனைவரும் குழந்தையைப் பார்க்க வந்திருந்தனர்.
ரீகன் வந்தானா?
***