இளைப்பாற இதயம் தா!-22 (ஈற்றியல் பதிவு)
குடும்பத்தாரோடு மருத்துவமனைக்கு வந்த ரீகன் மூன்றாம் மனிதனைப்போல வெளியில் நின்று குழந்தையை தமக்கையிடம் எடுத்து வரச் சொல்லி பார்த்துவிட்டு சற்று நேரம் நின்றிருந்தவன் ரூபியிடம் மட்டும் கூறிக்கொண்டு மனைவியைக் பாராமலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
கணவனை எதிர்பார்த்து அவனைக் காணாத ஏமாற்றம் ஐடாவை பேறுகால சோர்வோடு மேலும் சோர்விற்கு ஆட்படுத்தியிருந்தது.
சென்னையிலிருந்து தேவகோட்டை வந்தது முதல் ரீகன் தனக்கு அழைப்பான் என்று எதிர்பார்த்தாளே அன்றி அவளே கணவனுக்கு அழைத்துப் பேச ஐடா முன்வந்திருக்கவில்லை. அதற்கு அஸ்வின் வந்த அன்று நடந்த விசயங்கள் மட்டுமே காரணமாக இருந்தது. அவளை அறியாமலேயே ஏதோ குற்றவுணர்வு.
‘ரீகன் சொன்னதுபோல செய்திருந்தா… அவ்ளோநேரம் அந்த அஸ்வினைப் பொறுத்திட்டு இருந்திருக்க வேணாம்’ எனும் உண்மை அவளை அப்படியொரு நிலைக்கு ஆட்படுத்தியிருந்தது.
அதற்குமுன் அவள் யோசித்த நியாயங்கள் எல்லாம் அவளுக்கே தற்போது அநியாயமாகத் தோன்ற அவளுந்தான் என்ன செய்வாள்?
‘மாப்பிள்ளை கூப்பிட்டிருந்தாரும்மா… உன்னைத்தான் கேட்டாரு’ என்று தாய் ரீகனிடம் பேசிவிட்டுச் சொல்லும்போதெல்லாம் தாய்மீது அத்தனை எரிச்சல் வந்தது ஐடாவிற்கு.
முன்பெல்லாம் மகளை அழைத்து பேசக் கொடுத்தார்தான். மருமகனைப் பற்றி தெரிய வந்தபின் மகளுக்குப் பிடிக்காததைத் திணிக்க முடியாத நிலை அவருக்கு. அதனால் விட்டவர் அவள் மனம் தெரியாமல் அதையே தொடர்ந்திருந்தார்.
மகள்தான் மாப்பிள்ளையை தவிர்த்து வருகிறாள் என்று மனதில் பதிந்து போயிருந்தவர், ‘ஐடா… அவரை ஏத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டன்னா… நீயே அவருக்கு கூப்பிட்டு பேசு’ என ஒன்றிருமுறை சொல்லிப் பார்த்தார் ஸ்டெல்லா.
குளத்தில் எரிந்த கல்லைப்போல இருந்தவளை அதற்குமேல் வற்புறுத்த மனமின்றி பிரார்த்தனையோடு வலம் வந்தார் ஐடாவின் தாய்.
தாயின் இதுபோன்ற பேச்சுக்களை கேட்டவளுக்கு, ‘என்னையக் கட்டிட்டதாலதான அவரு உங்களுக்கு மாப்பிள்ளை… அவருக்கு எப்பப் பாத்தாலும் கொடி பிடிக்க தேவகோட்டையில ஒரு ஆள ரெடி பண்ணி வச்சிருக்கான் ரீகன். சரியான ஆள் மயக்கியாத்தான் இருக்கான்’ என மனதிற்குள் ரீகனை நினைத்துப் பொறுமுவதோடு, ‘ரொம்பப் பண்ற ரீகன்!’ என்று தனக்குள் ரீகனிடம் நேரில் சொல்வதுபோல தனக்குள் சொல்லிக்கொண்டாள் ஐடா. தாயின் பேச்சைக் கேட்டும் கேளாததுபோல நகருபவள் உள்ளுக்குள் கணவனது நிராகரிப்பைத் தாங்க முடியாமல் வருந்தினாள்.
அப்படியே நாள்களைக் கடத்தியவளுக்கு குழந்தை பிறந்தபின் காண வருவான் என்று எதிர்பார்த்தவளின் விழிகள் அவனைத் தேடிக் களைத்தது. அவள் அவனைப் பார்க்கவே இல்லை.
ரீகன் ஐடாவிடம் பேசாமல் சென்றது எதுவும் ஸ்டெல்லாவின் கவனத்திற்கு வரவில்லை. அத்தனை பேரும் ஒருமித்து வந்து ஜேஜே என்றிருந்த நேரத்தில் யார் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் நிலையில் ஸ்டெல்லாவும் இல்லை.
வெளியே நின்றபடியே குழந்தையை, “மை ஏஞ்சல்… ஹனி…” மகளைக் கொஞ்சியவனிடமிருந்து உடனே அவனது தாய் வாங்கியிருந்தார். இப்படி மாறி மாறி அனைவரும் குழந்தையைத் தூக்க நினைத்து முன்வந்த வேளையில்,
அங்கு வந்த டியூட்டி நர்ஸ், “இப்படி மாத்தி மாத்தி எல்லாரும் தூக்கினா குழந்தை என்னாத்துக்கு ஆகும். உடம்பு நோகப் போகுது. குழந்தை நைட்டெல்லாம் அழப் போறா” என்றுரைக்க அதன்பின் குழந்தையை ஐடாவின் அறைக்குள் இருந்த தொட்டிலில் கிடத்தியிருந்தனர்.
ஐடாவிற்கு ரீகன் எங்கே என்று யாரிடமும் கேட்க முடியாத நிலை. இத்தனை பேர் வந்திருக்கும்போது அவன் மட்டும் காணவில்லையே என்று தவித்தவளின் நிலை அங்கு வந்திருந்தவர்களுக்குப் புரியவே இல்லை.
அனைவரும் கிளம்பிய பிறகு ரூபி பாட்டி மட்டும் ஐடாவுடன் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு வருவதாக தேவகோட்டையிலேயே இருந்துவிட்டார்.
அப்போதுதான் கணவன் குழந்தையைப் பார்க்க வந்துவிட்டு தன்னைக் காணாமல் சென்றது ஐடாவிற்கு தெரிய வந்தது. உள்ளம் நொறுங்கிப் போனது ஐடாவிற்கு. அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை என்பதைவிட, ஏதோ தன் கையிலிருந்து நழுவும் உணர்வில் உலகே வெறுத்துப் போனது.
இத்தனை தூரம் வந்தவன் தன்னைக் காணாமல் சென்றது மேலும் வருத்தத்தைக் கூட்டியது. ஐடாவிற்கு சுகப்பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
முன்புபோல ரூபி பாட்டி நெருக்கம் காட்டாதது வேறு ஐடாவிற்கு நெருடலாக இருந்தது. ஆனால் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.
மருத்துவனையிலிருந்து வீடு திரும்பியதும், “ரீகனுக்கு டைட் வர்க்கா பாட்டி” என்று ஐடா கேட்டதற்கு, “அவன் வேலை பாக்கறானா என்ன செய்யறான். ஏது செய்யறான் எதுவும் எனக்குத் தெரியலை ஐடா. எப்போ நினைக்கறானோ அப்ப வந்து எட்டிப் பாப்பான். கொஞ்ச நேரம் இருந்திட்டு உடனே கிளம்பிப் போயிறான்” ரூபி சொல்ல முடியாத வருத்தங்களை தனக்குள் மறைத்தபடி இயம்பினார்.
“நீங்க சொன்னா கேப்பாரே பாட்டீ!”
“அது எல்லாம் முன்ன! இப்ப எல்லாம் சரினு தலையாட்டுவான். ஆனா அவனுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்யறான்”
ஒரு வாரம் கழித்து டிரைவரை அனுப்பி பாட்டியை வண்டியில் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் அவன் அப்போது வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவள், ரீகன் தன்னைத் தவிர்ப்பது அஸ்வினை தாங்கள் வசித்த வீட்டில் வைத்து சந்தித்த பிறகுதான் என்பது நினைவிற்கு வர தாயிடம், “ம்மா… அஸ்வின் வந்திருந்த அன்னைக்கு நீங்க ரீகனுக்கு எப்போ கால் பண்ணீங்க” என்று கேட்டாள்.
மகளின் கேள்வியை அப்போது எதிர்பாராதவர் மகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு, “டென் மினிட்ஸ்ல பண்ணிருப்பேன்!”
“என்னம்மா சொல்றீங்க?” அதிர்ந்து போய் கேட்டாள்.
“அவம் பேச்சு பார்வை எதுவும் பிடிக்கலை. என்னைப் பாக்க வந்தேன்னு சொல்லிட்டு உன்னை என்கொயரி பண்ணிட்டு இருந்தான். நான் இருந்த நிலமை அப்படி. அதான் ரீகனை கூப்பிட்டேன்” என்றவரிடம், “நீங்க பேசின மாதிரியே எனக்கு நினைப்பில்லையேம்மா…”
“கால் பண்ணிட்டு பேசலை. அவரு உள்ள வரும்போதுதான் கட் பண்ணார்” என்று குண்டையும் வீசிட தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் ஐடா.
அஸ்வின் பேசியது அனைத்தையும் கேட்டதுதான் இந்த தவிர்த்தலுக்கான முக்கிய காரணம் என்பது நினைப்பில் வர, இன்னும் மனமெங்கும் பாரம் கூடிப் போயிருந்தது ஐடாவிற்கு.
பிள்ளை பாலுக்கு அழ, “ஐடா… குழந்தை அழறா பாரு. பசிக்குது போல. தூக்கி அமத்து” என்று சத்தம்போட்டால்தான் நடப்பிற்கு வந்தாள். குழந்தையைவிட கணவனது நினைப்பில் உலகமே மறந்துதான் போனது ஐடாவிற்கு.
அதன்பின் தனிமையில் இருக்கும் நேரங்களில் ரீகனுக்கு அழைப்பாள். பிறகு ஒரு ரிங்க் போகுமுன்னே தவிப்போடு, ‘இப்ப அவருகிட்ட என்ன பேச’ எனும் திணறலோடு கட் செய்வாள்.
சில நேரங்களில் ஒரு ரிங்க் போனபின் கட் செய்வாள். அது கவனத்தில் வராமல் போயிருக்க தான் கவனிக்காமல் இருந்தது உலகமகா தவறுபோல எண்ணிக்கொண்டு உடனே ரீகன் ஐடாவிற்கு அழைக்க, “ஹலோ…” என்று நிதானிப்பாளே தவிர, இதற்காக அழைத்தேன் என்றெல்லாம் இயல்பாக கணவனிடம் பேச ஐடாவால் முடியவில்லை.
தன்னை ஏதேனும் சொல்லிவிடுவானோ என்கிற தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.
ரீகன், “கால் பண்ணினதை நான் கவனிக்கலை. என்ன விசயம்” என்று கேட்டபின், “கிறிஸ்துமஸ்கு இங்க வரீங்களா?” தயங்கிக் கேட்டாள். தான் பேச நினைத்ததையெல்லாம் போனில் பேச முடியாது என்று ஐடாவிற்கு புரிய அப்படிக் கேட்டாள்.
ரீகனோ, “முடிஞ்சா வரேன்” சுருக்கமாகப் பேசினான். இப்படியெல்லாம் தன்னிடம் பேசியதில்லை என்பது நினைப்பில் வர வேதனையாக இருந்தது ஐடாவிற்கு.
“கிறிஸ்துமஸ்கு வர முடியலைன்னா… நியூ இயர்க்கு வாங்க.” பேசிக்கொண்டிருந்த போதே குழந்தை அழத் துவங்க, “பாப்பா அழறா… நான் அப்புறம் பேசறேன்” என்று வைத்துவிட்டாள்.
ரீகனுக்கு மனைவி தனக்கு அழைத்ததே பெரிய நிறைவு. உலகமே தன் வசப்பட்டதுபோல உள்ளமெங்கும் சந்தோசம். அன்று இரவு வீட்டிற்கு சென்றவன் ரூபி பாட்டியிடம், “இங்க அவளை கூட்டிட்டு வரது பத்தி ஆண்ட்டிகிட்ட பேசறீங்களா பாட்டீ”
“இப்ப என்ன அவசரம் ரீகன். இங்க தனியொருத்தியா குழந்தை அவளால சமாளிக்க முடியாது. அங்க ஸ்டெல்லா, மெய்ட் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாத்துக்குவாங்க”
“அப்ப ஒரு நியூ மெய்ட் இங்கயும் அப்பாயிண்ட் பண்ணலாம் பாட்டீ” என்றதில், அதை கண்டிப்பாக செய்ய வேண்டுமெனும் உறுதி குரலில் தெரிய,
“பாரு! ஆளு கிடைச்ச பின்ன ஸ்டெல்லாகிட்ட பேசலாம்” என்று ரூபி முடித்துக்கொண்டார்.
அதன் பிறகும் ரீகன் நார்மலுக்கு வராமல் அப்படியே இருக்க ஐடாவிற்கு, ‘என்ன கோபம்னே தெரியலை. எப்படி என்னானு போயி சமாதானம் பண்றது’ என்று குழம்பித் தவித்தாள் ஐடா.
கிறிஸ்துமஸ் வந்தது. ஆனால் ரீகன் வரவில்லை. எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன் பிறகு அவன் ஏன் வரவில்லை என்பதற்கான விளக்கமும் இல்லாமல்போக உடைந்து போனாள்.
கணவன் தங்களை அழைத்துச் செல்ல எண்ணி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதே தெரியாமல் மிகுந்த சோகத்தோடு வலம் வந்தாள் ஐடா.
கிறிஸ்துமஸ்ஸிற்குள் குழந்தையைப் பேண ஆள் கிடைத்துவிட்டால் அப்போதே சென்னைக்கு அழைத்து வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டவன், அது நடக்காமல் போனதும் அங்கு செல்வதைத் தவிர்த்திருந்தான் என்பது ரூபியின் மூலம் ஸ்டெல்லாவிற்கு தெரிய வந்தது.
எப்போதுமே ரீகனைப் பற்றி ஆர்வம் காட்டாமல் இருப்பவளிடம் எதையும் ஸ்டெல்லா பகிர நினைக்கவில்லை.
ரீகன் நியூ இயருக்குள் தகுந்த நபர் கிடைக்கும் நிலையில் அப்போது தேவகோட்டை வருபவன் மனைவி குழந்தையை தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டியதைப் பற்றி ஸ்டெல்லாவிடம் பேசலாம் என நினைத்திருக்க, ஒரு வழியாக ஆள் கிடைத்திருந்தது.
அதன்பின் ஸ்டெல்லா கணவரிடம் விசயத்தைக் கூறியதோடு மகளிடம், “நியூ இயர்க்கு வரதோட உங்களை சென்னைக்கு அழைச்சிட்டுப் போகலாமான்னு மாப்பிள்ளை உங்கிட்ட கேக்கச் சொன்னாராம்”
இந்த விசயத்தை கணவன் தன்னிடமே கூறியிருக்கலாமே. ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ரீகன் என்று உரிமைக் கோபம் அவன் மீது எழ அதனை தாயிடம் காட்டாமல், “சரிம்மா…” என ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள்.
இப்படி அவனைக் காணாமல் தவிக்கும் வேதனையிலிருந்து மீள வேறு வழி ஐடாவிற்கு தெரியவில்லை. கூடுதலாக பழையபடி மீண்டும் பெண்களோடு சல்லாபம் என்று துவங்கியதால் தன் நினைப்பு இல்லாமல் இருக்கிறானோ என்று ஐடாவிற்குள் மனஉளைச்சல்.
அதனால் தாய் கேட்டதும் தன் மனக்குறைகளைக் காட்டாமல் சரியென்று பேசியிருந்தாள். நேரடியாக பேசிக் கொள்ளலாம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டவள், புத்தாண்டிற்கு முந்தைய நாளே கணவனை எதிர்பார்த்திருக்க அன்று வராமல் புத்தாண்டு தினத்தன்று வந்தான்.
புத்தாண்டு தினக் கொண்டாண்டங்களனைத்தையும் முடித்துக்கொண்டு மாலையில் கிளம்பி நடு இரவில் சென்னைக்கு சென்றனர்.
அவசியத்திற்கு கூட பேசாமல் இருந்த ரீகனை பழையபடி மாற்ற முடியுமா எனும் அதிசிரத்தையான கேள்வி எழ… குழந்தையோடு பயணித்தவளுக்கு வீட்டில் அத்தனை வசதிகள் புதிதாக செய்திருந்தது தனித்துத் தெரிந்தது.
அனைத்துமே குழந்தைக்காக என்பதும் புரிய வர, ‘அப்போ நான் இனி அவருக்கு வேணாமா?’ என்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
ஆனாலும் இருவரும் ஒரே வீட்டில் இருப்பது சற்று ஆறுதலாக உணர்ந்தாள் ஐடா. குழப்பங்கள் சற்று குறைந்திருந்தது. தாயின் வீட்டைவிட இங்கு மனபாரங்கள் நீங்கி குழந்தையோடு மகிழ்வாக நேரங்கள் போனது.
வந்த ஒன்றிரண்டு நாளில் ரீகன் இரவு வீட்டிற்கு வராததைக் கண்டு பாட்டியிடம் கேட்டாள் ஐடா. அவர் சர்வ சாதாரணமாக, “நீ போனதில இருந்தே அவன் நைட் வரதில்லை ஐடா” என்று கூறியதும், “எங்க தங்கறார்?” ஐடா கேட்க,
“அதை நான் போயி அவங்கிட்ட கேக்க முடியுமா? நீ கேளு” என பொறுப்பு துறப்பான பதிலோடு அகன்றுவிட்டார்.
காலையில் வீட்டிற்கு வருபவன் குழந்தையோடு சற்று நேரம் செலவளிப்பான். பிறகு வெளியில் கிளம்பிச் செல்பவன் மாலையில் ஒரு முறை வீட்டிற்கு வந்து அட்டெண்டன்ஸ் போடுவதை வழக்கமாக்கியிருந்தான். ஆனால் இரவு வருவதில்லை எனும் நிலை நீடிக்க மாலையில் வீட்டிற்கு வந்திருந்தவனிடம் குழந்தையைத் தராமல், “நைட் வீட்டுக்கு வராம எங்க போறீங்க” என்று கணவனிடம் உள்ளுக்குள் தோன்றிய பயத்தை மறைத்தபடியே வினவினாள்.
‘இது என் இஷ்டம். யாரு நீ கேக்க?’ என்று ரீகன் பேசிவிட்டால், அதனைத் தாங்க நிச்சயமாக ஐடாவால் முடியாது என்பது புரிய… அப்படி அவன் பேசிவிடக் கூடாதே எனும் தயக்கமும் பயமும் போட்டி போட வினவியவள் கணவனையே பார்க்க, அவனோ குழந்தையை காணாமல் கண்களை அங்குமிங்கும் நோட்டமிட நின்றிருந்தான்.
கணவன்… தான் பயந்ததுபோல பேசாமல் வேறு சிந்தனையில் நின்றிருப்பதை உணர்ந்தவள், “குழந்தை தூங்கறா… நான் கேட்டதுக்கு நீங்க ஒன்னுமே சொல்லலை” என நினைவுபடுத்தினாள்.
“கொஞ்சம் வேலை…” மெல்லிய குரலில் ஆனால் சுவரைப் பார்த்தபடி பேசினான்.
“அஞ்சு மாசமா அப்டி என்ன வேலை நடக்குது?” அடுத்த கேள்வியை கணவனிடம் வீச, தலையை கரங்களால் கோதி விட்டபடியே…, “லேட் நைட் வீட்டுக்கு வர மாதிரி இருக்கும். அதான் வெளியவே தங்கிறது” என்றான்.
“எவ்ளோ நேரமானாலும் இனி வீட்டுக்கு வந்திருங்க” கட்டளையாக ஐடாவிடமிருந்து குரல் வர, ரீகனுக்கு இனிமையாக இருந்தது மனைவியின் இந்த அன்புக் கட்டளை.
ஆமோதிக்கவோ, மறுக்கவோ செய்யாமல் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் பிஞ்சுக் கால்களை முத்தமிட்டவன், சற்று நேரம் குழந்தையையே பார்த்துக்கொண்டு அருகே அமர்ந்திருந்தான்.
சலிப்பே தோன்றாமல் பார்க்கும் அவனை ஐடா கண்கொட்டாமல் பார்த்தாள். இனி தனக்கான தேடலை ரீகனது பார்வையில் தான் காண முடியாதோ எனும் உண்மை சுட, உள்ளம் அழுதது.
தந்தை தன்னையே கண்ணுற்றிருப்பது குழந்தைக்கு எட்டியதோ என்னவோ, பதினைந்து நிமிடங்களில் உடம்பை நெட்டி முறித்து சோம்பலை நீக்கி மெல்ல கண் திறந்தது குழந்தை.
“மை ஏஞ்சல்! ஹனி…!” என்று கொஞ்சலாக அழைத்த தந்தையின் குரல் பரிச்சயமாகிப் போயிருந்ததால் பொக்கை வாய் திறந்து சிரித்தது.
“தூங்குனீங்களா… டாடி வந்து டிஸ்ட்ரப் பண்ணிட்டேனா குட்டிய…” மீண்டும் பாதங்களில் முத்தமிட்டான் ரீகன்.
ஒன்றரை மாதங்களே ஆன குழந்தைக்கு தந்தையின் பேச்சு சத்தம் ரீங்காரமாகத் தோன்றியது போலும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
அந்த உலகில் தந்தையும் மகளும் மட்டுமே தனித்திருந்தனர். யாருமற்ற அனாதரவான நிலையில் ஐடா இருப்பதுபோலத் தோன்ற கண்களில் ஊற்றுபோல உற்பத்தியான கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளிழுத்தாள்.
கணவன் தன்னை அழைத்ததுபோலவே குழந்தையையும் ஹனி என்று அழைத்துப் பேசுவதைப் பார்ப்பவளுக்கு, ‘அப்போ நான்’ என்று கேட்கும் துணிச்சல் இதுவரை வரவில்லை.
அதன்பின் வெளியில் சென்றவன் அன்று இரவு வீடு திரும்பியது அரவத்திலேயே ஐடாவால் உணர முடிந்தது. அறையை விட்டு வெளிவரவில்லை ஐடா.
இப்படியே மாதங்கள் கடந்தது.
ஐடாவிற்கு சில நாள்களாகவே சந்தேகம். பகலில் குழந்தையைப் பார்க்க வருபவன் இரவில் ஏன் வராமல் தவிர்க்கிறான் என்று. அந்த சந்தேகத்தை தீர்க்க இரவு நேரத்தில் ரீகனை அணுகியவள் கண்டது அவளின் உயிரை உலுக்கியிருந்தது.
***