இளைப்பாற இதயம் தா!-23(Final)

இளைப்பாற இதயம் தா!-23 (நிறைவு பதிவு)

          அறைக்குள் சென்றவனது பின்னே ஐடா செல்ல முனைய, ‘ஏதோ வித்தியாசமா ஸ்மெல்… என்னாது’ திரும்பிப் பார்த்தபடியே யோசனையோடு அறைக்குள் நுழைய… அறைக்குள் செல்ல இன்னும் அதிகமாக இருந்த அந்த நெடியை அவளால் யூகிக்க முடிந்தது.

          ஐடா தங்களின் அறைக்குள் ஆறு மாதங்களுக்குப் பின் நுழைவதே தெரியாமல் மதுவின் ஆதிக்கத்தில் சரணடைந்திருந்தான் ரீகன்.

          ‘ரீகன் குடிப்பானா?’ இதுவரை அவன் குடிப்பான் என்பதே ஐடாவிற்கு தெரிய வந்திராத நிலையில் கணவனை அந்த நிலையில் கண்டதும், “இது எல்லாம் எவ்ளோ நாளா நடக்குது” என்ற ஐடாவின் சத்தத்தைக் கேட்டு, “எத கேக்கற ஹனி” எனும் குழறலான அசட்டுத்தனமான சிரிப்போடு கூடிய ரீகனை அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் ஐடா.

          ஹனி என்று தன்னை அழைக்கக்கூடாது என்று கூறியது முதல் அதனைப் பின்பற்றியவன், இன்று ஹனி என்று அழைத்தது ஒரு புறம் இழந்த சந்தோசத்தை மீட்டுத் தந்திட அதனை முழுமையாக அனுபவிக்க முடியாத வேதனையில் கணவனது நிலை.

          “குடிக்கறதைத்தான் கேட்டேன்” ஐடா கோபத்தோடு பதிலுரைக்க,

          “அ…து…” சிரித்தான்.

          ஆறடிக்கும் மேலான உயரத்தில் ஆஜானுபாகு தோற்றத்தில் காண்பவரை வசீகரிக்கும் வகையில் திரிபவனின் தற்போதைய நிலை ஐடாவிற்கு வேதனையைத் தந்தது.

          நீண்ட நாள்களுக்குப்பின், “சாப்டீங்களா?”

          “சாப்பிட்டேன்” என்று குடித்ததை செய்கையில் செய்து காட்டி சிரித்தவனிடம், “நான் பூட் எதாவது எடுத்திட்டீங்களானு கேட்டேன் ரீகன்”

          “இதுவே போதும்”

          “அப்போ சாப்பிடலை…”

          “இல்லை… அதெல்லாம் வேணாம்”

          “டெய்லி இப்டித்தான் குடிச்சிட்டு வரீங்களா?”

          அதற்கும் சிரிப்பு. எழுந்து அமர முடியாமல் அவனைக் கொண்டு தள்ளியது மது.  இப்படி கண் மண் தெரியாமல் எதற்கு குடிக்கிறான்? என்று புரியாமல், “இனி குடிச்சிட்டு வந்தா… அவ்ளோதான்” கோபமாக ஐடா கூற, அதற்கும் சிரிப்பு.

          இவனிடம் பேசுவதே வேஸ்ட் என்பது அடுத்த அரைமணித் தியாலத்திற்குப் பிறகே ஐடாவிற்குப் புரிய வர, “காலையில உனக்கு இருக்கு” என்று அறைக்குள் திரும்பியவளுக்கு இரவு முழுவதும் கணவனைப் பற்றியே சிந்தனை.

          அவள் அங்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறாள்.  ஒரு முறைகூட அவன் இதுபோன்றிருந்து பார்த்ததில்லையே.  இப்போது ஏன் இப்படி?

          மறுநாள் முந்தைய தினம் நடந்த விசயங்களின் நினைப்பே இல்லை அவனிடம்.  முறைத்துப் பார்த்த மனைவியைப் பார்த்தால்தானே ரீகனுக்குத் தெரியும்.  அஸ்வினது வருகைக்கு பிறகே மனைவியைப் பார்ப்பதையே தவிர்த்தவன் தற்போது அப்படி அவளைத் தவிர்த்துவிட்டு மகளோடு உல்லாசமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

          மகளும், ங்ஙா எனும் ஒலியோடு தந்தையோடு பேச முயன்றாள்.

          அலுவலகத்திற்கு கிளம்புபவனிடம் பேச வேண்டாமென்று அமைதி காத்தவள் மாலையில் வந்தவனிடம், “டிரிங்க் பண்ணிட்டு வரது எவ்ளோ நாளா நடக்குது” என்று கேட்டதற்கு பதிலே கூறாமல் குழந்தையோடு கொஞ்சலைத் தொடர்ந்திருந்தான்.

          குழந்தையைத் தூக்கி, கேர் டேக்கரிடம் ஒப்படைத்துவிட்டு கணவனின் முன் வந்து நின்றவள், “முதல்ல என்னைப் பாத்துப் பேசுங்க”

          அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு புறமாகத் திரும்பியவனை தனது கரங்கொண்டு கன்னம் பற்றிப் பார்க்கச் செய்தவள், “என்ன ரீகன்? நான் கேக்கறது காதில விழுதா?”

          அவளின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்தவன் அவளின் கரங்களை தனது கன்னங்களிலிருந்து நீக்கிவிட்டு, “ஆமா…”

          “ஏன்?”

          “தோணுது”

          “குடிக்கணும்னு தோணுமா?” எனும் ஐடாவின் உக்கிரமான கேள்விக்கு அவனிடம் எந்தப் பதிலுமில்லை.

          “கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க?”

          “ம்ஹ்ம்”

          “ம்ஹ்ம்னா என்ன அர்த்தம்?”

          விடும்மா எனும் பார்வையோடு அங்கிருந்து அகல முனைய, “உங்கட்டதான் கேக்கறேன் ரீகன்”

          அப்போதும் அவனிடம் பதிலில்லை.

          “இனி குடிக்க வேணாம்”

          அதற்கும் பதிலில்லை.

          “உங்கட்டதான் நான் சொல்லிட்டு இருக்கேன்” எனும்போதே அங்கிருந்து சென்றுவிட்டான் ரீகன்.  இதுபோன்றெல்லாம் இதுவரை நடந்துகொள்ளாதவன் தற்போது இப்படியெல்லாம் நடப்பதை ஜீரணிக்கவே முடியாமல் அழுதாள் ஐடா.

          சென்றவனது பின்னே சென்று மற்றவர் முன் இதுபற்றிக் கேட்க பிரியப்படாதவள் அன்று இரவும் குடித்துவிட்டு வந்தவனிடம் சென்று கத்த, எந்த பலனும் இல்லை.

          குடிக்காத போது பேசாமல் இருப்பவன், குடித்திருக்கும் வேளையில் ஹனி அது இது என்று பிதற்றுகிறான், சிரிக்கிறான். கேட்காத விசயங்களையெல்லாம் தன்னோடு பகிர்கிறான் என்பதும் புரிய வர, “எப்போ இருந்து குடிக்க ஆரம்பிச்சீங்க?”

          “பிறந்ததுல இருந்து” என்றபடியே சிரித்தவனிடம், “என்ன சொல்றீங்க?”

          “அப்ப பால்… இப்ப வேற…” சிரித்தான்.

          “எதுக்குக் குடிக்கணும்?” ஐடா கேட்டதற்கு, “ஏன் குடிக்கக்கூடாது” என்று பதில் கேள்வி கேட்டான்.

          “இனிக் குடிக்காதீங்க” என்றவள் அவனது மறுப்பான தலையசைப்பை வேதனையோடு பார்த்தபடியே, “இன்னைக்கு எதாவது சாப்டீங்களா?”

          இல்லையென அதற்கும் தலையசைத்து கூறியவனது தலை முடி பற்றி நிமிர்த்தியவள், “ஏன் இப்படி எல்லாம் பண்ற ரீகன்.  என்னால இதையெல்லாம் தாங்க முடியலை” என்று கண்ணீரோடு கணவனிடம் கேட்டாள் ஐடா.

          “என்னாலயும்” என்றானே அன்றி அந்த வாக்கியத்தை முழுமையடையும் முன்னே படுத்திருந்தான்.

          சமையலறைப் பக்கம் சென்றவள் சற்று நேரத்தில் கையில் உணவோடு நுழைந்தாள்.  படுத்திருந்தவனை தட்டி எழுப்புவதற்குள் ஐடாவிற்குப் போதும் போதுமென்றாகியிருந்தது.

          குழந்தையைவிட கேவலமாக உணவை வாங்கிய ரீகனது நிலையைக் கண்டு ஐடாவால் தாங்க முடியாத துயரம் நெஞ்சை அடைத்தது.  ‘எப்டி இருந்தவன் குடிச்சதும் இப்படி ஆகிறான்’ என்று கண்ணீரோடு உணவை ஊட்டினாள்.

          மறுத்து படுக்க முனைந்தவனை விடவில்லை. ‘இப்படியே டெய்லி பண்ணா உடம்பு என்னாத்துக்கு ஆகும்’ என்று கேட்ட மனைவியிடம், ‘டெத்தாகும்’ என்று கண்கள் சொருகியபடி பதிலுரைத்தான்.

          எப்போதும் சாப்பிடுவதில் கால்வாசி உணவுகூட ரீகனால் உண்ண முடியவில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டவளுக்கு அவனது இந்நிலை எதனால் என்பது புரிந்தும் புரியாமல் இருந்தது.

          போதையில் இருப்பவனிடம் அடுத்தடுத்து கேள்விகளை முன்வைக்க, சில நேரம் குதர்க்கமாகவும் சில நேரங்களில் உண்மையை அப்படியே உளறவும் செய்தான்.

          அதிலிருந்து ஐடாவிற்கு தெரிய வந்தது என்னவென்றால் அஸ்வினது சந்திப்பிற்கு பிறகே ரீகன் இப்படிக் குடிக்கத் துவங்கியிருக்கிறான் என்பது.

          “அதுக்கு ஏன் குடிக்கணும்?”

          “குடிச்சாதான் நீயில்லாம என்னாலத் தூங்க முடியும்” எனும் உண்மையை உளறியவனைக் கட்டிக்கொண்டு அந்நேரத்தில் கதறிவிட்டாள் ஐடா.

          ‘நான் இனி உன்னை விட்டுப் போகமாட்டேன்’ என்று கூறியவளின் பேச்சைக் கேட்டு, ‘பிராமிஸ்’ என்று கைநீட்ட, ஐடா அவனது கரத்தில் தனது கரத்தை வைத்து அழுத்தினாள்.

          அவளின் அணைப்பையே அவனால் உணர முடியாத போதையில் அவர்களின் குழந்தையைப்போல ரீகனும் ஐடாவின் மார்போடு முகத்தை வைத்தபடி எந்த வித உணர்வும் இன்றி கண்மூடி இருந்தான்.

          இதுவே அவன் சாதாரணமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்கிற நினைப்பு வர, இன்றைய அவனது நிலை வருத்தத்தைத் தந்தது.

          வாயைத் துடைத்துவிட்டு அவனது உடைகளைத் தளர்த்தியவள் படுப்பதற்கு ஏதுவாக கணவனை கிடத்தினாள்.  உளறினான்.  அருகிலேயே சற்றுநேரம் அவன் பேசுவதைக் கேட்பது.  பிறகு குழந்தையை சென்று பார்ப்பது என்று மாறி மாறி அன்றைய இரவைக் கடத்தினாள்.

          அஸ்வின் வந்த தினத்தன்று அவன் பேசியதைக் கேட்டு அவன் நினைத்ததையெல்லாம் உளறியிருந்தான்.  அன்று ரீகனை அழைக்காதது எத்தனை பெரிய மாற்றத்தை அவனுக்குள் உண்டு செய்திருக்கிறது என்பதைக் கேட்டறிந்தவள், “உங்களைத் தவிர வேற யாரும் என்னை அவங்க பக்கமா இழுத்திர முடியுமா?” என்று கேட்டவள்,

“உங்க மேல வருத்தம் இருந்தது.  அது தவிர அந்த விசயத்தை என்னால ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்பட்டது.  அதுக்காக தனியா இருந்தேன்.  எப்பவும் உங்களை விட்டு மொத்தமாப் போகணும்னு நினைச்சதே இல்லை” ஐடா கூறியது எதுவும் அவனுக்குள் சென்றதோ இல்லையோ ஆனால் தனது மனதில் இருந்த வருத்தங்களையெல்லாம் கணவனிடம் பேசி குறைத்திருந்தாள்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தவன், “அப்ப நான் இளைப்பாற உன்னோட ஹார்ட்டை எனக்கே எனக்குன்னு மட்டும் தருவியா?” என்று கேட்டான்.

“உனக்கு மட்டுந்தான் என்னோட ஹார்ட்” என்றுரைத்தவளின் இடுப்பை சிறுபிள்ளைபோல கட்டிக்கொண்டு உறங்கிப் போனான் ரீகன்.

காலையில் வழமைபோல குழந்தையைப் பார்க்க வராமல், ஐடா குளிக்கச் சென்றிருந்த தருணத்தில் குழந்தையை வந்து பார்த்தவன் உடனே வெளியில் கிளம்பியிருந்தான்.

கணவனது வருகைக்காக காத்திருந்தவள் அவனைக் காணாமல் தேட, அதைப் பார்த்த கேர் டேக்கர், “யாரைத் தேடறீங்க?”

“ப்ரின்சியோட அப்பாவைத்தான்” மகளின் பாதி பெயரைச் சொல்லி ஐடா கூற, விசயத்தை கேர் டேக்கர் உரைக்க எதற்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்பது புரிந்தும் புரியாமலும் ஐடா ரீகனுக்கு அழைக்க, இரண்டு தவறிய அழைப்பிற்குப்பின் எடுத்தவன், “என்ன ஐடா?”

“எப்போ வீட்டுக்கு வந்தாலும் எனக்காக இரண்டு மணி நேரம் ஸ்பெண்ட் பண்ற மாதிரி வாங்க” என்று வைத்துவிட்டாள்.

அன்று முழுவதும் வீட்டுப் பக்கமே வரவில்லை ரீகன்.  மறுநாளும் வரவில்லை.  அழைப்பை ஏற்றால், “இங்க கொஞ்சம் வேலை” என்று வைத்தான்.

உண்மையில் வேலைதானா இல்லை தன்னைத் தவிர்க்க இப்படிச் செய்கிறானா என்று புரியாதவள் மூன்றாம் நாள், “நீங்க இன்னைக்கு வீட்டுக்கு வரலைன்னா.  நான் ஆபிஸ்கு வந்திருவேன்” என்று வைத்துவிட்டாள்.

அன்று மாலையில் வீடு திரும்பியவனை பிலுபிலுவென்று பிடித்திருந்தாள் ஐடா.

“என்ன நடக்குது?” என்று துவங்கி அவன் குடித்துவிட்டுப் பேசியது அனைத்தையும் போட்டுடைத்தவள், “இது எல்லாம் உண்மைதானா… இல்லை அதுவும் பொய்யா… எது உண்மை? எது பொய்?” என்று அவனிடமே வினவ,

“சாரி… உன்னை தொந்திரவு பண்ணதுக்கு.  அதனாலதான் நான் வெளிய தங்கிட்டுருந்தேன்” என்றுரைத்தவனிடம், “தொந்திரவுன்னு நான் சொன்னேனா…”

“நீ சொல்லலை… ஆனா ஏதோ கனவுல நடக்கிற மாதிரி சில விசயம் எனக்கு நினைப்பில இருந்தது.  சாப்பாடெல்லாம் ஊட்டி விட்ட… அதான் உன்னைக் கஷ்டப்படுத்திட்டேனோன்னு…” என்று பேசியவனிடம்,

“இளைப்பாற எனக்கு இதயத்தை தான்னு எல்லாம் கேட்டுட்டு இப்படி ஓடி ஒளிஞ்சா என்ன அர்த்தம்?”

மனைவியின் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றவன், “சாரி” என்றிட, “எதுக்கு சாரி” என்றாள் ஐடா.

“இல்ல…”

“அப்ப நான் இனித் தேவையில்லை…”

“அப்படி நான் சொல்லலை…” என்று தயங்கியவன், “உன்னோட விருப்பம் எதுவோ அப்டி” என்றுரைத்தவனைக் கண்கொட்டாது பார்த்தவள், “நான் இங்க இருந்து போயிரவா” என்று கேட்டாள்.

பதறியவன், “இல்ல…”

“உள்ளுக்குள்ள இருக்கறது எல்லாம் குடிச்சா வெளிய வருது.  இல்லைன்னா வெளிய காட்டிக்கறதே இல்லை” கணவனிடம் நேராக உரைத்தவள், “பிள்ளை மட்டும் போதும்னு நினைக்கறீங்களோ”

“எப்ப நான் அப்டிச் சொன்னேன்” தயங்கிக் கேட்டவனிடம், “இல்லை… எப்பப் பாத்தாலும் புள்ளையத்தான் கொஞ்சறீங்க… என்னைக் கண்டுக்கறதே இல்லையேன்னு கேட்டேன்” என்றுரைக்க,

சட்டென உள்ளத்தில் மகிழ்ச்சியலை எழ, “உண்மையாவா ஐடா…”

இதுக்குமேல எதாவது பேசினா விரட்டித்தான் விடணும் என முகத்தை கடுமையாக வைப்பதுபோல போலியாக வைத்துக்கொண்டு நகர்ந்தவளை ஒடிச்சென்று இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டவன், “ஹனி…” ஐடாவின் தலையில் கன்னத்தை வைத்து அந்த கணத்தை உண்மைதான் என நம்பவைத்திடும் முயற்சியில் நின்றிருந்தான்.

பிள்ளை பிறந்து மேலும் பொலிவோடு இருந்த மனைவியை அப்போதுதான் மனதிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினான். அவனது பார்வை வேறுபாட்டை உணர்ந்தவள், “என்ன?”

“இல்லை… உன்னை ஒழுங்காப் பாத்தே சில மாசமாச்சா… அதான் வித்தியாசமா மாறிட்டியேனு பாத்தேன்”

“நல்லாயில்லையா?”

“இப்ப இன்னும் அழகாயிட்ட”

“அப்ப இத்தனை நாள் என்னைப் பாக்காம உங்க பொண்ணை மட்டும் கொஞ்சிட்டு இருந்திருக்கீங்க…” வருத்தமாகக் கேட்டவளின் தொனியிலேயே புரிந்துகொண்டவன்,

“ஹனி… புரிஞ்சிக்கோடா…”

“என்ன புரிஞ்சிக்க சொல்ற ரீகன்” என்று அவனது மார்பில் குத்தியபடியே அழத் துவங்கியிருந்தாள் ஐடா.  மனைவியின் இந்த பரிணாமத்தில் அதிர்ச்சியானவன், ஐடாவைத் தேற்ற மிகவும் போராடினான்.

அத்தனை அழுகை.  குற்றச்சாட்டு. திட்டு. இப்படித் தொடர்ந்திருந்த நேரத்தில் பிள்ளை அழுவதாக அழைக்க, கண்களை அவசரமாகத் துடைத்துக்கொண்டு ஓட எத்தனித்தவளை நிறுத்தி இறுக அணைத்து விடுவித்தவன், “மெதுவா போ ஐடா.  என் பொண்ணு ரொம்ப சமத்து” என்றதும், “வந்து உங்களை கவனிச்சிக்கிறேன்” தன்னை சீர்செய்தபடி குழந்தையைக் காண ஓடினாள் ஐடா.

அன்பும் கருணையும் மிக்கவளாக ஐடா இருந்தமையால் ரீகனது தவறுகளை மறந்து அவனையே தனது வாழ்வாக எண்ணி வாழ இசைப்பட்டிருந்தாள்.

ரீகனது தாயைக் காட்டிலும் பரிவானவளாக ஐடா கிட்டியதில் சற்று மாறினாலும், இடையில் தடம் புரளும் நிலைக்குச் சென்றவன் சந்தர்ப்பவசத்தால் உண்மை நிலை உணரும் வாய்ப்பு அமைந்து திருந்தியிருந்தான்.

மகள் வந்த நேரம் மன இறுக்கங்கள், குறைகள், சங்கடங்கள், சச்சரவுகள் அனைத்தும் நீங்கி புத்தாண்டிற்குப்பின் புது வாழ்வு வாழும் வாய்ப்பை தம்பதி பெற்றிட அதன்பின் வந்த நாள்கள் அனைத்தும் வசந்தமே…

கேத்தரீன் ப்ரின்சியின் வரவு அவளின் பெற்றோருக்கு மட்டுமன்றி அந்தக் குடும்பத்திலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.  பேரனின் குடும்பம் பழையபடி மாறியதில் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளான ரூபி பாட்டி பேரனை அவ்வப்போது கலாய்த்து தள்ளினார்.

பேரன் அதையெல்லாம் தட்டிவிட்டு எதுவும் நடவாததுபோல தனக்கான பொக்கிஷங்களை பாதுகாப்போடும், அரவணைப்போடும் உள்ளத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் தாங்கினான்.

அஸ்வினுக்கு இதுவரை திருமணமே ஆகவில்லை.  ‘இனியும் ஆகுமா’ என்றால் தம்பதியினரைப் பிரிக்க நினைத்து செய்த சூழ்ச்சி அவனுக்கு வேலை செய்ய, இன்னும் தள்ளிப் போனது.

யாமினி ஐடா இல்லாதபோது வீட்டிற்கு வந்து ரீகனை சந்திக்க முயன்றது, அதன்பின் அவர்கள் வீட்டில் யாமினி ரீகனைத் திருமணம் செய்துகொள்ள பிரியம் காட்டுவதாகக் கூறியது அனைத்தையும் ஒதுக்க எண்ணியே அதிகம் வீட்டுப் பக்கம் வராமல் தவிர்த்திருந்தான் ரீகன்.

ஐடா வந்ததும் இனி தங்களின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை என்பது தெளிவாக ஆஸ்திரேலியாவில் பணியிலிருப்பவனை திருமணம் செய்துகொண்டு சென்றிருந்தாள் யாமினி.

பிள்ளை வளர்ப்பும், புருசன் கவனிப்பும் போட்டிபோட என்னேரமும் பிஸியாகி இருந்தாள் ஐடா.

பிரின்சிக்கு தந்தைமேல் அதீத பாசம்.  ரீகன் மனைவியை அணைப்பதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத பாசம்.  அவள் விழித்திருக்கும் நேரங்களிலெல்லாம் ஐடா கணவன் அருகிலேயே செல்ல முடியாது.

ரீகனது தேவை அறிந்து அவன் இளைப்பாறலுக்கு இடமளித்ததோடு இதம் தந்தாள் ஐடா.

மதுவை தவிர்த்தவன் பழையபடி மாறியிருந்தான்.

குற்றங்கள் செய்யாத மனிதர்கள் இல்லை.  அந்தக் குற்றங்களை அவர்கள் தொடராதிருக்கும் சந்தர்ப்பங்களை அமைத்துத் தந்து, தனது சாதூர்யமான நடவடிக்கையால் தன்னவனை மீட்டிட்ட ஐடாவைப் போன்றதொரு பெண்கள் பொறுமையின் சிகரமாக வாழத்தான் செய்கிறார்கள்.

தந்தையின் மார்பில் துயில் கொண்டிருந்த பிரின்சியை தூக்கி அருகே படுக்கையில் கிடத்தும் முயற்சியில் ஐடா இறங்க, மனைவியின் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தவன் மகள் விழித்துவிட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்ததால் எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.

பேச்சுகள் குறைந்து போனது. ஊடலும் குறைந்து போனது.  கூடலின் நேரமும் சூழல் கருதி குறைந்து போனது. நேசம், பொறுமை, சகிப்புத்தன்மை கூடிப் போனது.

          ஒரு புறம் படுத்திருந்த மகளைத் தட்டிக்கொடுத்து அரவணைத்துக் கொண்டவன் மறுபுறக் கையில் தலைசாய்ந்த மனைவியையும் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

          இதயங்களின் இளைப்பாறல்கள் இனிதே தொடர்ந்தது…

முற்றும்.

***