இளைப்பாற இதயம் தா!-8ஆ

இளைப்பாற இதயம் தா!-8ஆ

இளைப்பாற இதயம் தா!-8B

ஹனிமூன் செல்லும்போது புகைவண்டியில் பயணத்தை மேற்கொண்டவர்கள் இரண்டு இரவு ஒரு பகலுக்குப்பின் டெல்லியை சென்றடைந்தனர். ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள கிட்டிய நேரத்தை ரீகன் அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டான்.

ரீகன் அவனது கருப்பு பக்கங்களைத் தவிர்த்து மற்ற விசயங்களை மட்டும் மனைவியோடு பகிர்ந்துகொண்டிருந்தான்.

“அப்ப நீங்களும் ஐட்டி ஃபீல்ட்ல இருந்துட்டுத்தான் பிஸினெஸ் பாக்கப் போயிருக்கீங்க” என குதூகலித்தாள் ஐடா.  பணி சார்ந்து தனது ஆசையும், அவனது ஆசையும் ஒன்றாக இருந்ததை எண்ணிய மகிழ்வுதான் அது.

தனக்குப் பிடித்தவருக்கும் தன்னைப் போலவே எண்ணங்கள், சொல், செயல், ஆசைகள் இன்ன பிற என ஒத்த கருத்துகளை எண்ணி உண்டாகும் பரவசம் ஐடாவிற்குள்ளும்.

வழி நெடுகிலும் புகைவண்டியில் கிடைத்த உணவை சகித்து உண்டார்கள். ஐடா வழமையைவிட மிகவும் குறைந்த அளவே உட்கொள்வதை கவனிக்கவே செய்திருந்தான் ரீகன்.

டெல்லி வந்த அன்று அங்கேயே அறை எடுத்துத் தங்கியிருந்தனர். அன்று வெகு தூரத்திலிருந்தாலும் மெனக்கெட்டு அழைத்துச் சென்று மனைவியை அவளுக்குப் பிடித்ததை உண்ணச் செய்து அழைத்து வந்தான்.

“சாப்பிடறதுக்கு இவ்ளோ தூரம் போகணுமா?” சலிப்பாக வினவினாள் ஐடா.

“பக்கத்தில இருக்கற ஃபுட் எல்லாம் உனக்கு ஒத்து வராதுன்னு தோணுச்சு.  அதான் அங்க அழைச்சிட்டுப் போனேன்.  அங்க தமிழ்நாடு ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கும்.  இங்கல்லாம் கிடைக்காது” ரீகன்.

“ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிருந்திருக்கலாம்” ஐடா.

“சென்னை திரும்பற வரை சாப்பாடு நமக்கு செட்டாகாது.  இங்க ஓரளவு தேடிப் போயி சாப்பிட்டறலாம்.  ஆனா இன்னும் அந்தப் பக்கம் போகப்போக சிரமம்தான்.  அதனால கிடைக்கற இடத்தில சாப்பிட்டுக்கலாமேன்னுதான் கூட்டிட்டு வந்தேன்” ரீகன்.

கணவனது பேச்சில் தன் மீதான அவனது அக்கறை வெளிப்பட, உள்ளுக்குள் இதமாக உணர்ந்தாள் ஐடா.  இருவருமாக அறைக்குத் திரும்பியபின், “மார்னிங் ஃபோர்க்கு இங்க இருந்து கிளம்பணும் ஹனி” என்றவன் சற்று நேரம் அவனது அலுவலகம் சார்ந்த விசயங்களை அலைபேசியில் பேசினான். பிறகு பாட்டியிடம் பேசினான்.

ஐடா அந்த இடைவெளியில் இரவு பிரேயரை முடித்து வந்தாள்.  மனைவியின் செயல்பாடுகளில் எந்தக் குறுக்கீடும் செய்வதில்லை ரீகன்.  ஐடா ரீகனது நடவடிக்கைகளைப் பார்த்து ஒரு முறை கேட்டாள்.

“நீங்க ஒரு நாளைக்கு ஒரு முறைகூட பிரேயர் பண்ண மாட்டிங்களா?” என்று.

இல்லையென்று தலையாட்டியவன், “சின்ன வயசுல பண்ணிருக்கேன்.  இப்போ ரொம்ப வருசமாச்சு” என்றவன், “எப்போதாவது பாட்டி கூப்டா சர்ச் போவேன்.  அவ்ளோதான்” என்று தோளைக் குலுக்கிச் சொன்னதோடு முடித்துக்கொண்டிருந்தான்.

ஐடா அவனை ஏன் செய்ய மாட்டேன் என்கிறாய் என்றோ, இதைச் செய்யுங்கள் என்றோ கூறாததே ரீகனுக்கு நிம்மதியாக இருந்தது.

உணவுத் தேவையைக் காட்டிலும், அவனது உணர்வுத் தேவையின் வேகமும், அதில் அவனது தீராப் பசியும், அதைத் தவிர்க்க முடியாத சில நேரங்களில் உண்டான அவனது தவிப்பும் வந்த ஒன்றிரண்டு தினங்களிலேயே ஐடாவால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது.

ஐடாவிற்குள் ஒரு தெளிவு இருந்தது.  தன்னை அவனது தேவைக்காக என்றாலும் இதுபோன்ற தனது வணக்கத்திற்குரிய நேரங்களில் இடையூறு செய்யாமல் அகன்றுவிடுபவனை வந்த சில நாளிலேயே பார்த்திருந்தாள்.

தனது தேவையைத் தீர்க்க எண்ணி, அந்த நேரங்களில் தன்னை வற்புறுத்தினால் தன்னால் என்ன செய்திருக்க முடியும்.  அப்படி செய்யாமல் தனது உணர்வுகளை மதிப்பவனிடம் தானும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவளாகவே வரையறுத்துக் கொண்டிருந்தாள். அதனால் அவனது விசயங்களில் தேவையற்ற தலையீடுகளை ஐடா செய்ய முனையவில்லை.

மனைவி அவளின் அன்றாட பணிகளை முடித்து வரும்வரை தனது பணிகளில் கவனமாக இருந்தவன், அவள் வந்ததும், “ஹனி… நீ தூங்கறதா இருந்தாத் தூங்கு.  நான் வர கொஞ்சம் நேரமாகும்” என மறுநாள் செல்ல வேண்டிய பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனித்தான்.

அலுப்பாய் இருந்தாலும் கணவனை அறிந்ததால் உறக்கத்தை நெருங்க விடாமல் விழித்தவாறு படுத்திருந்தவளை அரை மணித்தியாலத்திற்குப்பின் வந்து அணைத்தவன், “ஹனி” எனும் தேன் குரலோடு வந்தவனை அவளும் அணைத்துக் கொண்டாள்.

பொதுவான சில பேச்சுக்களினிடையே அவனது கையும், உதடும் அதனதன் பணியைச் செய்தது. ஐடாவுடம் அவனது சில வினாக்களுக்கு முணகலோடு பதிலைக் கூறினாள்.

“நீயா என்னை எப்பவுமே ஏன் தேடி வர மாட்டிங்கற ஹனி?” இதுதான் இன்றைய ரீகனது வருத்தமான கேள்வி.

“ஒரே இடத்திலதான ரெண்டுபேரும் இருக்கோம்” ஐடா.

“ஆனாலும் நீயா எப்பவும் என்னைத் தேட மாட்டிங்கற?  ஏன்?”

ஐடாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் மௌனமாகியிருந்தாள்.  “சொல்லு ஹனி” என்றபடியே அவளின் மூக்கில் முத்தமிட்டான்.

அப்போதும் ஐடாவிடம் அமைதிதான்.

“உனக்கு என்னைப் பிடிக்கலையா?” ரீகனுக்குள் இப்படித்தான் கேள்வி முளைத்தது.

“பிடிச்சிருக்கு” சன்னமான குரலில் கூறினாள்.

“அப்போ… அதை எங்கிட்ட ஃரூவ் பண்ணு” அவளின் பார்வையோடு கலந்து தனது பார்வையைக் கலந்து அவளின் பதிலை, செயலை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

“எப்டிப் ஃரூவ் பண்றதுனு எனக்குத் தெரியலையே” பாவமாகப் பதில் சொன்னாள் ஐடா.

“எத்தனையோ வழி இருக்கு.  நீதான் அதை யோசிக்கணும்” ரீகன்.

“யோசிச்சாலும் வர மாட்டிங்குதே…” ஐடா.

“இனி நான் உன்னைத் தொந்திரவே பண்ண மாட்டேன்.  நீயா என்னைத் தேடி வந்தாதான் உங்கிட்ட…யே… வருவேன்” என்றவன் என அழுத்திச் சொன்னவன் என்றுமில்லாமல் அவளிடமிருந்து சட்டென விலகி திரும்பிப் படுத்துக்கொண்டான்.

ரீகன் பலவாறாக கற்பனை செய்துகொண்டு காத்துக்கிடக்க, அதற்கு மாறாக அழுது கரைந்திருந்தாள் ஐடா.

தன்னை பின்னோடு அணைத்துக் கொள்வாள், அல்லது தன்னை வலுக்கட்டாயமாக அவள் புறம் திரும்பிப் படுக்கும்படி செய்வாள், பின் அணைத்துக் கொள்வாள் என்றெல்லாம் எதிர்பார்த்தவனுக்குள் ஏமாற்றமே.

ஐடாவிற்கு ஆசையோடு தன்னை அணைத்தவன், தான் அவனை ஆதரிக்கவில்லையென்றெண்ணி ஒதுங்கியது வருத்தத்தைத் தந்தது.  ஆனால் அந்த வருத்தத்தை எப்படிப் போக்குவது என்று தெரியவில்லை என்பதைவிட, அவளுக்கு அதைக் கணவனிடம் காட்டும் துணிவில்லை.  ஏதோ தடுத்தது.

தடுத்ததை மீறி அவளால் இயங்க முடியவில்லை.  அந்த நிலையில் அவளின் கண்களில் நீர் திரண்டிருந்தது.

திரண்ட நீர் அவளின் அனுமதியின்றி தலையணையில் பரவியது.  மனைவியின் பேரமைதியைக் கண்டு அவளின் புறம் திரும்பியனது கரங்களில் ஈர உணர்வுபட்டதும், “ஹனி…” என்றழைத்தபடியே அவளின் முகத்தை கைகளில் ஏந்திப் பார்த்தான்.

வதனத்தை அவனிடம் காட்டாமல் மறைத்து திரும்பியவளை திரும்ப விடாமல் தனது பார்வைக்குக் கொணர்ந்தவன், “என்னாச்சு ஹனி” பதறிப்போய் கேட்டான்.

ஒன்றுமில்லை என தலையை மறுத்தசைத்தாள் ஐடா.

வெளியில் உண்டது எதுவும் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டதோ எனும் பயத்தில், “சாப்பிட்டது ஒத்துக்கலையா ஹனி”

அப்போதும் மறுத்தாள்.  ஆனால் வாயைத் திறந்தாளில்லை.  ஆனால் ரீகனுக்கு விதிர்விதிர்த்துப் போயிருந்தான்.  என்னாயிற்று என்று தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என அவளை மீண்டும் தன் கரங்களில் அள்ளிக்கொண்டு படுக்கை அருகே கிடந்த சோபாவில் சென்றவமர்ந்தவனின் மடியில் ஒரு பக்கமாக ஐடா குழந்தைபோல அமர வைக்கப்பட்டிருந்தாள்.  அங்கிருந்து எழ முயன்றவளை விடாமல் தன்னோடு இழுத்துப்பிடித்துக் கொண்டவன் வினவ, தலையைக் குனிந்தபடியே, “எனக்கு என்ன பண்ணணும்னு தெரியலை” என்ற ஐடாவின் பதிலில் முதலில் குழம்பிப்போனவன், சில நொடிகளுக்குப்பின் சற்றுமுன் தான் துவங்கிய உரிமைப் பிரச்சனையின் தயக்கத்திற்கான பதில்தான் இது என்பது புரிய வர, “நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்.  இதுக்கு யாராவது அழுவாங்களா?  உனக்கு தெரியலைன்னா என்ன?  நான் எல்லாத்தையும் உனக்குச் சொல்லித் தருவேன்.  நீயும் கத்துக்கணும்” என்றபடி கன்னத்தில் இதழ் பதித்துக் கேட்டான்.

தலையை ஆட்டி ஆமோதித்தவளை எண்ணி, ரீகனுக்குத்தான் பாவமாகப் போயிற்று.  ‘இதுக்கெல்லாம் ஒருத்தி அழுவாளா?’ என்று.  இனி இவளிடம் இப்படியெல்லாம் பேசி துன்புறுத்திவிடக்கூடாது என எண்ணியவன், “மற்ற விசயமெல்லாம் எங்கிட்ட போல்ட்டா பேசறதானே ஹனி.  அதேபோல இதையும் என்னால முடியலைனு சொல்லியிருக்கலாமே?” என்று வினவ, அவளுக்குள் நேர்ந்த முரணான விசயங்களை மறைக்காது கணவனிடம் தயக்கத்தோடு அவன் முகம் பார வெட்கி தலைகுனிந்தபடியே பகிர்ந்துகொண்டாள் ஐடா.

ரீகனுக்குள் உள்ளுக்குள் ஏதே உடைந்த உணர்வு.

தான் இவளுக்கு உண்மையில் ஏற்றவன்தானா?  இப்படிப்பட்ட ஒரு தூயவளைத் தந்த அந்த ஆண்டவரை எண்ணி நிச்சயமாக ஒரு ஓரத்தில் வருத்தம் வரவே செய்தது.

அப்போதே தீர்மானித்தான்.  இனி எந்த சந்தர்ப்பத்திலும் இவள் மட்டுமே என் எல்லா வித இன்ப, துன்பங்களிலும் என்று. முன்புபோல இல்லாமல், இனி வரும் காலங்களிலெல்லாம் ஐடாவின் இதயத்தில் மட்டுமே தனது இளைப்பாறுதலைத் தொடருவேன் எனும் சங்கல்பத்தோடு அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

நீண்டநேரம் அதே நிலையில் மனைவியை அணைத்தபடியே, இந்த உறவு எந்த இடர்ப்பாடுகளும் இன்றி, இனிமையாகத் தொடர வேண்டும் எனும் வேண்டுதலை நீண்ட நாளுக்குப்பின் ஆண்டவரிடம் வைத்தபடியே அமர்ந்திருந்தான் ரீகன்.

***

ஐடாவைத் தனது கரங்களுக்குள்ளேயே வைத்திருக்க விரும்புவான் ரீகன்.  ஆனால் தனித்தே படுத்துப் பழகியவளுக்குத்தான் உறக்கம் நெருங்காது.  அவளின் உறக்கம் தன்னால் தடைபடுகிறது என்பதால் அவளை விடுவிப்பானே அன்றி அவனாகவே விட்டு விலக எண்ணமாட்டான்.

அன்றும் அதேபோல ஐடா விலக, அவளின் உடல் வெப்பம் உணரும் இடைவெளியில் உறங்கத் துவங்கியவன், அதிகாலையில் எழுந்து மனைவியை கிளம்பச் செய்தான். எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் அவன் அழைப்பிற்கு உடன்பட்டு கிளம்பிச் சென்றிருந்தாள் ஐடா.

அதிகாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேபில் ஆக்ராவிற்கு அழைத்துச் சென்றான்.

சூரிய உதயத்தின்போது தாஜ்மஹால்!

பளிங்கு கற்களால் ஆன அந்த மஹாலைக் காணும்போது ஐடாவின் விழிகள் ஜொலித்தது.  அதில் அவளின் மகிழ்ச்சி ரீகனுக்கு அவள் சொல்லாத வார்த்தைகளைச் சொன்னது.

“இங்க வர்றதா நீங்க சொல்லவே இல்லையே” அவன் இங்க தன்னை அழைத்து வரப்போவதை மறைத்ததால் உண்டான வருத்தம் துளியுமில்லை.  ஆனால் குரலில் குதூகலம் கொட்டிக் கிடந்தது.

“சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு சொல்லலை!”

இருவருமாகப் பேசிக்கொண்டே தாஜ்மஹால் இருந்த பகுதியைப் பார்வையிட்டபடி வர, அந்த நேரம் தொழுகைக்காக வெண்ணிற ஆடை உடுத்திய ஆண்கள் வருவதைப் பார்த்துக் கேட்டாள்.

“இதுக்குள்ள போயி தொழுவாங்களா?”

“இல்லை… இது பக்கத்திலயே ஜாபா மாஸ்க் இருக்கு.  அங்க போயித் தொழுவாங்க” என செந்நிறத்தில் அதே வளாகத்தினுள் இருந்த மசூதியைக் காட்டிக் கூறினான் ரீகன்.

சற்று நேரம் அங்கு நேரம் செலவிட்டவர்கள் அதன்பின் டெல்லி திரும்பினர்.  வரும் வழியிலேயே காலை உணவை முடித்துக்கொண்டு வந்தவர்கள், அதன்பின் சிம்லா செல்லத் தேவையான சிலவற்றை ரீகன் கூறக் கூற வாங்கினாள்.

அதன்பின் அன்று இரவு பதினோரு மணிக்கு மேல் பிரைவேட் பேருந்தில் சிம்லா நோக்கிப் பயணத்தைத் துவங்கியிருந்தனர். ஏறத்தாழ ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலான பயணம்.

இதுவரை தமிழகத்தைத் தாண்டி பங்களூர் வரை மட்டுமே வந்து சென்றிருந்த ஐடா, முதன் முறையாக இத்தனை தூரம் கணவனை மலைபோல நம்பி வந்திருந்தாள்.

காஷ்மீரி கேட்டிலிருந்து சிம்லாவை அடைந்தவர்கள் பிரைவேட் ரூம் புக் செய்திருந்ததில் தங்கினர். ஒவ்வொரு பயணத்தின்போதும் மனைவியின் முக மாறுதல்களைத் தெரிந்துகொண்டு என்னவென விசாரித்து அதற்கேற்றாற்போல சில திட்டங்களைத் தள்ளிப் போட்டான் ரீகன்.

“ஒன்னும் பிரச்சனையில்லை.  கிளம்பலாம்” என ஐடா கூறியபோது, “இல்ல… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.  அப்புறம் போகலாம்” மனைவியிடம் அக்கறையோடு நடந்துகொண்டான் ரீகன்.

இப்படி பயணத்தின்போதும் ஒவ்வொரு இடத்திலும் மனைவியின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, தாமதமானபோதும் அதனால் எரிச்சல்படாமல் ஐடாவை அரவணைத்து அழைத்து வந்திருந்தான்.

சிம்லா வந்தடைந்த அன்று, “அடிக்கடி தண்ணியில் இருக்காத. இந்த சாக்ஸ் யூஸ் பண்ணிக்கோ” என்று காலுக்கும், கையிக்கும் பயன்படுத்த என வாங்கி வந்திருந்ததை சரியான நேரத்தில் எடுத்துக் கொடுத்து அக்கறை எடுத்துக்கொண்டிருந்தான். 

மறுநாள் வெளியில் கிளம்புகையில், “இங்க ஸ்வெட்டர், மப்ளர் இல்லாம வெளிய போக முடியாது. ஆனாலும் கையில எமர்ஜென்சிக்கு சால்வையும் எடுத்துக்கோ” என்று கூறி அதன்படி ஐடா தயாராகச் செய்தபின்பே வெளியே அழைத்து வந்திருந்தான்.

முதல் நாள் குஃப்ரி சென்றார்கள்.  மால் ரோட்டிலிருந்து கேப் புக் செய்து அங்கு வந்திருந்தனர்.  ஸ்னோ ஆக்டிவிட்டிஸ் சார்ந்த விசயங்களில் இருவரும் ஆர்வமாகப் பங்கெடுத்தனர்.

பனி படர்ந்திருந்த இடங்களை ஸ்னோ வெகிகிளில் சென்று பார்வையிட்டும், பனி சார்ந்த விளையாட்டுகளில் பங்கெடுத்தும் அன்று முழுமையும் அங்கு செலவிட்டனர்.

பூ போல எங்கும் கிடந்த பனிக் குவியலை கைகளில் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர்.  சிறு குழந்தையாக ஐடா இருந்தபோதுகூட இப்படி யாரோடும் அவளை விளையாட அவளின் பெற்றோர் அனுமதித்திராத நிலையில், இன்று கணவனோடு விளையாடுவது அவளுக்கு அத்தனை இன்பமாக இருந்தது.  குழந்தைப் பருவத்திற்கே சென்று வந்தாற்போல உணர்ந்தாள்.

மனதிற்கு மிகவும் நெருக்கமாக எண்ணக்கூடியவர்களோடு இதுபோன்ற இடத்தில், தனது பாதியின் உடல் வெப்பத்தில் மற்றொரு பாதி குளிர் காய்வது என்பதே இதம்தானே… பிறந்தது முதலே அனைத்திலும் கட்டுப்பாடுகள், விதிகள் என்று வளர்க்கப்பட்ட ஐடாவிற்கு அன்று முழுவதும் மிகவும் வித்தியாசமான உணர்வுகள்.

உலகே தன் வசமானாற்போன்றதொரு நிறைவு ஐடாவிற்குள்.  ரீகனுக்கு ஐடாவின் சில இன்னசெண்ட் பேச்சுகளும், எதையும் மறைத்திடாமல் தன்னிடம் பகிர்ந்துகொள்ளும் அவளின் பாங்கும், அதிக அலட்டல் இல்லாமல் தனித்திருக்கும்போது மட்டும் தன்னோடு அவளது உணர்வுகளை தயக்கத்தோடு தன்னிடம் பகிர்ந்துகொள்ளும் ஐடாவின் செயல்களும் அவளோடு இறுகக் கட்டிப் போட்டது.

கணவன் தன்னை கீழாக எண்ணி விடுவானோ என்கிற தயக்கம் அவளிடம் துளியும் இல்லை.  தன்னை அவன் உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்கான பிரத்தியேக செயல்பாடுகளும் இல்லை.

இதை உணர்ந்துகொண்ட ரீகனுக்கு பொது வெளியில் அவளிடம் நெருக்கமாக இருப்பதை ஐடா விரும்பமாட்டாள் எனும் ஒரே காரணத்திற்காக தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பவன், தனிமையில் அவளிடம் உருகிவிடுவான்.

ரீகனைப் பொருத்தவரையில் திருமணத்திற்குப் பிறகான தனது வாழ்வில் தான் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி உண்மையாக, நேர்மையாக இருக்க எண்ணுவதே ஐடாவின் சாதனையாக எண்ணினான்.

ஐடா எனும் பெண் வளர்ந்திருந்த விதத்தால், தன்னைப்போல தனக்கான அனைத்துமே எப்போதும் எந்தக் காலத்திலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும், இருந்திருக்க வேண்டும் என அவள் எதிர்பார்ப்பாள் என்பது மட்டும் ஏனோ புரியாமலேயே இருந்தான் ரீகன்.

மறுநாள் சிம்லா மால்ரோடில் இருக்கும் கோல்டன் சர்ச்சிற்கு ஐடாவை அழைத்துச் சென்றான்.  ஐடாவிற்கு அத்தனை நிறைவு. மனைவி பிரேயர் முடித்து வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தான் ரீகன்.  அதன்பின் அங்கு நிறைய பிரிட்டிஷ் காலத்திய கட்டிடங்களின் முன்பு நின்று செல்ஃபி எடுத்தார்கள்.

வெகு தூரம் நடந்தார்கள். லஹார் பஜார் ஏரியாவில் ஷாப்பிங் செய்தார்கள்.  அன்று முழுவதும் மால்ரோட்டில் உள்ள பிற பகுதிகளைப் பார்வையிட்டனர்.

ஷாப்பிங் செய்ததை அனைத்தையும் தன் முன்னே போட்டுக் காட்டு என அடம் செய்தவனிடம், “அதெல்லாம் முடியாது” என சாதித்தவளிடம் “எம்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ஹனி” என்று கேட்டவனது முகத்தில் அத்தனை வேதனை.

“எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க.  இப்படியெல்லாம் நீங்க கேட்டவுடனே முயற்சி செய்தாலும் அப்டிச் செய்ய முடியலை. ஏதோ தடுக்குது.  அதுக்காக நம்பிக்கை அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் வேணாம் ரீகன்.  முதல்ல… ஆண்டவர், அப்புறம் என் பேரண்ட்ஸ்ஸூக்கு அடுத்தபடியா உங்களை நம்பரதாலதான் இவ்ளோதூரம் உங்களோட என்னால வர முடிஞ்சது” என்று நேராக ரீகனிடம் கூறிவிட்டாள் ஐடா.

மூன்றாவது நாள், ஜானி வேக்ஸ் மியூசியம் சென்றார்கள். சில தலைவர்களின் ஸ்டாச்யூஸ் அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.  அதனைப் பார்வையிட்டபின் அறைக்குத் திரும்பியவர்கள் அன்று மாலை வரை அறையில் இருந்தவர்கள் அதன்பின் டெல்லி திரும்பினர்.

டெல்லியிலிருந்து ஃபிளைட்டில் சென்னை திரும்பியவர்கள் இரண்டொரு நாள் ஓய்வுக்குப்பின் இருவரது பணிகளும் ஆக்ரமித்துக் கொண்டது.

சமையலுக்கென தாமஸ் அமர்த்தப்பட்டு இருந்தாலும், தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக ஐடாவும் அவ்வப்போது களத்தில் இறங்கினாள்.  ரூபியும் அவளின் ஆர்வத்தை தடுக்கவில்லை.

ஒரு மாத விடுப்பிற்குப்பின் அலுவலகம் வந்தவளுக்கு நிறைய மாற்றங்கள் அலுவலகத்தில் தென்பட்டது.  அதில் ஒன்று அவளில்லாத நேரத்தில் அவளது பதவி நிலையில் நிர்ணயிக்கப்பட்டிருந்த புதிய பெண்?

ஏனோ அதைக் கேட்டதும் ஐடாவின் மனதில் ஒரு திடுக்.

அதற்குமேல் அந்தப் பெண்ணைப் பற்றிய செய்திகள் காதுவழி வந்தது. அதனால் அவளைச் சந்திக்கும் ஆர்வத்தில் ஐடாவோடு நாமும்…

***

Leave a Reply

error: Content is protected !!